அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் - தொடர் 4

 

அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் - தொடர் 4

பின்னவர்களில் காணப்படும் முன்னுதாரனங்கள்:

ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் முழுமையான அடியாரும் அன்னாரது உண்மைப் பேரன்பருமான ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட பின்னவர்களின் அருளுக்குரிய காலக்கட்டமாக இது இருக்கின்றது. இந்த காலக்கட்டத்தில் இறைவன் நம்மைப் பிறக்க வைத்து எந்தக் காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து காத்திருந்து இந்த உலகை விட்டே சென்று விட்டனரோ அந்தக் காலத்தை அவன் நமக்கு வழங்கியிருப்பது நமது நற்பாக்கியமாகும். காலத்தின் மஹ்தி மற்றும் மஸீஹின் சஹாபாக்கள் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்த சஹாபாக்களின் அடிச்சுவட்டை எத்தகைய அர்ப்பணிக்கும் மனப்பாங்குடன் பின்பற்றிச் சென்றனர் என்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அவர்களைப் பற்றி இவ்வாறு தமது கவிதையில் நற்செய்தி கூறுகின்றார்கள்:

இப்போது என் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அருளுக்குரியவர்கள். என்னை அவர்கள் பெற்றுக் கொண்டதன் மூலம் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களது சஹாபாக்களுடன் இணைந்து விட்டனர்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் உதாரணம் வெகு தொலைவில் உள்ள ஒரு விஷயம் அல்ல. அவர்களில் நற்பாக்கியம் பெற்ற சிலரை காண்பதற்கான நல்வாய்ப்பு நம்மில் சிலருக்கு கிடைத்திருக்கின்றது. இத்தகைய பல தாபியீன்கள் இன்று நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நமக்கு மத்தியில் இருந்து வருகின்றனர். தங்களது வழிகாட்டிகளான சஹாபாக்களின் நற்பண்புகளை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இஸ்லாத்திற்காக தங்களை அர்ப்பணித்து விட்ட இவர்கள் பொருள் தியாகத்தின் களத்தில் எவ்வகையிலெல்லாம் ஒளிமயமான மினாராக்களைக் கட்டியுள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.

இறை வழியில் செலவு செய்வது ஒரு நற்பாக்கியமாகும். ஆனால், அவ்வாறு செய்தவாறு அளவு கடந்த அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுகின்ற உணர்வையும் வெளிப்படுத்துவது விடுகின்றது.

ஆரம்ப நாட்களில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு ஒரு முறை ஒரு பிரசுரத்தை வெளியிடுவதற்காக அறுபது ரூபாய் தேவைப்பட்டது அப்போது ஹுஸூர் (அலை) அவர்கள் கபூர்தலாவைச் சார்ந்த முன்ஷி ஸஃபர் அஹ்மது சாஹிப் அவர்களிடம் உனடியாக இந்த தேவையை நிறைவேற்ற வேண்டியது உள்ளது. எனது இந்த தேவையை உங்களது ஜமாஅத்தால் நிறைவேற்ற முடியுமா? என்று கேட்டார்கள்.

ஹஸ்ரத் முன்ஷி ஸஃபர் அஹ்மது சாஹிப் ஆம்! முடியும் என்று பதில் கூறினார்கள். உடனடியாக நேராக தனது வீட்டிற்கு சென்றார்கள். தனது மனைவியின் சம்மதத்துடன் அவர்களது நகைகளை விற்று ஹுஸூர் (அலை) அவர்கள் கேட்ட தொகையை அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விடுகின்றார்கள். சில நாட்கள் கழிந்த பிறகு ஹஸ்ரத் முன்ஷி அரோடே கான் (ரலி) அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களை சந்திக்க வந்தார்கள். அப்போது ஹுஸூர் (அலை) அவர்கள் அவரிடம் நீங்கள் அனைவரும் குறித்த நேரத்தில் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளீர்கள் என்று கூறியவாறு கபூர்தலா ஜமாஅத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். அப்போதுதான் ஹஸ்ரத் முன்ஷி ஸஃபர் அஹ்மது சாஹிப் அவர்கள் ஜமாஅத் சகோதரர்கள் எவரிடமும் இது பற்றி எதுவுமே கூறவில்லை என்பது தெரிய வந்தது. எந்த அளவு தாழ்மைக் குணமும் அர்ப்பணிப்பும் தன்னலம் கருதாமையும் இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வருகின்றது.

அறிவிப்பில் இவ்வாறு வருகின்றது: அதாவது, ஹஸ்ரத் முன்ஷி அரோடே கான் சாஹிப் (ரலி) அவர்களுக்கு பொருள் தியாகம் செய்வதற்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போனதில் எந்த அளவு அதிகமாக வருத்தம் ஏற்பட்டதென்றால் அன்னார் வெகு காலம் வரை ஹஸ்ரத் முன்ஷி ஸஃபர் அஹ்மது சாஹிப் அவர்கள் மீது வெறுப்படைந்திருந்தார்கள். அந்த வெறுப்பில் கூட ஒரு மகிமை தென்படுகின்றது. அந்த வெறுப்பிற்கான காரணம் முழு நற்கூலியையும் ஒருவரே பெற்றுக் கொண்டார். எங்களை இந்த நற்கூலியில் பங்கு பெற வைக்கவில்லை என்பது மட்டுமேயாகும். (அஸ்ஹாபே அஹ்மது தொகுதி 6 பக்கம் 72)

ஆண்களின் பொருள் தியாகத்தைப் பற்றி கூறிய பிறகு ஜமாஅத்திலுள்ள பெண்களும் கூட இந்த பொருளாதார ஜிஹாதில் ஆண்களுக்கு இணையாக பங்கு பெற்றுள்ளனர் என்பதை விளக்குவது நமது கடமையாகும். இன்னும் சொல்வதென்றால், சில வேளைகளில் ஆண்களை விட பெண்கள் தியாகத்தில் முன்னேறியிருப்பதை காண முடிகின்றது. பள்ளிவாயில்களைக் கட்டுகின்ற சந்தர்ப்பங்களில் எவ்வாறு ஆண்கள் தங்கள் சட்டைப் பையில் உள்ளவற்றை முழுமையாக இறை வழியில் கொடுத்து விட்டனரோ, தங்களது சம்பளப் பணத்தின் கவரைக் கூட பிரிக்காமல் சந்தா செலுத்துவதற்காக அதனை கொடுத்து விட்டனரோ அவ்வாறே பெண்களும் கூட தங்களது விலை மதிப்புள்ள ஆபரணங்களையும் நகைகளையும் மிகவும் ஆர்வத்துடன் சந்தாவிற்காக கொடுத்திருக்கின்றனர். அவர்களது பார்வையில் அப்போது அந்த விலை மதிப்புள்ள நகைகளுக்கு ஓர் அனாவிற்கு சமமான மதிப்பைக் கூட அவர்கள் வழங்காதது போன்று அவர்களது தியாகத்தின் நிலை இருந்தது. திருமணத்திற்காக வாங்கி இருந்த நகைகளின் டப்பாக்களை அப்படியே கொண்டு வந்து காலத்தில் கலீஃபாவின் கைகளில் அதை கொடுத்து விட்டு முழுமையான மகிழ்ச்சியுடன் அவர்கள் திரும்பி வருகின்ற காட்சியை நம்மால் பார்க்க முடிந்தது. நான் இந்த சம்பவத்திற்கு கண் கண்ட சாட்சியாக இருக்கின்றேன். மான்செஸ்டரில் இலண்டனிலுள்ள பைத்துல் ஃபுதூஹ் பள்ளிவாயில் கட்டுவதற்காக பொருள் தியாகம் செய்யுமாறு அறிவிப்பு செய்யப்பட்டபோது அங்கு அமர்ந்து இருந்தவர்களிலிருந்து ஓர் இளைஞர் எழுந்து வந்தார். அவரது கையில் ஒரு கவர் இருந்தது. அந்த இளைஞர் அந்த கவரை தந்தவாறு இப்போது சிறிது நேரத்திற்கு முன்னர்தான் எனக்கு கடந்த மாதத்தின் சம்பளம் கிடைத்தது. நான் சம்பளக் கவரை திறக்கக்கூட இல்லை. பள்ளிவாயில் கட்டுவது தொடர்பாக அறிவிப்பு வந்ததும் அந்த கவரை அப்படியே நான் இதற்காக கொடுக்கின்றேன் என்று அவர் கூறினார்.

இந்த சபையில் இருந்த இன்னோர் இளைஞரின் முன்மாதிரியும் கூட நாம் மறக்க முடியாத ஒன்றாகும். அது உலகத்தை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்குவதன் ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த திட்டம் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டதும் அவர் எழுந்து வந்தார். ஒரு கவரை வழங்கியவாறு சில நாட்களுக்குப் பிறகு எனக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. நான் வலிமா விருந்து கொடுப்பதற்காக 500 பவுண்டுகளை சேமித்து வைத்திருந்தேன். இறை இல்லம் கட்டுவது தொடர்பான திட்டத்தைக் கேட்டதும் எனது உள்ளத்தில் வலிமாவிற்கான ஏற்பாட்டை இறைவன் ஏதாவது ஒரு வகையில் செய்து விடுவான். மார்க்கத்திற்கு தொண்டாற்றுவதற்காக கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை கை நழுவிப் போக விட்டு விடக் கூடாது என்ற எண்ணம் வந்தது. என் தரப்பிலிருந்து இந்த முழு தொகையையும் பள்ளிவாயில் கட்டுவதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதே சபையில் நிகழ்ந்த ஈமானுக்கு எழுச்சியூட்டக் கூடிய இன்னொரு சம்பவத்தையும் நான் கூறுகின்றேன். பள்ளிவாயில் கட்டுவதற்கான அருளுக்குரிய திட்டத்தில் அதற்காக வாக்குறுதி வழங்கியிருப்பவர்களின் பட்டியலை நான் பார்த்த போது அதில் எல்லாரது வாக்குறுதியையும் விட அதிகமான தொகையை ஓர் அஹ்மதி பெண் தனது வாக்குறுதியாக எழுதியிருப்பதைப் பார்த்தேன். நான் எனது சொற்பொழிவில் அதை பற்றி குறிப்பிட்டுக் கூறியவாறு ஆண்களுக்கு அது பற்றி கவனமூட்டியவாறு அவர்களது தன்மான உணர்வை தூண்டினேன். அப்போது ஒரு நண்பர் அந்த பெண் எழுதியிருந்த 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு எதிரில் தான், 15 ஆயிரம் பவுண்டுகளை வாக்குறுதியாக வழங்குவதாகக் கூறினார். அப்போது சில நொடிகளுக்குப் பிறகு அந்த பெண்மணியிடம் இருந்து என் தரப்பிலிருந்து எனது வாக்குறுதியை 20 ஆயிரம் பவுண்டுகளாக எழுதிக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்த ஒரு காகிதத் துண்டு எனக்கு தரப்பட்டது. நான் இது பற்றி அறிவிப்பு செய்ததும் அந்த ஆண் உடனடியாக தனது வாக்குறுதியை 21 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தி விட்டார். ஒவ்வொருவரும் இனி என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அந்த தூய உள்ளம் கொண்ட பெண்ணிடமிருந்து இன்னொரு காகிதத் துண்டு எனக்கு தரப்பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த விஷயம் எல்லா ஆண்களையும் எதுவுமே பேச முடியாமல் செய்து விட்டது. இப்போது இவ்வாறு மீண்டும் மீண்டும் வாக்குறுதியை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே இருக்கக் கூடாது. என் தரப்பிலிருந்து நான் கூறும் இந்த விஷயத்தை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள். அதாவது பள்ளிவாயிலைக் கட்டுவதற்காக முழு ஜமாஅத்தில் இருந்து எல்லாரையும் விட அதிகமாக எவர் வாக்குறுதி எழுதினாலும் எந்நிலையிலும் எனது வாக்குறுதியானது அவர் எழுதும் தொகையை விட ஆயிரம் பவுண்டுகள் அதிகமாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார். நன்மைகளில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதில் எத்தகைய பெருமிதம் கொள்ளத்தக்க முன்மாதிரியை இந்த அஹ்மதி பெண்மணி  காட்டி விட்டார்.

மதிப்பிற்குரிய முன்ஷி இமாமுத்தீன் சாஹிப் அவர்களின் மனைவியான மதிப்பிற்குரிய கரீம் பீவி சாஹிபா அவர்களது உதாரணமும் மகத்துவமிக்க உதாரணமாகும். அவர்களது பொருளாதார நிலைமைகள் மோசமாக இருந்தும் கூட எல்லா சமயங்களிலும் அவர்கள் பொருள் தியாகம் செய்வதற்கான வழிகளைத் தேடிக் கொண்டேயிருப்பார்கள். அதாவது, பொருள் தியாகம் செய்வதற்காக சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும்? அப்போது முதல் முறையாக நாம்தான் தியாகம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு எல்லா சமயங்களிலும் அவர்களிடம் காணப்பட்டது. அவர்களது அசாதாரணமான தியாக உணர்வு இந்த சம்பவத்திலிருந்து தெரிய வருகின்றது. அவர்களது வஸிய்யத் தொடர்பாக அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்திய பிறகு தமது சொத்திலிருந்து செலுத்த வேண்டிய பங்கிற்கான தொகையையும் முழுமையாக அவர்கள் செலுத்தி விட்டார்கள். அலுவலகத்தின் தரப்பிலிருந்து நிகழ்ந்த தவறின் காரணமாக அவர்கள் செலுத்திய முழு தொகையும் வேறு ஒரு சந்தாவில் சேர்க்கப்பட்டு விட்டது. ஒரு நீண்ட காலத்திற்குப் பிறகே இந்த தவறு பற்றி தெரிய வந்தது. இவ்வாறு தவறாகப் பதிவு செய்யப்பட்டதை சரி செய்யும் வகையில் மிகவும் எளிதாக தாள்களில் திருத்தம் செய்ய முடியும். ஆனால், தூய உள்ளம் கொண்ட இந்த பெண்மணி தான் செலுத்திய தொகையைத் திரும்ப எடுத்து அதற்குரிய சரியான சந்தா கணக்கில் சேர்ப்பதை விரும்பவில்லை. அவர்கள் ஒரு முறை செலுத்திய தனது சொத்திலிருந்து தான் செலுத்த வேண்டிய பங்கிற்கான தொகையை மீண்டும் ஒரு முறை முழுமையாக செலுத்தி தனது கணக்கில் எந்த பாக்கியும் இல்லாமல் செய்தார். (அஸ்ஹாபே அஹ்மது தொகுதி 1 பக்கம் 162) 

-மவ்லானா அதாவுல் முஜீப் சாஹிப் ராஷித் (இலண்டன் ஃபஸ்ல் பள்ளிவாயிலின் இமாம்)

நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.