எல்லாவற்றின் மீதும் வல்லமையுள்ள எஜமானனாகிய இறைவன் இந்தப் பிரபஞ்சத்தை வீணாகப் படைக்கவில்லை. மனிதனை அவன் உருவாக்கியதற்கான மகத்தான காரணத்தை நாம் பார்க்க முடிகின்றது. அது அவனை அடையாளங்கண்டு கொள்வதாகும்.
کُنْتُ کَنْزًا مَخْفِیًّا فاَحْبَبْتُ اَنْ اُعْرَفَ فَخَلَقْتُ آدَمَ
நான் ஒரு மறைவான கருவூலமாக இருந்தேன். நான் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் ஆதமைப் படைத்தேன் என்பது ஹதீஸே குத்ஸியாகும். படைத்த இறைவனை அறிந்து கொள்வதற்கான ஒரு வழியாக ஆதம் ஆக்கப்பட்டார். மறைவிலும் மறைவாக இருக்கின்ற, எல்லாப் புகழுக்கும், அழகிற்கும், உயர்ந்த நற்பண்புகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கின்ற இறைவனின் தோற்றம் ஆதம் மூலமாக வெளிப்பட்டது. இதைப் பற்றி திருக்குர்ஆனில் அல்லாஹ் மலக்குகளை நோக்கி இவ்வாறு கூறுகின்றான்:
اِنِّی جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَۃً
நான் பூமியில் ஒரு கலீஃபாவை உருவாக்க போகின்றேன் (2:31)
அப்போது, மலக்குகள் தங்களது எல்லைக்குட்பட்ட அறிவின் காரணமாக இதனால் நேரவிருக்கின்ற அபாயங்களைப் பற்றி கூறினர். அல்லாஹ் இந்த அபாயங்கள் பற்றி மிகவும் நுட்பமான முறையில் மறுத்து விட்டான். மேலும், ஆதம் படைக்கப்படுவதற்கான நோக்கத்தை எடுத்துக் கூறினான். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்தவாறு அவன் கூறிய உண்மையை ஏற்றுக் கொண்டனர். சுருக்கமாக, அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருப்பதும், அதில் தனது கலீஃபாவை நியமித்திருப்பதும் கிலாஃபத்தின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகின்றது.
கிலாஃபத் என்பதன் பொருள்
கலீஃபா என்பதன் பொருள் பிரதிநிதியாகும். கிலாஃபத் என்பதன் பொருள் பிரதிநிதித்துவம் ஆகும். அல்லாமா இப்னு கஸீர் அவர்கள் 'சென்ற ஒருவரின் இடத்தில் நின்றவாறு அவர் சென்றதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புபவர் கலீஃபா ஆவார்' என்று கூறியுள்ளார்கள். அகராதியின் அடிப்படையில் கிலாஃபத் என்பதற்கு 'ஒருவரது பிரதிநிதியாக இருப்பது' என்றே பொருள். மரபுக்கேற்ப இந்த சொல் நபியின் பிரதிநிதியாக இருப்பவருக்கே கூறப்படுகின்றது. (அந்நிஹாயா தொகுதி 1 பக்கம் 315)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
கலீஃபா என்பதன் பொருள் பிரதிநிதியாகும். அவர் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடியவராக இருக்கின்றார். நபிமார்களின் காலத்திற்குப் பிறகு இருள் பரவுகின்ற போது அதை அகற்றுவதற்காக அவர்கள் இருந்த இடத்திற்கு வருபவர்களை கலீஃபா என்று கூறுகின்றனர். (மல்ஃபூஸாத் தொகுதி 4 பக்கம் 382)
ஹுஸூர் (அலை) அவர்கள் கிலாஃபத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:
மனிதன் நிரந்தரமாக வாழ முடியாது என்பதால் உலகில் எல்லாரையும் விட கண்ணியமிக்கவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருக்கின்ற தூதர்கள் நிழலான முறையில் எப்போதும் கியாமத் வரை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று இறைவன் நாடியுள்ளான். இந்த நோக்கத்திற்காகவே அல்லாஹ் கிலாஃபத்தை ஏற்படுத்தியுள்ளான். அதன் மூலம் உலகம் ஒருபோதும் எந்தக் காலத்திலும் தூதுத்துவத்தின் அருள்களிலிருந்து விலகி இருக்காது. (ஷஹாதத்துல் குர்ஆன் பக்கம் 58)
நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் கலீஃபாக்கள் ஆவர்
ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் முதல் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் வந்தனரோ அவர்கள் அனைவருமே அல்லாஹ்வின் கலீஃபாக்கள் ஆவர். இவர்கள் அனைவருமே இஸ்லாமிய மார்க்கத்தின் போதனையையே வழங்கினர். வித்தியாசம் என்னவென்றால் கடந்த காலங்களில் வந்த நபிமார்கள் குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்காகவும் வந்தவர்கள் ஆவர். எனவே, காலத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களது போதனை இருந்தது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு மனித இனத்திற்கும் தூதராக வந்திருக்கின்றார்கள். அல்லாஹ் திருக்குர்ஆனில்
قُلْ یٰآاَیُّھَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللہِ اِلَیْکُمْ جَمِیْعًا
அதாவது கூறுவீராக! மக்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். (7:109) இந்த பூமியில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் ஒளிகளின் முழுமையான முன்மாதிரியாவார்கள். அவர்கள் முழுமையான செயல்திட்டமாகவும் வாழ்க்கை நெறிமுறைகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் மார்க்கத்தை முழுமை படுத்தியுள்ளான். அதை பற்றி அவன் இன்று
اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا
நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன். மேலும் உங்களுக்கு என் அருளை நிறைவு செய்துள்ளேன். மேலும் உங்களுக்கு மார்க்கமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துள்ளேன் (5:4) என்று கூறியுள்ளான்.
அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக உண்மையான மார்க்கத்தை நிலைநாட்டினான். அதை முழுமையாக்கினான். முழுமைப்படுத்தியது மட்டுமல்லாமல் அதைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதியையும் வழங்கியுள்ளான்.
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَ اِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ
(குர்ஆனாகிய) இந்த அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம். (15:10) மேலும் அல்லாஹ், எதுவரை முஸ்லிம்கள் ஈமானிலும் நற்செயல்களிலும் நிலைத்திருப்பார்களோ அதுவரை அல்லாஹ் அவர்களிடம் கிலாஃபத்தை நிலைத்திருக்கச் செய்வதாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி வழங்கியுள்ளான். இதைப் பற்றி திருக்குர்ஆனின் இஸ்திக்லாஃப் வசனத்தில் (24:56) அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அதாவது, அல்லாஹ் நன்னம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களிடம் அவர்களுக்கு முன்னுள்ள மக்களிடம் கிலாஃபத்தை ஏற்படுத்தியது போன்று கிலாஃபத்தை நிலைநாட்டுவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். பிறகு அவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கத்தில் அதாவது இஸ்லாத்தில் அவர்களை உறுதியாக நிலைபெறச் செய்வான். அதை வலுப்பெறச் செய்வான். அவர்களது அச்சத்தை அமைதியாக மாற்றுவான். அதன் மூலமாக மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவர். அவர்கள் அவனுடன் வேறு எவரையும் இணையாக்க மாட்டார்கள். இந்த கிலாஃபத் அமைப்பிற்கு கண்ணியம் வழங்காதவர்கள் கட்டுப்படாதவர்களாகவும் குழப்பவாதிகளாகவும் இருக்கின்றனர். (24:56)
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் அவர்களுக்கு பிறகு மிகப்பெரும் அருளான கிலாஃபத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதி வழங்கியுள்ளான். எனவே, கிலாஃபத் நபித்துவத்தை நிறைவுபெறச் செய்யக்கூடியதாக இருக்கின்றது. எனவேதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
مَاکَانَتِ النَّبُوَّۃُ قَطُّ اِلَّا تَبِعَتْھَا خِلَافَۃٌ
அதாவது நபித்துவத்திற்கு பிறகு கிலாஃபத் இருக்க வேண்டியது அவசியமானதாகும் (கன்ஸுல் உம்மால்) என்று கூறியுள்ளார்கள். இந்த இரண்டுமே அதாவது நபித்துவமும் கிலாஃபத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையும் பிரிக்க முடியாதவையும் ஆகும். கண்ணியத்திற்குரிய நபிமார்கள் விதையை மட்டுமே விதைக்கின்றனர். இந்த விதையை கண்ணியத்திற்குரிய கலீஃபாக்கள், எவ்வாறு விவசாயிகள் தங்களது வயல்களிலும் தோட்டங்களிலும் விதைகளைத் தூவுகின்றனரோ, செடிகளை நடுகின்றனரோ பிறகு அவற்றை பாதுகாப்பதற்கான ஏற்பாட்டையும் செய்கின்றனரோ அதற்கேற்பவே அவர்களின் வயல் அதன் முழுமையை அடைகின்றது. அல்லாஹ் ஏகத்துவத்தின் விதையை நபிமார்கள் மூலமாக விதைத்து விட்டு அதை கண்காணிப்பவரையும் பாதுகாப்பவரையும் அவன் நியமிக்காமல் இருப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
இவ்வாறு அல்லாஹ் வலுவான அடையாளங்கள் மூலமாக அவர்களின் உண்மையை வெளிப்படுத்துகின்றான். எந்த உண்மையை அவர்கள் உலகில் பரப்ப விரும்புகின்றனரோ அதற்கான விதையை அவர்களது கைகள் மூலமாகவே நடுகின்றான். ஆனால், அதனை அவர்களது கைகள் மூலமாக முழுமையாக நிறைவடையச் செய்வதில்லை. வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு தோல்விக்கான அச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ள அத்தகைய சந்தர்ப்பத்தில் அவர்களை மரணிக்கச் செய்து எதிரிகளுக்கு எள்ளி நகையாடி பரிகாசம் செய்வதற்கும், இழிவாகப் பேசுவதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கி விடுகின்றான். அவர்கள் எள்ளி நகையாடி பரிகாசம் செய்த பிறகு, அவன் மீண்டும் தனது வல்லமையின் மற்றொரு கையைக் காட்டுகின்றான். மேலும், எத்தகைய காரணிகளை உருவாக்கி விடுகின்றான் என்றால் அதன் மூலமாக எந்த நோக்கங்கள் முழுமையடையாமல் இருந்தனவோ அவை தனது முழுமையை அடைந்து விடுகின்றன. (அல் வஸிய்யத்)
எனவே, நபித்துவத்தின் மகத்தான, மகத்துவம் நிறைந்த நோக்கங்களை நிறைவடையச் செய்வதற்காக நபித்துவத்தின் பிரதிநிதித்துவமாக விளங்குகின்ற அதாவது, கிலாஃபத் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். கிலாஃபத்தின் மூலமாகவே மார்க்கத்தை வலுப்படுத்துவது, நம்பிக்கையாளர்களை ஒன்றிணைப்பது மற்றும் அவர்களிடம் உறுதித் தன்மையையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது சாத்தியமாகும்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கீழ்க்காணும் ஹதீஸ் இதற்கான சிறந்த வழிகாட்டலாக இருக்கின்றது. அதாவது, ஹஸ்ரத் அர்பாஸ் பின் ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவுரையை வழங்கினார்கள். அதைக் கேட்டவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. உள்ளங்களில் அசைவு ஏற்பட்டது. ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது பிரியா விடை கொடுப்பவரது அறிவுரை போன்று தெரிகிறதே என்று கூறினார். அந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களுக்கு வஸிய்யத்தாக ஏதாவது கூறுங்கள் என்று கூறினார். அதற்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது எனது வஸிய்யத்தாகும். அதாவது, அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தை மேற்கொள்ளுங்கள். கேட்பதையும் கட்டுப்பட்டு நடப்பதையும் உங்களது வழிமுறையாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதாவது, உங்களது கண்காணிப்பவராக யார் நியமிக்கப்படட்டாலும் இமாம் அல்லது கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடங்கள். அப்படிப்பட்டவர் ஆப்பிரிக்க அடிமையாக இருந்தாலும் சரியே! நினைவில் கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு உயிருடன் இருப்பவர்கள் பல கருத்து வேறுபாடுகளையும் பார்ப்பார்கள். எனவே, எனது நடைமுறையையும் எனது நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் நடைமுறையையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். முழுமையாக அதனைப் பின்பற்றுங்கள். வலுவாக அதில் நிலைத்திருங்கள். புதிய புதிய விஷயங்களிலிருந்து தவிர்ந்திருங்கள். ஏனென்றால், ஒவ்வொரு புதிய விஷயமும் பித்அத் (மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவை) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (மிஷ்காத்துல் மஸாஃபீஹ்)
மேற்குறிப்பிடப்பட்ட நபிமொழியில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கு பிறகு கிலாஃபத் தோன்றுவது தொடர்பான நற்செய்தியை தனது உம்மத்திற்கு தெரிவித்தார்கள். மேலும் கலீஃபாக்களுக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். ஏனென்றால், இந்த விஷயத்தின் மூலமாகவே தோல்வி, பிரிவினை மற்றும் குழப்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்ற மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் இதுவே வழியாகும். இந்த நபிமொழி அந்நூர் அதிகாரத்திலுள்ள இஸ்திக்லாஃப் (கிலாஃபத் தொடர்பான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள) வசனத்தின் விளக்கத்தை தெளிவுபடுத்தி விட்டது. மேலும், கிலாஃபத் பற்றிய வாக்குறுதி நிரந்தரமானது. ஆனால், அதைப் பெறுவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் நம்பிக்கை கொள்வதும் பொருத்தமான நற்செயல்களைச் செய்வதும் கட்டாய நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நபிமொழி சுட்டிகாட்டுகின்றது.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்கண்ட கட்டளையானது, ஒருபுறம் இந்த பூமியில் பிரதிநிதியாக இருந்து அதற்குரிய உரிமையை நிறைவேற்றுகின்ற அத்தகைய மக்கள் எப்போதும் இருந்து வருவார்கள் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை நமக்கு தருகின்றது. மறுபுறம், இஸ்லாத்தில் ஒன்றுபட்டிருப்பதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. ஏனென்றால், இந்த நபிமொழியில் கட்டுப்பட்டு நடப்பதை தமது வழிமுறையாக ஆக்கிக் கொள்வது கட்டாயமானதாகும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த விஷயம் எந்த அளவு வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கின்றதென்றால்; ஒரு ஆப்பிரிக்க அடிமை உங்களுக்கு அரசராக இருந்தாலும் அவருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
சுருக்கமாக, மனிதனின் இயல்புக்கேற்ற மார்க்கமான இஸ்லாம் ஒற்றுமையாக இருப்பதை ஆதரிப்பதோடு மட்டுமின்றி, அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஒன்றுபட்டிருப்பது ஓர் இமாம் இல்லாமல் சாத்தியமற்றதாகும். இதுவே லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்ற தூய கலிமாவின் அடிப்படையும் ஆகும். இந்தக் கலிமா நாம் ஒன்றுபட்டிருப்பதற்கான வலுவான உறுதியான ஓர் அடித்தளத்தை அமைத்துத் தருகின்றது. இந்தக் கலிமா இறைவனின் ஏகத்துவத்தையும் தூதுத்துவத்தையும் ஏற்றுக் கொள்வது என்பது மட்டுமல்ல. மாறாக, இது இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்கான ஒரு வழியாகவும் இருக்கின்றது. இஸ்லாமிய உலகிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவும் போது அதன் மூலமாக உலக அமைதிக்கான உத்திரவாதம் உறுதியாகின்ற வகையில் அதற்கான அழிக்க முடியாத அடித்தளத்தையும் இந்தக் கலிமா அமைத்துத் தந்திருக்கின்றது.
இந்தக் கலிமா இஸ்லாமிய மார்க்கத்தின் சுருக்கமாகும். இதனையே அதன் எல்லா கிளைகளும் சுற்றி வருவதுடன் அதனோடு அவை இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே திருக்குர்ஆனில் அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை அழைக்கும் போதெல்லாம் அவர்களைப் பன்மைச் சொற்களின் மூலமாகவே அழைக்கின்றான. உதாரணமாக, யா அய்யுஹல்லதீன ஆமனூ - நம்பிக்கை கொண்டவர்களே! என்றே அவன் அழைக்கின்றான். அபூதாவூதில் ஒரு நபிமொழி இவ்வாறு வருகின்றது.
عَلَیْکُمْ بِالْجَمَاعَۃِ فَاِنَّمَا یَأْکُلُ الذِّنْبُ مِنَ الْغَنَمِ الْقَاصِیَۃِ
"முஸ்லிம்களே! நீங்கள் இதனை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். உங்களது நிம்மதி மற்றும் பாதுகாப்பின் உத்திரவாதம் 'அல்-ஜமாஅத்' துடன் சேர்ந்து இருப்பதிலேயே இருக்கின்றது. நினைவில் கொள்ளுங்கள்! தமது மந்தையை விட்டும் பிரிந்து செல்கின்ற ஆடு ஓநாயின் உணவாக ஆகி விடுகின்றது."
கிலாஃபத்தே ராஷிதா-நேர்வழிபெற்ற கிலாஃபத்திற்குப் பிறகுள்ள நிலைமைகள்
தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் நிர்வாகியான மவ்லானா மர்ஹும் முஹம்மது தய்யிப் சாஹிப் அவர்கள் சிந்து மாகாணத்தில் 1944 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜமீயத்தே உலமாயே ஹிந்து சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் 'மார்க்கமும் அரசியலும்' என்ற தலைப்பில் தலைமையுரை நிகழ்த்தியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:
"கிலாஃபத்தே ராஷிதா (நேர்வழிபெற்ற கிலாஃபத்) நிறைவுற்ற தருணத்தில் அதாவது உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்குப் பிறகு (அதாவது முக்கியமான மூன்று ஆற்றல்களை தன்னகத்தே கொண்டிருந்த அல்லது அதன் முழு வடிவமாகத் திகழ்ந்த விரைவாகக் கிடைத்த பல வெற்றிகளின் உண்மையான அந்த காலக்கட்டத்திற்கு பிறகு) முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக அந்த வெற்றிகள் இருந்தன. பிறகு, நாடுகள் கை நழுவிப் போக ஆரம்பித்தன. பிறகு உட்புற பலவீனங்கள் பெருகி பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில் வீழ்ச்சி மற்றும் பிறரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்ற நாட்கள் வர ஆரம்பித்தன."
பிறகு தொடர்ந்து கூறுகின்றார்கள்: இதற்குக் காரணம் முஸ்லிம்களின் கண்களுக்கு முன்னால் அவர்கள் சென்று சேர வேண்டிய இலக்கு இல்லாமல் இருந்தது மட்டுமேயாகும். இலக்கு அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட அதை அடைவதற்கான வழி அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. வழி தெரிந்திருந்தாலும் கூட அதில் நடந்து செல்வதற்கான நல்லொழுக்கத்தின் ஆற்றல் அவர்களிடம் இருக்கவில்லை. அந்த நல்லொழுக்க ஆற்றல் அவர்களிடம் இருந்தாலும் கூட அவர்களை தமது ஞானத்திற்கேற்ப ஓர் அமைப்பின் கீழ் வழிநடத்திச் செல்கின்ற ஒரு தலைமையகமோ ஓர் இமாமோ அவர்களுக்கு இருக்கவில்லை. அவ்வாறு ஒரு நபர் இருந்தாலும் கூட காழ்ப்புணர்ச்சியானது அவரைப் பின்பற்றிச் செல்வதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கவில்லை.
சுருக்கமாக, இந்த மூன்று ஆற்றல்கள் அவர்களிடம் இருக்கவில்லை. அதாவது அறிவின் ஆற்றல், நல்லொழுக்க ஆற்றல், நிர்வாக ஆற்றல் ஆகியவற்றில் வீழ்ச்சி அடைந்ததுதான் இந்தத் தீய விளைவுகளுக்கான காரணமாக ஆகிக் கொண்டிருந்தன. (குத்பாத்தே ஹகீமுல் இஸ்லாம், தொகுதி 5 பக்கம் 467, மக்தபா ரஷிதிய்யா தேவ்பந்தின் வெளியீடு - புதிய பதிப்பு)
கிலாஃபத்துடன் ஒன்றியிருக்க வேண்டும் என்ற வழிகாட்டல்
முஸ்லிம் சமுதாயம் வரவிருக்கும் ஒரு காலக்கட்டத்தில் தமது செயல்களின் விளைவாக கிலாஃபத்தின் அருளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு விடும் என்று நபிமொழிகளிலிருந்து தெரிய வருகிறது. இன்று முழு இஸ்லாமிய உலகிற்கும் கிலாஃபத் இல்லாமல் அது கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்று இருக்கின்றது என்ற உணர்வு ஏற்பட்டிருக்கின்றது. எனவேதான், அல்லாஹ்வும் அவனது அன்பிற்குரிய தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களும் இதற்கான சிகிச்சையைக் கிலாஃபத்தில் அருட்கொடையுடன் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்கள். அல்லாஹ் திருக்குர்ஆனில்:
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللہِ جَمِیْعًا وَّ لَا تَفَرَّقُوْ
நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துபோய் விடாதீர்கள். சிதறுண்டு போய் விடாதீர்கள் என்று கூறுகிறான். அல்லாஹ்வின் கயிறு என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் என பொருள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், இஸ்லாமிய கிலாஃபத் என்றும் அதற்கு ஹஸ்ரத் ஸய்யிது வலியுல்லாஹ் ஷா சாஹிப் முஹத்தஸ் தெஹ்லவி அவர்கள் பொருள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் கயிறு என்பதன் கருத்து உண்மையான இஸ்லாமிய கிலாஃபத் ஆகும். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
اِقْتَدُوْا بِالَّذِیْنَ مَنْ بَعْدِی اَبِی بَکْرٍ وَ عُمَر فَاِنَّھُمَا حَبْلُ اللہِ الْمَمْدُوْدِ فَمَنْ تَمَسَّکَ بِھِمَا فَقَدْ تَمَسَّکَ بِالْعُرْوَۃِ الْوُثْقٰی لَا انْفِصَامَ لَھَا
அதாவது எனக்குப் பிறகு அபூபக்கரையும், உமரையும் பின்பற்றிச் செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் இறைவனின் நீளமான இரு கயிறுகள் ஆவர். எவர்கள் இவ்விருவரையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்வாரோ அவர் உடையாத பொருள் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்." (இஸாலதுல் குலஃபா, பக்கம் 64)
கிலாஃகத்தே ராஷிதாவின் தோற்றம்
ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பிறகு, எல்லா நபித் தோழர்களும் ஸய்யிதுனா ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் அருளுக்குரிய கைகளில் பைஅத் செய்யும் நற்பேற்றைப் பெற்றனர். அவர்களுக்குப் பிறகு ஸய்யிதுனா ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், ஹஸ்ரத் உஸ்மான் கனி (ரலி) அவர்கள் மற்றும் ஹஸ்ரத் அலி கர்ரமல்லாஹு த்தஆலா (ரலி) அவர்கள் ஆகியோர் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லிம் சமுதாயம் இத்தகு உன்னத தகுதியிலிருந்த சான்றோர்களிடம் பைஅத் செய்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு இருப்பதையும் உண்மையான இஸ்லாமிய கிலாஃபத்தின் தலைமையின் கீழ் செயல்படுவதையும் செயலளவில் செய்து காட்டினர்.
இந்த எல்லா கண்ணியமிக்க கலீஃபாக்களும் தமது உயிரை இவ்வழியில் அர்ப்பணித்து உழைப்புடனும் ஞானத்துடனும் மார்க்கத்தைப் புதுப்பிக்கும் பணியைச் செய்தனர். அப்பணிகள் இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றோர்கள் வராமல் இருந்திருந்தால் மார்க்கத்திற்கு என்ன வடிவம் கிடைத்திருக்கும்? என்பது தெரியாது. இந்த உயர் தகுதியிலுள்ள சான்றோர்களின் காரணமாகத்தான் மார்க்கத்திற்கு அதிக வலிமை கிடைத்துள்ளது. இஸ்லாம், அரபு நாட்டின் எல்லைகளைக் கடந்து மிகத் தொலைவு வரை அதன் ஒளி பரவியது.
ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ராஷிதாவின் முதல் காலக்கட்டம் 30 வருடங்கள்வரை நீடிக்கும் என்று கூறினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள்
اَلْخِلَافَۃُ ثَلَاثُوْنَ سَنَۃ
அதாவது கிலாஃபத் 30 வருடங்கள் வரை இருக்கும் என்று கூறினார்கள். (மிஷ்காத்துல் மஸாஃபீஹ். கிதாபுல் ஃபிதன், பக்கம் 463)
கிலாஃபத்தே ராஷிதாவிற்கு பிறகு முஸ்லிம் உம்மத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பின்னடைவு மற்றும் வீழ்ச்சியின் காலக்கட்டம் தொடர்பாக மேலான இறைவன் தனது அன்பிற்குரிய நபி முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தான். எனவேதான் அவர்கள் ஆரம்பத்தில் நானும் இறுதியில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருக்க இந்த சமுதாயம் ஒரு போதும் அழிந்து போகாது (கன்ஸுல் உம்மால். ஜாமிஉல் மஃபர், பக்கம் 104) என்று கூறி முதலிலேயே தமது சமுதாயத்திற்கு நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.
اِنَّ اللہَ عَزَّ وَ جَلَّ یَبْعَثُ لِھٰذِہٖ الْاُمَّۃِ عَلٰی رأْسِ کُلِّ مِائَۃٍ سَنَۃٍ مَنْ یُّجَدِّدُ لَھَا دِیْنَھَا
பெருமானார் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் சீர்திருத்தத்திற்காக இவ்வாறும் முன்னறிவிப்பு செய்திருந்தார்கள்: நிச்சயமாக அல்லாஹ், இந்த உம்மத்திற்காக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கின்ற அத்தகைய மக்களை உருவாக்கிக் கொண்டே இருப்பான். (அபூ தாவூது. மிஷ்காத், பக்கம் 36)
எனவே, முற்றிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காக பதிமூன்று நூற்றாண்டுகள் வரை சீர்திருத்தவாதிகளின் காலக்கட்டம் தொடர்ந்து இருந்து வந்தது. பதினான்காவது நூற்றாண்டில் இமாம் மஹ்தியின் வருகை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சரியான நேரத்தில் வந்தார்கள். அவர்களது மரணத்திற்குப் பிறகு மீண்டும் நபித்துவ வழியிலான கிலாஃபத்தின் காலக்கட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் தொடர் மறுமை நாள் வரை நீடிக்கும் - இன்ஷா அல்லாஹ்.
எனினும், அல்லாஹ் கிலாஃபத்தே ராஷிதா (நேர்வழி பெற்ற கிலாஃபத்) நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்ற வாக்குறுதியை நற்செயல்கள் செய்வதை நிபந்தனையாக வைத்து நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தந்துள்ளான். பொருத்தமான நற்செயல்கள் இல்லாமல் இருக்கும்போது கிலாஃபத் என்ற அருட்கொடையில் இருந்து முஸ்லிம் சமுதாயம் விலக்கி வைக்கப்பட்டு விடும் என்பதே இதன் தெளிவான கருத்தாகும். கிலாஃபத்தே ராஷிதாவின் முதல் காலக்கட்டத்திற்குப் பிறகு இவ்வாறே நடந்தது. இப்போது அல்லாஹ், எப்போதும் நமக்கு கிலாஃபத் என்ற அருட்கொடையை வழங்கி நிரந்தரமாக அதை நம்மிடம் நிலைத்திருக்கும்படி செய்வானாக!
கிலாஃபத்தின் முதல் காலக்கட்டம் மற்றும் இரண்டாவது காலக்கட்டம் பற்றிய உள்ளத்தை ஈர்க்கக் கூடிய உதாரணம்
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது சமுதாயத்திற்கான உதாரணம் மழையைப் போன்றதாகும். அது தொடர்பாக, அதன் இறுதிப் பகுதி மிகவும் பயனுள்ளதாகவும், நன்மைக்குக் காரணமாகவும் இருக்குமா? அல்லது அதன் முதல் பகுதி அவ்வாறிருக்குமா? என்று எனக்கு தெரியாது."
இந்த நபிமொழியின் இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "ஆரம்பத்தில் நானும், இறுதியில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருக்கும்போது எனது உம்மத் எவ்வாறு அழிந்து போக முடியும்?"
பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதிக் காலத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: "அதாவது இந்த உம்மத்தின் இறுதிப் பகுதியில் ஒரு ஜமாஅத் இருக்கும். அவர்களுக்கு நபித்தோழர்களைப் போன்று நற்கூலி கிடைக்கும். அது நன்மையை ஏவக்கூடியதாகவும் தீமையில் இருந்து தடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இந்த ஜமாஅத்தில் உள்ள மக்கள் அனைத்து குழப்பவாதிகளையும் எதிர்த்து நின்று அவர்களை தோல்வியடையச் செய்வர்." (மிஷ்காத்துல் மஸாபீஹ், பக்கம் 485)
நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள ஜமாஅத் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் ஜமாஅத்தே ஆகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த ஜமாஅத் தொடர்பாக, அதற்கு இந்த அருள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். அதற்கு நபித்துவ வழியிலுள்ள கிலாஃபத் என்ற பெயர் தரப்பட்டிருக்கின்றது.
ஹஸ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "அல்லாஹ் நாடும் வரை உங்களிடம் எனது நுபுவ்வத் இருக்கும். பிறகு இறைவன் அதை எடுத்து விடுவான். பிறகு அல்லாஹ் நாடும் வரை நபித்துவ வழியிலான கிலாஃபத் ஏற்படும். பிறகு அல்லாஹ் அதை எடுத்து விடுவான். பிறகு அல்லாஹ் நாடும் வரை கொடுங்கோல் அரசாட்சி இருக்கும். பிறகு இறைவன் நாடும் வரை பலாத்கரமான ஆட்சி இருக்கும். பிறகு இறைவன் அதையும் எடுத்து விடுவான். அதற்குப் பிறகு நபித்துவ வழியிலான கிலாஃபத் ஏற்படும். இதற்கு பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்."
மேற்கண்ட நபிமொழியிலிருந்து நபித்துவ வழியிலான கிலாஃபத்தின் இரு காலக்கட்டம் இருக்கும் என்று தெளிவாகத் தெரிகின்றது. ஒன்று, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு தோன்றும் கிலாஃபத் ஆகும். இரண்டாவது, கிலாஃபத்தின் காலக்கட்டம் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆரம்பமாகும். ஹதீஸ் விரிவுரையாளர்களும் இதே கருத்தை எழுதியுள்ளனர்.
اَلظَّاھِرُ اَنَّ الْمُرَادَبِہٖ زَمَنُ عِیْسٰی وَ الْمھْدِیِّ
அதாவது, மேற்கண்ட நபிமொழியின் இறுதியில் "நபித்துவ வழியில் கிலாஃபத்" என்பதன் கருத்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியின் காலமாகும் என்று அவர்கள் எழுதியுள்ளனர். "நபித்துவ வழியில் கிலாஃபத் ஏற்படும்" என்ற கூறிய பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். இதிலிருந்தும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்குப் பிறகு கிலாஃபத்தின் காலக்கட்டம் மறுமைநாள் வரை நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வருகையும் கிலாஃபத்தின் தோற்றமும்
இறை வேதங்களில் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்பவும் முன்னறிவிப்புகளுக்கு ஏற்பவும் சரியான நேரத்தில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை அல்லாஹ் காதியானின் புனித ஊரில் அனுப்பி வைத்தான். அவர்கள் ஹிஜ்ரி 1290 -ல் இறைவனுடன் உரையாடும் நற்பேற்றைப் பெற்றார்கள். 1885 -ஆம் ஆண்டு தாமே இக்காலத்தின் சீர்திருத்தவாதி என்று அவர்கள் வாதம் செய்தார்கள். 1890 -ஆம் ஆண்டின் இறுதியில் நானே வாக்களிக்கப்பட்ட மஸீஹாக இருக்கின்றேன் என்று அன்னார் அறிவிப்பு செய்தார்கள். 1908 -ஆம் ஆண்டு மே மாதம் 26 -ஆம் தேதி அன்னார் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மரணத்திற்குப் பிறகு உடனடியாக அவர்கள் செய்திருந்த வஸிய்யத்திற்கேற்ப கிலாஃபத்திற்கான தேர்தல் நடைபெற்றது. பிறகு, ஜமாஅத் ஹஸ்ரத் மவ்லானா நூருத்தீன் (ரலி) அவர்களின் அருளுக்குரிய கையில் பைஅத் செய்து இறைவனின் இரண்டாவது வல்லமையின் தோற்றமாக திகழ்ந்தது.
فالحمد للہ علی احسانہ و فضلہ و کرمہ
கிலாஃபத் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்ற நற்செய்தியை ஜமாஅத்திற்கு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது மரணத்திற்கு முன்னதாகவே வழங்கியிருந்தார்கள். 24 டிசம்பர் 1905 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'அல் வஸிய்யத்' என்ற நூலில் இறைவனின் இரண்டாவது வல்லமையின் தோற்றம் என்பது கிலாஃபத்தான் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மிகவும் தெளிவான சொற்களில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். "அப்போது இறைவன் ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை நிற்கச் செய்து மீண்டும் தனது வல்லமையின் முன்மாதிரியைக் காட்டினான். மேலும் அழிந்து போகக்கூடிய நிலையிருந்த இஸ்லாத்தை அதிலிருந்து காப்பாற்றினான்." (அல் வஸிய்யத்)
இறைவனின் வாக்குறுதிக்கேற்ப ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மறைவிற்குப் பிறகு முதலில் குறிப்பிட்டிருந்தபடி ஹஸ்ரத் மவ்லானா நூருத்தீன் (ரலி) அவர்கள் இறைவனின் இரண்டாவது வல்லமையின் முதல் தோற்றமாக அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் முதல் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வீழ்ந்து கிடந்த ஜமாஅத்தை அன்னார் எழுச்சி பெறச் செய்தார்கள். உட்புற குழப்பங்களை அன்னார் கடுமையாகத் தடுத்து நிறுத்தினார்கள். உட்புற மற்றும் வெளிப்புற குழப்பங்களிலிருந்து அதாவது இந்த இரு மட்டத்திலும் ஜமாஅத்தை அன்னார் வலிமையுடனும், உறுதியுடனும், ஒற்றுமையுடனும் இருக்கச் செய்தார்கள். அவர்கள் ஜமாஅத்தை நோக்கி இவ்வாறு கூறினார்கள்: "நீங்கள் இப்போது பாருங்கள். ஏனென்றால், இதுவே உங்களுக்கு அருளுக்குரிய வழியாகும். நீங்கள் இந்த அல்லாஹ்வின் கயிற்றை (அதாவது கிலாஃபத்தின் அருளை) வலுவாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இதுவும் அல்லாஹ்வின் கயிறே ஆகும். அது உங்களது பல்வேறு பகுதிகளை ஒன்று திரட்டி விட்டது. எனவே, அதை வலுவாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்." (பதர். 1 பிப்ரவரி 1912)
அன்னார் 1914 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 -ஆம் தேதி தனது உண்மையான எஜமானரிடம் சென்று சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இறைவனின் இரண்டாவது வல்லமையின் இரண்டாவது தோற்றமான ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தின் மஹ்மூது அஹ்மது சாஹிப் (ரலி) அவர்கள் 4 மார்ச் 1914 அன்று கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமது 52 வருட கால வெற்றிகரமான நீண்ட கிலாஃபத்திற்குப் பிறகு அன்னார் 1965 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் வஃபாத் ஆனார்கள். அல்லாஹ் அவர்களின் பதவிகளை உயர்த்துவானாக!
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 -ஆம் தேதி இறைவனின் இரண்டாவது வல்லமையின் மூன்றாவது தோற்றமான ஹஸ்ரத் ஹாஃபிஸ் மிர்ஸா நாஸிர் அஹ்மது சாஹிப் (ரஹ்) அவர்கள் கிலாஃபத்தின் அரியணையில் அமர்ந்தார்கள். அவர்கள் 1982 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் மரணம் அடைந்தார்கள். அல்லாஹ் அவர்களிடம் திருப்தி அடைவானாக!
1982 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 -ஆம் தேதி அன்று ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது சாஹிப் (ரஹ்) அவர்கள் இறைவனின் இரண்டாவது வல்லமையின் நான்காவது தோற்றமாகத் திகழ்ந்தார்கள். அன்னார் தமது எழுச்சிமிகு கிலாஃபத் காலக் கட்டத்தை நிறைவு செய்தவாறு 2003 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 -ஆம் தேதி அன்று காலமானார்கள்.
اللھم ارحمہ و اغفرلہ وادخلہ الجنۃ
இறைவனின் இரண்டாவது வல்லமையின் ஐந்தாவது தோற்றம்
இறைவனின் இரண்டாவது வல்லமையின் ஐந்தாவது தோற்றமாகிய ஸய்யிதுனா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது சாஹிப் (அய்யதஹுல்லாஹுத் தஆலா...) அவர்கள் 2003 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதி கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
اللھم متعنا بطول حیاتھم و ایدھم بنصرک العزیز
அல்லாஹ்வே! அவர்களது நீண்ட ஆயுளின் மூலமாக எங்களுக்கு பலனளிப்பாயாக! உமது வெற்றியின் உதவியைக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வாயாக! கிலாஃபத்தின் நிழலின் கீழ் அஹ்மதிய்யா ஜமாஅத் இஸ்லாத்தைப் பரப்புகின்ற முக்கியமான பணியைச் செய்து வருகின்றது. அல்லாஹ் இஸ்லாத்திற்கு அசாதாரணமான பெரும் மகத்துவத்தை வழங்கி வருகின்றான்.
ஒரு கிறித்தவ எழுத்தாளர் ஹெர்பர்ட் கோன்ஸ் ஷாரிக் தனது Well Bewegendi Machti Islam என்ற தனது நூலில் இவ்வாறு எழுதுகின்றார்:
"முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக அரபு நாட்டிலுள்ள கோத்திரங்கள் ஒன்றாக இணைந்து விட்டன. அப்போதுதான் உலகில் முதன்முறையாக இஸ்லாமிய உலகளாவிய சகோதரத்துவம் தோன்றியது. ஒன்பதாவது நூற்றாண்டில் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் உலகை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அவர்களது ஆற்றலின் கடுமையான அழுத்தமானது சிலுவைப் போர்களின் வடிவிலும் வெளிப்பட்டது. இன்று இஸ்லாம் தனது கொள்கைகளைப் பரப்புவதற்காக வாளைப் பயன்படுத்தவில்லை. புனிதப் போரை இப்போது ஏனைய வல்லரசின் சக்திகளே பயன்படுத்துகின்றன. ஆனால், அமைதியை விரும்புகின்ற அஹ்மதிய்யா ஜமாஅத் உலகிலுள்ள ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் தப்லீக் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது." (சாஹிப் ஸாதா மிர்ஸா முபாரக் அஹ்மது சாஹிப் அவர்கள் 1967 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு)
கிறித்தவ எழுத்தாளர் ஹெர்பர்ட் கோன்ஸ் ஷாரிக் அவர்கள் Well Bewegendi Machti Islam என்ற தமது நூலில் தொடர்ந்து இவ்வாறு எழுதுகின்றார்:
"நவீன இஸ்லாமின் இந்தக் கிளை சிறப்பான முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. ஏனென்றால், இப்போது இது கிறித்தவ உலகில் வேரூன்றி வருகிறது. இந்த ஜமாஅத் மட்டுமே கிறித்தவர்களை இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டு வருவதற்காக வலுவாக தப்லீக் செய்து வருகின்றது. நாம் இதற்கு முன்னதாக முஸ்லிம்களுக்கிடையில் கிறித்தவர்கள் செய்கின்ற தப்லீகில் ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இப்போது இந்த ஜமாஅத்தின் தப்லீக் முயற்சியின் இலக்கு கிறிஸ்தவர்களாகத் தான் உள்ளனர். இந்த ஜமாஅத் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள ஏறக்குறைய எல்லாப் பெரிய நகரங்களிலும் தனது பிரச்சார நிலையங்களை நிறுவியுள்ளது. அதன் மூலமாக கிறித்தவ உலகில் அதன் வளர்ச்சியில் ஒரு தடையை அது எந்த அளவு சிறியதாக இருந்தாலும் கூட அதை இந்த ஜமாஅத் ஏற்படுத்தி விட்டது. இந்த ஜமாஅத் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரத்தைச் செய்கின்ற அமைப்பைக் கொண்டதாகும். சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. தங்களது எண்ணங்களைப் பரப்புவதற்கு வானொலியும் பயன்படுத்தப்படுகின்றது. (சாஹிப் ஸாதா மர்ஹூம் மிர்ஸா முபாரக் அஹ்மது சாஹிப் அவர்கள் 1967 -ஆம் ஆண்டில் காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து)
இப்போது வானொலியைத் தவிர ஜமாஅத்திற்கு முஸ்லிம் தொலைக்காட்சி அஹ்மதிய்யா (M.T.A) என்ற பெயரில் ஒரு வலுவான தொலைக்காட்சி சேனலை நிறுவுவதற்கான நல்வாய்ப்பு கிடைத்திருப்பது கூட கிலாஃபத்தின் அருளேயாகும். இந்தச் சேனல் மூலமாக 24 மணி நேரமும் ஏக இறைவனின் மகத்துவம், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மை மற்றும் அன்னாரது நபித்துவத்தின் உண்மை ஆகியவை வெளிப்படுகின்றது. இனியும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் - இன்ஷா அல்லாஹ். மேலும் இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் உண்மையான கிலாஃபத்தின் இந்த இரண்டாவது காலக்கட்டத்தில் இஸ்லாம் வெற்றி பெற்றே தீரும். இப்போது உலகில் எந்த சக்தியாலும் இறைவனின் இந்த நியதியைத் தடுத்து நிறுத்த முடியாது. அஹ்மதிய்யா ஜமாஅத்தை அழிப்பதற்காக மவ்லவிமார்கள் மட்டுமல்லாமல் அரசாங்கங்களும் தமது கருவூலங்களின் வாயைத் திறந்து வைத்தன என்பதற்கு வானமும், பூமியும், அஹ்மதிய்யத்தின் உலகமும் சாட்சியாக இருக்கின்றது. ஆனால், அல்லாஹ்வின் விதியானது இவர்கள் அனைவரையும் தோல்வி அடையச் செய்தது. 1908, 1914, 1924, 1939, 1953, 1965, 1974, 1982, 1984 ஆகிய வருடங்களில் ஏற்பட்ட கடுமையான சோதனை நிறைந்த நிலைமைகளில் அவற்றை சரி செய்து அபாயகரமான புயல் வீசியபோது அவற்றை அமைதியான நிலைமையில் மாற்றியவன் நமது உண்மையான எஜமானனாகிய இறைவனே ஆவான். அவனே எப்போதும் ஜமாஅத்தைக் கண்காணித்து வந்தான். எதிர்காலத்திலும் அவனே இந்த ஜமாஅத்தைக் கண்காணித்து வருவான். இவ்வாறு நடக்க வேண்டியது கட்டாயமானதாகும். இந்த மார்க்கம் முழு உலகிலும் பரவி அது வெற்றி பெற வேண்டும் என்று இஸ்லாத்தின் இறைவன் தீர்மானித்து விட்டான்.
எனது பார்வையில் ஹஸ்ரத் ஸய்யிது முஹம்மது இஸ்மாயில் சாஹிப் ஷஹீது அவர்களின் இந்தக் கூற்று இருக்கின்றது. அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: "மார்க்கத்தின் வெளிப்பாட்டின் தொடக்கம் இறைத் தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆரம்பமானது. அது ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்களின் கைகளால் நிறைவடையும்." (மன்ஸபே இமாமத் பக்கம் 76)
எனவே, இன்றைய காலக்கட்டம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மைப் பேரன்பரும் அன்னாரது அடியாருமாகிய மஹ்தி (அலை) அவர்களின் காலக்கட்டமாகும். இப்போது வாக்களிக்கப்பட்ட மஹ்தி (அலை) அவர்களின் ஐந்தாவது கலீஃபா கிலாஃபத்தின் சிம்மாசனத்தில் அதன் வாரிசாக அமர்ந்திருக்கின்றார்கள். இஸ்லாத்தின் கலிமாவை உயர்த்துவதற்கும் மக்களை அதன் பக்கம் அழைப்பதற்கும் அதற்கான பணிகளில் இரவு பகலாக அன்னார் ஈடுப்பட்டு வருகின்றார்கள். அல்லாஹ் அவர்களின் ஆயுளிலும் உடல் நலத்திலும் பரக்கத்தை வழங்குவானாக! இந்தக் காலக்கட்டம் இஸ்லாம் முழுமையடையும் காலக்கட்டமாகும். இந்த அமைப்புடன் இணைந்து மார்க்கத்திற்குத் தொண்டாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகின்ற அந்த முஸ்லிம்கள் நற்பாக்கியம் பெற்றவர்களாவர்.
ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்கள் தமது (உருது) கவிதை ஒன்றில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
(அதன் பொருள்) மக்களே! இப்போது இந்த தோட்டத்தில்தான் (இஸ்லாத்தில் தான்) உங்களுக்கு சுகமும் இன்பமும் கிடைக்கும். காடுகளிலும், மேடுகளிலும் திரிபவர்களே! விரைவில் இதன் பக்கம் வாருங்கள். இதுவே அதற்கான நேரமாக இருக்கின்றது.
இஸ்லாமிய உலகின் அவல நிலையும் கிலாஃபத்தின் முக்கியத்துவமும்
இன்று இஸ்லாமிய உலகிற்கு ஏற்பட்டுள்ள அவல நிலை எவருக்கும் மறைவானதாக இல்லை. இவர்கள் பல்வேறு பிரிவுகளாப் பிரிந்து ஒவ்வொருவரும் தத்தமது கருத்திற்கேற்ப செயல்படுகின்றனர். இதற்காக இறைவன் புறமிருந்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுதான் கிலாஃபத் அமைப்பு நிறுவப்பட்டிருப்பதாகும். இந்த இறை அமைப்பின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் விரும்புகின்றவர்களும், அதன் தேவையை அதிகமாக உணர்கின்ற இஸ்லாமிய சான்றோர்களும், அறிஞர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இப்போது என் கண்களுக்கு முன்னால் தில்லியிலுள்ள மில்லி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள ஒரு நூல் இருக்கின்றது. அதன் 716 - வது பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"இஸ்லாமிய கொள்கைக்கேற்ப முஸ்லிம்களாக ஆவதற்கு நமது கழுத்துகளில் கலீஃபாவிற்குக் கட்டுப்பட்டு அவருக்கு கீழ்ப்படிந்து நடக்கின்ற பைஅத்தின் உடன்படிக்கை இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் ஒரே நேரத்தில் இரு அமீர்கள் இருக்க முடியாது என்பது அறிவுடையவர்களுக்குத் தெரியும். இந்த சமுதாயம் ஒரு கலீஃபாவின் கண் இமையின் சைகைக்கேற்ப உடனடியாக செயல்படுவதில்தான் சமுதாய ஆற்றலின் தலையூற்று இருக்கின்றது. இன்று, நம்மிடமிருந்து முழு சமுதாயத்தையும் வழி நடத்துகின்ற அத்தகைய ஒரு தலைமையகம் தொலைந்து போய் விட்டது தான் நமக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையாகும். நமது பல கூட்டு முயற்சிகளும் பலன் தராமல் போனதற்குக் காரணம் ஒரு விஷயம் தொடர்பாக நாம் தீர்மானிக்கின்ற அந்த இறுதிக் கட்டத்தில் பல அமீர்களும் பல வழிமுறைகளும் உருவாகுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சமுதாயத்தை இப்படிப்பட்ட பிரிவினையில் இருந்து கலீஃபாவால் மட்டுமே காப்பாற்ற முடியும். ஏனென்றால், மார்க்க ரீதியாக கலீஃபாவின் கட்டளையைப் பின்பற்றி நடப்பது முஸ்லிம்கள் மீது கடமையாக இருக்கின்றது. திருக்குர்ஆனில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு தமது மேலதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. எந்த மக்கள் இன்று இந்த சமுதாயத்திலுள்ள சக்தியற்ற நிலையைக் கண்டு மிகவும் நிம்மதியிழந்து காணப்படுகின்றனரோ அவர்கள் உடனடியாக இந்த சமுதாயத்தின் தலைமையகத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான உயிரை மாய்த்துக் கெள்ளும் உழைப்பை நம்மிடம் வேண்டுகின்றது. தற்காலத்திலுள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது ஒருவேளை மிகவும் குறைந்த மக்கள்தான் இதனைச் செயல்படுத்துவதற்குத் தகுதியுள்ள ஒரு விஷயமாகக் கருதுகின்றனர் என்பது தெரிய வருகின்றது. ஆனால், அடிப்படையில் இது மிகவும் ஒரு முக்கியமான பணியாகும். இதிலும் கஷ்டங்களைப் பார்த்து இதற்கு நாம் எல்லாவற்றையும் விட முன்னுரிமை வழங்காமல் இருந்து விட முடியாது."
பிறகு இதே புத்தகத்தின் 27 மற்றும் 28 ஆம் பக்கத்தில் 'கிலாஃபத் மீண்டும் ஏற்படுவது அருகில் இருக்கின்றது' என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"அல்லாஹ்வின் உதவி வரப்போகின்றது. கிலாஃபத் நிலைநாட்டப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் மீது வலுவான நம்பிக்கை இருக்க வேண்டும். கிலாஃபத் மீண்டும் நிறுவப்படுவது தொடர்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். இமாம் அஹ்மது அவர்கள் அறிவிப்பு செய்கின்றார்கள். ரஸூலே கரீம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: இறைவன் நாடும் வரை உங்களிடையே நபித்துவத்தின் இந்தக் காலக்கட்டம் இருக்கும். பிறகு அல்லாஹ் இதை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும்போது இதை (நபித்துவ காலக்கட்டத்தை) முடிவுக்குக் கொண்டு வந்து விடுவான். (இதற்குப் பிறகு) கிலாஃபத்தே ராஷிதா (நேர்வழியிலுள்ள கிலாஃபத்) அல்லாஹ் (அதனை நிலைத்திருக்கும்படி செய்ய) விரும்பும் வரை நிலைத்திருக்கும். பிறகு அல்லாஹ் அதை முடிவுக்கு கொண்டு வர விரும்பும்போது அதை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவான். பிறகு (அது இருந்த இடத்தில்) கொடுங்கோல் ஆட்சி நிலைத்திருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது நிலைத்திருக்கும். பிறகு அல்லாஹ் அதை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும்போது அதை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவான். பிறகு பலாத்காரமான ஆட்சியின் காலக்கட்டம் இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது எஞ்சியிருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் முடிவுக்குக் கொண்டு வர விரும்பும்போது அதை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவான். பிறகு மீண்டும் கிலாஃபத்தே ராஷிதா (நேர்வழியிலுள்ள கிலாஃபத்) நிலைபெறும். இதற்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். இந்த நபிமொழி நபித்துவத்தின் அடையாளங்களில் ஓர் அடையாளமாகும். ஏனென்றால், இது மறைவான செய்திகளைத் தெரிவிக்கின்றது. இந்த நபிமொழியில் நபித்துவம், கிலாஃபத், கொடுங்கோல் ஆட்சி, பலாத்காரமான ஆட்சி ஆகியவை தோன்றும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவற்றில் பெரும்பாலானவை தோன்றி விட்டன. இப்போது இதில் நாம் பார்ப்பதற்கு எஞ்சியிருக்கக் கூடிய விஷயம் நபிமொழியின் இறுதிப் பகுதியாகும். அதாவது, மீண்டும் கிலாஃபத்தே ராஷிதா நிலைபெறுவதாகும்." (கிலாஃபத் தமாம் மஸாயில் கா ஹல் - தில்லியிலுள்ள மில்லி பதிப்பகத்தார் வெளியிட்ட நூல்)
அல்லாஹ் முழு உலகையும் உண்மையான இஸ்லாமிய கிலாஃபத்தின் அருளின் நிழலின் கீழ் இருக்கும்படி செய்வானாக! ஆமீன்.
ஆக்கம்: மதிப்பிற்குரிய மவ்லானா குலாம் நபி சாஹிப் நியாஸ், காஷ்மீர் மாநிலப் பொறுப்புப் பிரச்சாரகர்
நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை
கிலாஃபத் தொடர்பான நபிமொழியை மிகத் தெளிவாக, விளக்கமாக வழங்கும் பதிவு.உண்மையை ஏற்க ஓர் அடையாளம் போதுமானது.
பதிலளிநீக்கு