பர்தா - ஓர் அஹ்மதி பெண்ணின் மகிமை


திருக்குர்ஆனில் அல்லாஹ்; அனைத்து பெண்கள் வரை பர்தாவின் போதனையை எட்ட வைப்பீராக என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். மேலும் இக்கட்டளையுடன் இறைவன் பர்தாவை ஒரு முஸ்லிம் பெண்ணின் அடையாளமாக நிர்ணயித்தான். அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:


நபியே! நீர் உமது மனைவிகளிடமும், உமது பெண் மக்களிடமும், நம்பிக்கை கொண்டவர்களின் பெண்களிடமும் அவர்கள் (வெளியில் செல்லும் போது) தங்களுடைய பெரிய மேலாடைகளைக் கொண்டு தங்களைப் போர்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. இது அவர்கள் பிரித்தறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமானது. அவர்கள் துன்புறுத்தப்பட(வும்) மாட்டார்கள். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். (திருக்குர்ஆன் 33:60)


இந்த வசனத்தின் விளக்கவுரையில் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

முஸ்லிம் பெண்களை முஸ்லிமல்லாத பெண்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது பர்தாதான் என்பதை; இந்த வசனத்தில் உள்ள பர்தாவின் கட்டளை மூலம் அறிய முடிகிறது. இல்லையேல் இது ஒரு முஸ்லிம் பெண் என்று எங்களுக்குத் தெரியாது; அதனால் நாங்கள் அவளைக் கிண்டல் செய்தோம் என்று யூதர்கள் சொல்லியிருக்கலாம்." (தர்ஜுமத்துல் குர்ஆன் - நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) பக்கம் 741)

பிறகு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கூறுகிறான்:
நீர் நம்பிக்கை கொண்ட பெண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்திருக்குமாறும், தங்கள் மறைவான உறுப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், தானாகவே வெளிப்படுவதைத் தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் முந்தானை இடையில் தங்கள் மார்புகளை மறைத்து அணிந்து கொள்ளுமாறும், அவர்கள் தங்கள் கணவர்கள், அல்லது தங்கள் தந்தையர்கள், அல்லது தங்கள் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தங்கள் ஆண் மக்கள் அல்லது தங்கள் கணவர்களின் ஆண் மக்கள் அல்லது சகோதரர்கள் அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் அல்லது தங்கள் (இனத்தைச்) சேர்ந்த பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது பாலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண் ஊழியர்கள் அல்லது பெண்களின் மறைவான உறுப்புக்களைப் பற்றித் தெரியாத சிறுவர்கள் ஆகியவர்களைத் தவிர வேறெவரிடமும் தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் அலங்காரத்துள் மறைத்து வைத்திருப்பது வெளிப்பட வேண்டுமென்பதற்காகத் தங்கள் கால்களை (நிலத்தில் வேகமாக)த் தட்டி நடக்காமலிருக்குமாறும் கூறுவீராக. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் யாவரும் வெற்றி பெற வேண்டுமென்றால் அல்லாஹ்வின் பால் திரும்புங்கள். (திருக்குர்ஆன் 24:32)

இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரு பெண் தமது கண்களை அந்நிய ஆண்களை பார்ப்பதிலிருந்து தாழ்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் அலங்காரத்தை, அழகினை யாரிடம் மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றியும் தெளிவாக கூறியுள்ளான்.

இவ்விடத்தில் ஒரு விஷயத்தை கூற கடமைப்பட்டுள்ளேன். அதாவது, இந்த வசனத்தின் மூலம் சிலர் இவ்வாறு கூறுகின்றனர். அதாவது, 33:60 வது வசனத்தில் வரும் "ஜல்பாப்" என்பதன் பொருள் ஹிஜாப் ஆகும். அதாவது முகத்தை மறைக்காமல் தலையிலிருந்து கீழ் வரை மறைத்துக் கொள்ளுதல், மேலாடையை போர்த்திக் கொள்ளுதல் ஆகும். ஆகவே முகத்தை மறைக்க வேண்டிய கட்டளை இங்கு இல்லை என்று பொருள் எடுக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான பொருள் ஆகும். ஏனென்றால், முகம் என்பது ஓர் அழகான உறுப்பாகும். அழகின் மொத்த உருவமும் அதில்தான் வெளிப்படுகிறது. அதனை மறைக்காதிருந்தால் பிறகு இறைவன் 24:32 இல் பெண்கள் தமது "ஜீனத்தை" (அழகை) மறைத்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளைக்கு மாறு செய்ததாக ஆகிவிடும். இந்த அடிப்படையில் 33:60 வசனமும் முகத்தை மூடும்படிதான் கூறுகிறது என்பதை அறிய முடிகிறது.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறும் ஒரு ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. அது ஒரு நீண்ட ஹதீஸ் ஆகும். அந்த ஹதீஸில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு போருக்கு சென்று விட்டு வரும் வழியில் அந்த போர் குழு ஓரிடத்தில் தங்கியது. அச்சமயம் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது இயற்கைத் தேவையை முடிக்க சென்ற பிறகு, படைக் குழு அதை கவனிக்காது, ஒட்டகத்தில் மேல் வைக்கும் சிவிகையில் அவர்கள் இல்லை என்பதை அறியாமல் அந்த குழு அந்த சிவிகையில் ஆயிஷா (ரலி) அவர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணி எடுத்து சென்று விட்டார்கள். இவ்வாறு படைக் குழு அங்கிருந்து சென்று விட்டது.

பிறகு தொடர்ந்து ஹதீஸில் இவ்வாறு வருகிறது. ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பச் செல்லவிருக்கிறோம்” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்....." (புகாரி 1763)

இந்த ஹதீஸின் மூலம் தெரிய வருவது என்னவென்றால், இந்தச் சம்பவத்திற்கு முன்பு பர்தா சட்டம் இறங்கி விட்டிருந்தது. ஆகவேதான் ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் "தமது முகத்தை மூடிக் கொண்டார்கள்" என்ற வாக்கியம் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருப்பதை நாம் காண முடிகிறது.

இந்த ஹதீஸில் முகத்தை மறைத்தல் மற்றும் அதற்கு முன்பு ஆயிஷா நாயகி (ரலி) அவர்களின் "பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர்" என்ற கூற்றும் எதை உறுதிப்படுதுகிறது என்றால், அந்த பர்தா சட்டத்தில் "முகத்தை மறைத்தல்" என்ற அங்கமும் அடங்கியிருந்தது. ஆகவேதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பர்தா சட்டத்தை கடைபிடித்த வண்ணம் தமது முகத்தை அன்னியரிடமிருந்து மூடிக் கொண்டார்கள் என்று ஹதீஸில் வருகிறது.

இங்கு சிலர்இந்தக் கட்டளை நபி ஸல் அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே அல்லாமல் அனைத்து முஃமீனான பெண்களுக்கு அல்ல என்று கூறுவதுண்டு. ஆனால் இவர்களின் இந்தக் கூற்றுக்கு எந்தவித தகுந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதை பல அறிஞர்கள், மற்றும் நபி ஸல் அவர்களின் காலத்தை ஒட்டிய பெரும் விளக்கவுரையாளர்களாகிய இப்னு ஜரீர், இப்னு மன்ஸர் போன்றோர்கள் கூறியிருக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் அவர்களின் 33:60 வது வசனத்திற்கான விளக்கத்தை, இப்னு ஜரீர் மற்றும் இப்னு அபீ ஹாத்தீம் போன்ற சான்றோர்கள் தமது நூலில் இவ்வாறு பதிவு செய்கிறார்கள், அதாவது அல்லாஹ் பெண்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான், அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களுடைய பெரிய மேலாடைகளைக் கொண்டு தங்களைப் போர்த்தி முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள். கண் மட்டும் திறந்து இருக்கட்டும். என்று கூறுகிறார்கள். இதே விளக்கத்தை கத்தாதா மற்றும் சுத்தீ அவர்களும் இந்த வசனத்திற்கான விளக்கமாக கூறியுள்ளார்கள்.

மேலும் ஜாமியுல் பயான் என்ற நூலில் இமாம் இப்னு ஜரீர் தபரி அவர்களும் இதே  கருத்தைதான் கூறுகிறார்கள். (ஜாமியுல் பயான் பாகம் 22 பக்கம் 33)

அல்லாமா சமஹ்ஷரி அவர்கள் தமது நூல் அல்கஷ்ஷாஃப் இல் இந்த வசனத்திற்கு விளக்கமாக இவ்வாறு பதிவு செய்கிறார்கள், அதாவது, அவர்கள் தங்கள் மீது தங்களுடைய மேலாடைகளின் ஒரு பகுதியை தொங்கவிட்டு கொள்ளட்டும். மேலும் அதைக் கொண்டு தமது முகம் மற்றும் தமது சுற்றுப் பகுதியை நன்கு மறைத்து கொள்ளட்டும். (நூல் அல்கஷ்ஷாஃப், பாகம் 2 பக்கம் 221)

இமாம் ராஸி அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் குறிக்கோள் என்னவென்றால், இவர்கள் தீயப் பெண்கள் அல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முகம் என்பது மறைமுகமாக இருக்கக்கூடிய உறுப்பு இல்லைதான் என்றாலும்; எந்த பெண் தமது முகத்தை மறைப்பாளோ, அவளிடமிருந்து எந்த மனிதனும்; 'அந்த பெண்ணானவள் தமது மறைவான் உறுப்புகளை அந்நியர்களுக்கு முன் திறப்பதை ஏற்றுக் கொள்வாள்' என்பதை எதிர் பார்க்க முடியாது. இவ்வாறு, இவள் பர்தாவை கடைபிடிக்கக் கூடிய பெண்கள் ஆவர், இவர்கள் விபச்சாரம் செய்வார்கள் என்பதை எதிர் பார்க்க முடியாது என்று ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்வர்." (தஃப்சீர் கபீர் பாகம் 6 பக்கம் 591)

ஆக முன் சென்ற பல சான்றோர்களின் கருத்தும் பெண்கள் முகத்தை மறைத்தே வெளியே செல்ல வேண்டும். அது பர்தாவில் ஓர் அங்கமாகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே பர்தா அணியும் பெண் தமது முகத்தையும் மறைத்து அழகை வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியமாகும். ஆம் நிர்பந்த நிலையில் அதனை வெளிப்படுத்திக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. ஏனென்றால் இஸ்லாம் நிர்பந்த நிலையில் ஹராமான பன்றியைக் கூட ஆகுமானது என்று கூறுகிறது.

ஒரு பெண் தமது அலங்காரத்தை யார் முன் வெளிப்படுத்த  வேண்டுமோ அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் முன் வெளிப்படுத்த நாடினால், அப்படிபட்ட பெண்களை குறித்து நபி ஸல் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"
உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167)

அதுபோல் ஒரு பெண் தாம் அணியும் பர்தாவை இறுக்கமாக, தமது உடல் பாவனை வெளியே மற்றவர்கள் அறியும்படியாக அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால் பிறகு பர்தா எதற்காக அணிகின்றோமோ; அதன் முக்கியத்துவம் அங்கு உடைந்து போகிறது. எனவே பெண்கள் அணியும் பர்தா உடல் பாவனை வெளிப்படாத வகையில் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(
இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) (தமது உடல் பாவனை வெளியே தெரியும்படி) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4316. அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

எனவே ஓர் அஹ்மதி பெண் சமூகத்து மத்தியில் நடந்து செல்லும்போது இவ்வாறான நடைமுறைகளை கடைபிடித்து தமது பர்தாவை அணிந்து கடந்து செல்ல வேண்டும். இதனால் சமூகத்தில் வெட்கக் கேடான செயல்கள், சீர்கேடுகள் நடப்பதை விட்டு தவிர்க்கலாம்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: "ஐரோப்பாவைப் போலவே, மக்கள் பர்தா அல்லாத விஷயத்தை வலியுறுத்துகிறார்கள்.ஆனால், அது பொருத்தமானதல்ல. இப்படிப்பட்ட பெண்களின் சுதந்திரம்தான் சமய நெறி தவறுதலின் ஆணிவேராக இருக்கிறது. இவ்வாறான சுதந்திரத்தை அனுமதித்து வரும் நாடுகளின் ஒழுக்க நிலையை சற்றுப் எண்ணிப் பாருங்கள். அவர்களுடைய சுதந்திரம் மற்றும் பர்தா அற்ற நிலையினால் அவர்களுடைய கற்பு மற்றும் ஒழுக்கம் அதிகமாகி விட்டது என்றால், நாம் தவறில் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால் ஓர் ஆணும், பெண்ணும் இளமையாகவும் சுதந்திரமாகவும் பர்தா அற்ற நிலையில் இருக்கும்போது, ​​அவர்களின் உறவு எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்பது மிகவும் தெளிவான ஒரு விஷயமாகும். தீயப் பார்வை பார்ப்பதும், பெரும்பாலும் மன உணர்ச்சிகளுக்கு அடிமையாவதும் மனித இயல்பாக இருக்கிறது. ஆக, பர்தா அணியும் நிலையில் வரம்பு மீறுதல்களும் தீமைகளில் ஈடுபடுதலும் இருக்கும் போது, சுதந்திரமான நிலையில் என்னவெல்லாம் நடக்காது!?" (மல்ஃபூஸாத் பாகம் 4 பக்கம் 104)

மேலும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம் என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள்: "எல்லாம் வல்ல இறைவன் தூய நிலையை அடைவதற்காக உயர்கல்வியை மட்டும் வழங்காமல், மனிதன் தூய்மையாக இருக்க ஐந்து சிகிச்சைகளையும் கூறியுள்ளான். அதாவது மஹ்ரம் அல்லாதவர்களை பார்க்காமல் கண்களை பாதுகாத்துக் கொள்வது, மஹ்ரம் அல்லாதவர்களின் குரலை கேட்காமல் காதுகளை பாதுகாத்துக் கொள்வது, மஹ்ரம் அல்லாதவர்களின் கதைகளை கேட்காமல் இருப்பது, மேலும் இவ்வாறான செயல்களை செய்யத் தூண்டும் அனைத்து உரைகளையும் கேட்காமல் இருப்பது, நிக்காஹ் ஆகாத  நிலையில் நோன்பு வைப்பது போன்றவைகள் ஆகும். திருக்குர்ஆன் எடுத்து வைத்திருக்கும் இந்த எல்லா வழிமுறைகளுடன் கூடிய உயரிய போதனை  இஸ்லாத்திற்கு மட்டுமே உரியதாகும் என்பதை நாம் இவ்விடத்தில் மிகவும் வாதிட்டுக் கூறுகின்றோம். (இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம் பக்கம் 44-45)

மேலும் கூறுகின்றார்கள்: கட்டுப்பாடற்ற தன்மை தடுமாற்றங்களுக்கு காரணமாகும் என்பதில் என்ன சந்தேகம் உள்ளது? பசியுள்ள நாய்க்கு முன்பாக நாம் மென்மையான ரொட்டிகளை வைத்துவிட்டு அந்த நாயின் உள்ளத்தில் ரொட்டியை பற்றிய எண்ணமே எழக்கூடாது என்று நாம் எதிர்பார்த்தால் அது நமது எண்ணத்தின் தவறாகும். மன இச்சைகளுக்கு இரகசியமாக செயல்படும் வாய்ப்பு கூட ஏற்படக் கூடாதென்றும், அபாயகரமான உணர்வுகள் தூண்டப்படும் எந்தவொரு நிகழ்வுகளும் ஏற்படவிடக் கூடாது என்றும் இறைவன் விடும்புகிறான்.

இதுதான் இஸ்லாமிய பர்தாவின் தத்துவமும், மார்க்க சட்டத்தின் வழிகாட்டாலும் ஆகும். பெண்களை கைதிகளைப் போன்று அடைத்து வைப்பது இறை வேதம் கூறும் பர்தாவின் நோக்கமல்ல. அது இஸ்லாமிய போதனைகளை அறியாத முட்டாள்களின் எண்ணமாகும். (இஸ்லாமிய போதனைகளின் தத்துவஞானம் பக்கம் 45-46)

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களைத் தொடர்ந்து அன்னாருக்கு பிறகு வந்த  கலீஃபாக்களும் பர்தாவின் பக்கம் கவனமூட்டியவாரு, பர்தா எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "இன்று நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் திரையை விட முகத்தை மூடும் முக்காடு மிகவும் பாதுகாப்பானது. இருப்பினும், அனைவரும் மார்க்க கட்டளைகளை பின்பற்ற முயற்சிக்க வேண்டும் (முகத்தை மூடும் பர்தாவை கடைபிடிக்க வேண்டும்). எங்கேயாவது இந்த செயல்பாட்டில் ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை அகற்றவும்." (அல்ஃபஸ்ல் பத்திரிகை 15 ஏப்ரல் 1960)

மேலும் கூறுகின்றார்கள்: ஏதேனும் ஒரு அழகான பெண்மீது உங்களின் முதல் பார்வை பட்டால், பிறகு மீண்டும் அவர்கள் மீது பார்வையை செலுத்தாதீர்கள். இதானால் உங்களின் உள்ளத்தில் ஓர் ஒளி ஏற்படும்." (ஹக்காயிக்குல் குர்ஆன் பாகம் 3 பக்கம் 213)

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "ஒரு பெண்ணின் தலைமுடி, கழுத்து, முகம் ஆகியவை, காதுகளுக்கு முன்புறம் வரை மறைக்கப்பட வேண்டும் என்பது திருக்குர்ஆன் மூலம் நிரூபிக்கப்பட்ட ஷரீஅத் பர்தாவாகும்.  இந்த கட்டளைக்கிணங்க, வெவ்வேறு நாடுகளில் அவர்களின் சூழ்நிலை மற்றும் ஆடைகளுக்கு ஏற்ப பர்தா அணிந்து கொள்ளலாம்." (அல்ஃபஸ்ல் பத்திரிகை 8 நவம்பர் 1924)

மேலும் கூறுகின்றார்கள்: "இஸ்லாத்தில் முகத்தை மறைக்கக் கட்டளை இல்லை என்று கூறுவோரிடம் நாம் கேட்கிறோம், திருக்குர்ஆன் ஜீனத்தை (அழகை) மறைக்கச் சொல்கிறது. முகமே மிகவும் அதிக அழகானதாகும். முகத்தை மறைக்கக் கட்டளை இல்லை என்றால், மறைக்கக் கட்டளையிடப்படும் அழகுதான் என்ன?." (தஃப்சீரே கபீர் பாகம் 6 பக்கம் 301)

மேலும் கூறுகின்றார்கள்: "தடை செய்யப்பட விஷயம் என்னவென்றால், பெண் திறந்த முகத்தோடு அலையாதீர்கள். மேலும் ஆண்களுடன் கலக்காதீர்கள். ஆம், அவள் முகத்திரையில் கண்கள், வழியைப் பார்க்கும் வகையில் அகற்றிக் கொண்டால்; அது அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் முகத்திலிருந்து ஆடையை அகற்றுவது, அல்லது ஆண்கள் இங்கும் அங்குமாக அமர்ந்திருக்கும் Mixed வைபவங்களில் சென்று அந்த ஆண்களிடம் எவ்வித சங்கடமும் இல்லாமல் தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவது அனுமதிக்கப்படாததாகும். (தஃப்சீர் கபீர் பாகம் 6 பக்கம் 304)

மேலும் கூறுகின்றார்கள்: "பர்தாவை தவிர்ப்பவள் திருக்குர்ஆனை இழிவுபடுத்துகிறாள். இவ்வாறானவருடன் நமக்கு என்ன தொடர்பு? அவள் நமக்கு எதிரி ஆவாள். நாம் அவளுக்கு எதிரியாவோம். மேலும் இவ்வாறான அஹ்மதி பெண்கள் மற்றும் ஆண்களுடன் தொடர்பு வைக்காமல் இருப்பது ஜமாஅத்தின் ஆண்கள் மற்றும் பெண்களின் கடமையாகும்." (அல்ஃபஸ்ல் பத்திரிகை 27 ஜூன் 1958)

ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: "தீயவர்களின் தீமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க பர்தா அணிய கட்டளையிடப்பட்டுள்ளது. அதன் நோக்கம் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது அல்ல. மாறாக, எளிதை ஏற்படுத்துவதே ஆகும். குர்ஆன் பெண்களை மற்றவர்களின் தீமையிலிருந்து பாதுகாக்க விரும்புகிறது." (தவ்ரா மக்ரிப் 1980 பக்கம் 51)

மேலும் கூறுகின்றார்கள்: "குர்ஆன் பர்தா அணியும்படி கட்டளையிட்டுள்ளது. எவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் (அஹ்மதி பெண்கள்) பர்தா அணிந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஜமாத்தை விட்டு வெளியேறி விடுங்கள். ஏனெனில், திருக்குர்ஆனின் எந்தவொரு கட்டளையையும் சொல்லாலோ, செயலாலோ கேலி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது, என்பதே நமது ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். உலகத்தின் நேர்வழியும், பாதுகாப்பும் இதைச் சார்ந்தே இருக்கிறது. (அல்ஃபஸ்ல் 25 நவம்பர் 1978)

ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் இதை உணர்ந்துள்ளேன். மேலும் மிகவும் கடுமையாக அல்லாஹ் தஆலா இவ்விஷயத்தை எனது உள்ளத்தில் இட்டான். அதாவது அஹ்மதி பெண்கள் பர்தா அல்லாத நிலைக்கு எதிராக ஜிஹாதை அறிவியுங்கள். ஏனென்றால் நீங்களும் இந்த நிலையை கைவிட்டு விட்டால் பிறகு உலகத்தில் இஸ்லாமிய நற் பழக்க வழக்கங்களை பாதுகாக்க முன் வரக்கூடிய வேறு எந்த பெண்கள்தான் இருக்க முடியும்!" (அல்ஃபஸ்ல் 28 பிப்ரவரி 1983)

நமது அன்பிற்குரிய இமாம் செய்யிதுனா ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா பி நஸ்ரிஹில் அஸீஸ்) அவர்கள் தமது ஜுமுஆ பேருரையிலும் மற்றும் சொற்பொழிவுகளிலும் பர்தாவின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு தெளிவுப்ப்டுத்தியுள்ளார்கள். அன்னார் கூறுகின்றார்கள்: " Mix Gathering இல் உணவு உண்ண நான் அனுமதி தரவில்லை. உணவு உன்பதை தவிர்த்து முழு பர்தாவுடன் இருக்கிறீர்கள் என்றால் பிறகு அங்கு அமர அனுமதியுள்ளது. உணவு உண்ண ஒருபோதும் அனுமதியில்லை. உணவு உண்ணும் நேரத்தில் (ஆண்கள் கலந்து இருக்கும் அவையை விட்டு விலகி) திரைக்கு பின்னால் சென்று பர்தாவில் இருந்து கொண்டு உணவு உண்ணுங்கள். இவ்வாறான ஆட்சேபனையை கண்டு இஸ்லாமிய போதனையின் கட்டளையை ஒழித்து விடக் கூடாது. யாரும் பார்க்கிறார்களா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாக ஹிஜாப் ஒழிந்து விடுகிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். கலந்து விடுவது என்ற தடை அங்கு ஒழிந்து விடுகிறது. எப்போது இந்தத் தடை ஒழிந்து விடுமோ பிறகு அங்கு நட்பு உருவாகிவிடுகிறது. மேலும் தீமைகள் உருவாகி விடுகின்றன. (2009 இல் ஜெர்மனியில் பெண்களுக்கு வழங்கிய வழிகாட்டல், அல்ஃபஸ்ல் 29 ஜனவரி 2009)

மேலும் கூறுகின்றார்கள்: "சில இடங்களில் நமது திருமண வைபவங்களில் சிறுவர்களை உணவுகளை பரிமாற அழைக்கப்படுகிறார்கள். அச்சிறுவர்கள் சிறு வயதுள்ளவர்களே என்று கூறப்படுகிறது. ஆனால் எவர்களை இவர்கள் சிறு வயதினர் என்று கூறுகின்றார்களோ அவர்கள் சுமார் 17, 18 வயதை அடைந்தவர்களாக இருக்கின்றனர். எவ்வாறு இருந்த போதிலும் அவர்கள் பருவ வயதை அடைந்து விட்டவர்களாக இருக்கின்றனர். அங்கு திருமண வைபவத்தில் பருவ வயதை அடைந்து சிறுமிகள் இங்கும் அங்குமாக அலைபவர்களாக இருக்கின்றனர். மேலும் எந்த சிறுவர்கள் அழைக்கப்படுகின்றனரோ அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் தெரியாது. பாக்கிஸ்தானில் நான் கண்டிருக்கிறேன். அதாவது, பொதுவாக இந்த சிறுவர்கள் திருப்திகரமானவர்களாக இருப்பதில்லை. பெண்கள் பிரிவில் பெண்களே இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்." (ஜுமுஆ பேருரை 30 ஜனவரி 2004)

மேலும் ஹுஸூர் அவர்கள் ரப்வாவின் லஜ்னா இமாயில்லாஹ்வின் தலைவி அவர்களுக்கு ஒரு கடிதத்தில் ஒரு சில வழிகாட்டலை கூறியவாறு கூறுகின்றார்கள்: "மேலும் புர்காக்களில் அதிகப்படியான ஃபேஷனை தவிர்க்கவும். ஒவ்வொரு கூட்டத்திலும், அஹ்மதி சிறுமிகளின் தரத்தை  எடுத்துச் சொல்லுங்கள். எனக்கு பெரிய வேலைகள் ஒன்றும் வேண்டாம். இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். தொழுகை பழக்கம், முக்காடு கடைப்பிடித்தல், குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நாகரீகத்தை (ஃபேஷனை) கண்மூடித்தனமாக பின்பற்றுதலை விட்டு தவிர்ந்திருப்பது. இந்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யுங்கள்." (அல்ஃபஸ்ல் 12 மார்ச் 2005)

மேலும் கூறுகின்றார்கள்: "பர்தா என்பது ஓர் இஸ்லாமிய கட்டளையாகவும் இருக்கிறது. மேலும் ஓர் அஹ்மதி பெண் மற்றும் பருவ வயதை அடைந்த சிறுமிகளின் மகிமையாகவும் இருக்கிறது. மேலும் அவர்களின் புனிதமாகவும் இருக்கிறது. ஏனென்றால் அஹ்மதி பெண்ணின் புனிதமும் இதில்தான் நிலைத்திருக்கிறது. இதனை நிலைபெறச் செய்வது அவசியமாகும்." (19 நவம்பர் 2006 அன்று நடந்த யுவ், கே ஆண்டு மாநாட்டில் பெண்களுக்கான சொற்பொழிவில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது.)

எனவே ஓர் அஹ்மதி பெண் பர்தா அணிபவளாக இருக்கிறாள் என்றால் அவள் கடைபிடிக்க வேண்டியது:

·       அவள் தமது பர்தாவை தமது உடல் பாவனை வெளியே தெரியாத வகையில் அணிய வேண்டும்.

·       அவள் தனது தலை முடியை மறைக்க வேண்டும்.

·       அவள் தனது முகத்தை மறைக்க வேண்டும்.

·       குறிப்பாக அவள் தமது பார்வையை தாழ்த்திக் கொண்டு சமூகத்தில் நடந்து செல்ல வேண்டும்.

·       அவள் தமது அலங்காரத்தை அன்னியர்களிடமிருந்து மறைத்தல் வேண்டும்.

·       அவள் தாம் அணியும் பர்தாவில் அதிகப்படியான ஃபேஷனை தவிர்க்க வேண்டும்.

ஆக, ஓர் அஹ்மதி பெண் பர்தா அணிவதினால் அவளுக்கு இந்த சமூகத்தில் எவ்வளவு மகிமை உள்ளது, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மேற்கண்ட சான்றோர்கள், மற்றும் இமாம் மஹ்தி (அலை) மற்றும் கலீஃபாமார்களின் கூற்றுகளிலிருந்து நம்மால் அறிய முடிகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் அவள் அணியும் பர்தா, அந்நிய ஆண்கள் வழிதவறி விடாத வண்ணம் இருத்தல் வேண்டும்.   

அல்லாஹ் ஒவ்வொரு இஸ்லாமிய பெண்களுக்கும், குறிப்பாக அஹ்மதி பெண்களுக்கும்; அவர்கள் தமது தரத்தை அறிந்து அவனின் கட்டளையை முறையாக கடைபிடித்து செயல்படுவதற்கான நற் பாக்கியத்தை தந்தருள்வானாக. மேலும் பலவித சீர்கேடுகளிலிருந்து இந்த சமூகத்தை காப்பானாக. ஆமீன்!  

ஆக்கம்: இப்னு ரஹ்மத்

1 கருத்து:

  1. மிக அருமை. ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை.

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.