பொருள் தியாகம் தொடர்பான ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடிய முன்னுதாரணங்கள்:
மனிதனை அல்லாஹ் எவ்வாறு படைத்துள்ளான் என்றால் சில நேரங்களில் அவன் இறைவனின் கூற்றுக்களைக் கேட்டு எத்தகைய தாக்கத்திற்கு ஆளாகின்றான் என்றால் திடீரென்று ஒரு நொடியில் அவனிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகின்றது. ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக அதாவது, அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களைக் கேட்டவுடனேயே உடனடியாக அதற்கு கட்டுப்பட்டவர்களாக நின்று விடுவார்கள் என்று வருகின்றது. ஹஸ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் முஹம்மது ஒரு தூதரையன்றி வேறல்ல. அவர்களுக்கு முன்னுள்ள எல்லா தூதர்களும் மரணமடைந்து விட்டனர் (3:145) என்ற வசனத்தை ஓதியதைச் செவியுற்றுதும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களது நிலை எவ்வாறு இருந்தது? உருவிய வாளுடன் நின்றவர்களது கைகளிலிருந்து வாள் கீழே விழுந்து விட்டது. அவர்களால் நிற்கக்கூட முடியவில்லை.
சில நேரங்களில் இவ்வாறும் நிகழ்ந்திருக்கின்றது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு கூற்று காதில் விழுகின்றது. அதனால் வாழ்வில் ஒரு மகத்தான் புரட்சி ஏற்பட்டு விடுகின்றது. தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபித்தோழரின் காதில் ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் 'உட்காருங்கள்' என்ற குரல் கேட்கின்றது. நேரடியாக அவர்களைப் பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறவுமில்லை. ஆனால் அவரோ தெருவிலேயே உட்கார்ந்து விடுகின்றார்.
மதுகோப்பைகள் நபித்தோழர்களுக்கு இடையில் சுற்றி வந்து கொண்டிருந்த சமயத்தில் மது இன்றிலிருந்து ஹராமாக்கப்பட்டு விட்டது என்று அறிவிப்பு செய்யப்படுவது காதில் விழுகின்றது. போதை மிகைத்திருந்த நிலையிலும் கூட ஒரு நபித்தோழர் எழுந்தார். தடியால் மது வைக்கப்பட்டிருந்த பானைகளை உடைத்தெரிந்தார். உண்மையில், உண்மையான நன்மையின் ஒவ்வொரு கனத்திலும் கட்டுப்படுதலின் இந்த தகுதியைத்தான் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் பெற வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே தர்பிய்யத் சொற்பொழிவுகளில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் மற்றும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கட்டளைகள் எடுத்துக் கூறப்படுகின்றது. அவற்றின் அருளால் நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்களில் ஒரு தூய மாற்றமும் தூண்டுதலும் உருவாகின்றது.
சில நேரங்களில் செயலளவிலான முன்மாதிரிகளைக் கண்டு மனிதன் மிகவும் தாக்கத்திற்கு ஆளாகின்றான். அதனால் ஏற்படும் நல்ல விளைவை ஏற்றுக் கொள்கின்றான். இயல்பிலேயே மனிதன் முன்மாதிரியின் தேவையை உடையவனாக இருக்கின்றான். மற்றவர்களின் நல்ல முன்மாதிரியின் மூலமாக அவனது உள்ளத்திலும் நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பங்கள் விழித்தெழுகின்றன. அவனையும் அவர்களைப் போன்றே தியாகங்கள் செய்வதற்கு அவை ஆயத்தப்படுத்துகின்றன. மற்றவர்களின் நல்ல முன்மாதிரியிலிருந்து அறிவுரையைப் பெறக்கூடியவர் உண்மையில் மிகவும் நற்பாக்கியம் பெற்றவராக இருக்கின்றார் என்று பெருமானார் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். இந்த ஞானம் நிறைந்த விதிமுறையின் அடிப்படையில் பொருள் தியாகங்கள் தொடர்பான சில முன்னுதாரணங்களை உங்கள் முன் எடுத்து வைக்கின்றேன். நான் கூறும் விஷயங்கள் ஒருவேளை எவரது உள்ளத்திலாவது பதிந்து விடும் என்ற நம்பிக்கையுடனும் துஆவுடனும் அவற்றை நான் இப்போது எடுத்து வைக்கின்றேன்.
ஆரம்ப நூற்றாண்டுகளின் முன்னுதாரனங்கள்:
முஹம்மது (ஸல்) அவர்களது ஒளியை தமது கண்களால் காணும் நற்பேற்றைப் பெற்ற நபித்தோழர்கள் ரிழ்வானுல்லாஹி அலைஹிம் அவர்களது முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் எடுத்துக் கூறுகின்றேன். நபித்தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களது நட்பிலிருந்து அருளைப் பெற்றனர். மேலும், அன்னாரது வழிகாட்டல்களை தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவர்கள் ஆக்கிக் கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் அனைவருமே நேர்வழியின் வானத்தில் நட்சத்திரங்களைப் போன்று மின்னுவதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நற்பாக்கியம் பெற்ற நபித்தோழர்களிடத்தில் இறைவன் திருப்தி அடைந்தான். அவர்களும் இறைவனிடத்தில் திருப்தி அடைந்துள்ளனர். அவர்களது முன்மாதிரியை ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் என்றென்றும் பின்பற்றத்தக்க முன்மாதிரி என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் செய்வது தொடர்பான சம்பவங்களால் இஸ்லாமிய வரலாறு நிறைந்து காணப்படுகின்றது. நபித்தோழர்கள் இந்த இஸ்லாமிய போதனைக்கு ஏற்ப தமது உள்ளத்தாலும் உயிராலும் எவ்வாறு செயல்பட்டனர் என்றால், உலக வரலாற்றில் அதற்கு இணையான ஒன்றை பார்க்க முடியாது. ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு போரின் சந்தர்ப்பத்தில் தன்னிடமிருந்த செல்வத்தில் பாதி பகுதியைக் கொடுத்து விட்டார்கள். மேலும், இந்த கனத்தில் நான் எல்லாரையும் விட முன்னேறிச் சென்று விட்டேன் என்று கருதினார்கள். சிறிது நேரம் கழிந்த பிறகு, ஹஸ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் தங்களிடமிருந்த செல்வம் முழுவதையும் தங்களது அன்பான எஜமானரான பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் செய்வதையும், அவ்வழியில் முன்னேறிச் சென்றவாறு நபித்தோழர்கள் செய்த உள்ளத்தை கொள்ளை கொள்கின்ற தியாகங்களையும், நபித்தோழர்கள் அவர்களது மற்றும் நமது அன்பான எஜமானரான, முழு உலக ஆசிரியருமான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள்தான் அவர்களது உள்ளத்திற்கு ஆன்மீகத் தூய்மையை வழங்கினார்கள். பிறகு, அன்னார் அவர்களது உள்ளங்களில் இறை வழியில் தமது செல்வங்களைத் தயக்கமின்றி செலவு செய்வதற்கான விதையை விதைத்தார்கள். இந்த விதை கனிகளைத் தந்து, அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் செய்வது மற்றும் தமது பொருளை இவ்வழியில் அர்பணிக்கின்ற அந்த காட்சியையும் தமது கண்களால் காண்கின்ற போது பெருமானார் (ஸல்) அவர்களது அருளுக்குரிய முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து காணப்பட்டது. செழித்து வளர்கின்ற தனது வயலைப் பார்க்கின்ற ஒரு விவசாயி மகிழ்ச்சியால் திளைத்திருப்பது போன்று பெருமானார் (ஸல்) அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து விடும். இதற்கான ஓர் உதாரணத்தை நான் உங்கள் முன்னால் வைக்கின்றேன்.
ஹஸ்ரத் ஜரீர் (அலை) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு ஏழை சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வந்திருந்தனர். அவர்கள் வெறுங்காலுடனும் ஆடைகள் அணியாத உடலுடனும் காணப்பட்டார்கள். அவர்களின் இந்த நிலைமையைப் பார்த்து ரஸூலே கரீம் (ஸல்) அவர்களது முகம் மாறி விட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் சஹாபாக்களை ஒன்று திரட்டி அவர்களிடடையே சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபித்தோழர்கள் தீனார், திர்ஹம், ஆடைகள், வாற்கோதுமை மற்றும் பேரீத்தம் பழங்களை சதகாவாகக் கொடுத்தார்கள். எதுவரை என்றால், ஆடைகள் மற்றும் தானியங்களின் இரண்டு குவியல்கள் ஒன்று சேர்ந்தன. ஹஸ்ரத் ஜரீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் முகம் இந்த காட்சியைக் கண்டு தங்கக் கட்டியைப் போன்று ஒளி வீசியது. (சஹீஹ் முஸ்லிம் கிதாபுஸ் ஸகாத் பாபுல் ஹிப்பி அலஸ் ஸதக்கதி)
நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொருளை (இறைவனுக்காக) செலவு செய்யாத வரை ஒருபோதும் முழுமையான நன்மையை அடைய முடியாது.(3:93) என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கிய பிறகு சஹாபாக்களின் நடைமுறையை நாம் பார்க்கின்ற போது அவர்கள் தங்களுக்கு மிகவும் பிரியமான ஒவ்வொரு பொருளையும் இறைவனின் வழியில் தியாகம் செய்வதற்கு முடிவெடுத்திருந்தது தெரிய வருகின்றது.
மதீனாவிலுள்ள அன்ஸார்களில் எல்லாரையும் விட அதிக தோட்டங்களை உடையவர்களாக ஹஸ்ரத் தல்ஹா (ரலி) அவர்கள் இருந்தார்கள். பெய்ருஹா என்ற பெயரிலுள்ள ஒரு தோட்டம் அவர்களுக்கு மிகவும் விருப்பமான தோட்டமாக இருந்தது. இது மஸ்ஜிது நபவிக்கு நேர் எதிரில் இருந்தது. ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் அந்த தோட்டத்திற்குச் செல்வார்கள். அந்த தோட்டத்திலிருந்த குளிர்ந்த இனிமையான தண்ணீர் அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. இந்த வசனம் இறங்கிய சமயத்தில் ஹஸ்ரத் தல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக இந்த தோட்டத்தை சதகாவாக வழங்கி விட்டார்கள்.
ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த வசனம் இறங்கியபோது எனது செல்வத்தில் எனக்கு மிகவும் பிரியமான பொருள் எது? என்பதைப் பற்றி நான் சிந்தித்தேன். அப்போது ரோம் நாட்டைச் சார்ந்த எனது ஓர் அடிமை பெண்ணைத் தவிர வேறு எந்த எனது பொருளும் எல்லாவற்றையும் விட பிரியமானதாக எனக்கு இருக்கவில்லை. அப்போது அந்த சமயத்திலேயே நான் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேன். (ஹுல்யத்தில் அவ்லியா தொகுதி 1 பக்கம் 295)
ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் சம்பவமும் ஈமானுக்கு மிகவும் எழுச்சியூட்டக்கூடிய வியக்கத்தக்க சம்பவமாக இருக்கின்றது. அது அவர்களது உண்மையான உணர்வுகளை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டக்கூடியதாக இருக்கின்றது. ஒரு முறை அவர்கள் நோயுற்றிருந்தார்கள். மீன் சாப்பிடுவதற்கு அவர்களது உள்ளம் மிகவும் விரும்பியது. மக்கள் மிகவும் சிரமப்பட்டு ஒரு மீனை தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அதனை சமைத்து அவர்களுக்கு முன்னால் வைத்தனர். ஒரு கவளம் உணவைக் கூட அவர்கள் சாப்பிடாத நிலையில் அவர்களது வீட்டின் கதவருகில் ஓர் ஏழையின் குரல் கேட்டது. அவர்கள் உடனடியாக எழுந்து சமைத்து வைத்திருந்த அந்த மீன் முழுவதையும் அந்த ஏழைக்கு வழங்கி விட்டார்கள். மக்கள் மிகவும் பிடிவாதத்துடன் நீங்கள் மீனை சாப்பிடுங்கள். நாங்கள் அந்த ஏழைக்கு கொஞ்சம் தொகையை கொடுத்து விடுகின்றோம். அதன் மூலமாக அவர் தனது தேவையை நிறைவு செய்து கொள்வார் என்று கூறினர். ஆனால் ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் இப்போது இந்த மீன்தான் எனக்கு மிகவும் விருப்பமான பொருளாக இருக்கின்றது. நான் அதைத்தான் சதகாவாக வழங்குவேன் என்று கூறி விட்டார்கள். (ஹுல்யத்துல் அவ்லியா தொகுதி 1 பக்கம் 297)
பாரசீகத்தைச் சார்ந்த ஹஸ்ரத் சல்மான் (ரலி) மதாயினுடைய ஆளுனராக இருந்தார்கள். அவர்களுக்கு பைத்துல் மால் மூலம் ஐந்தாயிரம் தீனார் கிடைத்தது. பைத்துல் மால் மூலம் இந்த பணம் கிடைத்ததும் முழுமையாக அதனை அவர்கள் இறை வழியில் செலவு செய்து விடுவார்கள். பாய்களைப் பின்னுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அன்னார் தங்களது வாழ்வைக் கழித்து வந்தார்கள். (அல் இஸ்திஆப் தொகுதி 2 பக்கம் 572)
ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் மற்றும் ஹஸ்ரத் அஸ்மா (ரலி) அவர்கள் ஆகியோரை விட தாராளமாக வழங்குகின்ற வேறு எவரையும் பார்த்ததில்லை. இருவரின் தியாகங்கள் செய்யும் வழிமுறையும் வெவ்வேறானதாக இருந்தது. ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் சிறிது சிறிதாக பொருளை ஒன்று சேர்ப்பார்கள். ஓரளவு பொருள் ஒன்று சேர்ந்ததும் அவை அனைத்தையும் அவர்கள் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால், அஸ்மா (ரலி) அவர்களின் வழிமுறை எவ்வாறிருந்தது என்றால், அவர்கள் எந்த ஒரு பொருளையும் தங்களிடம் வைத்து கொண்டதேயில்லை. (அல் அதபுல் முஃப்ரத் பாபுஸ் ஸஹாவதி)
ஒரு முறை இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்களிடம் இறை வழியில் தியாகம் செய்வது பற்றி போதனை செய்தார்கள். அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றவுடன் ஹஸ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி பெருமானர் (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். மேலும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்போது நான் என்னிடமிருந்த எல்லா நகைகளையும் கொண்டு வந்து விட்டேன். இறை வழியில் அவற்றை நான் அர்ப்பணிக்கின்றேன் என்று கூறினார்கள்.
இவை முன்மாதிரிக்காக கூறப்பட்ட சில உதாரணங்களாகும். உண்மை என்னவென்றால், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய பார்வை இந்த சஹாபாக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றால் அவர்கள் தம்மையே அவ்வழியில் மாய்த்து விட்டனர். அவர்கள் அல்லாஹ்விற்காக தங்களை மாய்த்துக் கொள்வதிலும், அல்லாஹ்விற்காக பொருள் தியாகம் செய்வதிலும் எத்தகைய முன்மாதிரியை காட்டியுள்ளனர் என்றால் அவற்றிற்கு நிகராக வேறு எதையும் நம்மால் கூற முடியவில்லை.
-மவ்லானா அதாவுல் முஜீப் சாஹிப் ராஷித் (இலண்டன் ஃபஸ்ல் பள்ளிவாயிலின் இமாம்)
நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None