காஷ்கரிலிருந்து காதியான் வரை - 1400 ஆண்டுகள் பழமையான ஒரு முன்னறிவிப்பின் நிறைவேற்றம்
ஹஸ்ரத் நபிகள் நாயகம், முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் இமாம் மஹ்தியை(அலை) கண்டால் , அவரிடம் பைஅத் செய்யுங்கள். பனிக்கட்டிகளின் மீது தவழ்ந்து செல்ல நேரிட்டாலும் சரியே,! ஏனெனில் ,அவர் அல்லாஹ்வின் கலீஃபாவும் மஹ்தியும் ஆவார் !” (ஸுனன் இப்னு மாஜா, கிதாபுல் ஃபிதன், தொகுதி 2, பக்கம் 1367)
நீங்கள் கூகுள் மேப்பில் (Google maps) காஷ்கர் (தற்போது சீனா நாட்டில் இருப்பது) என்று எழுதி , அங்கிருந்து 'காதியான்' செல்வதற்கு நடைவழிப்பாதை என்று தட்டச்சு செய்வீர்களானால் , நீங்கள் விரக்தி அடைந்து விடுவீர்கள்.! அந்த பெரும் கூகுள் இயந்திரத்தால் கூட, அந்த பாதையை உங்களுக்கு காட்ட இயலாது. கூகுளில் இவ்வாறு நிகழ்வது என்பதும் அரிதான விஷயமாகும். ஒருவேளை , காஷ்கரை காதியானுடன் இணைக்கும் நேரிடையான பாதைக்கு குறுக்கே, மிகப் பெரிய காரகோரம் மலைத்தொடர் இருப்பதும், ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆகவே, அந்த பாதையில்,
கால்நடையாக நடந்தவாறே பயணம் செய்வது என்பதும் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கலாம்.
இந்த பயணம் கடினமாக தோன்றலாம், ஆனால் சாத்தியமற்ற ஒன்றல்ல!
நூற்றுக்கணக்கான மைல்களை,
கடுமையான சீதோஷ்ண நிலைகளுக்கு இடையில்,
பயணத்தை மேற்கொள்வது என்பது , அதுவும் ஒரு திறமையான மலையேறுபவர்,
தேவைப்படும் கருவிகளுடன் செய்வது போல அல்லாமல், ஒரு
சாதாரண மனிதர்
, எண்பது வருடங்களுக்கு முன்பு, உண்மையைத் தேடி உந்தப்பட்டவராக பயணப்பட்டார் என்பதும் உண்மையே ஆகும்.! டாக்டர்.சையத் ஹாஜி ஜீனுத்துல்லாஹ் அவர்கள்
, செப்டம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டு காதியான் வந்தடைந்தார்கள்.! இதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவர் காஷ்கரில் இருந்து பயணத்தை தொடங்கி இருந்தார்.!
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கதை இங்கிருந்து தொடங்கவில்லை. இக்கதையை முழுமையாக அறிந்து கொள்ள நாம் (இன்னும்) நான்கு ஆண்டுகள் பின்னோக்கி , அதாவது 1934 ஆம் ஆண்டிற்கு செல்ல வேண்டும்.
தஹ்ரீகே ஜதீத் - ஓர் இறைத் திட்டம்
1929 ஆம் ஆண்டு "மஜ்லிஸே அஹ்ரார்" என்னும் தீவிரவாத அரசியல் இயக்கமொன்று தொடங்கப்பட்டது. அன்றிலிருந்தே அவர்கள் தங்கள் சித்தாந்தத்தை பரப்ப ஆரம்பித்தார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதை மட்டுமே , ஒரே நோக்கமாக கொண்ட இவர்கள், அஹ்மதிய்யத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தும், பெரும், பெரும் ஊர்வலங்களை நடத்தியும் கடும் வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தார்கள்.!
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்பது, வாக்களிக்கப்பட்ட மஸீஹாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்களால், இறைக்கட்டளைக்கு இணங்க தோற்றுவிக்கப்பட்டதாகும். அன்னாருடைய பணி என்பது, உண்மையையும் அமைதியையும் போதிக்கும் இஸ்லாத்தை புதுப்பிப்பதாகும்.! மேலும் அன்னார், முன்னறிவிப்பில் கூறியிருந்தபடி, இறுதி காலத்தில் தோன்றக்கூடிய சீர்திருத்தவாதி தாமே என்று வாதம் செய்தார்கள்.
கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்ட இயேசுவின் இரண்டாம் வருகையும்,
புத்த மதத்தில் கூறப்பட்டதைப் போன்று புத்தரின் மறு வருகையும் , அன்னார் மூலம் முழுமையடைந்து விட்டது.
அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அஹ்ராரிகளின் எதிர்ப்பும் தீவிரமடைந்தது. எதிரிகளுக்கும், இறை சமுதாயங்களுக்கும் இடையிலான விஷயத்தில் "அவர்கள் அல்லாஹ்வின் கூட்டத்தினராவர். அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்களாவர்" (திருக்குர்ஆன் 58: 23) என்கிற வசனத்தின் படி இறுதியில் எதிரிகளின் மீது அல்லாஹ்வின் கூட்டத்தினர்களே வெற்றியடைவார்கள் என்று குர்ஆன் கூறுவது போன்றே நடந்து. அதற்கேற்றவாறு, 1934 ஆம் ஆண்டு இரண்டாம் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள், இறைக் கட்டளைக்கிணங்க ஒரு அற்புதமான ஒரு திட்டத்தை அறிவித்தார்கள்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது ஸாஹிப்,
இரண்டாம் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள்
சமுதாயத்தின் குறுக்கே இருந்த ஒவ்வொரு தடைகளை மட்டுமே அது கடந்து செல்லவில்லை,
மேலும் அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தியை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதற்கும் அது ஒரு வினையூக்கியாகவும் செயல் பட்டது. அந்த திட்டம் தான்_
தஹ்ரீகே ஜதீத் என்றழைக்கப்படுகின்றது. மேலும் அத்திட்டம் தன்னுடைய மகத்தான இலக்கை அடைவதில் உறுதியானதும், செயல்படுத்தும் சாத்தியமான எண்ணற்ற செயல்திட்டங்களையும் கொண்டிருந்தது. இதனை ஹுஸூர்
(ரலி) அவர்களின் வார்த்தைகளில் கூறுவதே சிறப்பானது!
அன்னார் கூறினார்கள்,"இறைவனின் மார்க்கத்தை பரப்பும் இந்த மாபெரும் பணிக்காக தங்களை அர்ப்பணித்தவாறு, தம்முடைய வாழ்வை கழிக்கக் கூடிய மக்கள் இருக்க வேண்டும் என்கிற இந்த நோக்கத்திற்காகவே தஹ்ரீகே ஜதீத் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.! நம்முடைய ஜமாஅத் உறுப்பினர்கள், ஸாஹிப் ஸாதா ஹஸ்ரத் அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்கள், அஹ்மதிய்யத்திற்காக தம்முடைய உயிரையே தியாகம் செய்தவர் என்று பெருமை கொள்கிறார்கள். எவ்வாறு இருப்பினும், இந்த சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்ட நமக்கு ஒரே ஒரு அப்துல் லத்தீஃப் மட்டும் போதாது. மாறாக, நூற்றுக்கணக்கான அப்துல் லத்தீஃப்கள் தேவை ! அவர்கள், பல்வேறு நாடுகளுக்கு சென்று, இஸ்லாம் அஹ்மதிய்யத்திற்காக, தங்கள் வாழ்வை தியாகம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.! அப்துல் லத்தீஃப் போன்ற மனிதர்கள், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் தோன்றாத வரையில், அஹ்மதி்ய்யத்தின் மகத்துவத்தையும், சிறப்பையும் நிலைநாட்ட முடியாது.
ஹஸ்ரத் ஸாஹிப்ஸாதா ஸையது அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்கள்
(குறிப்பு: ஹஸ்ரத் ஸாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்கள் ஆப்கானிஸ்தானின் கோஸ்த் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மேலும்
ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் ஆவார்கள். அவர்கள் 1880-1901 ஆப்கானிஸ்தானின் மன்னர் அமீர் அப்துர் ரஹ்மான் கானுக்கும் பின்னர் அவரது மகன் ஹபிபுல்லா கானுக்கும் தலைமை ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார்கள். டுராண்ட் லைன் ஒப்பந்தத்தில் மன்னர் அப்துர் ரஹ்மானுக்கு உதவுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்கள்
1902 இல் காதியானுக்குச் சென்று, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நிறுவனர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது
(அலை) அவர்களின் கைகளில் பைஅத் செய்து, அஹ்மதிய்யத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியபோது, மதகுருக்களால் அவர்கள் ஒரு மார்க்க துரோகி (நவூதுபில்லாஹ்) என்று பொய்யாக முத்திரை குத்தப்பட்டார்கள், இது நாட்டின் சட்டத்தின் படி, மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆப்கானிஸ்தான் மன்னரின் உத்தரவின் கீழ்,
ஸாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்கள் 1903ஆம் ஆண்டு ஜூலை
14 அன்று கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள், இதன் மூலம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் முதல் உயிர்த்தியாகிகளில் ஒருவரானார்கள்.)
சிறப்புமிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்ட அந்நாட்களில் தான் , அதாலத் கான் என்னும் இளைஞர் , கல்வி கற்பதற்காக காதியானுக்கு வந்திருந்தார்! அதாலத் கான் அவர்கள், இந்த அழைப்பை உடனே செயல்படுத்த ஆரம்பித்தார்கள். அதாலத் கான் அவர்கள், தன்னுடைய நோக்கத்தைப் பற்றி அல்லது தான் செல்லும் இடம் பற்றி , எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் காதியானை விட்டு புறப்பட்டு விட்டார்கள்!
ஆஃப்கானிஸ்தானிற்கு சென்ற அதாலத் கான் சிறை பிடிக்கப்படுதல்
அவர் ஆப்கானிஸ்தானில் ஷஹித்தாக்கப்பட்ட ஸாஹிப் ஸாதா அப்துல் லத்தீஃப் (ரலி) அவர்களின் ஷஹாதத்துப் பற்றி அறிந்திருந்ததால் அதில் உந்தப்பட்டவராக, ஆப்கானிஸ்தானுக்கு போவது என்று முடிவு செய்தார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தியை பரப்புவதற்காக அவர் அங்கு சென்றார். அதாலத் கான் அவர்களிடம், எந்தளவுக்கு துடிப்பும் ஆர்வமும் இருந்தது என்றால், அவருக்கு பாஸ்போர்ட், அல்லது ஆவணங்கள் போன்ற எதுவும் அவருக்கு தேவையாக இருக்கவில்லை.! எனவே, ஆப்கான் அரசு அவரிடம் தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அவரை பிடித்து சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையும், அவரை சிறிதும் அசைக்கவில்லை. சக சிறைவாசிகளுக்கும், சிறை அலுவலர்களுக்கும் இடையிலும் சிறையில் இருந்தவாறே தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தார்.! சிறைச்சாலையில் அவருடைய தாக்கம் அதிகரித்து வருவதைக் கண்ட சிறை அதிகாரிகள், இது பற்றி அரசின் அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அங்குள்ள மத முல்லாக்களோ, அவரை கொல்ல வேண்டும் என்று ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கினார்கள். ஆனால் பிரிட்டிஷ் குடிமகன் ஒருவரை கொன்று விட்டால், எதிர்விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டது! எனவே அந்த அமைச்சர் இதற்கு எதிராக இருந்தார், பதிலாக அதாலத் கான் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுமாறு கட்டளை இட்டார்.!
சீனாவிற்கு செல்லுமாறு பணிக்கப்படுதல்
அதாலத் கான் அவர்கள், இந்த முழு சம்பவத்தையும், காதியான் வந்தடைந்த பிறகு அப்போது கலீஃபாவாக இருந்த ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்முது அஹமது (ரலி) அவர்களிடம் தெரிவிக்கின்றார்! அவருடைய முயற்சியை பார்த்து வியந்த கலீஃபா அவர்கள், (அஹ்மதிய்யத்தின் தூதை) வரவேற்கக் கூடிய எத்தனையோ நாடுகள் இருக்கும் போது அங்கு சென்று பிரச்சாரம் செய்யாமல், தவறான இடத்தை தேர்வு செய்ததாக கூறி அவருக்கு அறிவுரையும் கூறினார்கள்.
அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தியை பரப்புவதில், அதாலத் கான் அவர்கள் எந்தளவுக்கு உந்தப்பட்டவராக இருந்தார் என்றால், உடனே அவர் கலீஃபாவிடம், தமக்கு அடுத்த வேலையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். கலீஃபா அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிடுவாரோ, அங்கு செல்வதற்கு தான் தயாராக இருப்பதாக கூறினார்கள். ஹஸ்ரத் இரண்டாம் கலீஃபத்துல் மஸிஹ் (ரலி)
அவர்கள், முதலில் அவருடைய தாயையும்,
குடும்பத்தினரையும் சென்று பார்க்குமாறும் அதன் பிறகு சீனாவிற்கு சென்று அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தியை பரப்புமாறும் கேட்டுக் கொண்டார்கள்.!!
காஷ்மீர் வழியாக காஷ்கருக்கு பயணமும்,
அதாலத்
கான் ஸாஹிப் அவர்களின் இறப்பும்
இந்த புதிய வேலையை தொடங்குவதற்கு முன்பாக, அதாலத் கான் அவர்கள், தன்னுடைய நண்பரும் ஹோஷியார்பூரை சேர்ந்தவருமான முஹம்மது ரஃபீக் என்பவரை இந்த பயணத்தில் தன்னோடு சேர்ந்து பயணிக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டார். இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இந்த இருவரும் காஷ்மீர் வந்தடைந்தார்கள். முஹம்மது ரஃபீக் அவர்கள், காஷ்கர் பயணம் செல்வதற்கு தேவைப்படும் எல்லா ஆவணங்களையும் அங்கு ஏற்பாடு செய்து விட்டார். (அப்போது காஷ்கர், கிழக்கு துர்க்குமேனிஸ்தானைச் சார்ந்த பகுதியாக இருந்தது) இதற்கு தனிப்பட்ட வகையிலும், அவருடைய மற்ற குடும்ப தொடர்புகளும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அதாலத் கான் அவர்களால், அவ்வாறான ஆவணங்களை பெற முடியவில்லை. அவர் தொடர்ந்து அதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருந்த நிலையில், காஷ்மீரின் குளிர் காலத்தின் கடுங் குளிரானது, அவர் மீது தாக்கம் செலுத்தியது.! டபுள் நிமோனியா நோய் அவரை தொற்றியது.! அதன்பிறகு சில நாட்களிலே அவர் மரணமடைந்து விட்டார்.!
ஓர் ஆச்சர்யமான சம்பவம்
நிமோனியா நோய் தாக்கியிருந்த அந்த கட்டத்திலும், அஹ்மதிய்யத்தின் உண்மைத் தன்மையின் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத உறுதிப்பாட்டை காட்டும் ஒரு சம்பவமும் நடந்தது.
அதாவது, அதாலத் கான் நோய்வாய்ப்பட்ட நிலையில்,
ஒரு கிராமத்தில் தங்கியிருந்த போது, அங்கு எந்த விதமான மருத்துவ வசதிகளும் இல்லை.!
அவருடைய உடல்நிலை,
மிகவும் மோசமான நிலையை அடைந்து,
முடிவு அருகில் இருக்கின்றது என்ற நிலைமை தோன்றியது. அப்போது, தம்முடைய அருகில் இருந்த அஹ்மதிகளிடம், அஹ்மதிய்யத்தின் உண்மைத் தொடர்பாக என்னுடன் முபாஹலா செய்வதற்கு, யாராவது இருக்கின்றார்களா.? எனத் தேடுமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறு,
எவராவது தன்னுடன் பிரார்த்தனைப் போட்டிக்கு வந்தால், தன்னால் உயிர் வாழ முடிகின்ற அதே சமயத்தில், அஹ்மதிய்யத்தை பரப்புவதற்கும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இதைத் தவிர அந்த நோயிலிருந்து உயிர்ப்பிழைக்கும் வேறு வழியில்லை
என்று அவர் நினைத்தார்.! கவனத்தை ஈர்க்கும் விஷயம் என்னவென்றால், ஒரே ஓர் ஆள் கூட,
மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனிடம், இந்த பிரார்த்தனைப் போட்டியை ஏற்க முன்வரவில்லை.
காஷ்கருக்கு முஹம்மது ரஃபீக் ஸாஹிப் அவர்களின் வருகை
அதாலத் கான் அவர்கள் தொடங்கிய அந்த பணியை, முஹம்மது ரஃபீக் அவர்கள் தொடர்ந்தார்கள். காஷ்கர் என்றழைக்கப்பட்ட இன்றைக்கு சீனாவில் இருக்கும் அந்த இடத்திற்கு, அவர் வந்தடைந்தார்.! அங்கு காஷ்கரைச் சேர்ந்த, மதிப்பும் கௌரவமும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த, டாக்டர். ஹாஜி ஜுனூதுல்லாஹ் என்னும் பெயருடைய ஒரு மனிதருக்கு தப்லீக் செய்ய ஆரம்பித்தார்கள். அப்பகுதியில் கம்யூனிஸத்தின் தொடர் தாக்குதலால், அக்குடும்பமானது பெருமளவு செல்வத்தை இழந்திருந்தது.
Dr. Syed Haji Junoodullah
Dr. ஸையது ஹாஜி ஜுனூதுல்லாஹ்
ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்களுக்கு, அவருடைய மறைந்த தந்தை சையத் ஜலால் ஷா அவர்கள், மஸீஹின் வருகையைப் பற்றி முன்னரே கூறியிருந்தார்கள். இறுதி காலத்தில் தோன்றவிருக்கும் மஸீஹின் வருகை நிச்சயமாக நிகழும் என்று, சையத் ஜலால் ஷா அவர்கள் ஒரு கனவு கண்டிருந்தார்கள். எனவே இந்த கனவின் காரணமாக, ஜலால் ஷா அவர்கள் தம்முடைய எல்லா குழந்தைகளிடமும், ஹாஜி ஜுனூதுல்லாஹ் உள்பட, அனைவரிடமும் "எவராவது மஸீஹ் என்று வாதம் செய்தால், அவருடைய வாதம் பற்றி ஆய்வு செய்து, பின்னர் அவரிடம் பைஅத் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.!
ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள், முஹம்மது ரபீக் அவர்களை தையல் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டதோடு மட்டுமில்லாமல், அவரை தம்முடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்து விட்டார்கள். இந்த ஏற்பாட்டின் மூலம் எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கின்றதோ, அப்பொதெல்லாம் அஹ்மதிய்யத்தைப் பற்றி முஹம்மது ரஃபீக், அவருக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள்.!
ஹாஜி ஜுனூதுல்லாஹ்வும், மற்ற முஸ்லிம்களைப் போலவே, ஈஸா நபி (அலை) வானத்தில் உயிருடன் இருந்து வருகின்றார்கள், என்றாவது ஒரு நாள் அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அப்படி உரையாடும் போது, குறிப்பாக, ஈஸா நபியின் மரணம் தொடர்பாக பேசும் போது மட்டும் அது அவருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தும்.! மறுபக்கம், முஹம்மது ரஃபீக் அவர்களோ, ஒரு நேர்மையான மனிதராகவும், ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றக் கூடியவராகவும், நோன்பு வைக்கக் கூடியவராகவும், எவரிடமும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்த்து வந்தார். இதற்கும் மேலாக, தன்னுடைய மர்ஹூம் தந்தையாரின் அறிவுரையும் அவருடைய மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே அவர் ஒரு குழப்பமான சூழ்நிலையில் தவித்தார்.
ஒரு நாள், அவர் திருக்குர்ஆனை வாசித்துக் கொண்டிருந்த போது 40 அதிகாரம், 29 ஆம் வசனத்தை படித்தார்.! சூரா அல்-மூமின் இல் உள்ள அந்த வசனம்.
"என் இறைவன் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒரு மனிதரைக் கொலை செய்யப் போகின்றீர்களா? மேலும் அவர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால், அவரது பொய்யினால் விளையும் தீங்கு அவரையே சேரும். ஆனால் அவர் உண்மையாளராயின், அவர் உங்களுக்கு முன்னறிவித்தவைகளுள் சில தண்டனைகள் உங்களுக்கும் நேரும். நிச்சயமாக வரம்புகளை மீறுபவனுக்கும், பெரும் பொய்யனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 40: 29 )
இந்த வசனத்தை படித்த உடனே, ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் சிந்தை மயங்கி நின்று விட்டார்.! குர்ஆன் என்பது உயிரோட்டமுள்ள ஒரு புத்தகம் என்பதை அறிந்திருந்தார். எனவே அவர் இதனை தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாக கருதவில்லை.! உடனே அவர் முஹம்மது ரஃபீக்கை அழைத்து, ஆரத் தழுவிக் கொண்டார். அதன் பிறகு அவர் கலீஃபத்துல் மஸிஹ் (ரலி) அவர்களுக்கு, தாம் பைஅத் செய்ய விரும்புவதாக கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதே சமயம், அவர் அஹ்மதிய்யத்தை ஏற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்கவில்லை. காதியானுக்கு நடந்தே சென்று, அங்கு தன்னுடைய கலீஃபாவை சந்திப்பதற்காக, ஆபத்தானதும், மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்து விட்டார்.
காதியானுக்கு ஹாஜி ஜுனூதுல்லாஹ் ஸாஹிப் அவர்களின் வருகை
தன்னுடைய இந்த பயணத்தில் கழுத்து வரைக்குமான பனியில் பல முறை முங்கி விட்டதாக அவரே பதிவு செய்துள்ளார்.! (ஆதாரம்: Tarikh-e-Ahmadiyyat ,Vol 7,page 566) மலைகள் சூழ்ந்த, பனிபடர்ந்த பள்ளத்தாக்குகளை எல்லாம் கடந்து, பல மாதங்கள் பயணம் செய்து, காதியானை தேடிக் கொண்டே, இறுதியாக 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், காதியான் வந்தடைந்தார்கள்.! அங்கு ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்தார்கள்.
அப்போது, தன்னுடைய வயதான தாயாரும், ஒரு சகோதரியும் கூட தன்னுடன் சேர்ந்து பயணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்கள், ஆனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கப் பெறவில்லை என்பதை கலீஃபாவிடம் தெரிவித்தார்.
பயணம் இன்னமும் முடியவில்லை!
கலீஃபா அவர்களுடைய துஆவுடைய அருளின் வல்லமை எந்தளவுக்கு இருந்தது எனில், சில நாட்களுக்கு பிறகு அவருடைய தாயாருக்கும், சகோதரிக்கும் ஒரு வழியாக பாஸ்போர்ட் கிடைத்து விட்டதாகவும், அவர்கள் ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து 1938 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் தேதியன்று காதியானுக்கு புறப்பட தயாராகி வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதன் பிறகு, தம்முடைய தாயாரையும், சகோதரியையும் சந்திக்க வேண்டி, ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள், காஷ்மீர் வழியாக கில்கிட் (Gilgit) பயணம் மேற்கொண்டார்கள். ஒன்பது நாட்கள் பயணம் செய்து காஷ்மீருக்கு வந்தடைந்தார்.
அங்கு வந்த பிறகு தான் அவருடைய தாயும், சகோதரியும், வழிகாட்டிகளின் அலட்சியத்தால், காஷ்கரிலிருந்து புறப்பட்ட சரியான பயணக் குழுவை தவற விட்டுவிட்டார்கள் என்பதை அறிந்தார்கள்..! இப்போதைக்கு அவர்களை தொடர்பு கொள்ளும் வழியே இல்லாத நிலையில், ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள், துஆ செய்தவாறு, நன்கு தெரிந்த பாதையில் பயணம் செய்தவாறே, இரண்டாவது பயணக் குழுவினருடன் அவர்கள் வந்தால் சந்திக்கலாம் என்று நம்பிக்கை வைத்தவாறு சென்றார்.! இதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பும் இருக்கவில்லை..!! மனதில் இந்த நம்பிக்கையை வைத்தவாறே கில்கிட்டை விட்டு புறப்பட்டார்..!!
ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள் அச்சம்பவத்தை பிறகு நினைவுப்படுத்தி கூறுகின்றார்கள்.! "வெகு தூரத்தில், ஒரு பயணக் குழு வந்து கொண்டிருப்பதை நான் கண்டேன்.! ஒருவேளை, இந்தக் குழுவினருடன் என்னுடைய தாயும், சகோதரியும் வந்து கொண்டிருக்கலாம் என்ற சிந்தனை என் மனதில் வந்து போனது. மலை உச்சியிலிருந்து இந்த பயணக் குழு வந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது, கருப்பு நிற புர்காக்கள் அணிந்த இரண்டு பெண்களை கவனித்தேன்.! அவர்கள் குதிரையில் அமர்ந்திருந்தார்கள். அந்த குதிரைகளின் கடிவாளத்தை இரண்டு வழிகாட்டிகள் பிடித்திருந்தார்கள். நான் அந்த பயணக் குழுவை நெருங்கி, என்னுடைய தாயையும், சகோதரி பற்றியும் விசாரித்தேன். உண்மையில், அந்த இரண்டு பெண்களும், நான் தேடி வந்தவர்கள் தான் என்று தெரிந்து கொண்டேன்! அது நவம்பர் 24 ஆம் தேதி 1938 ஆம் ஆண்டாக இருந்தது. அந்த நாள் ஈதுல் ஃபிதர் என்னும் அருளுக்குரிய நாளாகவும் இருந்ததது.
பனியால் மூடப்பட்டு விட்ட காதியான் செல்லும் வழிகள்
அடுத்ததாக நிகழ்ந்த சம்பவங்கள் நடந்திருக்கா விட்டால், அவர்களுடைய உறுதியான தீர்மானமும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வெளிப்பட்டிருக்காது.!! ஹாஜி ஜுனூதுல்லாஹ்வும், அவருடைய வயதான தாயாரும், அவருடைய சகோதரியும், மற்றும் எஞ்சிய பயணக்குழுவினர்களும், கில்கித் வந்து சேர்ந்த போது, காஷ்மீருக்கு செல்கின்ற பாதையானது, கடும்பனியால் மூடப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
வேறு எந்த விதமான மாற்றுவழியும் இல்லை என்பதால் அவர்கள், கில்கித்திலேயே பத்து நாட்கள் தங்கி விட்டார்கள். அதன் பிறகு சித்ரால் (Chitral ) என்னும் நகரத்திற்கு பயணம் செய்ய முடிவெடுத்து , குதிரையின் மீதேறி, பதினொரு நாட்கள் பயணம் செய்த பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.! அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருந்த பிறகு, தெற்கு நோக்கி, மாலாகண்ட் (Malakand) மாவட்டத்திலிருக்கும், டார்கய் (Dargai) நோக்கி, ஒரு லாரியில் பயணப்பட்டார்கள். இவ்வாறு, அவர்கள் அஷ்ராத் (Ashrat ) என்ற நிறுத்தத்தை அடைந்த போது, பெஷாவரிலிருந்து வந்த ஓர் அரசு அதிகாரி, டீர் (Dir.) மற்றும் டார்கய் (Dargai ) செல்லும் வழியானது மிக, மிக ஆபத்தானது என்று, இந்த பயணக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்கின்றார். முன்னால் இருபத்தைந்து அடி உயரத்திற்கு பனி படர்ந்திருப்பதை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எனவே, வேண்டுமானால் நடந்து சென்று அந்த பாதையை கடக்கலாம் என்று கூறினார். பிறகு அவரே, ட்ரோஷ்க்கு (Drosh ) திரும்பிச் செல்லுங்கள், அங்கிருந்து ஜலாலாபாத் வழியாக, உங்கள் பயணத்தைத் தொடர என்னால் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் அறிவுரை கூறினார். எனவே இவர்கள், இருபத்தைந்து மைல்கள் பயணம் செய்து, ட்ரோஷ்க்கு திரும்பி வந்தார்கள். அங்கு அடுத்த பதினைந்து நாட்கள் தங்கியிருந்தார்கள்.
ஆனால், காதியான் செல்வதற்கு, தாம் திரும்பி வந்த பாதையே சாத்தியமானது என்றும், அதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும், உணர்ந்துக் கொண்டார்கள்.! எனவே, எந்த பாதையிலிருந்து திரும்பி வந்தார்களோ, அதே பாதையில் மீண்டும் செல்ல தொடங்கினார்கள்.
ஹாஜி ஜுனூதுல்லாஹ் ஸாஹிபின் தாயாரின் உடல்நிலை மோசமாகிறது
மீண்டும், அதே பாதையில் பயணம் புறப்பட்டு சென்ற போது, முதலில் அஷ்ராட் (Ashrat) என்னும் ஓய்விடத்தில் தங்கினார்கள். அதன் பிறகு அங்கிருந்து பனியில் நடந்தே சென்றவாறு, மாலை நேரத்தில் சியாரத் (Ziarat ) என்னும் இடத்தை அடைந்தார்கள். அடுத்த நாள், ஆறு அல்லது ஏழு மைல்கள் உயரத்திற்கு ஏற வேண்டியதாகி விட்டது.! மேலும் பனியானது அவர்களை கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கியது. அவர்களுக்கும் பயணத்தை தொடர்வதற்கு, நடந்தே செல்வதைத் தவிர, வேறு எந்த வழிமுறையும் இல்லாமல் ஆகிவிட்டது. விடியற்காலையில், மூன்று சுமைத் தூக்குபவர்களின் துணையுடன், பயணத்தை துவங்கி, பனி படர்ந்த அந்த சரிவில் ஏறியவாறு, அதன் உச்சியை, ஒரு வழியாக மதிய நேரம் போல அடைந்தார்கள்.!
அவ்வாறு, ஏறும் போது, ஹாஜி ஜுனூதுல்லாஹ்வின் தாயாரும், சகோதரியும், அடிக்கடி விழுந்து விடுவார்கள், ஆனாலும், பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என அச்சுறுத்தல் இருந்ததால், தங்கள் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார்கள். அதன் உச்சியை அடைந்த பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள். ஏனென்றால், அதற்கு அடுத்து, தங்களுக்கு ஒன்பது மைல்களுக்கு சரிவாக பயணம் செய்ய வேண்டியதிருக்கும் என்பதையும், அது முன்பை விட அதிக ஆபத்தானது என்பதையும் அறிந்திருந்தார்கள். இந்த சமயத்தில் தான், ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்களின் தாயாருக்கு, ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாமல் ஆகிவிட்டது. எனவே சுமை தூக்கிகள், அவர்களை வழுக்கும், அந்த பனிபடர்ந்த சரிவிலிருந்து சுமந்து கொண்டு செல்ல வேண்டியதாகி விட்டது. உறுதியாகவும் அதே சமயம் மெதுவாகவும், பயணம் செய்தவாறு, இருள் பரவத் தொடங்கும் அந்த நேரத்தில், அவர்கள் கோஜர் (Gojar ) என்னும் இடத்தை அடைந்து விட்டார்கள்.
இந்த கடினமான பயணமும், உறைய வைக்கும் கடும் குளிரின் மோசமான விளைவுகள், இனி வரவிருக்கின்றது. ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்களின் தாயாருக்கு கடும் காய்ச்சலுடன், முழு உடலும் வலிக்கத் தொடங்கி விட்டது. இனி மேற்கொண்டு பயணம் செய்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாக தோன்றியது.! ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்கள், அன்று இரவு முழுவதும் தன்னுடைய தாயாரை கவனித்துக் கொண்டார்கள்.! அவர்களுடைய ஈமானையும், உண்மையின் பால் கொண்ட தணியாத தாகத்தையும், இந்த காய்ச்சலால் எவ்வாறு தடுத்து நிறுத்த இயலும்?
பயணத்தின் கடைசி பகுதியும், காதியான் வந்தடைதலும்
சாதகமற்ற கடுமையான குளிரான சூழ்நிலையிலும், ஜுனூதுல்லாஹ்வின் தாயார், மறு நாள் காலையில், இந்த வரலாற்று பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் அளவுக்கு சக்தி உள்ளதாக உணர்ந்தார்கள்.! கோஜாரை (Gojar ) விட்டு புறப்பட்டு, மூன்று மைல்கள் பயணம் செய்த பிறகு, ஒரு வழியாக ஒரு குதிரையை ஏற்பாடு செய்து கொண்டு, அதில் ஹாஜி ஜுனூதுல்லாஹ்வின் தாயாரை பயணிக்க வைத்தார்கள். இன்னும் சிறிது தூரம் சென்ற பிறகு, மற்றொரு குதிரையைப் பார்த்து, அவருடைய சகோதரிக்காகவும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். இந்தக் குழுவானது, மெல்லக் கடந்து வந்தவாறு, அஸர் தொழுகை நேரத்தில், டீர் (Dir) என்னுமிடத்தை அடைந்தது. அன்றைய இரவு அவர்கள் அங்கேயே ஓய்வெடுத்தார்கள்.! மறுநாள் காலை 1939 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், டார்கய் (Dargai) செல்வதற்கு ஒரு லாரியில் ஏறிச் செல்லும் ஏற்பாட்டை, ஏதோ ஒரு வகையில் செய்து கொண்டார்கள்.! அங்கிருந்து, அமிர்தசரஸ் செல்லும் இரயிலைப் பிடித்து, 1939 ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதியன்று, அமிர்தசரஸ் வந்தடைந்தார்கள்.!
ஹாஜி ஜுனூதுல்லாஹ், அவருடைய வயதான தாயார், மற்றும் அவருடைய சகோதரி, ஆகியோரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணமானது, 1939 ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி, அன்று காலை, காதியானுக்கு சென்றடைந்த பிறகு, அங்கு ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்த பிறகு தான் முடிவுக்கு வந்தது.!
இடமிருந்து வலமாக, Dr. ஸையது ஹாஜி ஜுனூதுல்லாஹ் ஸாஹிப், அமானுல்லாஹ் ஸாஹிப் (உறவினர்), ஸையது அல்லே அஹ்மது ஸாஹிப் (மூத்த சகோதரர்)
அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், ஹாஜி ஜுனூதுல்லாஹ்வின் மூத்த சகோதரர், சையத் அல்லே அஹ்மது அவர்களும், அவருடைய மகன் அமானுல்லாஹ் என்பவரும், இதே வழியாக பயணம் செய்து, காதியான் வந்தடைந்தார்கள்! அவர்களுக்கும், ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்யும் வாய்ப்பு கிடைத்தது!
இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போன்று, அந்த அற்புதமான முன்னறிவிப்பு, இக்காலத்தின் இமாமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைத்துவத்திற்கு மட்டுமே சான்று அளிக்கவில்லை, உண்மையில், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மைத்துவத்தையும் நிலைநாட்டுகின்றது. மேலும், உண்மையைத் தேடுபவர்களுக்கு, இறைவன் இருக்கின்றான் என்பதைக் காட்டுகின்ற, ஓர் உயிருள்ள சான்றாகவும் இருக்கின்றது. உண்மையில், இந்த முன்னறிவிப்பானது இன்னும் பல வழிகளில் முழுமையாக நிறைவேறி இருந்தாலும், அந்த வார்த்தைகளில் கூறப்பட்டிருப்பதை போலவே, ஹாஜி ஜுனூதுல்லாஹ் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் தியாகங்கள் மூலமாகவும், இது முழுமையாக நிறைவேறியுள்ளது.!
1982 ஆம் ஆண்டு ஹாஜி ஜுனூதுல்லாஹ் அவர்களின் மகன், சையத் ஷூஐப் ஜுனூத் அவர்கள், ரப்வாவில் இருக்கும், மஸ்ஜித் முபாரக்கில், கூட்டுத் தொழுகைக்கு முன்னர், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர், ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ், மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) அவர்களின் முன்பாக, நஸ்ம் (கவிதை) ஒன்றை பாடினார்கள்.!
ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது ஸாஹிப்,
நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்கள்
அப்போது கலீஃபா அவர்கள் கூறினார்கள், "சற்று முன், நஸ்ம் படித்த சையத் ஷூஐப் அவர்களின் குடும்பமானது, அஹ்மதிய்யத்தின் உண்மைக்கான அடையாளங்களில் ஒன்றாகும். அந்த அடையாளமானது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புடனும், அறிவுரையுடனும் நேரிடையான தொடர்புடைய அடையாளமாகவும் உள்ளது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், இமாம் மஹ்தி தோன்றிவிட்டார் என்று கேள்விப்பட்டால், பனி மலைகளின் மீது தவழ்ந்து சென்றாவது, என்னுடைய ஸலாத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றொரு அறிவிப்பில், அவரிடம் பைஅத் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.! சையத் ஷீஐப்பின் தந்தையும், மாமாவும் அதாவது மறைந்த ஹாஜி ஜுனூதுல்லாஹ்வும், சையத் அல்லே அஹ்மது மற்றும் ஹாஜி ஜுனூதுல்லாஹ்வின் தாயார், அடிப்படையில் துர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.! அவர்கள், இமாம் மஹ்தியைப் பற்றி கேள்விப் பட்டார்கள், அஹ்மதிய்யத்தை ஏற்றுக் கொண்டார்கள்.! அதன் பிறகு அவர்கள், பனி மூடிய மலைச் சிகரங்களைக் கடந்து குடிபெயர்ந்து வந்தார்கள். அவர்கள் அந்த வழி முழுவதும், கடுமையான பல சோதனைகளையும், கஷ்டங்களையும் தாங்கி வந்தார்கள். ஆனால், தங்கள் உறுதிப்பாட்டில் சிறிதளவு கூட தளர்வடையாமல் பார்த்துக் கொண்டு உறுதியாக நிலைத்து நின்றார்கள். மஹ்தியின் இருப்பிடத்திற்கு சென்று, அங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸலாத்தை எட்ட வைத்தார்கள்.
இவ்வாறாக, அதாலத் கான் அவர்களால், விதைக்கப்பட்ட விதை, ஒரு போதும் வீணாகி விடவில்லை.! முஹம்மது ரஃபீக் அவர்கள், அதை மேலும் பழம் தரும் வரையில் அதனை டாக்டர் சையத் ஹாஜி ஜுனூதுல்லாஹ்வின் வடிவிலே வளர்த்தார்கள்! அவர்களின் வம்சாவளி இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. இந்த அழகான மரம், தொடர்ந்து பழங்களைத் தரும், இன்றைக்கும் கூட அவர்களின் வம்சாவளியில் சிலர், அன்று அதாலத் கான் அவர்கள் தொடங்கி வைத்தது போன்றே, இஸ்லாம் அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தியை பரப்புவதற்காக தங்கள் வாழ்வையும் அர்ப்பணித்துள்ளார்கள் !!
மூலம்:- Kashgar to Qadian authored by Zafir Mahmood Malik /The Review of Religions._August 2022
தமிழில்: A.முபாரக் ஸாஹிப், சென்னை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None