இமாம் மஹ்தி மற்றும் கலீஃபதுல்லாஹ் விஷயத்தில் மௌலவி பிஜெ யின் அறியாமை

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ 

இந்த ரமளான் மாதத்தில் NTF அமைப்பின் தலைவரான சகோ பி. ஜெ அவர்கள் தமது வாட்ஸ் அப் நம்பரில் வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் 3 ஆம் தேதி அன்று ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். அந்த கேள்வி என்ன அதற்கு சகோ பி.ஜெ அவர்கள் அளித்த பதிலை குறித்து நாம் பார்க்கலாம்.

அந்த சகோதரர் கேட்கும் கேள்வி என்னவென்றால், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை நெருங்கி விட்டதா? சிரியா போர் அதற்கான முன்னறிவிப்பா? என்று கேள்வி கேட்கிறார்.

பொதுவாக சகோ பி ஜெ தாம் அறிவுக்கு எது எட்டுகிறதோ அதனை தமது பதிலாக மக்களுக்கு எடுத்து கூறி வருகிறார். ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அந்த பதில் சரியானதுதானா, அல்லது தவறா என்பதை அந்த பதிலை ஏற்று நடக்கும் சகோதரர்கள் சற்றும் சிந்திப்பதில்லை. ஒரு பக்கம் இவர்கள் நாங்கள் தக்லீது செய்வதில்லை என்று கூறிக் கொண்டாலும் மறுபுறம் அவர்கள் தாமே தக்லீது செய்து வருகிறோமே என்பதை சற்றும் அறிவதில்லை. சரி இப்போ நாம் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு சகோ என்ன பதில் கூறுகிறார், அது எவ்வாறு தவறான பதில் என்பதை பார்க்கலாம்.


சகோ பி ஜெ கூறுகிறார்: ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் மஹ்தினு ஒருத்தர் வருவார்னு சொல்லி இருக்கிறாங்க, அந்த சொன்னதாக வருகிற செய்தியில் 95 சதவிகிதம் செய்தியானது பொய்யானது. ஒரு 5 சதவிகிதம் செய்தியானது சரியானதாக இருக்கிறது. என்று கூறிவிட்டு அவர் ஓர் ஹதீஸை எடுத்து வைக்கிறார் அதாவது 

لَا تَذْھَبُ الدُّنیا حتّٰی یَمْلِکَ العربَ رجلٌ مِن اہلِ بَیتِی یُواطِیُٔ اسْمُہٗ اسْمِی
எனது அஹ்லே பைத்தை சார்ந்த ஒருவர் அரபு பிரதேசத்தை அதிபராக ஆகும் வரை உலகம் அழியாது. அவரது பெயர் எனது பெயராக இருக்கும். 

இந்த ஹதீஸை எடுத்து கூறுகிறார். இந்த ஹதீஸ் சுனன் அபூ தாவூதிலும், திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதே வீடியோவில் சகோ பி ஜெ கூறுகிறார் பஞ்சாபில் காதியானி என்ற ஒருவர் நான்தான் மஹ்தி என்கிறார், என்னடானு கேட்டா 'என் பெயர் அஹ்மது' இவர் பெயர் குலாம் அஹ்மது அதாவது அஹ்மதின் அடிமை. ஆக இவர் பெயர் அஹ்மது என்பது கிடையாது மாறாக அப்துல்லாஹ் என்பதுபோல் குலாம் அஹ்மது என்பதே இவரின் பெயர் என்று கூறுகிறார்.

எமது பதில்: முதல் விஷயம் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் மஹ்தியின் வாதத்தை குறித்து தமது நூட்களில் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை சகோதரர்கள் கவனிக்க வேண்டும். அன்னார் கூறுகின்றார்கள்:

"ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறுகின்றார்கள்,'ஃபாத்திமா (ரலி) அவர்களின் சந்ததியிலிருந்தும் மற்றும் வ மின் உத்ரத்தி (எனது வம்ஸத்திலிருந்து) போன்றவற்றில் கூறப்பட்டுள்ள மஹ்தியே நான் என்பது எனது வாதமில்லை. மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பதே எனது வாதம் ஆகும். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஃபாத்திமா வம்ஸா வழியிலிருந்து தோன்றுவார் என்பது குறித்து எந்த முஹத்திஸின் கூற்றும் இல்லை. ஆம், இதனுடன் அனைத்து முஹத்திஸும் கூறுவது என்னவென்றால், நானும் கூறுகின்றேன் அதாவது வாக்களிக்கப்பட்ட மஹ்தியை குறித்து எந்த அளவுக்கு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளனவோ அவையாவும் பலகீனமாதாக இருக்கின்றன. இதில் எதுவும் சஹீஹானது இல்லை. எந்த அளவுக்கு இந்த ஹதீஸ்களில் இட்டுக்கட்டுப் பட்டுள்ளனவோ அவ்வாறு வேறு எந்த ஹதீஸிலும் இட்டுக்கட்டப்படவில்லை. அப்பாஸி கிலாஃபத் ஆட்சியில் கலீஃபாமார்களுக்கு எந்த அளவுக்கு விருப்பம் இருந்தது என்று சொன்னால் அவர்கள் தங்களிலேயே வாக்களிக்கப்பட்ட மஹ்தியை நிர்ணயித்து கொண்டார்கள். ஆகவே இதன்  காரணமாக சில ஹதீஸ்களில் மஹ்தி என்பவர் பனூ அப்பாசிலிருந்தும் வருவார் என்று கூறப்பட்டுள்ளது சிலவற்றில் பனூ ஃபாத்திமாவிலிருந்து (வருவார் என்று கூறப்பட்டுள்ளது) ஒரு சில ஹதீஸ்களில் 'ரஜுலும் மின் உம்மத்தி' (எனது உம்மத்திலிருந்து ஒருவர் வருவார்) என்றும் வந்துள்ளது. ஆனால் உண்மையில் இவ்வாறான அனைத்து ஹதீஸ்களும் எந்த விதத்திலும் ஏற்கத் தகுந்தவையல்ல. இது எனது கூற்று மட்டுமல்ல மாறாக பெரிய பெரிய அஹ்லே சுன்னத்தின் உலமாக்களும் இதையே கூறி வந்துள்ளனர்." (ரூஹானி கஜாயின் பாகம் 21 பக்கம் 355)

மேலும் கூறுகின்றார்கள்:
"மௌலவி சனாஉல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள், தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்ற வாதம் எவ்வாறு நினைவில் வந்தது? அதுவும் அந்த வாதத்தை ஹதீஸ்களிலிருந்துதானே எடுக்கப்பட்டது. பிறகு ஏன், ஹதீஸ்களின் மற்ற அடையாளங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (என்று கூறுகின்றார்கள்). இவற்றை இட்டுக்கட்டி அல்லது அறிவீனத்தனமாகவே இவர் கூறுகின்றார். நாம் இதற்கான பதிலை இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறோம், " எனது இந்த வாதத்திற்கான அடிப்படை ஹதீஸ் அல்ல மாறாக திருக்குர்ஆன் மற்றும் என் மீது இறக்கப்பட்ட வஹியே ஆகும். ஆம்,  திருக்குர்ஆனை சார்ந்த, என் மீது இறக்கப்பட்ட வஹிக்கு எதிராக இல்லாது எந்த ஹதீஸ்கள் எனது வாதத்திற்கு சாதகமாக இருக்கின்றனவோ அதனையே நாம் கூறுகின்றோம். மற்ற ஹதீஸ்களை நாம் குப்பையை போன்று எறிந்து விடுகின்றோம். ஒருவேளை ஹதீஸ்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் எனது வாதத்தில் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. ஆம் எனக்கு இறங்கிய வஹியில் பல்வேறு இடங்களில் திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்து கூறப்பட்டுள்ளது. இதன் பிராகாரம், நீங்கள் பராஹீனே அஹ்மதிய்யாவில் இந்த வாதத்திற்கு சாதகமாக எந்த ஹதீஸும் கூறப்படவில்லை என்பதை பார்க்கலாம். அனைத்து இடங்களிலும் அல்லாஹ் தஆலா எனது வஹியில் திருக்குர்ஆனை முன் வைத்துள்ளான்." (இஃஜாஸி அஹ்மதி ஸமீமா நுஸூலுள் மஹ்தி பக்கம் 36, ரூஹானி கஜாயின் பாகம் 19 பக்கம் 140)

இந்த மேற்கோள்களை சகோதரர்கள் தமது கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது நாம் சகோ பிஜெ அளித்த தவறான பதிலை குறித்து கீழே காணலாம்.

சகோ பிஜெ இமாம் மஹ்தி சம்பந்தமாக வருகின்ற ஹதீஸ்கள் 95 சதவிகிதம் பொய்யானது என்று சொல்லிவிட்டு அவர் ஓர் ஹதீஸை எடுத்து வைத்து கூறி இது உண்மையான ஹதீஸ் என்று வாயால் சொல்கிறாரே அல்லாமல் அது உண்மையான ஹதீஸே என்பதை நிரூபிக்கவில்லை. ஆகவே அவர் வைக்கும் இந்த ஹதீஸும் அந்த 95 சதவிகிதம் பொய்யான ஹதீஸில் இல்லை என்று எவ்வாறு கூற முடியும்? அடுத்து இந்த ஹதீஸ் அவர் கூறும் அந்த 5 சதவிகிதம் உண்மையான ஹதீஸ் வரிசையில் இருக்கிறது என்று ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டாலும், இதன் மூலம் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வாதம் பொய்யானது என்று நிரூபிக்க முடியாது. காரணம் இந்த ஹதீஸில் மூன்று விஷயங்கள் கூறுப்படுகிறது ஒன்று வரக்கூடிய அந்த இமாம் மஹ்தி அரபு தேசத்தை ஆழும் வரை உலகம் அழியாது. இரண்டாவது அந்த இமாம் மஹ்தி ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் அஹ்லே பைத்தை சார்ந்தவராக இருப்பார். மூன்று அவரது பெயர் எனது பெயரை போன்றிருக்கும் என்ற மூன்று விஷயங்கள் இந்த ஹதீஸில் முன்னறிவிக்கப்படுகிறது. இந்த மூன்று முன்னறிவிப்புகளும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் விஷயத்தில் முழுமையாகிறது. 

முதல் முன்னறிவிப்பு:  இந்த ஹதீஸில் கூறப்படும் முதல் முன்னறிவிப்பு,'இமாம் மஹ்தி அரபு தேசத்தை ஆழும் வரை உலகம் அழியாது.' இதற்கு நேரடி பொருள் எடுத்து கொண்டாலும் இதனால் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் பொய்யர், காரணம் அவர் அரபு தேசத்தை ஆழவில்லை என்று கூறி அன்னாரை மறுத்து விட முடியாது காரணம் இந்த ஹதீஸில் இமாம் மஹ்தி அலை அவர்கள் அரபு பிரதேசத்தை ஆழும் வரை உலகம் அழியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இன்னும் உலகம் அழியவில்லை அன்னார் அதாவது அன்னாரின் ஜமாஅத் உலகம் அழிவதற்கு முன்பாக அரபு தேசத்தை ஆழும் காலம் வந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து இதே வீடியோவில் சகோ பி ஜெ ஒரு ஹதீஸை சுட்டிக்காட்டி கூறுகிறார் 'வரக்கூடிய அந்த மஹ்தி பூமியிலுள்ள அக்கிரமத்தையும், கொடுமைகளையும் துடைத்து எரிந்து விட்டு பூமி முழுவதும் நீதி நேர்மையை கொண்டு நிரப்பி விடுவார் என்று கூறுகிறார், இதிலிருந்து என்ன தெளிவாகிறது என்று சொன்னால் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய இமாம் மஹ்தி அரபு தேசத்தை மட்டும் ஆட்சி செய்ய மாட்டார் ஆறாக முழு உலகையும் ஆட்சி செய்வார் என்பது தெளிவாகிறது. முழு உலகையும் ஆட்சி செய்வார் என்றால் அதற்கு என்ன பொருள் என்பதை அல்லாமா முல்லா அலி காரி மிஷ்காத் ஷரஹில் கூறுகிறார். அதில் அன்னார் இவ்வாறு கூறுகின்றார்கள், "இஸ்லாத்தில் எவர் அவரை பின்பற்றுவாரோ, எவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ அவர் அரபை சாரந்தவராக இருப்பார்."  (மிர்க்காதுல் மஃபாதீஹ் ஷரஹ் மிஷ்காத்துல் மஸாபீஹ் பாகம் 10 பக்கம் 89 ஹதீஸ் நம்பர் 5452)

இன்னாரின் கூற்றின்  அடிப்படையில் இவ்வுலகில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரின் மீது வரக்கூடிய இமாம் மஹ்தி அலை அவர்கள் ஆட்சி செய்யும் வரை இந்த உலகம் அழியாது என்பது விளங்குகிறது. இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் ஜமாஅத் எவ்வாறு இந்த இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களில் பலரின் மீது ஆட்சி புரிகிறதோ அவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அனைவர்களின் மீதும் ஆட்சி செய்யும் அதன் பிறகு உலகம் அழியும் காலம் துவங்கிவிடும். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்) 

இரண்டாவது முன்னறிவிப்பு: இமாம் மஹ்தி அலை அவர்கள் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் அஹ்லே பைத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற முன்னறிவிப்பும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் விஷயத்தில் இனிதே நிறைவேறுகிறது. எவ்வாறு என்று சொன்னால், ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் குடும்பம் "ஃபார்ஸி வம்சத்தை" சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள். இதனை அன்னாரின் மிகக் கொடிய எதிரி முஹம்மது ஹுஸைன் பட்டாளவி அவரும் கூறியுள்ளார். (பார்க்க இஷாஅத்துஸ் சுன்னா நம்பர் 7 பக்கம் 193) ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் சல்மான் ஃபார்ஸி வம்ஸா வழியிலிருந்து ஒருவர் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றடைந்த ஈமானை மீட்டெடுப்பார் என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். (புகாரி கிதாபுத் தஃப்சீர் வசனம் வ ஆகரீன மின்ஹும்) இதில் வரக்கூடிய "ரஜுல்" என்ற பதமானது இமாம் மஹ்தியைத்தான் குறிக்கும் என்பதை மற்றும் பல ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. 

இதில் நாம் கூறவரும் விஷயம் என்னவென்றால், ஹஸ்ரத் சல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் ஓர் அஜ்மீயாக இருந்தாலும் அவர்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் "சல்மான் எம்மை சார்ந்தவரும் எனது அஹ்லே பைத்தை சார்ந்தவரும் ஆவார்" என்று கூறியுள்ளார்கள். 

ஆக இந்த அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் குடும்பம் ஃபார்ஸி வம்சத்தை சார்ந்தவர்களாக இருந்தார்கள். அந்த வம்சத்தில் பிறந்த ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் இவ்வாறு சல்மான் ஃபார்ஸி வம்ஸா வழியில் தோன்றியவர்கள் என்பதும் அந்த வகையில் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் அஹ்லே பைத்தை சார்ந்தவர்கள் என்பதும் தெளிவாக நிரூபணமாகிறது.

மூன்றாவது முன்னறிவிப்பு: ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் பெயர் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் பெயரை போன்றே அஹ்மது என்று சூட்டப்பட்டுள்ளது. அவர்களின் முழு பெயர் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி என்றிருந்தாலும், அன்னாரின் அசல் பெயர் 'அஹ்மது' என்பதே ஆகும். அஹ்மது என்பது ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் மற்றொரு பண்பு பெயராகும் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு அறிவித்த பல்வேறு வஹியில் அன்னாரை "அஹ்மதே" என்றே அழைத்துள்ளான். உதாரணத்திற்கு அல்லாஹ் கூறுகிறான்:

یَا اَحمَدُ بَارَکَ اللّٰہُ فِیکَ

(ஆதாரம்: ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் ரூஹானி கஜாயின் பாகம் 5 பக்கம் 550)
மட்டுமல்லாமல் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பெயர் அஹ்மதகா இருக்கும் என்றும் பல்வேறு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சான்றோர்களின் கூற்றும் நூட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு சிலவற்றை நாம் கீழே தருகிறோம்.

முஹம்மது இஸ்மாயீல் ஷஹீத் தஹ்லவி (ஷஹாதத் வருஷம் 1831) என்பவர் தமது நூல் "அர்பயீன் ஃபி அஹ்வாலில் மஹ்திய்யீன்" என்ற நூலில் "ஹஸ்ரத்தின் (இமாம் மஹ்தியின்) பெயர் அஹ்மது ஆகும்" என்று கூறுகிறார்.



அடுத்து ஷேக் முஹம்மதுஸ் சபான் என்பவர் தமது நூல் "நூருல் அப்ஸார்" பக்கம் 134 இல் இவ்வாறு எழுதுகிறார், "ஒரு கூட்டம் ஹிந்தில் போர் செய்யும். அக்கூட்டம் மஹ்தியுடன் இருக்கும். அவரின் பெயர் அஹ்மத் ஆக இருக்கும்"


அடுத்து இந்த வாசகத்திற்கு மற்றுமொரு உவமை வடிவிலான பொருளும் உண்டு. அதை குறித்து அல்லாமா முல்லா அலி காரி அவர்கள்  இவ்வாறு கூறுகின்றார்கள், 'இமாம் மஹ்தியின் பண்பு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பண்பை ஒத்ததாக இருக்கும், அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் மக்களுக்கு நேர்வழி காட்டுவார்' என்று கூறப்பட்டுள்ளது. (பார்க்க மிர்காத்துல் மஃபாதிஹ் ஷரஹ் மிஷ்காதுல் மஸாபிஹ் பாகம் 9 கீதாபுள் ஃபித்ன் ஹதீஸ் நம்பர் 5452)



ஆக இந்த அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் விஷயத்தில் இக்காலத்தில் தோன்றும் இமாம் மஹ்தியின் பெயர் ஹஸ்ர்த் ரசூல் (ஸல்) அவர்களின் பெயரை போன்றதாக இருக்கும் என்ற முன்னறிவிப்பு நிறைவேறுகிறது.   

அடுத்து அவர் சொல்கிறார்: வரக்கூடிய அந்த இமாம் மஹ்தி ஓர் அதிபர் மட்டுமே அன்றி அவர் நபியாக இருக்க மாட்டார் என்று கூறுகிறார்.

நமது பதில்: ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸா அலை அவர்களை குறித்து அவர் நபியுல்லாஹ்வாக இருப்பார் என்று முஸ்லிம் ஹதீஸில் நான்கு முறை கூறியுள்ளார்கள். (பார்க்க முஸ்லிம் கிதாபுல் ஃபித்ன் வ இஷ்ராதுஸ் ஸாஅஹ்)

அதே சமயம் ஹஸ்ரத் ரசூல் ஸல் அவர்கள் அந்த ஈஸாவே இமாம் மஹ்தியாகவும் இருப்பார் என்றும் கூறியுள்ளார்கள். அன்னார் கூறுகின்றார்கள்:
"லல் மஹ்தி இலா ஈஸா இப்னு மர்யம்" (சுனன் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 1341 கிதாபுல் ஃபித்ன்)



மேலும் கூறுகின்றார்கள்:
"உங்களில் எவர் உயிரோடு இருப்பாரோ அவர் ஈஸா இப்னு மர்யமை இமாம் மஹ்தியாக சந்திப்பார்" (முஸ்னது இமாம் அஹ்மது பின் ஹன்பல் ஹதீஸ் நம்பர் 9312)



ஆக இந்த இரு ஹதீஸின் அடிப்படையில் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய ஈசாவே இமாம் மஹ்தியாக இருப்பார் என்பது தெளிவாகிறது. அதே போன்று இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய ஈஸா நபியுல்லாஹ்வாகவும் இருப்பார் என்பதும் தெளிவாகிறது. 

ஆகவே மேற்சொன்ன ஹதீஸின் வாயிலாக வரக்கூடிய இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அல்லாஹ்வின் நபியாக விழங்குவார் என்பதும் நிரூபணமாகிறது. 

அடுத்து சகோ பி ஜெ ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி அலை அவர்களை குறிப்பிட்டு கூறுகிறார், 'அவர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வழிதோன்றலா என்று கேட்டால் இல்லை மாறாக இவர் ஓர் அஜ்மி ஆவார்' என்று கூறுகிறார்.

நமது பதில்: நாம் மேலே கூறி இருக்கிறோம் அதாவது ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வாதம் ஹதீஸை சார்ந்து அல்ல மாறாக குர்ஆனை சார்ந்தே அமைந்துள்ளது. ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் இதனை குறித்து என்ன கூறி இருக்கிறார்கள் என்பதையும் நாம் மேலே பதிவு செய்துள்ளோம். அதாவது இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய இமாம் மஹ்தி அவர்கள் இன்னென்னவர்களின் வம்ஸா வழியிலிருந்து தோன்றுவார் என்று வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானதாகும் என்பதை குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் அதாவது இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய இமாம் மஹ்தி அலை அவர்கள் பனூ ஃபாத்திமாவிலிருந்து வருவார் என்பதை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை இந்த ஹதீஸை கொண்டு பொய்பிக்க முடியாது. காரணம் அன்னார் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வம்ஸா வையிலிருந்து வந்தவர்களே என்பதும் நிரூபணமாகிறது. அன்னாரின்  தாதிமார்கள் அதாவது தந்தை வழி பாட்டிமார்கள் சாதாத்தை (செய்யது சமூகத்தை) சார்ந்தவர்களாக இருந்தனர். ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறுகின்றார்கள்: "எனது முன்னோர்களின் வரலாற்றிலிருந்து நிரூபணமாவது என்னவென்றால் ஒரு தாதி (தந்தை வழி பாட்டி) தூய குடும்பமாகிய சாதாத்தை சார்ந்தவர்களாக மேலும் பனி ஃபாத்திமாவை சார்ந்தவர்களாக இருந்தார்கள்." (ரூஹானி கஜாயின் பாகம் 18 பக்கம் 212)

வம்ஸா வழி என்பது தாய் வழி அல்ல மாறாக தந்தை வழியாகவே இருக்க வேண்டும் என்று கூறினால். அதற்கான பதில் என்னவென்றால் இந்த சட்டம் சாதாரண குடும்பத்திடம் இருந்தாலும் இருக்கலாம் ஆனால் சாதாத் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே பெண் வழியாகத்தான் வந்திருக்கின்றன. ஏனென்றால் (இக்) குடும்பத்தின் வம்சம் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வழியாகவே வந்தது. 

2- ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலை அவர்கள் ஃபாத்திமா வம்ஸா வழியிலிருந்து தோன்றவில்லை என்று எதிரிகள் கூறுவதும் அவர்களின் உண்மையை எடுத்து கூறுகிறது. ஏனென்றால் பிஹாருல் அன்வார் என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,

یَقُوْلُ لَہٗ لَسْنَا نَعْرِفُکَ وَ لَسْتَ مِنْ وُّلْدِ فَاطِمَۃَ کَمَا قَالَ الْمُشْرِکُوْنَ لِمُحَمَّدٍ صَلَّی اللّٰہُ عَلَیْہِ وَسَلَّمَ۔
"இமாம் மஹ்தியை அவர்களின் எதிரிகள் கூறுவார்கள் அதாவது நீ யார் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் நீ ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வம்ஸா வழியிலிருந்து வரவில்லை. இவர்களின் இந்த ஆட்சேபனையானது மக்கத்து இணைவைப்பாளர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மீது சேய்த ஆட்சேபனை போன்று உள்ளது. (பிஹாருல் அன்வார் பாப் அல் ஆயாத்து அல் முஅவ்விலஹ் பி கியாமுல் காயிம்)

3- ஹதீஸ்களில் மஹ்தி எந்த பரம்பரையிலிருந்து வருவார் என்பதை குறித்து பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனை கொண்டு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு எதிராக வைத்து தமது வாதத்தை எதிரிகள் நிரூபிக்க முடியாது. பல கருத்து வேறுபாடுகளை கொண்ட ஹதீஸ்களை கீழே காணலாம்;

அ) اَلْمَھْدِیُّ مِنْ عِتْرَتِیْ مِنْ وُلْدِ فَاطِمَۃَ
மஹ்தி ஃபாத்திமா வம்ஸத்திலிருந்து வருவார். (கன்ஸுல் உம்மால் ஹதீஸ் நம்பர் 1938)

ஆ) سَیَخْرُجُ مِنْ صُلْبِہٖ رَجُلٌ یُسَمّٰی بِاِسْمِ نَبِیِّکُمْ یُشبہُ فِی الْخُلْقِ وَلَا یُشبہُ فِی الْخَلْقِ ثُمَّ ذَکَرَ قِصَّۃً یَمْلَاءُ الْاَرْضَ عَدْلًا اَخْرَجَہٗ اَبُوْدَاوٗدَ۔
அவர் (இமாம் மஹ்தி) ஹஸன் (ரலி) அவர்களின் வம்ஸா வழியிலிருந்து வருவார். அவரின் பெயர் எனது நபி (ஸல்) அவர்களின் பெயர் மற்றும் அவரின் பணி நபி (ஸல்) அவர்களின் பணியாக இருக்கும். மேலும் அவர் நீதி நேர்மையை கொண்டு பூமியை நிரப்புவார். (அன்னஜ்முஸ் சாகிப் பாகம் 2 பக்கம் 90 அடிக்குறிப்பு, அஹ்மதி அச்சகம் பாட்னா)

இ) اِنَّ الْمَھْدِیَّ مِنْ وُلْدِ الْحُسَیْنِ۔‘‘ رَوَاہُ ابْنُ عَسَاکَرٍ عَنْ جَابِرٍ۔
இமாம் மஹ்தி இமாம் ஹுஸைன் அவர்களின் வம்ஸா வழியிலிருந்து தோன்றுவார். (அன்னஜ்முஸ் சாகிப் பாகம் 2 பக்கம் 193 அடிக்குறிப்பு, அஹ்மதி அச்சகம் பாட்னா)

ஈ) قَالَ یَا عَمِّ اَمَا شَعُرْتَ اِنَّ الْمَھْدِیَّ مِنْ وُلْدِکَ۔
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்பாஸே மஹ்தி உமது சந்ததியிலிருந்து தோன்றுவார் என்பது உங்களுக்கு தெரியாதா? (ஹஜஜூல் கராமா-நவாப் சித்திக் ஹஸன் சாஹிப், பக்கம் 352, கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 179)

உ) உலகத்தை நீதி நேர்மையை கொண்டு நிரப்பும் அந்த மனிதர் எனது வம்ஸா வழியிலிருந்து வருவார் என்று ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (தாரிகுல் குலஃபா - அல்லாமா ஜலாலுத்தின் சுயூத்தி (ரஹ்)

ஆகவே ஒருத்தரை மட்டும் சுட்டி காட்டி இவரின் வம்ஸா வழியிலிருந்துதான் இமாம் மஹ்தி வருவார் என்று கூறுவது சரியான அளவுகோல் அல்ல, அது இருக்கவும் முடியாது என்பதை மேற்காணும் அறிவுப்புகள் எடுத்து கூறுகின்றன.

பிறகு சகோ பி ஜெ கூறுகிறார், 'ஹதீஸில் வரக்கூடிய அதாவது இமாம் மஹ்தி அல்லாஹ்வின்  கலீஃபாவாக இருப்பார்" என்ற ஹதீஸ் பலகீனமானது' என்று கூறுகிறார். பிறகு கூறுகிறார், காலீஃபா என்றால் ஒருவர் இறந்துவிட்டு பிறகு அவரிடத்தில் ஒருவர் வருவார் அல்லவா அவர்தான் கலீஃபா ஆவார்' என்று கூறுகிறார். ஆகவே கலீஃபதுல்லாஹ் என்று கூற முடியாது காரணம் அல்லாஹ்விற்கு மரணம் கிடையாது. 

நமது பதில்: சகோ பி ஜெ அவர்கள் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய இமாம் மஹ்தி அல்லாஹ்வின் கலீஃபாவாக இருப்பார் என்று வருகின்ற ஹதீஸ் பலகீனமானது என்று கூறுகிறார். அதற்கான காரணமாக அவர் ஹதீஸின் திராயத்தை மட்டும் கூறவில்லை மாறாக ரிவாயத்திலும் கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார். அந்த ஹதீஸை குறித்து நாம் கீழே காணலாம்; இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் இவ்வாறு வருகிறது:

عن ثوبان قال قال رسول الله صلى الله عليه و سلم : ( يقتيل عند كنزكم ثلاثة كلهم ابن خليفة . ثم لا يصير إلى واحد منهم . ثم نطلع الرايات السود من قبل المشرق . فيقتلونكم قتلا لم يقتله قوم ) ثم ذكر شيئا لا أحفظه . فقال ( فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج . فإنه خليفة الله المهدي )

ஹஸ்ரத் சவ்பான் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,"நீங்கள் மஹ்தியை கண்டால் நீங்கள் முழங்கால் இட்டு பனி மலையை தவழ்ந்து செல்ல நேர்ந்தாலும் சரியே (நீங்கள் அவ்வாறு சென்று) அவரிடம் பைஅத் செய்யுங்கள். ஏனென்றால் அவர் மஹ்தி மற்றும் அல்லாஹ்வின் கலீஃபா ஆவார். (இப்னு மாஜா கிதாபுல் ஃபித்ன், பாப் குரூஜூல் மஹ்தி பாகம் 2 பக்கம் 1367)



இமாம் ஹாக்கிம் அவர்கள் முஸ்தத்ரக்கில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். முஸ்தத்ரக் ஹாக்கிம் என்ற நூலில் இமாம் ஹாக்கிம் அவர்களின் பார்வையில் இரு ஷேக்மார்களின் (அதாவது புகாரி மற்றும் முஸ்லிம்) நிபந்தனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ள அறிவிப்புகளையே இமாம் ஹாக்கிம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் எப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த பக்கத்தில் அந்த ஹதீஸிற்கு கீழே இவ்வாறும் எழுதப்பட்டுள்ளது. அதாவது:

في الزوائد هذا إسناده صحيح . رجاله ثقات . ورواه الحاكم في المستدرك وقال . صحيح على شرط الشيخين

அதாவது, ஸவாயிதில் இதன் சனதுகள் ஸஹீகானது என்றும் அதன் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹாக்கிமும் முஸ்தத்ரக்கில் பதிவு செய்துள்ளார். மேலும் கூறுகிறார்,'இரு ஷேக்மார்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் இது சஹீஹானது' என்று கூறியுள்ளார்.

ஆகவே அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் என்பதும் அவர்களின் வரிசையும் சரியானது என்று கூறப்பட்டுள்ளது என்பதை நாம் இங்கு காண்கிறோம். 

அடுத்து சகோ பிஜெ இந்த ஹதீஸை திராயத்தின் (ஹதீஸில் கூறப்பட்டுள்ள கருத்தின்) அடிப்படையிலும் பலகீனமானது என்று கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம், இந்த ஹதீஸில் இமாம் மஹ்தியை குறித்து அல்லாஹ்வின் கலீஃபா என்று வந்துள்ளது. அல்லாஹ்வுக்கு யாராவது கலீஃபாவாக இருக்க முடியுமா? கலீஃபா என்றால் அவர் யாருக்கு கலீஃபாவாக இருப்பாரோ அவர் மரணம் அடைந்திருக்க வேண்டும். அல்லாஹ் மரணம் அடைந்தவனா!? ஆகவே இமாம் மஹ்தி அல்லாஹ்வின் கலீஃபாவாக இருக்க முடியாது யாருமே இருக்க முடியாது என்று கூறி இந்த ஹதீஸை மறுக்கிறார். 

நாம் திராயத்தை வைத்து பார்த்தாலும் இந்த ஹதீஸ் உறுதியானதுதான், இந்த ஹதீஸ் விஷயத்தில் சகோ பிஜெ அவர்களின் புரிதலில்தான் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் கீழே காணலாம். 

و عن انس قال استخلف رسول اللہ صلی اللہ علیہ وسلم ابن اُمِّ مکتوم یَؤُمُّ النّاس و ھو اعمیٰ۔ رواہ ابو داؤد
அதாவது, ஹஸ்ரத் அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் இப்னு உம்மே மக்தூம் அவர்களை கலீஃபாவாக ஆக்கினார்கள். அவர் மக்களுக்கு இமாமத் செய்தார். அவர் பார்வையற்றவராக இருந்தார். அபூ தாவூதிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. (மிர்காத்துல் மஃபாத்தீஹ் வ மிஷ்காதுல் மஸாபீஹ் பாபுல் இமாமஹ், பாகம் 3 பக்கம் 178)

அதாவது ஹஸ்ரத் நபி  ஸல் அவர்கள் ஒரு போருக்கு சென்ற போது ஹஸ்ரத் இப்னு உம்மே மக்தூம் ரலி அவர்களை தமது கலீஃபாவாக மதீனாவில் நியமித்தார்கள். இந்த ஹதீஸில் "இஸ்தக்லஃப" என்ற சொல் வந்துள்ளது. அதாவது "கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள்" என்று பொருள். ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் மரணம் அடையவில்லை மாறாக ஒரு போருக்கு செல்கிறார்கள் ஆகவே ஒருவரை தமது கலீஃபாவாக நியமிக்கிறார்கள். அதாவது தமது இமாமத் பணியை நான் போருக்கு சென்ற பிறகு நீர் செய்யவும் என்று கட்டளையிட்டார்கள். ஆகவே கலீஃபாவாக ஆகுவதற்கு அவர் யாருக்கு கலீஃபாவாக ஆகின்றாரோ அவர் மரணம் அடைய வேண்டிய அவசியமில்லை மாறாக அவர் இல்லாத நேரத்தில் என்ற பொருளும் உண்டு என்பதை இந்த ஹதீஸின் வாயிலாக கணிக்க முடிகிறது. 

மற்றொரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது அதாவது ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது தமது விரலை வானத்தை நோக்கி காட்டியவாறு இவ்வாறு கூறுவார்கள்,

اللّٰھمَّ انت الصاحب فی السفر و الخلیفۃ فی الاھل۔۔۔۔۔۔۔۔۔
அதாவது அல்லாஹ்வே! பயணத்தில் நீயே தோழன் ஆவாய் மேலும் நீயே எனது வீட்டிலுள்ளவர்களுக்கு கலீஃபா ஆவாய்.......... என்று கூறுவார்கள். (சுனன் திர்மிதி பாகம் 3 ஹதீஸ் நம்பர் 3438)

இந்த ஹதீஸிலும் பாருங்கள் நபி ஸல் அவர்கள் தமது கலீஃபாவாக அல்லாஹ்வே இருக்கிறான் என்று கூறுகிறார்கள். அதாவது நான் எனது வீட்டில் இல்லாத சமயத்தில் யா அல்லாஹ் நீயே எனது வீட்டிலுள்ளவர்களை பாதுகாப்பவனாக அவர்களுக்கு உதவியாளனாக இருக்கிறாய் என்ற கருத்தில் கூறுகிறார்கள். 

ஆகவே இவ்விரு ஹதீஸின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால் ஒருவர் யாருக்கு கலீஃபாவாக நியமிக்கப்படுகிறாரோ அவர் மரணம் அடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல மாறாக அவர் இல்லாத சமயத்தில் அவரிடத்தில் இருந்து அவரின் பணியை செய்வது கூட கலீஃபா அதாவது அவரின் பிரதிநிதி என்று கூறலாம் என்பது புலப்படுகிறது.

இந்த அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் கூட அல்லாஹ்வின் கலீஃபாவாக இந்த பூமியில் தோன்றுகிறார்கள். காரணம் அந்த நபிமார்கள் அந்த இறைவனின் பணியை மக்கள் மத்தியில் இருந்து கொண்டு செய்கின்றார்கள். ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் கலீஃபா அதாவது அல்லாஹ்வின் பிரதிநிதி என்று கூறுவதில் எவ்வித தவருமில்லை என்பது தெரிகிறது. ஹஸ்ரத் தாவூத் அலை அவர்களை அல்லாஹ் "தாவூதே! நாம் உம்மை இப்பூமியில் ஒரு கலீஃபாவாக அதாவது பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம்" (38:27) என்று கூறுகிறான். இவ்விடத்தில் அல்லாஹ் தாவூத் அலை அவர்களை ஒரு நபியாக தமது பிரதிநிதியாக இப்பூமியில் நியமித்துள்ளோம் என்ற கருத்தில் கூறுகிறானே அல்லாமல் வேறு கருத்தில் இல்லை என்பது தெரிகிறது.

தஃப்சீர் ஃபெஹ்முல் குர்ஆன் (அஹ்லே ஹதீஸை சார்ந்த மியான் முஹம்மது ஜமீல் என்பவரால் எழுதப்பட்டது) என்ற விளக்கவுரை நூலில் பாகம் 4 பக்கம் 292 இல் ஹஸ்ரத் தாவூத் அலை அவர்களை குறித்து கூறும்போது "கலீஃபதுல்லாஹ்" அதாவது அல்லாஹ்வின் பிரதிநிதி என்று எழுதப்பட்டுள்ளது. 



அடுத்து சகோ பிஜெ கூறுகிறார், வரக்கூடிய இமாம் மஹ்தி கலீஃபத்துல்லாஹ் என்றால் பிறகு அவர் என்ன அல்லாஹ்வா? ஏனென்றால் அல்லாஹ் போயிட்டான் அவனின் வேலையை இவர் செய்வார் என்று அர்த்தம்' என்று கூறுகிறார்.

நமது பதில்: ஒருவரின் இடத்தில் இருந்து கொண்டு ஒருவர் அவரின் பணியை செய்கிறார் என்று சொன்னால் அதனால் அவர் அவராவே ஆகிவிடுவார் என்று பொருள் அறவே கிடையாது. உதாரணத்திற்கு நாம் மேலே கூறியிருந்தோம். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு போருக்கு செல்லும்போது ஹஸ்ரத் உம்மே மக்தூம் (ரலி) அவர்களை தம்மிடத்தில் கலீஃபாவாக நியமித்து சென்றார்கள். இதனால் ஹஸ்ரத் உம்மே மக்தூம் ரலி அவர்கள் அல்லாஹ்வின் நபி என்று ஆகிவிடுமா? இல்லை. அதே போன்று நாம் மேலே மற்றொரு ஹதீசையும் பதிவிட்டிருந்தோம் அதாவது ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் எந்த பயணத்தையும் மேற்கொள்ளும்போது இவ்வாறு கூறி செல்வார்களாம் அதாவது அல்லாஹ்வே! நீயே எனது வீட்டில் கலீஃபாவாக இருந்து (அதாவது என்னிடத்தில் இருந்து) அவர்களை கண்காணித்து பாதுகாத்து வருபவனாவாய்" என்று ஹதீஸில் வருகிறது. இதனால் அல்லாஹ் நபியாக ஆகிவிட்டானா!

இப்போ உலக ரீதியில் எடுத்து கொண்டாலும் சரி சகோ பிஜெ வின் இந்த வாதம் அடிபட்டு போகிறது. உதாரணத்திற்கு ஒரு அமைப்பிற்கு ஒரு தலைவர் இருப்பார் அதற்கு துணை தலைவர் ஒருவரும் இருப்பார். அந்த அமைப்பின் தலைவர் சிறிது காலம் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவரின் அந்த பணியை அந்த துணை தலைவர் அவர் இடத்தில்  இருந்து செய்வார். இதனால் அந்த துணை தலைவரை, தலைவர் என்று கூற முடியுமா? முடியாது. இவ்வாறே இப்னு மாஜாவில் வரக்கூடிய இமாம் மஹ்தி அலை அவர்கள் அல்லாஹ்வின் கலீஃபாவாக இருப்பார் என்று சொன்னால் அதனால் அந்த இமாம் மஹ்தி அல்லாஹ்வாக ஆகிவிடுவார் என்று பொருள் அல்ல மாறாக அல்லாஹ் அவர்களை தமது கலீஃபாவாக நியமித்துள்ளான். அந்த கலீஃபா மக்கள் மத்தியில் அவனின் பணியை செய்வார் என்பதே பொருள். 

ஆகவே இப்னு மாஜாவில் வரக்கூடிய "இமாம் மஹ்தி அலை அவர்கள் அல்லாஹ்வின் கலீஃபாவாக இருப்பார்கள் என்ற சொல் குர்ஆனுக்கோ, ஹதீஸின் கருத்திற்கோ முரண்பாடான சொல் அறவே இல்லை மாறாக அதனை புரிய வேண்டிய விதத்தில் புரிந்தால் அந்த ஹதீஸில் நபி ஸல் அவர்கள் எந்த அடிப்படையில் இமாம் மஹ்தி அலை அவர்களை அல்லாஹ்வின் கலீஃபா என்று கூறியுள்ளார்கள் என்பது விளங்கும். இந்த ஹதீஸின் வாயிலாக நபி ஸல் அவர்கள் இவ்வும்மத்தில் தோன்றக்கூடிய அந்த இமாம் மஹ்தி அல்லாஹ்வின் கலீஃபா (அல்லாஹ்வின் பிரதிநிதி) அதாவது அல்லாஹ்வின் நபியாக இருப்பார் அவருக்கு இறைவன் தமது பணியை நியமிப்பான் என்ற கருத்தில் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 

ஆகவே இந்த ஹதீஸ் திராயத்தின் அடிப்படையிலும் சரியான ஹதீஸே என்பதும் நிரூபணமாகிறது. 

மேலும் இந்த ஹதீஸின் சனதிலும் கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார், அதாவது அபுல் கிலாபா என்ற ஓர் அறிவிப்பாளர் தத்லீஸ் ஏமாற்றம் செய்யக்கூடியவர் என்று கூறுகிறார்.

நமது பதில்: அறிவிப்பாளர் ஒருவரை நோக்கி அவர் முதல்லிஸ் (ஏமாற்றம் செய்யக்கூடியவர்) என்று கூறினால் அதன் பொருள் அந்த அறிவிப்பாளர் அந்த அறிவிப்பை யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அவரை வைத்து ஏமாற்றம் செய்பவர் என்று பொருள். உதாரணத்திற்கு உபைது இப்னு அப்தில்லாஹ் என்ற ஒருவர் உறுதிமிக்கவர், அதே போன்று உபைது இப்னு அப்ரார் என்பவர் பலகீனமானவர் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, ரஃபீக் என்பவர் தனது ஆசிரியர் உபைது இப்னு அப்தில்லாஹ்விடமிருந்து ஒரு செய்தியை அறிவிக்கிறார் என்றால், அவர் மற்றவர்களை ஏமாற்றத்தில் அல்லது சந்தேகத்தில் விடுவதற்காக "நான் உபைதிடமிருந்து இந்த அறிவிப்பை அறிவிக்கிறேன்"என்று கூறினால் இதுதான் அவர் தத்லீஸ் செய்கிறார் அதாவது அவர் உபைது என்பவரிடமிருந்து அறிவிப்பை பெற்றார் என்று கூறுகிறாரே இதில் எந்த உபைது? உபைது இப்னு அப்தில்லாஹ்வா அல்லது உபைது இப்னு அப்ராரா? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோன்ற செய்யும் விதத்தில் ரஃபீக் என்பவர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இந்த அடிப்படையில் ரஃபீக் என்பவர் தத்லீஸ் அல்லது முதல்லிஸ் என்று அழைக்கப்படுவார்.

இப்னு மாஜாவில் வரக்கூடிய அறிவிப்பு வரிசையில் வரக்கூடிய "அபுல் கிலாபா" என்பவர் முதல்லிஸ் என்றால் அவர் முதல்லிஸ் என்பதை நிரூபிக்க சகோ பிஜெ கடமைபட்டுள்ளார். அவ்வாறு அவரால் நிரூபிக்கவும் முடியாது.
  
ஆகவே அறிவிப்பாளர் வரிசையை எடுத்து கொண்டாலும் இந்த ஹதீஸ் பலகீனமானது அல்ல மாறாக சஹீஹான ஹதீஸே என்பது நிரூபணமாகிறது. அல்ஹ்மதுல்லில்லாஹி ஆளா தாலிக்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.