
தொன்று தொட்டு
உலகில் தோன்றிய இறைத்தூதர்களெல்லாம் மக்களை இருளிலிருந்து அகற்றி
இறைவழியில் இட்டுச் சென்றது மட்டுமல்லாது எதிர்காலத்தில் நிகழப்போவதை
முன்னறிவித்தும் சென்றிருக்கிறார்கள். நிகழ் காலத்தில் மக்கள் நல்வழியில்
செல்லவேண்டுமென்ற பேரவாவுடன் எதிர்காலத்தில் அவர்கள் வழிதவறிச் செல்லக்
கூடாது என்ற பொறுப்புணர்ச்சி அந்த இறைத்தூதர்களில் மேலோங்கி
நின்றிருக்கிறது. அவர்கள் முன்னறிவித்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் அப்படியே
நிறைவேறியது. இவை அவர்களுடைய உண்மைத்தன்மைக்கு பெரிய ஆதாரமாய் இருப்பதோடு
அவர்களுக்கும் இறைவனுக்குமுள்ள சம்பந்தத்தை, இறைவன் அவர்களுடன் பேசினான்
என்ற பேருண்மையை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இவர்களின்
வரிசையிலே, இவர்களில் தலைசிறந்தவரும், ஆத்மீக உலகின் அணையாப் பேரொளி ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றினார்கள் அவர்கள் இஸ்லாத்தின் இருள்
சூழ்ந்த காலத்தைப் பற்றி, இஸ்லாத்திற்கெதிராய் தோன்றும் தஜ்ஜாலைப் பற்றி
அதை நிர்மூலப்படுத்த வரும் இமாம் மஹ்தியைப்பற்றி ஏராளமான தீர்க்க
தரிசனங்களை கூறியுள்ளார்கள். அவர்களில் மிகவும் சுவையானதும் உட்பொருள்
பொதிந்தும் தஜ்ஜாலைப் பற்றிய தீர்க்கதரிசனங்களே!
தஜ்ஜாலைப் பற்றி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வர்ணிக்கிறார்கள்:-
“தஜ்ஜாலுடைய ஒரு
கண் குருடாயிருக்கும். அவனுடைய கண்களுக்கிடையில் காஃப்-பா-ரா என்ற எழுத்துக்கள்
விசுவாசியான படித்தவர்களுக்கும் படிக்காதவர்களும் வாசிக்கக் கூடிய அளவில்
காணப்படும். அவன் ஒரு பெரிய கழுதைமேல் ஏறி வருவான். அது மேகத்தைப் போல்
காற்றினால் ஓடும். அந்த கழுதையின் இரு செவிகளுக்கும் மத்தியில் உள்ள தூரம்
70 கஜமாயிருக்கும். அவன் நரகத்தையும், சுவர்கத்தையும் தன்னோடு கொண்டு ஆட்சி
புரிவான். தன்னை பின்பற்றியோருக்கு கொடுப்பதற்காக அப்பத்தின் மலைகளை
தன்னோடு கொண்டு வருவான். அவனுடைய கட்டளைப்படி மேகம் மழையைப் பொழியும். அவன்
முழு உலகத்தையும் சுற்றித் திரிவான். அனால் மக்காவுக்குள்ளும்,
மதீனாவுக்குள்ளும் பிரவேசிக்க முடியாது. தஜ்ஜாலின் ஓசை முழுவுலகத்திலும்
கேட்கப்படும். அவன் இறுதிகாலத்தில் வெளியாகுவான். அவன் கோயிலிலிருந்து
வெளியாகுவான். (மிஷ்காத், கன்ஸுல் உம்மால். பிஹாருல் அன்வார்)
தஜ்ஜாலைப்
பற்றிய இந்த வருணனைகளை நோக்கும் போது அவை உருவகமாக உவமான உருவில்
கூறப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளமுடிகிறது. இன்றைய முஸ்லிம்களில் சிலர்
கூறுவது போன்று இந்த தீர்க்கதரிசனங்களுக்கு எவ்வித உட்கருத்தும் இல்லை, அது
அப்படியே வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறும் என்றால், தஜ்ஜால் என்ற பயங்கர
மனிதன் பூமியில் தோன்றி தனது அட்டூழியங்களைச் செய்வான் என்றால், பாலர்களை
பயங்காட்டுவதற்கு அது பயன்படுமேயல்லாமல் பகுத்தறிவு அதை ஏற்றுக் கொள்ளாது.
வளர்ந்து வரும் இன்றைய இளைஞர் சமுதாயம் பாட்டிமாரின் பழம் கதையென இவைகளை
ஒதுக்கித் தள்ளிவிடும்.
அஹ்மதிய்யா
இயக்கத்தின் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இத்தீர்க்க
தரிசனங்களைப் பற்றிய விளக்கங்களைத் தெள்ளத்தெளிவாக
எடுத்துரைத்திருக்கிறார்கள். அவை ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னே
இக்காலத்தில் நிகழப்போவதை மிக நுண்ணியமாக ஆனால் மறைமுகமாக உரைத்திட்ட
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெருமையை, சிறப்பை எண்ணி வியக்க
வைக்கிறது. அதே சமயம் புத்திக்கு பொருத்தமானதாயும் அவைகள்
அமைந்திருக்கின்றன.
அரபி மொழியில்
“தஜ்ஜால்” என்றால் பெரிய பொய்யன், உண்மையைப் பொய்யால் மறைப்பவர், பிரயாணம்
செய்து கொண்டிருக்கும் மனிதக் கூட்டம் என்ற அர்த்தத்தை அளிக்கும்.
(லிஸானுல் அரபி) அரபி மொழியில் அகராதிகளான லிஸானுல் அரபி மூன்றாம் புத்தகம்
154ம் பக்கத்திலும் அரபிக் இங்லிஸ் லெக்ஸிகன் முதலாம் புத்தகத்திலும், 3
ம் பாகம் 583 பக்கத்திலும் தஜ்ஜாலைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது:-
“தஜ்ஜால் என்பது பிரயாணம் செய்யும் ஒரு மனிதச் சமூகமாகும். தங்களின்
அதிக்கப்படியான எண்ணிக்கையால் பூமியை மூடிவிடுகிற ஒரு பெரும் மனிதக்
கூட்டமிருக்கும்”.
அகராதி தரும்
இந்த விளக்கத்தை நோக்கும்போது பொய்யான சித்தாந்தங்களை கொள்கைகளை உலகம்
முழுவதும் திரிந்து பரப்பும் ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே தஜ்ஜால் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
மேலும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து தப்புவதற்காக மார்க்கமாக – வழியாக
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு இயம்பியுல்லார்கள்.
“உங்களில் எவர்
தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பாரோ அவர் சூரா கஹ்பின் (திருக்குர்ஆன் 18ம்
அதிகாரம்) முதல் பத்து வாக்கியங்களை ஓதுங்கள். அவ்வாறு ஓதிவந்தால் அவனது
தீங்களைவிட்டு தப்பித்துக் கொள்வீர்கள் " (மிஷ்காத்) தஜ்ஜாலின் தீங்கை
விட்டும் தப்புவதற்கு மார்க்கமாக கூறப்பட்ட இந்த வாக்கியங்களே தஜ்ஜாலை
யாரென அறிந்து கொள்வதற்கு வழியாகவும் அமைந்துள்ளது. இந்த நபிமொழியில்
குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆனில் ‘கஹ்ப்’ என்ற அத்தியாயத்தின் முதல் பத்து
வசனங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.
“அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது எச்சரிக்கை செய்கிறது.
அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களுக்கும் இது பற்றி எவ்வித ஞானமும் இல்லை. அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமான கூற்றாகும். அவர்கள் பொய்யையே கூறுகின்றன.”(18:4-5)
திருக்குர்ஆனில்
இந்த வாக்கியங்களை ஆராயும்போது இன்றைய உலகில், இயேசு இறைவனின் குமாரன்
என்று கூறி இணை துணையற்ற இறைவனுக்கு ஒரு மகனை கற்பித்துக் கொண்டிருக்கும்
கிறிஸ்துவ சமூகத்தின் ஆதிக்கத்தையும் அதனுடைய பிரச்சாரத்தையும் தஜ்ஜால்
என்ற பதம் குறிப்பிடுகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மாபெரும்
பொய்யை (இறைவனுக்கு மகன் உண்டு) உலகம் முழுவதம் தங்கள் பண பலத்தாலும்
ஆட்சி பலத்தாலும் பரப்பி வரும் இவர்களுக்கு தஜ்ஜாலுடைய அடையாளங்கள்
அப்படியே பொருந்துகின்றன.
தாஜ்ஜாளுக்கு
ஒரு கண் குருடு என்ற அடையாளம் அந்த சமூகத்தின் ஆத்மீக கண் குருடாயிருப்பதை
சுட்டிக் காட்டுகின்றது. இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர் மறுமையிலும்
குருடராக இருப்பார் (17:73) என்ற திருக்குர்ஆன் வசனம் எவ்வாறு முகத்திலுள்ள
கண்ணைக் குறிப்பிடாமல் அகக்கண்ணைக் குறிப்பிடுமோ அவ்வாறே தஜ்ஜாலுடைய கண்
என்பதன் பொருள் ஆத்மீக, தெய்வீக கண்ணை குறிப்பதாகும். அதே சமயம் இந்த
கிறிஸ்தவ சமூகம் உலகத்துறை என்ற ஒரு கண்ணை மாத்திரமே பெற்றிருக்கிறதே ஒழிய
ஆத்மீகத் துறை என்ற மறு கண் அதற்க்கு குருடாயிருக்கிறது. தாமஸ் லிட்ஸ் என்ற
ஐரோப்பிய எழுத்தாளர் தனது தி அன்வேய்லிங் டாட்டர் ஆப் அன் ஏஜ்டு மதர் (The
unvailling daughter of an aged mother) என்ற புத்தகத்தில் ம் பக்கத்தில்
இவ்வாறு கூறுகிறார். (The great Anti christ is pope Rule in the chruch of
rome) அந்தி கிறிஸ்து அதாவது தஜ்ஜால் ரோம் நகரில் உள்ள போப்பின் ஆட்சியே”
ஒரு கிறிஸ்தவரின் இந்த மொழிகள் கிறிஸ்தவ சமூகத்தின் தலைவருக்கும்
ஆத்மீகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்களின் கொள்கையே தஜ்ஜால்
என்பதை உணர்ந்து எழுதப்பட்டவையாகும். மனிதனை இறைவனாக கொள்ளும் அவர்களின்
கொள்கை ஆத்மீகத்தன்மையை அடையக் கூடிய வழியில், பெரும் தடைக் கல்லாக
இருக்கிறது.
க.ப.ர அதாவது
காபிர் என்ற நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பற்றிக் கூறப்படும் சொல் தஜ்ஜாலின்
இரு கண்களுக்கு மத்தியில் எழுதப்பட்டிருக்கும் எனபதன் பொருள் நம்பிக்கை
கொண்ட முஸ்லிம்கள் இவர்களை மிக இலேசாக அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதே.
தஜ்ஜாலின் கழுதை
என்பது பொதி சுமக்கும் கழுதையை குறிப்பிடுவதல்ல. கால்முட்டு வரை தண்ணீரில்
இருக்கும் கழுதையை, எழுபது கஜம் நீளமுள்ள கழுதையை நாம் எங்கும் காண
முடியாது. இவைகள் அனைத்தும் நீராவியால் இயங்கும் ரயில் வண்டிகளையும்,
கப்பல்களையும் குறிப்பிடுகின்றன. மேலும் கப்பலுக்கு ‘முட்டுகள்’ வரை
தண்ணீர் இருக்கிறது. ரயிலுக்கு 70 கஜ நீளமும் அதற்கு மேலும் இருக்கிறது.
தஜ்ஜால்
நரகத்தையும்,
சுவர்க்கத்தையும் கொண்டு வருவான் என்பதன் பொருள் இன்றைய கிருஸ்தவ சமூகம்
அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வருவதை
சுவர்கத்திற்கும், அநாவசிய யுத்தங்களை உண்டாக்கி மக்களைக் கொண்டு
குவிப்பதையும் ஏனைய நாடுகளுக்கு ஆயுதங்களைத் தந்து அவர்களையும் யுத்தத்தில்
ஈடுபட வைப்பதையும் நரகத்திற்கும் ஒப்பாக கூறப்பட்டுள்ளது. செல்வச்
செழிப்பில் ஆழ்ந்துள்ள அமெரிக்காவும் அதனால் அவதிக்குள்ளான வியட்நாமும் நம்
கண் முன்னே காட்சியளிக்கிறது.
தஜ்ஜால்
வானத்தையும் பூமியையும் ஆட்சி புரிவதாக கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமூகம்
உலகின் பல்வேறு நாடுகளை தனது ஆட்சிக்குள் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவ நாடான
கிரேட் பிரிட்டன் அதன் ஆதிக்கத்தின் கீழ் உலக நாடுகள் அனைத்தையும்
வைத்திருந்ததை நாம் மறக்க முடியாது. அதே சமயம் வான வெளியையும் அமெரிக்கா
ஆக்கிரமித்து வெற்றியும் பெற்று வருவதை நாம் காணமுடிகிறது.
தஜ்ஜால்
அப்பத்தின் மலைகளை கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது. ரயிலில்
இணைக்கப்பட்டுள்ள டைனிங் காரும் (Panty Car) உணவு விடுதியும், கப்பலில்
உள்ள காண்டீனும் இதற்க்கு பெரும் உதாரணமாகும். மேலும் அமெரிக்காவும்
பிரிட்டனும் இன்று பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொருள்களை இனாமாகக்
கொடுத்துவருகிறது. மேலும் அமேரிக்கா உலகில் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு
கோதுமையை அளித்து வருவது “அப்பத்தைக் கொண்டுவருவான்” என்ற தீர்க்க தரிசனம்
அப்படியே பூர்த்தியாகியதை காட்டுகிறது.
தஜ்ஜாலின் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பதன் கருத்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செயற்கை முறையிலான மழையே!
தஜ்ஜால் முழு
உலகத்தையும் சுற்றித் திரிவான். ஆனால் மக்காவுக்குள்ளும்,
மதீனாவுக்குள்ளும் அவனால் பிரவேசிக்கமுடியாது என்ற தீர்க்க தரிசனத்தின்படி
கிறிஸ்துவ சமூகம் தனது பிரசாரத்தை உலகின் எல்லா நாடுகளிலும் செய்து
வருகிறார்கள். ஆனால் மக்காவிலும் மதீனாவிலும் அவர்களால் நுழைய முடியவில்லை.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட
ஹென்றி பெரோஸ் என்ற பாதிரியார் இவ்வாறு முழங்கினார்:- இஸ்லாமிய
இராஜ்ஜியங்களில் கிறிஸ்துவத்தின் பெரும் வெற்றியை இப்போது
குறிப்பிடுகிறேன், கெய்ரோ, டமாஸ்கஸ், டெஹ்ரான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில்
இயேசு நாதரின் சீடர்களை மட்டும்தான் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல.
சிலுவையின் ஒளி அரபு நாடுகளில் பரவி கஅபாவில் சிலுவை நாட்டப்படும்
(பெரோஸின் சொற்பொழிவுகள் பக்கம் 46) இந்தப் பாதிரியின் முழக்கம்
நூறாண்டுகளை கடந்ததும் நிறைவேறாத பகற்கனவாகவே விளங்குகிறது. இது
மக்காவுக்குள்ளும் மதினாவுக்குள்ளும் தஜ்ஜாலால் நுழைய முடியாது என்ற
தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றுகிறது. என்றாலும் தஜ்ஜாலின் ஓசை உலகெங்கும்
கேட்கும் என்ற நபி வாக்கியத்திற்கு இணக்கமாக உலகெங்கும் வானொலி மூலமாகவும்,
தொலைக்காட்சி மூலமாகவும் நடைபெற்றுவருகிறது.
‘தஜ்ஜால்
கோயிலிலிருந்து புறப்படுவான்’ என்பதன் கருத்து இன்றைய கிறிஸ்தவ சமூகம்
ஆரம்பத்தில் சர்ச்சிலிருந்துதான் வெளிப்பட்டது. அவர்களின் அரசியல்,
பொருளாதாரம், கலாச்சாரம் இவையாவும் சர்ச் என்ற அவர்களின் கோயிலிலிருந்தே
உருவெடுத்தன என்பதை சரித்திரம் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறது.
தஜ்ஜாலைப் பற்றி
இவ்வளவு தெளிவாக தீர்க்கதரிசனம் கூறிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
‘வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் தஜ்ஜாலை தனது சுவாசத்தால் கொல்லுவார்”
(மிஷ்காத்) என்றும் கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து தஜ்ஜால் தோன்றும்
காலத்திலேயே வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் தோன்ற வேண்டும் என்பது
புலனாகிறது. தஜ்ஜால் என்பது இன்றைய கிருஸ்தவ சமூகம் என்றால் அதன்
கொள்கையிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் முஸ்லிம் சமுதாயத்தை, ஏன் மனித
சமுதாயத்தை காப்பாற்ற, அதை முறியடிக்க இமாம் மஹ்தியும் தோன்றவேண்டும். ஆம்!
அஹ்மதிய்யா இயக்கத்தின் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தான்
தன்னை மஹ்தி மஸீஹ் என்று பிரகடப்படுத்தினார்கள். தஜ்ஜாலை கொல்லவந்த
மஸீஹும், சிலுவையை முறிக்க வந்த ஈஸப்னு மரியமும் நானே என்று அவர்கள்
வாதித்தார்கள். வாதித்ததோடு மட்டுமல்லாமல் செயலிலும் காட்டினார்கள்.
இறைவனுக்கு மகனை கற்பிக்கின்ற கொள்கைகளுக்கு எதிராக ஏராளமான நூற்களை
எழுதியவர்கள் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களே!
நூற் முஹம்மது
மௌலான நக்ஸபந்தி தில்லி சாஹிப் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது மூலமாக
கிறிஸ்தவத்திற்கு எதிரான பலப்பரீட்சையில் இஸ்லாத்திற்கு கிடைத்த இந்த
மகத்தான வெற்றியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
பாதிரியார் லேப்
ராய், பாதிரியார்களின் ஒரு மிகப் பெரிய கூட்டத்துடன், சிறிது
காலத்திற்குள் முழு இந்தியாவையும் கிறித்துவ மதமாக்கிவிடுவேன் என்று
உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து
புறப்பட்டார். ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து பெரும் பெரும் பண உதவி
மற்றும் பிற்காலத்தில் செய்யப்படும் தொடர் உதவிகளின் வாக்குறுதியோடு
இந்தியாவில் நுழைந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். ஹஸ்ரத் ஈஸா (அலை)
அவர்கள் பூத உடலுடன் வானில் இருப்பது, மற்ற நபிமார்களின் பூமியில் அடக்கம்
செய்யப்பட்டிருப்பது போன்ற தாக்குதல்கள் பாமர மக்களிடம் வேலை செய்தது.
அப்போது மௌலவி குலாம் அஹ்மது காதியானி எழுந்து நின்று பாதிரிகளின்
கூட்டத்தைப் நோக்கி, எந்த ஈஸாவைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ அவர் மற்ற
மனிதர்களைப் போல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டார். எந்த ஈஸா
வருவதைப் பற்றி கூறப்பட்டுள்ளதோ அது நான்தான். எனவே நீங்கள் நற்பேறு
பெற்றவர்களாயின் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த முறையால்
அவர் லேப்ராயை எந்த அளவுக்கு திணறடித்தார் என்றால் இதிலிருந்து தப்பித்து
வெளியே வருவது அவருக்கு கஷ்டமாகி விட்டது. இந்த முறையால் அவர் இந்தியா
முதல் தலைமையகம் வரையுள்ள பாதிரிகளை தோற்கடித்துவிட்டார்.” ( திபாச்சா
குர்ஆன், பக்கம் 130 – ஹாபிஸ் நூற் முஹம்மது நக்ஸபந்தி சிஷ்தி – தில்லி)
அவர்களைப்
பின்பற்றி அஹ்மதிய்யா இயக்கம் இன்று கிறிஸ்துவ உலகிற்கு பெரும் சவாலாய்
திகழ்கிறது. மேலும் மஸீஹின் வருகையால் தஜ்ஜால் கொல்லப்படுவதாக திரு நபி
(ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் கருத்து விவாதத்தால் கிறிஸ்துவ கொள்கைகளை
முறியடிப்பதே! மேலும் நபியவர்கள், மஸீஹ் தஜ்ஜாலை பாபுலூத்தில் கொல்லுவார்.
(மிஷ்காத்) என்று கூறியிருக்கிறார்கள். லூத் என்ற அரபிப் பதம் ‘அலத்’
என்பதின் பன்மை. இதற்கு பொருள் வாக்கு வாதங்கள், தர்க்கங்கள் என்பதே. 1920
ம் ஆண்டு அஹ்மதிய்யா இயக்கத்தின் இரண்டாவது கலீபா ஹஸ்ரத் அஹ்மது (அலை)
அவர்களின் குமாரனார காலஞ்சென்ற ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது (ரலி)
அவர்கள் லண்டனில் கிறிஸ்தவத்திற்கு எதிராக விவாதித்த இடமும் பாபுலூத் என்ற
பெயரில் அழைக்கபப்ட்டது மிகுந்த வியப்புக்குரியது. இது ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத தீர்க்க தரிசனம் அப்படியே நிறைவேறியது
எனபதற்கு பெரும் சான்றாய் அமைந்திருக்கிறது.
இன்று ஹஸ்ரத்
அஹ்மது (அலை) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அஹ்மதிய்யா இயக்கம்
இஸ்லாத்திற்கெதிரான கிறிஸ்துவ பிரசாரத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக
அமைவதோடு இஸ்லாத்தின் இணையற்ற போதனைகளை பரப்பி வருகிறது.
ஜெர்மானிய மொழியில் ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து வெளிவரும் Freidenker என்ற பத்திரிக்கை இவ்வாறு கூறியிருந்தது.
ஆசியாவிலும்,
ஆப்ரிக்காவிலும் சம காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் மிக மும்முரமாக
நடைபெறுகிறது. இதோடு நின்று விடாமல் கிருஸ்தவ உலகமான ஐரோப்பாவை நோக்கியும்
தீவிரமாக முன்னேறிவருகிறது. இந்நாட்டின் மத்தியிலும் அது வேரூன்றி
வருகிறது. இதன் காரணமாக கிருஸ்தவ சர்ச் பெரும் தொல்லைக்குள்ளாகிறது. ஒரு
பெரும் சவாலை உணருகிறது.
இந்த
பத்திரிக்கை செய்தியொன்றே அஹ்மதியா இயக்கம் தாஜ்ஜாலுக்கெதிராக இஸ்லாமிய
பிரச்சாரம் என்ற போரை தீவிரமாக நடத்தி வருவதை மிகத் தெளிவாகக்
காட்டுகின்றது.
எனவே, இறைவனுடைய
வழியிலிருந்து வெகு தூரத்திற்கு இட்டுச்செல்லப்படும் பேரபாயத்திலிருந்து
மனித இனத்தைக் காப்பாற்ற முஸ்லிம்கள் ஏன் மார்க்கவாதிகள் அனைவரும்
அஹ்மதிய்யத் என்ற கொடியின் கீழ் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None