وَعَدَ اللہُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا
الصّٰلِحٰتِ لَيَسْتَخْلِفَنَّہُمْ فِي الْاَرْضِ كَـمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ
مِنْ قَبْلِہِمْ وَلَيُمَكِّنَنَّ لَہُمْ دِيْنَہُمُ الَّذِي ارْتَضٰى
لَہُمْ وَلَيُبَدِّلَنَّہُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِہِمْ اَمْنًاۭ
يَعْبُدُوْنَنِيْ لَا يُشْرِكُوْنَ بِيْشَـيْئًاۭ وَمَنْ
كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰئِكَ ہُمُ الْفٰسِقُوْنَ
(அதிகாரம்
அந்நூர் : வசனம் 56)
பொருள்:-(முஸ்லிம்களே!)
உங்களில் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளக்கூடியவர்கள் மற்றும் நற்செயல்கள்
செய்யக்கூடியவர்களிடம் இறைவன் அவர்களுக்கு
முன்னிருந்த மக்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் நற்செயல்கள்
செய்யக்கூடியவர்களில் கிலாஃபத்தை நிலைபெறச் செய்தது போன்று அவர்களையும் பூமியில் கலீஃபாவாகஆக்கி
கொண்டே இருப்பான் என வாக்குறுதி அளித்துள்ளான். அவன் விரும்பிய மார்க்கத்தை
அவர்கள் மூலமாக நிலைபெறச் செய்வான்.
இவ்வாறு அவர்களது அச்சத்தை அமைதியில் மாற்றுவான். அவர்கள் என்னை வணங்குவார்கள்; எனக்கு யாரையும் இணையாக்க மாட்டார்கள். எவர்கள் இதன் பிறகு
நிராகரிப்பார்களோ மேலும் மறுப்பார்களோ
அவர்கள் கட்டுப்படாதவர்களை சார்ந்தவராவார்கள்.
(மொழியாக்கம் மிஷ்காத் கிலாஃபத்தே அஹ்மதிய்யா ஜூப்லி நம்பர் 1908-2008
பக்கம் 87)
சகோதரர்களே!
அல்லாஹ்வுடைய தொடர் நடைமுறை என்னவெனில், மனிதனுக்கு வாழ்வின் நோக்கத்தைப்பற்றி தெரிவிப்பதற்கும் அவர்களுக்கு
வாழ்வின் நோக்கமாகிய இறைவழிபாட்டினைப் பற்றி அறிவிப்பதற்கும், அவர்களது நல்லொழுக்க மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலுக்காக ஒவ்வொரு
காலகட்டத்திலும் நபிமார்களை அனுப்புகின்றான்.
இந்த நபிமார்களும்,ரஸூல்மார்களும்,‘இன்னி ஜாயிலுன் ஃபில் அர்ளி கலீஃபா”(நான்
பூமியில் கலீஃபாவை ஏற்படுத்தபோகிறேன்) என்பதற்கேற்ப இறைவனின் பிரதிநிதியாகவும்
கலீஃபாவாகவும் வருகிறார்கள். இறைவனால் அனுப்பட்ட இவர்கள் நன்மை மற்றும் இறையச்சம்
கொண்ட ஜமாஅத்திற்கான அடித்தளத்தை அமைத்து விட்டு இவ்வுலகை விட்டு சென்று
விடுகிறார்கள். அதன் பிறகு இறைவன் அவர்களது வருகையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக
கிலாஃபத் அலா மின்ஹாஜின் நுபுவ்வத் அதாவது நுபுவ்வத் வழியில் கிலாஃபத்தை நிலை
நிறுத்துகின்றான். இது நுபுவ்வத் காலத்தின் நிறைவுப் பகுதியாகும். இது தொடர்பாக நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
மாமின்நுபுவ்வத்தின் கத்து இல்லா தபிஅத்ஹா
கிலாஃபத்துன் (கன்ஸுல் உம்மால் தொகுதி 3
பக்கம் 119)அதாவது ஒவ்வொரு நுபுவ்வத்திற்குப்
பிறகு அதனை பின்பற்றியவாறு கிலாஃபத் தொடர்கிறது.
இவ்வாறு உண்மைத்தூதர் முஹம்மது முஸ்தஃபா
(ஸல்) அவர்கள் இறைவனது இந்த மகத்தான வாக்குறுதியின் அடிப்படையில் முஹம்மதிய்ய
உம்மத்தில் தனக்குப் பிறகு வெளிப்படக்கூடிய நிலைமைகளைக் குறித்து இவ்வாறு
முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அன்னார் கூறுகிறார்கள்:
“இறைவன் நாடும் வரை
உங்களிடத்தில் நுபுவ்வத் நிலைபெற்றிருக்கும். பிறகு அவன் அதை எடுத்துக்கொள்வான்.
பிறகு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் நிலைபெறும். பிறகு அல்லாஹ் நாடும்போது அந்த
அருளையும் எடுத்துக்கொள்வான். பிறகு அவனது நியதிக்கேற்ப கொடுமையிழைக்க கூடிய ஆட்சி
நிலைபெறும். இந்த காலகட்டம் முடிவு பெறும். பிறகு அவனது இரண்டாவது நியதிக்கேற்ப
அதனைவிட அதிகமாக கொடுமையிழைக்கக் கூடிய ஆட்சி நிலைபெறும். எந்தளவுக்கென்றால்
அல்லாஹ்வுடைய கருணை பொங்கி எழும். பிறகு இறைவன்
அந்த அநீதியின் காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவான். அதன் பிறகு நுபுவ்வத்
வழியிலான கிலாஃபத் நிலை பெறும். அதன் பிறகு அன்னார் அமைதியாகி விட்டார்கள்.
(முஸ்னது அஹ்மது பின்
ஹம்பல்)
சகோதரர்களே!
இஸ்திக்லாஃப் (கிலாஃபத் பற்றிய) வசனத்தில்
அல்லாஹ் அளித்த வாக்குறுதி மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
முன்னறிவிப்பிற்கேற்ப நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹஸ்ரத் அபூபக்ர் சித்தீக்
(ரலி) அவர்கள் மூலமாக நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் நிலை பெற்று ஹஸ்ரத் அலி (ரலி)
அவர்களுடன்முடிவுற்றது. நுபுவ்வத் வழியிலான கிலாஃபத்தின்இந்த குறுகிய காலத்தில்
கிலாஃபத்துடன் இணைந்திருந்த முஸ்லிம் உம்மத்திற்கு ஆன்மீக மற்றும் நல்லொழுக்க
அடிப்படையில் மட்டும் வெற்றி கிடைக்கவில்லை; மாறாக, அல்லாஹ்வுடைய உதவி மற்றும் ஆதரவுடன் கிலாஃபத்துடன் இணைந்திருந்த
காரணத்தால் மிகப்பெரிய வளமிக்க சமுதாயங்களின் உள்ளங்கள் வெற்றி கொள்ளப்பட்டன. இதற்கு ஈரானின்
மாளிகைகளும், சிரியாவின் வளங்களுமே சாட்சியாகும். அதில்
வசிக்கக்கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது தரூது ஓதக்கூடியவர்கள்
ஆகிவிட்டனர். ஆனால் உண்மையான இஸ்லாமிய கிலாஃபத்திற்கு கண்ணியமளிக்காததன் காரணமாக
முஸ்லிம் உம்மத்திலிருந்து இந்த மாபெரும் அருள் எடுக்கப்பட்டது. இதன் பிறகு
கிலாஃபத்தின் பெயரில் தீமையிழைக்க கூடிய, அநீதியிழைக்க கூடிய
ஆட்சியின் காலத்தில் முஸ்லிம் உம்மத் வளர்ச்சிக்கு பகரமாக வீழ்ச்சியும், ஒற்றுமைக்கு பகரமாக பிளவுபட்டும் விட்டனர். பிறகு இந்த உம்மத்தின்
பொதுமக்களிலும்,சிறப்பானவர்களிலும் பெரும்பான்மையினர் உண்மையான ஈமான் மற்றும் நல்செயல்களுக்குப் பிறகு
தீமையில் மூழ்கியதன் காரணமாக ஹிஜ்ரி 656-ல்
இந்த பெயரளவிலான கிலாஃபத்தின் ஆட்சி பக்தாதின் ஹலாக்கு கானின் கையில் அழிந்தது.
ஹலாக்கு கானின் தாதாரின் படை நாற்பது நாட்கள் தொடர்ந்து பக்தாத் நகரத்தை சூரையாடிக்கொண்டே
இருந்தது மேலும் மக்களை கொன்று குவித்தது. அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கூட
விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு நோயாளிகளின் மீதும் இரக்கம் வரவில்லை; முதியோர் மீதும் இரக்கம் வரவில்லை.பக்தாதின் தெருக்களில் இரத்தம்
தண்ணீரைப் போன்று ஓடிக்கொண்டிருந்தது. நாலாப்புறமும் பிணங்களின் குவியலை தவிர
வேறெதுவும் தென்படவில்லை. தாதாரிகளின் கைகளில் பக்தாத் நகரத்தில் மட்டும் 16
இலட்சம் முஸ்லிம்கள் மரண உறக்கம் உறங்க வைக்கப்பட்டனர்.
அது பற்றி கூறப்படுவதாவது,பக்தாத்
நகரத்தில் தனிமையில் ஒரு பெரியவர் இந்த முஸ்லிம்களின் மீது கருணை
காட்டப்படுவதற்காக இறைவனிடம் துஆ செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பெரியவருக்கு
திரும்ப திரும்ப இறைவனிடமிருந்து இவ்வாறு பதில் வந்தது:யா அய்யுஹல்குஃப்ஃபாரு.
உக்துலுல் ஃபுஜ்ஜார்.அதாவது காஃபிர்களே! இந்த தீய முஸ்லிம்களை கொல்லுங்கள்.
வமன்
கஃபரா பஃத தாலிக் ஃபவுலாயிக்க ஹுமுல் ஃபாஸிகூன். (எவர்கள் இதன் பிறகு
நிராகரிப்பார்களோ மேலும் மறுப்பார்களோ அவர்கள் கட்டுப்படாதவர்களை
சார்ந்தவராவார்கள்.) என்பது உண்மைதான். உண்மையான கிலாஃபத்தினை மறுக்க கூடிய
தீயவர்களுக்கு இந்த முடிவுதான் ஏற்படும்.
அடுத்து இந்த வேதனைமிகுந்த அழிவிற்குப்
பிறகு சில காலம் சம்பிரதாயமான கிலாஃபத் தொடர்ந்தது. அதுவும் முதல் உலகப்
போருக்குப் பின்னர் தனது முடிவை எட்டியது.
துருக்கி ஆட்சி மற்றும் கிலாபத்தே
உஸ்மானியா என பெயர் கொண்ட இந்த சம்பிரதாய கிலாஃபத் தனது முடிவை எட்டிக்கொண்டிருந்த அந்த
நேரத்தில் இறைவனது கருணை பீரிட்டெழுந்தது. இஸ்லாத்தின் மூழ்கிக் கொண்டிருக்கும்
கப்பலை எதிரிகளின் புயல் மற்றும் பகைவர்களின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றவும்
இஸ்லாத்தின் மறைந்து போன மகத்துவத்தை சீர் செய்யவும் அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் ஆன்மீகப் புதல்வர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களை
வாக்களிக்கப்பட்ட மஸீஹாக அனுப்பினான். அவர்கள் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் முன்னறிவிப்பிற்கேற்ப நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் மீண்டும் தோன்றியது.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் தமது
மரணத்திற்கு முன்பு தமது ஜமாஅத்திற்கு இரண்டாவது வல்லமையின் வெளிப்பாடு குறித்து
நற்செய்தியை வழங்கினார்கள். அதாவது இந்தத் தொடர் கியாமத் வரை முடிவுறாது. இந்த
இரண்டாவது வல்லமை ஜமாஅத்துடன் எப்போதும் இருக்கும் . அன்னார் கூறுகின்றார்கள்
:- ஆகையால் உங்கள் மீது என்னை விட்டுப் பிரியும் நாள் வருவது அவசியமாகும்
ஏனென்றால் அதன் பின்னர் நிலையாக இருக்கக் கூடிய அந்த காலம் வரும். நான் இறைவன்
புறமிருந்து ஒரு வல்லமையின் வடிவில் தோன்றியுள்ளேன். நான் இறைவனின் ஒரு முழுமையான
வல்லமையாவேன்.எனக்குப் பிறகு வேறு சிலர் வருவார்கள். அவர்கள் இரண்டாவது வல்லமையின்
வெளிப்பாடு ஆவார்கள். (அல்வஸிய்யத். ரூஹானீ கஸாயின் தொகுதி 20
பக்கம் 306)
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின்
மரணத்திற்குப் பிறகு அவனது வாக்குறுதிக்கேற்ப நல்லடியார்களின் கூட்டத்தில் 27
மே 1908-ல் சய்யிதுனா நூருத்தீன்
(ரலி) என்ற ஒருவரின் கையில் இணைந்தது. இவ்வாறு இரண்டாவது வல்லமை வெளிப்பட்டது.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கிலாஃபத்தின் அருள்களிலிருந்து பயனடைய ஆரம்பித்தது.
அஹ்மதிய்யா ஜமாஅத் முதல்
கிலாஃபத்திற்குப் பிறகு இரண்டாவது கிலாஃபத், மூன்றாவது
கிலாஃபத், நான்காவது கிலாஃபத் மற்றும் தற்போது ஐந்தாவது
கிலாஃபத்தின் அருளுக்குரிய காலத்தினை கடந்து கொண்டிருக்கின்றது-அல்ஹம்து லில்லாஹ்.
இதனுடன் அன்பான மற்றும் ஞானமிக்க இறைவன் இணைந்திருப்பதற்கான வாக்குறுதி உள்ளது.
மேலும் கிலாஃபத்தின் இந்த 109 வருடம் இஸ்திக்லாஃப் வசனத்திலுள்ள கிலாஃபத்திற்கான
அடையாளங்கள் மற்றும் கிலாஃபத்தின் அருளுக்கான செயல் வெளிப்பாடும் கிலாஃபத் இறைவனால்
நியமிக்கப்பட்டதுதான் என்பதற்குதெளிவான சான்றாகும்.
சகோதரர்களே!
திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்)
அவர்களின் ஹதீஸ்களை படிப்பதிலிருந்து நமக்கு கிலாஃபத்தின் எண்ணற்ற அருள்கள்
தென்படுகின்றன. அதில் சிலவற்றை சுருக்கமாக எடுத்துரைத்து முடித்துக் கொள்வேன்.இஸ்லாமிய
கிலாஃபத்தின் ஒரு மகத்தான அருளாக அல்லாஹ் வல யுமக்கினன்ன லஹும் தீனஹும்(அவர்களுக்காக
அவர்களுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்துவான்) எனக் கூறியுள்ளான். திருக்குர்ஆனின்
போதனைகள் மூலமாக தெரிய வருவது என்னவென்றால், மார்க்கத்தை
உறுதிப்படுத்துவது என்பது தப்லீக் மற்றும் தஃலீம்,
தர்பிய்யத்திற்கான ஏற்பாடாகும்.
இன்றைய காலத்தில் பல்வேறு முஸ்லிம்
அமைப்புகளும்,பிரிவுகளும் எந்தளவுக்கு இருக்கின்றன
என்றால் அதில் வலிமையான அரசுகளும் கூட இருக்கின்றன. ஆனால் காலத்தின் தீமைகளை எதிர்ப்பதில்
அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர். பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிக்
கொண்டிருக்கின்றனர். இதற்கெதிரில் அஹ்மதிய்யா கிலாஃபத் மூலமாக இஸ்லாத்தின்
பிரச்சாரம் மற்றும் தஃலீம், தர்பிய்யத்திற்கான களத்தில்
உலகளவில் மாபெரும் புரட்சியைவெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கிலாஃபத் மூலம் அஹ்மதிய்யத்திற்கு அல்லாஹ்வின்
உதவி மற்றும் ஆதரவின் ஒரு மாபெரும் காட்சிM.T.A 3
அல்அரபிய்யா மூலமாக அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை நாம் பார்க்கின்றோம்.ஹஸ்ரத்
முஹம்மது (ஸல்) அவர்களின் முழு நிழல் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின்
அடிமையில் இணையக்கூடிய எகிப்து, சிரியா, அல்ஜீரியா
மற்றும் ஏனைய அரபு நாடுகளின் அஹ்மதிகளின் கிலாஃபத்துடன் கொண்டுள்ள அன்பு,நன்றியுணர்வு மற்றும் அஹ்மதிய்யத்திற்காக அவர்கள் செய்யக்கூடிய
தியாகங்களின் மகத்தான முன்னுதாரணம் போன்றவை ஸஹாபா ரிஸ்வானுல்லாஹ் அலைஹிம் அஜ்மயீன்
அவர்களை நினைவுபடுத்துகிறது.
சகோதரர்களே!
M.T.A
3 அல்அரபிய்யா சேனல் மூலமாக ஏற்பட்டுள்ள ஆன்மீகப் புரட்சி மூலம் வருங்காலத்தில்
இறையருளால் மகத்தான முறையில் பரந்த அளவில் மாபெரும் புரட்சி ஏற்படவுள்ளது-இன்ஷா அல்லாஹ். இது தொடர்பாக
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா) அவர்கள் கூறுகிறார்கள்
:-
M.T.A3மூலமாக
அரபு நாடுகளுக்கென்று ஒரு புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவும் அல்லாஹ்வின்
ஆதரவினால் நடைபெற்றுள்ளது. இதனைப் பற்றித்தான் அல்லாஹ் (தனது இல்ஹாம் மூலமாக) ‘வாழ்த்துகள்; நூறு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளான். அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கு அல்லாஹ்வின் ஆதரவின் புயல்
மிக விரைவில் உலகை தனது பிடியில் எடுத்துக்கொள்ளும்-இன்ஷா அல்லாஹ் (மிஷ்காத் நூற்றாண்டு மலர் பக்கம் 90)
சகோதரர்களே!
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள்
இறைவிருப்பத்திற்கேற்ப மார்க்கத்தை நிலைபெறச்செய்வதற்கும் இஸ்லாத்தின் வெற்றிக்காகவும்
கையாண்ட வழிகளில் ஜல்சா சாலானாவின் துவக்கமும் ஒன்றாகும். இது 1891-ஆம்
ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது அல்லாஹ்வின் அருளால் இது உலகளவில் பரவிவிட்டது.
மேலும் அஹ்மதிய்யா கலீஃபாக்கள் மூலமாக இதன் அருள்களை நாம் நமது கண்களால் பார்த்து வருகின்றோம்.
ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் இந்த ஜல்சா சாலானாவின் நோக்கங்களில் ஒரு நோக்கமாக
இவ்வாறு கூறுகின்றார்கள்:-
இந்த ஜல்சாவை மனிதர்களின் சாதாரண
ஜல்சாவைப் போன்று கருதாதீர்கள்............இதன் அடிக்கல்லை அல்லாஹ் தனது கையினால்
நாட்டியுள்ளான்.............இதற்காக சமுதாயங்கள் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளன. அது மிக விரைவில் வந்து
சேரும். (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 1.
பக்கம் 242-247)
இந்த ஜல்சா தொடர்பாக பல்வேறு
முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அவை தனது நேரத்தில் நிறைவேறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில்
ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துரைக்க விரும்புகின்றேன். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்கள் டிசம்பர் 8,1902-ல்ஒரு கனவு காட்சியில், தான் காற்றில் பறப்பதாகக் கண்டார்கள். ( தத்கிரா பக்கம் 365)
இது
தொடர்பாக ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
இந்தக் கனவு மூலம் நான் புரிவது
என்னவென்றால், ஒரு காலம் வரும். அப்போது ஜல்சாவின் நாட்களில்
சிறிது சிறிது இடைவெளி விட்டு தற்போது இந்த நாடுகளிலிருந்து இத்தனை விமானங்கள்
வந்துள்ளன என்ற செய்திகளும் வந்துகொண்டிருக்கும். இந்த விஷயங்கள் உலகின்
பார்வையில் அதிசயமாக தெரியலாம். ஆனால் இறைவனின் பார்வையில் இது அதிசயம்
ஒன்றுமில்லை. (குத்பா ஜுமுஆ 10 டிசம்பர் 1937.
சான்று: பத்ர் 21.01.2016)
பிறகு நமது அன்பிற்குரிய தலைவர் ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா) அவர்கள் குத்பா ஜுமுஆ டிசம்பர் 25,2015-ல்
கூறினார்கள்:- இதுவும் தொலைவில் இல்லை. எந்த நேரத்திலும் காதியான் ஜல்சாவிற்கு
மக்கள் சார்டர்டு ஃபிலைட்டில் வந்து கலந்து கொள்ளலாம். (பத்ர் 21,ஜனவரி
2015)
சகோதரர்களே!
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின்
கனவுக்கேற்ப 114 வருடத்திற்குப் பின்னர் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹின்
விளக்கத்திற்கு 79 வருடத்திற்கு பின்னர் இந்த
சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 183
அஹ்மதிகள் சார்டர்டு விமானம் மூலம் இந்தோனேஷியாவிலிருந்து நேராக ஜல்சா சாலானா
காதியான் 2016-ல் கலந்து கொள்ள அமிர்தசரஸ்
விமானத்தளத்தில் இறங்கினார்கள்.மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கான இந்த அடையாளம் இது
ஒன்று மட்டுமல்ல;இது கடைசி அடையாளமும் அல்ல; மாறாக மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கான இந்தத் தொடர் தொடர்ந்து கொண்டே
இருக்கும். கிலாஃபத்தும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஜல்ஸாக்களின் தொடரும்
தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் கலந்து கொள்ளக்கூடிய இப்ராஹீமிய பறவைகளை
அழைத்து வருவதற்கு சார்டர்டு விமானங்களின் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த வகையில் இவ்வருடம் ஜூலை 2017 ஜல்சா சாலானா யூ. கே விலும் இந்த சம்பவம் புதிய
மகத்துவத்துடன் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. கனடாவிலிருந்து சார்டர்டு விமானம்
மூலம் 375 இப்ராஹீமிய பறவைகள் ஜல்சா
சாலானா யூ. கே- வில் கலந்து கொண்டன. மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின்
உண்மைத்துவத்திற்கு சான்றுபகர்ந்துள்ளனர். இந்த தொடர் இனியும் தொடரும்-இன்ஷா
அல்லாஹ்.
‘’தூய
உள்ளத்திற்கு அதிக அதிசயங்கள் அவசியம் இல்லை. உள்ளத்தில் இறையச்சம் இருந்தால் ஒரு
அடையாளமே போதும்.’’(இது மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் ஒரு
கவிதை)
சகோதரர்களே!
அல்லாஹ் இஸ்திக்லாஃப் வசனத்தில்
கிலாஃபத்தின் ஒரு மாபெரும் அருளாக வல யுபத்திலன்னஹும் மிம் பஃதி கவ்ஃபிஹிம் அம்னா
எனக் கூறியுள்ளான். அதாவது கிலாஃபத்தின் மூலம் ஜமாஅத்தின் ஒவ்வொரு அச்சத்தின்
நிலையும் அமைதி மற்றும் நிம்மதியாக மாற்றப்படும். எந்தவோர் அச்சத்தாலும் அதன்
தைரியம் குறைந்து போகாது; மாறாக, அது
ஒருங்கிணைந்து ஒரு புதிய ஆற்றல் மற்றும் உணர்வுடன் வெளிப்படும்.
எப்போதெல்லாம் அஹ்மதிய்யா ஜமாஅத்தின்
மீது அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அப்போதெல்லாம்
கிலாஃபத்தின் அருளால் ஒவ்வொரு புயலும் தூசியாக மாறி அமர்ந்து விட்டது. அஹ்மதிகளின்
எதிரிகள் புறமிருந்து ஏற்படுத்தப்பட்ட ஒவ்வோர் அச்சத்திற்கு பிறகும் அஹ்மதிய்யா
ஜமாஅத் அல்இமாமு ஜுன்னத்துன் யுகாத்தலு மிவ்வராயிஹீ (இமாம் கேடயமாக இருக்கின்றார்; அவருக்குப் பின்னால் இருந்து போர் செய்யப்படுகின்றது) என்பதற்கேற்ப கிலாஃபத்தின் நிழலின் கீழ் மேலும் வேகத்துடனும்
துடிப்புடனும், உறுதி மற்றும் புகழின் பாடல்களை பாடிக்கொண்டு
முன்னேற்றத்தின் படித்தரங்களை கடந்து கொண்டே சென்றுள்ளது,
இதற்கு அஹ்மதிய்யா கிலாஃபத்தின் 109
ஆண்டுகால வரலாறு சான்றாகும்.
அஹ்மதிய்யத்தின் குரலை காதியான்
பூமியிலிருந்து வெளியே வர விடமாட்டோம் என வாதங்கள் செய்த அஹ்மதிய்யத்திற்கு எதிரான
தலைவர்களின் கால்களின் கீழிருந்து அவர்களது பூமியே அகன்று விட்டது. அஹ்மதிய்யா
கிலாஃபத்தின் கையில் பிச்சைப்பாத்திரத்தை ஏந்த வைப்போம் என வாதம் செய்தவரே தனது
வாழ்வுக்காக பிச்சை எடுத்தவாறு தூக்கிலிடப்பட்டார். அஹ்மதிய்யத் ஒரு புற்றுநோய்; மேலும் அது இஸ்லாத்தின் வீணான ஒரு பகுதியாகும்; அதை
இஸ்லாத்தின் உடலிலிருந்து வெட்டி எடுப்பேன் என கூறிக்கொண்டிருந்த காலத்தின் ஆட்சியாளர்
மற்றும் காலத்தின் ஃபிர்அவ்னின் உடலுறுப்புகள் அவரது அனைத்து கீழ்த்தரமான
திட்டங்களுடன் வானில் சிதறியதை உலகம் கண்டது. மேலும் மறுபுறம் அஹ்மதிய்யத்தின்
தூது இன்னும்அதிவிரைவாக உலகில் பரவுவதற்கு விண்ணின் வளிமண்டலத்தில் காலத்தின்
கலீஃபாவின் குரல்M.T.A வின் தோற்றத்தில் பரவியதை
உலகம் கண்டது.
வேகமாக வீசக்கூடிய காலை நேரத்துத்
தென்றலை கண்டு பயப்படாதே இகாப்! அது
உன்னை மேலே கொண்டு செல்வதற்காகவே வீசுகிறது.
சகோதரர்களே!
உலகம் இந்த இரண்டுவிதமாக நடந்து
கொள்ளும் முறையையும், காட்சியையும் ஏன் பார்க்கிறது? இதற்கு பதிலை நான் ஹஸ்ரத்நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹிமஹுல்லாஹுத்
தஆலா) அவர்களின் வார்த்தைகளில் கூறுகின்றேன்.
ஹுஸூர்
அவர்கள் கூறுகிறார்கள்:- அஹ்மதிய்யா ஜமாஅத்
அல்லாஹ்வின் அருளால் ஊர் எஜமானனைக் கொண்டுள்ளது. அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கு ஊர்
எஜமானன் இருக்கின்றான். வானம் மற்றும்
பூமியின் எஜமானன் நமது எஜமானன் ஆவான்.
இறைவன் மீது ஆணையாக!எங்களுடைய எஜமானன் எங்களுக்கு உதவி புரிய வரும்போது உங்களுக்கு
யாராலும் உதவி செய்ய முடியாது. இறைவனின் நியதி உங்களை துண்டு துண்டாக்கி விடும்.
உங்களின் பெயரை அடையாளம் தெரியாமல் அழித்து விடும். மேலும் உலகம் உங்களை எப்போதும்
இழிவுடனே நினைவு கூறும். (குத்பா ஜுமுஆ 12
ஆகஸ்ட்
1988)
அடுத்து இனி வரக்கூடிய கலீஃபாக்களுக்கு
அறிவுரை கூறியவாறு ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹிமஹுல்லாஹுத் தஆலா)
அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இனி வரக்கூடிய கலீஃபாக்களுக்கு
இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன். நீங்களும் தைரியமாக இருங்கள்.
என்னைப்போன்று தைரியத்துடனும், பொறுமையுடனும் இருங்கள். உலகின்
எந்தவொரு சக்தியை கண்டும் அஞ்ச வேண்டாம். சின்ன எதிர்ப்புகளை அழிக்கக்கூடிய இறைவன்
இனி வரக்கூடிய வலுவான எதிர்ப்புகளையும் தூள் தூளாக்கி விடுவான்;உலகிலிருந்து அதனுடைய பெயரை அழித்து விடுவான். எவ்வாறாக இருப்பினும்
அஹ்மதிய்யா ஜமாஅத் ஒரு வெற்றிக்குப் பின்னர் மற்றொரு வெற்றியில் நுழைய
வேண்டியுள்ளது.உலகின் எந்த சக்தியாலும் இந்த நியதியை ஒருபோதும் மாற்றமுடியாது. (ஐரோப்பிய
மஜ்லிஸ் குத்தாமுல் அஹ்மதிய்யா இஜ்திமா29 ஜூலை 1984-ல் நான்காவது கலீஃபத்துல்
மஸீஹ் ஆற்றிய உரை)
ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் அஹ்மதிய்யத்தின் எதிரிகளை நோக்கி கூறுகிறார்கள்:-
அறிவீனர்களே! உங்களது திட்டத்தால்
எனக்கு ஒருபோதும் எந்த இழப்பும் ஒருபோதும் இல்லை. இந்த உயிர் நெருப்பில் பட்டு
நன்றாகத்தான் வரவுள்ளது.உனக்கும் ஏதாவது மார்க்கம் இருந்தால் நான் கூறுவதைமாற்றிக்
காட்டு. எனக்கு கண்ணியமும் உனக்கு இழிவும் வரவுள்ளது.
(துர்ரே
சமீன் பக்கம் 54 2010 காதியானில் அச்சிடப்பட்டது)
சகோதரர்களே!
கிலாஃபத்தின் மிகப்பெரிய ஓர் அருள் முழு
ஜமாஅத்திற்காக காலத்தின் கலீஃபா அவர்கள் தினந்தோறும் செய்யும் துஆவாகும்.
ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
இந்த ஜமாஅத்தில் இணையக்கூடியவர்களுக்கு
கிடைக்கும் மிகப்பெரிய நன்மை, அவர்களுக்காக நான் துஆ செய்கின்றேன்.
துஆ எப்படிப்பட்ட விஷயம் என்றால் அது காய்ந்த விறகைக்கூட பச்சை பசுமையாக்கி
விடும். மேலும் மரணித்தவரை உயிர் பெறச் செய்யும்.அதில் மிகப் பெரும் தாக்கம்
இருக்கிறது. (அல்ஹகம் 28,பிப்ரவரி
1903.மல்ஃபூஸாத்
தொகுதி 3.
பக்கம் 100)
இதனைப்போன்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் தனது உண்மைத்துவத்திற்கு மிகப்பெரும் ஆதாரமாக துஆ
ஏற்றுக்கொள்ளப்படும் அடையாளத்தை கூறுகிறார்கள்.
அன்னார்
கூறுகிறார்கள்:- இறைவன் எனது துஆக்களுக்கு எல்லாரையும் விட அதிகமாக
ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையை வைத்துள்ளான். துஆ ஏற்றுக்கொள்ளபடுதலில் எனக்கு
நிகராக யாராவது இருந்தால் நான் பொய்யன் ஆவேன்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுக்கு
துஆவிற்கான அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அருள் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களின் கலீஃபாக்கள் மூலமாக ஒரு புதிய மகத்துவத்துடன் விரிவடைகின்றது. உலகம்
முழுவதும் எண்ணிலடங்கா சம்பவங்கள் மூலமாக பிரகாசமான அடையாளம் போன்று சுற்றிவருவதை
காணமுடிகிறது. இது கிலாஃபத்தின் உண்மைத்துவத்திற்கு ஒரு மாபெரும் அடையாளமும்
ஆகும்.
இந்த
வகையில் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
அல்லாஹ் எவரை கிலாஃபத் பொறுப்பில் அமர வைப்பானோ அவரது துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதை
அதிகமாக்குகிறான். ஏனென்றால் அவரது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அவனது
தேர்ந்தெடுப்பிற்கு இழுக்கு ஏற்படும். (மன்ஸபே கிலாஃபத். அன்வாருல் உலூம் தொகுதி 2
பக்கம் 47. 2008-ல் காதியானில்
வெளிட்டப்பட்டது.)
நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டவாறு
அஹ்மதிய்யா கலீஃபாக்களின் துஆஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பவங்களில் ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் (அய்யத ஹுல்லாஹுத் தஆலா) அவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட சில
நிகழ்வுகளை கூறுகிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு அரபு நாட்டில்
ஒரு நல்ல புதிய அஹ்மதி அவர் அஹ்மதிய்யத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற ஒரே
காரணத்திற்காக சிறைப்பிடிக்கப்பட்டார்.. அவருக்கு அதிகபாரம் கொண்டவிலங்கு பூட்டி அவரை
சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீனையும் தள்ளுபடி செய்து விட்டனர். அவரை
சந்திப்பதையும் தடை செய்தனர். மிகவும் கொடுமையான முறையில் நடத்தினர். உள்ளூர்
வக்கீல்கள் யாரும் வழக்கை எடுக்க தயாராக இல்லை. வெளிப்படையில் உலக வழிகள்
அனைத்தும் அடைபட்டிருப்பது தெரிந்தது. ஆனால் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யத
ஹுல்லாஹுத்த ஆலா) அவர்கள் அவரது விடுதலைக்காக தொடர்ந்து துஆக்கள் செய்து வந்து
கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அன்னார் இன்ஷா அல்லாஹ் இவர் விடுதலையாகி விடுவார்
என்று கூறினார்கள்.
ஒருபுறம் ஹுஸூர் அவர்களின் துஆஇருந்தது; மறுபுறம் விடுதலையாவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு இருந்ததன. ஹுஸூர்
அவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளபடுதலுக்கான அடையாளம் எவ்வாறு வெளிப்பட்டது என்றால், அரபு நாட்டின் அரசர் ஒரு நிகழ்ச்சியின்போது சில கைதிகளை விடுதலை
செய்வதற்கான அறிவிப்பை செய்தார். விடுதலை ஆகக் கூடிய அந்த கைதிகளில் முதல் பெயர்
நமது இந்த புதிய அஹ்மதி கைதி தான். இது எவ்வாறு நடைபெற்றது என்று யாருக்கும்
தெரியாது. ஆனால் இன்ஷா அல்லாஹ் இவர் விடுதலை ஆகிவிடுவார்என்று கலீஃபாவின்
அருளுக்குரிய நாவிலிருந்து வெளி வந்த சொற்கள் அந்த நேரத்திலேயே இறை சன்னிதியில்
உயிர்தியாகம் செய்ய ஆயத்தமானஇந்த அஹ்மதிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நாங்கள்
அறிவோம்.
சகோதரர்களே!
அந்த
புதிய அஹ்மதிக்கு காலத்தின் கலீஃபாவுடன் கலப்பற்ற மற்றும் நன்றிவுணர்வுடன் கூடிய
தொடர்பு இருந்தது என்பதற்காக மட்டும்தான் அவருக்காக காலத்தின் கலீஃபாவுடைய துஆவின் இந்த மகத்தான
அடையாளம் இந்த புதிய அஹ்மதியின் உரிமையில் இதற்காக மட்டும்தான் வெளிப்பட்டது. அவரை
சிறைச்சாலையில் இட்டபோது அவரிடம் மீண்டும் மீண்டும் அஹ்மதிய்யத்தை விட்டுவிடு; உன்னை விடுதலை செய்து விடுகிறோம் எனக் கூறிவந்தனர். ஆனால் இவரது பதில்
நான் உயிரை விட்டுவிடுவேன் ஆனால் அஹ்மதிய்யத்தை விடமாட்டேன் என்பதாகத்தான் இருந்தது.
இந்த அரபு அஹ்மதி கலீஃபத்துல் மஸீஹ் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் எனது
பகுதியில் ஒன்பது மலைகள் உள்ளன. இந்த பகுதியின் பத்தாவது மலை நானாவேன். எவ்வித
மிரட்டலும் எவ்வித ஆசையூட்டுதலும் எனது ஈமானில் எவ்வித தடுமாற்றத்தையும்
ஏற்படுத்தி விடாது என்று எழுதினார்.ஆக, இவரது இந்த
கலப்பற்ற தன்மைதான் காலத்தின் கலீபாவின் துஆவை அவரது உரிமையில் நிறைவேறச்செய்தது.
மேலும் விண்ணின் மகத்தான இறைவனின் நியதி அந்த அரசரின் பேனாவிலிருந்து முதலில் இந்த
புதிய அஹ்மதியின் பெயரை எழுதவைத்தது. உலகின் அனைத்து வழிகளும் அடைபட்டுப்போன
பிறகும் இந்த அப்பாவியின் விடுதலைக்காக விண்ணிலிருந்து ஏற்பாடுகளை செய்தது.
(சொற்பொழிவு
அப்துல் மாஜித் சாஹிப் ஜல்சா சாலானா யூ.கே)
எங்களது தலைவர் (ஸல்) மற்றும் அவரது உண்மை
தியாகிகளின் மண்ணில் வாழக்கூடிய அரபு நாட்டின் அஹ்மதிகளே!
உங்கள் மீது நாங்கள் எந்தளவு பொறாமை கொண்டாலும் அது குறைவே. உங்களது
மூதாதையர்களுக்கு முன்னவர்களுடன் இணைந்து இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்கள்
செய்ய வாய்ப்பு கிடைத்தது. தற்போது உங்களுக்கு ஆகிரீன் மக்களின் ஜமாஅத்துடன்
இணைந்து தனது மூதாதையர்களின் நிகரற்ற தியாகங்களின் அடிச்சுவட்டில் செல்வதற்குரிய பெருமை
கிடைக்கிறது. மேலும் நீங்கள் முஹம்மதிய மஸீஹிடமிருந்து வழங்கப்பட்ட
நற்செய்திக்கேற்ப அந்த நற்பேறு பெற்றவர்களுடன் எண்ணப்படுவதற்கான கண்ணியத்தை பெறக்கூடியவராகிறீர்கள்.யுஸல்லூன
அலைக்க ஸுலஹாவுல் அரபி வ அப்தாலுஷ் ஷாம். அதாவது மஸீஹே! அரபு நாட்டின்
நல்லடியார்களும் சிரியாவின் நல்லடியார்களும் உம்மீது தருதும் ஸலாமும்
கூறுவார்கள்.
சகோதரர்களே!
காலத்தின் கலீஃபாவின் துஆக்களின்
அருளினால் வெறும் ஆன்மீக மரணம் அடைந்தவர் மட்டும் உயிர் பெறுவதில்லை; மாறாக, மருத்துவர்கள் சிகிச்சை செய்யமுடியாது; மரணத்தின் விளிம்பில் உள்ளார் எனக் கூறிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெளதீக நோயாளிகளுக்கும் ஒரு புதிய வாழ்வு கிடைத்துக்
கொண்டிருக்கிறது. 2014-ஆம் வருடம் நடந்த சம்பவம் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை
சார்ந்த ஒரு முபல்லிக் கண்ணியத்திற்குரிய ஸகீர் அஹ்மது கமர் சாஹிப் மிக கடுமையானநோய்க்கு
ஆளானார். மூளையில் இரத்தம் கட்டியதன் காரணமாக அவருடைய நோய் கோமா வரை சென்று
விட்டது. இந்த நிலையில் இரண்டு மூன்று நாட்கள் கடந்து சென்றது. ஹுஸூர் அன்வர் (அய்யதஹுல்லாஹுத்த ஆலா) அவர்களுக்கு இவரது உடல்நிலை தொடர்பான அறிக்கைகள்
அனுப்பப்பட்டன. ஒரு நாள் ஹுஸூர் அவர்கள் இவருக்கு உடனடியாக ஒரு ஹோமியோபதி மருந்து
கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த
வகையில் ஃபோர்க்கினா ஃபாஸூவிலிருந்து ஓர் அஹ்மதி மருத்துவர் மருந்துகளை எடுத்துக்
கொண்டு அங்கே சென்றார். சுயமே அவர் இருக்கும் வார்டுக்கு சென்று இந்த மருந்தை
அவரது வாயில் இட்டார். அந்த அஹ்மதி மருத்துவர் கூறுகிறார். மருந்தை அவரது வாயில்
இட்டதும் அவரது உடல் அசைந்தது, பிறகு சிறிது நேரம் கழித்து
கண்களை திறந்தார். மறுநாள் அவருக்கு முழுமையாக நினைவு வந்தது.மேலும் அவர் எழுந்து
அமர்ந்தார். (சொற்பொழிவு அப்துல் மாஜித் சாஹிப் ஜல்சா சாலானா யூ.கே )
சகோதரர்களே!
கிலாஃபத் அல்லாஹ் தனது அருளினால்
மட்டும் அஹ்மதிகளாகிய நமக்கு வழங்கிய மகத்தான அருளாகும். நாம் இதற்கு உயிராலும்
உடலாலும் கண்ணியமளிக்கக் கூடியவர்களாக வேண்டும். நாம் உண்மையான முறையில் காலத்தின்
கலீஃபாவுடைய துஆவுக்கு வாரிசாக விரும்பினால் காலத்தின் கலீஃபாவுடன் கலப்பற்றதன்மை
மற்றும் நன்றியுணர்வுடன் தனது தொடர்பை எந்தளவுக்கு உறுதிப்படுத்த வேண்டுமென்றால், தனது தியாகங்களின் தரத்தை எந்தளவு உயர்த்த வேண்டுமென்றால் வானத்தின்
மலக்குகளும் பொறாமை கொள்ளவேண்டும்.
ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்(அய்யதஹுல்லாஹுத்
தஆலா)அவர்கள் கூறுகிறார்கள்:-
ஆக, இந்த
வல்லமையுடன் முழுமையான கலப்பற்ற தூய்மை, அன்பு, நன்றிவுணர்வு மற்றும் நம்பிக்கையுடன் தொடர்பு வையுங்கள். கிலாஃபத்திற்கு
கட்டுப்படும் உணர்வை நிலைப்படுத்துங்கள். அதனுடன் அன்பின் உணர்வை எந்தளவுக்கு
ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு எதிரில் ஏனைய அனைத்து உறவுகளும் குறைவானதாக
தென்பட வேண்டும். இமாமுடன் இணைந்திருப்பதில்தான் எல்லா நன்மைகளும் உள்ளன. அதுவே உங்களுக்கு
எல்லா வகையான குழப்பங்களுக்கும், சோதனைகளுக்கும் எதிரில்
கேடயமாகும். (அல்ஃபஸ்ல் 30
மே,2003)
ஹஸ்ரத்
இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் பைஅத் செய்தவர்கள் மற்றும் பைஅத் செய்யாதவர்கள் (லாஹூரி பிரிவினர்)
மத்தியில் உள்ள வேறுபாட்டை விளக்கியவாறு கூறுகிறார்கள்:-
உங்களுக்கும், கிலாஃபத்திலிருந்து முகம் திருப்பிக்கொண்ட அவர்களுக்கும் இடையில் ஏதாவது
வித்தியாசம் இருக்கிறதா?எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால்
மிகப்பெரிய ஒரு வித்தியாசமும் உள்ளது. அது என்னவென்றால் உங்களுக்கு உங்களுக்காக
கவலை கொள்ளக்கூடிய ஒருவர் இருக்கிறார்; உங்கள் மீது அன்பு
கொள்ளக்கூடியவர். உங்களது துக்கத்தை தனது துக்கமாக கருதக் கூடியவர். உங்களது
கஷ்டத்தை தனது கஷ்டமாக கருதக்கூடியவர். உங்களுக்காக இறைவனிடத்தில் துஆ
செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்களுக்கென்று யாருமில்லை. உங்களைப்
பற்றி அவருக்கு கவலை இருக்கிறது; வேதனை இருக்கிறது; உங்களுக்காக இறைவனிடத்தில் துடிக்கிறார். ஆனால் அவர்களுக்கென்று இவ்வாறு
யாருமில்லை. ஒருவரைச் சார்ந்த யாராவது ஒருவருக்கு உடல் நலம் குன்றினால் அவருக்கு
நிம்மதி கிடைப்பதில்லை. அப்படி இருக்கும்போது எவருக்கு ஆயிரம் நோயாளிகள் அல்ல; மாறாக இலட்சம் நோயாளிகள் இருக்கின்றார்களோ அந்த மனிதரின் நிலையைப்பற்றி
உங்களால் யூகிக்க முடியுமா?(பரக்காதே
கிலாஃபத் பக்கம் 5)
சகோதரர்களே!
நான்
எனது இந்த வேண்டுதல்களை ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா) அவர்களின் ஒரு சிறிய - ஆனால் அன்பில் நிறைந்த
நிகழ்வை எடுத்துரைத்து முடிக்கின்றேன்.
மதிப்பிற்குரிய முபாரக் சித்தீக் சாஹிப்
அவர்கள் தனது ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள்: அதாவது ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ்(அய்யதஹுல்லாஹுத் தஆலா) அவர்களை சந்தித்த ஒரு நண்பர் இவரை சந்தித்தார். ஹுஸூர்
அவர்களுடன் அவரது சந்திப்பு நீண்ட சந்திப்பாக
இருந்ததால் சந்திப்பிற்கு இடையில் அமர்வதற்காக கடிதங்களின் ஒரு கட்டை
எடுத்து கீழே வைப்பதற்காக முயன்றார். அவர் கூறுகின்றார்: அப்போது ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத்த ஆலா) அவர்கள் உடனே தனது
கையை நீட்டி அதனை கீழே வைக்காதீர்கள். அதை மிக கவனமாக ஓரமாக வையுங்கள் என்றார்கள்.
பிறகு ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்:இது கடிதம் அல்ல; எனது இதயமாகும்.
அஹ்மதி
சமுதாயமே! விழித்தெழு ! உன்னுடைய வேதனைக்காக
எண்ணற்ற இரவுகள் உறங்காமல் இருந்த இவருக்காக விழித்தெழு.
அல்லாஹ்
நமது அன்பிற்குரிய தலைவர் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்(அய்யதஹுல்லாஹுத்த ஆலா) அவர்களுக்கு
ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட வாழ்வை வழங்குவானாக. அன்னார் மூலம் தொடர்ந்து
கொண்டிருக்கக் கூடிய கிலாஃபத்தின் மாபெரும் அருள்களிலிருந்து நாம் மிக அதிகமாக
பயனடையக் கூடியவர்களாவோமாக. ஆமீன்.
அருமையான பதிவு.காலத்தின் தேவை.ஒவ்வொரு அஹமதியும் முழுமையாக கருத்துூன்றி படிக்க வேண்டிய கட்டுரை.பிற மக்களுக்கும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்துவதின் மூலம் அவர்கள் கிலாஃபத்தின் அருள்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.மவ்லவி அப்துல்லாஹ்வுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.ஆமீன்.
பதிலளிநீக்கு