ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஏற்கனவே அந்த பிராந்தியத்தைத் தாண்டி வெகுதூரம் உணரப்படுகிறது. மேற்கிலும் கிழக்கிலும், இதன் விளைவுகள் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன - குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிசக்தி கட்டணங்களை உயர்த்தும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு, நமது பணப்பைகளை நேரடியாகப் பாதிக்கின்றன.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தற்போதைய கலீஃபா, ஹஸ்ரத் மிர்சா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலகளாவிய போர் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரித்து வந்தார். பெரும்பாலும் இது ஒரு அவநம்பிக்கையான கருத்தாகவே நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், இன்று "மூன்றாம் உலகப் போர்" என்பது வெறும் பேச்சல்ல; அது முக்கிய அரசியல் விவாதங்களின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
இதனுடன், அவர் தொடர்ந்து ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்தினார்கள்: சிறிய, பிராந்திய மோதல்கள் கூட ஒரு எல்லைக்குள் நின்றுவிடாது, மாறாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த "உலகளாவிய கிராமத்தில்" (Global Village) அவை மிக விரிவான விளைவுகளை ஏற்படுத்தும்.
அந்த எச்சரிக்கை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. இப்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் விளைவுகள் அந்த பிராந்தியத்திற்கு அப்பால் உணரப்படுவதால், அது நிஜமாகவே அரங்கேறி வருகிறது.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, லண்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் எச்சரித்தார்கள்:
"உலகம் ஒரு உலகளாவிய கிராமமாக மாறிவிட்டது, எனவே பரஸ்பர மரியாதை இல்லாமையும், அமைதியை மேம்படுத்த ஒன்றிணையத் தவறுவதும் அந்த உள்ளூர் பகுதி, நகரம் அல்லது நாட்டை மட்டும் பாதிக்காது, மாறாக அது இறுதியில் முழு உலகத்தின் அழிவிற்கும் வழிவகுக்கும்." (World Crisis and The Pathway To Peace, 2017, p. 149)
அன்னார் கூறினார்கள்: "[...] உள்ளூர் போர்களில் இருந்துதான் பேரழிவும் அழிவும் தூர இடங்களுக்கும் பரவுகிறது என்ற முக்கியமான விஷயத்தை தலைவர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்." (மேற்படி நூல், பக். 162)
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், தூரம் என்பது எந்தப் பாதுகாப்பையும் வழங்காது என்று ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் வலியுறுத்தினார்கள். ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதல், அதன் விளைவுகள் அதன் பிறப்பிடத்தைத் தாண்டி வெகுதூரம் உணரப்படும் வரை தவிர்க்க முடியாமல் பரவுகிறது.
2015-ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நவீனப் போர்முறை குறித்துப் பேசும்போது அன்னார் கூறினார்கள்:
"உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மோதல்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது உள்ளூர் அளவில் மட்டும் நின்றுவிடாது, மாறாக அவற்றின் விளைவுகளும் பாதிப்புகளும் மிகத் தூரம் பரவும். [...] பழைய காலங்களில், ஒரு போர் நேரடியாக ஈடுபடுபவர்களுடன் மட்டுமே முடிந்துவிடுவது சாத்தியமாக இருந்தது, ஆனால் இப்போது ஒவ்வொரு மோதலின் மற்றும் ஒவ்வொரு போரின் விளைவுகளும் உண்மையிலேயே உலகளாவியவை. உண்மையில், ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் போரின் விளைவுகள் உலகின் பிற பகுதிகளின் அமைதியையும் இணக்கத்தையும் பாதிக்கும் என்பதை உலகம் உணர வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறேன்." (மேற்படி நூல், பக். 191)
நிகழ்வுகள் சரியாக அதே பாணியையே பின்பற்றுகின்றன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குள், உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் உலகளாவிய முக்கியப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தியை' (Strait of Hormuz) ஈரான் கட்டுப்படுத்தத் தொடங்கியது; இது உலகளாவிய எரிசக்தி ஓட்டத்தில் சுமார் 20% பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) படி, இந்த இடையூறு காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் 50% க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாகச் சென்றது.
உலகத் தலைவர்கள் இப்போது இதன் விரிவான விளைவுகள் குறித்து எச்சரித்து வருகின்றனர். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில்:
"நாம் ஓர் உலகளாவிய திருப்புமுனையில் நிற்கிறோம். மேலும் போர் தீவிரமடைந்தால் அது மனிதகுலம் முழுமைக்கும் நீண்டகால எரிசக்தி நெருக்கடியைத் தூண்டும். இந்தப் போரின் விளைவுகளுக்கு உலகம் விலை கொடுக்கக்கூடாது."
இந்த இடையூறு கப்பல் போக்குவரத்து பாதைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் உள்ளிட்ட முக்கிய எரிசக்தி தளங்களைத் தாக்கின; அதே நேரத்தில் அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான 'கார்க் தீவைச்' (Kharg Island) சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தன.
இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், பிராந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களும் இலக்குகளாக மாறக்கூடும் என்று எச்சரித்தது.
இந்த மோதல் ஏற்கனவே மேலும் பரவியுள்ளது. உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு (LNG) உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம், உற்பத்தியை நிறுத்த கட்டாயப்படுத்தியது, இது உலகளாவிய விநியோகத்தில் பெரும் பங்கை ஆபத்தில் ஆழ்த்தியது.
இந்த மாற்றங்கள் ஏற்கனவே அன்றாட வாழ்க்கையில் உணரப்படுகின்றன. ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன, குறிப்பாக இங்கிலாந்து சந்தை மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
வீடுகளைப் பொறுத்தவரை, இது மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு கட்டணங்களின் உயர்வை குறிக்கிறது. வணிகங்களைப் பொறுத்தவரை, உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதைக் குறிக்கிறது – இறுதியில் இந்த விலையேற்றத்தின் சுமை சாதாரண மக்களின் தலையிலேயே விழுகிறது.
உலகளாவிய உணவு விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். நவீன விவசாயம் உரங்களை நம்பியுள்ளது, உரங்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. எரிவாயு விலைகள் உயரும்போது அல்லது விநியோகம் தடைபடும்போது, உரங்கள் அதிக விலையுடனும், உற்பத்தி செய்ய கடினமானதாகவும் மாறுகின்றன.
அதே நேரத்தில், உலகின் உர வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்வதால், விநியோகம் நேரடியாகத் தடுக்கப்படுகிறது. எனவே அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் உலகச் சந்தைகளை உரங்கள் சென்றடைவதைக் குறைக்கும்.
சீனா போன்ற முக்கிய உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதால் உர விநியோகம் மேலும் நெருக்கடிக்குள்ளாகிறது.
இதன் முடிவு எளிமையானது: விவசாயிகளுக்குக் குறைவான உரமே கிடைக்கிறது, அதற்கும் அவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள். அவர்கள் உரக் குறைப்பால் விளைச்சல் குறைகிறது. உணவுப் பொருட்கள் விலை உயர்கின்றன.
ஹஸ்ரத் மிர்சா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த அதே பாணி இதுதான். ஆனால் அண்ணாரது எச்சரிக்கை என்ன நடக்கும் என்று கூறுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை, அதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியது.
உலகளாவிய உறுதியற்ற தன்மை என்பது நீதியை நிலைநாட்டத் தவறுவதிலேயே வேரூன்றியுள்ளது என்பதை அன்னார் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். அன்னாரது வார்த்தைகளில்:
"[...] அனைத்து தரப்பினரும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும்போது மட்டுமே நீதியின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன." (World Crisis and The Pathway to Peace, 2017, p. 163)
மேலும் அன்னார் தெளிவாக எச்சரித்தார்கள்:
"நீதியின் தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த உள்ளூர் போர்களின் தீப்பொறிகள் தீவிரமடைந்து முழு உலகத்தையும் ஆட்கொள்ளும்." (மேற்படி நூல், பக். 12)
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் நீதியின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை என்பதும், அதன் விளைவு முழு உலகிற்கும் அமைதி இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது.
உலகளாவியமயமாக்கப்பட்ட உலகில், போர்கள் எங்கு தொடங்குகிறதோ அங்கேயே இருப்பதில்லை; விநியோகச் சங்கிலிகள் மூலமாகவோ அல்லது நவீன நீண்ட தூர ஆயுதங்கள் மூலமாகவோ அவை நமது உலகளாவிய கிராமம் முழுவதும் பரவுகின்றன என்பதை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எச்சரிக்கப்பட்டது போலவே: இதன் விளைவுகளில் இருந்து எவரும் தப்ப முடியாது.
Source:https://www.alhakam.org/us-israel-strikes-on-iran-war-everyones-problem

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None