மனித வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும்போது, அல்லாஹ் குர்ஆனில் முன்வைக்கும் ஓர் ஆழமான உவமை நம் கவனத்தை ஈர்க்கிறது. மனித வாழ்க்கையின் வளர்ச்சியும் அதன் பின்னர் ஏற்படும் வீழ்ச்சியும், பூமியில் தாவரங்கள் வளர்ந்து பின்னர் அழிவைச் சந்திக்கும் இயற்கை நிகழ்வுடன் ஒப்பிடப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
இவ்வுலக வாழ்க்கை, மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் தண்ணீரைப் போன்றதாகும். இதன் பின்னர் மக்களும் கால்நடைகளும் உண்ணுகின்ற பூமியின் விளைச்சல், அத்துடன் கலந்து விடுகிறது. எதுவறையெனில் பூமி (அதன் மூலம்) தனது அணிகலன்களைப் பெற்று வனப்புடன் தோற்றமளிக்கிறது. மேலும் அதில் வாழ்பவர்கள் தாங்கள் (அதன் விளைச்சலை) ஒன்று திரட்டிக்கொள்ளத் தகுதி பெற்றதாக எண்ணுகின்றனர். அப்போது அதன் மீது இரவிலோ பகலிலோ நம்முடைய (ஆக்கினைப் பற்றிய) கட்டளை வருகிறது. நேற்று இவ்விடத்தில் (எதுவுமே) இல்லாதிருந்தது போன்று நாம் அதனை அறுவடை செய்த வயலைப்போல் ஆக்கிவிடுவோம். சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இவ்வாறே நாம் (நம்முடைய) வசனங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். (அத்தியாயம் 10, வசனம் 25)
இந்த வசனத்தில், பூமியில் மழை பெய்கிறது; அதனால் தாவரங்கள் வளர்கின்றன; அவை அழகாகவும் செழிப்பாகவும் தோன்றுகின்றன. அவற்றின் உரிமையாளர்கள், அவற்றின் மீது தங்களுக்கு முழுமையான அதிகாரம் இருப்பதாக எண்ணும் நிலையில், அல்லாஹ்வின் கட்டளை வந்து அந்த நிலை முற்றிலும் மாறிவிடுகிறது. நேற்று இருந்த செழிப்பு இன்று இல்லாததுபோல் ஆகிவிடுகிறது.
இது வெறுமனே தாவரங்களைப் பற்றிய ஓர் இயற்கை விளக்கம் அல்ல. மனித வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் ஓர் ஆழமான உவமையாகும்.
மனிதனும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்கிறான். இளமை அடைகிறான். உடல் மற்றும் அறிவின் முதிர்ச்சியை அடைகிறான். ஒரு கட்டத்தில் அவனுடைய வலிமையும் திறமையும் உச்சத்தை அடைகின்றன. ஆனால் அதன் பின்னர் இயற்கையான முறையில் முதுமையும் பலவீனமும் அவனை நோக்கி வருகின்றன. இறுதியில் மனித வாழ்க்கை முடிவடைகிறது.
இதுதான் அல்லாஹ்வின் படைப்பில் நாம் காணும் பொதுவான நடைமுறை.
அப்படியானால் ஒரு முக்கியமான பகுத்தறிவுக் கேள்வி எழுகிறது:
இயற்கையான இந்த நியதியிலிருந்து ஈசா (அலை) அவர்களை மட்டும் ஏன் விலக்க வேண்டும்?
ஈசா (அலை) அவர்கள் மனிதராகப் பிறந்தவர்கள் என்றால், மனித வாழ்க்கைக்கு அல்லாஹ் நிர்ணயித்த இயற்கை நியதிகளிலிருந்து அவர்களை மட்டும் விதிவிலக்காகக் கருதுவதற்கு என்ன பகுத்தறிவான காரணம் இருக்கிறது?
ஒரு மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், முதிர்கிறான், பின்னர் அவனுடைய உடல் பலவீனமடைகிறது என்பது நாம் காணும் இயற்கையான ஒழுங்காகும். இந்த ஒழுங்கை அல்லாஹ்வே தனது படைப்பின் ஓர் அடையாளமாகக் காட்டுகிறான்.
எனவே கேள்வி ஈசா (அலை) அவர்கள் சிறப்புமிக்கவரா என்பதல்ல. அவர்கள் சிறப்புமிக்க இறைத்தூதர் என்பதில் சந்தேகமில்லை. கேள்வி இதுதான்:
அல்லாஹ்வின் படைப்பில் மனிதர்களுக்குப் பொதுவாகக் காணப்படும் இந்த நியதியை, மனிதரான ஈசா (அலை) அவர்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று கூற வேண்டும்?
குர்ஆன் நம்மை வெறுமனே நம்பச் சொல்வதில்லை; சிந்திக்கவும் அழைக்கிறது. இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் குறிப்பிடுவது அதுவே:
كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
“இவ்வாறே சிந்திக்கும் மக்களுக்காக நாம் அடையாளங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.”
எனவே, ஈசா (அலை) அவர்களைப் பற்றிய எந்தக் கருத்தையும் அணுகும்போது, வெறும் பழக்கமான நம்பிக்கையை மட்டும் சார்ந்து கொள்ளாமல், அல்லாஹ்வின் நிலையான படைப்பு நியதிகளோடும், பகுத்தறிவோடும் பொருத்திப் பார்த்து சிந்திப்பதே சரியான அணுகுமுறையாகும்.
%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%2010%2024.png)