قُلۡ اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰہَ فَاتَّبِعُوۡنِیۡ
یُحۡبِبۡکُمُ اللّٰہُ وَ یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَ اللّٰہُ غَفُوۡرٌ
رَّحِیۡمٌ
நீர் கூறுவீராக, (மக்களே) நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயின் என்னைப் பின்பற்றுங்கள். (அப்போது தான்) அல்லாஹ்(வும்) உங்களை நேசிப்பான். உங்களுடைய பாவங்களை மன்னிக்கவும் செய்வான், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மீண்டும் மீண்டும் அருள் செய்பவனுமாவான். [3:32]
இந்த வசனம் ஆணித்தரமாக அறிவிப்பது என்னவென்றால் இறை நேசத்தை பெறவேண்டும் என்ற லட்சியத்தை இப்பொழுது அடைவது எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்து அன்னாரை பின்பற்றுவதால் மட்டுமே சாத்தியமாகும் என்பதாகும். இந்த வசனம் மேலும் குறிப்பிடுவது என்னவென்றால், எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி (அலை) அவர்களும் எம்பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்றக்கூடியவராகவே (உம்மத்தி) இருக்க வேண்டும்.
மேலும் இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் மற்ற எல்லா மார்க்கங்களும் எதிர்பார்ப்பது போல் வரக்கூடிய எல்லா நபிமார்களுடைய இரண்டாம் வருகையும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகையின் மூலமே நிறைவேறும் என்பதாகும்.
நாம் தெரிந்திருக்கக் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இன்றைய தேதி வரை மறைந்து போனவர்கள், மேலும் வானத்திற்கு போனவர்கள் அல்லது இறந்து போனவர்கள் எவருமே பூமிக்கு திரும்பியதில்லை இது இறை சட்டத்திற்கும் எதிரான ஒரு விஷயமாகும்
எந்த ஒரு இரண்டாம் வருகையும் அல்லது மீண்டும் தோன்றுவதும் ஒப்புவமை மற்றும் ஆத்மீகமாகவே நிறைவேறக் கூடியதாக இருக்கிறது. வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களும் மிகத் துல்லியமாக இந்த வாதத்தையே செய்துள்ளார்கள். இறைவன் புறமிருந்து வந்துள்ளதாக வாதித்து, மேலும் முன்னறிவிப்புகளும் செய்து இறை அடையாளங்களையும் காண்பிக்கக் கூடிய எந்த ஒரு மனிதரையும் நாம் தீவிரமாகவும், நேர்மையாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். திருக்குர்ஆன் இதனையே நமக்கு இவ்வாறு நினைவூட்டுகின்றது.
وَ قَالَ رَجُلٌ مُّؤۡمِنٌ ٭ۖ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَکۡتُمُ
اِیۡمَانَہٗۤ اَتَقۡتُلُوۡنَ رَجُلًا اَنۡ یَّقُوۡلَ رَبِّیَ اللّٰہُ وَ
قَدۡ جَآءَکُمۡ بِالۡبَیِّنٰتِ مِنۡ رَّبِّکُمۡ ؕ وَ اِنۡ
یَّکُ کَاذِبًا فَعَلَیۡہِ کَذِبُہٗ ۚ وَ اِنۡ یَّکُ صَادِقًا
یُّصِبۡکُمۡ بَعۡضُ الَّذِیۡ یَعِدُکُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا
یَہۡدِیۡ مَنۡ ہُوَ مُسۡرِفٌ کَذَّابٌ
ஃபிர்அவ்னின் சமுதாயத்தினருள் நம்பிக்கை கொண்டு, அந்நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒரு மனிதர் கூறினார்: என் இறைவன் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒரு மனிதரைக் கொலை செய்யப் போகின்றீர்களா? மேலும் அவர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால், அவரது பொய்யினால் விளையும் தீங்கு அவரையே சேரும். ஆனால் அவர் உண்மையாளராயின், அவர் உங்களுக்கு முன்னறிவித்தவைகளுள் சில தண்டனைகள் உங்களுக்கும் நேரும். [40:29]
நாம் இப்பொழுது திருக்குர்ஆனை ஆராய்ந்து அது எம்பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடிய, அன்னாருடைய உம்மத்திலிருந்தும் தோன்றக்கூடிய ஒரு இறைத்தூதரை பற்றி, நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
வசனம் 1
فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளைக் கழித்திருக்கின்றேனே, இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை? [10:17]
ஆதாரம்: தன்னுடைய வாதங்களின் உண்மைக்கு, நபித்துவத்திற்கு முந்தைய தன்னுடைய வாழ்வே சான்று என்று மக்களிடம் கூறும்படி இறைவன் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுகிறான். இதுவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடைய விஷயத்திலும் உண்மையாகும். அன்னாருடைய வாதங்களுக்கு முன் உள்ள அன்னாருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அன்னார் மிகவும் உண்மையான ஒரு நபராக இருந்திருக்கிறார்கள் என்பது பட்டப் பகலை போல் நமக்கு தெளிவாகும். அவர்களே இந்த இறை அறிவிப்பையும் கூட பெற்றிருந்தார்கள்
நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளைக் கழித்திருக்கின்றேனே, இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை? (தத்கிரா, பக்கம் 111)
மேலும் அவர்கள் எழுதுவது என்னவென்றால் “நீங்கள் வாதத்திற்கு முன்னுள்ள என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு தவறையும் இட்டுக்கட்டுதலையும், பொய்களையும் அல்லது ஏமாற்றுதலையும் பார்க்கவே முடியாது. அவ்வாறு இருந்திருந்தால் நீங்கள் பொய் சொல்வதையும், மற்றவர்களை ஏமாற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ள ஒரு நபர் மீண்டும் பொய் கூறியுள்ளார் என்று (என் வாதங்களை குறித்து) ஒருவேளை சிந்திக்கலாம் எனலாம். என்னுடைய வாழ்வில் அத்தகைய ஒரு தவறை குற்றம்சாட்டக்கூடியவர் உங்களில் எவராவது இருக்கின்றார்களா? எனவே ஆரம்பம் முதலே என்னை இறையச்சமுடையவர்களில் ஒருவனாக வைத்திருந்தது இறைவனுடைய ஓர் அருளாகும் மேலும் இது சிந்திக்கக்கூடியவர்களுக்கும் ஒரு ஆதாரமாக திகழும்.” (ஷஹாதத்துல் குர்ஆன், ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 64)
வசனம் 2
وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ
کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ
அல்லாஹ்வைப் பற்றி பொய்
புனையவோ அல்லது அவனுடைய அடையாளங்களைப் பொய்யாக்கவோ செய்பவனை விட அக்கிரமக்காரன் யார்?
நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. [6:22]
ஆதாரம்: இந்த வசனத்தில் இறைவனுக்கு எதிராக பொய்யை இட்டுக்கட்டக்கூடியவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய மாட்டார்கள் என்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர்களிடம் கூறப்படுகின்றது. எம்பெருமானார் முஹம்மது (ஸல்) வெற்றி அடைந்தது அன்னார் இறைவன் புறமிருந்து தோன்றியதைக் காட்டுகிறது. தன்னுடைய எதிரிகளிடம் சவால் விட்ட ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கும் இது பொருந்தும் அவர்களில் எவருமே அன்னாருக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை.
வசனம் 3
کَتَبَ اللّٰہُ لَاَغۡلِبَنَّ اَنَا وَ رُسُلِیۡ ؕ اِنَّ
اللّٰہَ قَوِیٌّ عَزِیۡزٌ
ஆதாரம்: இந்த வசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் இறைவனால் தன்னுடைய தூதர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் எப்பொழுதுமே அவர்களுடைய எதிரிகளின் மீது மேலோங்கி விடுகின்றார்கள். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மஹ்தி (அலை) அவர்களுடைய எதிரிகளும் கடந்த 130 வருடங்களில் இந்த ஜமாஅத்தை அழிப்பதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவே இல்லை. மாறாக இந்த ஜமாஅத் அவர்கள் மீது எப்போதும் மேலோங்கியே வந்துள்ளது.
வசனம் 4
فَاَنۡجَیۡنٰہُ وَ اَصۡحٰبَ السَّفِیۡنَۃِ وَ جَعَلۡنٰہَاۤ
اٰیَۃً لِّلۡعٰلَمِیۡنَ
ஆதாரம்: ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஒரு பெருவெள்ளம் வந்தது அது ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்களுடைய எதிரிகளை அழித்து விட்டது. நூஹ் (அலை) மற்றும் அவர்களுடன் அந்த கப்பலில் இருந்தவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள். இதேபோன்றே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலத்திலும் பிளேக் நோய் என்னும் ஒரு பெரும் தொற்று வியாதி முன்னறிவிப்புகளின் அடிப்படையில் பரவியது. மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறந்துபோனார்கள் அதில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் எதிரிகளும் அடங்குவார்கள். இந்தக் கொள்ளை நோய் ஏற்பட்டிருந்த காலத்திலேயே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு இந்த இறை அறிவிப்பு வழங்கப்பட்டது;
“நான் உம்முடைய வீட்டின் நான்கு சுவர்களுக்குள் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்”
இந்த முன்னறிவிப்பை விளக்கியவாறு அன்னார் எழுதுகிறார்கள்: “செங்கல் மற்றும் களிமண்ணைக் கொண்டு கட்டப்பட்ட என்னுடைய வீட்டில் வசிக்க கூடிய அந்த மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று யாரும் எண்ணிக் கொள்ளக் கூடாது மாறாக என்னை முழுமையாக பின்பற்றி, மேலும் என்னுடைய ஆத்மீக வீட்டில் வசிக்கக்கூடிய அனைவரையும் இது சுட்டிக்காட்டுகின்றது.” (நூஹ் நபியின் கப்பல் பக்கம் 19)
துல்லியமாக இவ்வாறே நடந்தது. வரலாறு சாட்சி கூறக்கூடிய உண்மை என்னவென்றால், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடைய வீட்டில் வசித்த அனைவரும் இந்த பிளேக் நோயில் இருந்து பாதுகாப்பாக இருந்தார்கள் மேலும் அன்னாருடைய உண்மையான சீடர்களும் பாதுகாப்பாக இருந்தார்கள்.
வசனம் 5
وَ لَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ﴿ۙ۴۵﴾ لَاَخَذۡنَا مِنۡہُ بِالۡیَمِیۡنِ ﴿ۙ۴۶﴾ ثُمَّ لَقَطَعۡنَا مِنۡہُ الۡوَتِیۡنَ ﴿۫ۖ۴۷﴾
அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்,
நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம்.
பின்னர் நிச்சயமாக நாம் அவருடைய கழுத்துப் பெருநரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம். [69:45-47]
இந்த வசனம் காண்பிப்பது
என்னவென்றால் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான நபியாக இருந்தார்கள்.
ஏனென்றால் தன்னுடைய இறைவனிடமிருந்து தனக்கு வந்ததாக கூறப்பட்ட இறை அறிவிப்புகளை
மக்கள் முன்னால் எடுத்து சொன்ன பிறகு அன்னாருக்கு ஒரு நீண்ட வாழ்வு அளிக்கப்பட்டது.
தன்னுடைய முதல் இறை அறிவிப்பைப் பெற்ற பிறகு எம்பெருமானார் (ஸல்) அவர்கள் 23
வருடங்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே 23 வருடங்களை விட அதிகமான
காலம் தனக்கு இறைவனிடமிருந்து இறைவழிபாடு வழங்கப்படுகின்றது என்று வாதிக்க கூடிய
எந்த ஒரு பொய் நபியும் வர முடியாது. இந்த அளவுகோலை நாம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது நாம் தெரிந்து கொள்வது
என்னவென்றால் அவர்களுடைய முதல் இறையறிவிப்புகள் 1860-களின் பிற்பகுதியில்
இறைவனிடம் இருந்து பெறப்பட்டது. மேலும் அன்னார் இறைவனிடமிருந்து இறை அறிவிப்புகளை
45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெற்று வந்தார்கள். மேலும் இது அன்னார் உண்மையாளர்
என்பதையே நிரூபிக்கின்றது. ஏனென்றால் இறைவன் பொய்யாக இறை அறிவிப்பை பெறுவதாக வாதிக்கக்கூடிய
ஒருவருக்கு இத்தகைய ஒரு நீண்ட வாழ்நாளை வழங்க மாட்டான். ஆனால் அஹ்மதி அல்லாத
முஸ்லிம்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 23 வருடங்களுக்கும் அதிகமாக இறை
அறிவிப்புகளை பெறுவதாக வாதித்து இருந்தும் கூட அன்னார் பொய்யராக இருக்கிறார்கள்
என்று கூறுகிறார்கள்.
இது உண்மை என்றால் அவர்களுக்கான நம்முடைய கேள்வி இவ்வாறாக வருகிறது: அதாவது ஒரு பொய்வாதி 23 வருட காலம் இறைவனிடமிருந்து பொய்யான இறை அறிவிப்புகளை பெறுவதாக வாதித்திருந்தால் நாம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உண்மையான வாதம் செய்தார்கள் என்று மேற்கூறிய வசனத்தில் இருந்து எவ்வாறு முடிவு செய்வது? ஏன் என்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து 23 வருடங்கள் இறை அறிவிப்புகளை பெற்றிருந்தார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் அஹ்மதி அல்லாதவர்களின் நிலை மேற்கூறிய வசனத்தில் உள்ள முக்கியமான வாதத்தை பொய்யாக்கி விடுகின்றது.
வசனம் 6
عٰلِمُ الۡغَیۡبِ
فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا ﴿ۙ۲۷﴾ اِلَّا مَنِ
ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ
அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.
அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர. [72:27-28]
ஆதாரம்: இறைவனுடைய ஒரு
உண்மையான நபிக்கு (தீர்க்கதரிசிக்கு) மறைவான விஷயங்களை பற்றிய ஞானம் அதிகமதிகம்
வழங்கப்படுகின்றது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) இந்த ஞானத்தையும்
பெற்றிருந்தார்கள். இது அன்னாரை இறைவனின் ஓர் உண்மையான தூதர் என்று பறைசாற்றுகிறது. அன்னாருடைய முன்னறிவிப்புகளை பற்றி விரிவாக படித்து அறிவதற்கு
நாம் கைக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் “ஹக்கீக்கத்துல் வஹி” (Haqiqatul
Wahi) ஆகும். அதில் அன்னார் நிறைவேறி உள்ள தன்னுடைய அதிகமான முன்னறிவிப்புகளை
பட்டியலிட்டு உள்ளார்கள். அல்லது சுருக்கமான ஒரு பட்டியல் உங்களுக்கு
வேண்டுமென்றால் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம் “இன்விடேஷன் டு அஹ்மதிய்யத்” (Invitation to Ahmadiyyat). என்ற நூலாகும்
வசனம் 7
وَّ اٰخَرِیۡنَ مِنۡہُمۡ لَمَّا یَلۡحَقُوۡا بِہِمۡ ؕ وَ ہُوَ
الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ
ஆதாரம்: இந்தச் சூழலில் இந்த வசனத்தை நாம் பார்க்கும் பொழுது அது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர்களுடன் இதுவரை சேராத மற்றவர்களுக்கு இடையிலும்’ என்ற கூட்டத்தினரிடம் அன்னார் வருவதை பற்றியே கூறப்பட்டுள்ளது. இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மூலமாக நிறைவேறிய எம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய இரண்டாம் வருகையை குறிக்கின்றது.
ஸஹீஹ் புகாரியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது; “ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள் ஒரு நாள் எம்பெருமானார் (ஸல்) அவர்களுடன் சூரா ஜுமுஆ இறங்கிய வேளையில் அமர்ந்து இருந்தோம். நாங்கள் நபி பெருமானாரிடம் (ஸல்) இங்கு குறிப்பிடப்பட்ட அதாவது “அவர்களுடன் சேராத மற்றவர்கள்” என்பது எந்த மக்களை குறிக்கின்றது? என்று கேட்டோம். ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களும் எங்களிடையே அமர்ந்திருந்தார்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் இதே கேள்வியை கேட்ட பொழுது நபி பெருமானார் (ஸல்) தன்னுடைய கரத்தை ஸல்மான் அவர்கள் மீது வைத்து இவ்வாறு கூறினார்கள் இறைநம்பிக்கை கார்த்திகை நட்சத்திரத்தின் அளவில் சென்று விட்டாலும் இவர்களில் இருந்து ஒருவர் அதனை நிச்சயமாக பெற்றுவிடுவார்.” (புகாரி)
வசனம் 8
اِنَّاۤ اَرۡسَلۡنَاۤ اِلَیۡکُمۡ رَسُوۡلًا ۬ۙ شَاہِدًا
عَلَیۡکُمۡ کَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ رَسُوۡلًا
ஆதாரம்: இந்த வசனத்தில் ஹஸ்ரத் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்களுடன் ஒப்பிட்டு காட்டப்பட்டு உள்ளார்கள். இருவருமே இறைச் சட்டத்தை கொண்டு வந்த நபிமார்கள் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன அவற்றில் ஒன்று அவர்களுடைய சமுதாயங்களும் ஒன்றிற்கொன்று ஒத்தவையாக இருந்தன. இறை நேசச் செல்வர்கள் எவ்வாறு ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுடைய இஸ்ரவேல் சமுதாயத்தில் தொடர்ந்து தோன்றி வந்தார்களோ அவ்வாறே எம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்திலும் அத்தகைய இறை நேசச் செல்வர்கள் தொடர்ந்து தோன்றி வருகின்றார்கள். எனவே முஹம்மதிய சமுதாயம் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுடைய சமுதாயத்தை ஒத்ததாக இருக்கிறது. மேலும் இந்த ஒப்புமைகள் முழுமை அடைவதற்கும் மேலும் முழுமையாக பொருந்துவதற்கும் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு 14-வது நூற்றாண்டில் ஒரு மஸீஹ் (மெஸாயா) தோன்றியது போலவே எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகும் 14-ஆம் நூற்றாண்டில் ஒரு மெஸாயா அல்லது மஸீஹ் தோன்றுவது அவசியமாகும் அந்த மஸீஹே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆவார்கள்.
வசனம் 9
اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ وَ یَتۡلُوۡہُ
شَاہِدٌ مِّنۡہُ وَ مِنۡ قَبۡلِہٖ کِتٰبُ مُوۡسٰۤی اِمَامًا وَّ رَحۡمَۃً ؕ
اُولٰٓئِکَ یُؤۡمِنُوۡنَ بِہٖ
எனவே தம் இறைவனிடமிருந்து மிகத் தெளிவானதொரு சான்றைப் பெற்றவரும் தமது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி இறைவனிடமிருந்து தம்மைத் தொடர்ந்து வரும் ஒரு சாட்சியை உடையவரும், (அக்கால) மக்களுக்கு வழிகாட்டுதலாகவும் கருணையாகவும் இருந்த மூஸாவின் வேதம் (சாட்சியாக) கொண்டவருமான ஒருவர் எவ்வாறு பொய்வாதி ஆவார்? (இவற்றில் கவனம் செலுத்தும்) அவர்களே, அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள். [11:18]
ஆதாரம்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இந்த வசனத்தில் மூன்று சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன;
- ஒன்று தன்னுடைய இறைவன் புறமிருந்துள்ள தெளிவான சான்றில் இருக்கக்கூடியவர்கள்
- இரண்டு அன்னாருடைய உண்மைக்கு சான்று தரக்கூடிய ஒருவர் அவரிலிருந்தே அவரைப் பின்பற்றி வருகிறார்
- மூன்று அன்னாருக்கு முன்னால் மூஸா (அலை) அவர்களுடைய வேதம் உள்ளது
தன்னுடைய இறைவனிடமிருந்துள்ள தெளிவான சான்று என்பது சீர்கெட்ட நலிந்த மக்களுடைய வாழ்வில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மகத்தானதொரு, ஆன்மீக நல்லொழுக்க புரட்சியை சுட்டிக்காட்டுகின்றது.
மேலும் அவரிடம் இருந்து
அவரை பின்பற்றக்கூடிய ஒரு சாட்சி என்பது இறைவனிடம் இருந்து வரக்கூடிய எத்தனையோ போதகர்கள்
அன்னாரை பின்பற்றி வருவார்கள். மேலும் அன்னாருடைய உண்மைக்கு சான்று கூறுவார்கள்
என்பதை குறிப்பிடுகின்றது. இதில் ஒப்பற்ற சாட்சி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்
ஆவார்கள்.
மேலும் தனக்கு முன்னால் மூஸா (அலை) அவர்களின் வேதத்தை கொண்டுள்ளவர் என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் குறித்து பைபிளில் காணப்படக்கூடிய முன்னறிவிப்புகளை குறிக்கின்றது.
வசனம் 10
وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَ عَمِلُوا
الصّٰلِحٰتِ لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ کَمَا اسۡتَخۡلَفَ الَّذِیۡنَ
مِنۡ قَبۡلِہِمۡ
அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். [24:56]
இந்த வசனமும் ஹஸ்ரத் நபி பெருமானார் (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுடைய சமுதாயங்களின் இடையேயுள்ள ஒற்றுமையை காண்பிக்கின்றது. இருவருமே இறைச் சட்டம் கொண்டுவந்த தூதர்களாவார்கள். மேலும் அவர்களுக்கு பின்னால் எல்லாம் வல்ல இறைவனின் விசேஷமான கலீஃபாக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்குப் பின் தோன்றிய முக்கியமான ஒரு கலீஃபா (பிரதிநிதி) ஹஸ்ரத் ஈஸா (அலை) ஆவார்கள். அன்னார் மூஸா (அலை) அவர்களுக்கு 1400 வருடங்களுக்கு பிறகு அன்னாருடைய மூஸவி சமுதாயம் முடியக்கூடிய காலகட்டத்தில் மஸீஹ் ஆக தோன்றினார்கள். இவ்வாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களும் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 1400 வருடங்களுக்கு பிறகு தோன்றியுள்ளார்கள்.
மேலும் ஸஹீஹ்
புகாரியில் உள்ள நபிமார்களின் செய்திகள் என்ற புத்தகத்தில் ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை குறித்து உங்களிடமிருந்து
தோன்றக்கூடிய உங்களுடைய இமாம் (இமாமுக்கும்
மின்க்கும்) என்று வந்துள்ளது. மின்க்கும்
என்ற இந்த வார்த்தையை மேற்கூறிய வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சுட்டிக்
காட்டக் கூடிய உண்மை என்னவென்றால் அவர் முஸ்லிம் சமுதாயத்திற்கு வெளியிலிருந்து
வரமாட்டார் மாறாக அவர் இந்த சமுதாயத்திலேயே பிறந்து, இறைவனால் இந்த சமுதாயத்திற்கு
தலைமை ஏற்பதற்காக நியமிக்கப்படுவார்கள். (தொடரும்...)
ஆக்கம்: ஃபர்ஹான் இக்பால் ஸாஹிப் (அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக), அஹ்மதிய்யா பிரச்சாரகர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்-கனடா
மொழியாக்கம்: ஜனாப் ஃபயாஸ் அஸ்லம் சாஹிப்-சென்னை
நன்றி: alislam.org
வாக்களிக்கப்பட்ட மஸீஹின் உண்மைக்கு ஆதாரமாக இத்தனை திருக்குர்ஆன் வசனங்களா? இரண்டாவது தொடரையும் எதிர்பார்க்கின்றேன் எதிர்பார்க்கின்றேன்
பதிலளிநீக்கு