رَبَّنَا ہَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا
وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا
கண்ணியத்திற்குரிய
அவையோர்களே....! அல்லாஹ்வால் படைக்கப்பட்ட
இந்த அழகிய உலகம் இன்று பல்வேறு பிரச்சனைகளில் வீழ்ந்து கிடக்கிறது. தனது
கீழ்தரமான செயலினால் மனித நேயம் பல்வேறு இன்னல்களில் சிக்கி கொண்டிருக்கிறது. இறை
மறுப்பு மற்றும் மார்க்கமற்றது, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாடு சம்பந்தப்பட்ட
உலக அளவிலான பிரச்சனையின் வரிசை மிக நீண்டதாக இருக்கிறது. இந்த உலகளாவிய
பிரச்சனைகளில் குடும்ப நிம்மதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்க
செய்யும் பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குடும்ப
வாழ்க்கையில் திருமண சம்பந்தப்பட்ட போதனைகளை மிக அழகா எடுத்தும் வைக்கும்
விஷயத்தில் இஸ்லாம் ஓர் முன்னோடியாக இருக்கிறது. மேலும் “குடும்ப
வாழ்க்கையை பற்றி இஸ்லாம் கூறும் போதனைகள் என்ன” என்பதுதான் இன்று எனது உரையாகவும்
இருக்கிறது. இறைவன் அருளால் நான் இஸ்லாத்தின் ஓர் உதாரணங்களை மிக சுருக்கமாக
எடுத்து வைப்பேன், இருந்த போதிலும் போதனைகள் என்ன என்பதை
அறிவது மட்டும் போதுமானது கிடையாது மாறாக அதன் படி செயல்படுவதினால் மட்டுமே
குடும்ப வாழ்க்கை வெற்றி தரக்கூடியதாகவும் நல்வழியை வழங்க கூடியதாக அமையும். கண்ணியத்திற்குரியவர்களே, ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை மிகவும் அழகான ஒரு வரியை இவ்வாறு
எழுதுகின்றார்கள்,
“ஒவ்வொரு நன்மைக்கான
வேர் இந்த இறையச்சமே,
இரண்டாவது வரியை அண்ணார் நினைத்து கொண்டுதான் இருந்தார்கள் அப்போது இறைவன், “இந்த வேர் இருந்தால் அனைத்துமே இருக்கும்.” என்று வஹீ அறிவித்தான்.
நாம் இந்த கவிதையை
சிந்திப்போம் என்றால்,
இதில் மனித வாழ்க்கையின் அனைத்து அங்கங்களாகிய ஈமான்,
முன்னேற்றம் மற்றும் வெற்றியின் இரகசியத்தை கூறப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
ஒரு மனிதனின் வாழ்க்கை அவனின் திருமண நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றது. இந்த
நிகழ்ச்சியில் ஓதுவதற்காக ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனில் மூன்று
இடங்களிலிருந்து நான்கு வசனங்களை தேர்ந்தெடுத்தார்கள். இதில் ஐந்து முறை
இறையச்சத்தை பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. இறையச்சத்தின் முக்கியத்துவத்தை ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களின் கூற்றிலிருந்து கேளுங்கள், அண்ணார் கூறுகின்றார்கள்:
“திருக்குர்ஆனில்
கட்டளையை பொறுத்தவரையில் இறையச்சம் மற்றும் தூய்மையை பற்றி மிக அதிகமாக
வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம், இறையச்சம் அனைத்து தீமைகளிலிருந்தும் இரட்சிப்பு பெற ஒரு ஆற்றலை
தருகிறது. அனைத்து நன்மையை நோக்கி விரைந்து செல்ல ஊக்குவிக்கிறது. இவ்வாறு
வலியுறுத்திக் கூறுவதின் இரகசியம் என்னவென்றால், இறையச்சம்
அனைத்து குற்றங்களிலிருந்தும் மனிதனை பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும்
அனைத்து குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற ஓர் சிறந்த கேடயமாகவும் இருக்கிறது.
கண்ணியத்திற்குரியவர்களே....!
உண்மை என்னவென்றால்,
வாழ்க்கையின் வெற்றி மற்றும் அருள்களுக்கு இறையச்சம் ஒரு நல்ல மருந்தாக
இருக்கிறது. இதுவே ஓர் இரத்தின நிறைந்த நீராகவும் இருக்கிறது, இதன் மூலம் குடும்ப வாழ்க்கை ஓர் தூய மரமாக மாறிவிடுகின்றது. இதனின் வேர்
இறையச்சம் எனும் நிலத்தில் இணைந்து இருக்கிறது. அதனின் கிளையோ வானத்தின் உயரத்தை எட்டியதாக
இருக்கிறது. இறையச்சத்தின் அருளினால்
வாழ்க்கை எனும் மரம் ஒவ்வொரு நிலையிலும் சுவைமிகு கனியை தருகிறது. குடும்ப வாழ்க்கை
மற்றும் அதன் வெற்றிற்கான அடிப்படை விஷயம் இறையச்சம் ஆகும். எந்த வீட்டில்
இறையச்சம் இருக்கிறதோ அந்த வீடு அருட்களை கொண்ட ஓர் கருவூலமாக இருக்கிறது. எந்த
வீட்டில் இறையச்சம் இல்லையோ அந்த வீடு ஒன்றுமல்லாதது மட்டுமல்லாமல் எந்தவித தகுதியையும்
பெற்றதாக இருக்காது.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது ஜமாத்திற்கு பல முறை
இறையச்சம் பற்றி அறிவுரை கூறியிருக்கிறார்கள். தனது ஓர் கவிதையில் இவ்வாறு
கூறுகின்றார்கள்:
“எதற்கு பெயர்
இறையச்சமாக இருக்கிறதோ அது எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஓர் ரத்தினமாக இருக்கிறது.
எவரது வேலையே
இறையச்சமாக இருக்கிறதோ அவர் அருளுக்குரியவராக இருக்கிறார்.
கேளுங்கள்! இஸ்லாம் ஒன்றே இறையச்சத்தை பெற்றுத்
தரக்கூடியதாக இருக்கிறது.
இறைவனின் நேசம்
மற்றும் பானமாக இந்த இறையச்சம் திகழ்கிறது.”
இறையச்சம் என்பதின் கருத்து மிகவும்
விரிவானதாகும். மனிதனின் எல்லா வாழ்க்கையையும் இது சார்ந்து இருக்கிறது. ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் (அய்யகதுல்லாஹு...) அவர்கள் இறையச்சம் என்பதற்கு ஒரு
அழகான கருத்தை கூறியிருக்கின்றார்கள். அதை நாம் எப்போதும் நியாபகத்தில் வைத்துக் கொள்ள
வேண்டும். அவர்கள் கூறுகின்றார்கள்:
“தக்வா (இறையச்சம்) என்பது ஒவ்வொரு சிறு சிறு
பாவத்தையும் வெறுத்து ஒதுக்குவதும், மேலும் ஒவ்வொரு சிறு
சிறு நன்மையை கூட ஆழ் உள்ளத்திலிருந்து விரும்பி தேர்ந்தெடுப்பதாகும்.”
கண்ணியத்திற்குரியவர்களே...! குடும்ப வாழ்க்கையை இனியதாக ஆக்குவதற்கு
இஸ்லாம் மேலும் ஒரு அடிப்படை விஷயத்தை எடுத்து கூறியுள்ளது. அல்லாஹ் முஸ்லிம் ஆண்
மகனை “ஆஷிறுஹுன்ன பில் மஃரூஃப்” என்று வலியுறுத்தி கூறுகிறது. அதாவது
“முஸ்லிம் ஆண்மகனே நீ உன் குடும்பத்தை சுவர்க்கத்தின் தொட்டிலாக மாற்ற விரும்புகிறாய்
என்றால், நீ எப்போதும் உனது மனைவியுடன் நல்லுறவோடு நடந்து
கொள்வாய் என்று உறுதி எடுத்துக் கொள். இந்த வசனத்தில் எந்த அளவுக்கு பிரகாசமான ஓர்
போதனையை தரப்பட்டுள்ளது என்றால், இது ஒரு அடிப்படை போதனை
மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு உறுதியான உத்திரவாதத்தையும் தரக்கூடியதாக
இருக்கிறது. அழகான இந்த அடிப்படை போதனைக்கு விளக்கமாக ஹஸ்ரத் ரசூல் (ஸல்)
அவர்களின் இந்த அழகான ஹதீஸை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அவர்கள்
இவ்வாறு கூறுகின்றார்கள்:
خَیرُکُمْ خَیْرُکُمْ مِنْ اَھْلِہ وَ اَنَا خَیْرُکُمْ
لِاَھْلَہ
அதாவது, முஸ்லிமிகளே! இறைவனின் பார்வையில், உங்களில் யார் தனது மனைவியோடு நல்ல முறையில் நடந்து கொள்வாரோ அவரே
உங்களில் மிக சிறந்தவர். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு
இன்னும் ஆர்வத்தை ஊட்டும் வகையில், “பாருங்கள், எந்த போதனையை நான் உங்களுக்கு வழங்குகிறேனோ அதை நான் முதலில்
செயல்படுத்துபவனாக இருக்கிறேன். மனைவியோடு நல்ல முறையில் நடந்து கொள்வதில்
நான் உங்கள் அனைவரையும் விட சிறந்தவனாக இருக்கிறேன் என்று என்னால் வலுவாக
கூற முடியும்” என்று கூறினார்கள். ஆகவே எனது இந்த வழிமுறையை முன்பு வைத்துக்
கொண்டு செயல்படுங்கள் நீங்களும் இறைநேசராக மாறிவிடுவீர்கள்.
ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் மேலும்
கூறுகின்றார்கள்: நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் தனது மனைவிக்கு ஒரு முறை உணவு
ஊட்டினாலும்,
அவனுக்கு இறைவன் புறமிருந்து அதற்குரிய நற்பலன் கிடைக்கும்.
இனியதொரு சூழ்நிலையை உருவாக்குவதைப்
பற்றி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மை நேசரான
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் பல்வேறு இடங்களில் வலியுறுத்தி
கூறியிருக்கின்றார்கள். அதில் ஒரு சில மேற்கோள்களை உங்கள்முன் வைக்கிறேன். அன்னார்
கூறுகின்றார்கள்:
“தனது
மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று இறைவனே கூறுகின்றான்.
“ஆஷிரூஹுன்ன பில் மஃரூஃப்” (4:20). ஆனால்
மனிதன் தனது சுய நலத்தை குறிக்கோளாக கொண்டு தனது உள்ஆசைகளோடு
செயல்படுகிறான் என்றால் அது வீணானதாகும். அதே செயல் இறை அருளை பெற வேண்டும் என்ற
நோக்கத்தோடு இருந்தால், எனக்கு அந்த செயல் அருளுக்குரியதாக இருக்கிறது.
பிறகு இன்னொரு இடத்தில் கூறுகின்றார்கள்:
‘மனைவியோடு நீங்கள் “ஆஷிரூஹுன்ன பில் பில் மஃரூஃப்” படி நடந்து
கொல்லவில்லை என்றால் அவள் யாரும் சந்திக்காத யாரும் விசாரிக்காத ஓர் கைதியை போன்று
ஆகிவிடுகிறாள்.”
ஒரு முறை ஒருவர் தனது மனைவியோடு
கடினமாக நடந்து கொள்கிறார் என்ற புகார் வந்தது. அதற்கு அன்னார் (அலை) “நமது
சகோதரர்கள் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
கூறுகின்றார்கள்:
“ஓர் உண்மையான
நண்பர்களின் மத்தியில் எவ்வாறு உறவு இருக்கிறதோ அவ்வாறு ஒரு கணவன்
மனைவிக்கிடையிலான உறவு இருக்க வேண்டும். மனிதனின் உயர்ந்த நடவடிக்கை மற்றும்
இறைவனோடு உள்ள தொடர்புக்கு சாட்சியாக இந்த பெண்மணிகள்தான் இருக்கிறார்கள்.
இவர்களிடமே நல்ல உறவு இல்லை என்று சொன்னால் பிறகு எவ்வாறு இறைவனோடு நல்ல தொடர்போடு
இருக்கிறேன் என்று வாதம் புரிய முடியும்.?”
கண்ணியத்திருக்குரியர்களே! இனிய
குடும்ப வாழ்க்கைக்கான திறவுகோல் துஆ ஆகும். துஆ என்றால் என்ன? தன்னை தானே ஏதும் ஒரு பொருட்டாக கருதாமல்
அந்த வல்லமைமிக்க இறைவன் முன் இந்த துஆ அல்லாமல் வேறு ஏதும் சாத்தியமில்லை, துஆவோடுதான் அனைத்தும் சாத்தியமாகும் என்று கூறியவாறு பணிந்துவிடுவதே
ஆகும். தூய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் எவ்வளவு அழகாக கூறுகிறார்கள் பாருங்கள்,
“மாண்டு போனவன்
உயிர்பெற வேண்டும் என்றால் அது துஆவினால் மட்டுமே, பார்வை போனவன் பார்வை பெற வேண்டும் என்றால்
அது துஆவினால் மட்டுமே”
ஆக இந்த துஆவை கொண்டுதான்
கல்போன்றிருக்கும் கணவனின் உள்ளத்தை மெருகாக்க முடியும். நிம்மதி குழைந்து போகும்
ஓர் மனைவி தனது நிம்மதியை மீட்க முடியும். ஆக குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்வதற்கு இந்த மூன்று வழிமுறையே மிகச் சிறந்ததாக இருக்கிறது. இந்த ஒரு
காரணத்தினால் மட்டுமே அல்லாஹ் மற்றும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் அடுத்தடுத்து
நமக்கு பலன்தரக்கூடிய துஆவை கற்று தந்திருக்கின்றார்கள்.
துஆவின் துவக்கம் எதை கொண்டு இருக்க
வேண்டும்? (அதற்குரிய பதிலை) கேளுங்கள், ஒரு முறை ஒருவர் ஹஸ்ரத் மீர் நாஸிர் நவாப் சாஹிபிடம் (ரலி) ,” நீங்கள் எந்த காரியத்தை செய்ததினால் உங்களுக்கு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களே மருமகன் ஆகும் இந்த உயர்ந்த தகுதி கிடைத்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள்,
எனது இந்த பெண்குழந்தை பிறந்தபோது நான் இறைவன் முன் அறுக்கப்பட்ட ஓர் ஆட்டை போன்று
துடித்த வண்ணம் துஆ கேட்டேன், “இவளை உன் பொறுப்பில்
எடுத்துக் கொள், மேலும் இவளுக்கு இந்த உலகத்தில் யாருக்கும்
கிடைக்காத அந்தஸ்தை வழங்குவாயாக” என்று கேட்டேன். ஹஸ்ரத் மீர் நவாப் சாஹிப் (ரலி)
இதை கூறிய போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பொழுங்கி வலிந்தது.
இஸ்லாத்தின் போதனை என்னவென்றால்
வரத்தின் காலம் வரும்போது நீங்களும் துஆ செய்யுங்கள், குழந்தையையும் துஆ செய்ய சொல்லுங்கள்.
ஒவ்வொரு கட்டமும் துஆ செய்த வண்ணம் கடக்க வேண்டும். மார்க்க விஷயம் மற்றும் போதுமானது
என்ற மனப்பான்மைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நிக்காஹை பற்றி அறிவிப்பு இருக்க
வேண்டும்...........பருவமுடையவர்களாக இருக்கின்றார்களா என்பதை கவனிக்க வேண்டும்....................ஆக
ஒவ்வொரு கட்டமும் துஆ மட்டுமே ஒரு நம்பிக்கையாளனுக்கு கை கொடுப்பதாக இருக்க
வேண்டும். திருக்குர்ஆனில் இறை அடியானின் ஓர் அழகான பண்பாக இவ்வாறு
கூறப்பட்டுள்ளது: அவர்கள் எப்போதும் குடும்ப வாழ்க்கையின் நலனுக்காக இவ்வாறு துஆ
செய்கின்றார்கள்:
رَبَّنَا ہَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا
وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا
لِلْمُتَّقِیْنَ اِمَامًا
“இறைவா எங்களுக்கு
நீ எங்களின் சந்ததிகள் மற்றும் வாழ்க்கை துணையிடமிருந்து கண்களுக்கு குளிர்ச்சியை
வழங்குவாயாக. மேலும் இறையச்சமுடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்குவாயாக. (25:75)
ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்களின் துஆ செய்யும் வழிமுறை எதுவாக இருந்தது என்றால்,
அன்னார் கூறுகின்றார்கள்:
“எனது
தனிப்பட்ட நிலை என்னவென்றால், நான் எனது நண்பர்கள், சந்ததிகள், மற்றும் மனைவிக்காக துஆ செய்யாத எந்த தொழுகையும் இருந்ததில்லை.”
இஸ்லாம்
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்காக பெண் மற்றும் ஆண் இருத்தரப்பினருக்கும்
வழங்கப்படும் உரிமையை பற்றி கூறியுள்ளது. மேலும் ஆண் மற்றும் பெண் இரு தரப்பில்
எவர் ஒருவர் நற்காரியங்கள் செய்தாலும் அவர்களுக்கு சமமாகவே நற்கூலி வழங்கப்படும், எந்த குறையும் வைப்பதில்லை என்ற போதனையை
குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறது. இந்த போதனையே இஸ்லாம் வழங்கும்
அழகிய சமத்துவ மற்றும் பாகுபாடுகள் நிறைந்த போதனையாகும். இதை பற்றி இந்த
வசனத்திலும் நமக்கு கிடைக்கிறது அதாவது,
وَلَہُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْہِنَّ بِالْمَعْرُوْفِ۠ وَلِلرِّجَالِ عَلَیْہِنَّ
دَرَجَۃٌ
பொருள்: (பெண்களாகிய) அவர்கள் மீது சில பொறுப்புகள் உள்ளது போன்று, நியாய முறைப்படி அவர்களுக்கு சில உரிமைகளும் உள்ளன. ஆயினும் அவர்களை விட ஆடவர்களுக்கு ஒருவித உயர்வு உள்ளது. (2:229)
குடும்ப வாழ்க்கையை
வெற்றிக்குரியதாகவும்,
மகிழ்ச்சிக்குரியதாகவும் மாற்றுவதற்கு ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும்
பொறுப்புள்ளது. இரண்டு கையை கொண்டு தட்டும்போதே சத்தம் வருகின்றது. (சொல்வழக்கில்)
கணவன் மனைவி இருவரும் ஒரு வாகனத்தின் இரு சக்கரங்களாக இருக்கின்றனர் என்று மிக
சரியாகத்தான் கூறப்படுகிறது. இவ்விருவர்களும் சமமான முறையில் இயங்குவதனாலேயே
குடும்ப வாழ்க்கை எனும் பயணம் நல்ல முறையில் சேரும் இடத்தை அடைகிறது. மனித
வாழ்க்கையில் மிகவும் பலகீனமான உறவாக இருக்கக்கூடிய இந்த குடும்ப உறவு, இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து அன்பு செலுத்தி வருவதனால்
மட்டுமே அவர்களின் ஆன்மீக வாழ்க்கையும் பௌதீக வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும்
அருளுக்குரியதாக இருக்க காரணமாக அமையும். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும்
இந்த ஒத்துழைப்பை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
ھُنَّ لِبَاسٌ
لَّکُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّہُنَّ
பொருள்: ஆண்களே!
பெண்கள் உங்களின் ஆடையாக இருக்கின்றனர். மேலும் நீங்களும் அவர்களுக்கு ஆடையாக
இருக்கின்றீர்கள். (2:188)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத்
(இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்) (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்தவாறு
இவ்வாறு கூறுகின்றார்கள்:
“ஆண் பெண் இருபாலரும் எப்போதும் ஒருவருக்கொருவர்
ஆடையாக இருங்கள். ஒருவர் மற்றொருவரின் குறையை மறையுங்கள். ஒருவர் மற்றொருவரின்
அழகிற்கு காரணமாக இருங்கள். பிறகு எவ்வாறு ஆடை குளிர் மற்றும் வெப்பநிலையிலிருந்து
மனித உடலை காக்கின்றதோ அவ்வாறே ஆண் பெண் இருவரும் சந்தோஷம் மற்றும் தூக்க
நேரத்தில் ஒருவர் மற்றொருவருக்கு பயனளிப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும் கவலையாக
இருக்கும் சமயத்தில் ஒருவர் மற்றொருவருக்கு மனசாந்தத்திற்கு காரணமாக இருங்கள்.
இஸ்லாமிய சூழ்நிலையை அழகாக மாற்றுவதற்கும் வீடுகளை சுவர்க்கமாக மாற்றுவதற்கான
பொறுப்பும் ஆண் பெண் இருபாலர்கள் மீதும் இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களை கொண்டு மனதை துயரப்படுத்துவது, சாதாரண விஷயங்களை நீளச்செய்து வீடுகளில்
நிம்மதியை சீர்குலைத்தல் போன்ற காரியங்கள் கீழ்தரமான ஓர் அறிவற்ற செயலாக
இருக்கிறது.”
திருமணம் என்பது அன்பு, அருட்கள் மற்றும் பரஸ்பரம் நிம்மதியை உருவாக்குவதற்காக
நிலைநாட்டாப்பட்ட ஓர் தூய உறவாகும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த இறை வசனத்தை
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அதாவது
وَجَعَلَ بَیْنَکُمْ مَّوَدَّۃً
وَّرَحْمَۃً
அதாவது பரஸ்பரம்
காட்டும் அன்பு மற்றும் கிருபையே குடும்ப வாழ்க்கைக்கு உண்மையான இலட்சியம் மற்றும்
சிறந்ததாகவும் இருக்கிறது.
கண்ணியத்திற்குரியவர்களே...! இஸ்லாம்
ஒரு பக்கம் எவ்வாறு ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
என்ற போதனையை எடுத்து கூறுகிறதோ அதே போன்று ஓர் நல்ல பண்பை கொண்ட நம்பிக்கையான
பெண்மணியை பற்றியும் விவரித்து கூறியுள்ளது. குடும்ப வாழ்க்கையை அழகாக மாற்றியமைக்க
இவ்வாறு நல்ல பண்பை கொண்ட மனைவியே மிக முக்கிய பங்காக வகுக்க கூடும் என்பது
தெளிவானது. இதை பற்றிய விவரம் திருக்குர்ஆனில் சூரா அஹ்ஸாப் வசனம் 36 இல் வருகிறது. ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் இதை
பற்றி எடுத்து கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள், “எப்போது
வரை ஓர் மனைவி தனது கணவருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுப்பதில்லையோ அது வரை
அந்த பெண் இறைவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்கவில்லை என்றே கருதப்படும்.”
பிறகு கூறினார்கள், எந்த பெண் ஐந்து வேலை தொழுகை
தொழுது, ரமலான் மாதத்தின் நோன்பு வைத்து, தனது கணவருக்கு கட்டுப்பட்டு அவரது பேச்சை கேட்டு வருகிறாரோ அந்த
பெண்ணுக்கு சுவர்க்கத்தில் எந்த கதவு வழியாக வர விரும்பினாலும் வர உரிமை
இருக்கிறது. பிறகு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்
கூறினார்கள், “எந்த பெண்மணியை கண்டு அவளது கணவனின்
மனது சந்தோஷம் அடைகிறதோ, எந்த பெண்மணி கணவனின்
கட்டளைக்கு கட்டுபடுகிறாலோ, எந்த விஷயத்தை அவளது கணவன்
வெறுக்கிறானோ அதிலிருந்து தவிர்ந்திருக்கும் பெண்ணே சிறந்த பெண்மணியாக
இருக்கிறாள்.”
இவ்வாறே ஹஸ்ரத்
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்: கணவன்
வீடை நல்ல முறையில் பார்க்கக் கூடியவன், அதனை நல்ல முறையில் கவனிக்கக்கூடிய
பெண்ணுக்கு கணவன் தனது பொறுப்பை நிறைவேற்றுவதனால் கிடைக்கும் அதே நற்கூலி (அவளுக்கும்)
கிடைக்கிறது.”
ஹஸ்ரத் உம்மே சல்மா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது கணவன் மகிழ்ச்சியாக இருக்கும்
தருணத்தில் மரணிக்கும் பெண்மணி சுவனம் புகுவாள்.”
இதைப் பற்றி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களின் ஒரு கூற்றும் இவ்வாறு வருகிறது, (சகோதரர்கள்) இதனை மிக கூர்ந்து கவனிக்க
வேண்டும். இதனை குறிப்பாக பெண்கள் மிக கூர்ந்து கவனிக்க வேண்டும். அன்னார்
கூறினார்கள், “கணவனை கீழ்படியும் பெண்ணை (இறைவன்)
ஒவ்வொரு நாசத்திலிருந்தும் பாதுகாப்பான்,
அவர்களது சந்ததிகள் நீண்ட வயதை அடைபவர்களாக இருப்பார்கள்,
தூயவர்களாகவும் இருப்பார்கள் என்பது இறைவனின் வாக்காக இருக்கிறது.”
அல்லாஹ் தஆலா கணவன் மனைவியின் உறவை, ஒருவர் மற்றொருவருக்கு நிம்மதி
அளிப்போர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ் நியமித்துள்ள மற்ற பொறுப்புகளை மறந்து
அதில் குறை வைக்கும் அளவிற்கு பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்தி ஒருவர் மற்றவர் மேல்
உள்ள விருப்பத்தில் மூழ்கி விடக்கூடாது என்பதற்காக நியமித்திருக்கின்றான்.
இது சம்பந்தமாக பெற்றோர்களின் மீதும்
மிக அதிகமான ஒரு பொறுப்பும் இருக்கிறது. குழந்தைகள் தமது பெற்றோருக்கு தொண்டாற்ற வேண்டும்,
அவர்களுக்கு கீழ்படிய வேண்டும், அவர்களின் ஒவ்வொரு
கூற்றையும் கேட்டு அதன்படி அமல் செய்ய வேண்டும், மேலும்
அவர்களுக்காக துஆவும் செய்ய வேண்டும். இந்த பொறுப்பை அவர்கள் எப்போதும் தனது
வாழ்நாளில் மறந்துவிடக்கூடாது. திருமணத்திற்கு பிறகும் அவர்களின் பொறுப்பு இவ்வாறே
இருக்க வேண்டும்.
துஆவை பற்றி கூறும்போது அல்லாஹ் தஆலா
இவ்வாறு துஆவை செய்ய கூறுகின்றான், அதாவது
وَقُلْ رَّبِّ ارْحَمْہُمَا کَـمَا رَبَّیٰنِیْ
صَغِیْرًا
என் இறைவா இவர்கள்
என்னை எவ்வாறு நான் குழந்தையாக இருக்கும்போது பாதுகாத்து, வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் இருவர்
மீதும் நீ கருணை புரிவாயாக. (17:25)
இதை பற்றிய ஹஸ்ரத் முதல் கலீஃபதுல்
மஸீஹ் (ரலி) அவர்களின் ஒரு முன்மாதிரியை நான் உங்கள் வைக்கிறேன். அவர்கள்
கூறுகின்றார்கள்:
“நான் எனது தாய் தந்தைக்காக துஆ கேட்பதில் கலைப்படைவதில்லை. நான் இதுவரை
அவர்கள் இருவருக்காக துஆ கேட்காத எந்த ஜனாஸா தொழுகையும் நான் தொழுததில்லை.
எந்த வீட்டில் பெற்றோருக்கு மதித்தல், கீழ்படிதல் மற்றும் அவர்களுக்கு தொண்டாற்றும்
பண்புகள் காணப்படுவதில்லையோ அந்த வீடு அருட்களை இழந்த வீடாக மாறிவிடுகிறது.
குடும்ப வாழ்க்கைக்கு தேவையான இன்னொரு
அவசியமான விஷயம் என்னவென்றால், குழந்தைக்கு நல்ல முறையில் தர்பிய்யத் கொடுத்து வளர்க்க வேண்டும்
என்பதாகும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்
கூறுகின்றார்கள், திருக்குர்ஆனில் கற்றுத்தரப்பட்ட
இந்த துஆ, அதாவது
(46:60) அதாவது
எனது மனைவி மக்களையும் சீர்திருத்துவாயாக என்ற துஆ தனது நிலையின்
சீர்திருத்தத்திற்கான துஆவை கேட்பதுடன் தனது மனைவி மக்களுக்காகவும் துஆ செய்ய
வேண்டும். ஏனென்றால் பல்வேறு குழப்பங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த குழந்தைகள்
மற்றும் மனைவிகள் காரணமாகவே உருவாகிறது. இவ்வாறு அந்த பெற்றோர்கள் மரணிக்கும்
தருவாயில் நாம் நமது குழந்தையை ஓர் இறையச்சமுடையோர்களாக விட்டு செல்கிறோம் என்பதை
அறிந்தால் அவர்களின் மறுமை பயணம் மிக சாந்தமாக அமைகிறது.
ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் கூறினார்கள், “தனக்காக
துஆ செய்யும் சந்ததிகளை விட்டு செல்லும் அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்களாக
இருக்கின்றனர்.”
وَاَصْلِحْ لِیْ فِیْ
ذُرِّیَّتِیْ
பிறகு
அன்னார் கூறினார்கள், “ஒரு தகப்பன் தனது குழந்தைக்கு
வழங்கும் நல்ல தர்பிய்யத்தை விட வேறு ஏதும் நல்ல அன்பளிப்பாக இருக்க முடியாது.
பிறகு அன்னார் (ஸல்) இதுவும் வலியுறுத்தி கூறினார்கள், அதாவது “அக்ரிமூ அவ்லாதாகும் வ அஹ்ஸினு அதபஹும்” அதாவது குழந்தைகளுடன்
கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள், அவர்களுக்கு நல்ல
தர்பிய்யத்தை வழங்குங்கள். ஒரு குடும்பம் தனது குழந்தைகளுக்கு நல்ல தர்பிய்யத்தை
வழங்குவதன் மூலமே அன்பு மற்றும் நேசத்தின் ஊஞ்சலாக ஆக முடியும், சுவனத்தை பெரும் நற்பாக்கியம் பெற்றவர்களாகவும் மாற முடியும்.
ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு
கூறினார்கள், “நீங்கள் முதலில் நல்லவராக இருந்து
உங்கள் சந்ததிகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக திகழுங்கள். மேலும் அவர்களை
இறையச்சமுள்ளவர்களாக மாற்ற முயற்சிகள் மற்றும் துஆ செய்யுங்கள். எவ்வாறு
அவர்களுக்காக சொத்துக்களை சேகரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றீர்களோ அவ்வாறே
இந்த விஷயங்களுக்காகவும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு எது நல்ல
முன்மாதிரியாக இருக்குமோ அதனை செய்யுங்கள். இதற்கு முதலில் நீங்கள் உங்களை
சீர்திருத்திக் கொள்வது மிக அவசியம் ஆகும்.
கண்ணியத்திற்குரியவர்களே!
சிறந்த சுற்றுசூழ்நிலையை உருவாக்குவதற்கு நமது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் ஈமானை வலுவூட்டும் எந்த நல் முன்மாதிரியை உலகத்திற்கு வழங்கினார்களோ அது
உலகம் அழியும் வரை ஒவ்வொரு ஆண்களுக்கும் நல்ல ஒரு பாடமும் நல்ல முன்மாதிரியாகவும்
இருக்கிறது. அதில் ஒரு சில உபதேசங்களை நான் உங்கள் முன் வைக்கிறேன், இதில் குறிப்பாக வீட்டில் தனது மனைவியுடன் வேலை பார்ப்பதை மிக கஷ்டமாக
கருதும் ஆண்கள் மிக கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹஸ்ரத் ஆயிஷா சித்திக்கா (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள், “எவ்வளவு நேரம் ஹஸ்ரத் நபி
(ஸல்) வீட்டில் இருப்பார்களோ வீட்டிலுள்ளவர்களுக்கு உதவி மற்றும் பணியாற்றுவதில்
நேரத்தை செலவிடுவார்கள். பிறகு தொழுகைக்காக மஸ்ஜிதிலிருந்து அழைப்பு வந்ததும்
மஸ்ஜிதை நோக்கி சென்றுவிடுவார்கள்.”
ஹதீஸில்
வருகிறது, “ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வீட்டிலுள்ளவர்களோடு
புன்னகைத்தவாரும், விளையாடியவாரும்
மகிழ்ச்சியோடு இருப்பார்கள். தூய மனைவிமார்களை கேலி கிண்டல் செய்வார்கள். அவர்களை
புகழ்ந்து வருவார்கள். வீட்டு வேலைகளில் உதவி புரிவார்கள். ஏதாவது ஒரு மனைவி மாவு
பிசைகின்றார்கள் என்றால் அதற்காக தண்ணீர் எடுத்து வருவார்கள், உணவு அடுப்பில் இருந்தால் விறகினை எடுத்து அடுப்பில் வைப்பார்கள். ஆக
எந்த கஷ்டமுமின்றி வீட்டு வேலை செய்து வருவார்கள். வீட்டிற்கு இரவு நேரம் தாமதமாக
வந்தால் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் தானாகவே வீட்டில் இருக்கும் உணவையோ
அல்லது பாலையோ அருந்தி வருவார்கள். இந்த இடத்தில்
(சகோதரர்கள்) சற்று நின்று, நம்மில் எத்தனை பேர் முழுமையான
அந்த மாமனிதர் (ஸல்) அவர்களின் இந்த போதனையின்படி நடக்கிறோம் என்பதை கவனிக்க
வேண்டும்.
அவையோர்களே! இப்போது நான் உங்கள் முன்
ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை
உங்கள் முன் வைக்கிறேன். நன்னடத்தைக்கான நல் முன்மாதிரியை அன்னார்
என்நேரத்திற்கும் பயன்படும் வகையில் காட்டி சென்றிருக்கின்றார்கள் என்பதை
பாருங்கள்.
ஒரு நேரம் ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்கள் தனது தூய மனைவியான
ஹஸ்ரத் சஃபியா (ரலி) அவர்களுடன் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருக்கும்போது ஒட்டகத்தின்
கால் நழுவவே இருவரும் கீழே விழுந்தார்கள். ஹஸ்ரத் ஆபூ தல்ஹா (ரலி) உடனே அண்ணாரை
நோக்கி விரைந்தார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அவர்களை நோக்கி “அலைக்க பில் மர்அ” அதாவது முதலில் பெண்ணை
கவனிக்கவும் என்று கூறினார்கள்.
ஒரு முறை சில தூய மனைவிமார்கள்
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்த போது, ஒரு காட்டரபி அடிமையானவர் விரைந்து செல்ல நேர்ந்தபோது
ஒட்டகமும் அவரோடு விரைந்து சென்றது. இதனால் அந்த தூய மனைவிமார்கள்
விழுந்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரிஃப்கண் பில்கவாரீர்” ஒட்டகத்தை மெதுவாக ஒட்டுவாயாக, ஏனென்றால், இதன்மீது கண்ணாடி குவளை இருக்கிறது.
இவ்விடத்தில் மற்றொரு
சம்பவதையும் கூறவிரும்புகிறேன், ஈரான் நாட்டை சார்ந்த பக்கத்து வீட்டு ஒரு பெண்மணி ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களை விருந்துக்கு அழைத்தால். அந்த நேரம் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களோடு இருக்கும்
நேரமாக இருந்தது. (அந்த பெண்மணியின் விருந்தின் அழைப்பை கேட்டு) ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள், “என்னோடு எனது மனைவி ஹஸ்ரத் ஆயிஷாவும் (ரலி)
வருவார்கள் என்று கூறினார்கள். இதற்கு அந்த ஈரான் நாட்டை சார்ந்தவள் மறுத்தாள்.
உடனே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தானும் வருவதை மறுத்துவிட்டார்கள். பிறகு சிறிது
நேரம் கழித்து அந்த பெண்மணி மீண்டும் வந்து அழைப்புவிடுத்தாள். மீண்டும் ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்கள் என்னோடு எனது மனைவியும் இருக்கிறார்கள் அவர்களும் என்னோடு
வருவார்கள் என்று கூறினார்கள். அந்த பெண்மணி மீண்டும் மறுத்துவிட்டாள். இதற்கு
ஹஸ்ரத் நபி (ஸல்) அப்படியா, அப்போ நானும் வரவில்லை” என்று
கூறி மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் அந்த பெண்மணி மூன்றாவது முறையாக வந்தாள்
அப்போதும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எனது மனைவியும் என்னோடு இருக்கிறாள் என்று
கூறவே அந்த நேரம் அந்த பெண்மணி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்றுக்
கொண்டாள். அதற்கு பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் அவர்களோடு ஹஸ்ரத் ஆயிஷா (ரலி)
அவர்களும் அந்த பெண்மணி வீட்டிற்கு சென்றார்கள்.
இவ்வாறு மற்றுமொரு சம்பவமும்
இருக்கிறது. “கைபர்” போரிற்கு பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் சஃபியா
(ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள். கைபரிலிருந்து திரும்பி வரும்போது
நபிதோழர்கள் திகைப்பூட்டும் ஒரு சம்பவத்தை கண்டார்கள், அதாவது ஹஸர்த் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத்
சஃபியா (ரலி) அவர்களுக்காக ஒட்டகத்தில் தாமாகவே ஓர் இடத்தை
அமைக்கிறார்கள். தனது உடலில் சுற்றி வைத்திருந்த ஆடையை கழற்றி ஹஸ்ரத் சஃபியா (ரலி)
அவர்கள் அமரும் இடத்தில் விரித்து வைத்தார்கள். பிறகு பயணம் நேரம் வந்த போது
(ஒட்டகத்தில் ஹஸ்ரத் சஃபியா (ரலி) அவர்கள் ஏறுவதற்காக) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தனது
முழங்காலை ஒட்டக முன்பு வைத்து, இதில் உனது காலை வைத்து
ஒட்டகத்தில் ஏறுவாயாக என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் அழகான
வாழ்கையின் முன்னுதாரணத்திற்கு இதை விட வேறு ஏதுதான் உதாரணமாக இருக்க முடியும்...!? அதாவது தனது மரணத்திற்கு முன்பு தமது
மனைவிமார்களிடம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்,
உங்களில் எவரது கரம் நீண்டதாக இருக்குமோ அவரே மறுமையில் என்னை முதலில்
சந்திப்பார்” என்று கூறினார்கள். மனைவிமார்கள் அன்னாரின் (ஸல்) மீது வைத்திருந்த
அன்பின் தரம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களின் இக்கூற்றை கேட்டதுமே (மனைவிகளாகிய) அவர்கள் உடனே பரஸ்பரம் தனது
கரங்களை அளவெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் தமது மரணித்திற்கு
பிறகுதான் இந்த சம்பவமே நடக்கும் என்பதை அப்போது மறந்தேவிட்டார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்களின் வாழ்க்கையிலும் இவ்வாறே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஹஸ்ரத்
வாக்களிக்கப்படத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு எப்போதுமே பெண்களோடு மென்மையான முறையில்
நடந்து கொள்வதும்,
அவர்களோடு கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பதுமே விருப்பமானதாக இருக்கும். உள்ளளவில்
கடினத்தை கொண்ட ஹஸ்ரத் மௌலவி அப்துல் கரீம் சாஹிப் சியால்கோட்டி அவர்கள் தனது
மனைவியோடு கடினமாக நடந்து கொண்ட விஷயம் தெரியவந்தது. அந்த நேரம் அல்லாஹ் தஆலா
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு, “இவ்வழிமுறையானது சரியில்லை. முஸ்லிம்களின்
leader அப்துல் கரீம் அவர்களை இதிலிருந்து தடுக்க வேண்டும்.
குதிர் ரீஃப்கா அர் ரிஃப்கா ஃப இன்ன ரிஃப்கா ரயீஸுல் கைராத் ” என்று இல்ஹாம்
அறிவித்தான். அதாவது “மென்மையை கடைபிடியுங்கள், மென்மையை கடைபிடியுங்கள், ஏனென்றால், மென்மையானது அனைத்து நன்மைகளையும் விட உயர்ந்ததாக இருக்கிறது”.
இவ்வில்ஹாமிற்கு விளக்கமாக
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்
கூறினார்கள், “இந்த
இல்ஹாமில், ஜமாத்திலுள்ள அனைவரும் தமது
மனைவியுடன் மென்மையான முறையில் நடந்து கொள்ளுங்கள்” என்ற போதனை உள்ளடங்கிருக்கிறது.
அவள் அவர்களுக்கு ஓர் அடிமையாக இல்லை. நிக்காஹ்
என்பது முன்னேற்றத்திற்காக பரஸ்பரம் செய்து கொண்ட ஓர் உறுதிமொழியாக இருக்கிறது.
ஆகவே அந்த உறுதிமொழியை பொய்யாக்குபவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
ஒரு நபித்தோழரை பற்றி அவர் தனது
மனைவியோடு நல்ல முறையில் நடந்து கொள்வதில்லை எனும் செய்தி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களுக்கு தெரியவந்தது. இதை கேட்ட ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்கள் மிகுந்த வேதனையுடன் அந்த நபித்தோழர் பெயரில் ஒரு கடிதம்
எழுதினார்கள். அதில் ஒரு பகுதி இவ்வாறு வருகிறது, அதில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
இவ்வாறு கூறுகின்றார்கள், “நீங்கள் இருவரும்
சேர்ந்திருக்கும் உமது வீட்டில் அவளை உங்களது நேசமான ஒரு தோழராக நினையுங்கள்.
மென்மையுடன் குடும்பம் நடத்துங்கள். எனது அன்பானவரே,
மனைவியானவள் மனிதனுக்கு மிஸ்கீனாகவும், (தேவையுடையவள்)
பலகீனமானவளாகவும் இருக்கிறாள். அவளை இறைவன் மனிதனின் பொறுப்பில் வழங்கிவிட்டான்.
பிறகு அவளோடு மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை பார்க்கிறான். மென்மையை
கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது மனைவியை இறைவன் தனது பொறுப்பில் அனுப்பிய
அன்பான ஒரு விருந்தினராக இருக்கிறாள் என்று நினைக்க வேண்டும். இறைவன் அந்த விருந்தினரோடு
எவ்வாறு நான் நடந்து கொள்கிறேன் என்பதை பார்த்து கொண்டிருக்கிறான் என்று நினைக்க
வேண்டும்.
மேலும் கூறினார்கள், உண்மையில் எனது கொள்கையும் இதுவே
ஆகும் ஆதாவது மனிதன் சோதனைக்குட்படும் முதல் கட்டம் மனைவியே ஆவாள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
தனது மனைவியுடன் எந்த அளவுக்கு அன்பாகவும் நேசமாகவும் நடந்து கொண்டார்கள்
என்பதற்கு பல்வேறு சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் இரண்டு விஷயங்களை
நான் உங்கள் முன் வைக்கிறேன்.
டாக்டர் மீர் முஹம்மது
இஸ்மாயீல் சாஹிப் கூறுகின்றார்கள். நான் எனக்கு நினைவு இருந்தவரை அன்னார் ஹஸ்ரத்
உம்முல் மூமினீன் அவர்களுடன் கோபம் கொண்டவாறு கண்டதுமில்லை கேட்டதுமில்லை. மாறாக
எவ்வாறு ஒரு முன்மாதிரியான தம்பதிகள் இருக்க வேண்டுமோ அவ்வாறே நான் கண்டேன்.
(எனது) வாழ்க்கையில் ஒரு சம்பவம் இவ்வாறு நிகழந்தது அதாவது ஹஸ்ரத் உம்முல்
மூமினீன் திருமணத்திற்கு பிறகு காதியான் வந்த போது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்களுக்கு மண்டவெல்லம் கலந்த சோறு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்பது
அவர்களுக்கு தெரிய வந்தது. பிறகு அவர்கள் சிறு அளவில் சோறை எடுத்து அதில்
மண்டவெள்ளத்தை இட்டதும் அது சிறு சிறு துகள்களாக மாறிய மண்டவெல்லம் அதிகம்
நிறைந்ததாக தென்பட்டது. அண்ணார் மிகவும் வருத்தம் பட்டார்கள். ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) வந்து அந்த சோற்றினை கண்டு, “இது மிக அருமையாக செய்யப்பட்டுள்ளதே, எனது விருப்பத்திற்கேற்ப செய்யப்பட்டுள்ளதே. அதிகமாக மண்டவெல்லம்
இருக்கும் சோறே எனக்கு பிடிக்கும் என்று கூறினார்கள். பிறகு அண்ணார் (அலை) ஆழ்ந்த
விருப்பத்துடன் தயார் செய்யபட்ட அந்த உணவை உண்டார்கள். ஹஸ்ரத் உம்முல் மூமினீன்
கூறினார்கள், “எனது உள்ளம் எந்த அளவுக்கு மகிழ்ந்தது என்றால், முதலில் நான் உணவு செய்வதில் தவறு ஏற்பட்டுவிட்டதே என்று நான் கவலை
பட்டேன் ஆனால் அண்ணார் (அலை) அவர்கள் கூறிய மன ஆறுதலினால் எனது உள்ளம் மகிழ்ச்சி
அடைந்தது.
உணவில் சில நேரம் குறை
இருந்துவிடுகிறது. இந்த நேரத்தில் ஆத்திரம் அடையும் ஆண்கள் இந்த உதாரணத்தை
நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின்
வீட்டில் பணிபுரிந்து வந்த ஒரு வேலைக்காரியின் ஒரு கூற்று வரலாற்றில் இவ்வாறு
பதியப்பட்டுள்ளது. அவள் கூறுகிறாள், “மிர்ஜா, பீவி தி கல் படி மாந்தா ஹே” (அதாவது மிர்ஜா மனைவியின் பேச்சை ரொம்பத்தான் கேட்பார்
போலும்). மனைவிக்கு மகிழ்வூட்டக்கூடிய சம்பவங்கள் அண்ணாரின் வாழ்க்கையில் மிக
அதிகமாக காணப்படுகின்றன. இதில் ஒரு சம்பவம் இவ்வாறு வருகிறது. ஆரம்ப
காலத்தில் ஹஸ்ரத் உம்முல் மூமினீன் (ரலி) ஹஸ்ரத் மிர்ஸா சுல்தான் அஹ்மத் சாஹிப்
அவர்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றார்கள். அங்கு எவ்வாறு
பேச்சு அடிபட்டது என்றால், இதன் காரணமாக, “வீட்டில் கிணர் ஒன்றை ஏற்படுத்தி
கொள்ள வேண்டியதுதானே” என்ற பேச்சை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அண்ணாரின் வாடிய
முகத்தை கண்டு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) இரவு நேரத்தின் போதே தனது தோழர்களிடம் கிணர்
ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று
கூறினார்கள். அதே இரவு நேரத்திலேயே
எட்டு பத்து அடிக்கு கிணறும் தோண்டப்பட்டுவிட்டது. இவ்வாறு ஒரு சில நாட்களில்
அனைத்து வேலையும் முடிவுக்கு வந்தது. ஆக எவ்வாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அன்னாருக்கு மன நிறைவு
மற்றும் அவர்களது ஆசையை பூர்த்தி செய்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பரஸ்பரம் கொண்டிருந்த அன்பு
எவ்வாறு இருந்தது என்பதை பார்க்கும்போது அனைவரும் கேட்க கூடிய ஒரு சம்பவம் இவ்வாறு
வருகிறது. மிகவும் அன்பு கூர்ந்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களை நோக்கி ஹஸ்ரத் உம்முல் மூமினீன் (ரலி) இவ்வாறு
கூறுகின்றார்கள், உங்களின் வருத்தத்தை எப்போதும் இறைவன் எனக்கு காட்டக்கூடாது, என்னை தங்களுக்கு முன்னதாகவே மரணத்தை வழங்க வேண்டும் என்று நான்
எப்போதும் துஆ செய்வேன். இதை கேட்டு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள், “நீ எனக்கு பிறகு வாழ வேண்டும், உன்னை நான்
மகிழ்வுடன் விட்டு செல்ல வேண்டும் என்று நான் எப்போதும் துஆ செய்வேன்” என்று
கூறினார்கள்.
வீட்டினை சுவர்க்கமாக மாற்றுவதற்கு
பல்வேறு முறைகள் இருக்கின்றன. நமது பாக்கியம் என்னவென்றால், இந்த தலைப்பில் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல்
மஸீஹ் அவர்கள் நேற்றைய குத்பாவில் மிக விளக்கமாக எடுத்து கூறினார்கள். இதனைப்
பற்றி சுட்டி காட்டினார்கள். இதனை பற்றி கடந்த காலத்திலும் பல முறை கூறியும்
உள்ளார்கள். நினைவூட்டலாக நான் ஒரு சில விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
பிரச்சனைகள் விளைவிதற்கு ஒரு காரணம்
என்னவென்றால், கணவன் மனைவி
பரஸ்பரம் குறையை தேடி அலைவார்கள். அந்த குறையை கண்டு பிடித்து அதனை மெய்படுத்தி
பேசுவார்கள். அதனை பரப்புவார்கள். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
ஹுஸூர் அவர்கள் எவ்வளவு அழகான போதனையை அனைத்து ஜமாஅத் சகோதர சகோதரிகளுக்காக
கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள். அண்ணார் கூறுகின்றார்கள்,
ஒருவர் மற்றொருவரின் குறையை தேடி அலைவதற்கு பதிலாக நல்ல விஷயங்களை தேடி
அலையுங்கள்.”
பிறகு இவ்வாறே பரஸ்பரம்
கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதில் நீ,,நான் என்ற பேச்சு அடிபட்டுவிடுகின்றது,
கோபம் அடைந்தும் விடுகின்றார்கள். இவ்வாறான நேரத்தின் போது அமைதி காத்தாலே மிக
சிறந்த நடைமுறையாகும். மேலும் “வல் காசிமீனல் கைஸ்” (கோபத்தின் போது
மென்மையை கடைபிடிக்க வேண்டும்) என்ற போதனையின் படி நடக்க வேண்டும்.
(வீட்டில் பிரச்சனைகள் உருவாகுவதற்கு)
மற்றுமொரு காரணம் என்னவென்றால், ஒருவர் மற்றொருவரை பற்றி புறம் கூறுதல்,
மற்றொருவரின் குறைகளை தேடி அலைதல் ஆகும். தப்பெண்ணத்தோடு ஒருவர் மற்றொருவரின்
கடிதத்தை படித்தல், தொலைபேசியை கண்காணித்தல், சட்டை பய்யினை மறைமுகமாக தேடுதல் போன்ற இவ்வனைத்து விஷயங்களும்
தவறானதாகும். இது தப்பெண்ணத்தின் பக்கம் எடுத்துச் செல்லும். நாசத்தின் பக்கம்
எடுத்து செல்லும். ஹஸ்ரத் முதலாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களின்
முன்னுதாரணத்தை நான் உங்கள் முன் வைக்கிறேன். இது நினைவில் வைக்க வேண்டிய விஷயம்
ஆகும். அண்ணார் கூறுகின்றார்கள், நான் எப்போது
திருமணம் முடித்தேனோ அன்றிலிருந்து இன்று வரை எனது மனைவியின் பெட்டியை திறந்து
பார்த்ததே இல்லை.”
பிரச்சனை உருவாகுவதற்கு மற்றுமொரு
காரணம் என்னவென்றால்,
நேர்மையான பேச்சு இல்லாமை ஆகும். இதனின் உதாரணத்தை அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.
அதனை திருமணத்தின் போதும் ஓதப்படுகிறது. அதாவது நேர்மையான,
தெளிவான பேச்சை பேசுங்கள். எதையும் மறைக்காதீர்கள். ஆனால் நாம் பார்க்கிறோம், வரத்தின் போது பெற்றோர்கள் தனது மகன் அல்லது மகளின் நல்ல விஷயங்களை
மட்டும் எடுத்து கூறுவார்களே அல்லாமல் அவர்களிடம் உள்ள குறைவுகளை முற்றிலுமாக
மறைத்துவிடுகின்றார்கள். இதுவும் “கவ்லே ஸதீத்” அதாவது நேர்மையான
விஷயதுக்கு மாற்றமானதாக இருக்கிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒரு வேலை நாம் இந்த குறையை எடுத்து சொல்வோம் என்றால் இந்த வரம் நமக்கு
அமையாமல் இருந்துவிடுமோ என்று நினைக்கிறார்கள். ஆனால் திருமணம் முடிந்து அடுத்த
நாளிலே பிரிந்து சென்றுவிடும் இவ்வாறான வரத்தை முடித்து என்னதான் பயன்.? உண்மை வெளிப்படும்போது அந்த வரம் அடுத்து நிலைக்காமல் இருந்துவிடுகிறது.
ஆகவே நேர்மையான, உண்மையான கூற்று மிக அவசியம் ஆகும்.
பிறகு திருமணம் முடிந்த பிறகு பிரச்சனைகள்
தோன்றுவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், பெற்றோர்கள் தனது
குழந்தைகளுக்கு திருமணம் முடித்த வைத்த பிறகும் கூட அவர்களின் தனிப்பட்ட
விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றார்கள். பிறகு அவர்களை முன்பு இருந்த இரண்டு
மூன்று வயதான குழந்தையாகவே நினைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான விஷயமே இல்லை, வளர்ந்த பிறகு அவர்களின் பொறுப்பைப் பற்றி அவர்கள் உணர வேண்டும்.
பெற்றோர்கள் அவர்களுக்கு பரஸ்பரம் கலந்து பேசி பிரச்சனையை தீர்ப்பதற்கான சுதந்திரத்தை
வழங்க வேண்டும்.
திருமணம் முடிந்த பிறகு பிரச்சனை
ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், திருமணம் முடிந்த பிறகு இரத்த பந்தங்களுடன் சரியான முறையில் நடந்து
கொள்ளாமல் இருத்தல் ஆகும். இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது
கணவன் மனைவி ஆகிய இருவரின் இரத்த பந்தங்களுடன் இருவரும் நல்ல முறையில் நடந்து
கொள்ள வேண்டும். இதனைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான், இதனை திருமணத்தின் போதும் ஓதப்படுகிறது. அதாவது:
وَاتَّقُوا اللہَ الَّذِیْ تَسَاءَلُوْنَ بِہٖ
وَالْاَرْحَامَ
நீங்கள்
இறையச்சத்தை மேற்கொள்ளுங்கள். இரத்த பந்தத்தை ஆதரியுங்கள். (4:2) ஆக இரு தரப்பினர்களும்
ஒருவர் மற்றவர்களின் உறவினர்களுடன் தாய் தந்தையருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதம் மூலமே இறையச்சத்தை பேண
முடியும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றாகள்:
“எவரொருவர் தமது மனைவி மற்றும்
அவர்களது இரத்த பந்தங்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதில்லையோ அவர் எனது
ஜமாஅத்தை சார்ந்தவர் இல்லை.”
இரத்த பந்தங்களை
பற்றி ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் நம் முன் இவ்வாறு வருகிறது, அதாவது ஒரு தரப்பிலிருந்து (உறவினர்கள்)
தவறான முறையில் நடந்து கொண்டார்கள் என்றால் எதிர் தரப்பு உறவினர்கள் நாமும்
அவ்வாறே செய்வோம் என்ற முடிவுக்கு வருகின்றனர். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை நான்
உங்கள் முன் வைக்கிறேன். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சவுத்ரி நஸர் முஹம்மது (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள், நான் ஹுஸூர் (அலை) அவர்கள் முன்
அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் அண்ணாரை சந்திப்பதற்கு வந்தார். அவர் ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களிடம் இவ்வாறு கூறினார்,
அவர்களின் மாமனார் வீட்டிலிருந்து அவர்களது மனைவியை மிக கஷ்டப்பட்டு
தந்துள்ளார்கள் ஆகவே அவர்களின் தாய் தந்தை வீட்டிற்கு நாம் அனுப்ப மாட்டோம்.
சவுத்ரி நஸர் முஹம்மது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், இதனை
கேட்ட ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் முகம் சிவந்துவிட்டன. மிக
கோபத்துடன் அந்த நண்பருக்கு ஹுஸூர், “இங்கிருந்து உடனே
அப்பால் சென்றுவிடு. உம்மால் எங்கள் மீதும் தண்டனை இறங்கிவிடக்கூடாது என்று
கூறினார்கள். அந்த மனிதர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
பிறகு சிறுத்து நேரம் கழித்து வந்து தவ்பா செய்து மன்னிப்பு கேட்டார். அதன்பிறகே
ஹுஸூர் (அலை) அங்கு அவருக்கு அமர அனுமதி தந்தார்கள்.
கணவன் மனைவி உறவில் ஏற்படும்
பிரச்சனைக்கு மற்றுமொரு காரணம் என்னவென்றால், தலாக் கொடுப்பதில் அவசரப்படுகின்றார்கள். தலாக் இஸ்லாமிய சட்டத்தின் படி
அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இதனை “அப்கஸுல் ஹலால்” அதாவது ஹலாலிலேயே மிகவும்
தீய ஹலால் ஆகும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு தலாக்
கொடுத்து நன்றாக அமைந்து இருந்த இல்லத்தை சீரழித்து விடுவது கட்டப்பட்டிருந்த
சுவரை தள்ளி கீழே விழ செய்வது எளிய விஷயம்தான் ஆனால் இடிந்து விழுந்த சுவரை
மீண்டும் எழுப்புவது கடினமான ஒரு செயலாக ஆகிவிடுகிறது. ஆக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களின் இந்த கூற்றை நன்றாக நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் கூறுகின்றார்கள்:
“தலாக்கை விட்டு விலகுங்கள்.
ஏனென்றால் இறைவன் பார்வையில் தலாக் கொடுப்பதில் விரைபவன் மிகவும் கேடு கெட்டவனாக
இருக்கிறான். எவர்களை இறைவன் இணைத்துள்ளானோ அவர்களை நீங்கள் சுத்தமற்ற பாத்திரத்தை
போன்று உடைத்து விட வேண்டாம்.”
நான் உங்களுக்கு இதனை பற்றிய ஒரு
சம்பவத்தை கூறுகிறேன்,
இதன் மூலம் உங்களது உள்ளத்தில் இந்த விஷயம் ஆழ்ந்த உள்ளத்தில் பதிந்து விடலாம்
என்று நினைக்கிறேன். இது மிகவும் சுவராஸ்யமான சம்பவம் ஆகும். ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் ஒரு தோழர் ஆப்ரிக்காவில் பணியாற்றி கொண்டு
வந்திருந்தார். மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு
மனைவிகள் இருந்தனர். இச்சம்பவம் 1899 ஆம் ஆண்டு வருடம் நிகழ்ந்த சம்பவம் ஆகும்.
அவர்கள் இருவரும் காதியானில் வசித்து வந்தனர். அவர்கள் ஹஸ்ரத் முதல் கலீஃபா மௌலானா
நூருத்தீன் (ரலி) அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்கள், “எனது
இந்த இரண்டு மனைவியையும் என்னிடம் அனுப்புவதற்கான ஏற்பாட்டினை செய்யுங்கள்.
இருவரில் ஒருவர் வர மறுத்தால் நான் அவளுக்கு தலாக் கொடுக்கிறேன். என்று அதில்
எழுதியிருந்தார்கள். இதனை ஹஸ்ரத் மௌலானா நூருத்தீன் (ரலி) அவர்கள் ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களிடம் கூறினார்கள். இதற்கு அன்னார் (அலை) என்ன
பதில் கொடுத்தார்கள் என்பதை கேழுங்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத்
(அலை), “ அந்த நபர் தலாக் வேண்டுமானால் கொடுக்கட்டும் ஆனால்
இவ்வாறான நபருடன் எம்மோடு எந்த தொடர்பும் எப்போதும் இருக்க முடியாது என்று
அவருக்கு என் தரப்பிலிருந்து இப்போதே எழுதுங்கள் என்று கூறினார்கள். ஏனென்றால் ஒரு
சின்ன விஷயத்திற்காக ஒரு அழகான உறவை தூண்டிக்கிறார் என்றால் அவர் நம்மோடு எவ்வாறு
விசுவாசத்துடன் நடந்து கொள்வார்?
ஆக தலாக் கொடுப்பதில் விரையும்
கணவர்மார்களுக்கு இது அச்சம் கொள்ளும் தருணம் ஆகும். பாருங்கள் இந்த அவசரத்தில்
எடுக்கும் முடிவினால் விஷயம் எங்கிருந்து எங்கயோ சென்றுவிடுகிறது. நான்
கணக்கெடுத்த வரைக்கும் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ்
அய்யாதகுல்லாஹுத்தஆலா.....அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கருத்துக்களை
எடுத்துக் கூறியுள்ளார்கள்,
அதில் ஒன்று இந்த குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வும் ஆகும்.
இதைக் குறித்து அன்னார் தெளிவும் படுத்தி கூறியும் இருக்கிறார்கள். அன்னார் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறினார்கள் அதில் ஒரு வரியை நான் உங்களுக்கு கூறுகிறேன், இரண்டு நான்கு முறையில் ஒவ்வொரு முறையும் நாம் இந்த அறிவுரையை
அன்னாரிடமிருந்து கேட்டு வருகிறோம். ஒரு முறை அன்னார் கூறினார்கள், ஒவ்வொருவரும் தத்தமது செயல்களுக்கு பதில் கூறவேண்டியது வரும். இறைவன்
முன் செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தத்தமது செயல்களுக்கான பதிலை கூற
வேண்டும். ஆகவே மிகவும் சிந்தித்த வண்ணம் இவ்வாறான காரியத்தில் செயல்பட வேண்டியது
அவசியம் ஆகும். பிறகு அன்னார் கூறினார்கள், அல்லாஹ் எனது
இந்த வார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவானாக சீர்குலைந்து போகும் வீடுகள்
சுவர்க்கத்தில் தொட்டிலாக மாற வேண்டும் என்பதை நான் ஜமாத்திற்கு வேதனையுடன் கூறிக்
கொள்கிறேன், மேலும் இது எனது துஆவும் ஆகும்.
கண்ணியத்திற்குரியவர்களே! இறுதியில்
நான் இதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இன்று இருளில் அகப்பட்டு திணறிக்
கொண்டிருக்கும் மனிதத்துவம் அமைதியை தேடி அலைகின்றது. இந்த அமைதி வீட்டிலிருந்து
துவங்கி முழு உலகத்தையும் தன் வசம் கொள்கிறது. எப்போது வரை குடும்ப வாழ்கையில்
அமைதி மற்றும் சுவர்க்க நிலை (அதாவது நிம்மதியான நிலை) உருவாகுவதில்லையோ அப்போது
வரை உலகத்தில் அமைதி நிலை கொள்ளும் எனும் கனவு எப்போதும் நிறைவேறாது.
ஆகவே அஹ்மதி சகோதரர்கள் இஸ்லாமிய
போதனைகளின் அடிப்படையில் தத்தமது வீட்டினை சுவர்க்கதிற்கு முன்னுதாரணமாக ஆக்க
வேண்டும். இந்த சுவர்க்கம்தான் இறுதியில் முழு உலகத்தையும் அமைதியின் தொட்டிலாக
மாற்றிவிடும். ஆகவே முழு உலகத்தையும் ரஹ்மதுல் லில் ஆலமீன் (ஸல்) அவர்களின்
கொடியின் கீழ் கொண்டு வர பாடுபடும் நாம் அஹ்மதிகள், இஸ்லாத்தின் போதனைகளின் படி நடந்தவாறு இந்த சுவர்க்கத்தை நாம்
நமது வீட்டில் உருவாக்கிவிட்டோம் என்பதை நாம் நமது சொல்லினால் மட்டுமல்லாது
செயலினால் இந்த உலகத்திற்கு காட்டுவது நமது கடமையாக இருக்கின்றது. இதிலிருந்து
விலகி இருப்பவர்களே வாருங்கள், நீங்களும் இந்த வழியில்
சென்றவராறு உங்களின் வீட்டினை அமைதி மற்றும் நிம்மதியின் ஒளியை கொண்டு
நிரப்புங்கள். நிம்மதி மற்றும் அமைதி நிலவுவதற்கு இந்த வழிதான் ஒரே வழியாக
இருக்கிறது. இதுவே நரக நிலையில் அகப்பட்டிருக்கும் சுற்று
சூழலை சுவர்க்கமாக மாற்றக்கூடியதாகவும் இருக்கிறது.
ஆகவே, ஹஸ்ரத் முகம்மதி மஸீஹ் (அலை) அவர்கள் மூலமாக உண்மையான மற்றும்
புதியதோர் வாழ்க்கையை பெற்ற முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் உண்மையான
அடியார்களே!! எழுங்கள், இஸ்லாத்தின்
போதனை மட்டுமே இன்று இருளிலிருந்து நீக்கும் ஒரு வழியாக இருக்கிறது என்பதை உங்கள்
செயலின் மூலம் நிரூபித்து விடுங்கள். இஸ்லாத்தின் போதனையை பேணுவதை தவிர்த்து வேறு
எதன் மூலமும் இவ்வுலகம் மற்றும் மறுமையின் இரட்சிப்பை பெறுவது சாத்தியமற்றது
என்பதை உங்கள் முன்னுதாரணம் மூலம் இவ்வுலகத்திற்கு எடுத்து சொல்லுங்கள்.
அல்லாஹ் தஆலா நமது செயலின் மூலம் முழு உலகத்திற்கும்
நல்லூதாரணம் மூலம் இரட்சிப்பின் தூதை எடுத்து சொல்வதற்கு தவ்ஃபீக்கை
தந்தருள்வானாக. ஆமீன்.
(மௌலானா அதாஉல் முஜீப் சாஹிப் ராஷீத், இமாம் மஸ்ஜிது ஃபஸல் இலண்டன் | யு.கே ஆண்டு மாநாடு 2014 ஆம் ஆண்டு அன்று ஆற்றிய உருது மொழி சொற்பொழிவின் தமிழ் மொழியாக்கம்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None