அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் - தொடர் 1

 

அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம்


அல்லாஹ், மனிதனை இந்த உலகில், அவன் ஓர் அடியான் என்ற நிலையில் வாழ்வைக் கழித்தவாறு இறை நெருக்கத்திற்கான எல்லா வழிகளையும் பின்பற்றி நடப்பதற்காகவே படைத்துள்ளான். அதன் மூலமாக அவன் உலகமாகிய இந்த செயல் வீட்டிலிருந்து நற்கூலி கிடைக்கும் வீடாகிய மறுவுலகிற்குச் செல்லும் போது அவன் தனது வாழ்வின் நோக்கத்தில் வெற்றி பெற்றவாறு இறை திருப்தியின் நிரந்தர சுவர்க்கத்தில் நுழைய முடியும். இந்த மகத்தான நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக இறைவன் எந்த வழிகளையும் வசதிகளையும் மனிதனுக்கு வழங்கியுள்ளானோ அவற்றில் ஒரு முக்கியமான வழி இறை வழியில் பொருள் தியாகம் செய்வதாகும். அதாவது, அல்லாஹ்வின் வழியில் அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற கலப்பற்ற எண்ணத்துடன் செலவு செய்வதாகும். இந்தக் கட்டுரையில் நான் இவ்விஷயம் தொடர்பாக சில கருத்துக்களை உங்களிடம் கூற விரும்புகின்றேன்.

திருக்குர்ஆன் வசனங்கள்:

அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக திருக்குர்ஆனின் வடிவில் ஒரு முழுமை பெற்ற ஷரீஅத்தை இறக்கியுள்ளான். அதைப் பற்றி அவன் ھُدًی للنَّاس அது மக்களுக்கு வழிகாட்டக்கூடியது என்றும், ھدًی للمتَّقین குறிப்பாக இறையச்சமுள்ளவர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடியது என்றும் கூறியுள்ளான். மனிதன் தனது வாழ்வின் நோக்கத்தைப் பெறுவதற்கு தேவைப்படுகின்ற ஒவ்வொரு விஷயம் தொடர்பாகவும் அது மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கின்றது. இந்த விஷயங்களில் ஒரு முக்கிய விஷயம் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்வதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. எந்த அளவு வலியுறுத்தியும் விளக்கமாகவும் இந்தக் கருத்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றது என்றால், அதன் மூலம் அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் செய்வதன் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகின்றது. மேலும், இந்த வழியைக் கடைபிடிப்பதன் மூலமாகவே மனிதன் தனது வாழ்வின் நோக்கத்தை அடைவதில் வெற்றி பெற முடியும்.

திருக்குர்ஆனைப் படிக்க ஆரம்பிக்கும்போதே அல் பக்கரா அதிகாரத்தின் தொடக்கத்தில் வருகின்ற இந்த வசனங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

ذٰلِکَ الْکِتٰبُ لَا رَیْبَ فِیْہ ھُدًا لّلمُتَّقِیْن

திருக்குர்ஆன் வாக்களிக்கப்பட்ட வேதமாகும். அதில் அணுவளவு கூட சந்தேகம் இல்லை. இது இறையச்சமுள்ளவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்கு உள்ள வழியாக இருக்கின்றது. (2:3) இங்கு ஒரு கேள்வி நமது மூளைகளில் உதிக்கின்றது. அதாவது, இந்த இறையச்சமுள்ளவர்கள் என்பவர் யார்? மனிதன் இறையச்சமுள்ளவனாக எப்படி ஆக முடியும்? என்பதே அந்தக் கேள்விகளாகும்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அல்லாஹ் இவ்வாறு பதில் கூறியுள்ளான்:

اَلَّذِیْنَ یؤمِنوْنَ بِالْغَیْبِ وَ یقِیْمُوْنَ الصَّلوٰۃَ وَ مِمَّا رَزَقْنٰھُمْ یُنْفِقُوْن

அதாவது, இறையச்சமுள்ளவர்கள் யார் என்றால் அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். தொழுகையை நிலைநாட்டுகின்றனர். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்கின்றனர். (2:4) இதில், உண்மையில் இறுதியில் வெற்றி பெற இருக்கின்ற இறையச்சமுள்ளவர்களது இரண்டு அடிப்படையான அடையாளங்கள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அடையாளங்கள் மூலம் அவர்கள் நன்றாக அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றனர். மேலும், இந்த இரண்டு வழிகள் மூலமாகவே மனிதன் இறையச்சத்தின் வழிகளில் அடியெடுத்து வைத்தவாறு இறுதியில் தனது வாழ்வின் நோக்கத்தை அடைவதில் வெற்றி பெற்று விடுகின்றான். மேலும், இறைவனது அன்பையும் நெருக்கத்தையும் அவன் பெற்றுக் கொள்கின்றான்.

இந்த வசனத்தில் அல்லாஹ் இறையச்சத்தைத் தேடுகின்ற மற்றும் இறையச்சத்தின் எல்லையற்ற வழிகளில் நடந்து செல்கின்றவரின் ஓர் அடையாளமாக இதைக் கூறுகின்றான். அதாவது, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவனிடம் தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலையிலேயே கழிகின்றது. இது பற்றிய கருத்து அவருக்கு முற்றிலும் பொருந்துகிறது. அவர் எதை பெற்றிருந்தாலும் முழுக்க முழுக்க இறைவனின் அருளால்தான் அதை பெற்றார் என்ற உண்மையைப் பற்றி அவர் நன்றாக அறிந்திருக்கின்றார். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் இறை ஞானமிக்க இந்தக் கருத்தை தமது கவிதையில் எவ்வாறு அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: 

"எல்லாம் நீ வழங்கிய கொடையேயாகும். வீட்டிலிருந்து நாங்கள் எதையும் கொண்டு வரவில்லை." இந்த உறுதியில் முழுமையாக நிலைநின்ற பிறகு, ஒரு நம்பிக்கை கொண்ட அடியாரின் முழு வாழ்நாளும் எவ்வாறு கழிகின்றது என்றால், அவர் தனது ஒவ்வொரு பொருளையும் இறைவன் வழங்கிய கொடை என்று உறுதியாக நம்பியவாறு முழுமையான மகிழ்ச்சியுடனும் உளப்பூர்வமாகவும் திறந்த உள்ளத்துடனும் முழுமையான நிச்சய உறுதியுடனும் அவர் இறைவனின் வழியில் செலவு செய்கின்றார்; செலவு செய்து கொண்டே செல்கின்றார். தனது உயிர், பொருள், நேரம், கண்ணியம் மற்றும் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட ஆற்றல்கள் மற்றும் தகுதிகளின் ஒவ்வோர் அணுவையும் அவனது வழியில் அவர் தியாகம் செய்து கொண்டே செல்கின்றார். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த குரல்தான் எழும்;

“உயிரையே அவன் வழியில் அர்ப்பணித்தாலும் அந்த உயிரும் கூட இறைவன் வழங்கியதாகும். அவனுக்குரிய உரிமையை நாம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகும்.”

ஸய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் இந்தக் கருத்தை மிகவும் இறை ஞானத்தின் வடிவில் இவ்வாறு எடுத்து கூறுகின்றார்கள்:  

“அந்த இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணித்து விடுபவர்களே அவன் மீது அன்பு கொள்கின்றனர். தங்களது உள்ளம் கவர்ந்த அந்த இறைவன் எப்போது தங்களிடம் திருப்தி அடையப் போகின்றான் என்ற கவலையிலேயே அவர்களது இரவும் பகலும் இருக்கின்றன. அவர்கள் அவனிடம் தனது செல்வத்தையும் உயிரையும் மீண்டும் மீண்டும் தந்து விட்டனர். ஆனால், இப்போதும் நாம் ஒன்றும் செய்யாதவர்களாக இருக்கின்றோமே என்ற அச்சம்தான் அவர்களின் உள்ளத்தில் இருக்கின்றது.”

மார்க்கத் தேவைகளுக்காக இறைவனின் வழியில் தங்களது பொருள்களைச் செலவு செய்வதன் கருத்து திருக்குர்ஆனின் மிகவும் அதிகமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் மீண்டும் மீண்டும் இதைப்பற்றி வலியுறுத்திக் கூறியுள்ளான். மேலும், மறைவானவற்றை அறிந்துள்ள இறைவன் உங்களது பொருள் தியாகத்தை நன்றாக பார்க்கக் கூடியவனாகவும் அதைப் பற்றி நன்கு அறிந்தவன் ஆகவும் இருக்கின்றான் என்ற இந்த வாக்குறுதியை அவனே வழங்கியுள்ளான். அவன் 'வஹ்ஹாப்' ஆக அதாவது தாராளமாக வழங்குகின்ற இறைவனாக இருக்கின்றான். அவன் இந்த நன்மைக்கான கூலியை எண்ணி  எண்ணி  வழங்காமல் கணக்கில்லாமல் அவருக்கு வழங்குகின்றான். மேலும், தான் விரும்புபவருக்கு தனது நற்கூலியை எல்லையின்றி அதிகமாக்கிக் கொண்டே செல்கின்றான்.

அல்லாஹ் அவனது வழியில் பொருள் தியாகம் செய்வதை 'ஜிஹாது' என்று குறிப்பிடுகின்றான். மேலும், அதை ஒரு வியாபாரம் என்று கூறியவாறு அதைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்:

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰی تِجَارَۃٍ تُنۡجِیۡکُمۡ مِّنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿۱۱  تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ تُجَاہِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ بِاَمۡوَالِکُمۡ وَ اَنۡفُسِکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿ۙ۱۲﴾ یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ وَ یُدۡخِلۡکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ وَ مَسٰکِنَ طَیِّبَۃً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿ۙ۱۳  وَ اُخۡرٰی تُحِبُّوۡنَہَا ؕ نَصۡرٌ مِّنَ اللّٰہِ وَ فَتۡحٌ قَرِیۡبٌ ؕ وَ بَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۴

நம்பிக்கை கொண்டவர்களே! வேதனை அளிக்கக்கூடிய தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் வா பம் ஒன்றைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் அல்லாஹ்விடத்தும் அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் கடுமையாக உழைப்பதாகும். நீங்கள் அறிந்திருப்பின் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

(நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் உங்கள் பாவங்களை மன்னித்து தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றையொட்டி ஆறுகள் ஓடுகின்றன. மேலும், என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களிலுள்ள தூய்மையானதும் இன்பமானதுமான இருப்பிடங்களில் (அவன் உங்களை அமர்த்துவான்). இது (அவன் உங்களுக்கு அளிக்கும்) மாபெரும் வெற்றியாகும்.

நீங்கள் விரும்புகின்ற இன்னொன்றையும் (அவன் உங்களுக்கு வழங்குவான்) அது அல்லாஹ்விடமிருந்துள்ள உதவியும் அண்மையில் கிடைக்கக் கூடிய வெற்றியும் ஆகும். எனவே, நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (61:11-13)

இந்த வசனங்களில் அல்லாஹ் இறைவனின் வழியில் செலவு செய்வதன் அருள்களை சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளான். உலகில் கிடைக்கின்ற வெகுமதிகளே இறைவனின் உதவி மற்றும் வெற்றிகள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும், மறுமையில் வேதனை அளிக்கக்கூடிய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவது, பாவங்கள் மன்னிக்கப்படுவது, அல்லாஹ்வின் திருப்தியின் நிரந்தரமான சுவர்க்கங்களில் நுழைவது ஆகியவற்றைப் பற்றிய நற்செய்தியும் வழங்கப்பட்டிருக்கின்றது. பொருள் தியாகத்தின் மூலமாக அல்லாஹ்வின் இந்த எல்லா அருள்களும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்கின்றவருக்கு கிடைக்கின்றன. அவரது மடி உலகம் மற்றும் மறுமையில் கிடைக்கின்ற இந்த அருள்களால் எப்போதும் நிறைந்திருக்கின்றது. 

இதே கருத்து திருக்குர்ஆனின் இன்னொரு வசனத்தில் கூட இருக்கின்றது. அதில், அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ اللّٰہَ اشۡتَرٰی مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اَنۡفُسَہُمۡ وَ اَمۡوَالَہُمۡ بِاَنَّ لَہُمُ الۡجَنَّۃَ

நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு சுவர்க்கம் அளிப்பதற்கு ஈடாக அல்லாஹ் அவர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும் அவர்களின் பொருள்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான். (9:111)

எந்த மனிதனுக்கு உண்மையான வாக்குறுதியை வழங்குகின்ற இறைவனிடமிருந்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே சுவர்க்கத்திற்கான நற்செய்தி கிடைத்து விடுகின்றதோ அவர் உறுதியாக தனது இலக்கை அடைந்து விட்டார். இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் பொருள் தியாகங்கள் செய்கின்ற மக்களைப் பார்த்து தங்களது வேர்வையை இரத்தமாக்கி ஹலாலான ரிஸ்கிலிருந்து சம்பாதித்தவற்றை எனது திருப்தி கிடைப்பதற்காக தியாகம் செய்பவர்களே! நான் உங்களிடம் கூறுகின்றேன்.

فَاسۡتَبۡشِرُوۡا بِبَیۡعِکُمُ الَّذِیۡ بَایَعۡتُمۡ بِہٖ ؕ وَ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ 

நீங்கள் அந்த இறைவனுடன் செய்த வ கம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். மேலும் இதுவே மாபெரும் வெற்றியாகும். (9:111)

ரஹ்மானும் ரஹீமுமாக இருக்கின்ற நமது இறைவன் நம்மீது எந்த அளவு பேரருள் செய்துள்ளான்? அவன்தான் நம்மைப் படைத்தான். அவனே நமக்கு வாழ்வை வழங்கினான். அவன்தான் நமக்கு பொருளை சம்பாதிப்பதற்கான ஆற்றலையும் நல்வாய்ப்பையும் வழங்கினான். பிறகு, அவனது அருளால், அவனது கருணையால் நாம் சம்பாதித்த பொருளிலிருந்து ஒரு பகுதியை அவனுக்காக நாம் தியாகம் செய்யும்போது தாராளமாக வழங்குகின்ற அந்த இறைவன் எந்த அளவு மகிழ்ச்சி அடைகின்றான் என்றால் அவன் சுவர்க்க்ததிற்கான நற்செய்தியை அவனுக்கு வழங்குகின்றான். நம்பிக்கை கொண்ட ஓர் அடியானுக்கு மகத்தான வெற்றி என்று கூறப்படுகின்ற அருளை விட மேலானதாக வேறு எந்த அருள் இருக்க முடியும்?

இறை வழியில் செலவு செய்து, இந்த நல்ல பணியில் சோம்பல் மற்றும் கவனமின்மையுடன் நடந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருத்தல் பற்றி மிகவும் வலியுறுத்தியவாறு அல்லாஹ் கூறுகின்றான்: 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡہِ وَ لَا خُلَّۃٌ وَّ لَا شَفَاعَۃٌ ؕ وَ الۡکٰفِرُوۡنَ ہُمُ الظّٰلِمُوۡنَ

நம்பிக்கை கொண்டவர்களே! எவ்வித கொடுக்கல் வாங்கலும் நட்பும் பரிந்துரையும் இல்லாத அந்நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள். நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்கே) அநீதியிழைப்பவர்களாவர். (2:255)

இந்த வசனத்திலுள்ள இந்த கருத்து நினைவில் கொள்ளத்தக்கதாகும். அதாவது, இறைவழியில் செலவு செய்யாதவர்களை அல்லாஹ் அநீதியிழைப்பவர்கள் என்று கூறியுள்ளான். உண்மையிலேயே மறுமையில் கிடைக்கவிருக்கின்ற மகத்தான வெற்றிக்கு எதிரில் உலகின் தற்காலிக மகிழ்ச்சிக்கும் சுகத்திற்கும் முன்னுரிமை வழங்குபவர்கள் மிகவும் அநீதியிழைப்பவர்களாவர் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

-மவ்லானா அதாவுல் முஜீப் சாஹிப் ராஷித் (இலண்டன் ஃபஸ்ல் பள்ளிவாயிலின் இமாம்)

நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.