நமது தலைமுறையை ஒன்று பாதுகாக்குமென்றால்‌ அது திருக்குர்‌ஆன்‌ தான்‌

நமது தலைமுறையை ஒன்று பாதுகாக்குமென்றால்‌ அது திருக்குர்‌ஆன்‌ தான்‌

 

நான்‌ ஆராய்ந்தவரை, தினசரி திருக்குர்‌ஆன்‌ ஓதப்படுகின்ற வீடுகள்‌ மிகவும்‌ குறைவுதான்‌. காலையில்‌ எழுந்தவுடன்‌ சுப்ஹ்‌ தொழுகைக்குப்‌ முன்னர்‌ அல்லது சுப்ஹ்‌ தொழுகைக்கு பின்னர்‌ திருக்குர்‌ஆன்‌ ஓதுகின்ற குழந்தைகள்‌ மிக அரிதாகக்‌ காணப்படுவார்கள்‌. இந்த ஆய்வை நான்‌ குடும்ப சந்திப்புகளின்‌ போது செய்தேன்‌.

பெரும்பாலான குழந்தைகளுக்கு சுப்ஹ்‌ நேரத்தில்‌ குர்‌ஆன்‌ ஓதுவது பற்றி எதுவும்‌ தெரியாதவர்களாகக்‌ கண்டேன்‌. நமது தலைமுறைகளை ஒன்று பாதுகாக்கும்‌ என்றால்‌ அது திருக்குர்‌ஆன்தான்‌ என்ற அடிப்படை உண்மையின்‌ பக்கம்‌ நாம்‌ கவனம்‌ செலுத்த வில்லையென்றால்‌, நான்‌ விளக்கி வருகின்ற தர்பிய்யத்‌ விஷயங்கள்‌ அனைத்தும்‌ அர்த்தமற்றவை யாகிவிடுகின்றன.

திருக்குர்‌ஆனில்‌ இரண்டு விஷயமும்‌ இருக்கின்றது. அதில்‌ நேர்வழியும்‌ இருக்கின்றது; சிலருக்கு நேர்வழி இல்லாமலும்‌ போய்விடுகின்றது. எவர்கள்‌ இறையச்சத்தை மேற்கொள்வார்களோ அவர்களுக்கு நேர்வழி இருக்கின்றது. எவர்கள்‌ இறையச்சத்தை மேற்‌கொள்வதில்லையோ அவர்களுக்கு (ஸாலிகல்கிதாப்‌) திருக்குர்‌ஆன்‌ வெகு தூரத்திலிருக்கும்‌ வேதமாக இருக்கும்‌. வெளிப்படையில்‌ அவர்களுக்கு முன்னால்‌ அவர்களை விட்டும்‌ வெகுதூரம்‌ விலகி நிற்கும்‌. இறைவேதம்‌ அருகில்‌ வராதவரை இவ்வுலகத்தின்‌ பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட முடியாது.

எனவே, திருக்குர்‌ஆனைக்‌ கற்றுக்‌ கொடுப்பதில்‌ கண்டிப்புடன்‌ இருத்தல்‌, திருக்குர்‌ஆனை ஓதுவதிலிருந்து இதை ஆரம்பித்தல்‌ மிகவும்‌ முக்கியமானதாகும்‌. ஆயினும்‌ ஓதுவதுடன்‌, அரபிமொழியைப்‌ பற்றி அதிகம்‌ அறியாதவர்களாகிய இந்த சமுதாயத்தினர்‌ அதன்‌ பொருளையும்‌ படிக்க வேண்டும்‌. பொருள்‌ சொல்லிக்‌ கொடுப்‌பதற்கு என்று ஜமாஅத்‌ அமைப்பின்‌ பல்வேறு ஏற்பாடுகள்‌ செயல்பாட்டில்‌ உள்ளன.

எனினும்‌, அதன்மூலம்‌ பயன்பெறுபவர்‌கள்‌ மிகக்‌ குறைவுதான்‌. எனவேதான்‌ நாங்கள்‌ இந்த இடத்தில்‌ திருக்குர்‌ஆன்‌ வகுப்பை ஆரம்பித்திருக்கிறோம்‌ என்ற அறிக்கைகளை படிக்கும்போது இந்த வகுப்பினால்‌ ஆண்டு முழுவதும்‌ எத்தனை பேர்‌ பயன்‌ அடைந்திருப்பார்கள்‌? என்பதைப்‌ பற்றி நான்‌ ஆச்சரியப்பட்டு பார்க்கிறேன்‌. அப்படியே பயன்‌ அடைந்தார்கள்‌ என்றாலும்‌ சில நாட்கள்‌ பயன்‌ அடைந்துவிட்ட பிறகு அந்த பயனை வீணாக்குவதில்‌ மற்ற நேரங்களை கழித்து விடுகின்றார்கள்‌. எந்த குழந்தைகளுக்கு திருக்குர்‌ஆனை கற்றுக்கொடுக்க நீங்கள்‌ முயற்சி செய்தீர்களோ அவர்களிடம்‌ சில நாட்களுக்குப்‌ பிறகு கேட்டுப்‌ பார்த்தால்‌ அவர்கள்‌ கற்ற அனைத்தையும்‌ மறந்துவிட்டதை காண்பீர்கள்‌. இதற்கு முக்கியக்‌ காரணம்‌, நமது பெரியவர்கள்‌ திருக்குர்‌ஆனின்‌ பக்கம்‌ முழுக்கவனம்‌ செலுத்தவில்லை. நம்மில்‌ அதிகமான பருவமடைந்த ஆண்கள்‌ மார்க்கப்‌ பற்றைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ திருக்குர்‌ஆனின்‌ மீது பற்றுக்‌ கொள்ளாமல்‌ மார்க்கத்தில்‌ பற்றுக்‌ கொள்ளுதல்‌ என்பதில்‌ எந்த அர்த்தமும்‌ இல்லை என்பது அவர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. தற்காலிகமாக பலன்கள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ மார்க்கத்துடன்‌ பற்றுள்ளவர்களாக இருத்தல்‌ மார்க்கத்திற்காக உழைத்தல்‌ அவர்களை ஒன்று சேர்த்து திருக்குர்‌ஆனின்‌ பக்கம்‌ கொண்டு வருதல்‌ ஆகியவைதான்‌ அந்தப்‌ பலன்களின்‌ உயர்ந்த குறிக்கோளாகும்‌.

இந்தப்‌ பலன்கள்‌ இல்லையென்றால்‌ அது வீணானவையாகும்‌. ஏனெனில்‌ திருக்குர்‌ஆனைப்‌ பற்றிய முதல்‌ அறிமுகம்‌ ஸாலிகல்‌ கிதாப்‌ (இது அந்த வேதம்‌) என்பதுதான்‌. அதாவது எந்த வேதத்தை சமுதாயங்கள்‌ எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்தனவோ அந்த வேதம்‌. உலகம்‌ தோன்றிய நாளிலிருந்து மனிதகுலம்‌ இந்த வேதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால்‌ இது வந்ததும்‌ எத்தனை பேர்‌ புறமுதுகு காட்டிச்‌ சென்று விட்டார்கள்‌! ஹஸ்ரத்‌ முஹம்மது முஸ்தஃபா (ஸல்‌) அவர்களைப்‌ பற்றி திருக்குர்‌ஆன்‌ கூறுகிறது. என்‌ இறைவா! என்னுடைய சமுதாயம்‌ இந்தக்‌ குர்‌ஆனை கைவிடப்பட்ட ஒரு வேதத்தைப்‌ போன்று விட்டுவிட்டார்கள்‌ என்று இந்த ரசூல்‌ முறையீடு செய்வார்‌. (25:31) இறைவா! என்னுடைய சமுதாயம்‌ என்று கூறப்படுகின்ற இந்த சமுதாயம்‌ இந்தக்‌ குர்‌ஆனை தம்‌ முதுகுக்குப்‌ பின்னால்‌ தூக்கி எறிந்துவிட்டார்களே! என்று எவர்களைப்‌ பற்றி ஹஸ்ரத்‌ ரசூல்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுவார்களோ அந்த சமுதாயமாக நீங்கள்‌ மாறவேண்டாம்‌.

எனவே, இது முக்கியமான ஒன்றாகும்‌. மேலும்‌ இறைவணக்கத்தின்‌ உயிர்‌ திருக்குர்‌ஆன்‌ ஆகும்‌. இறைவணக்கத்திற்கு முன்னரும்‌ திருக்குர்‌ஆன்தான்‌ இருக்கிறது. அதாவது தஹஜ்ஜுத்‌ நேரத்தில்‌ முடிந்த அளவுக்கு திருக்குர்‌ஆன்‌ ஓதுங்கள்‌ என திருக்குர்‌ஆன்‌ கூறுகிறது. தொழுகையிலும்‌ திருக்குர்‌ஆன்தான்‌ ஓதப்படுகிறது. தொழுகைக்குப்‌ பிறகும்‌ திருக்குர்‌ஆன்‌ ஓதப்படுகின்றது. எனவே, திருக்குர்‌ஆனை ஓதும்‌ பழக்கத்தை உருவாக்குதல்‌ அதன்‌ பொருள்களை கவனிக்குமாறு கற்றுக்‌ கொடுத்தல்‌ ஆகிய இவை தர்பிய்யத்தின்‌ அடிப்படைத்‌ தேவையும்‌ தர்பிய்யத்தின்‌ திறவுகோலும்‌ ஆகும்‌. இது இல்லாமல்‌ தர்பிய்யத்‌ நடக்கவே முடியாது.

(நான்காவது கலீஃபதுல்‌ மஸீஹ்‌ ஹஸ்ரத்‌ மிர்ஸா தாஹிர்‌ அஹ்மது (ரஹிமஹுல்லாஹ்‌) அவர்கள்‌ 4-7-97 அன்று கனடாவில்‌ ஆற்றிய ஜுமுஆ பேருரையிலலிருந்து எடுக்கப்பட்டது)

-மன்சூர்‌ அஹ்மது

நன்றி: நபிவழி மாத இதழ்

1 கருத்து:

  1. திருக்குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) கூறியிருக்கின்றார்கள் எனவே தினந்தோறும் அதிகாலையில் திருக்குர்ஆன் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.நானும் எனது குடும்பத்தினரும் இதனை தினந்தோறும் கடைபிடித்து வருகின்றோம் எனவேதான் இதனை நான் உங்களிடம் கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.