வசனம் 11
وَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ
اُنۡزِلَ اِلَیۡکَ وَ مَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ وَ بِالۡاٰخِرَۃِ ہُمۡ
یُوۡقِنُوۡنَ
உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வர். இனிமேல் வரக்கூடிய (வாக்களிக்கப்பட்ட) வற்றின் மீதும் உறுதியாக நம்புவர். [வசனம் 2:5]
ஆதாரம்: இந்த வசனம் எல்லாம்
வல்ல இறைவனின் இறை அறிவிப்புகளை பற்றி பேசுகின்றது இறையச்சம் உடையவர்கள் மூன்று
வகையான இறை அறிவிப்புகளின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்
ஒன்று திருக்குர்ஆனின் இறை அறிவிப்புகள் அதாவது உம்மீது இறக்கப்பட்டதின் மீது என்பதாகும்.
இரண்டாவது திருக்குர்ஆனுக்கு முன்னால் இறக்கப்பட்ட இறை அறிவிப்புகள் ‘உமக்கு முன் இறக்கப்பட்டது’ என்பதாகும்.
மேலும் மூன்றாவது திருக்குர்ஆனிற்குப் பிறகு வரக்கூடிய இறை அறிவிப்புகள் ‘இனிமேல் வரவிருப்பவை’ ஆகும் இந்த வகையில் உள்ளவைதான் ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறை அறிவிப்புகள் ஆகும்.
வசனம் 12
اَللّٰہُ یَصۡطَفِیۡ مِنَ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا وَّ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ
அல்லாஹ் வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகக் கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான் [22:76]
ஆதாரம்: தனது தூதர்களை அனுப்புவது என்பது எல்லாம் வல்ல இறைவனின்
வழக்கமாகும் மேலும் இந்த வழக்கம் நின்றுவிடவில்லை இந்த வசனத்தில் உபயோகப்படுத்தப்
பட்டுள்ள வார்த்தையான யஸ்த்தஃபீ என்பது அரபியில் ஃபெய்ல் முதாரீ என்று அழைக்கப்படும்
அதாவது இந்தச் சொல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கக்கூடிய ஒரு
சொல்லாகும். எனவே எதிர்காலத்திலும் கூட இறைவன் ஒருவேளை மக்களை திருத்துவதற்காக
மேலும் அவர்களை நேர்வழியில் வழி நடத்துவதற்காக அவன் தனது தூதர்களை அனுப்ப விரும்பினால்
அவன் அவ்வாறே செய்வான். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களைக் குறித்த
முன்னறிவிப்புகள் ஒரு காலத்தைக் குறித்து பேசுகின்றன. அக்காலத்தில் மக்கள்
நேர்வழியை விட்டும் விலகிச் சென்று விடுவதால் அன்னாருடைய வருகைக்கான ஒரு தேவை
ஏற்படும்.
வசனம் 13
وَ جَآءَ مِنۡ اَقۡصَا الۡمَدِیۡنَۃِ رَجُلٌ یَّسۡعٰی قَالَ یٰقَوۡمِ اتَّبِعُوا الۡمُرۡسَلِیۡنَ ﴿ۙ۲۱﴾ اتَّبِعُوۡا مَنۡ لَّا یَسۡـَٔلُکُمۡ اَجۡرًا وَّ ہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۲۲﴾ وَ مَا لِیَ لَاۤ اَعۡبُدُ الَّذِیۡ فَطَرَنِیۡ وَ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۳﴾ ءَاَتَّخِذُ مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً اِنۡ یُّرِدۡنِ الرَّحۡمٰنُ بِضُرٍّ لَّا تُغۡنِ عَنِّیۡ شَفَاعَتُہُمۡ شَیۡئًا وَّ لَا یُنۡقِذُوۡنِ ﴿ۚ۲۴﴾ اِنِّیۡۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۵﴾ اِنِّیۡۤ اٰمَنۡتُ بِرَبِّکُمۡ فَاسۡمَعُوۡنِ ﴿ؕ۲۶﴾ قِیۡلَ ادۡخُلِ الۡجَنَّۃَ ؕ قَالَ یٰلَیۡتَ قَوۡمِیۡ یَعۡلَمُوۡنَ ﴿ۙ۲۷﴾ بِمَا غَفَرَ لِیۡ رَبِّیۡ وَ جَعَلَنِیۡ مِنَ الۡمُکۡرَمِیۡنَ ﴿۲۸﴾ وَ مَاۤ اَنۡزَلۡنَا عَلٰی قَوۡمِہٖ مِنۡۢ بَعۡدِہٖ مِنۡ جُنۡدٍ مِّنَ السَّمَآءِ وَ مَا کُنَّا مُنۡزِلِیۡنَ ﴿۲۹﴾ اِنۡ کَانَتۡ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً فَاِذَا ہُمۡ خٰمِدُوۡنَ ﴿۳۰﴾ یٰحَسۡرَۃً عَلَی الۡعِبَادِ ۚؑ مَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۳۱﴾
அந்த நகரத்தின் தொலைவிலுள்ள பகுதியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, என்
சமுதாயத்தினரே! தூதர்களைப் பின்பற்றுங்கள் என்றார்.
உங்களிடம் எந்தக் கூலியும் கேட்காதவர்களும், நேர்வழி பெற்றவர்களுமாகிய இவர்களைப் பின்பற்றுங்கள்.
என்னைப் படைத்தவனை நான் வணங்காமலிருக்க, எனக்கு என்ன நேர்ந்தது? மேலும் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
அவனையன்றி, மற்றவர்களை நான் கடவுளராக எடுத்துக் கொள்வேனா? அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் எனக்கு எந்தத் தீங்கையாவது நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது; அவர்களால் (அத் தீங்கிலிருந்து) என்னைக் காப்பாற்றவும் இயலாது.
அந்நிலையில் நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில் இருப்பேன்.
நான், உங்கள் இறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நான் சொல்வதைக் (கவனமாகக்) கேளுங்கள்.
(அப்பொழுது அவரிடம்) நீர் சுவர்க்கத்தில் நுழைவீராக என்று கூறப்பட்டது. இதற்கு அவர் கூறினார்: அந்தோ! என் சமுதாயம் அறிந்திருக்க வேண்டுமே!
அதாவது என் இறைவன் எவ்வாறு என்னை மன்னித்து, என்னைக் கண்ணியத்திற்குரியவர்களைச் சேர்ந்தவனாக ஆக்கியுள்ளான் (என்பதனைத் தெரிந்திருக்க வேண்டுமே).
நாம் அவருக்குப் பின்னர், அவரது சமுதாயத்தினருக்கெதிராக வானத்திலிருந்து எந்தப் படையையும் இறக்கவில்லை; (அவ்வாறான படையை) நாம் இறக்குவதுமில்லை.
பயங்கரமான ஒரு வெடிப்பே ஏற்பட்டது. அந்தோ! அவர்கள் அழிந்தே விட்டனர்.
(நிராகரிக்கும்) அடியார்களின் பரிதாபமே! எந்தத் தூதர் அவர்களிடம்
வந்தாலும், அவர்கள் அவரை ஏளனத்திற்குள்ளாக்கவே செய்கின்றனர். [36: 21-31]
ஆதாரம்: இந்த திருக்குர்ஆனின் இந்த பகுதி ஒரு மனிதரை அதாவது ரஜூலை குறித்துப் பேசுகின்றது இங்கு மறைவாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை எம்பெருமானார் (ஸல்) அவர்களும் நாம் மேலே குறிப்பிட்ட வசனம் 7 தொடர்பாக ரஜுல் என்று அழைத்துள்ளார்கள். திருக்குர்ஆனின் ஐந்து தொகுதிகளை கொண்ட விரிவுரையில், திருக்குர்ஆனின் சூரா யாஸீனின் இந்த பகுதியில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தொடர்பாக கூறப்பட்டது பற்றி கீழ்காணும் குறிப்புகள் பதியப்பட்டுள்ளன.
இந்த நகரம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நகரத்தை குறிப்பிடலாம் (36:14)
தொலைவில் உள்ள பகுதி என்று சொல்லப்படக்கூடிய வார்த்தை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மக்காவிலிருந்து வெகுதூரத்தில் தோன்றுவார்கள் என்பதை குறிக்கின்றது.
யஸ்ஆ என்ற சொல் முயற்சி அல்லது போராடுதல் என்பதை குறிக்கிறது. இது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக மகத்தான முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என்பதனை குறிக்கின்றது.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் உலக மக்களை அனைத்து தூதர்களின் உண்மையையும் ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பார்கள் என்று 36:21 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
36:23-இல் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் அன்னார் எல்லாம் வல்ல இறைவனுக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர்களாக இருப்பார்கள். இது ஒவ்வொரு அஹ்மதியும் எடுக்கக்கூடிய பைஅத் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை பின்பற்றும் போது அவர் நான் மார்க்கத்திற்கு உலக விஷயங்களை விடவும் முன்னுரிமை வழங்குவேன் என்று வாக்குறுதி எடுத்துக்கொள்கிறார்
36:24-ல் குறிப்பிட்டுள்ளபடி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் மக்கள் பிற கடவுள்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள்.
36:26-ல் குறிப்பிட்டுள்ளபடி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மக்களை இறைவன் புறம் அழைப்பார்களே தவிர ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை போட மாட்டார்கள்.
36:27 வசனம் ஒரு சொர்க்கத்தைப் பற்றி விசேஷமாக குறிப்பிடுகின்றது. இது இறைவனுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் சுவனத்துக் கல்லறை என்ற ஒரு கல்லறையை ஏற்படுத்துவார்கள். அங்கு இறையச்சமுடைய மக்கள் அடங்க பெறுவார்கள் என்ற உண்மையை சுட்டிக்காட்டுகின்றது. அத்தகைய மக்கள் யாரென்றால் ஷரீஅத் என்னும் இறை சட்டத்தை பின்பற்றவும், மேலும் தங்களுடைய வருவாயில் பத்தில் ஒரு பங்கை இறைவழியில் செலவு செய்வதற்குமான ஒரு விசேஷமான அர்ப்பணிப்பினை அவர்கள் செய்திருப்பார்கள்.
36:30 வசனம் அணு
ஆயுதங்கள் மற்றும் பிற வகையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பற்றி
குறிப்பிடுகின்றது இவை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில்
கண்டுபிடிக்கப்படும். இவற்றின் காரணமாக மக்கள் ஒரு கணப்பொழுதில் மடிந்து விடுவார்கள்.
வசனம் 14
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ
عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ
உன் கோபத்திற்கு ஆளானவர்கள்,
வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல் நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை
நடத்துவாயாக). [1:7]
ஆதாரம்: முஸ்லிம்கள்
அல்லாஹ்வின் அருட்கொடையை தினமும் வேண்டுகிறார்கள். அந்த அருட்களில் ஒன்றே
நபித்துவம் ஆகும். முற்காலத்தில் வாழ்ந்த சமுதாயங்களுக்கு இந்த அருட்கொடை
வழங்கப்பட்டது போலவே முஸ்லிம்களுக்கும் இந்த அருட்கொடை வழங்கப்படும். இது
குறிப்பாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவருடைய காலத்தில் வெளிப்படையான ஒன்றாக
இருக்கும். ஏனென்றால் அப்பொழுது முஸ்லிம்கள் நேர்வழியில் இருந்து வழி தவறி
சென்றிருப்பார்கள் மேலும் அவர்களை நேர்வழியின் பால் அழைத்து வருவதற்கு ஒரு நபியின்
தேவை இருக்கும்.
வசனம் 15
وَ مَنۡ یُّطِعِ اللّٰہَ وَ الرَّسُوۡلَ فَاُولٰٓئِکَ مَعَ الَّذِیۡنَ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِمۡ مِّنَ النَّبِیّٖنَ وَ الصِّدِّیۡقِیۡنَ وَ الشُّہَدَآءِ وَ الصّٰلِحِیۡنَ ۚ وَ حَسُنَ اُولٰٓئِکَ رَفِیۡقًا
அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களான, நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), சித்தீக்குகள் (உண்மையாளர்கள்), ஷஹீதுகள் (உயிர்த்தியாகிகள்), ஸாலிஹீன்கள் (நல்லவர்கள்), ஆகியோரைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள். இத்தகையோர் (மிக்க) நல்ல நண்பர்களாவர். [4:70]
ஆதாரம்: இங்கு நான்கு வகையான ஆத்மீக பதவிகள் பற்றி கூறப்பட்டுள்ளது நல்லவர்கள், உயிர்த் தியாகிகள், உண்மையாளர்கள் மேலும் நபிமார்கள் இந்த வசனம் மிகத் தெளிவாக அல்லாஹ்விற்கும் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்து நடப்பவர்களுக்கு இந்த பதவிகளில் ஒரு பதவி வழங்கப்படும் என்பதை தெரிவிக்கின்றது. இன்னொரு வசனத்தில் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, எவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வார்களோ அவர்கள் இறைவனிடத்தில் உண்மையாளர்களாகவும் உயிர்த்தியாகிகளாகவும் இருப்பார்கள். [57:20] அவ்வாறு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் இந்த எல்லா பதவிகளையும் பெறுவார்கள். இதில் ஒரு நபியின் படித்தரமும் அடங்கும். இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பதவிகள், படித்தரங்கள் அனைத்தும் எவர் எம்பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவருக்கு வழங்கப்படும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் நபித்துவம் ஒரு புதிய நபித்துவம் அல்ல மாறாக அது எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்த ஒரு நபித்துவம் ஆகும். அது எம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய அருட்கொடைகளில் இருந்து பெறப்பட்டதாகும்.
வசனம் 16
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَ اِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ
இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம். [15:10]
ஆதாரம்: திருக்குர்ஆனை பாதுகாப்பேன் என்பது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அதாவது அதனுடைய பௌதீகமான தோற்றத்திலும் வார்த்தைகளிலும் மேலும் அதன் ஆத்மீக உண்மைகளையும் பாதுகாப்பேன் என்பது இறைவனின் வாக்குறுதி ஆகும். முஸ்லிம்கள் உண்மையான நேர்வழியில் இருந்து வழி தவறி சென்ற பிறகு அவர்கள் மீண்டும் இறைவனின் உண்மையான போதனைகளின் பால் திரும்ப அழைத்து வரப்படாமல் இருப்பார்கள் என்பது நடக்காத ஒன்றாகும். எனவேதான் கலீஃபாமார்கள் மற்றும் முஜத்திதீன்கள் என்னும் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் வருகையைப் பற்றி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆனின் ஆத்மீக சாரம் மற்றும் அதன் போதனைகளை பாதுகாப்பதற்காகவே அவர்களுடைய வருகை இருக்கும் 14-வது நூற்றாண்டில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வருகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த நேரத்திலேயே பல்வேறு வகையான கருத்து முரண்பாடுகள் பரவும்.
வசனம் 17
وَ وَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ جَعَلۡنَا فِیۡ ذُرِّیَّتِہِ النُّبُوَّۃَ وَ الۡکِتٰبَ وَ اٰتَیۡنٰہُ اَجۡرَہٗ فِی الدُّنۡیَا ۚ وَ اِنَّہٗ فِی الۡاٰخِرَۃِ لَمِنَ الصّٰلِحِیۡنَ
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அவரது சந்ததிகளிடையே நபித்துவத்தையும், வேதத்தையும் (அருட்கொடையாக) அளித்தோம். மேலும் இவ்வுலகிலும் அவருக்கு, அவருக்குரிய நற்பலனை வழங்கினோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களைச் சார்ந்தவராக இருப்பார். [29:28]
முஸ்லிம்கள் தினந்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ஸலவாத் என்னும் தரூது ஷரீஃபை ஓதக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஒரு நாளின் பிற நேரங்களிலும் அதனை ஓதுவதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். ஸலவாத்தின் வார்த்தைகளில் இவ்வாறு வருகின்றது;
“அல்லாஹ்வே நீ ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மற்றும் அன்னாருடைய சந்ததியினருக்கு சாந்தியையும் சமாதானத்தையும் இறக்கியது போல ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) மற்றும் அன்னாருடைய மக்களின் மீதும் சாந்தியையும், சமாதானத்தையும் இறக்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும் மிக உயர்ந்தவனாகவும் இருக்கின்றாய்.
அல்லாஹ்வே நீ ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மற்றும் அன்னாருடைய சந்ததியினருக்கு எவ்வாறு அருள் புரிந்தாயோ அவ்வாறே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) மற்றும் அன்னாருடைய மக்களின் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மிகவும் புகழுக்குரியவன் ஆகவும் மிகவும் உயர்ந்தவன் ஆகவும் இருக்கின்றாய்.”
நாம் மிகத் தெளிவாக இறைவனிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அன்னாரை உண்மையான பின்பற்றக் கூடியவர்கள் மீது அருட்கொடைகளையும் செழிப்பையும் இறக்குமாறு வேண்டுகின்றோம்.
மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களை பின்பற்றியவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடைகளில் நுபுவ்வத்து (நபித்துவம்) என்ற அருட்கொடையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அருட்கொடை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை பின்பற்றக் கூடியவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. மேலும் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய நபியாக அனுப்பப்பட்டார்கள்.
வசனம் 18
اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَ اَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ
எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி, இக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். [41:31]
ஆதாரம்: மலக்குகள் எனும் வானவர்கள் நம்பிக்கையாளர்கள் மீது இவ்வுலக வாழ்க்கையிலும் இறங்குவார்கள் என்று இந்த வசனம் தெளிவாக குறிப்பிடுகின்றது. மேலும் அத்தகைய மக்கள் இறை அறிவிப்பின் மூலம் ஆறுதல்படுத்தப்படுவார்கள் என்றும் இந்த வசனம் தெளிவாக குறிப்பிடுகின்றது. இந்த வசனத்தின் ஒளியில் நாம் இறைவன் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களிடம் பேச மாட்டான் என்று எப்படி கருத முடியும்?
வசனம் 19
وَ السَّمَآءِ ذَاتِ الرَّجۡعِ ﴿ۙ۱۲﴾ وَ الۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِ ﴿ۙ۱۳﴾
மீண்டும், மீண்டும் மழையைக் கொட்டுகின்ற மேகத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்.
(புற்பூண்டுகள் முளைக்க) வெடித்து விடுகின்ற பூமியையும் சான்றாகக் காட்டுகிறேன் [86:12-13]
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மழையை பெறாத பூமி காய்ந்து வறண்டு விடும் என்பது இறைவனின் ஓர் இயற்கை சட்டமாகும். இதுவே ஆத்மீக உலகத்திற்கும் பொருந்தும். மனிதர்கள் இறைவனுடைய இறை அறிவிப்புகளை ஒரு நீண்ட காலத்திற்கு பெறவில்லை என்றால் அவர்கள் தங்கள் வழியை தொலைத்து வழிதவறிப் போய் விடுவார்கள். சந்தேகங்கள் எழும்ப ஆரம்பித்து விடும். மேலும் அவர்கள் இறை அறிவிப்பை தொலைந்து போன ஒரு பழைய வரலாற்றின் ஒரு பகுதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே பூமியின் மீது எப்படி அடிக்கடி மழை பொழிந்து கொண்டு இருக்கின்றதோ; அவ்வாறே விண்ணிலிருந்து இறை அறிவிப்புகளை தொடர்ந்து அனுப்பி மக்களை நேர்வழியில் பாதுகாத்து வைப்பதும் இறைவனுடைய ஒரு வழிமுறையாகும்.
வசனம் 20
وَ اِذۡ قَالَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ
یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِنِّیۡ رَسُوۡلُ اللّٰہِ اِلَیۡکُمۡ مُّصَدِّقًا لِّمَا
بَیۡنَ یَدَیَّ مِنَ التَّوۡرٰٮۃِ وَ
مُبَشِّرًۢا بِرَسُوۡلٍ یَّاۡتِیۡ مِنۡۢ بَعۡدِی اسۡمُہٗۤ اَحۡمَدُ ؕ فَلَمَّا جَآءَہُمۡ
بِالۡبَیِّنٰتِ قَالُوۡا ہٰذَا سِحۡرٌ مُّبِیۡنٌ
மர்யமின் மகன் ஈஸா தன் சமுதாயத்தினரிடம், இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கூடியவனாகவும், எனக்குப் பின்னர் வரப் போகின்ற அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அ(த் தூது)வர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, இது மிகத்தெளிவான மந்திர வித்தையாகும் என்று அவர்கள் கூறினர். [61:7]
ஆதாரம்: இந்த முன்னறிவிப்பு எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பொருந்தக் கூடியதாகும். ஆனால் இயல்பான அனுமானமாக இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கும் பொருந்துகின்றது. ஏனென்றால் அன்னாருக்கு அஹ்மது என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் அன்னார் இறை அறிவிப்புகளிலும் அஹ்மது என்று அழைக்கப்பட்டு உள்ளார்கள். மேலும் அன்னாரின் மூலம் ஸூரா ஜுமுஆவின் 3,4 வசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாம் வருகை அல்லது இரண்டாம் தோற்றமும் நிகழ்ந்தது.
முடிவுரை
நான் இந்த பிரார்த்தனையுடன் என்னுடைய இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். அல்லாஹ் அனைவருக்கும் உண்மையை பொய்யில் இருந்து பிரித்து அறிவதற்கு ஞானத்தை வழங்கிடுவானாக. ஆமீன். அல்லாஹ் புனித குர்ஆனில் இவ்வாறு நம்மை எச்சரிக்கிறான்
یٰبَنِیۡۤ اٰدَمَ اِمَّا یَاۡتِیَنَّکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ ۙ فَمَنِ اتَّقٰی وَ اَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ
ஆதமின் மக்களே! என் வசனங்களை
உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது,
இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும்
ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலை அடையவும் மாட்டார்கள். [7:36]
அவ்வாறே அவன் கூறினான்;
قَالَ اہۡبِطَا مِنۡہَا جَمِیۡعًۢا بَعۡضُکُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ ۚ فَاِمَّا یَاۡتِیَنَّکُمۡ مِّنِّیۡ ہُدًی ۬ۙ فَمَنِ اتَّبَعَ ہُدَایَ فَلَا یَضِلُّ وَ لَا یَشۡقٰی
(இறைவன்) கூறினான்: இங்கிருந்து நீங்கள் இரண்டு கூட்டத்தினரும் எல்லோரும் வெளியேறி விடுங்கள். உங்களுள் சிலர், சிலருக்குப் பகைவர்களாக இருக்கின்றீர்கள். எனவே என்னிடமிருந்து நேர்வழி உங்களிடம் வரும்போது எனது நேர்வழியினைப் பின்பற்றுபவர், ஒருபோதும் வழிதவறவும் மாட்டார்; துயருறவும் மாட்டார். [20:124]
புனித திருக்குர்ஆனில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. திருக்குர்ஆனின் மறைவான ஞானத்தின் கருவூலங்கள் நாம் கண்டு பிடிப்பதற்காக இருக்கின்றன. அவற்றைப் பெறுவதற்கு அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக. ஆமீன்
அல்லாஹு அஃலம் (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைய
வாதங்கள் காஸி முஹம்மது நஸீர் சாஹிப்
அவர்களால் எழுதப்பட்ட அஹ்மதிய்யா தஃலீமி
பாக்கெட் புக், மற்றும் மாலிக்
அப்துர்ரஹ்மான் சாகிப் அவர்களால் எழுதப்பட்ட தப்லீக்கி பாக்கெட் புக், மேலும் திருக்குர்ஆனின் சுருக்கமான உரை மற்றும் திருக்குர்ஆனின் ஐந்து தொகுதிகளை கொண்ட விளக்க உரை ஆகிய நூல்களில்
இருந்தும் எடுக்கப்பட்டதாகும்.)
ஆக்கம்: ஃபர்ஹான் இக்பால் ஸாஹிப் (அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக), அஹ்மதிய்யா பிரச்சாரகர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்-கனடா
மொழியாக்கம்: ஜனாப் ஃபயாஸ் அஸ்லம் சாஹிப்-சென்னை
நன்றி: alislam.org
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None