நபிமொழிகள்:
சில திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து நமது நேசத்திற்குரிய எஜமானர் ஹஸ்ரத் காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் கூறிய கட்டளைகளிலிருந்து அருளையும் வழிகாட்டலையும் நாம் பெற வேண்டும். பெருமானார் (ஸல்) அவர்கள் எந்த மனிதரிடமிருந்தும் அறிவைக் கற்றுக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்துள்ள இறைவன் சுயமே அவர்களின் ஆசிரியராக இருந்தான். உண்மையான ஆசிரியன் அவர்களுக்கு எந்த அளவு அறிவுகளையும் ஞானங்களையும் கற்றுக் கொடுத்தான் என்றால் அதன் காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் முழு உலகிற்கும் வழிகாட்டக் கூடியவர்களாக ஆகி விட்டார்கள். பொருள் தியாகம் தொடர்பாகவும் அவர்கள் தமது சமுதாயத்திற்கு ஈடிணையற்ற வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள். முன்மாதிரியாக சில கட்டளைகளை நான் உங்கள் முன்னால் வைக்கின்றேன். அன்னாரது ஒவ்வொரு கட்டளையும் கவனத்துடன் படிப்பதற்கும் நினைவில் வைப்பதற்கும் தகுதியுள்ளவையாக இருக்கின்றன.
ஒரு ஹதீஸே குத்ஸியில் இவ்வாறு வருகின்றது. அல்லாஹ் இவ்வாறு கூறுவதாக பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஆதமின் மகனே! நீ திறந்த உள்ளத்துடன் இறைவனின் வழியில் செலவு செய்வாயாக! அல்லாஹ்வும் உனக்காக செலவு செய்வான். (முஸ்லிம் கிதாபுஸ் ஸகாத் ஹதீஸ் எண் 2308. பாபுல் ஹஸ்ஸி அலன்னஃபகதி வ தஃப்ஸீருல் முஅல்லகி பில்ஹல்ஃப)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த மனிதனுக்கு அல்லாஹ் பொருளை வழங்கி, பிறகு அந்தப் பொருளை அதற்குரிய சரியான இடத்தில் செலவு செய்வதற்குமுரிய வழக்கத்திற்கு மாற்றமான நல்வாய்ப்பையும் தைரியத்தையும் வழங்கியுள்ளானோ அந்த மனிதன் பெருமிதம் கொள்வதற்குத் தகுதி உடையவனாக இருக்கின்றான்." (புகாரி கிதாபுஸ் ஸக்காத். பாபு இன்ஃபாக்குல் மாலிஃபீ ஹக்கிஹி)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரிடம் அதிகமாக செல்வம் இருக்கின்றதோ அவர் செல்வந்தர் அல்ல. மாறாக, எவர் உள்ளத்தால் தன்னிறைவு பெற்றவராக இருக்கின்றாரோ அதாவது இறைவனின் வழியில் மனந்திறந்து செலவு செய்கின்றாரோ அவரே உண்மையான செல்வந்தர் ஆவார்." (திர்மிதி அப்வாபுஸ் ஸுஹத் பாபு மாஜாஅ அன் அல்கினா கினன் நஃப்ஸி)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த நபர் அல்லாஹ்வின் வழியில் சிறிது செலவு செய்கின்றாரோ அவருக்கு அதற்குப் பகரமாக எழுநூறு மடங்கு அதிகமாக நற்கூலி கிடைக்கின்றது." (திர்மிதி பாபு ஃபஸ்லின் நஃபகதி ஃபீ ஸபீலில்லாஹி)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மைகளின் எல்லா கதவுகளையும் விட சிறந்த கதவு ஸதகா கொடுப்பதும் தான தருமங்கள் கொடுப்பதும் ஆகும்." (அல்முஃஜமுல் கபீரி லில் கைராத்தி ரகமுல் ஹதீஸ் 12663. கன்ஸுல் உம்மால் ரகமுல் ஹதீஸ் 16015)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், அல்லாஹ்வே! இறைவழியில் செலவு செய்பவருக்கு சிறந்த நற்கூலியை வழங்குவானாக. அவரது அடிச்சுவட்டில் செல்கின்ற வேறு மக்களையும் உருவாக்குவாயாக என்று கூறுகின்றனர். இன்னொருவர், அல்லாஹ்வே! பொருளை தடுத்து வைத்துக் கொள்பவனுக்கு அழிவையும் நாசத்தையும் விதித்து விடுவாயாக என்று கூறுகின்றார்." (புகாரி கிதாபுஸ் ஸகாதி பாபு கவ்லுல்லாஹித்தஆலா ஃபஅம்மா மன்அஃதா வத்தகா)
(எந்த மக்கள் நல்ல சந்ததிகளின் அருளைப் பெறாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு இந்த நபிமொழியில் ஒரு மகத்தான போதனை இருக்கின்றது. சோதித்துப் பார்ப்பவர்களே! இந்த மருந்தையும் சோதித்துப் பாருங்கள்.)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த பொருளை இறைவழியில் செலவு செய்து முன்னே அனுப்பி வைத்து விட்டீர்களோ அதுவே உங்களது அசல் பொருளாகும். எது பின்னால் எஞ்சியிருக்கின்றதோ அது வாரிசுகளின் பொருளாகும்." (முஸ்லிம் கிதாபுஸ் ஸக்காதி பாபு பயானி அன் அஃப்ஸலுல் ஸதகதி அஸீஹுஸ்ஸேகி ஹதீஸ் எண் 2383)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் மனிதர் ஸதகா கொடுப்பது வாழ்நாளை அதிகரிக்கின்றது. மேலும், தீய மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது." (கன்ஸுல் உம்மால் ரகமுல் ஹதீஸ் 16062)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை இருக்கின்றது. எனது சமுதாயத்திற்குரிய சோதனை செல்வமாகும்." (திர்மிதி கிதாபுஸ் ஸுஹது பாபு மாஜா அன்னஃபகதி ஹாதிஹில் உம்மத்தி ஃபில் மாலி)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் வழியில் எண்ணி எண்ணி செலவு செய்யாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உங்களுக்கு எண்ணி எண்ணியே தருவான். உங்களது பணப்பையின் வாயை கருமித்தனத்தின் காரணமாக திறக்காமல் அடைத்து வைத்து விட்டு அமர்ந்து விடாதீர்கள். பிறகு, அது திறக்காமலேயே வைக்கப்பட்டு விடும். எந்த அளவு சக்தி இருக்கின்றதோ அந்த அளவு மணம் திறந்து செலவு செய்யுங்கள். (புகாரி கிதாபுஸ் ஸகாத்தி பாபுத் தஹ்ரீஸி அலஸ்ஸதகதி வஷ்ஷபாஅதி ஃபீஹா அய்ஸன் பாபுஸ் ஸதகதி ஃபீமஸ்ததாயி)
திருக்குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளில் இருந்தும் கிடைக்கின்ற இந்த வழிகாட்டல்கள் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அதாவது, மார்க்கத் தேவைகளுக்காக செய்யப்படும் பொருள் தியாகமானது இறை நெருக்கம் மற்றும் இறை விருப்பம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உறுதியான வழியாகும். இந்த பொருள் தியாகங்களின் விளைவாக ஒருபுறம் தியாகங்கள் செய்பவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைக்கின்றது. மறுபுறம் அத்தகைய கலப்பற்ற தூய உள்ளம் கொண்ட அடியார்களுக்கு கருணைமிக்க இறைவன் இவ்வுலகிலேயே வழங்க ஆரம்பித்து விடுகின்றான். தன் தரப்பிலிருந்து அவர்களது பைகளை அருள்களால் நிரப்பி விடுகின்றான். கணக்கில்லாமல் அவர்களுக்கு வழங்குகின்றான். அவர்களது துன்பங்களையும் கவலைகளையும் அகற்றுகின்றான். அவர்களது வாழ்க்கையில் அருள்களை வழங்குகின்றான். அது மட்டுமல்ல. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலேயே சுவர்க்கத்திற்குரிய சூழலை வழங்குகின்றான். சுயமே அவர்களது தேவைகளை நிறைவேற்ற அவனே போதுமானவனாக இருக்கின்றான். இறைவனின் வழியில் பொருள் தியாகங்கள் செய்பவர்களுக்கு மறுமையில் சுவர்க்க்ததைப் பற்றிய உறுதியான வாக்குறுதியை உண்மையான வாக்குறுதியை வழங்குகின்ற இறைவன் வழங்கியுள்ளான். எவ்வகையிலும் அவனது வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சில மேற்கோள்கள்:
ஸய்யிதுனா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது எழுத்துக்களிலும் மல்ஃபூஸாத்திலும் அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் செய்வது தொடர்பாக மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்கள். மேலும், மீண்டும் மீண்டும் தம்மை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அதன் முக்கியத்துவம், பலன்கள், அதன் அவசியம் ஆகியவை தொடர்பாக தெரிவித்தவாறு இந்த வழியில் மேலும் முன்னேறிச் செல்வதற்கு போதனை செய்துள்ளார்கள். இந்த விரிவான கருவூலத்திலிருந்து நான் சில முன்மாதிரிகளை உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன். அறிவு, ஞானம் மற்றும் ஆன்மீக தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வலுவான கட்டளைகளுக்கு மிகவும் மகத்தான அந்தஸ்து இருக்கின்றது. இந்த சொற்களுக்கு தங்களது உள்ளங்களில் இடமளிக்கின்ற அத்தகைய உள்ளங்களின் தேவை இருக்கின்றது.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: "அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90)
உண்மையிலேயே உணவளிப்பவன் இறைவனாக இருக்கின்றான். எந்த நபர் அவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் ஒருபோதும் ரிஸ்கிலிருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார். அவன் எல்லா வகையிலும் ஒவ்வோர் இடத்திலிருந்தும் தன் மீது நம்பிக்கை வைக்கின்ற நபருக்கு ரிஸ்கை எட்ட வைக்கின்றான். என் மீது நம்பிகை வைப்பதற்கு நான் வானத்திலிருந்து பொழிவேன். அவர்களது பாதங்களிலிருந்து (தேவைப்படுபவற்றை) வெளியில் வரச் செய்வேன் என்று இறைவன் கூறுகின்றான். எனவே, ஒவ்வொரு நபரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 9 பக்கம் 390)
எந்த நபர் முக்கியமான பணிகளுக்காக பொருளைச் செலவு செய்கின்றாரோ அவர் பொருளைச் செலவு செய்வதால் அவரது பொருளில் குறைவு ஏற்பட்டு விடும் என்று என்னால் நம்ப முடியாது. மாறாக, அவரது பொருளில் அபிவிருத்தி ஏற்படும். எனவே, இறைவன் மீது நம்பிக்கை வைத்தவாறு முழுமையான நல்லொழுக்கத்துடனும், எழுச்சியுடனும், தைரியத்துடனும் இவ்வழியில் செயலாற்ற வேண்டும். இதுவே தொண்டு செய்வதற்கான நேரமாக இருக்கின்றது. இதற்குப் பிறகு அந்த நேரம் வரவிருக்கின்றது. அப்போது தங்க மலையையே இவ்வழியில் செலவு செய்தாலும் இந்த நேரத்தில் செலவு செய்யப்படும் பைசாக்களுக்கு சமமாக அது இருக்காது. எனவே, இறைவன் தொடர்ச்சியாக எனக்கு இதனை வெளிப்படுத்திக் காட்டியுள்ளான். அதாவது, உண்மையாகவும் உறுதியாகவும் தமது பிரியத்திற்குரிய பொருளை இவ்வழியில் செலவு செய்பவரே இந்த ஜமாஅத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். நீங்கள் இரண்டு பொருள்களை நேசிக்க முடியாது என்பது வெளிப்படையான விஷயமாகும். நீங்கள் பொருளையும் நேசித்து இறைவனையும் நேசிப்பது என்பது உங்களால் சாத்தியமற்றதாகும். ஒன்றை மட்டுமே நீங்கள் நேசிக்க முடியும். எனவே, இறைவன் மீது அன்பு கொள்கின்ற அந்த நபர் நற்பாக்கியம் பெற்றவர் ஆவார். உங்களில் எவர் இறைவன் மீது நேசம் வைத்தவாறு தனது பொருளை அவனது வழியில் செலவு செய்வாரோ அவரது பொருளில் மற்றவர்களை விட அதிகம் பரக்கத் வழங்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஏனென்றால், செல்வம் தானாக வருவதில்லை. மாறாக, அது இறைவனின் நாட்டப்படியே வருகின்றது. எனவே, எந்த நபர் இறைவனுக்காக தனது செல்வத்தின் சில பகுதிகளை விட்டு விடுகின்றாரோ அவர் கண்டிப்பாக அதைப் பெற்றுக் கொள்வார். ஆனால், எவர் செல்வத்தின் மீது நேசம் வைத்து இறைவனின் வழியில் அவர் செய்ய வேண்டிய தொண்டை செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கண்டிப்பாக அந்த செல்வத்தை இழந்து விடுவார்.
எண்ணாதீர்கள். மாறாக, உங்களை இந்த தொண்டிற்காக அழைத்திருப்பது அவனது அருளாகும். நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். இறைவன் உங்களது தொண்டுகளுக்கு அணுவளவு கூட தேவையுடையவன் அல்ல. எனினும் உங்களுக்கு தொண்டு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பது அவன் உங்கள் மீது செய்திருக்கும் அருளாகும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 496-497)
"கருமித்தனமும் ஈமானும் ஒரே உள்ளத்தில் ஒன்று சேர முடியாது என்று நான் உறுதியாகக் கருதுகின்றேன். எந்த நபர் உண்மையான உள்ளத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் தனது பெட்டியில் அடைப்பட்டுக் கிடக்கின்ற அந்த செல்வத்தை மட்டும் தனது செல்வமாகக் கருதுவதில்லை. மாறாக, அவர் மேலான இறைவனின் எல்லா கருவூலங்களையும் தமது கருவூலங்களாகக் கருதுகின்றார். இதனால் ஒளியினால் இருள் விலகுவது போன்று செல்வத்தை தடுத்து வைக்கும் நிலை அவரை விட்டு விலகிச் சென்று விடுகின்றது. நீங்கள் ஏதாவதொரு நன்மையான பணியைச் செய்வீர்கள் என்றால், அந்த நேரத்தில் ஏதாவது தொண்டு செய்தால் அதன் மூலம் உங்களது ஈமானில் சாட்சி முத்திரையைப் பதிக்கின்றீர்கள். உங்களது வாழ்நாள் இதனால் அதிகரிக்கும். உங்களது செல்வங்களில் அருள் வழங்கப்படும்." (மஜ்முஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 498)
"நமது பார்வையில் இன்று மிகப்பெரும் தேவையாக இருப்பது இஸ்லாத்தின் வாழ்வாகும். இஸ்லாம் எல்லா வகையான தொண்டிற்கும் தேவையுடையதாக இருக்கின்றது. அதன் தேவையை விட வேறு எந்த தேவைக்கும் நாம் முன்னுரிமை வழங்க முடியாது. இன்று மிகப்பெரும் தேவை நம்மால் இயன்ற வரை இஸ்லாத்திற்குத் தொண்டு செய்வதாகும். எந்த அளவு ரூபாய்கள் இருக்கின்றதோ அவற்றை இஸ்லாத்தை உயிர்பிப்பதற்காகச் செலவு செய்ய வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 327)
"தம்மை பைஅத் செய்தவர்களில் ஒருவராகக் கருதுகின்ற ஒவ்வொரு நபரும் தமது செல்வத்தின் மூலமாகவும் இந்த இயக்கத்திற்குத் தொண்டு செய்வதற்கான நேரம் இப்போது வந்து விட்டது. பைஅத் செய்துள்ள ஒவ்வொருவரும் தனது விரிவான நிலைமைக்கு ஏற்ப உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைவனும் அவருக்கு உதவுவான். ஒவ்வொரு நபரது உண்மையும் அவரது தொண்டின் மூலமாக அடையாளங்கண்டு கொள்ளப்படும். அன்பர்களே! இது மார்க்கத்திற்காகவும் மார்க்கத்தின் நோக்கங்களுக்காவும் தொண்டு செய்ய வேண்டிய நேரமாகும். இதனை அரிதாகக் கருதுங்கள். பிறகு ஒருபோதும் இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காது." (கிஷ்தி நூஹ். ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 83)
"செல்வத்தை நேசிக்காதீர்கள். ஏனென்றால், அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது. அப்போது நீங்கள் செல்வத்தை விடாமல் இருந்தாலும் அது உங்களை விட்டு விடும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 318)
ஸய்யிதுனா ஹஸ்ரத் அமீருல் முஃமினீன் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இந்தக் காலம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலமாகும். இதில் ஒரு ஜிஹாது, பொருள் தியாகத்தின் ஜிஹாதாகவும் இருக்கின்றது. ஏனென்றால், இது இல்லாமல் இஸ்லாத்தைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் நாம் பிரசுரங்களை வெளியிடவும் முடியாது. திருக்குர்ஆனை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யவும் முடியாது. இந்த மொழியாக்கங்களை உலகின் மூலைகள் வரை எட்ட வைக்கவும் முடியாது. பிரச்சார நிலையங்களை திறக்க முடியாது. முபல்லிக்குகளையும், முரப்பிகளையும் உருவாக்க முடியாது. அந்த முரப்பிகளையும் முபல்லிக்களையும் ஜமாஅத்துகளுக்கு அனுப்பி வைக்க முடியாது. பள்ளிவாயில்களைக் கட்ட முடியாது. பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் ஏழை மக்கள் வரை கல்விக்கான வசதிகளை எட்ட வைக்க முடியாது. மருத்துவமனைகள் மூலம் துக்கத்தில் இருக்கின்ற மனிதர்களுக்கு தொண்டு செய்ய முடியாது. எனவே, எதுவரை உலகின் எல்லா எல்லைகள் வரையிலும், ஒவ்வோர் எல்லையிலும் இருக்கின்ற ஒவ்வொரு நபர் வரையிலும் இஸ்லாத்தின் தூதுச் செய்தி எட்டாமல் இருக்கின்றதோ, எதுவரை ஏழைகளின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றதோ அதுவரை இந்த பொருள் தியாகத்தின் ஜிஹாது நீடிக்கும். மேலும், தத்தமது வசதிக்கேற்பவும் வளமான நிலைமைக்கேற்பவும் ஒவ்வோர் அஹ்மதியும் இந்த ஜிஹாதில் பங்கு பெற வேண்டியது அவரது கடமையாக இருக்கின்றது." (குத்பா ஜுமுஆ 31 மார்ச் 2006; இலண்டனிலிருந்து வெளிவரும் அல்ஃபஸ்ல் பத்திரிக்கையில் 21 ஏப்ரல் 2006-ல் அதன் 6 -வது பக்கத்தில் இந்த குத்பா அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது)
-மவ்லானா அதாவுல் முஜீப் சாஹிப் ராஷித் (இலண்டன் ஃபஸ்ல் பள்ளிவாயிலின் இமாம்)
நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None