குழப்பவாதிகளான முல்லாக்களால் இஸ்லாமிய உலகிற்கேற்பட்ட வீழ்ச்சிகள்

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் ஹிஜ்ரி 133 ஆம் ஆண்டு அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த வருடத்தில்தான் உமவிய்யா ஆட்சியின் அழிவிற்குப் பிறகு மாபெரும் இரண்டு இஸ்லாமிய ஆட்சிகள் தோன்றின. இவ்விரு அரசுகளும் பல நூற்றாண்டுகள் வரை இஸ்லாத்திற்கு உலகியயல் பணிகளையும் ஆத்மீகப் பணிகளையும் செய்து கொண்டேயிருந்தன. அமைதியான இந்த ஆட்சியின் கீழ் தோன்றிய ஆலிம்களாகிய பேரறிஞர்கள் திருக்குர்ஆனின் ஞானங்களைப் பெற்று இறுதி காலம் வரை நிலைத்து நிற்கும் அளவிற்கு இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் அறிய தொண்டுகளை செய்துள்ளனர்.
ஹிஜ்ரி 133 இல் உமவிய்யா ஆட்சியின் சகாப்தம் முடிந்த போது, கிழக்கில் அப்பாஸிய்யா ஆட்சியும் மேற்குல் உந்துலுஸ் என்றழைக்கப்பட்ட ஸ்பெயினில் ஓர் இஸ்லாமிய ஆட்சியும் மலர்ந்தன.
அப்பாஸிய்யா ஆட்சி 524 வருடங்கள் வரை நிலைத்திருந்தது. ஐந்து நூற்றாண்டுகள் வரை ஒரு சமுதாயத்திற்கு அதுவும் ஒரே குடும்பத்திற்கு தங்களுடைய ஆட்சியினை நிலைநாட்ட வாய்ப்பு கிடைத்ததென்பது மிகவும் வியக்கத்தக்கதாகும். இந்த ஆட்சியின் காலத்தில் இஸ்லாம் உலக மக்களுக்குப் பொதுவாகவும், முஸ்லிம்களுக்குச் சிறப்பாகவும் பல்வேறு அருள்களை வழங்கியது.

இக்காலத்தில் முஸ்லிம்கள் ஆத்மீகத்திலும் முன்னேற்றமடைந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் ஆத்மீகத்தை மட்டும் கருத்தில்ல கொள்ளும்போது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலமும் அவர்களின் கலீஃபாக்களின் காலமும் தான் மிக்க ஒளி மயமானதாகும். இதனால்தான் நான் எனது உரையின் தொடக்கத்திலேயே ஹிஜ்ரி 133 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் அரசியல் முன்னேற்றத்தின் காலம் என்று குறிப்பாக எடுத்துரைத்துள்ளேன்.
ஸ்பெயினில் அப்துர் ரஹ்மானிப்னு முஆவிய மூலம் இஸ்லாமிய ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு 33 அல்லது 34 ஆண்டுகளுக்கு முன் இங்கு தாரிக் பின் ஸியாத் என்பவர் இஸ்லாமிய ஆட்சிற்கான அடிப்படையினை அமைத்திருந்தார். ஆனால் அப்துல் ரஹ்மான் இப்னு முஆவியாவின் வருகைக்கு முன் அங்கு உறுதியான இஸ்லாமிய ஆட்சி தோற்றுவிக்கப்படவில்லை. இவர் அங்கு ஹிஜ்ரி 133 ஆம் ஆண்டு முதல் 172 ஆம் ஆண்டு வரை மிகச் சிறந்து முறையில் ஆட்சி புரிந்தார்கள். மிகவும் வலுவான ஓர் இஸ்லாமிய ஆட்சியினை நிலை நாட்டினார்.
இக்காலத்தில் இஸ்லாமிய ஆட்சிகளை அழிப்பதற்கும் இஸ்லாத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் அடிப்படைகள் ஏற்பட்டன. இவற்றிற்கான காரணம் அங்குள்ள ஆலிம்கள்தான் என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. 

மகத்துவம் வாய்ந்த இஸ்லாமிய ஆட்சிகளின் அழிவிற்குக் காரணம், முல்லாக்கள் தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்ட குழப்பங்களும் வேற்றுமைகளும்தான் என்று வரலாற்றாசிரியர்கள் வரைகின்றனர்.
அக்காலத்தில் ஆலிம்கள் இரு பிரிவினர்களாக பிரிந்தனர். ஒரு பிரிவினர் உண்மையாகவே தங்களுடைய உடல், உயிர்,பொருள், அறிவு முதலியவற்றின் மூலம் இஸ்லாத்திற்குப் பணி செய்து கொண்டிருந்தனர். மற்றொரு பிரிவினரோ மார்க்கத்தின் பெயரால் இஸ்லாத்தில் குழப்பங்களையே உருவாக்கிக் கொண்டிருந்தனர். இஸ்லாத்திற்கு ஆபத்து எனக்கூறி இஸ்லாமிய ஆட்சிக்கே இவர்கள் தீங்கிழைப்பவர்களாக இருந்தனர். இவர்களின் குழப்பங்கள் ஹிஜ்ரி 172 இல் ஸ்பெயினில் அப்துர் ரஹ்மானுடைய மறைவிற்குப் பிறகே ஆரம்பமாயின.
இது குறித்து லேன் போல் என்ற வரலாற்றாசிரியர் இவ்வாறு வரைகின்றார், இந்தக் கிளர்ச்சிகள் கார்டோபாவிலுள்ள இஸ்லாமிய ஆலிம்களால் தொடர்ந்து தோற்றுவிக்கப்பட்டன. இதற்குப்பிறகு அக்கிளர்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருந்தன. முடிவு பெறாத அக்கிளர்ச்சிகள் இறுதி வரை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி ஏழரை நூற்றாண்டிற்கும் சற்று அதிகமான காலம் வரை நீடித்து நின்றது. கி.பி 1485 இல் ஆட்சி செய்து கொண்டிருந்த அபூ அப்தில்லாஹ் என்பவர் இறுதியாகத் தமது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டுக், தமது ஆட்சியின் இறுதி தலைவர் என்ற முறையில் கையெழுத்திட்டார். 1492 அல்லது 1493 இல் அவ்வாட்சி அங்கிருந்து முழுமையாகத் துடைத்து எடுக்கப்பட்டு விட்டது.
இந்த வீழ்ச்சிக்குக் காரணம் முல்லாக்களேயாவார்கள். இஸ்லாமிய ஆட்சியின் காலத்தில் இஸ்லாத்திற்காகவும், முஸ்லிம்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராக இந்த முல்லாக்கள் மிகவும் பயங்கரமான முறையில் செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அந்தத் தியாகிகளைக் குறித்து இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஆட்சிக்கும் பேராபத்து விளைவிப்பவர்கள் என்று பறைசாட்டிக் கொண்டிருந்தனர். எந்த அன்னிய சக்திகளாலும் தோற்கடிக்க முடியாது ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியை இந்த முல்லாக்கள் தங்களுடைய ஃபத்வாக்களினால் பலவீனப்படுத்தித் தோற்கடித்துக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் அரசியல் வாழ்வுக்கு அப்போது கிடைத்த தோல்வியை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது! அன்று இந்த முல்லாக்களால் விளைவிக்கப்பட்ட குழப்பங்களும் கிளர்ச்சிகளும் இல்லாமலிருந்தால் ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்திருக்கும். இந்த ஆலிம்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் புதுப் புது குழப்பங்களை உருவாக்கி இஸ்லாமிய ஆட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
அப்போது ஒரு சந்தர்பத்தில் இஸ்லாமிய ராணுவம் பிரான்ஸில் நுழைவதற்கு
ஆயத்தமாக இருந்தது. அன்று ஐரோப்பா நாடுகளில் பிரான்ஸ் சக்தி வாய்ந்த ஓர் அரசாங்கதாக விளங்கியது. இஸ்லாமிய ராணுவம் பிரான்ஸில் நுழையவிருக்கும் செய்தி அதற்குக் கிடைத்ததும், அதற்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அடிக்கடு இஸ்லாமிய அரசுக்கு நன்கொடைகளை அனுப்பி கொண்டிருந்தது. இஸ்லாமிய ராணுவம் அங்கு நுழையாமல் இருப்பதற்காக எல்லா விதமான உடன்படிக்கைகளையும் இஸ்லாமிய ஆட்சியுடன் செய்து கொள்ள அது ஆயத்தமாக இருந்தது. அன்று மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்த பிரான்ஸ் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்திருந்தால் ஐரோப்பாவிலுள்ள மற்றெல்லா நாடுகளையும் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தினுள்ள முல்லாக்கள் நாட்டிற்குள் பல்வேறு குழப்பங்களையும், விஷமங்களையும் விளைவித்துக் கொண்டேயிருந்ததால், அரசாங்கத்திற்குத் தனது முழுக் கவனத்தையும் இந்தக் கிளர்ச்சிகளின் பக்கமே காட்ட வேண்டியதிருந்தது.
அங்கிருந்த முல்லாக்கள், இந்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சியல்ல; இது ஷரிஅத்தின் அடிப்படையில் இயங்கவில்லை என்று பொது மக்களிடத்தில் கூறி ஆட்சிக்கு எதிராகச் செயலாற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாமிய ஆட்சியை விஷமிகள் குழி தோண்டி புதைத்து கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய ஆட்சிக்கு ஒரு பக்கம் எல்லா துறைகளிலும் கிடைத்த முன்னேற்றத்தைக் கண்டு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுகின்ற அதே வேளையில் மறுபக்கம் முல்லாக்களின் விஷமங்களைக் கண்டு மன வேதனையினால் புண்படுகின்றது.
மேல் நாட்டிலுள்ள இஸ்லாமிய ஆட்சிக்கு மாலிக் மத்ஹபைச் சார்ந்த ஆலிம்களால் மாபெரும் தீங்கு ஏற்பட்டது. அவ்வாட்சியின் அழிவிற்கு இந்த மத்ஹபைச் சார்ந்த முல்லாக்களே காரணம். கிழக்கு நாடுகளிலுள்ள இஸ்லாமிய ஆட்சியின் அழிவிற்குக் காரணம் ஷியா ஆலிம்களுக்கும், ஸுன்னி ஆலிம்களுக்கும் இடையிலுள்ள குழப்பங்களேயாகும். இந்த இரு வகுப்பாரைச் சார்ந்த ஆலிம்களே அழிவிற்குக் காரணமாக விளங்கினார்கள்.
ஹிஜிரி 443 இல் காயிம் பி அம்ரில்லாஹ் என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் என்பவர் கலீஃபாவாக இருந்தார். இவருடைய ஆட்சியின் போது ஷியா ஆலிம்கள் அவ்வாட்சிக்கெதிராக மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அப்போது ஆரம்பமான ஷியா, ஸுன்னிகளுக்கிடையிலுள்ள கிளர்ச்சி இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்தப் பயங்கரமான கிளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாமலும் எதுவும் செய்ய முடியாதவராகவும் அவ்வரசர் இருந்தார்.
முஸ்தஹ்ஸின் பில்லாஹ் என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் மன்ஸூர் ஹிஜ்ரி 640 இல் கலீஃபாவானார். 656 இல் இவர் கொல்லப்பட்டார். இவருடைய காலத்திலும் ஷியா ஸுன்னிகளுக்கிடையில் கடினமான குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பத்தில் அவ்வரசர் தமது மகனையே அனுப்பி ஷியாக்களை பழி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஷியாக்கள் பெரும்பான்மையினராக இருந்த பக்தாதின் மேற்குப்பகுதியில் இரத்த ஆறுகள் ஓடின. வீடுகள் சூரையாடப்பட்டு, அவை தீக்கரையாக்கப்பட்டன. இது அப்பாஸியா ஆட்சியில் இறுதியாக நடைபெற்ற ஷியா ஸுன்னிகளின் கிளர்ச்சியாகும். இவர்களின் இந்த கடைசி கிளர்ச்சிதான் இஸ்லாமிய ஆட்சியின் அழிவிற்கு காரணம் என்றுஞ தஹ்பி இப்னு குல்தூன் போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.
இந்த அரசருக்கு பிரதம மந்திரியாக இருந்த இப்னு அல்கமி என்பவர் ஷியா வகுப்பைச் சார்ந்தவராக இருந்தார். எனவே இவர் ஸுன்னிகளுடைய இந்த ஆட்சியை அழித்து விட வேண்டியது தான் என்று சதித்திட்டம் தீட்டினார். இதன் அடிப்படையில் இவர் ஹலாக்குகான் என்ற அரசருக்கு தூது அனுப்பத் தொடங்கினார். மறுப்பக்கம் அரசாங்கத்திலுள்ள ராணுவத்தை பலவீனப்படுத்துவதற்கான திட்டமும் தீட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லைகளை பாதுகாப்பதற்காக ராணுவத்தை அனுப்புகிறேன் என்று அரசருக்கு தகவல் கொடுத்து விட்டு அதனை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி அதன் சக்தியினை பலவீனப்படுத்தினார். இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு இப்னு அல்கமீனுடைய சதித்திட்டத்தின் அடிப்படையில் ஹலாக்குகான் அரசர் பக்தாததை மிகவும் பயங்கராமன முறையில் தாக்கினார். இந்த தாக்குதலினால் ஒரு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் மரணம் அடைந்ததாக இப்னு குல்தூன் வரைந்துள்ளார்.
இவ்வாறு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே விளைவித்துக் கொண்ட குழப்பத்தின் காரணமாக அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். இவ்வாறான வீழ்ச்சியைக் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
"நாம் ஒரு சமுதாயத்திற்கு அளித்து அருட்களை எது வரை அந்தச் சமுதாயம் தானாகவே கைவிடுவதில்லையோ அது வரை அவற்றை நாம் திருப்பி எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் தாமே அவற்றை கைவிட்டுவிட்டால், இறைவனால் விதிக்கப்பட்ட நியதி அவர்களை அழிவிற்குள்ளாக்கி விடுகிறது. இந்த அழிவிலிருந்து எவராலும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விடுகிறது." என்பது அவ்வசனத்தின் கருத்தாகும். அதில் கூறப்பட்ட நியதிதான் பக்தாதிற்கு ஏற்பட்டது.
ஹலாக்குகான் பக்தாதை மிகவும் பயங்கரமான முறையில் தாக்கினான். இதனால் இஸ்லாமிய உலகு மாபெரும் அழிவிற்குள்ளானது. அங்கு அறிவின் பொக்கிஷமாகத் திகழ்ந்த பெரும் பெரும் நூல் நிலையங்கள் தீக்கரையாக்கப்பட்டு, தஜ்லா நதியில் அவற்றின் சாம்பல்களைக் கரைத்து விட்டபோது, அதன் தண்ணீர்ர கறுப்பு நிரமாக மாறிவிட்டதாக, வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கொலை செய்யப்பட்டவர்களுடைய தலையோடுகளை ஒருங்கிணைத்து மிகவும் உயரமான கோபுரங்களைப் போன்று அடுக்கி வைத்திருந்தார்களென்றும், பல மைல் தூரத்திலிருந்து கூட அவை காணப்பட்டன என்றும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் சட்ட ரீதியாக பாங்கு சொல்வதை தடை செய்தது அப்போதேயாகும். இஸ்லாம் தோன்றியதற்குப் பிறகு முதன் முறையாகப் பாங்கு சொல்வதை தடை செய்தது மிகவும் துர்பாக்கிய சாலியான ஹலாக்குகானே ஆவான்.
இத்தகு பயங்கரமான அநீதிகள் நடந்து கொண்டிருந்த போது பிரதம மந்திரியாகிய இப்னு அல்கமீ, ஹலாக்குகானுக்கு அனுப்பிய ஒரு தூது செய்தியில் நீங்கள் எனது அழைப்பினால்தான் இங்கு வந்துள்ளீர்கள். எனவே இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கா நான் உங்களைச் சந்திக்க வாய்ப்புத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அங்குச் சென்று தமது உயிருக்கு பாதுகாப்புத் தேடிவிட்டு, இருவரும் சேர்ந்து செய்து கொண்ட ஒரு சதித்திட்டத்தின் அடிப்படையில் திரும்பி வந்து, முஸ்தஹ்ஸின் பில்லாஹ் அரசரிடம், நீங்களும் உங்களுடைய அரசவையிலுள்ள எல்லா அறிஞர்களும் நீதிபதிகளும், பிரமுகர்களும் மற்றும் முக்கியஸ்தர்களும் என்னுடன் வந்து ஹலாக்குகானிடம் அரசியல் தஞ்சம் புகுந்தால் நம் எல்லாருக்கும் உயிர் பிச்சை அளிக்கப்படும் என்பது மட்டுமல்லமால், இந்த நாட்டில் ஹலாக்குகானுடைய பிரதிநிதியாக நீங்களே நியமிக்கப்படுவீர்கள் என்று கூறினார். இதை நம்பிச் சென்ற முஸ்தஹ்ஸின் பில்லாஹ்வையும் அவருடைய அரசவையிலுள்ள எல்லாரையும் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் ஹலாக்குகான் கொலை செய்துவிட்டான். ஆனால் இப்னு அல்கமீயை அப்போது அவன் கொலை செய்யாவிட்டாலும், பாக்தாதில் தமது தலைமையில் ஷியாக்களின் ஆட்சி நடைபெற வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறாமல் மிகவும் பரிதாபகரமாக பின்னர் மரணம் அடைந்தார். இதுவே இஸ்லாத்தின் பெயரால் முல்லாக்கள் இஸ்லாத்தின் இரண்டு ஆட்சிகளை முழுமையான அழிவிற்குள்ளாக்கிய வரலாறு!
இன்று வரை இவ்விரு ஆட்சிகளும் நிலைத்து நின்றிருந்தால் இன்று ரஷ்யா, சைனா போன்ற நாத்திக ஆட்சிகளே தோன்றியிருக்காது. உண்மையிலேயே மேற்கு நாடுகளிலும் இஸ்லாமிய ஆட்சிகளே மலர்ந்திருக்கும். இஸ்லாமிய அறிஞர்கள் நாட்டில் குழப்பங்களையும், விஷமங்களையும் தோற்றுவிக்காமல் இஸ்லாத்தின் இனிய போதனைகளைப் பரப்பியிருந்தால், இன்று உலகில் காணப்படுகின்ற யுத்தங்களும் குறிப்பாக உலகில் மாபெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இரண்டு உலகப்போர்களும் நிகழ்ந்திருக்காது.
கிறித்தவ மார்க்கத்தின் தவறான கோள்கைகளாலும் அதன் தவறான நடைமுறைகளாலும் தான் கம்யூனிஸம் தோன்றியது. இல்லை என்றால் இந்தக் கம்யூனிஸம் ஒருபோதும் தோன்றியிருக்காது.
உண்மையிலேயே ஆலிம்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்திலிருந்தே இருவகைப்பட்டவர்களாக இருந்து வந்ததை நாம் நன்கு அறிவோம். ஒரு வகையினர் இறைவனுக்கு பயந்து தூய்மையான உள்ளத்துடன் இஸ்லாத்தின் அரியத் தொண்டுகளை ஆற்றிக் கொண்டேயிருந்தனர். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த மாபெரும் பணிகளை நம்மால் ஒருபோதும் புறக்கணிக்கவோ மறக்கவோ முடியாது. இறுதிநாள் வரை அவர்கள் ஆற்றிய நற்பணிகள் நன்றியுடன் நினைவு கூறப்படும்.
ஆனால் ஆலிம்களில் மற்றொரு பிரிவினர், இஸ்லாத்தின் பெயரால் பொதுமக்களை பல்வேறு குழப்பங்களில் ஈடுபடுத்தி கொண்டேயிருந்தனர். பொதுவாக இவர்கள் வெளியிலிருந்து இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இஸ்லாமிய ஆட்சிகளுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த அபாயங்களைப் புறக்கணித்துவிட்டு, இஸ்லாத்திற்காகத் தூய்மையான பணிகள் ஆற்றிக் கொண்டிருந்தவர்களால் தான் இஸ்லாத்திற்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டிருந்ததாக கண்டார்கள்.
கிறித்தவர்களிலிருந்தும் நாத்திகர்களிலிருந்தும் இஸ்லாத்துற்கு விரோதமான இயக்கங்களிலிருந்தும் தோன்றிக் கொண்டிருந்த அபாயங்களை காணும் கண்கள் இவர்களுக்கு இருந்ததில்லை. இவர்களின் பார்வை ஹம்பலி மத்ஹப், மாலிகி மத்ஹப், ஹனஃபி மத்ஹப், ஃஷாஃபி மத்ஹப், பரேல்வி, அஹ்மதி முதலானவர்களிடம் தான் இஸ்லாத்திற்கான அபாயத்தை காண்கின்றது. இதன் மூலம் முஸ்லிம்களுக்கிடையில் மோதல்களை உருவாக்குகின்றனர். இந்த மோதல்களினால் சமுதாயமும் ஆட்சிகளும் பலவீனமடைகின்றன. இதனை இஸ்லாத்தின் விரோத சக்திகள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இக்காலத்தில் கூட இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இஸ்லாமிய ஆட்சிகளுக்கும் இந்த முல்லாக்களால் தாம் மாபெரும் தீங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கும் பாலஸ்தீனில் முஸ்லிம் பிரிவினர்களுக்கிடையில் சிந்தப்படுகின்ற இரத்தத்திற்கும் இந்த முல்லாக்களே காரணமாவர்.
இன்று பொதுவாக இஸ்லாமிய நாடுகளில் ஷிஆ, ஸுன்னி கிளர்ச்சிகள் நடைபெற்று வருவதை நாம் காண்கின்றோம். மற்ற இடங்களில் முல்லாக்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏதாவது குழப்பத்தை உண்டாக்கி முஸ்லிம்களை மோதவைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பகால இஸ்லாமிய நாடுகளில் இவர்கள் ஏற்படுத்திய அதே கிளர்ச்சிகளைத்தான் இன்று மலேஷியா முதலிய இஸ்லாமிய நாடுகளில் நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர். அதாவது அங்குள்ள அரசாங்கங்கள் உண்மையான ஷரீஅத்தின்படி நடக்கவில்லை என்றும் அங்குள்ள முஸ்லிம் அதிபர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்றும் இவர்களால் இஸ்லாத்திற்கு மாபெரும் அபாயங்களும், கேடுகளும் ஏற்படுகின்றன என்றும் கூறி, பாமரமக்களை இந்த முல்லாக்கள் தவறான வழியில் செலுத்தி கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானிலுள்ள தேவ்பந்தி முல்லாக்கள், அஹ்மதிய்யா இயக்கத்தால் இஸ்லாத்திற்கு பேரழிவு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். தாங்கள் அஹ்மதிய்யாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் தியாகிகள் என்று தங்களைப் பற்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் அவர்கள் பாகிஸ்தானில் பல்வேறு குழப்பங்களையும் கிளர்ச்சிகளையும் செய்து கொண்டிருக்குன்றனர். ஆனால் பாகிஸ்தானிலுள்ள அரசியல்வாதிகள் இதில் கண்மூடித்தனமாக இருக்கின்றார்கள் என்பது மட்டுமல்லாமல், தங்களுடைய சுயநலனிற்காக அந்த முல்லாக்களுக்கு ஒத்துழைப்புகளும் ஆதரவுகளும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று பாகிஸ்தானுக்கு கேடு இருக்கிறது என்றால், இந்த முல்லாயிஸத்தினால் மட்டுமேயாகும். இதற்கு முன் ஸ்பெயின் நாட்டின் அழிவிற்குக் காரணம், மாலிக் மத்ஹபின் முல்லாயிஸமென்றால், இன்று பாகிஸ்தானை அழிவன் பக்கம் கொண்டு செல்வது தேவ்பந்தி முல்லாயிஸமாகும். பாகிஸ்தான் உருவானதிலிருந்து இதுவரை நடந்த எல்லா கிளர்ச்சிகளுக்கும் விஷமங்களுக்கும் பின்னணியில் இந்த தேவ்பந்தி முல்லாக்களின் கரங்களே செயலாற்றிக் கொண்டிருந்தன. வருங்கால வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.
காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னாவின் காலத்தில் பாகிஸ்தானில் முல்லாயிஸத்திற்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபட்டு சகோதரர்கள் போன்று அன்புடனும் நேசத்துடனும் தங்களுடைய புதிய ஆட்சியை வலிமைப்படுத்துவதிலும் முன்னேற்றமடையச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானில் அமைதியான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் அங்கு முல்லாயிஸம் தலைதூக்கிய போது, அதற்கு அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம் கிடைத்ததும் அமைதியின்மையும் விஷமங்களும் தலை தூக்கின. அன்றிலிருந்து இன்றுவரை பாகிஸ்தான் முல்லாயிஸத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது. ஆனால் இதனை அரசியல்வாதிகளால் புரிய முடியவில்லை.
பாகிஸ்தானில் இன்றுவரை அமுலாக்கப்பட்டிருக்கும் இராணுவச் சட்டத்திற்குக் காரணம் இந்த முல்லாக்களும், இவர்களை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளுமேயாவர். இந்த முல்லாக்கள் இன்று அஹ்மதிய்யத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு வெறுக்கத்தக்க கிளர்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அஹ்மதிய்யத்திற்கு எதிராக நடைபெற்று வரும் கொடுமைகளையும், அநீதிகளையும் தாங்கள் எதிர்த்தால் தங்களுடைய அரசியல் செல்வாக்கிற்கும் பங்கம் விளைந்துவிடும் என்று அரசியல் தலைவர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் தங்களுடைய சுய நலத்திற்காகவும் இந்த அரசியல் தலைவர்கள் முல்லாக்களை தூண்டி விடுகின்றனர். அவர்களுக்கு பணமும் மற்ற சலுகைகளையும் தாரளமாகக் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்துவிட்டுத் தங்களை ஹீரோக்கள் எனக் கருதுகின்றனர்.
இன்று பாகிஸ்தானில் முல்லாயிஸம்தான் இராணுவத்தை அடக்கி ஆளுகின்றது. அதே சமயத்தில் இராணுவம் முல்லாயிஸத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த இரண்டு பிரிவினர்களும் வெற்றிப் பெற்றிருப்பதாக கருதிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாத்தின் விரோத சக்திகள் அங்குச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானின் உள்ளும், புறமும் இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகளும் , அவ்வாட்சிக்கெதிரான தீய சக்திகளும் வலிமையடைந்து கொண்டிருக்கின்றன. இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானை நாம் ஏன் காப்பாற்றவில்லை என்று அவர்கள் பின்னர் பரிதாபத்திற்காளாவர்கள்.
ஓர் ஆட்சியில் முல்லாயிஸமும் மார்க்க வேற்றுமைகளும் தலையிடும் போது அந்த ஆட்சியில் அராஜகம் உருவாகி இறுதியில் ஆட்சியின் முன்னேற்றத்தில் கவனம் முழுவதும் இந்த வேற்றுமைகளிலேயே செலவழிக்கப்பட்டு நாட்டின் முன்னேற்றம் பாதித்து வருகின்றது. இத்தகு நிலைக்குத்தான் இன்று பாகிஸ்தான் உள்ளாகியிருக்கின்றது. அங்கு அரசியல் முன்னேற்றம் தடை செய்யப்படுகின்றது.
இதே பாகிஸ்தானுடன் சுதந்திரம் பெற்ற பல்வேறு நாடுகளில் முல்லாயிஸம் நுழையாத காரணத்தினால் எவ்வித தடையுமின்றி முன்னேற்றம் பெற்று வருகின்றன. உதாரணமாக நம் அண்டை நாடான இந்தியா, பாகிஸ்தான் விடுதலை அடைந்த அதே காலத்தில்தான் விடுதலையடைந்தது. அங்கு எந்தவிதமான தடையுமின்றி அது அரசியல் துறைகளில் முன்னேற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறது. இதனால் இன்று இந்தியாவுக்கு உலக நாடுகளில் மதிப்பும் மரியாதையும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. சில இஸ்லாமிய நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு கொடுப்பதை விடவும் அதிகமான மரியாதையையும், கண்ணியத்தையும் இந்தியாவுக்கே கொடுக்கின்றன. இதற்கு காரணமென்ன? அந்த நாட்டு மக்கள் அரசியலில் முல்லாக்களையோ இந்து பண்டிதர்களையோ, புரோகிதர்களையோ நுழைய விடுவதில்லை. அரசியலுக்கும் மார்க்க வேற்றுமைகளுக்கும் சம்பந்தமில்லாமல் ஆக்கி வைத்துள்ளனர். அரசியலுக்கும் மார்க்கத்திற்கும் அங்குத் தனித்தனியான செயல்முறைகள் உள்ளன. ஒன்று மற்றொன்றுடன் சம்பந்தப்படுத்துவதில்லை.
ஆனால் பாகிஸ்தானிலோ எப்போதும் ஆட்சி சம்பந்தப்பட்ட காரியங்களில் முல்லாயிஸம் நுழைந்து அந்த ஆட்சியின் முன்னேற்றத்தை தடை செய்து கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தீனுக்கு எப்போதும் நஷ்டமும் பாதிப்பும் ஏற்பட்டு கொண்டேயிருக்கின்றன. இந்த நஷ்டங்களுக்கும் முல்லாயிஸமே முக்கிய பொறுப்பாளிகளாவர். இந்த முல்லாயிஸத்தின் காரணமாகத்தான் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு மார்க்கத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மக்களின் கவனம் கம்யூனிஸத்தின் பக்கமும் சென்று கொண்டிருக்கிறது. குடிமக்களை ஒருவருக்கொருவர் மோத வைத்து கொண்டிருப்பதும் இந்த முல்லாயிஸம்தான். இதனாலேயே நாட்டில் எப்போதும் அமைதியின்மை நிலவி கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் வெட்கக் கேடான செயல்கள் பரவி கொண்டிருப்பதையும், இலஞ்சம், ஊழல், கறுப்பு பணம், கள்ள சந்தை முதலியவை பெறுகி கொண்டிருப்பதையும் கொலை, கொள்ளை, விபச்சாரம் மற்றும் பல்வேறு வகையான ஒழுக்கக் கேடுகள் பெருகிவருவதையும் இங்கு இஸ்லாத்தின் பெயர் மட்டும் எஞ்சியிருப்பதையும் இந்த முல்லாக்கள் கண்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இவற்றுள் எதிலுமே இவர்களுக்கு எந்தக் கெடுதியும் அபாயமும் இருப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானையே அழித்து விடுவதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் அதன் எதிர்ப்பு சக்திகளைக் காணும் கண்கள் இவர்களுக்கு இல்லை.
நான் கைலஞ்சம் எனக்குறிப்பிடுவது தனிப்பட்டவர்கள் வாங்கும், கொடுக்கும் கைலஞ்சத்தை மட்டுமல்ல இன்று நாட்டை மிகவும் நஷ்டத்திற்கும், அழிவிற்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்க நிறுவனங்களில் மிகவும் பரவலாக காணப்படும் கைலஞ்சமாகும். இதனால் அரசாங்கம் மிகவும் மோசமான பாதிப்புள்ளாகியிருக்கிறது. வெளியிலுள்ள நம்மால் யூகித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அரசாங்கத்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டும் வரை லஞ்சம், ஊழல்களும், நம்பிக்கை துரோகங்களும் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக ஒரு ஜமீன்தார் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால், அவருடைய கரண்டு பில்லை வேறொருவருக்கு கொடுத்துவிடுகின்றனர். இலஞ்சம் கொடுக்காத ஜமீன்தாருக்கு மிகவும் அதிகமான தொகையைக் கொண்ட பில்லை கொடுத்து விடுகின்றனர். இது அங்கு சர்வ சாதரணமாக காணப்படும் ஒன்றாகும். இது மட்டுமல்லாமல் இலஞ்சம் கொடுக்காதவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தில், அவர்களின் மோட்டார்களுக்கு செல்லும் மின் விசையை வேண்டுமென்றே நிறுத்தி விடுகின்றனர். இவ்வாறு தனிப்பட்டவர்களுக்கும், அரசாங்கத்திற்கும் கோடிக்கணக்கில் நஷ்டத்தை விளைவிக்கின்றனர்.
அரசாங்க மேல் மட்டத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் ஊழல் நடைபெற்று வருகின்றது. வெளிநாடுகளிலுள்ள கம்பெனிகளிலிருந்து கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கி விட்டு நல்ல இயந்திரங்களுக்கு பதிலாக தரங்கெட்ட இயந்திரங்களை வாங்குகின்றனர். இதனால் 20, 25 வருடங்கள் வரை செயல்பட வேண்டியவை செயலற்றவைகளாகி ஆகிவிடுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து போயிருக்கிறது.
அடுத்து போலிஸ் அதிகாரிகள், தங்களுக்கு லஞ்சம் தரும் அக்கிரமக்காரர்களையும், கொள்ளைக்காரர்களையும் விட்டுவிட்டு அநீதியிழைக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர். இதனால் பாகிஸ்தானிலுள்ள எந்த வாழ்க்கை துறையிலும் மக்களுக்கு நிம்மதிய்யோ அமைதியோ மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை. மக்கள் ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி முதலிய நற்பண்புகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். கடந்து 30,35 வருடங்களாக மேற்குறிப்பிட்ட ஒழுக்கக் கேடுகளும் ,தீமைகளும் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
ஆனால் இஸ்லாத்தின் காவலர்கள் என்றும் நபிகள் நாயகத்தின் வாரிசுகள் என்றும் தங்களைக் குறித்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த ஆலிம்கள் அவை எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் அனுபவித்தும் கூட, குருடர்களையும், செவிடர்களையும் போன்று மவுனமாக பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர்.
இத்தகு செயல்களே பக்தாதின் அழிவிற்கும், ஸ்பெயினின் அழிவிற்கும் காரணங்களாக இருந்தன. இந்த உண்மைகளை எல்லாம் பாகிஸ்தானிலுள்ள தலைவர்கள் அரசியல்வாதிகள் சிந்தனையாளர்கள் நாட்டின் மீதி பற்று கொண்டவர்கள் ஆகியவர்களின் முன் வைத்து நான் அவர்களிடம் கூறுவதென்னவென்றால், உங்களிடம் நியாயமும், நேர்மையும், நாணயமும் இறையச்சமும் இருக்கின்றனவென்றால், இன்று பாகிஸ்தானின் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் தைரியமாக எடுத்துரைக்கும் பண்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். பாகிஸ்தானிற்கு ஏற்பட்டிருக்கும் மாபெரும் ஆபத்து முல்லாயிஸம் தான் என்ற உண்மையை உணருங்கள். இந்த முல்லாயிஸம் தற்போது எல்லைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னணியில் மிகவும் பயங்கரமான சதித்திட்டங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற உண்மையை உணர்ந்து செயல்படுங்கள்.
அஹ்மதிய்யா ஜமாஅத்தை பொறுத்தவரையில் இது இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத் ஆகும். இதனை உலகிலுள்ள எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. நாங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் முன்னேற்றமடைந்தே தீருவோம். எங்களுடைய முன்னேற்றப் பாதையில் நீங்கள் எந்த அளவுக்கு தடைகளை விதித்தாலும் உங்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது. நாங்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலும், நாங்கள் குறைவாக இருக்கும் நாடுகளிலும் எங்களுக்கு வெற்றியும் உங்களுக்கு தோல்வியும்தான் ஏற்படும். ஏனென்றால் இறைவனின் பாதுகாப்புக் கரங்கள் எங்களை சூழ்ந்து கொண்டிருக்கின்றன் எங்களுடைய வரலாற்றில் முன்வைக்கப்பட்ட கால்களை பின்னோக்கிச் சென்றதாகவோ, நாங்கள் எதிலும் வீழ்ச்சியடைந்ததாகவோ உங்களால் காண முடியாது. நாங்கள் உங்களால் ஷஹீதாக்கப்படலாம். பல்வேறு துக்கங்களுக்கும், துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும், சொதனைகளுக்கும் உங்களால் நாங்கள் ஆளாகியிருக்கின்றோம். எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எங்களுடைய மதிப்பிற்குரிய பெரியோர்களும், அன்பர்களும் ஏசப்படுகின்றனர். இவையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்களால் ஜமாஅத்தின் முன்னேற்றத்தை ஒருபோதும் தடை செய்ய இயலவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் நாங்கள் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம். இறைவனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒளியை உங்களாலும் உங்கள் சக்தியாலும் ஒருபோதும் பறித்துவிடவோ, பிடுங்கிவிடவோ இயலாது. உங்களுடைய எல்லா முயற்சிகளிலும் உங்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படும். ஆனால் இந்த நஷ்டத்தை உங்களால் காண இயலாது. ஒரு சமுதாயம் தானாகவே அழிய நினைத்தால் இறைவனும் அதனை அழித்து விடுகின்றான். இதில் அவன் இஸ்லாமிய சமுதாயம் என்றோ மற்ற சமுதாயமென்றோ பாகுபாடு காட்டுவதில்லை. இது வரலாறு நமக்கு கற்றுத்தந்த உண்மையாகும். பாக்தாதிலும், ஸ்பெயினிலும் நடந்தது இதுவேயாகும்.
உண்மையிலேயே பாகிஸ்தான் இன்று அழிவின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. அங்குள்ள எல்லா பிரிவினர்களும் தங்களுடைய சுயநலத்திற்காகவே நாட்டை அழிவிற்கும், நஷ்டத்திற்கும் ஆளாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இறைவன்தான் பாகிஸ்தானை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று அஹ்மதிய்யா ஜமாஅத்தை சார்ந்தவர்கள் துஆ செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் "லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற புனித கலிமாவின் அடிப்படையில் உருவான நாடாகும். இந்தக் கலிமாவை காப்பாற்றுவதற்காக நாங்கள் உயிரைக் கூட அர்ப்பணம் செய்ய தயாராக இருக்கின்றோம். ஆனால் இன்று பாக்கிஸ்தான் அரசாங்கமே புனிதமான இந்த கலிமாவை அழித்து நாட்டை அழிவின் பக்கம் கொண்டு செல்கிறது. இதனால் இந்த நாடு அழிந்துவிடுமானால், இது மிக கேவலமான அழிவேயாகும். எனவே அஹ்மதிகளே! நீங்கள் இத்தகு அழிவிலிருந்து பாகிஸ்தானை இறைவன் காப்பாற்ற அதிகமாக துஆ செய்யுங்கள். இறைவன் நம்முடைய துஆக்களை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.

(ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் 7-6-1985 இல் ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவு)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.