இஸ்லாமிய ஞானத்தின் கீழ் உலக சமுதாயங்களை ஒன்று படுத்தி அவர்களுக்கும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒரு ஆத்மீக நல்லுறவை ஏற்படுத்துவதே அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தலையாய நோக்கமாகும். இஸ்லாத்தை அனைத்து மார்க்கங்களின் மீதும் வெற்றி பெறச் செய்வது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் ஜமாஅத்தின் ஒவ்வொரு நபருடைய பெரும் பொறுப்பாகும்.
ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் முதல் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வரை தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் கடுமையான துக்கங்களும் துயரங்களும் அந்தந்த காலத்து மக்களால் வழங்கப்பட்டிருந்தது. இறை ஜமாஅத்துகள் சோதனையின் காலகட்டத்தில் இறைவனிடம் அதிகமாக துஆ செய்வதுடன் பொறுமையுடன் தியாகங்கள் செய்வதன் மூலம் இறையுதவியை பெற்று இறுதியில் தம்மை எதிர்ப்பவர் மீது வெற்றியடைந்திருந்தன. நபிமார்களின் இந்த நடைமுறையின் அடிப்படையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மீதும் துக்கங்களும் துயரங்களும் நிறைந்த பல சோதனை காலக்கட்டங்கள் வந்திருந்தன. அவற்றில் ஒன்றுதான் 1934 ஆம் ஆண்டு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை பூண்டோடு ஒழிப்போம் ஏந்துர் கங்கணம் கட்டிக்கொண்டு கடுமையான முறையில் இந்த ஜமாஅத்தை எதிர்த்த "மஜ்லிஸே அஹ்ராரி" களின் கிளர்ச்சியாகும். அஹ்ராரி இயக்கத்தினர் அப்போது அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கு எதிராக மிகப்பெரும் முழக்கமிட்டு கொண்டிருந்தார்கள். ஜமீன்தார் ஏடு 2 மே 1935 இல் இவ்வாறு எழுதுகிறது:
"காதியானை மண்ணோடு மண்ணாக்குவோம். காதியானி மினாராவையும் தரைமட்டமாக்குவோம். அந்த இயக்கத்தின் பெயரை சொல்லும் ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம்."
பிறகு மீண்டும் ஜமீன்தார் ஏடு 4 பிப்ரவரி 1936 இல் இவ்வாறு எழுதுகின்றது:
"நாங்கள் அரசியல் இயக்கங்களின் துணைகளுடன் அஹ்மதிய்யா இயக்கத்தினருக்கு எந்த அளவு தொல்லைகள் கொடுப்போம் என்றால் ஐந்து வருடத்திற்குள்ளாக அவர்கள் இந்த இயக்கத்தை கைவிட்டு விடுவர். அல்லது உலகத்திலிருந்து அழித்தொழிக்கப்படுவர். மஜ்லிஸே அஹ்ராரின் அமீர் சரிய்யத் செய்யது அதாஉல்லாஹ் ஸாஹிப் இவ்வாறு வீரவாதம் செய்தார்:
"மிர்ஸாயிகளுக்கு முன்னில் பலரும் மோதி பார்த்து தோல்வியுற்று திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் (அஹ்மதிய்யாவினர்) எனது கைகளால் அழிய வேண்டும் என இறைவன் நாடியுள்ளான்."
(சாவானே ஹயாத் பக்கம் 100)
இந்த கடுமையான எதிர்ப்புக்கு பதில் கூறும் வகையிலும் இஸ்லாத்தை வெற்றி பெறச் செய்வதற்கும் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் கொடியின் கீழ் அனைத்துலக மக்களையும் ஒன்று சேர்ப்பதற்கும் "தஹ்ரீக்கே ஜதீத்" என்ற திட்டத்தை ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊத் (இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது) (ரலி) அவர்கள் 1934 ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். அவர்கள் இத்திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் தனது எதிரிகளை நோக்கி இவ்வாறு கூறினார்கள்:
"நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இரவு பகலாக எங்களுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினாலும் உங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி அஹ்மதிய்யத்தை அழிக்க நினைத்தாலும் இறுதியில் நீங்கள் ஏளனத்திற்கு இலக்காகி மண்ணோடு மண்ணாகி விடுவீர்கள். இறைவன் எனக்கும் என்னுடைய ஜமாஅத்திற்கும் வெற்றியை தருவான். நான் அஹ்ராரிகளின் காலடியிலிருந்து பூமி விலகுவதை காண்கின்றேன்."
(அல்-ஃபஸ்ல் 30 மே 1935)
"தஹ்ரீக்கே ஜதீத்" என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜமாஅத்தில் தியாக உணர்வை ஏற்படுத்த "தஹ்ரீக்கே ஜதீத் அமானத் ஃபண்டு" 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. எளிய வாழ்க்கை, சமுதாய வளர்ச்சிக்காக பாடுபடுதல், அனைத்து வெளிநாடுகளிலும், கிராமங்களிலும் இஸ்லாத்தின் தூதை எட்ட வைத்தல்,, பெண்ணுரிமைக்காக பாடுபடுதல், இஸ்லாத்தில் சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இளைஞர்களுக்கு மதரஸா அஹ்மதிய்யாவில் மார்க்கக் கல்வி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் தம்மை ஜமாஅத்திற்காக அர்ப்பணித்தல், இளைஞர்கள் தங்கள் விடுமுறை நாட்களை தப்லீக் பணிகளில் கழித்தல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்கள் இத்திட்டத்தின் நோக்கத்தை விவரித்து இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இப்போது இறைவன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த வேகமாக வருகின்றான். தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பணியை அவன் உங்களிடத்தில் ஆம்! உங்களிடத்தில் ஒப்படைத்துள்ளான். இறையாட்சியின் இசையினை முழக்குபவர்களே! ஒரு முறை இந்த புல்லாங்குழலை உத்வேகத்துடன் ஊதுங்கள். அதன் மூலம் உலகின் காதுகள் வெடித்து விட வேண்டும். ஒரு முறை உங்கள் இதயத்தின் இரத்தத்தை அதன் சுரங்களாக மாற்றுங்கள். இந்த இசை மூலம் இறைவனின் 'அர்ஷ்' அசைந்துவிட வேண்டும். மலக்குகள் சிலிர்ந்தெழ வேண்டும். உங்களுடைய வேதனை நிறைந்த துஆக்களையும் உங்களுடைய 'தக்பீர்' முழக்கத்தையும் கேட்டு இறைவன் இறங்கி வர வேண்டும்."
(ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) நிகழ்த்திய "சேரே ரூஹானி" (ஆன்மீக பயணம்) என்ற சொற்பொழிவின் நூல் வடிவம் பக்கம் 94)
தஹ்ரீக்கே ஜதீத் திட்டம் மூலம் இது வரை 'வெளிநாடுகளில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்களும் 171 பள்ளிக்கூடங்களும் 35 மருத்துவமனைகளும் நிறுவப்பட்டுள்ளன. 147 சஞ்சிகைகள் மூலம் இஸ்லாத்தின் தூது உலகம் முழுவதும் எட்ட வைக்கப்படுகின்றது. சிக்கன வாழ்க்கையின் பயனாக மீதமாகும் பொருள் தஹ்ரீக்கே ஜதீத் திட்டத்தின் கீழ் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஒன்று திரட்டி இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக அதை பயன்படுத்துகிறது. இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள். "இந்தக் காலத்தில் பொருள் தியாகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதனால் எல்லா ஆண்களும் பெண்களும் தங்களது செலவுகளை குறைக்க வேண்டும். அப்போதுதான் தியாகத்திற்காக இறைவனிடமிருந்து அழைப்பு வரும்போது அதற்காக தயாராக முடியும்.
(அல்-ஃபஸ்ல் 12-06-1935)
எளிய வாழ்க்கையை மேற்கொள்ளாமல் இஸ்லாத்தின் வெற்றியை பெற முடியாது. இதில்தான் ஈமானைப் பற்றிய சோதனை இருக்கிறது. பெண்களும் குழந்தைகளும் கூட இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
(குத்பா ஜுமுஆ 26-5-1936)
பொழுது போக்கு சினிமா களையாட்டங்களில் பணம் விரயமாவதை நாம் பார்க்கிறோம். பொருளை வீண்விரயம் செய்யும் இத்தகைய வழிகளிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். உடையில் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். நகைகளை செய்து பெட்டியில் பூட்டி வைப்பதை பெண்கள் கைவிட வேண்டும். "நன் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாவித வீண் காரியங்களிலிருந்தும் விலகிவிடுவார்கள்." என்ற குர்ஆனின் போதனையின்படி உங்களது வாழ்க்கை மாற வேண்டும். தஹ்ரீக்கே ஜதீதின் அடிப்படையில் ஒவ்வொரு அஹ்மதியும் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
(குத்பா ஜுமுஆ 1-06-1936)
ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: எம்முடைய ஜமாஅத் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத்துகள் கஷ்டங்கள், நஷ்டங்கள் இல்லாமல் மேலோங்குதல் அடைய முடியாது. இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொல்லிக் கொண்டும் இருங்கள். அஹ்மதிய்யத்தின் மேலோங்குதலுக்கான வழி என்ன என்று ஒரு சிறுவனிடம் கேட்டாலும் தியாகம் செய்வதே ஒரே வழி! தியாகம் செய்ய நாங்கள் எப்போதும் தயார் என்று கூறும் நிலை வர வேண்டும்.
(1938 இல் மஜ்லிஸே முஷாவரத்தில் செய்யபட்ட சொற்பொழிவு)
"தஹ்ரீக்கே ஜதீத் திட்டத்தின் கீழ் அஹ்மதிய்யா ஜமாஅத் செய்து வரும் தியாக உணர்வு இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இந்த திட்டம் ஜமாஅத்தின் வரலாற்றில் ஒரு Land Mark ஆக ஒரு குறிப்பிட்ட அடையாளமாக விளங்குகிறது. எனவே, இந்த திட்டம் ஆரம்பித்து ஐம்பது வருடங்களாக இதற்குரிய வார்த்தைபாடுகள் பல இலட்சங்களாக இருப்பினும் வருகிற வருடங்களில் இவை கோடிகளாக மாற வேண்டும் என்பது எனது அவா. இப்படி தஹ்ரீக்கே ஜதீதின் பட்ஜட் மில்லியன்களாக உயர வேண்டும்.
இந்த திட்டத்திற்காக ஆரம்பகட்டத்தில் காதியானிலுள்ள ஏழை பெண்மணிகள் தங்களது ஆடுகளையும், ஆடைகளையும் விற்றுப் பொருள் திரட்டி இறை வழியில் தியாகம் செய்துள்ளனர்.
உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்களோ தஹ்ரீக்கே ஜதீத் திட்டத்தில் பங்கு பெற்றுள்ளனரா என தேடியெடுக்க வேண்டும். அவர்கள் இந்த திட்டத்தில் வார்த்தைபாடு செய்திருந்தால் (வாக்களித்திருந்தால்) அதனை மீண்டும் உயிர் பெற செய்து அவர்களுக்காகவும் நீங்கள் சந்தா கொடுக்க வேண்டும். வாரிசற்ற பெரியவர்களின் எவரேனும் வஃபாத் ஆகியிருந்தால் அவர்களின் வாக்குறுதியை நான் உயிர் பெற செய்வேன். அவர்களுக்காக நான் சொந்தமாக எனது இருப்பிலிருந்து சந்தா கொடுக்க வேண்டும் என்பது ஆசை."
(குத்பா ஜுமுஆ 12-10-1985)
திருமறையின் போதனைப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி நின்று, இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பின்நின்று எளிய வாழ்வை மேற்கொண்டு எவ்வித தியாகத்திற்கும் நாங்கள் தயார் என்று இஸ்லாத்தின் வெற்றியை எதிர்நோக்குவோமாக! இறைவன் இதற்கு உதவி புரிவானாக!. ஆமீன்
(ஆக்கம்: மௌலவி M. ரஃபீக் அஹ்மது சாஹிப்)



கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None