ஹஸ்ரத்‌ வாக்களிக்கப்பட்ட மஸீஹ்‌ (அலை) அவர்களின்‌ எழுத்துக்களின்‌ ஒளியில்‌ காத்தமுன்னபிய்யீன்‌ என்பதன்‌ உண்மையான விளக்கம்

 

ஸய்யிதுனா ஹஸ்ரத்‌ வாக்களிக்கப்பட்ட மஸீஹ்‌ (அலை) அவர்களின்‌ எழுத்துக்களின்‌ ஒளியில்‌ காத்தமுன்னபிய்யீன்‌ என்பதன்‌ உண்மையான விளக்கம்‌

அஹ்ஸாப் அதிகாரத்தின் 41-வது வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காத்தமுன்னபிய்யீன் என்ற மகத்தான பட்டத்தை வழங்கியுள்ளான். காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு கீழ்க்காணும் பொருள்கள் இருக்கின்றன:

(1) எல்லா நபிமார்களை விடவும் சிறந்தவர்

(2) நபித்துவம் இந்த நபியின் மூலமாகவே அதன் முழுமையையும் சிறப்பையும் எட்டியது. அதன் பக்கம்,

اَلْيَوْمَ اَ كْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا

இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன். மேலும் உங்களுக்கு என் அருளை நிறைவு செய்துள்ளேன். மேலும் உங்களுக்கு மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்ற வசனம் சுட்டிக் காட்டுகின்றது. (5:4)

(3) நபிமார்களின் முத்திரை. அதாவது காத்தம் என்பதன் ஒரு பொருள் முத்திரையாகும். பெருமானார் (ஸல்) அவர்களின் சாட்சி முத்திரை இல்லாமல் ஆன்மீகத்தின் எந்தவொரு தகுதியையும் அந்தஸ்தையும் எவரும் பெற முடியாது என்பது இதன் கருத்தாகும். அதனை இந்த வசனம் உண்மைப்படுத்துகின்றது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللّٰهُ

(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயின் என்னைப் பின்பற்றுங்கள். (அப்போதுதான்) அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். (3:32)

எனவே, அல்லாஹ்வை நேசிப்பது, அவர்களைப் பின்பற்றுவதையே சார்ந்திருக்கும்போது அவர்களைப் பின்பற்றாமலும் அவர்களின் சாட்சி முத்திரை இல்லாமலும் ஆன்மீகத்தின் எந்தவொரு தகுதியும் அந்தஸ்தும் ஒருவருக்கு கிடைப்பது எப்படி சாத்தியமாக முடியும்?

 

காத்தமுன்னபிய்யீன் என்பதன் ஒரு பொருள் நபிமார்களின் ஆன்மீகத் தந்தை என்பதாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் பெருமானார் (ஸல்) அவர்கள் எந்தவோர் ஆண் மகனுக்கும் பெளதீக தந்தையாக இருப்பதை மறுத்துக் கூறியுள்ளான். ஏனென்றால், பெளதீகத் தந்தையாக இருப்பது மிகவும் கீழ்நிலையிலுள்ள ஒரு தகுதியாகும். ஆனால், ஆன்மீகத் தந்தையாக இருப்பது ஒரு மிகப் பெரும் தகுதியாகும். எனவே அல்லாஹ், எங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் பெளதீகத் தந்தையாக இருப்பதை மறுத்துள்ளானோ அங்கு அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் ஆன்மீகத் தந்தையாக இருக்கின்றார்கள் என்பதையும் கூறியுள்ளான். இது ஒரு மகத்தான அந்தஸ்தும் தகுதியுமாகும்.

(5) காத்தமுன்னபிய்யீன் என்பதன் இன்னொரு பொருள் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஷரீஅத்தை உடைய நபியாக இருக்கிறார்கள் என்பதாகும். அவர்களுக்கு பிறகு இனி ஷரீஅத் உடைய எந்த நபியும் வர முடியாது. அவ்வாறே மார்க்கக் கட்டளைகள் உள்ள எந்தவொரு வேதமும் வர முடியாது. திருக்குர்ஆன் இறுதி ஷரீஅத் ஆகும். அது மறுமை வரைக்கும் உள்ளதாகும். பெருமானார் (ஸல்) அவர்கள் முழு உலகிற்கும் இறுதி ஷரீ அத்தை உடைய நபியாக இருக்கிறார்கள். ஆனால் அன்னாரைப் பின்பற்றியவாறும் அன்னாரது அடியாராக இருக்கின்ற நிலையிலும் ஒருவர் நபியாக வர முடியும். இதனை இந்த வசனம் உண்மைப்படுத்துகின்றது.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰۗىِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاۗءِ وَالصّٰلِحِيْنَ ۚ وَحَسُنَ اُولٰۗىِٕكَ رَفِيْقًا

அதாவது அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களான நபிமார்கள், சித்தீக்குகள் (உண்மையாளர்கள்), ஷஹீதுகள் (உயிர்த் தியாகிகள்), சாலிஹுகள் (நல்லவர்கள்) ஆகியோரைச் சார்ந்தவர்களாய் இருப்பார்கள். (4:70),

அதாவது நபி, சித்தீக், ஷஹீது, ஸாலிஹ் ஆகிய அருட்கொடைகளில் எந்தவோர் அருட்கொடையும் அவர்களால் பெற முடியும். நமது அஹ்மதி அல்லாத சகோதரர்கள் கூறுவதுபோன்று ஒருவர் நபியாக ஆக முடியாது என்று கூறுவதாக இருந்தால் பிறகு அப்படிப்பட்டவர் சித்தீக்காகவும், ஷஹிதாகவும், சாலிஹாகவும் கூட ஆக முடியாது.

 

(6) காத்தமுன்னபிய்யீன் என்பதற்கான பொருள்களில் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதன் விளைவாக அல்லாஹ்விடமிருந்து இல்ஹாமைப் பெறுகின்ற மற்றும் அவனுடன் உரையாடுகின்ற நற்பேற்றையும் அவன் வழங்குகின்றான். ஏனென்றால், எந்த நபியைப் பின்பற்றுவதன் மூலமாக நபித்துவம் கிடைக்க முடியுமோ அந்த நபியைப் பின்பற்றுவதன் மூலமாக இறைவனுடன் உரையாடுகின்ற நற்பேறு ஏன் கிடைக்காது? முந்தைய நபிமார்களைப் பின்பற்றியதன் விளைவாக இறைவனுடன் உரையாடுகின்ற நற்பேறு கிடைத்துக் கொண்டிருந்தது என்றால் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் விளைவாக இந்த நற்பேறு முன்பை விட அதிகமாகவும் சிறப்பாகவும் கிடைக்க வேண்டும்.

காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு அனைத்துமே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகிமைக்கேற்ப இருக்கின்றது. நமது அஹ்மதி அல்லாத சகோதரர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களை விட உயர்ந்தவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருக்கின்றார்கள் என்ற பொருளில் அன்னார் காத்தமுன்னபிய்யீனாக இருக்கின்றார்கள் என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், காத்தமுன்னபிய்மீன் என்பதற்கு அவர்கள் தருகின்ற விளக்கங்களின் மூலமாக எல்லா சிறப்புகளையும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து பறித்து விடுகின்றனர்.

உதாரணமாக, பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த வகையிலுள்ள நபியும் வர முடியாது. அதாவது பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் விளைவாக அன்னாரின் நிழலாக இருக்கின்ற அல்லது அன்னாரது உம்மத்தைச் சார்ந்த எந்த நபியும் வர முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அடைக்காத அந்த மகத்தான அருட்கொடையின் கதவுகளை இவர்கள் அடைக்கின்றனர். மேலும் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வஹி மற்றும் இல்ஹாமின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்று அவர்கள் கூறுகின்றனர். ஒருவகையில் முன்னுள்ள சமுதாயங்களில் அவர்களது நபிமார்கள் மூலம் தொடர்ந்து கிடைத்து வந்த அந்த அருளை பெருமானார் (ஸல்) அவர்கள் தனது உம்மத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்படி செய்யவில்லை. மாறாக, அதனை அவர்கள் அடைத்து விட்டார்கள்.

ஆக, நபித்துவத்தின் வாசலும் அடைக்கப்பட்டு விட்டது. இல்ஹாம் வருவது மற்றும் இறைவன் பேசுவது ஆகியவை நின்று விட்டது என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஆன்மீகத்தின் எல்லா வழிகளையும் அவர்கள் அடைத்து விட்டனர். ஸய்யிதுனா வ மவ்லானா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சில உயரிய கூற்றுக்களைக் கீழே தருகின்றோம். அவற்றில் அன்னார் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு இறைஞானமிக்க விளக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் இறைவனுடன் உரையாடுகின்ற நற்பேற்றைப் பெறுவது சாத்தியமற்றதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்பது காத்தமுல் அன்பியா என்பதன் ஒரு பொருளாகும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காத்தமுல் அன்பியாவாக இருக்கின்றார்கள் என்று கூறப்பட்டிருப்பது அவர்களுக்கு பிறகு இறைவனுடன் உரையாடுவதற்கான வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்ற பொருளில் அல்ல. இதுவே அதன் பொருளாக இருந்திருந்தால் இந்த சமுதயாம் ஷய்த்தானைப் போன்று இறைவனை விட்டு விட்டு தொலைவில் சென்று விட்ட கைவிடப்பட்ட ஒரு சாபத்திற்குரிய சமுதாயமாக இருந்திருக்க வேண்டும். மாறாக, நேரடியாக இறைவனிடமிருந்து வஹியின் அருளைப் பெறுவது நிறுத்தப்பட்டிருக்கின்றது என்பதே இதன் பொருளாகும். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் இந்த அருளை ஒருவர் பெறுவது சாத்தியமற்றதும் தடை செய்யப்பட்டதுமாகும். இது சுயமே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பெருமையாகும். அதாவது அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அருள் கிடைக்கின்றது. அதாவது ஒரு நபர் முழுமையான முறையில் அவர்களைப் பின்பற்றுபவராகும்போது இறைவனுடன் உரையாடுகின்ற நற்பேறு அவருக்கு கிடைக்கின்றது. (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 5 பக்கம் 353)

மகத்தான ஆன்மீகத் தந்தையாக இருக்கின்ற தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

கத்முன்னுபுவ்வத் என்பதன் நுட்பமான விளக்கம், இறைவன் எந்த இடத்தில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காத்தமுல் அன்பியாவாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளானோ அதே இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஆன்மீகத்தின் அடிப்படையில் அந்த நல்லடியார்களுக்குத் தந்தையாகவும் திகழ்கின்றார்கள் என்று கூறியுள்ளான். அவர்களைப் பின்பற்றுவதன் மூலமாக ஆன்மாக்கள் முழுமையடைகின்றன. இறைவன் புறமிருந்து வஹியும் அவனுடன் உரையாடும் நற்பேறும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

كَانَ مُحَـمَّـدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّـبِيّٖنَ

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எந்தவோர் ஆண் மகனுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கு காத்தமாகவும் இருக்கின்றார்கள். லாகின் என்ற சொல் அரபி மொழியில் இஸ்தத்ராகிற்காக வருகின்றது. அதாவது முன்னர் சொல்லப்பட்ட குறையை நீக்குவதற்காக வருகின்றது. எனவே இந்த வசனத்தின் முதல் பகுதியில் எந்த விஷயத்தில் குறை ஏற்பட்டு விட்டதாக ஆக்கப்பட்டிருக்கிறதோ அதாவது எந்த விஷயம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இல்லை என்று கூறி மறுக்கப்பட்டிருக்கின்றதோ அவ்விஷயமானது அன்னார் பெளதீகமான முறையில் ஒர் ஆண் மகனுக்கு தந்தையாக இருப்பதாகும். எனவே லாகின் என்ற சொல்லின் மூலமாக அத்தகைய குறை ஏற்பட்டு விட்ட ஒரு விஷயம் பெருமானார் (ஸல்) அவர்களை காத்தமுல் அன்பியாவாக ஆக்கியதன் மூலமாக ஈடுசெய்யப்பட்டிருக்கின்றது. அதன் பொருள் இதுவாகும். அதாவது பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இறைவனிடமிருந்து நேரடியாக நபித்துவத்தின் அருள்களைப் பெறுவது துண்டிக்கப்பட்டு விட்டது. இப்போது தமது செயல்களில் பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதின் முத்திரையை வைத்திருக்கின்ற நபருக்கு மட்டுமே நபித்துவத்தின் சிறப்பு கிடைக்கும். இவ்வகையில் அந்த நபர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் (ஆன்மீக) மகனாகவும் அவர்களது வாரிசாகவும் இருப்பார்.

சுருக்கமாக, இந்த வசனத்தில் ஒரு வகையில் பெருமனார் (ஸல்) அவர்கள் தந்தையாக இருப்பது மறுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. இன்னொரு வகையில் அவர்கள் தந்தையாக இருப்பது ஏற்றுக் கூறப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ  நிச்சயமாக உமது பகைவனே ஆண் சந்ததியற்றயவன் (108:4) என்ற வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சேபனை நீக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறப்பட்டுள்ளது. (ரிவியூ பர் முபாஹிஸா பட்டாலவி சக்டாலவி. ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 213)

நபியை நபியாக ஆக்குவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? நபி அல்லாதவரை நபியாக ஆக்குவது பெருமானார் (ஸல்) அவர்களின் முழுமையான அருளுக்கு ஆதாரமாக இருக்கின்றது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இறைவனிடம் இருந்து நேரடியாகக் கிடைக்கின்ற நிரந்தரமான நபித்துவத்தின் வாசல் கியாமத் வரை அடைக்கப்பட்டு விட்டது. எதுவரை ஒருவர் இந்த உம்மத்தைச் சார்ந்தவர் என்பதன் உண்மை நிலையை தனக்குள் வைத்திருக்கவில்லையோ, ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அடியாராக நான் இருக்கின்றேன் என்று கருதவில்லையோ அதுவரை எவ்வகையிலும் அவர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்ற முடியாது. பிறகு இந்த நிலைமையில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை வானத்திலிருந்து இறக்குவதும், பிறகு அவரைப் பற்றி அவர் இந்த உம்மத்தைச் சார்ந்தவர் ஆவார் என்றும், அவரது நபித்துவம் பெருமானார் (ஸல்) அவர்களது முஹம்மதிய்ய நுபுவ்வத்தின் விளக்கிலிருந்து பெறப்பட்டதும் அதிலிருந்து அருளைப் பெற்றதுமாகும் என்று கூறுவது எந்த அளவு இட்டுக்கட்டி கூறப்படும் விஷயமாகவும், செயற்கையான விஷயமாகவும் இருக்கின்றது? எவர் முதலிலேயே நபியாக ஆக்கப்பட்டு விட்டாரோ அவர் தொடர்பாக அவரது நபித்துவம் பெருமானார் (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் விளக்கிலிருந்து பயனடைந்த நபித்துவமாகும் என்று கூறுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும்? அவரது நபித்துவம் முஹம்மதிய்ய நுபுவ்வத்தின் விளக்கிலிருந்து பயனடைந்த நபித்துவமாக இல்லையென்றால் பிறகு அவர் எந்த பொருளில் இந்த உம்மத்தைச் சார்ந்தவர் என்று அழைக்கப்படுவார்? தான் பின்பற்றுகின்ற நபியின் மூலமாக ஒவ்வொரு சிறப்பையும், தான் பெற்றுக் கொள்ளாத வரை உம்மத்தி என்ற சொல் ஒருவருக்குப் பொருந்தாது. பிறகு எந்த நபர் தன்னை நபி என்று கூறுகின்ற இவ்வளவு பெரிய சிறப்பை சுயமே பெற்றிருக்கின்றாரோ அவர் எவ்வாறு இந்த உம்மத்தைச் சார்ந்தவராக இருக்க முடியும்?

மாறாக, அவர்கள் நிரந்தரமான முறையில் நபியாக இருப்பார். அப்படிப்பட்டவருக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அடியெடுத்து வைப்பதற்கு இடமில்லை. முதலில் இறைவனிடம் இருந்து நேரடியாக வழங்கப்பட்ட அவரது நுபுவ்வத் அவரை விட்டு அகற்றப்பட்டு விடும். இப்போது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலமாக முற்றிலும் புதிய நுபுவ்வத் அவருக்குக் கிடைக்கும் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் பிறகு இறை வசனத்தில் குறிப்பிடப்பட்டதற்கேற்ப இந்நிலையில் தலைசிறந்த சமுதாயம் என்று அழைக்கப்படுகின்ற இந்த சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபருக்குதான் முற்றிலும் பெருமானார் (ஸல்) அவர்களைடப் பின்பற்றுவதன் மூலம் சாத்தியமுள்ள இந்த உயர் தகுதியை அடைவதற்கான தகுதி இருக்கின்றது. மேலும் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை வானத்தில் இருந்து இறக்குவதற்கான எந்த தேவையும் இல்லை. ஏனென்றால், இந்த உம்மத்தைச் சார்ந்த ஒருவருக்கு முஹம்மதிய்ய ஒளிகளின் மூலம் நபித்துவத்தின் சிறப்புகள் கிடைக்க முடியுமென்றால் பிறகு இந்நிலையில் ஒருவரை வானத்திலிருந்து இறக்குவது உண்மையிலேயே உரிமையுள்ள ஒருவருக்கு அவருக்குரிய உரிமையை வழங்காமல் அதனை வீணாக்குவதாக ஆகி விடும். இந்த உம்மத்தை சார்ந்த ஒருவருக்கு அருளை எட்ட வைப்பதிலிருந்து யார் தடையாக இருக்க முடியும்?

அதன் மூலமாக முஹம்மதிய்ய அருளின் முன்மாதிரியானது எவருக்கும் சந்தேகத்திற்குரியதாக இருக்கக் கூடாது. ஏனென்றால், நபியை நபியாக ஆக்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? உதாரணமாக, ஒரு நபர், தான் தங்கத்தை உருவாக்குவதாக வாதம் செய்கின்றார். அதற்காக தங்கத்தின் மீதே ஒரு எலும்பைப் போட்டு விட்டு, பாருங்கள்! இது தங்கமாக மாறி விட்டது என்று கூறினால் அதனால் அவர் ஒரு இராசயண நிபுணர் என்பதை நிரூபித்து விட முடியுமா?

இந்த உம்மத்தைச் சார்ந்த ஒருவர் மிகவும் உழைத்தவாறு பெருமனார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலமாக அந்தத் தகுதி அவரிடம் உருவாகுவதில்தான் பெருமானார் (ஸல்) அவர்களது அருள்களின் சிறப்பு அடங்கி இருக்கின்றது. அது அல்லாமல் முதலிலேயே நபியாக ஆக்கப்பட்ட ஒருவரை இந்த உம்மத்தைச் சார்ந்தவராக ஆக்குவதும், பிறகு அவருக்கு கிடைத்திருக்கும் நபித்துவத்தின் அந்தஸ்தானது சுயமே அவருக்குக் கிடைத்ததல்ல. மாறாக, அவர் இந்த உம்மத்தைச் சார்ந்தவராக இருப்பதே இதற்கு காரணமாகும் என்று கற்பனையாகக் கருதுவதும் எந்த அளவு அடிப்படை இல்லாத ஏமாற்று வேலையாக இருக்கின்றது? (ரிவியூ பர் முபாஹிஸா பட்டாலவி சக்டாலவி. ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 214)

وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّـبِيّٖنَ என்ற வசனத்திலுள்ள ஒரு முன்னறிவிப்பு

இந்த வசனத்தில் ஒரு முன்னறிவிப்பு இருக்கின்றது. இதைப் பற்றிய அறிவு நமது எதிரிகளுக்கு இல்லை. அது இதுவாகும். அதாவது அல்லாஹ் இந்த வசனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு முன்னறிவிப்புகளின் வாசல் கியாமத் வரை அடைக்கப்பட்டு விட்டது என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். இப்போது எந்த ஒரு இந்துவும் அல்லது யூதரும் அல்லது கிறித்தவரும் அல்லது பெயரளவிலுள்ள ஒரு முஸ்லிம் நபி என்ற சொல்லை தன்னுடன் தொடர்புபடுத்திக் கூறி அதை (தான் நபியாக இருப்பதை) நிரூபிக்க முடியாது. நபித்துவத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விட்டன. ஆனால், சித்தீக்கின் வாழ்க்கையின் ஒரு வாசல் திறந்திருக்கின்றது. அதாவது அது தூதர் மீதுள்ள அன்பில் தன்னை மாய்த்துக் கொள்வதாகும். எவர் இந்த வாசலின் வழியாக இறைவனுக்கு அருகில் வருகின்றாரோ அவர் மீது நிழலான முறையில் முஹம்மதிய்ய நுபுவ்வத்தின் அதே போர்வை போர்த்தப்படுகின்றது. (எக் கல்தீ கா இஸாலா. ரூஹானி கஸாயின் தொகுதி 18 பக்கம் 207)

பெருமானார் (ஸல்) எவர்கள் உயிருடன் ஒருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரம்

அவன் (அதாவது அல்லாஹ்) ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு நபரை நியமிக்கின்றான். அவர் இஸ்லாத்தை மரணிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றார். அதற்கு புதிய வாழ்க்கையை வழங்குகின்றார். உலகில் உள்ளவர்களை அவர்களிடம் உருவாகின்ற தவறுகள், பித்அத்துகள் (மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படும் விஷயங்கள்) கவனமற்ற நிலைமைகள், சோம்பல்கள் ஆகியவற்றில் இருந்து அவர் காப்பாற்றுகின்றார். இந்த தனிச்சிறப்பு பெருமானார் (ஸல்) அவர்களுக்கே கிடைத்திருக்கின்றது. இது அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கின்றது. யாரும் அதை எதிர்த்து நிற்க முடியாது. (அஹ்மதி அவ்ர் கைர் அஹ்மதி மே கியா ஃபரக் ஹே? ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 469)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நீழலின் கீழ் வளர்ச்சி அடைவது மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள மனிதனை மஸீஹாக ஆக்கி விடுகின்றது

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

அறிவற்றவர்களே! கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பவர்களே! நமது தலைவரும் எஜமானருமான நமது நபி (ஸல்) அவர்கள் (ஆயிரக்கணக்கான சாந்தி அன்னார் மீது உண்டாகட்டும்) தனது அருள்களை வழங்குவதன் அடிப்படையில் எல்லா நபிமார்களை விடவும் முன்னேறிச் சென்று விட்டார்கள். ஏனென்றால் கடந்தகால நபிமார்களின் அருள்கள் ஒர் எல்லையை அடைந்ததும் முடிந்து விட்டன. இப்போது அந்த சமுதாயங்களும் அந்த மதமும் மரணித்தவையாக இருக்கின்றன. அவற்றில் எந்த வாழ்வும் இல்லை. ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆன்மீக அருள்கள் கியாமத் வரை நீடித்திருக்கின்றது. எனவே, இந்த அவர்களது அருள்கள் இருந்தும்கூட ஒரு மஸீஹ் வெளியில் இருந்து வர வேண்டும் என்பது இந்த உம்மத்திற்கு கட்டாயமானதல்ல. மாறாக, அவர்களது நிழலின் கீழ் வளர்ச்சி அடைவதில் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு மனிதனை மஸீஹாக ஆக்குகிறான். அவ்வாறே அவன் இந்த எளியவனை மஸீஹாக ஆக்கியுள்ளான்.(சஷ்மயே மஸீஹி, ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 389)

எனவே அல்லாஹ், ஸய்யிதுனா ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை, பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் காரணமாகவும், பெருமானார் (ஸல்) அவர்கள் மீது முழுமையான பேரன்பையும் நேசத்தையும் வைத்திருந்தன் விளைவாகவும் இந்தக் காலத்தின் இமாமாகவும் மஸிஹாகவும் மஹ்தியாகவும் ஆக்கி அனுப்பியுள்ளான். முஹம்மதிய்ய உம்மதிற்கு இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள மிகப்பெரும் அருட்கொடையாகும். இதனை புறக்கணிப்பது அல்லாஹ்வுக்கு காட்டுகின்ற மிக மோசமான நன்றிகேடு ஆகும். இதனால் இவ்வுலகிலும் மறுமையிலும் நமக்கு இழிவும் அவமானமும்தான் ஏற்படும். நாம் இவ்வாறு துஆ செய்கின்றாாம். அதாவது அல்லாஹ் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு அவர்கள் நல்லெண்ணத்துடன் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை), அவர்களின் நூல்களைப் படிப்பதற்கும், அதன் மூலம் அவர்களின் உண்மையை தெரிந்து கொண்டு அவர்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கான நல்வாய்பை வழங்குவானாக. ஆமீன்!

நன்றி - தமிழ் பத்ர் வார பத்திரிகை 15-22 ஜூன் 2017

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.