இஸ்லாமிய வரலாற்றில் தங்களின் ஆன்மீகத் தூய்மை, பொறுமை மற்றும் இறைப்பணிகள் மூலம் உயரிய இடத்தைப் பிடித்த ஆண், பெண் இருபாலருமே மனிதகுலத்திற்குச் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர். திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் (ஸல்) வழிமுறைகளைத் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து, இறைவனின் நாட்டத்திற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்களே 'அவ்லியாக்கள்' (இறையநேசர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்; இத்தகைய சான்றோர்களின் வாழ்க்கையே உண்மையான வெற்றிக்கான பாதையாகும்.
ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாகத் திகழும் அன்னை ராபிஆ பஸரி (ரஹ்) அவர்கள், தமது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறை வழிபாட்டிலேயே செலவிட்டவர். இஸ்லாமிய போதனைகளின் வழிகாட்டுதலால், ராபிஆ அத்வியா என்ற ஒரு சாதாரண பெண்மணி, தனது மனத்தூய்மை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் 'ஹழ்ரத் ராபிஆ பஸரி' என்ற உயரிய ஆன்மீக அந்தஸ்தைப் பெற்றார். இவரது வாழ்க்கை இன்றும் இறைவனைத் தேடும் பயணிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.
பஸராவின் புகழ்பெற்ற ஆன்மீக ஞானியான அன்னை ராபிஆ பஸரி (ரஹ்) அவர்கள், ஹிஜ்ரி 95 முதல் 99-க்குள் (கி.பி. 713-718) பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தனது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்ததால் 'ராபிஆ' (நான்காவது) என்று பெயரிடப்பட்ட இவர், 'கைஸ் பின் அதீ' கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஆரம்பகால வரலாற்று ஆசிரியர்களால் இவரது பிறப்பு குறித்த தகவல்கள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நவீன ஆய்வுகளும் 'உருது இஸ்லாமிய கலைக்களஞ்சியமும்' இவரது பிறப்பு மற்றும் பஸராவிலுள்ள இவரது வாழ்விடத்தை உறுதிப்படுத்துகின்றன. இறைநேசர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், ஹிஜ்ரி 185-இல் (கி.பி. 801) பஸராவிலேயே காலமானார். (உருது தாயிரா மஆரிஃப் இஸ்லாமியா பாகம் 10 பக்கம் 92)
ஹழ்ரத் குவாஜா ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அன்னை ராபிஆ பஸரி (ரஹ்) அவர்கள் மிகவும் ஏழ்மையான, ஆனால் இறைபக்தி மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஷேக் இஸ்மாயில் உலக செல்வங்கள் அற்றவராக இருந்தாலும், போதுமென்ற மனமும் (கனாஅத்) இறைவனைத் தவிர வேறு எவரிடமும் கையேந்தக் கூடாது என்ற உறுதியும் கொண்டவராக இருந்தார். ராபிஆ (ரஹ்) பிறந்த அன்று இரவு, குழந்தையைப் போர்த்த ஒரு துணி கூட இல்லாமலும், விளக்கேற்றவோ அல்லது குழந்தையின் தொப்புள் கொடியில் தடவவோ ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாத அளவிற்கு வறுமை வாட்டியது. தனது கொள்கைப்படி ‘அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் கையேந்த மாட்டேன்’ என்று இருந்தபோதிலும், மனைவியின் வற்புறுத்தலால் அண்டை வீட்டாருக்கு எண்ணெய் கேட்கச் சென்ற ஷேக் இஸ்மாயில், வெறும் கையுடனேயே வீடு திரும்பினார்; இத்தகைய வறுமையிலும் ஆன்மீக ரகசியங்கள் நிறைந்ததாக அவரது பிறப்பு அமைந்தது.
கனவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தரிசிப்பதும் நன்மாராயமும்
தமது குழந்தையின் பிறப்பின் போது ஏற்பட்ட வறுமையால் கவலையோடு உறங்கிய ஷேக் இஸ்மாயில் அவர்களுக்கு, கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றி ஆறுதல் கூறினார்கள். "உமது மகள் இறைவனிடம் பெரும் மக்பூலியத்தைப் (அங்கீகாரம்) பெறுவாள், அவளது பரிந்துரையால் எனது உம்மத்தில் ஆயிரம் பேர் மன்னிக்கப்படுவார்கள்" என்று நற்செய்தி கூறினார்கள். மேலும், பஸராவின் ஆட்சியாளரிடம் சென்று, அவர் தினமும் 100 முறையும், வெள்ளிக்கிழமை இரவுகளில் 400 முறையும் ஓதும் ஸலவாத்தை கடந்த வெள்ளியன்று மறந்ததற்காக, அதற்குப் பரிகாரமாக 400 தீனார்களை உம்மிடம் வழங்குமாறு கூறுமாறு பணித்தார்கள். இக்கனவால் நெகிழ்ந்து அழுத தந்தை, மறுநாள் ஆட்சியாளரிடம் இச்செய்தியைத் தெரிவிக்க, நபிகளார் (ஸல்) தன்னை நினைவு கூர்ந்ததற்காக நன்றிக்கடனாக ஆட்சியாளர் ஏழைகளுக்கு 10,000 திர்காம்களைத் தர்மம் செய்ததுடன், 400 தீனார்களை ஷேக் இஸ்மாயிலிடம் வழங்கி அவரிடம் நேரில் வந்து மரியாதையும் செலுத்தினார். இச்சம்பவம் ராபிஆ பஸரி (ரஹ்) அவர்களின் தந்தையின் உயரிய நிலையையும், ஸலவாத் ஓதுவதால் கிடைக்கும் அளப்பரிய பரக்கத்களையும் (அருள்வளம்) தெளிவாகக் காட்டுகிறது. (தத்கிரத்துல் அவ்லியா (மொழிபெயர்ப்பு) நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. வெளியீடு: அல்-ஃபாரூக் புக் ஃபவுண்டேஷன் லாகூர், வெளியான ஆண்டு மே 1997, பக்கம் 42)
ஆரம்பக்கால வாழ்க்கை
தந்தையின் மறைவிற்குப் பிறகு கடும் வறட்சியால் தனது சகோதரிகளிடமிருந்து பிரிந்த ராபிஆ பஸரி (ரஹ்) அவர்கள், ஒரு கொடியவனால் பிடிக்கப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு அடிமையாக விற்கப்பட்டார். பகலில் நோன்பு நோற்பதும், இரவு முழுவதும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதுமே அவரது வழக்கமாக இருந்தது. ஒருமுறை நள்ளிரவில் அவரது எஜமான் விழித்தபோது, ராபிஆ (ரஹ்) அவர்கள் இறைவனிடம் சிரம் பணிந்து (ஸஜ்தா) பிரார்த்திப்பதையும், அவரது தலைக்கு மேல் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிப்பதையும் கண்டு வியந்தான். "இறைவா! நான் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்ட அடிமையாக இருப்பதால் உன்னை வணங்குவதற்குத் தாமதமாக வருகிறேன், இல்லையெனில் என் முழு நேரத்தையும் உனது வழிபாட்டிலேயே கழித்திருப்பேன்" என்று அவர் உருக்கமாகக் கூறுவதைக் கேட்ட எஜமான், அவருக்குப் பணிவிடை செய்வதே சிறந்தது என உணர்ந்து மறுநாளே அவரை விடுவித்தான். விடுதலையான பின் அவர் முழுமையாகத் தன்னை இறைநினைவில் (திக்ரு) ஈடுபடுத்திக்கொண்டார்.(தத்கிரத்துல் அவ்லியா (மொழிபெயர்ப்பு) நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. வெளியீடு: அல்-ஃபாரூக் புக் ஃபவுண்டேஷன் லாகூர், மே 1997, பக்கம் 42-43)
கல்விப் பயணம்
அடிமைத்தளையிலிருந்து விடுதலையான பிறகு, ராபிஆ பஸரி (ரஹ்) அவர்கள் அக்காலத்தின் மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்ந்த கூஃபாவிற்குச் சென்றார். அங்குள்ள அறிஞர்களின் சபைகளில் கலந்துகொண்டு தனது தேடலைத் தொடர்ந்த அவர், இயற்கையிலேயே மிகுந்த நுண்ணறிவு கொண்டவராக இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்தார். அத்துடன் ஃபிக்ஹ் (சட்டக்கலை), ஹதீஸ் (நபிகளார் மொழி) மற்றும் தஃப்சீர் (விரிவுரை) ஆகிய கலைகளில் ஆண்களை விடவும் மேலோங்கி நின்றார். அவரது ஆழமான அறிவாற்றலையும் ஆன்மீக ரகசியங்களையும் கண்டு அக்காலத்தின் பெரும் அறிஞர்களான ஸுப்யான் ஸவ்ரி, மாலிக் பின் தீனார் மற்றும் ஷேக் அப்துல் வாஹித் போன்றோரே வியப்படைந்து, அவரிடம் கல்வி ஞானம் பெற வருகை தந்தனர்; அந்த அளவிற்கு அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞராகவும் போதகராகவும் திகழ்ந்தார். (ஆதாரம்: ஹழ்ரத் ராபிஆ பஸரி, ஆசிரியர்: ஹாபிஸ் நாசிர் மஹ்மூத், வெளியீடு: புக் கார்னர் ஷோரூம் ஜீலம், ஏப்ரல் 2011, பக்கம் 93)
இறைவழிபாடும் தவமும்
டாக்டர் மார்கரெட் ஸ்மித் தனது "ராபியா தி மிஸ்டிக்" (Rabia The Mystic) என்ற நூலில் ஷேக் ஃபரிதுதீன் அத்தாரை மேற்கோள் காட்டி குறிப்பிடுகையில், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற புனித ராபியா பஸரி அவர்கள், மக்கள் நடமாட்டமற்ற பாலைவனப் பகுதிக்குச் சென்று அங்குத் தனிமையில் இறைவனை வணங்குவதில் (இபாதத்) முழுமையாக ஈடுபட்டார் என்றும், பின்னர் அங்கிருந்து விலகி ஒரு குடியிருப்பில் உள்ள சிறிய அறையில் தங்கியிருந்து வெளி உலகத்தோடு தொடர்பின்றி இறை தியானத்திலும் (திக்ரு), சிந்தனையிலும் (ஃபிக்ரு) மூழ்கி இருந்தார் என்றும் விளக்குகிறார். (ஹஸ்ரத் ராபியா பஸரி, ஆசிரியர்: ஹாஃபிஸ் நாசிர் மஹ்மூத் - வெளியீடு: புக் கார்னர் ஷோ ரூம், ஜெஹ்லம், பக்கம்: 91, ஏப்ரல் 2011)
புனித ராபியா பஸரி அவர்கள் இரவு பகல் பாராது, கால மாற்றங்களை உணராத அளவிற்குத் தீவிரமான இறை வழிபாட்டில் மூழ்கி இருந்தார். ஒரு இளம் பெண் இத்தகைய ஆன்மீகத் தவத்தில் இருப்பதைக்கண்டு மக்கள் வியந்து அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டனர். விரைவில் அவரது இறையச்சமும் தூய்மையான வாழ்வும் எங்கும் பரவியது; மக்கள் அவரிடம் அறிவுரை பெறக் கூடினர்.
தொடர்ச்சியான சோதனைகளும் துயரங்களும் அவரை உலக ஆசைகளிலிருந்து முற்றிலுமாக விடுவித்தன. படைப்பினங்களை விடுத்துப் படைத்தவனுடன் மட்டுமே தனது உறவை உறுதிப்படுத்திக்கொண்டார். எகிப்திய அறிஞர் அப்துர் ரசாக் பாஷா குறிப்பிடுவது போல, இஸ்லாமியத் தஸவ்வுஃப் (ஆன்மிகம்) வரலாற்றில் 'இறைக்காதல்' என்பதை ஒரு நிலையான கொள்கையாக உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ராபியா பஸரி அவர்களையே சாரும்.
அவர் உலகியல் விவகாரங்களிலிருந்து முற்றிலும் விலகி, பகல் முழுவதும் நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் விழித்திருந்து குர்ஆன் ஓதி இறைவனை வணங்குவதையும் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். வீட்டில் உணவே இல்லாத நேரங்களில் வெறும் ஒரு மிடறு தண்ணீரைக் குடித்து நோன்பு துறந்தாலும், எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராகவே இருந்தார்.
அவரது இத்தகைய தீவிரமான வழிபாட்டைக் கண்ட ஒருவர், "நீங்கள் வணங்கும் இறைவனைப் பார்க்கிறீர்களா இல்லையா?" என்று கேட்டார். அதற்கு ராபியா பஸரி அவர்கள், "அவனை நான் பார்க்கவில்லை என்றால், நிச்சயமாக வணங்கியே இருக்கமாட்டேன்" என்று பதிலளித்தார். (ஹஸ்ரத் ராபியா பஸரி (ஆசிரியர்: ஹாபிஸ் நாசிர் மஹ்மூத், பக்: 91-92, ஏப்ரல் 2011)
அன்னாரின் தூய நடவடிக்கைகளை கண்டு வியந்த பஸராவைச் சேர்ந்த ஒருவர் புனித ராபியா பஸரி அவர்களுக்குத் திருமணத் தூது ஒன்றை அனுப்பினார். அதில் ஒரு லட்சம் தீனார்களை 'மஹர்' தொகையாகவும், மாதந்தோறும் பத்தாயிரம் தீனார்களைச் செலவிற்காகவும் தருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நபரின் கோரிக்கைக்குப் பதில் அளித்த ராபியா பஸரி அவர்கள், "உன் செல்வமோ அல்லது நீ எனக்கு அடிமையாவதோ எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது" என்று கூறினார். மேலும், "இவ்வுலகில் பேணுதலான வாழ்வு (ஜுஹ்த்) அமைதியைத் தரும்; பேராசை துயரத்தையே தரும். உனது ஆசைகளைக் கட்டுப்படுத்து; உன்னை நீயே ஆளப் பழகு. உனது வாரிசுகள் உனது சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கு முன்பே, மரணத்தைப் பற்றிய சிந்தனையை எப்போதும் இதயத்தில் வைத்திரு. நீ வாக்களித்ததை விட இருமடங்கு செல்வத்தை இறைவன் எனக்கு வழங்க முடியும், ஆனால் நான் ஒரு நொடி கூட என் இறைவனை மறந்திருக்க விரும்பவில்லை. எனவே அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக (அல்லாஹ் ஹாஃபிஸ்)" என்று கூறி அத்திருமணத் தூதை மறுத்தார். (அல்-கவாகிப் அத்-துர்ரியா ஆசிரியர் அல்-முனாவி, ஹஸ்ரத் ராபியா பஸரி (ஆசிரியர்: ஹாஃபிஸ் நாசிர் மஹ்மூத், பக்: 95-96, ஏப்ரல் 2011)
புனித ராபியா பஸரி அவர்களின் வாழ்வில் காணப்பட்ட ஆழமான துயரமும் கவலையும், உண்மையில் அவர் இறைவன் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பின் வெளிப்பாடே ஆகும். இஸ்லாமியத் தஸவ்வுஃப் (ஆன்மீகத் தத்துவம்) வரலாற்றில், 'இறைக்காதல்' (حب الہی) என்பதை ஒரு நிலையான மற்றும் வலிமையான கொள்கையாக முதன்முதலில் முன்வைத்தவர் புனித ராபியா பஸரி அவர்களே என்று அப்துர் ரசாக் பாஷா குறிப்பிடுகிறார். (ஹஸ்ரத் ராபியா பஸரி, ஆசிரியர்: செய்யது இர்திஸா அலி கிர்மானி, அழீம் அண்ட் சன்ஸ் பப்ளிஷர்ஸ், உருது பஜார், லாகூர் (பக்கம்: 47, ஜூலை 2001)
தவக்குல் அலல்லாஹ்
(இறைவன் மீதான உறுதியான நம்பிக்கை)
ஹஸ்ரத் முதல் கலீபத்துல் மசீஹ் (ரலி) அவர்கள் இச்சம்பவத்தை எடுத்து கூறினார்கள். அதாவது, ஒருமுறை ராபியா பஸரி அவர்களின் வீட்டிற்கு இருபது விருந்தினர்கள் வந்தனர். அப்போது வீட்டில் இரண்டு ரொட்டிகள் மட்டுமே இருந்தன. ராபியா அவர்கள் தனது பணிப்பெண்ணிடம் அந்த இரண்டு ரொட்டிகளையும் ஒரு ஏழைக்குத் தர்மமாகக் கொடுத்துவிடுமாறு கூறினார். "இருபது விருந்தினர்கள் இருக்கும்போது இருக்கும் இரண்டு ரொட்டிகளையும் கொடுத்துவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று பணிப்பெண் குழம்பினாலும், ராபியா அவர்களின் கட்டளைப்படி அவற்றை தர்மம் செய்தார்.
சிறிது நேரத்தில், ஒரு செல்வந்தப் பெண்மணி தனது வேலைக்காரி மூலம் 18 ரொட்டிகளை ராபியா அவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராபியா அவர்கள், "இது நிச்சயமாக எனக்குரிய பங்கு அல்ல, இதைத் திருப்பி எடுத்துச் செல்" என்று கூறி மறுத்துவிட்டார். அந்த வேலைக்காரி தனது வீட்டிற்குத் திரும்பியபோது, அவளது எஜமானி "ஏன் இவ்வளவு தாமதம்? ராபியா பஸரிக்கான 20 ரொட்டிகள் இதோ இருக்கின்றன, கொண்டு போய் கொடு" என்று கூறி 20 ரொட்டிகளை அனுப்பினார். இம்முறை ராபியா அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த ரொட்டிகளைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நுணுக்கத்தை வியப்புடன் கேட்ட விருந்தினர்களிடம் ராபியா அவர்கள் விளக்கினார்: "விருந்தினர்களாகிய நீங்கள் வந்தபோது என்னிடம் இரண்டு ரொட்டிகள் இருந்தன. அதை நான் என் இறைவனிடம் 'வியாபாரம்' செய்தேன். مَنْ جَاءَ بِالْحَسَنَۃِ فَلَہُ عَشْرُ اَمْثَالِھَا'நன்மையைச் செய்பவருக்கு அதற்குப் பத்து மடங்கு கூலி உண்டு' என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், இரண்டு ரொட்டிகளுக்குப் பதிலாக எனக்கு இருபது ரொட்டிகள் வரவேண்டும். வந்த பெண் 18 ரொட்டிகளைக் கொண்டு வந்தபோது, என் இறைவன் வாக்குறுதி மாறாதவன் என்பதால் அது என்னுடையது அல்ல என்று தெரிந்தே திருப்பி அனுப்பினேன். இறுதியில் 20 ரொட்டிகள் வந்தபோது அது என் பங்கு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்."
ஹுஸூர் தொடர்ந்து கூறுகின்றார்கள், இது வெறும் கதையல்ல, நிஜமான உண்மையாகும். நான் இதை பலமுறை அனுபவபூர்வமாகச் சோதித்துப் பார்த்திருக்கிறேன். இருப்பினும், "இறைவனைச் சோதித்துப் பார்க்காதீர்கள்; அவனுக்கு உங்கள் சோதனைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" என்று எச்சரிக்கிறார்கள். இறைவனின் வாக்குறுதியை ஒரு விவசாயியின் செயலோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு விவசாயி நிலத்தில் விதையை விதைக்கும்போது, அதை உண்பதற்குப் பூச்சிகளும் விலங்குகளும் காத்திருக்கின்றன; இன்னும் பல இடர்ப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அத்தனை தடைகளையும் தாண்டி அந்த ஒரு விதை இறுதியில் நூற்றுக்கணக்கான தானியங்களாக விளைகிறது. அதுபோலவே, இறைவனின் பாதையில் (தர்மமாக) விதைக்கப்படும் எதுவும் ஒருபோதும் வீணாவதில்லை; அது பலமடங்கு பலனைத் தந்தே தீரும். (நூல்: ஹக்காயிக்குல் ஃபுர்ஆன் பாகம் 1 பக்கம் 420-421)
ஓர் உன்னதமான கனவு:
ஹிஜ்ரி 386 இல் மரணம் அடைந்த ஹஸ்ரத் அபூ தாலிப் மக்கீ முஹம்மது இப்னு அலி இப்னு அதா அல்-ஹாரிஸி அவர்கள் தமது நூல் "குவ்வத்துல் குலூப் ஃபீ மஆமலதுல் மஹ்பூப் என்ற நூலில் ஹஸ்ரத் ராபியா பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் உன்னதமான கனவை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்: ஹஸ்ரத் ராபியா பஸரி அவர்கள் கூறுகின்றார்கள், "ஓர் இரவு ஸஹர் (அதிகாலை) நேரத்தில் நான் சில தஸ்பீஹ்களை (இறை துதிகளை) ஓதிவிட்டு உறங்கினேன். அப்போது ஒரு கனவு கண்டேன்; அதில் ஒரு பசுமையான மற்றும் செழிப்பான மரம் இருந்தது. அதன் அழகு, எழில் மற்றும் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரிப்பது இயலாத காரியம். அந்த மரத்தில் மூன்று விதமான கனிகள் காய்த்திருந்தன. அத்தகைய கனிகளை இந்த உலகில் இதுவரை பார்த்ததே இல்லை. அவற்றில் சில கனிகள் வெண்மையாகவும், சில சிவப்பாகவும், சில மஞ்சள் நிறத்திலும் இருந்தன. அந்த கனிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
'இந்தக் கனிகள் யாருடையவை?' என்று நான் கேட்டேன். அதற்கு அங்கிருந்த ஒருவர், 'இவை உனது தஸ்பீஹ்களுக்குப் பகரமாக உனக்கு வழங்கப்பட்டவை' என்று பதிலளித்தார். இதைக் கேட்டவுடன் நான் அந்த மரத்தைச் சுற்றி வரத் தொடங்கினேன். அப்போது பொன்னிறமான ஒரு கனி மட்டும் தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டேன். 'இந்தக் கனியும் மற்ற கனிகளுடன் மரத்திலேயே ஒட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?' என்று நான் கூறினேன்.
நான் பேசி முடிப்பதற்குள் அங்கிருந்த நபர் கூறினார்: 'இந்தக் கனி அங்கேயேதான் இருந்தது. ஆனால் நீ தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தபோது உனக்கு ஒரு உலகியல் சிந்தனை வந்துவிட்டது. அதாவது, பிசைந்து வைக்கப்பட்ட மாவு புளித்துவிட்டதோ (கமீர்) என்று நீ அப்போது சிந்திக்கத் தொடங்கினாய். உனது உள்ளத்தில் அந்த எண்ணம் தோன்றிய அந்த கணமே, இந்தக் கனி (மரத்திலிருந்து) கீழே விழுந்துவிட்டது'."
இந்தக் கனவின் மூலம் மனிதனின் செயல்கள் மற்றும் வணக்கங்கள் எவ்வாறு இறைவனிடம் கனிகளாக மாறுகின்றன என்பது தெளிவாகிறது.ஒரு மனிதன் தனது வணக்க வழிபாடுகளில் எந்த அளவிற்கு முழுமையான ஈடுபாட்டோடும், மன ஒருமைப்பாட்டோடும் இறைவனை நாடுகிறானோ, அந்த அளவிற்கு அவனது செயல்களுக்கான பலன் அழகாகவும், இனிமையாகவும், நிலையானதாகவும் அமையும். எனவே, திக்ரு மற்றும் துஆக்களின் போது மனதை அலைபாய விடாமல் இறைவனிலேயே நிலைநிறுத்துவது அவசியம். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்: فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ (பொருள்: எனவே, வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூயதாக்கி அவனை வணங்குவீராக! - அஸ்-ஜுமர்: 3)
இந்த உயரிய நிலையை அடையப் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பின்வரும் துஆவை நாம் அதிகம் ஓதி வருவது அவசியமாகும்:
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
(பொருள்: யா அல்லாஹ்! உன்னை நினைவுகூரவும் (திக்ரு), உனக்கு நன்றி செலுத்தவும் (ஷுக்ரு), உன்னை மிக அழகிய முறையில் வணங்கவும் (இபாதத்) எனக்கு உதவி புரிவாயாக! - ஸுனன் அபூதாவூத்)
துஆ மற்றும் திக்ரு குறித்து ஹஸ்ரத் மஸீஹ் மௌஊத் (அலை) அவர்கள் வழங்கிய அறிவுரைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஹஸ்ரத் மஸீஹ் மௌஊத் (அலை) அவர்கள், ஹஸ்ரத் நவாப் முஹம்மது அலி கான் (ரலி) அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் துஆவின் முக்கியத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார்கள்:
"எப்போதும் துஆ செய்துகொண்டே இருங்கள்; பணிவை உங்களது சுபாவமாக ஆக்கிக்கொள்ளுங்கள். வெறும் சடங்காகவோ அல்லது பழக்கவழக்கத்திற்காகவோ நாவினால் மட்டும் செய்யப்படும் துஆவில் எந்தப் பயனும் இல்லை; அதில் உயிர் இருக்காது. நீங்கள் கடமையான தொழுகைகளைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் தனியான ஓரிடத்திற்குச் சென்று, உங்களது சொந்த மொழியில் ஒரு சாதாரண அடியாரைப் போல மிக மிகத் தாழ்மையுடன் இறைவனிடம் துஆ செய்யுங்கள். 'அகிலங்களின் இறைவனே! நீ எனக்குச் செய்த உபகாரங்களுக்கு என்னால் நன்றி செலுத்த இயலாது'
"நீயோ அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்; உன் எல்லையற்ற உபகாரங்கள் என் மீது உள்ளன. நான் அழிந்துவிடாதிருக்க என் பாவங்களை மன்னித்தருள்வாயாக. நான் உண்மையான வாழ்வைப் பெற்றிட உனது தூய்மையான அன்பை என் இதயத்தில் ஊற்றுவாயாக; எனது குறைகளை மறைத்தருள்வாயாக. உனது திருப்தியைப் பெற்றுத்தரும் செயல்களை என்னைக் கொண்டு செய்விப்பாயாக. உனது கோபம் என் மீது இறங்குவதிலிருந்து உனது கண்ணியமிக்க திருமுகத்தைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன். என் மீது கருணை காட்டுவாயாக; இம்மை மற்றும் மறுமையின் துன்பங்களிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக. ஏனெனில், அனைத்து அருளும் கொடையும் உனது கரங்களிலேயே உள்ளன. ஆமீன், சும்ம ஆமீன்." என்று கூறி அவனிடம் மன்றாடுங்கள்.(நூல்: மக்துபாத்-ஏ-அஹ்மது, பாகம்: 2, கடித எண்: 3, பக்கம்: 158-159)
எனவே வணக்க வழிபாடுகள், துஆ மற்றும் இறை தியானத்தின் போது, தனது ஆன்மாவை உலகியல் மாசுகளிலிருந்து தூய்மைப்படுத்துவதும், வல்லமைமிக்க இறைவனின் முன்னிலையில் பணிவையும் தாழ்மையையும் கையாள்வதும் மிக அவசியமாகும். இத்தகைய முறையில் வணக்கங்களையும் பிரார்த்தனைகளையும் செய்ய நற்பேறு (தவ்பீக்) கிடைக்கும்போது, அவற்றின் மூலம் மிகச்சிறந்த முடிவுகளும் உயரிய கனிகளும் (பலன்களும்) வழங்கப்படும்.
ஒருமுறை ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்கள், ஹஸ்ரத் மௌலானா நூருத்தீன் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் துஆ செய்யும் முறையை விவரிக்கும் போது இவ்வாறு எழுதினார்கள்:
"இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து வுழு (உறுப்புத் தூய்மை) செய்துவிட்டு, சில ரக்அத்களைத் தூய எண்ணத்துடன் நிறைவேற்றுங்கள். பின்னர் மிகுந்த உருக்கத்தோடும் பணிவோடும் இந்த துஆவைச் செய்யுங்கள்:
'எனக்கு உபகாரம் செய்தவனே! என் இறைவனே! நான் உன்னுடைய தகுதியற்ற, பாவங்கள் நிறைந்த, பராமுகமான ஓர் அடியான் ஆவேன். என்னிடமிருந்து நீ அநீதிக்கு மேல் அநீதியையே கண்டாய்; ஆனால் எனக்கோ அருட்கொடைகளுக்கு மேல் அருட்கொடைகளையே வழங்கினாய். என்னிடம் பாவங்களுக்கு மேல் பாவங்களையே கண்டாய்; ஆனால் எனக்கோ உபகாரங்களுக்கு மேல் உபகாரங்களையே செய்தாய். நீ எப்போதும் எனது குறைகளை மறைத்து வந்தாய்; உனது எண்ணற்ற அருட்செல்வங்களைக் கொண்டு எனக்குப் பயனளிக்கச் செய்தாய். இப்போதும் தகுதியற்ற, பாவங்கள் நிறைந்த என் மீது கருணை காட்டுவாயாக! எனது துணிச்சலையும் நன்றி கெட்டத்தனத்தையும் மன்னிப்பாயாக! எனது இந்தத் துயரத்திலிருந்து எனக்கு விடுதலையைத் தந்தருள்வாயாக! ஏனெனில், உன்னைத் தவிர வேறு புகலிடம் எனக்கு இல்லை. ஆமீன், சும்ம ஆமீன்.'(நூல்:மக்துபாத்-ஏ-அஹ்மது, பாகம்: 2, பக்கம்:10)
அதே கடிதத்தின் இறுதியில் அவர் (ஹஸ்ரத் மஸீஹ் மௌஊத் அலை) பின்வருமாறு எழுதியுள்ளார்:
"இந்தத் துஆவை ஓதும்போதெல்லாம், ஒருவன் தனது உள்ளத்தின் முழுமையான ஆவேசத்தோடும் ஈடுபாட்டோடும் தனது பாவங்களை ஒப்புக்கொள்வதும், தனது எஜமானனாகிய இறைவனின் உபகாரங்களை அங்கீகரிப்பதும் முறையானதாகும். ஏனெனில், வெறும் நாவினால் மட்டும் ஓதுவதில் எந்தப் பயனும் இல்லை; மாறாக உள்ளத்தின் உத்வேகமும், மென்மையும், உருக்கமும் (உருகி அழுதல்) வேண்டும். இந்தத் துஆ, இந்த எளியவனுடைய (அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மௌஊத் அலை) வழக்கமான பிரார்த்தனைகளில் ஒன்றாகும்; உண்மையில் இது இந்த எளியவனின் நிலைமைக்கு முற்றிலும் ஏற்றதுமாகும்." (ஆதாரம்: மக்துபாத்-ஏ-அஹ்மது, பாகம்: 2, பக்கம்: 11)
முடிவுரை
சுருக்கமாகச் சொன்னால், தங்களை இறை நேசத்தில் மாய்த்துக் கொள்பவர்களே (ஃபனா) உண்மையில் உயிர் வாழ்பவர்கள் ஆவர். ஏனெனில், அவர்கள் மறுவுலகின் நித்திய வாழ்விலும் இறை நெருக்கத்தைப் பெற்று என்றென்றும் அழியாதவர்களாக மாறிவிடுகின்றனர். சமுதாயத்தின் சான்றோர்கள் தங்களது நற்பண்புகள், தூய்மையான சுபாவம், பணிவு மற்றும் இறைத்தொடர்பு ஆகியவற்றின் மூலம் விட்டுச் சென்றுள்ள அந்தத் தடயங்களை நாம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். நமது நற்செயல்கள் மூலம் நேர்வழியின் தீபங்களை ஏற்றி வைப்பதன் மூலம், இருள் விலகி நன்மையும் இறையச்சமும் (தக்வா) கொண்ட இப்பயணம் என்றென்றும் தொடர வேண்டும்.
Source: https://alfazl.com/print_edition/الفضل-انٹرنیشنل-۱۹؍-اگست-۲۰۲۴ء/
