அஹ்மதி முஸ்லிம்கள், இப்படிப்பட்ட குஃப்ர் ஃபத்வாக்களின் (Takfeerism) அபாயங்களைப் பற்றியும், அது எவ்வாறு முஸ்லிம் உம்மத்தை பிரிக்கின்றது என்பதை பற்றியும், சுட்டிக் காட்டும்போது, அஹ்மதியல்லாத முஸ்லிம்கள், அஹ்மதிய்யா முஸ்லிம் நூல்களிலிருந்து , அஹ்மதியல்லாத முஸ்லிம்களை, காஃபிர் என்றோ முஸ்லிம் அல்லாதவர்கள் என்றோ கூறப்பட்டுள்ள , சில வரிகளையோ, வாக்கியங்களையோ அல்லது பத்திகளையோ சுட்டிக் காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். நான் இந்த கட்டுரையில், இஸ்லாம் மற்றும் குஃப்ர் பிரச்சினை தொடர்பாகவும், உண்மையான பொருளில் முஸ்லிம் என்றால் என்ன ? என்பது பற்றியும், முஸ்லிம் உம்மத்தில் ஓர் உறுப்பினராக இருப்பதில் இருந்தும் அது எவ்வாறு வேறுபாடு கொண்டதாக உள்ளது ? என்பது பற்றியும் வெளிப்படுத்தப் போகிறேன்.
எவர் ஒருவர் கலிமா கூறுவாரோ, அவர் முஸ்லிமாவார்
எவரொருவர் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, கலிமாவும் (இஸ்லாமிய
கொள்கை) கூறுவாரோ , அவரை முஸ்லிம் என்றே கருத வேண்டும். முதலில்,
இதில் தெளிவாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் ! அஹ்மதிய்யா ஜமாஅத்தின் எல்லா நூல்களிலிருந்தும், ஒரு கலிமா சொல்பவரை, இஸ்லாத்தை விட்டும் விலகியவராக கருத வேண்டும் என்ற குறிப்பு வந்துள்ளதாக,
ஒரே ஓர் இடத்தைக் கூட காட்ட முடியாது !
இது தொடர்பாக, ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்கள் எழுதுகின்றார்கள்:
"ஆரம்ப காலத்திலிருந்தே என்னுடைய நம்பிக்கை என்னவென்றால்,
என்னுடைய வாதத்தை மறுக்கின்றவர்,
காஃபிர் என்றோ தஜ்ஜால் என்றோ ஆகிவிட மாட்டார் என்பதேயாகும்.
எனினும், அவர் வழி தவறியவராகவும்,
நேர்வழியிலிருந்து விலகியவராகவும் இருக்கின்றார்
"
[திர்யாக்குல்
குலூப், ரூஹானி கஸாயின், தொகுதி
15, பக்கம் 432]
அதே போன்று அன்னார் எழுதுகிறார்கள்:
"கலிமா கூறும் எவர் ஒருவரையும் நான் காஃபிர் என்று கூறுவதில்லை"
[திர்யாக்குல்
குலூப், ரூஹானி கஸாயின், தொகுதி
15, பக்கம் 433]
அன்னாரின், இறுதி நாட்களில்,
ஸர். ஃபஸல் ஹுஸைன் என்னும் ஓர் அரசியல் தலைவர்,
அன்னாரை சந்திப்பதற்காக வந்திருந்த போது,
சில கேள்விகளை கேட்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில்,
"அஹ்மதியல்லாத முஸ்லிம்கள் அனைவரையும் , காஃபிர் என்றழைத்தால்,
இஸ்லாத்தில் யாருமே எஞ்சி இருக்க முடியாது” என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கையில் , வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்கள் கூறினார்கள்.
"எங்களை காஃபிர் என்றழைத்து, அதன் மூலம் தன்னை காஃபிர் ஆக்கிக்கொள்பவரைத் தவிர,
கலிமா கூறும் ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் என்று நாம் கருதுவதில்லை."
[மல்ஃபூஸாத் 1988 ஆம் ஆண்டு பதிப்பு, தொகுதி 5. பக்கம் 635]
எவர்கள் கலிமாவை கூறுவார்களோ,
அவர்கள் முஸ்லிம்களாவர், எவருக்கும் அவர்களை காஃபிர் என்றழைப்பதற்கு உரிமையில்லை என்பது,
இந்த அறிவிப்புகளின் ஒளியில் மிகவும் தெள்ளத் தெளிவாக விளங்கி விடுகின்றது. இது இஸ்லாத்தின் ஓர்
அடிப்படை கொள்கையாகும். மேலும்
இந்த கொள்கையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உறுதியாக இருக்கின்றது.
இரண்டு வகையான குஃப்ர் (நிராகரிப்பு)
அஹ்மதியல்லாத முஸ்லிம்களை, காஃபிர் என்று கூறப்பட்ட,
அந்த மேற்கோள்கள் தொடர்பாக,
ஏன்? என்று கேள்வி கேட்கலாம்.
அவை மேலே கூறப்பட்ட கொள்கைக்கு முரணானது அல்ல. அஹ்மதியல்லாத முஸ்லிம்கள், காஃபிர்கள் எனக் கூறப்பட்டார்கள் என்றால் அதன் பொருள், அவர்கள் இஸ்லாத்தை விட்டும் முழுமையான முறையில் வெளியேறிவிட்டவர்கள் என்பது அல்ல. அவர்கள் முஸ்லிம் உம்மத்திற்குள் தான் இருக்கின்றார்கள், மேலும் அவர்கள்,
மில்லத்தே இஸ்லாமில் (இஸ்லாமிய சமூகத்தில்) ஓர் அங்கமாகவே இருக்கின்றார்கள்.
இது நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்,
சில செயல்பாடுகளை குஃப்ருடன் சமப்படுத்தி கூறியது போன்றதாகும். அதே சமயம், அப்படிப்பட்ட பாவங்களை செய்கின்றவரை , காஃபிர் என்றோ அல்லது இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் என்றோ கூறவில்லை.
உதாரணமாக, அன்னார் கூறியதாக வந்துள்ளது,
"எவர் தெரிந்து கொண்டே தன்னுடைய தந்தையில்லாத,
வேறு ஒருவரை தந்தை என்று வாதிப்பாரோ,
அவர் குஃப்ர் (நிராகரிப்பாளர் ஆகி
விட்டார்) செய்து விட்டார்."
[ஸஹீஹ்
முஸ்லிம், புத்தகம் 1, ஹதீஸ் 123].
அதே போன்று அன்னார் (ஸல்)
கூறியுள்ளார்கள்:
اِنَّ
بَیْنَ الرُّجُلِ وَ بَیْنَ الشِّرْکِ وَ الْکُفْرِ تَرْکَ الصَّلَاۃِ
"நிச்சயமாக,
மனிதனுக்கும்,
இணைவைத்தல் மற்றும் குஃப்ர் (நிராகரிப்பு)
ஆகியவற்றிற்கும்,
இடையே உள்ளது; தொழுகையை அலட்சியப்படுத்துவது தான்
"
[ஸஹீஹ்
முஸ்லிம், புத்தகம் 1, ஹதீஸ் 153].
வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஒருவர் தொழுகையை விட்டு விடுதல் என்பது அவர் குஃப்ர் செய்து விட்டார் என்பதாகும். வெளிப்படையாக தெரிவது
என்னவென்றால், ஒரு முஸ்லிம் எப்போதெல்லாம் தொழுகையை கைவிடும் பாவத்தை செய்வாரோ,
அப்போதெல்லாம் அவரை காஃபிர் என்றும்,
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர் என்றும் அறிக்கை விட வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல
என்பதாகும்.
மாறாக, இவை எல்லாம் பாவமான செயல்கள், ஒருவர் இப்படிப்பட்ட பாவங்களில் ஈடுபடும் போது, அவரோ அல்லது அவளோ ஒரு வகையில் குஃப்ர் செய்து விட்டார் என்றே பொருளாகின்றது. அவர்கள் இஸ்லாத்தை தங்கள் மார்க்கமாக பேணி வருபவர்களாகவும், கலிமாவின் மீதான தங்கள் நம்பிக்கையை பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கும் நிலையில், அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. சில தனி நபர்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு நேரிடையாக முரண்படும் கொடுமையான குற்றங்களில் ஈடுபடலாம். இருப்பினும், அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்றும் கூறிக் கொண்டு, கலிமாவின் மீது நம்பிக்கையுள்ளதாக வாதமும் செய்யலாம். அவர்களைக் குறித்து நம்மால் தீர்ப்பளிக்க முடியாது. அவர்களின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அளவை தீர்மானிப்பது என்பது அல்லாஹ்வுக்கு உரியதாகும் ! அவர்களுடைய நம்பிக்கையை பொருத்தவரை, அவர்களின் உள்ளங்களில் உள்ளதை நாம் அறிவோம் என்று நாம் வாதிப்பது கிடையாது. அவர்கள் ஷரீஅத் சட்டத்தை மீறுவார்கள் என்றால் முஸ்லிம் சட்டத்தின் படி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் செய்த குற்றத்தின் காரணமாக அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாகி விட்டார்கள் என்று கருதிக் கொள்ளக் கூடாது.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்கள் , வாக்களிக்கப்பட்ட மஸீஹும், இமாம் மஹ்தியுமாவார்கள் என்று நம்புவது, நம்பிக்கையின் ஒரு முக்கியமான அம்சமாகும்.
மேலும், வாக்களிக்கப்பட்ட மஸீஹை மறுப்பது என்பது குஃப்ரின் ஒரு வடிவமாகும் என்பது அஹ்மதி முஸ்லிம்களின் புரிதலாகும் என்பது இப்பொழுது நிச்சயமாக தெளிவாகி இருக்கும்.
ஒருவரை உம்மத்தை விட்டு அல்லது சமூகத்தை விட்டு வெளியேறியவர் என்று கருதுமளவுக்கு காரணமாக இருக்கும் குஃப்ராக அது இருக்கவில்லை. வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்களை ஏற்க மறுக்கும் ஒரு முஸ்லிம், இஸ்லாமிய சமூகத்தின் ஓர் உறுப்பினராகவே இருப்பார். ஆனால்,
அதே சமயம் அவர் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்களை ஏற்க மறுத்து குஃப்ர் செய்து விட்டார். அவர் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்களை ஏற்க மறுத்து விட்டார்,
ஆனால் கலிமாவை தொடர்ந்து சொல்கிறார்,
அல்லாஹ்வின் மீதும்,
ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் மீதும் நம்பிக்கை இருப்பதாக பறை சாற்றுகிறார். அப்படிப்பட்டவர்களை பொதுவாக அஹ்மதியல்லாத முஸ்லிம்கள் என்று நாம் குறிப்பிடுகின்றோம். அவர்களை ஒரு போதும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று நாம் குறிப்பிடுவதில்லை.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நூல்களில் , எங்கெல்லாம் அஹ்மதியல்லாத முஸ்லிம்களை, காஃபிர் அல்லது இஸ்லாமிய வரம்பை விட்டு வெளியேறியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம், அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை மறுப்பவர்கள் என்பதை சுட்டிக் காட்ட மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் சமூகத்தை விட்டோ அல்லது முஸ்லிம் உம்மத்தை விட்டோ போய் விட்டார்கள் என்பது அதன் பொருள் அல்ல. அவர்கள் பரந்து விரிந்த முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தொடர்கின்றார்கள். எங்களுடைய புரிதலில் இருந்து , அவர்கள், உண்மையான இஸ்லாத்தின் எல்லையை கடந்து சென்று விட்டாலும், உம்மத்தின் ஓர் அங்கமாகவே இருக்கின்றார்கள்.
உண்மையான இஸ்லாம் என்றால் என்ன.?
பல்வேறு முஸ்லிம் பிரிவுகளும்,
பல்வேறு முறையில் அதனை வரையறை செய்கின்றன.
அஹ்மதிய்யா முஸ்லிம்களின் பார்வையில், உண்மையான இஸ்லாம் என்பது,
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
(அலை) அவர்கள் மீது நம்பிக்கை கொள்வதையும்,
அன்னாருடைய கலீஃபாக்களுக்கு கட்டுப்படுதலையும் உள்ளடக்கியதாகும். இதைப் போன்றே,
மற்ற ஒவ்வொரு முஸ்லிம் பிரிவும், தங்களுடைய பிரிவின் தனிச்சிறப்பான நம்பிக்கைகளை, உண்மையான இஸ்லாத்தின் பகுதியாக கருதுகிறார்கள். இது அவர்களுடைய விளக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தைப் பொருத்தவரையில் , இப்படிப்பட்ட எல்லா பிரிவுகளும்,
இஸ்லாம் என்னும் கொடியின் கீழ் வந்து விடும்.
அவர்கள் இக்காலத்தின் இமாம் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ளாத தவறை செய்திருந்தாலும் சரியே.
நம்பிக்கை மற்றும் குஃப்ரின் (நிராகரிப்பு)
அளவுகள்
குஃப்ரின் பல்வேறு வடிவங்கள் குறித்த இந்த உரையாடல் என்பது அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு மட்டுமே உரித்தானதல்ல. இமாம் இப்னு தைமிய்யா அவர்கள்
இது பற்றி தம்முடைய "கிதாபுல் ஈமான்" என்னும் நூலில் விவாதிக்கின்றார்கள். அவர்கள் எழுதுகின்றார்கள்:
فَقَالَتِ
الْعُلَمَاءُ فِیْ تَفْسِیْرِ الْفُسُوْقِ ھَاھُنَا ھِیَ الْمَعَاصِیْ قَالُوْا فَلَمَّا
کَانَ الظُّلْمُ ظُلْمَیْنِ وَ الْفِسْقُ فِسْقَیْنِ کَذَالِکَ الْکُفْرُ کُفْرَانِ
اَحَدُھُمَا یَنْقُلُ عَنِ الْمِلَّۃِ وَ الْاٰخِرُ لَا یَنْقُلُ عَنِ الْمِلّۃِ
ஃபுஸூக் பற்றி விளக்கம் அளிக்கையில், அறிஞர்கள்; இது ஒரு பாவத்தைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
அவர்கள் கூறுவதாவது
, அநீதி
(ஜுல்ம்)
இரண்டு வகையாக இருப்பது போல,
கட்டுப்படாமை
(ஃபிஸ்க்) இரண்டு வகையாக இருப்பது போல, நிராகரிப்பு (குஃப்ர்)
கூட இரண்டு வகையாகும்.
குஃப்ரின் ஒரு வடிவம்,
ஒருவரை முஸ்லிம் சமூகத்தில் இருந்தே வெளியேற்றுகிறது.
இன்னொரு வடிவம் என்னவென்றால்,
அவரை அது முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதில்லை.
[மஜ்மூ ஃபத்தாவா ஷைகுல் இஸ்லாம், இப்னு தைமிய்யா, தொகுதி 7, கிதாபுல் ஈமான், பக்கம் 328-329 ]
வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் , எவரின் மீதாவது குஃப்ர் என்ற வார்த்தையை சாட்டும் போது, அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டவர், என்று தானாகவே பொருள் கொள்ள முடியாது. அவர் அச்சத்திற்குரிய பெரும் பாவத்தை செய்திருக்கலாம். ஆனால் இஸ்லாத்தை விட்டும் அவர் வெளியேறவில்லை. அவர் பரந்துவிரிந்த முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறார், அவரை முஸ்லிம் அல்லாதவர் என்று கூற இயலாது. இருப்பினும், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மீதான நம்பிக்கையை போன்ற, இஸ்லாத்தின் கோட்பாடுகளில் ஒன்றை மறுத்தவர் என்பதால், அவரை காஃபிர் என்றழைக்கலாம்.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது
(ரலி) அவர்களிடம்,
1953 ஆம் ஆண்டு இதே கேள்வியை நேரிடையாக கேட்ட போது,
இதே விளக்கத்தை அன்னார் வழங்கினார்கள். அன்னாரிடம் கேட்கப்பட்டது,
"மிர்ஸா குலாம் அஹ்மது
(அலை)
அவர்களிடம் பைஅத் செய்யாத முஸ்லிம்கள் அனைவரையும்
, மிர்ஸா ஸாஹிப் என்கிற அவர்களின் பெயரைக் கூட கேள்விப்படாத,
அந்த எல்லா முஸ்லிம்களையும்,
காஃபிர்,
இஸ்லாமிய எல்லையை விட்டு வெளியேறியவர்கள் என்று இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றீர்களா?”
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது,
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊத் (ரலி)
கூறினார்கள்.
எனவே, நான் யாரை முஸ்லிம் என்று கருதுகிறேன் என்பதற்கு இந்த மேற்கோள் ஒன்றே சான்றாகும். எனவே, நான் காஃபிர் என்ற பதத்தை பயன்படுத்துகின்றேன் எனில், அவர்களை இரண்டாம் வகை காஃபிர் என்றே கருதுகிறேன் என்பதாகும். இது விஷயமாக நான் ஏற்கனவே விளக்கமாக கூறியுள்ளேன். அதாவது அவர்கள் சமூகத்தை விட்டும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. நான் அவர்களை இஸ்லாமிய வரம்பை விட்டும் அப்பாற்பட்டவர்கள் என்று கூறும் போது, "முஃப்ரிதாத்தே ராகீப்” (பக்கம் 240 ) என்னும் நூலில் இருப்பதை புரிந்து கொண்டதிலிருந்து சிந்தித்து கூறுகின்றேன். அதில் இரண்டு வகையான இஸ்லாம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று "தூனல் ஈமான்" ( உண்மையான நம்பிக்கை இல்லாமல்) என்பது. மற்றொன்று "ஃபவ்கல் ஈமான்" (உண்மையான நம்பிக்கையுடன்) . "தூனல் ஈமான்" என்பது எந்த முஸ்லிம்களின்; இஸ்லாத்தின் நிலை, உண்மையான நம்பிக்கையை விட குறைந்திருக்குமோ, அவர்களை உள்ளடக்கியதாகும். "ஃபவ்கல் ஈமான்" என்பது தனிச்சிறப்பான அளவில், நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் முஸ்லிம்களை குறிப்பதாகும். எந்த அளவிற்கென்றால், அவர்கள், சாதாரண அளவிலான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை விட, அதிக உயர்வான நம்பிக்கைக் கொண்டவர்களாக விளங்குபவர்கள். எனவே, சில மக்களை நான் இஸ்லாத்தின் வரம்பை விட்டு வெளியில் இருப்பவர்கள் எனக் கூறுகின்றேன் என்றால், அவர்களை " ஃபவ்க்கல் ஈமான்" என்ற வரையறைக்குள் அடங்கும் முஸ்லிம்களுடன் ஒப்பிட்டவாறு , அந்த சிந்தனையில் தான் கூறுகின்றேன். மிஷ்காத்திலும் கூட ஒரு ஹதீஸ் , ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. அதாவது:
“எவர் ஒருவர்,
அநீதி செய்யும் ஒருவருக்கு, உதவியும் ஆதரவும் அளிப்பாரோ, அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றார்"
[தஹ்க்கீக்காத்தே அதாலத் மே(ன்) ஜமாஅத் அஹ்மதிய்யா கா பயான்]
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊத்
(ரலி) அவர்கள் மேற்கோள் காட்டிய இமாம் ராகிப் அவர்களின் கருத்து கீழ்வருமாறு வருகிறது
.
"ஷரீஅத்தில் இரண்டு விதமான இஸ்லாம் உண்டு. அதில் ஒன்று "தூனல் ஈமான்" (உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருப்பது ) இது நாவினால் மட்டும் பறைசாற்றுபவரை குறிக்கின்றது - அவர் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டாலும் சரி ,அல்லது செயல்படாவிட்டாலும் சரியே .! - இதன் மூலம் தனி ஒருவருக்கு பாதுகாப்பு கிடைத்து விடுகின்றது. இது (திருமறையில்) அல்லாஹ்வின் அந்த கூற்றைப் போன்றது ஆகும். "நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே இதுவரை) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாக) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள்." (49:15) இரண்டாவது ‘ஃபவ்க்கல் ஈமான்’ (உண்மையான நம்பிக்கையுடன் இருத்தல்) ஆகும். அது உள்ளத்தில் நேர்மையாகக் கொண்டிருக்கும் நம்பிக்கையை குறிக்கின்றது, செயல்களினால் வெளிப்படுத்தப்படும் விசுவாசத்தைக் குறிக்கின்றது, மேலும் அல்லாஹ்வினால் தீர்ப்பளிக்கப்பட்ட அனைத்திலும், அவனுக்கு முழுமையாக கீழ்ப்படிவதையும் குறிக்கின்றது. அதாவது, திருமறையில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) குறித்து அல்லாஹ்வின் வசனத்தில் கூறப்பட்டுள்ளது போன்றதாகும்.
அவருடைய இறைவன் அவரிடம், “அடிபணிவீராக” என்று கூறியபொழுது, “நான் அனைத்துலகங்களின் இறைவனுக்கு அடிபணிந்து விட்டேன்” என்று அவர் கூறினார். (2:132)
எனவே, பல்வேறு வகையான குஃப்ர் இருப்பது போல், பல்வேறு வகையான நம்பிக்கைகளும் உள்ளன. இமாம் ராகீப் அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் இது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
قَالَتِ الۡاَعۡرَابُ اٰمَنَّا ؕ قُلۡ لَّمۡ تُؤۡمِنُوۡا وَلٰکِنۡ قُوۡلُوۡۤا اَسۡلَمۡنَا وَلَمَّا یَدۡخُلِ الۡاِیۡمَانُ فِیۡ قُلُوۡبِکُمۡ ؕ وَاِنۡ تُطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ لَا یَلِتۡکُمۡ مِّنۡ اَعۡمَالِکُمۡ شَیۡئًا ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாக) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள்.ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால், உங்கள் செயல்களுள் எதனையும் அவன் குறைத்து விட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ( திருக்குர்ஆன் 49: 15 )
சுருக்கமாக, இங்கு நினைவில் கொள்ள வேண்டிய அம்சங்களாவது,
1. நம்பிக்கையின் முதல் படி நிலையானது, நாங்கள் கட்டுப்பட்டோம் / நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம் , என்று கூறுபவர்களால் ஆனது. இவர்களின் நிலை "தூனல் ஈமான்" என்றும் விவரிக்கப்படுகின்றது. அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் அங்கத்தினர்கள் ஆவார்கள்.
2. நம்பிக்கையின் இரண்டாம் படி நிலை என்பது, உண்மையான நம்பிக்கையாளர்கள் / அவர்கள் முழுமையான நம்பிக்கையுடையவர்கள் என்பது ஆகும். இவர்களின் நிலை "ஃபவ்க்கல் ஈமான்" என்று விவரிக்கப்படுகின்றது.
3. இதைப் போன்று தான் உண்மையான குஃப்ர் என்பது இஸ்லாத்தை அடியோடு மறுப்பது,/ முஸ்லிம் அல்லாதவர்களாக மாறுவது/ இஸ்லாமிய சமூகத்தை விட்டும் விலகுவதுமாகும்.
4. குஃப்ரின் மற்றொரு வடிவம் என்பது,
இஸ்லாத்தின் ஓர் அம்சத்தை மறுப்பது,
அதே சமயம் இஸ்லாமிய சமூகத்தின் ஓர் உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பது.
https://www.alislam.org/articles/are-non-ahmadis-muslim-or-non-muslim-ahmadiyya-muslim-perspective
இந்த கட்டுரை பின்வரும் நூல்களில் வழங்கப்பட்டுள்ள வாதங்களின் அடிப்படையில் ஆனதாகும்: தூஸ்ரி அய்னி தர்மீம் 1974, குஸூஸீ கமிட்டி மே(ன்) கியா குஸ்ரி, பக்கங்கள் 83-196, மஸாமீனே பஷீர் தொகுதி 1, பக்கங்கள் 7-15, அஹ்மதிய்யா மஸ்அலா கௌமி அஸெம்பிலி மே(ன்)
ஆக்கம்: ஃபர்ஹான் இக்பால் ஸாஹிப், கொள்கை பரப்புநர், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், கனடா )
தமிழில்: சகோதரர் A.முபாரக் ஸாஹிப், சென்னை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None