தாடி | முஸ்லிமிற்கான ஓர் அடையாளம்

தாடி என்பது இஸ்லாத்தை ஏற்றுள்ள ஒரு முஸ்லிமின் அங்க அடையாளங்களில் ஓர் அடையாளமாக திகழ்கிறது. இன்று முஸ்லிம்களின் பலர் இதனை சரியான முறையில் கடைபிடிப்பதில்லை. சிலர் நிர்பந்தத்தின் அடிப்படையில் வைக்காமல் இருக்கின்றனர். சிலர் தாடியை ஒரு பேஷனாக வைத்து வருகின்றனர். சிலர் தாடி வைப்பது நமது முகத்திற்கு அழகானதாக தென்படுவதில்லை என்பதை கருதி அதனை சிரைத்து விடுகின்றனர். சிலர் தாடி இல்லாததற்கு சமமானதாக வைக்கின்றனர். நாம் கீழே தாடியை குறித்து இஸ்லாம் கூறும் வழி என்ன என்பதை காண்போம்.
அல்லாஹ் கூறுகின்றான்: நீர் கூறுவீராக, [மக்களே ] நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயின் என்னைப் பின்பற்றுங்கள். [அப்போது தான்] அல்லாஹ்[வும்] உங்களை நேசிப்பான். உங்களுடைய பாவங்களை மன்னிக்கவும் செய்வான், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மீண்டும் மீண்டும் அருள் செய்பவனுமாவான். (3:32)
இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன் என்று வாதம் செய்பவராக இருந்தால் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும் அல்லாமல் அல்லாஹ்வை நான் நேசிக்கிறேன் என்று வெறும் வாதம் செய்வதினால் அது உண்மையாகி விடாது என்று கூறுகிறான்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் என்னென்ன விஷயங்கள் தமது வாழ்க்கையில் பேணி வந்தார்களோ அல்லது எதனை செய்யும்படி கூறினார்களோ அதனை பின்பற்றுவது, அதனை கடைபிடிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் நடைமுறையாக இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பேணி வந்த பல்வேறு வழிமுறைகளில் "தாடி வைப்பது" ஒரு வழி முறையாக இருந்து வந்துள்ளதை நாம் ஹதீஸின் வாயிலாகவும், சுன்னத்தின் வாயிலாகவும் அறிய முடிகிறது. தாடியை குறித்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒரு சில ஹதீஸ்களை நாம் கீழே காண்போம்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை கத்தரியுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 5892

மீசையை கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 435
இவ்வாறான பல ஹதீஸ்கள் ஹதீஸ் நூட்களில் இடம்பெறுகின்றன. தற்போதுள்ள முஸ்லிம்கள் இவ்வாறான ஹதீஸை வைத்துக் கொண்டு மீசையை சுத்தமாக வழித்து விட்டு அல்லது ஒட்டாக நறுக்கி விட்டு தாடியை வெட்டாமல் விட்டு விடுகின்றனர். இது ஹதீஸை புரியாமல் முல்லாக்களின் அறிவற்ற செயலாக இருந்து வருகிறது. ஹதீஸிற்கு மொழி பெயர்க்கும்போது "மீசையை ஓட்ட நறுக்க வேண்டும்" என்று மொழி பெயர்த்துள்ளனர். மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்ற மொழிபெயர்ப்பு தவறாகும். அந்த ஹதீஸில் "இஹ்ஃபூ" என்று வந்துள்ளது அதாவது நறுக்குதல் அல்லது சீராக்குதல் என்பதாகும். ஆக மீசையை உதடின் மீது அல்லது வாய் பக்கம் வராத அளவு சீர் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும். அல்லாமல் ஒட்ட நறுக்கி குரங்கு மாதிரி அலைய வேண்டும் என்பது பொருள் அல்ல. மீசையை தாடியை போன்று வளர விட்டால் அது அசுத்தம் ஆகும். உணவு உண்ணும் போது உணவோடு அசுத்தமும் வாயிற்குள் செல்லும். இதன் அடிப்படையிலேயே ரசூல் (ஸல்) அவர்கள் அந்த மீசையை கத்தரித்து கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளார்களே தவிர ஒட்ட நருக்குங்கள் என்று சொல்லவில்லை. 
இந்த ஹதீஸிற்கு விளக்கமாக ஷரஹ் முஸ்லிம் ஹதீஸில் மீசையை உதடு மேல் வராத அளவுக்கு கத்தரியுங்கள், சீர் செய்யுங்கள் என்று வந்துள்ளது. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் ஷரஹ் அன் நவ்வி பாடம் "தஹாரத்" (தூய்மை) ஹதீஸ் நம்பர் 5667.)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மை சீடரான ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தாடியை குறித்து தமது ஜமாஅத்திற்கு என்ன போதனை வழங்கியுள்ளார்கள் என்பதனை நாம் கீழே காண்போம்.
அரப் நாட்டை சார்ந்த சிலர் தாடியை குறித்து கேட்டார்கள்; ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபரின் உள்ளத்தின் எண்ணமாக இருக்கிறது; சிலர் தாடி மீசையை வலித்து விடுவதை அழகென கருதுகின்றனர். ஆனால் நமக்கு இவ்வாறானவர்கள் முன்னில் வருவது முற்றிலும் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. (இவ்வாறான நபர்கள் முன்பு வந்தால்) உணவு உண்பதை (கூட) மனம் விரும்புவதில்லை. தாடியை குறித்து நபிமார்களும், நல்லடியார்களும் என்ன வழிமுறையை கையாண்டார்களோ அது மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கிறது. ஆம், தாடி மிக நீண்டதாக இருக்கிறது என்று சொன்னால் அதனை ஒரு பிடி அளவு வைத்துவிட்டு (மற்றவற்றை) வெட்டி விட வேண்டும். இறைவன் ஓர் ஆண் மற்றும் பெண்ணிற்கு இடையில் ஓர் வித்தியாசத்தை அமைத்துள்ளான். (பத்ர் 31 - அக்டோபர் 1907 பக்கம் 7 & பத்ர் 6 - பிப்ரவரி 1903 பக்கம் 21)
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் என்ன செய்து வந்தார்களோ அதையே நமது ஜமாஅத்தின் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் செய்து வந்ததை நாம் எமது கண்களினால் கண்டுள்ளோம். ஒரு முறை ஒரு நபர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் முன் வந்து உங்களின் ஜமாஅத்தில் சிலர் தாடியை வலித்துவிடுகின்றனரே. இது விரும்பத்தக்க செயல் அல்லவே என்று ஆட்சேபனை செய்தார். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறினார்கள், "எப்போது இவர்களின் உள்ளங்களில் முழுமையான அன்பு உருவாகிவிடுமோ அப்போது நான் தாடி வைப்பதை கண்டு அவர்களும் தானாகவே வைக்க தொடங்கிவிடுவர். பிறகு வேறு எந்தவித அறிவுரையும் அவர்களுக்கு தேவைப்படாது. (அன்வாருல் உலூம் பாகம் 15 பக்கம் 27)
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் மன் தஷப்பஹூ பிகவ்மின் என்பதற்கு விளக்கம் அளித்தவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இன்றைய காலம் எவ்வாறான காலமாக இருக்கிறது என்று சொன்னால், இ(ந்த காலத்)தில் கிறித்தவர்கள் உள்ளத்தை காஃபிராகா ஆக்கவில்லை என்றாலும் மனிதர்களின் முகங்களை காஃபிராகா மாற்றிவிட்டார்கள். பல்வேறு இளைஞர்கள் இந்த நோயில் அகப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய நாகரீகம் மற்றும் மேற்கத்திய பண்பாட்டின் ஆர்வலராக மாறி வருகின்றனர். அவர்கள் தமது தலைமுடி, தமது தாடி மற்றும் தமது ஆடைகளில் மேற்கத்தியர்களை பின்பற்றுகின்றனர். இவ்வாறு இறுதியாக அவர்களின் முகங்கள் காஃபிர்களை போன்று மாறிவிடுகின்றன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், "மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும்" அதாவது எவரொருவர் தமது வெளிதோற்றத்தை மாற்று சமுதாயத்தவர்களைப் போன்று அமைத்துக் கொள்கின்றாரோ அவர் எம்மை சார்ந்தவரில்லை. அதாவது நாம் எவராவது ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றம் ஹிந்து அல்லது கிறித்தவர்களை போன்றதாக தெண்பட்டால் அவர்மீது எமக்கு நம்பகத்தன்மை வருவதில்லை. இவ்வாறு பொறுப்புள்ள ஒரு பணியினை அவர்களிடம் ஒப்படைக்க முடியாதது கட்டாயமான ஒரு விஷயமாக ஆகிவிடுகின்றது. இவ்வாறு அவர்கள் பல்வேறு நன்மையான காரியங்களை செய்வதிலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆகவே நான் இளைஞர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால், அவர்கள் மூமீனான உள்ளங்களையும், மூமீனான தோற்றங்களையும் அமைத்துக் கொள்ளுங்கள். மேற்கத்தியவர்களை பின்பற்றுவதை விட்டுவிடுங்கள். நான் கடந்த வருடமும் கூறியிருந்தேன் அதாவது, உங்களது பணியானது மேற்க்கத்திய நாகரீகத்தை அழித்துவிடுவதாக இருக்க வேண்டும். இதற்கு பதிலாக இஸ்லாமிய போதனை, இஸ்லாமிய நடைமுறைகள், இஸ்லாமிய பண்பாட்டை, இஸ்லாமிய நாகரீகத்தை நிலை நாட்டுங்கள். 
(மஷ்அலே ராஹ் பாகம் 1 பக்கம் 338-339)
மேலும் கூறுகின்றார்கள்:
"நான் இளைஞர்களின் முகங்களிலிருந்து தாடி மறைந்து செல்வதை காண்கிறேன். அவர்கள் அதனை நாளுக்கு நாள் சிறிதாக்கி கொண்டே செல்கிறார்கள். எவர்கள் முழுவதுமாக வலித்து வந்தார்களோ அவர்களுக்கே நாம் சிறிதாக தாடியை வைத்துக் கொள்ளுங்கள் முழுவதுமாக வலிக்காதீர்கள் என்று கூறினோம். இது அவர்களுக்காக மட்டுமே அனுமதியாக இருந்தது. ஆனால் இதை மற்றவர்களும் செய்ய துவங்கிவிட்டனர். எவர்கள் தாடியை பெரியதாக வைத்து வந்தார்களோ அவர்களில் சிலரும் கூட இந்த அனுமதியை கொண்டு பலன் பெற்றவாறு (தமது தாடியை) சிறிதாக்கி கொண்டனர். ஆனால் இந்த அனுமதியோ பலகீனமானவர்களுக்காக மட்டுமே ஆகும். நாம் இவ்வாறு அனுமதி வழங்கி வந்துள்ளோம் என்றால் அதன் பொருள், எவர் வலித்து வந்தார்களோ அவர்கள் சிறிதாக தாடியை வைத்து வந்த பிறகு நாம் அவர்களுக்கு சிறிது உங்களது தாடியை நீண்டதாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவோம். பிறகு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாடியை பெரியதாக வைப்பதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். ஆனால் இந்த அனுமதியை தலைகீழாக புரிந்து கொண்டு சிலர் தாடியை நீண்டதாக வைக்காமல் சிறிதாக்கிக் கொண்டனர்.....ஆகவே நான் குத்தாமுல் அஹ்மதிய்யா மற்றும் அன்ஸாருல்லாஹ் இருவருக்கும் கவனமூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அவர்கள் தத்தமது ஹல்காவில் தாடியை குறித்து அதிகமாக பிரச்சாரம் செய்யுங்கள். எவர்கள் தாடியை வலித்து வருகின்றார்களோ அவர்கள் சிறியதாக தாடி வைப்பதற்கான முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள். மேலும் எவர்கள் தாடியை சிறியதாக வைத்துள்ளனரோ அவர்கள் ஒரு இன்ச் அல்லது இரண்டு அரை இன்ச் அதிகரிக்க வேண்டும் இவ்வாறு இதில் முன்னேற்றம் ஏற்பட்டு அனைவரின் தாடியும் உண்மையான தாடியாக மாறிவிட முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள். இஸ்லாத்தின் அனைத்து கட்டளைகளிலும் ஏதேனும் ஒரு ஹிக்மத் இருக்கின்றது. இதே போன்று ஒவ்வொரு கட்டளைகளிலும் ஏதேனும் பலன் இருக்கத்தான் செய்கின்றது. எந்த கட்டளையும் பலன் இல்லாமல் இல்லை. தாடி வைப்பதிலும் பல்வேறு ஹிக்மத் மற்றும் பலன்கள் இருக்கின்றன. இது உடலளவிலும் நற்பலனை தரக்கூடியதாக இருக்கின்றது. மேலும் ஜமாஅத்த்தின் அமைப்பிற்காகவும் அதிக பலனுள்ளதாக இருக்கின்றது.....இவ்வாறு நமது ஜமாஅத்திலும் இஸ்லாத்தின் அடையாளத்தை நிலைநாட்டக் கூடிய உணர்வு உருவாகிவிடும். இதில் வலுவாக செயல்படத் தொடங்கி விடுவர். இவ்வாறு மக்களின் உள்ளத்தில் இதனால் திகில் நிச்சயமாக உருவாகின்றது. இவர் தமது கொள்கையில் உறுதியாக இருப்பவர், வேறெவர் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை கொள்ளமாட்டார்கள், தாடி விஷயத்தில் இவர்கள் எந்த அளவுக்கு வலுவாக செயல்படுகிறார்களோ அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மற்ற கட்டளைகளின்படியும் ஏன் செயல்பட மாட்டார்கள்!? நாம் இவர்களின் மார்க்க விஷயத்தில் மூக்கை நுழைத்தால் இவர்கள் மரணம் அடைந்து விடுவார்கள் ஆனால் தமது கூற்றை (தமது கொள்கையை) முழுமையாக்கியே தீர்வார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள துவங்கி விடுவர்.
இதற்கு நேர் எதிராக நீங்கள் மக்களின் பேச்சை கேட்டு அல்லது அவர்களின் கேலி கிண்டலின் காரணத்திற்காக தாடியை வலித்தோ அல்லது சிறிதாக்கி வருவதை அம்மக்கள் கண்டால் "இவர்கள் உலக விஷயங்களை கண்டு அஞ்சி விடுவார்கள், இவர்கள் அரசு சட்டங்களை கண்டும், போலீசின் லாட்டியை கண்டும் ஏன் பின் வாங்க மாட்டார்கள் என்று நினைக்க துவங்கி விடுவார்கள்.
ஆகவே நீங்கள் தாடி விஷயத்தில் பலகீனத்தை காட்டினால் அது ஜமாஅத்தின் திகில் மற்றும் (நல்ல) தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு காரணமாக அமையாது மாறாக திகில் மற்றும் நற்தாக்கத்தை குறைப்பதற்கு காரணமாகவே அமையும்......நீங்கள் தாடி வைப்பீர்கள் என்றால், உலகத்தில் இஸ்லாத்தின் திகில் நிலைபெற ஆரம்பமாகிவிடும். இந்த நாத்திக வாழ்க்கையில், இவ்வாறான தத்துவ நிறைந்த காலத்தில், சொகுசு மற்றும் இன்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில், தாடியை கண்டு எள்ளி நாகையாடும் இந்த உலகத்தில் இவ்வாறான மக்கள் இஸ்லாத்தின் இந்த காட்டளையின்படி அமல் செய்கின்றார்களே! இவர்கள் வேறெவரின் முகத்தை கண்டு கவலை கொள்வதில்லை. உண்மையில் இவர்களின் உள்ளத்தில் இஸ்லாமை குறித்து வலி இருக்கின்றது, மேலும் இவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளையின்படியே நடந்து வருகின்றனர் என்ற எண்ணம் மக்களின் உள்ளத்தில் உருவாகும். (அல்-ஃபஸ்ல் | 2 பிப்ரவரி 1947)

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவர் இவ்வாறு கூறுகின்றார், “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.
நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர். குறிப்பாக நம் முஸ்லிம் சமுதாயமே இந்த சுன்னத்தை விட்டு விட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மற்றும் அவனது தூதரின் எதிர்பார்ப்பிற்கிணங்க செயல்படக்கூடிய நல்வாய்ப்பை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.