ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் இல்லை என்பதற்கு எதிரிகள் எடுத்து வைக்கும் எதிர் வாதம் - 1
அஹ்மதிய்யத்தின் எதிரிகள் ஹஸ்ரத்
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்பதற்கு
முதலாவதாக எடுத்து வைக்கும் வாதம் சூரா அஹ்ஸாபின் 41 வது வசனமாகும். அந்த
வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن
رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ
وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
பொருள்: (அஹ்மதி அல்லாதவர்கள் இந்த
வசனத்திற்கு வழங்கும் பொருள்) முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும்
தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும்
இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
இவர்களின் இந்த முதல் எதிர் வாததிற்கான
பதிலை நாம் கீழே காண்போம்.
முதல் பதில்: “காதம்”
(தா என்ற எழுத்தில் உள்ள சபருடன்) என்பதற்கு “இறுதியாக்குபவர்”
அல்லது “முடித்துவிடுபவர்” என்ற பொருள்
கொடுக்க முடியாது. ஏனென்றால், இது ‘இஸ்மே
ஃபாயில்’ இல்லை. அதாவது எழுவாய் அல்ல. மாறாக ‘இஸ்மே ஆலா’ ஆகும்.( அதாவது ஒரு விஷயத்தை
புரிந்து கொள்வதற்கு கருவியாக பயன்படுத்தப்படும் சொல்). உதாரணத்திற்கு அரபியில் عالم – مایُعْلَمۃ بِہِ
அதாவது எதன் மூலம் அறிவு கிடைக்கிறதோ, அதாவது அல்லாஹ்வின் இருப்பை உலகத்தின்
மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவேதான் இந்த உலகத்தை அரபியில் “ஆலம்” என்று
கூறப்படுகிறது. இவ்வாறே “காதம்” என்ற பதமும் அமைகிறது. இதன் பொருள் یُخْتَمُ بِہ அதாவது ‘எவரை கொண்டு முத்திரை இடப்படுகிறதோ’ அவரை
காதம் என்று கூறப்படுகிறது.
ஆகவே காதம் என்ற பதத்திற்கு “இறுதியாக்குபவர்”
அல்லது “முடிப்பவர்” என்று எழுவாய் பொருளில் வராது. இஸ்மே ஃபாயிலில் (அதாவது
அரபியில் எழுவாயாக வரும் சொல்லில்) ஐன் இடத்தில் வரக்கூடிய எழுத்தில் ‘ஸேர்’ இருக்கும். உதாரணத்திற்கு قاتِل ، ناصِر،
فاعِل
போன்றவையாகும். ஆனால் “காதம்” என்பதில் ஐன் இடத்தில் வரக்கூடிய “ت” வில் ஸேர் இல்லை மாறாக ‘ஸபர்’
இருக்கிறது.
இரண்டாவது பதில்: அரபியில்
‘காதம்’ என்ற பதம் பன்மை சொல்லுடன் வந்தால் அதன் பொருள் எப்போதும்
அதற்கு பிறகு வரக்கூடியவர்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உதாரணத்திற்கு
‘காதமுஷ் ஷுஅரா’ , ‘காதமுல் ஃபுக்ஹா’ , ‘காதமுல் அகாபிர்’ , ‘காதமுல் முஹத்திஸீன்’ , ‘காதமுல் அவ்லியா’ , ‘காதமுல் முஹாஜிரீன்’…..
நமது அஹ்மதி
அல்லாத ஆலிம்களுக்கு நாம் ஒரு சவாலாக வைப்பது என்னவென்றால், அரபி
மொழியில் ‘காதம்’ என்ற பதம் வேறு ஏதேனும் பன்மை
சொல்லுடன் வந்து அதற்கு “முழுவதுமாக மூடிவிடுதல்’ அல்லது ‘முடித்து விடுதல்’ என்ற பொருளில் வந்ததாக ஒரு
உதாரணத்தை ஏதேனும் அரபி அகராதியிலிருந்து எடுத்து காட்டி விடுவது மட்டுமல்லாமல்
அரபு மொழியில் இதன் வாசகத்தை உபயோகப்படுத்தியுள்ளதாக காட்ட வேண்டும். ஏனென்றால், அகராதி பொதுவாக ஒரு தனி நபர் தனது மதத்தை முன்வைத்து ஒவ்வொரு
சொல்லிற்கும் பொருள் வழங்கியிருக்க கூடும். உதாரணத்திற்கு அரபி அகராதியாகிய ‘அல் முன்ஜத் மற்றும் அல் ஃபராயிதுத் தரியா போன்ற அகராதிகளை ஒரு கிறித்தவர்
இயற்றியுள்ளார். அதில் அவர் “ஸாலூத்” என்பதற்கு “The Holy Trinity” என்ற பொருளை கொடுத்துள்ளார். இவ்விடத்தில்
‘தூய்மை” என்பது சொல்லிற்கான பொருள் இல்லை. மாறாக
இயற்றியவரின் சுயக் கொள்கையாகும். இவ்வாறே அரபு அகராதி இயற்றும் ஒருவர் ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்கள் இறுதி நபி ஆவார்கள் என்ற கொள்கையை கொண்டவராக இருந்தால் அவர்
இயல்பாகவே “காதமன் நபிய்யீன்” என்ற சொல்லுக்கு “முடித்து விடுபவர்” என்ற பொருளையே
வழங்குவர். திருக்குர்ஆனில் அல்லாஹ் அரபு
அகராதி எழுதுபவரின் பொருளை முன் வைத்து “காதமன் நபிய்யீன்” என்ற சொல்லை கூறவில்லை.
மாறாக அரபிகளின் சொல் வழக்கை கையாளப்பட்டுள்ளது.
ஆகவே நாம்,
எவ்வாறு குர்ஆனில் “காதமன் நபிய்யீன்” என்ற பதத்தை கைய்யாளப்பட்டுள்ளதோ அவ்வாறு, ஒரு அரபி ஏதேனும் ஒரு பன்மை சொல்லுடன் உதாரணத்திற்கு ‘ஷுஅரா’ ‘அல்ஃபுக்ஹா’ அல்முஹாஜிரீன்’ போன்ற சொல்லுடன் “காதம்” என்ற
பதத்தை குறித்து கூறினால் அதற்கு என்ன பொருள் கையாளப்பட்டுள்ளது என்பதை பார்க்க
வேண்டும்.
இவ்வாறான முறையில் கையாளும்போது “காதம்”
என்ற சொல்லுக்கு “சிறந்த” என்ற பொருளையே எப்போதும் வழங்கப்படுகிறது என்பது எமது
வாதமாக இருக்கிறது. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களே இந்த சொல்லை உபயோகப்படுத்தி
இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு நாம் பார்ப்போம் என்றால்;
அ) “எனது
சிறு தந்தையாரே (அப்பாஸ் (ரலி)) நீங்கள் சாந்தமாக இருங்கள். எவ்வாறு
நான் “காதமன் நபிய்யீனாக” இருக்கிறேனோ அவ்வாறே தாங்களும்
“காதமுல் முஹாஜிரீனாக” இருக்கிறீர்கள்” என்று
கூறினார்கள். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 178; ஹர்ஃபுல் ஐன் ஃபீ
திக்ருல் அப்பாஸ்)
இந்த ஹதீஸில் அடிப்படையில் இனி எந்த
முஹாஜீரும் (ஹிஜ்ரத் செய்பவர்) தோன்றியிருக்க கூடாது. ஆனால் நாம் இஸ்லாமிய
வரலாற்றை திறந்து பார்க்கும்போது ஹஸ்ரத் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் சாஹிப் முஹாஜிர்
மக்கி அவர்கள் மட்டுமல்லாமல் இன்று வரை
இன்னும் பலர் ஹிஜ்ரத் செய்துள்ளதை நாம் காண முடிகிறது. பாகிஸ்தான் உருவான
பிறகு எந்த அளவுக்கு மக்கள் ஹிஜ்ரத் செய்தார்கள் என்பதை நம்மால் கணித்து கூட
பார்க்க முடியாது.
ஆகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத்
அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி, இனி அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்திற்கு
ஒப்பான அல்லது சிறந்த வேறு எவரும் முஹஜிராக திகழ முடியாது என்ற பொருளிலேயே
கூறியுள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது.
இங்கு சிலர் ‘ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவை நோக்கி செல்லும் ஹிஜ்ரத்தை
குறிப்பிட்டே ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காதம் என்று கூறியுள்ளார்கள் என்று
கூறுவார்களேயானால், ஹதீஸில் மக்கா என்ற சொல் எங்கும் காணப்படவில்லை
என்பதே நமது பதிலாகும்.
குறிப்பு: இங்கு
சில அஹ்மதி அல்லாத சகோதரர்கள், ‘ஒரு வாதத்திற்கு
இந்த ஹதீஸில் காதம் என்பதற்கு சிறந்த என்ற பொருளை கொடுத்தால் ஹஸ்ரத் இப்னு
அப்பாஸிற்கு (ரலி) பிறகு ஹஸ்ரத் அபூபக்கர், உமர், அலி (ரலி) போன்றோர்களும் ஏன், ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களைவிடவும் சிறந்தவர்கள் என்று கருத வேண்டியது வரும். ஏனென்றால் இவர்களும்
தான் ஹிஜ்ரத் செய்துள்ளார்கள்’ என்று கூறுவதுண்டு.
நமது பதில்: நாம்
மேலே, காதம் என்ற பதத்தை ஒரு பன்மை சொல்லுடன் குறிப்பிட்டு
கூறும்போது அதற்கு இனி அவருக்கு பிறகு வரக்கூடியவர்களை விட சிறப்பினை
பெற்றிருப்பார் என்பதே பொருள் ஆகும்’ என்று கூறியிருந்தோம்.
ஆக இதன் அடிப்படையில் ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “காதமுல்
முஹஜிரீனாக” இருக்கின்றார்கள். அதாவது தனக்கு பிறகு வரக்கூடிய அனைத்து முஹாஜிரீன்களை
விடவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பார் என்பதாகும்.
இங்கு சிலர், ‘காதம்’ என்பதற்கு இனி அவருக்கு பிறகு வரக்கூடியவரை
விட சிறந்தவராக இருப்பார் என்று பொருள் கொண்டால், ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களும்தான் காதமன் நபிய்யீனாக இருக்கிறார்கள். உங்கள் பொருளின்
அடிப்படையில் அன்னார் (ஸல்) அவர்களுக்கு முன்பு வந்த தூதரை விட சிறந்தவர் ஆக
மாட்டார்களா? என்று கேள்வி எழுப்புவதுண்டு.
நமது பதில்: நிச்சயமாக
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு வரக்கூடிய நபிமார்களை விட சிறந்தவர்களே ஆவர். ஆனாலும்
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்பு வந்துள்ள நபிமார்களை விடவும் சிறந்தவர்கள்
ஆவர். ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
انی عند اللہِ مکتوبٌ خاتمُ النبیین و انَّ اٰدمَ
لمُنجدِلٌ فی طینتہِ
அதாவது ஆதம் நபி (அலை) மண்ணிலும்,
நீரிலும் இருந்த சமயத்தி (அதாவது அவர்கள் படைக்கப்பட்டிருந்த தருணத்தி) லிருந்தே
நான் அல்லாஹ்விடத்தில் காதமன் நபிய்யீனாக இருக்கிறேன். என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (ஆதாரம் | மிஷ்காத் அல்-மஸாபிஹுல் கிதாபுல் ஃபித்ன்
பாப் ஃபஸாயில் செய்யதுல் முர்ஸலீன் ஸலவாத்துல்லாஹ் வஸ்ஸலாம் அலைஹில் ஃபஸ்லுல்
அவ்வல். | முஸ்னத் அஹ்மது பின் ஹன்பல் பாகம் 4 பக்கம் 128
ஹதீஸ் அல்அர்பால் இப்னு சாரியா | கன்ஸுல் உம்மால் பாகம் 6
பக்கம் 112 கிதாபுர் ராபி மின் ஹர்ஃபுல் ஃபா , கிதாபுல்
ஃபஸாயில் மின் கிஸ்முல் அஃப்ஆல் பாபுல் அவ்வல் அல்ஃபஸ்லுஸ் ஸாலிஸ் ஃபீ ஃபஸாயிலு
முதஃபர்ரிகா தப்னியு அனித் தஹ்தீஸு பின்நஅம்)
ஆகவே எந்த அளவுக்கு நபிமார்கள் வருகை
தந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காதமன் நபிய்யீன் ஆக
ஆனபிறகே வருகை தந்துள்ளனர். ஆகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அனைத்து நபிமார்களை விட
சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களும் இதைத்தான்
கூறுகின்றார்கள். அவர்கள் ஒரு உருது கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
“எல்லா தூதர்களும்
தூயவர்களே, ஒருவர் இன்னொருவரை விட சிறந்தவராக
இருக்கிறார். ஆனால் இறைவன் பார்வையில் அனைவரையும் விட சிறந்தவர் இவரே! (ஹஸ்ரத்
முஹம்மது நபி (ஸல்))”
குறிப்பு இரண்டு: இந்த
இடத்தில் சில அஹ்மதி அல்லாத சகோதரர்கள்
لا ھجرۃ بعد الفتحِ
என்ற ஹதீஸை முன் வைத்து இனி எந்த
ஹிஜ்ரதும் இல்லையே (புகாரி பாகம் 2 ஹிஜ்ரத் சம்பவம் |
கன்ஸுல் உம்மால் பாகம் 1 பக்கம் 237, கிதாபுல் அஸ்கார் பின்
கிஸ்முல் அஃப்ஆல் பஸ்லு ஃபீ தஃப்சீர்) என்று கூறுகின்றனர்.
நமது பதில்: இந்த
ஹதீஸ் எமது கொள்கைக்கு சான்று பகரக் கூடியதாகவே இருக்கிறது என்பதை நினைவில்
கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த ஹதீஸில் “லா ஹிஜ்ரத” என்ற சொல் “லா நபிய
பஅதி” என்ற ஹதீஸில் வரும் சொல்லைப் போன்று உபயோகிக்கப்பட்டுள்ளது. நீங்கள்
வைத்த ஹதீஸின் படி “லா ஹிஜ்ரத” என்பதற்கு இனி எந்த ஹிஜ்ரதும் இல்லை என்ற
பொருளா? அல்லது ஒரு குறிப்பிட்ட ஹிஜ்ரத்தாகிய மக்காவிலிருந்து மதினாவை
நோக்கி இருந்த ஹிஜ்ரத் நிறுத்தப்பட்டுள்ளது என்ற பொருளா?
குறிப்பிட்ட ஒரு ஹிஜ்ரதே நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. ஏனென்றால் இது
நடைமுறைக்கும் நேர் எதிரானதாக இருக்கிறது. மேலும் இதனால் திருக்குர்ஆனில் வருகின்ற
ஹிஜ்ரத் சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களையும் நீக்கப்பட்டதாக கருத வேண்டும்.
இப்போது குறிப்பிட்ட ஒரு ஹிஜ்ரத் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து
மட்டுமே உள்ளது. இதை குறித்து நாம் பார்க்கும்போது இதே போன்றே “லா நபிய பஅதி”
என்ற ஹதீஸிலும் கூட எல்லா நுபுவ்வத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற பொருள்
கிடையாது மாறாக ஒரு குறிப்பிட்ட நுப்புவ்வத் என்ற பொருளையே இங்கு கொடுக்க
வேண்டும். அதாவது ஷரியத்தை கொண்டு வரும் நுபுவ்வத், நேரடி
நுபுவ்வத் என்ற பொருளே இங்கு தரப்பட வேண்டும்.
ஹஸ்ரத் இமாம் ராஸி (ரஹ்) அவர்கள் “லா
ஹிஜ்ரத பஅதல் ஃபத்ஹி” என்ற ஹதீஸை பற்றி இவ்வாறு எழுதுகின்றார்கள்:
و اما قولہ لا ھجرۃ بعد الفتح فالمرادُ الھجرۃُ
المخصوصۃُ
அதாவது இந்த
ஹதீஸில் எல்லா ஹிஜ்ரத்தும் நிறுத்தி வைக்க்ப்பட்டுள்ளது என்று கூறப்படவில்லை மாறாக
குறிப்பிட்ட ஒரு ஹிஜ்ரத்தை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. (தஃப்சீரே
கபீர் பாகம் 4 பக்கம் 580 மிஸ்ர் பதிப்பகம்)
2- இரண்டாவது
பதில்:
انا خاتَمُ الانبیاءِ و انت یا علیُّ خاتَمُ
الاوصیاءِ
அதாவது: நான் காதமுல் அன்பியாவாக
இருக்கிறேன். அலியே! நீர் காதமுல் அவ்ஸியாவாக இருக்கிறீர். என்று ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (கனூஸுல் ஹக்காயிக் ஃபீ அஹாதீஸ் கைருல் கலாயிக்
அடிக்குறிப்பு ஜாமியுஸ் ஸகீர் மிஸ்ரி பாகம் 1 பக்கம் 80) இந்த ஹதீஸின்
அடிப்படையில் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்கு பிறகு இனி எந்த மூஸியும் (வஸிய்யத்
செய்பவரும்) வர முடியாது என்று சொல்ல முடியுமா?
ஆ) மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு
வருகின்றது:
انا خاتم الانبیاء و انت یا علی خاتم الاولیاءِ۔
பொருள்: அலியே! நான் காதமுல்
அன்பியாவாக இருக்கிறேன் மேலும் நீர் காதமுல் அவ்லியாவாக இருக்கிறீர். என்று
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நாம் ‘தஃப்ஸீரே ஸாஃபி “காதமன் நபிய்யீன் வசனத்தின்
விளக்கம் சூரா அஹ்ஸாப் ருகூ 3’ இல் பார்க்கிறோம்.
3- மூன்றாவது பதில்: ‘ஃபத்தூஹாதே
மக்கிய்யா’ என்றும் நூலின் டைட்டில் பக்கத்தில் ஹஸ்ரத்
ஷேக் முஹியுத்தீன் இப்னு அரபி அவர்களை குறித்து ‘காதமுல்
அவ்லியா’ என்று எழுதப்பட்டுள்ளது.
4- நான்காவது பதில்: தேவ்பந்த்
மவ்லவிமார்கள் கூட இந்த வாசகத்தை பாவித்துள்ளார்கள். மௌலவி மஹ்மூதுல் ஹஸன் சாஹிப்
தேவ்பந்தி அவர்கள் மௌலவி ரஷீத் அஹ்மது சாஹிப் கங்கோஹி அவர்கள் மரணம் அடைந்த
போது அவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு நூலின் டைட்டில் பக்கத்தில் மரணமடைந்தவரை
குறித்து ‘காதமுல் அவ்லியா வல் முஹத்திஸீன்’ என்று
கூறியுள்ளார்கள்.
5- ஐந்தாவது பதில்: மௌலவி
பத்ர் ஆலம் சாஹிப் தேவ்பந்த் ஆசிரியர் தனது ‘அல்-ஜவாபுல் ஃபஸீஹ்’
என்ற நாளிதழின் 2 ஆம் பக்கத்தில் தேவ்பந்தின் ஆசிரியர்களின் முன்னால் தலைவராக
விழங்கிய மௌலவி அன்வர் ஷாஹ் அவர்களை ‘காதமுல்
முஹத்திஸீன் வ ஆயிமத்துஸ் ஸாபிக்கீன்’ என்று
எழுதியுள்ளார்.
6- ஆறாவது பதில்: ஹஸ்ரத் ஷாஹ்
அப்துல் அஸீஸ் சாஹிப் முஹத்தீஸ் தெஹ்லவி அவர்கள் எழுதிய ‘உஜாலா
நாஃபிஅஹ் பாகம் 1’ எனும் நூலின் டைட்டில் பக்கத்தில் காதமுல்
முஹத்திஸீன் என்று எழுதப்பட்டுள்ளது.
7- ஏழாவது பதில்: ஹஸ்ரத்
கவ்ஸுல் அஃலம் செய்யது அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘பிக
துக்திமுல் வலாயஹ்’ (ஃபதூஹுல் கைய்ப் கட்டுரை நம்பர் 4
பக்கம் 23 நவ் லக்ஷோர்) இதனின் பொருளை ஷேக் அப்துல் ஹக் சாஹிப் முஹத்திஸ் தெஹ்லவி
அவர்கள் இவ்வாறு (ஃபார்ஸி மொழியில்) எழுதுகின்றார்கள்:
(தமிழில்) அதாவது,
ஹஸ்ரத் செய்யது அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள் கூறிய இந்த கூற்றில் ‘மனிதனே நீ படைப்பினத்தோடு மரணித்துவிடுவாய். நீ முன்னேற்றம் அடைந்தவாரு ‘காதமுல் அவ்லியா’ ஆகிவிடுவாய்’
என்று கூறியுள்ளார்கள். இதன் பொருள் ‘நீ வலாயத் (இறை நேசத் தகு) தியின் அந்தஸ்தை அடைந்து விடுவாய். மேலும் உனது
வலாயத் அந்தஸ்து மற்ற இறை நேசரின் தகுதியை விட உயர்ந்ததாக இருக்கும். மேலும் உனது
பாதம் மற்ற இறை நேசர்களின் கழுத்தில் இருக்கும்.
(ஃபதூஹுல் கைப் பக்கம் 23) நிதாயே கைப் என்ற நூலை உருது மொழியில் மொழியாக்கம்
செய்யபட்ட ‘ஃபதூஹுல் கைப், பதிப்பகம்
இஸ்லாமிய ஸ்டேம் பிரஸ் லாஹூர் எனும் நூலில் “பிக துக்தமுல் வலாயது” எனும்
வாசகத்திற்கு ‘உன்னை போன்று யாரும் இல்லாத அளவிற்கான
மதிப்பை நீர் பெற்றுவிடுவாய். மேலும் இறை திரையில் நீ ஒருவன் மட்டுமே தனியாக
பொதிந்து வைக்கப்படுவாய். உன்னை போன்ற ஒரு காலத்தின் இறைநேசர்கள் இருக்க முடியாது
மாறாக நீ அவ்வேளையில் அனைத்து தூதர்கள் மற்றும் நபியின் வாரிசாகிவிடுவாய்.
முழுமையான இறை நேசம் உனக்கு கிடைத்துவிடும்.’ என்று மொழியாக்கம் செய்துள்ளார்.
ஆக, காதமன் நபிய்யீன்
என்பதற்கும் இதே பொருள்தான். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை வேறு
எந்த நபியும் பெற முடியாது. அன்னாருக்கு நுபுவ்வத்தின் முழுமைத்துவம்
கிடைத்துவிட்டது.
8- எட்டாவது பதில்: மௌலவி
பஷீர் அஹ்மது சாஹிப் தேவ்பந்த் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
“காதமுல் அகாபிர்
ஹஸ்ரத் கங்கோஹி அவர்களின் மரணம் (உமர்) ஃபாரூக் (ரலி)
அவர்களின் ஷஹாதத் சம்பவத்தை நினைவுப்படுத்தி விட்டது. (ரிஸாலா அல்-காஸிம் பாகம் 2
பக்கம் 5, 9)
9- ஒன்பதாவது பதில்:
خاتمۃُ الحفَّاظِ شمسُ الدینِ ابی الخیرِ محمد بن
محمد بن محمد الجرزی الدمشق۔
(தீபாச்சா அல்-தஜ்ரீதுஸ் சரீஹ் பக்கம் 4,
5)
இந்த நூலில் ஷம்ஸுத்தீன்
என்பவரை “காத்தமுல் ஹுஃப்பாஸ்” என்று அழைக்கப்பட்டுள்ளது.
10- பத்தாவது பதில்: மௌலானா
ஷிப்லி நுஃமானி அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
காதமுஷ் ஷுஅரா வாக
இருக்கின்ற காலிப் மற்றும் ஸோக் போன்ற கவிஞர்களிடத்தில் ஷேக்
மற்றும் நாசிக் போன்றோர் பல காலங்களாக விட்டு விட்ட சொற்கள் அறிய கிடைக்கின்றன.
(மவாஸ்னா அனீஸ் தோபீர் பக்கம் 29)
11- பதினொன்றாவது பதில்: மௌலானா
ஷிப்லி மர்ஹூம் அவர்களை குறித்து “காதமுல் முஸன்னிஃபீன்’ மௌலானா ஷிப்லி’
என்று எழுதப்பட்டுள்ளது. (இஃபாதாத்தே மஹ்தி பக்கம் 294)
12- பன்னிரெண்டாவது பதில்:
மௌலானா ஹாலி (பிரசித்துப் பெற்ற கவிஞர்) இவ்வாறு எழுதுகின்றார்: ‘கானியை’
ஈரானியர்கள் “காதமுஷ் ஷுஅரா”வாக கருதுகின்றார்கள். (ஹயாத்தே ஸஅதி
அடிக்குறிப்பு பக்கம் 47) மேலும் ‘ஷேக் அலி ஹுஸைன்....அவர்களை
இந்தியாவில் காதமுஷ் ஷுஅரா” வாக கருதுகின்றார்கள். (ஹயாத்தே ஸஅதி பக்கம்
101)
13- பதிமூன்றாவது பதில்: ஷேக்
முஹம்மது தாஹிர் என்பவர் எழுதிய ‘அல் மஸ்னூ ஃபீ அஹாதீஸுல் மவ்லூ’ எனும் நூலில் பக்கம் 3 இல் ஒன்பதாவது நூற்றாண்டின் முஜத்தித் ஷேக் அபி
அல் ஃபஸ்ல் ஜலாலுத்தீன் அப்துல் ரஹ்மான் அஸ் சகாவிய்யு இப்னு அபி பக்ரின் அஷ்ஷஹீறு
பிஸ்சுயூத்தி அவர்களை குறித்து காதமுல் ஹுஃப்பாஸ் வல் முஜ்தஹிதீன்
என்று கூறப்பெற்றுள்ளது.
14- பதினான்காவாது பதில்: ‘ஹுமாஸா’ எனும் அரபி நூலை எழுதிய அபூ தமாம் தாயி என்பவரை பற்றி ஹஸன் பின்
வஹப் (ஓர் அரபி கவிஞர்) தனது நூலாகிய “வஃபியாத்துல் அயியான் வ இப்னு கல்கான் பாகம்
1 பக்கம் 123 மிஸ்ரியில் ‘காதமுஷ் ஷுஅரா’ என்று எழுதியுள்ளார். இதிலிருந்து இந்த கவிஞருக்கு பிறகு இனி எந்த
கவிஞரும் தோன்ற முடியாது என்று பொருள் கொள்ள முடியுமா?
15- பதினைந்தாவது பதில்:
முஹம்மது காஸிம் நானத்வி தேவ்பந்த் நிறுவனர் தனது நூலாகிய ‘ஹத்யத்துஷ்
ஷியா’ எனும் நூலின் பக்கம் 4 இல் மௌலானா ஷேக் அப்துல்
அஸீஸ் அவர்களை குறித்து காதமுல் முஹத்திஸீன் வல் முஃபஸ்ஸிரீன் என்று
குறிப்பிட்டுள்ளார்.
16- பதினாறாவது பதில்: ஹஸ்ரத்
இமாம் ராஸி (ரஹ்) அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள்: “நமது தூதர் ரசூலுல்லாஹ்
(ஸல்) அவர்கள் காதமன் நபிய்யீனாக இருப்பதினால் அனைத்து நபிமார்களை விட
சிறந்தவர்களாக இருந்ததை நீ காண்பதில்லையா?. இவ்வாறே எல்லா மனிதர்களும் காதமுல்
மக்லூகாத் ஆக இருப்பதினால் எல்லா படைப்பினங்களை விட சிறந்தவார்களாக
இருக்கிறார்கள்........இவ்வாறு நாம் காதம் என்ற சொல்லுக்கு அளித்த பதிலே மிகச்
சரியானது ஆகும்.” (தஃப்சீரே கபீர் பாகம் 6 பக்கம் 22,31,34 ;
மிஸ்ரி)
17- பதினேழாவது பதில்: காதமன்
நபிய்யீன் என்பதற்கு பொருள் இமாம் ஸர்க்கானி (ரஹ்) அவர்கள் இவ்வாறு
எழுதுகின்றார்கள்:
و الخاتمُ۔۔۔۔اما بفتحھا معناہ احسنُ الانبیاء
خلقنا و خلقا لانہ صلی اللہ علیہ وسلم جمال الانبیاءِ کالخاتمِ الذی یُتجملُ بہ و
اما بالکسرِ۔۔۔فمعناہ اٰخرُ الانبیاءِ
அதாவது காதமன் நபிய்யீன் என்று “ت” வில் ஸபருடன் வந்தால் அதன் பொருள் ‘அஹ்சனுல்
அன்பியா” (அதாவது எல்லா நபிமார்களை விட சிறந்த நபி)
என்பதாகும். வாழ்க்கை நெறிமுறை என்ற அடிப்படையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
அனைத்து நபிமார்களை விடவும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அழகை பெற்றுத்
தரும் மோதிரத்தை போன்று. “தா” என்ற
எழுத்தில் “ஸேர்” இருந்தால் என்றால் ‘காதிம்’ என்பதற்கு இறுதி நபி என்று பொருள் ஆகும். (ஷரஹ் மாவாஹிபுல் லதீனா பாகம் 3
பக்கம் 164, மிஸ்ரில் பதிப்பகம்)
திருக்குர்ஆனில் வந்துள்ள “காதம்”
என்பதில் “தா” என்ற எழுத்தில் “ஸபரே” வந்துள்ளது, “ஸேர்” இல்லை என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
18- பதினெட்டாவது பதில்:
தேவ்பந்தின் நிறுவர் மௌலவி முஹம்மது காசிம் நானத்வி அவர்கள் எழுதுகின்றார்கள்:
“.....அன்னார் (ஸல்) காதம் என்பது
அவர்கள் உலகத்தின் தலைவர் என்பதை நிரூபணம் செய்கிறது. அன்னாரின் காதமிய்யத்
வாதமானது அவர்கள் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போன்று ஈருலகின் அரசராக
திகழ்கின்றார்கள் என்பதை உண்மை என்று நம்புகிறோம்.” (ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் பக்கம்
34-35)
ஆ) இதே மௌலவி சாஹிப் காதமன் நபிய்யீன்
என்பதற்கு மற்றொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
“பொதுமக்களின் கருத்து நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ‘காதம்’ ஆக இருக்கிறார்கள் என்பதன் பொருள்
அன்னார் எல்லா நபிமார்களுக்கும் கடைசியாக வந்த இறுதி நபி என்பதாகும். ஆனால்
முஸ்லிம் பேரறிஞர்கள், ஞானிகளின் கருத்தோ காலத்தால், முன்போ, பின்போ வருவதில் எந்த விதமான
சிறுப்புமில்லை என்பதாகும். இவ்வாறிருக்க வலாகின் ரஸூலுல்லாஹி வகாத்தமன்
நபிய்யீன்’ என்பதற்குக் காலத்தால் இறுதியாக வந்த
நபி என்று கூறுவதில் என்ன சிறப்பிருக்க முடியும்? ஆனால்
இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்கள் ஒரு போதும் தயாராக இல்லை என்பதை நான்
அறிவேன். (தஹ்தீரூன் நாஸ் பக்கம் 3)
மேலும் கூறுகின்றார்கள்: “ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்களுக்கு பிறகும் ஒரு நபி தோன்றினால் அன்னாரின் “காதமிய்யத்” இல்
எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.” (தஹ்தீரூன் நாஸ் பக்கம் 25)
ஆக மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் “காதமன்
நபிய்யீன் என்பதற்கு நபிமார்களின் இறுதி என்ற பொருள் அல்ல மாறாக நபிமார்களின்
சிறந்தவர் என்ற பொருளே ஆகும் என்பதை உண்மை படுத்துகிறது.
சிலர் “காதம்”
என்பதற்கு முத்திரை என்ற பொருளும் உண்டு என்று கூறி முத்திரை என்றால்
முடித்துவிடுதல், துண்டித்துவிடுதல் இனி இதில் யாருக்கும்
எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகின்றனர். அதற்கு ஒரு உதரணத்தையும் தருகின்றனர்
அதாவது ஒரு அலுவலகத்தையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ அரசு முத்திரை என்ற சீலை
வைத்துவிட்டால், இனி அதை யாராலும் திறக்க முடியாது. அது
மூடப்பட்டுவிட்டது என்று கூறி தமது வாதத்தை உண்மை படுத்த முற்படுகின்றனர்.
நமது பதில்: காதம்
என்பதற்கு முத்திரை என்ற பொருள் இருந்தாலும் கூட அதற்கு மூடப்பட்டுவிட்டது,
அல்லது துண்டிக்கப்பட்டுவிட்டது இனி யாருக்கும் இதில் எந்த அதிகாரமும் இல்லை என்று
அர்த்தம் கொடுப்பது மற்ற எண்ணற்ற ஆதாரங்களை நிராகரித்து தமது தனிப்பட்ட வாதத்தை
நிலைநிறுத்துவதாக கருதப்படும். பல்வேறு நூட்களை புரட்டி பல்வேறு ஆதாரங்களை முன்
வைத்து நாம் ஒரு சொல்லுக்கு இந்த பொருளை கொடுப்பது சரியே என்று ஒரு முடிவுக்கு வர
வேண்டும்.
இவ்வாறு நாம் பார்க்கும்போது நாம்
மேலே “காத்தமன் நபிய்யீன்” என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்களை கொடுத்து இதற்கு
“நபிமார்களின் சிறந்தவர்” என்ற பொருளே ஆகும் என்பதை நிரூபித்திருந்தோம். இந்த
அடிப்படையில் நாம் காதம் என்பதற்கு முத்திரை என்ற பொருளில் எடுத்து கொண்டாலும்
எதிரிகளுக்கு எவ்வாறு “முடிக்கப்பட்டுவிட்டது அல்லது துண்டிக்கப்பட்டுவிட்டது”
என்ற பொருள் கொடுக்க உரிமை உள்ளதோ அவ்வாறே எமக்கும் முத்திரை என்றால் ஒரு பொருளை
உறுதிப் படுத்தக்கூடியது அல்லது அதனின் தரத்தை உண்மை படுத்தக்கூடியது என்ற பொருளை
தருவதற்கும் உரிமை உள்ளது.
ஆகவே பல்வேறு இதர ஆதரங்களையும்
கூற்றுக்களையும் வைத்து பார்க்கும்போது முத்திரை என்பதற்கு “உறுதிப்படுத்துதல்
அல்லது எதைப் பற்றி காதம் என்று கூறப்படுகிறதோ அது தனது இடத்தில் உறுதி வாய்ந்தது
உண்மைமிக்கது” என்ற பொருள் கொடுப்பதே சரியான கருத்து ஆகும் என்பது நிரூபணமாகிறது.
ஒரு சிலர் ஒரு சில
அரபு அகராதியை வைத்து காதமன் நபிய்யீன் என்றால் நபிமார்களை முற்றுப்பெறச் செய்வது
ஆகும் என்று வாதம் செய்கின்றனர்.
நமது பதில்: நாம்
முன்பே கூறியிருந்தோம் அரபு அகராதியை வைத்து நாம் ஒரு சொல்லிற்கான பொருளை உறுதி
செய்துவிட முடியாது. காரணம், ஒரு சொல்லுக்கான பொருள் உதாரணத்திற்கு
காதம் என்ற சொல்லிற்கான பொருளுக்கு ஒரு அரபு அகராதி இயற்றியவர் அவர் தனது
கொள்கைக்கு சாதகமான பொருளையே வழங்குவார். ஆகவே தான் நாம் முன்பே ஒரு வாதத்தை
வைத்தோம். அதாவது அரபு மொழி வழக்கில் காதம் என்ற சொல் ஒரு பன்மை சொல்லுடன்
வரும்போது அதற்கு முடிவு அல்லது இறுதி என்ற பொருளை வழங்கியுள்ளார்கள் என்றால் அதை
எடுத்துக் காட்டுங்கள் என்று ஒரு சவாலாக வைத்தோம். வைக்கின்றோம். வைத்தும்
வருகின்றோம்.
இதையும் மறுத்து நீங்கள் அந்த அரபு
அகராதியை பிடித்து கொண்டு பேசி வந்தால் எங்களுக்கு ஒரு சில அரபு அகராதி
இருக்கிறது. அது எமது வாதத்தை உண்மை படுத்துகிறது. உதாரணத்திற்கு “தக்மிலா மஜ்மஊ
பிஹாருல் அன்வார் என்ற அகராதி நூலில் காதம் என்ற சொல்லுக்கு ஹஸ்ரத் ஆயிஷா (ரலி)
அவர்களின் ஒரு கூற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நாம் இங்கு பதிவு செய்கிறோம்.
ஹஸ்ரத் ஆயிஷா சித்திகா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்:
قولوا انہ خاتَمُ الانبیاءِ ولا تقولوا لا نبی
بعدہ
ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள் காதமன் நபிய்யீனாக இருக்கிறார்கள் என்று கூறுங்கள் ஆனால் அவர்களுக்கு
பிறகு இனி எந்த நபியும் இல்லை என்று கூறாதீர்கள்” என்று கூறியதாக
தக்மிலா மஜ்மஉ பிஹாருல் அன்வார் பக்கம் 85 இல் வருகிறது. மேலும் துர்ரே மன்ஸூர்
பாகம் 5 பக்கம் 204 இலும் வருகிறது. இந்த கூற்றிற்கு பிறகு இவ்வாறு
எழுதப்பட்டுள்ளது:
“ஹஸ்ரத் ஆயிஷா
(ரலி) அவர்களின் இந்த கூற்றானது ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் வருகையை
உண்மைபடுத்துகிறது. மேலும் “எனக்கு பிறகு நபி இல்லை” என்ற ஹதீஸிற்கு
முரண்பாடானதாகவும் இல்லை. ஏனென்றால், காதமன் நபிய்யீன் என்ற வசனத்திற்கு, லா நபிய பஅதி என்ற ஹதீஸிற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நபி
(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரியத்தை மாற்றக்கூடிய எந்த நபியும் வர முடியாது என்பதே
இதற்கு பொருள் ஆகும்.” (தக்மிலா மஜ்மஉ பிஹாருல் அன்வார் பக்கம் 85)
2- இவ்வாறு
மஜ்மஉல் பஹார் பாகம் 1 பக்கம் 329 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“எவ்வாறு ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்கள் காதமன் நபிய்யீனாக இருக்கின்றார்களோ அவ்வாறே திருக்குர்ஆனும்
எல்லா வேதங்களையும் உண்மைப்படுத்தும் வேதமாக காதமுல் குதுபாக இருக்கிறது.”
3- காதம்
என்பதற்கு மோதிரம் என்ற பொருள் உண்டு. மனிதன் மோதிரத்தை அழகிற்காக அணிகின்றான். ஆக
காதமன் நபிய்யீன் என்பதற்கு நபிமார்களின் அழகாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் (மோதிரமாக)
திகழ்கின்றார்கள் என்பது நிருபணமாகிறது. இந்த பொருளுக்கான சான்றும் ‘தஃப்சீர்
ஃபத்ஹுல் பயான் பாகம் 7 பக்கம் 286 இல் காணக் கிடைக்கிறது. அதில் இவ்வாறு
கூறப்பட்டுள்ளது:
صارکا الخاتَمِ لھمُ الذی یختمون بہ و یتزیتون
بکونہ منھم
அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
நபிமார்களின் ஒருவராக இருக்கின்றார்கள் என்பதன் காரணத்தினாலும் அந்த நபிமார்கள்
அன்னாரின் தோற்றத்தின் மூலம் அழகினை பெறுகின்றார்கள் என்பதின் காரணத்தினாலும்
அன்னார் நபிமார்களின் மோதிரமாக திகழ்கின்றார்கள்.”
4- மஜ்மஉ
பஹ்ரைன் என்ற நூலில் ‘கதம’ என்ற சொல்லின்
கீழ் பக்கம் 514 இல் “காதமன் நபிய்யீன்” என்பதற்கு இவ்வாறு பொருள்
கொள்கின்றார்கள்:
خاتَمُ بمعنی الزّینۃٍ ماخوذ من الخاتَمِ الذی ھو
زینۃ للابسہ
காதம் என்பதற்கு
அழகு என்று பொருள் ஆகும். இந்த பொருள் அழகிற்காக அணியப்படும் மோதிரத்திலிருந்து
வெளிப்பட்டது.
ஆ) இந்த பொருளுக்கு சான்று பகரும்
வகையில் அரபியின் பிரசித்துப்பெற்ற ஷஹாபுத்தீன் அல் மூஸ்வி அல் மஅரூஃப் பிஇப்னு
மஅதூக் அவர்களின் கஸீதா மீமியாவின் கீழ்காணும் கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்கள்.
இதில் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து இவ்வாறு எழுதுகின்றார்கள்:
طوق الرسالۃ تاجُ الرسلِ خاتمھم
بل زینۃ بعباد اللہ کُلّھم
அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
நபுவ்வத்தின் மாலையாக இருக்கின்றார்கள். அன்னார் (ஸல்) அவர்கள் நபிமார்களின்
கிரீடமாகவும் அவர்களின் மோதிரமாகவும் (காத்தமாகவும்) இருக்கின்றார்கள்.
மட்டுமல்லாமல் இறைவனின் அனைத்து அடியார்களுக்கும் அழகாக திகழ்கின்றார்கள்.
(ஆதாரம் | கிதாபுல் மஜ்மூஆ அல் நப்ஹானியா ஃபில் மதாயிஹ் அன் நபுவ்வஹ் | காஃபியத்துல் மீம்; அச்சகம் பேரூத் ஃபி மத்பூஅத்தில்
மஆரிஃப் ஹிஜ்ரி 1320; எழுதியவர் யூசுஃப் இப்னு இஸ்மாயில் அன்
நப்ஹானி பகுதி 4)
இந்த கவிதையில் ‘தோக்”
(மாலை) தாஜ் (கிரீடம்) மற்றும் காதம் (மோதிரம்) போன்ற சொற்களை அழகிற்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் இந்த கவிதையில் ‘பல்’ என்ற சொல்லை கொண்டு ‘காதம்’
என்றால் இறுதி என்ற பொருளில் இல்லை மாறாக அழகின் பொருளிலே வருகின்றது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து கூறுகிறது. மேலும் மோதிரமானது விரலை
முழுவதுமாக சுற்றி வழைத்து கொண்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் காதமன் நபிய்யீன்
என்றால் அனைத்து நபிமார்களின் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளவர் என்ற பொருளும்
உள்ளடங்கி இருக்கின்றன.
5. ஜனாப்
ஷேக் ஃபரீதுத்தீன் அதா (ரஹ்) ஃபார்ஸி அவர்கள் தத்கிறதுல் அவ்லியா பக்கம் 272 இல்
இவ்வாறு எழுதுகின்றார்கள்:
“தர்ஜாவில் மிக
உயர்ந்த தர்ஜாவை கொண்ட சில வலிமார்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சிலருக்கு
நுபுவ்வத்தின் மூன்றில் ஒரு பகுதி தர்ஜா கிடைக்கிறது. அவர்கள்,
எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் காதமுன் நபிய்யீனாக திகழ்கின்றார்களோ அவ்வாறு காதமுல்
அவ்லியாவாக திகழ்கின்றார்கள். இவ்வாறான தர்ஜாவை பெற்றவர்களில் இமாம் மஹ்தியும்
இருக்கலாம்.” (ஆதாரம் | தத்கிறதுல் அவ்லியா பாடம் 58 ஹஸ்ரத்
ஹக்கீம் முஹ்ம்மது அலித் திர்மிதி & உருது மொழியாக்கம்
ஸஹீருல் அஸ்ஃபியா மௌலானா செய்யது இஜாஸ் அஹ்மது; பதிப்பகம்
ஷூத்தா இஸ்லாமிய ஸ்டீம் பிரஸ் லாஹூர்)
குறிப்பு: மேலே
கூறப்பட்டுள்ள மொழியாக்கம் அன்வாருல் அஸ்கியா மற்றும் தத்கிறதுல் அவ்லியா
பதிப்பகம் மஜீதி கான்பூர் பக்கம் 537 இலிருந்து எடுக்கப்பட்டது.
‘ختم'’ என்ற சொல்லும் அரபியர்களின் சொல்வழக்கும்
காதம் என்ற சொல் பன்மையுடன் வரும்போது
‘சிறந்த’ என்ற பொருளே வரும் என்பதை நாம் முன்பு
நிரூபித்துவிட்டோம். மேலும் அரபியர்கள் தமது மொழி வழக்கில் காதம் என்ற சொல்லை
எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் கீழே காண்போம்.
1- யஸீது இப்னு
முஆவியா பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“யஸீது மிகச் சிறந்த கருத்துச் செறிவு கொண்ட கவிஞராக திகழ்ந்தார்.
மேலும் மிகச் சிறந்த கவிதையை கூறியிருக்கின்றார். கவிதை ஓர் அரசரிடமிருந்து
துவங்கியது பின்பு அரசரிடமே முடிந்தது என்ற ஓர் சொல்வழக்கு பிரசித்துபெற்றது.
அதாவது, அல்கைஸ் என்ற அமீரும், யஸீதும் ஆவர்.
அதாவது அல்கைஸிடமிருந்து கவிதை ஆரம்பமானது யஸீது இப்னு முஆவியாவுடன் முடிந்தது.”
(ஆதாரம் | கிதாபுல் ஃபக்ரி லிஇப்னு தக்தகா பாப்
அத்தவ்லத்துல் உமவிய்யா திக்ர் யஸீத்)
அரபியர்களின் இந்த சொல்வழக்குப்படி
யஸீதிற்கு பிறகு கவிஞர்கள் தோன்றவில்லையா? இல்லை, மாறாக யஸீது
தமது காலத்தில் மிகச் சிறந்த கவிஞராக திகழ்ந்தார்கள்.
2- இவ்வாறு வஃபியாத்துல் அஃயான்
லிஅபி அல்அப்பாஸ் ஷம்ஸுத்தீன் அஹ்மது இப்னு முஹம்மது இப்னு அபி பக்ர் லிஇப்னு
கல்கான் பாகம் 2 பக்கம் 71 இல் அபுல் அப்பாஸ் முஹம்மது இப்னு யஸீதுல் மஃரூஃப் பில்
மப்ரு நஹ்வி பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது;
وکان المبر المذکور و ابوالعباس احمد بن یحیٰ
الملقب بثعلب صاحب کتاب الفصیح عالمین
متعارضین قد خُتِمَ بھما تاریخ الادباءِ۔
“முபர்ரத் மற்றும் அபுல் அப்பாஸ்
சஃலப் (கிதாபுல் ஃபஸீஹ் ஐ எழுதியவர்) இருவரும் பெரும் ஆலிமாக திகழ்ந்தார்கள்.
இவர்களுடன் இலக்கிய அறிஞர்களின் வரலாறு முடிவடைந்தது.
இதன் அடிப்படையில் இலக்கிய அறிஞர்களின்
வரலாறு முபர்ரத் மற்றும் சஃலபி இவர்களுடன் முடிவுபெற்றுவிட்டது என்று கருத
முடியுமா? இல்லை. மாறாக இவர்கள் இருவரும் தத்தமது காலத்தில் சிறந்த
இலக்கிய அறிஞர்களாக இருந்தார்கள் என்பதே இதன் கருத்தாகும்.
‘‘ختم’’ என்ற சொல்லும் திருக்குர்ஆனும்
சில எதிரிகள்
திருக்குர்ஆனில் “கதம்” என்ற சொல் மூடுதல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு “அல் யவ்ம நக்திமு அலா அஃப்வாஹிஹிம்’
(யாஸீன்:66) அதாவது இறுதி நாளன்று நரகவாசிகளின் வாயில் முத்திரை இடப்பட்டுவிடும்.
மேலும் அவர்களின் கை மற்றும் கால்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். அதாவது
இறுதி நாளன்று நரகவாசிகள் வாயினால் பேச முடியாது போய்விடும். ஆகவே கதம் அதாவது
முத்திரை என்றால் மூடிவிடுதல் என்பது நிரூபணமாகிறது.
நமது பதில்: வெறுமனே
கதம் என்ற சொல்லை வைத்து மட்டும் எமது வாதம் இல்லை. மாறாக எமது வாதம் காதம்
என்ற சொல்லில் குறிப்பாக தா என்ற எழுத்தில் ஸபர் வந்து அந்த காதம்
என்ற சொல்லிற்கு பிறகு பன்மையில் ஒரு சொல்
வந்தால் அதற்கு இறுதி என்ற பொருளா அல்லது சிறந்தது என்ற பொருளா
என்பதே எமது வாதம் ஆகும். இருப்பினும் உங்கள் வாதத்திற்கு சாதகமாக இருக்கிறது என
நினைத்து நீங்கள் வைத்துள்ள மேலே உள்ள வசனத்தை வைத்து முழுமையாக மூடுதல்
என்ற முடிவுக்கு ஒரு போதும் வர முடியாது. ஏனென்றால் இறுதி நாளன்று நரகவாசி
வாயினால் பேசவே மாட்டார்கள் என்பது பொருள் கிடையாது. மாறாக மனிதனின் அனைத்து உடல்
உறுப்புகளுக்கும் வாய் என்பது முதன்மைக்குரிய ஓர் உறுப்பாக விளங்குகிறது. அதாவது
மனிதனுக்கு அவனது தலையில் ஏதேனும் ஒரு துன்பம் ஏற்பட்டால் அதனை இந்த வாயே
வெளிப்படுத்துகிறது. அவனது காலிலோ அல்லது கையிலோ ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும்
அதையும் வாய் மட்டுமே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, வெளிப்படையாக இறுதி
நாளன்று வாய் தன்னை தவிர மனிதனின் மற்ற
உறுப்புகள் செய்த பாவத்தைப் பற்றியும் வெளிப்படுத்தக்கூடும் என்பது தெரியவருகிறது.
ஆகவே, அல்லாஹ் கூறுகின்றான், அந்த நாளன்று அனைத்து உறுப்புகளும் தத்தமது பாவத்தை பற்றி கூறும். கரம்
தான் செய்த பாவத்தைப் பற்றியும், கால் தான் செய்த பாவம்
பற்றியும் கூறும். ஆனால் இங்கு, தீய வார்த்தைகள், புறம் பேசுதல், பொய் போன்ற பாவங்களை செய்த வாயைப்
பற்றி எது பேசும்? என்பதே கேள்வியாகும். வாய் செய்த பாவத்தை
பற்றி கரமோ அல்லது காலோ கூறுமா? ஆகவே வாயும் தான் செய்த
பாவத்தை பற்றி தானே கூறும் என்பது தெளிவாகிறது.
ஆகவே இறுதிநாளன்று நரகவாசிகளின் வாய்
மூடிவிடும் என்பது நிருபணமாகவில்லை. மாறாக நரகவாசிகள் பேசுவார்கள்,
அவர்களின் வாய் திறக்கும் என்பதே நிருபணமாகிறது. நீங்கள் எமது இந்த பதில் வெறும்
யூகம் மட்டுமே என்று கூறுவதாக இருந்தால், இது யூகம் இல்லை
மாறாக நாம் கூறிய அதாவது இறுதி நாளன்று நரகவாசிகளின் வாய் மூடப்படுவதில்லை என்ற கருத்து
திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது எமது பதிலாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா
நூர் வசனம் 25 இல் இவ்வாறு கூறுகிறான்:
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ
وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
அதாவது, இறுதிநாளன்று
(உலகத்தில்) அவர்கள் செய்ததைக் குறித்து அவர்களின் வாய், கரம் மற்றும் கால்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி பகர்ந்துவிடும்.
ஆக, இறுதி நாளன்று வாயில்
முத்திரை இடப்பட்டும் நரகவாசிகள் பேசுவார்கள் என்பது நிருபணமாகிறது. மற்றொரு
இடத்திலும் உடல், கரம் மற்றும் கால் நரகவாசிகளுக்கு எதிராக
சாட்சி பகரும் என்று உள்ளது.
وَقَالُوا لِجُلُودِهِمْ
لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا
அதாவது, அவர்கள் தமது
தோல்களை நோக்கி நீங்கள் ஏன் எங்களுக்கு எதிராக சாட்சி பகர்ந்தீர்கள் என்று
கூறுவார்கள். (41:22) இதன் மூலம் அவர்களின் வாய் மூடப்பட்டு இருக்காது என்பது
தெளிவாகிறது.
ஆகவே, ‘அல்யவ்மு நக்திமு’ என்ற வசனத்தில் வரக்கூடிய “கதம்”
என்பதற்கு முழுமையாக மூடுதல் என்ற பொருள் கிடையாது என்பது நிருபணமாகிறது. எமது
பார்வையில் இந்த வசனத்திற்கான பொருள் என்னவென்றால், இறுதி
நாளன்று இறைவன் வாயின் மீது சத்தியத்தின் முத்திரையை இட்டுவிடுவான் என்பதாகும்.
அது அனைத்து உண்மைகளையும் கூறிவிடும். அது தனக்கெதிராக எதுவொன்றை கூறுமோ அதற்கு
மேற்படியான சாட்சிக்கான அவசியம் ஏற்படாது. ஆனால் மற்ற உறுப்புகளுக்கு எதிராக
எதுவொன்றை அது கூறுமோ அதை மெய்ப்படுத்துவதற்காக ஒவ்வொரு உறுப்பும் தத்தமது தவறுகளை
ஒப்புக்கொள்ளும். இவ்வாறு இறை முத்திரை உறுதியாகிவிடும்.
நாம் செய்த இப்பொருளுக்கு கீழே உள்ள
ஹதீஸ் ஆதரவளிக்கிறது.
ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “உலகத்தில்
தினார் மற்றும் திர்ஹம் அல்லாஹ்வின் முத்திரையாக இருக்கின்றது. ஆகவே எவரொருவர்
தமது எஜமானனின் முத்திரையை எடுத்து வருவாரோ அவரின் தேவை நிறைவேறிவிடும்.
(ஃபிர்தவ்ஸுல் அக்பார் தேல்மி பக்கம் 108, ஜாமியுஸ் ஸகீர்
அஸ்ஸுயூத்தி மிஸ்ரி பாகம் 2 பக்கம் 14)
2. “ஆமீன்” இறைவனின் முத்திரை
ஆகும். இறைவனின் நம்பிக்கைக்கொண்ட அடியார்களின் மொழியில் இதனின் பொருள்
என்னவென்றால், ஆமீன் என்பது அல்லாஹ் தன் அடியார்கள் மீது
வைத்துள்ள முத்திரை ஆகும். ஏனென்றால், இதனால் துன்பங்களும், துயரங்களும் இறை அடியாரை விட்டு அகன்று விடும். மற்றொரு ஹதீஸில் “ஆமீன்” என்பது
சுவனத்தின் ஓர் தர்ஜாவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “ஆமீன்” என்பது
அடியான் மீதுள்ள இறைவனின் முத்திரையாகும். இதனை கூறுபவன் சுவனத்தில் தர்ஜாவை
பெறுவான் என்பது இதன் பொருளாகும். (ஃபிர்தவ்ஸுல்
அக்பார் தேல்மி பக்கம் 54,55 & ஜாமியுஸ் ஸகீர் அல்-இமாம் சுயூத்தி
பாபுல் அலிஃப் பாகம் 1 பக்கம் 4 மிஸ்ரி)
ஆகவே (அரபி மொழிவழக்கை
நிரூபிப்பதற்காக மட்டுமே கூறப்பட்டுள்ள) இந்த ஹதீஸின் அடிப்படையிலும் மேற்கூறப்பட்ட
திருக்குர்ஆன் வசனம் ‘இறுதி நாளன்று அவர்களின் வாயில் முத்திரை
இடப்படும்’ என்பதன் பொருள்
அவர்களை பொய் கூறுவதிலிருந்து காப்பாற்றப்படும். உண்மை சொல்வதற்கு எந்த
தடையுமிருக்காது என்பதாகும். ஆகவே அன்று வாய் சொல்லக்கூடிய அனைத்துமே
உண்மையானதாகவே இருக்கும்.
2) இவ்வாறு
சூரா பகராவில் வரக்கூடிய “கதமல்லாஹு அலா குலூபிஹிம்’
என்ற வசனத்தை எடுத்து வைத்து அல்லாஹ் காஃபிர்களின் உள்ளத்தில் முத்திரை
இட்டுவிட்டான் என்று கூறுகின்றனர்.
நமது பதில்: அ)
ஒன்று மேலே முத்திரை என்பதற்கு என்ன பொருள் என்பதை ஹதீஸின் மூலம் தெளிவுப்படுத்தப்
பட்டுவிட்டது.
ஆ) இந்த
வசனம் உங்களின் கொள்கையை மறுத்து எமது கொள்கையை ஆதரிக்கவே செய்கிறது. ஏனென்றால், இந்த
வசனத்தில் ‘கதம்’ என்பதற்கு
மூடுதல் என்றால், இந்த வசனத்திற்கு காஃபிர்களின் இதயம் செயல்
இழக்க செய்துவிட்டது. அதாவது நின்று விட்டது என்று பொருள் செய்ய வேண்டியது வரும்.
ஆனால் இவ்வாறான பொருள் தவறே என்பது தெளிவு.
இ) முத்திரை
இடப்பட்ட இந்த காஃபிர்கள் இனிமே முஸ்லிமாக ஆக முடியாதா?
ஈ) இன்னும்
சொல்லப்போனால் அதிகபட்சமாக இந்த வசனத்திற்கு காஃபிர்களின் உள்ளத்தில் அல்லது
இதயத்தில் இறைவன் முத்திரை இட்டுவிட்டான் இனி அவர்களின் உள்ளத்தில் ஈமான் நுழைய
முடியாது என்ற பொருள் மட்டுமே தர
முடியும். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால், காஃபிர்களின் உள்ளத்தில் வேறு ஏதேனும்
குஃபுர் சம்பந்தப்பட்ட கருத்து அல்லது தீய விஷயங்கள் நுழைய முடியுமா? அல்லது இது அவர்களின் உள்ளத்தில் தாக்கத்தை உருவாக்க முடியுமா இல்லையா? ஆகவே அவர்களின் உள்ளத்தில் இருக்கும் நிராகரிப்புத்தன்மையை ஆதரிக்கும்
விஷயங்கள் அவர்களின் உள்ளத்தில் நுழைய முடியும் என்பது தெளிவாகிறது. ஆம், இதற்கு எதிரான ஈமான் மற்றும் நேர்வழி சம்பந்தப்பட்ட கருத்துக்கள் நுழைய
முடியாமல் அவர்களின் உள்ளம் மூடப்பட்டுள்ளன.
ஆகவே உங்களின் இந்த பொருளின்
அடிப்படையில் எந்த பொருள் மீது முத்திரை இடப்படுகிறதோ அந்த பொருளுக்கு ஆதரவு
தெரிவிக்கும் விஷயங்களுக்காக அல்லது கருத்துகளுக்காக கதவு மூடப்படுவதில்லை மாறாக
அதற்கு எதிரான கருத்துகளுக்காக மட்டுமே மூடப்பட்டு விடுகின்றன என்பது
நிரூபணமாகிறது.
இதே அடிப்படையில் “காதமன்
நபிய்யீன்” என்ற சொல்லுக்கும் பொருள் கொடுத்தோம் என்றால் ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை எதிர்க்கும் வகையிலான எந்த நுபுவ்வத்தும் வர
முடியாது. ஆம் அவர்களை ஆதரிக்கும் வகையிலான நுபுவ்வத் வர முடியும் என்று
பொருள்படும்.
நாம் நீங்க
கொடுத்த பொருளை கொண்டே எழுதியுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலே
கூறப்பட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் இந்த வசனத்திற்கு எமது
பொருள் காஃபிர்களின் உள்ளத்தில் இருக்கக்கூடிய அசடுகள் அதனை இறைவன் தனது
முத்திரையை கொண்டு வெளிப்படுத்துகிறான். அதாவது அவர்களின் உள்ளத்தில் அசடுகள்
நிரம்பி காணப்படுகின்றன என்பதை உண்மை படுத்துகிறான். மேலும் கூறுகிறான்,
“அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்” (2:8) அதாவது அவர்கள் எந்த அளவுக்கு வீம்பில்
இருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்களிடம் உண்மை வந்த
பிறகும் கூட ஈமான் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் ஈமான் கொள்ளாதது நீங்கள்
நினைப்பது போன்று இறைவன் முத்திரை இட்டுவிட்டான் என்பதற்காக அல்ல. அவ்வாறென்றால் அந்த
பொருள் இறைவனின் மீது செய்யும் ஆட்சேபனைக்கு ஒரு காரணமாக அமைந்து விடும்.
ஏனென்றால், அவர்கள் ஈமான் கொள்ளவில்லை என்று சொன்னால் இதில்
அவர்களின் தவறு என்ன? இறைவன்தான் அவர்களின் உள்ளத்தில்
முத்திரை இட்டுவிட்டானே. இதன் காரணத்தால்
இப்போது இவர்கள் காஃபிர்களாக இருக்கிறார்கள். இதில் அவர்களின் தவறு என்ன? என்ற ஆட்சேபனை ஏற்படும்.
ஆனால் எமது பார்வையில் இந்த
வசனத்திற்கு இவ்வாறான பொருள் அல்ல. மாறாக இந்த வசனத்தில் இறைவன் காஃபிர்களின்
உள்ளத்தின் நிலையை வெளிப்படுத்திவிட்டான். மேலும் அவர்களின் உள்ளம்
அசுத்தமானதாகவும், வெறுக்கத்தக்கதாகவும் இருக்கிறது என்பதை
உண்மை படுத்துகிறான் முத்திரை பதித்து உறுதிபடுத்தி காட்டுகிறான்.
எவ்வாறு இருந்த போதிலும்,
நீங்கள் கதம் என்பதற்கு முழுமையாக மூடிவிடுதல் என்ற பொருளில் குர்ஆனிலிருந்து எந்த
ஒரு வசனத்தையும் உங்களால் காட்ட இயலாது. அவ்வாறு இருந்தாலும் “காதமன் நபிய்யீன்”
என்ற வசனத்திற்கு எந்தவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அங்கு “காதம்” என்ற சொல் “தா” என்ற எழுத்தில் ஸபர் உடன் இஸ்மே ஆலாவாக வந்துள்ளது. மேலும் அரபியில் இந்த
சொல் ஒரு பன்மை சொல்லுடன் வந்தால் இதற்கு எவ்வித விதிவிலக்கும் அல்லாமல் எப்போதும்
சிறந்த என்ற பொருளை கொண்டதாகவே வரும்.
உங்களில் எவரேனும்
இருந்தால் எமது இந்த சவாலை உடைத்துதான் காட்டுங்களேன் பார்க்கலாம்!
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None