நான்‌ ஏன்‌ இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொண்டுள்ளேன்‌? - பகுதி-1

நான்‌ ஏன்‌ இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொண்டுள்ளேன்‌?

 

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத்‌ மிர்ஸா பஷீருத்தீன்‌ மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

என்னிடம்‌ பம்பாய்‌ வானொலி நிலையத்தினர்‌ நான்‌ இஸ்லாத்தை ஏற்பதன்‌ காரணம்‌ என்ன? என்று அவர்களுக்கு கூற வேண்டுமென விருப்பட்டனர்‌. அப்பொழுது எனக்கு நானே இந்த கேள்வியை கேட்டுக்‌ கொண்டேன்‌; ஆகவே எந்த சான்றுகளை அடிப்படையாகக்‌ கொண்டு நான்‌ மற்ற பொருட்களை ஏற்கின்றேனோ அதே ஆதாரத்தினால்தான்‌ ஏற்றுக்‌ கொண்டுள்‌ ளேன்‌. அதாவது அது உண்மையானது என்பதனால்‌ ஆகும்‌ என என்‌ மனம்‌ பதிலளித்தது.

இந்த வார்த்தைகளின்‌ விளக்கம்‌ என்னவெனில்‌, என்‌ பார்வையில்‌ மார்க்கத்தின்‌ அடிப்படை விஷயம்‌ இறைவனின்‌ இருப்பு ஆகும்‌. எந்த மார்க்கம்‌ மனிதன்‌ மற்றும்‌ இறைவனின்‌ மத்தியில்‌ உண்மையான தொடர்பை ஏற்படுத்த முடியுமோ அது உண்மையான மார்க்கம்‌ ஆகும்‌. மேலும்‌ எந்த பொருளும்‌ அது உண்மையாக இருப்பதே அதன்மீது நம்பிக்கை கொள்ள போதுமானதாகும்‌. ஏனெனில்‌ யார்‌ உண்மையை ஏற்க மறுக்கின்றனரோ, அவர்கள்‌ பொய்யை ஏற்கும்‌ கட்டாயத்திற்குள்ளாகி விடுகின்றனர்‌. மேலும்‌ அவர்கள்‌ தமக்கும்‌ மனித குலத்திற்கும்‌ எதிரி ஆவார்கள்‌.

இஸ்லாம்‌ போதிப்பது என்னவெனில்‌, உலகத்தை உருவாக்கியவன்‌ ஒரு உயிருள்ள இறைவன்‌ ஆவான்‌. அவன்‌ முன்னரைப்‌ போன்றே இன்றைய கால கட்டத்திலும்‌, தனது அடியார்களுக்காக தோன்றுகிறான்‌. இந்த வாதத்தை இரு முறையில்‌ சோதித்துப்‌ பார்க்கலாம்‌. முதலாவது, அவ்வாறு தேடுபவர்களுக்கு இறைவன்‌ தனது வல்லமைகளை வெளிப்படுத்துகிறான்‌. அல்லது எவர்களின்‌ மூலம்‌ இறைவனின்‌ வல்லமை வெளிப்படுகிறதோ அவர்களை ஆராய்ந்து நாம்‌ அவர்களின்‌ வாதத்தின்‌ உண்மையை அறிந்து கொள்ளலாம்‌. ஏனெனில்‌ எவர்களுக்காக இறைவன்‌ தனது இருப்பை பலமுறை மற்றும்‌ வழக்கத்திற்கு மாறான முறையில்‌ வெளிப்படுத்தியுள்ளானோ அப்படிப்பட்ட அனுபவசாலிகளில்‌ ஒருவனாக இறையருளால்‌ நான்‌ இருக்கிறேன்‌.

இஸ்லாத்தின்‌ உண்மையை நானே என்‌ சொந்த அனுபவத்தால்‌ அறிந்துள்ளேன்‌. எனவே இதைவிட பெரிய வேறு எந்த ஆதாரமும்‌ எனக்குத்‌ தேவையில்லை. ஆனால்‌ எவர்களுக்கு இன்னும்‌ அனுபவம்‌ ஏற்படவில்லையோ அவர்களுக்கு நான்‌ என்னுடைய சொந்த அனுபவத்துடன்‌, எவை என்னை இஸ்லாத்தின்‌ மீது நம்பிக்கை கொள்ள வைத்தனவோ அந்த ஆதாரங்களை விளக்குகிறேன்‌.

முதலாவதாக: நான்‌ இஸ்லாத்தின்‌ மீது நம்பிக்கை வைக்கிறேன்‌. ஏனெனில்‌ இஸ்லாம்‌, எல்லா மார்க்க விவகாரங்களையும்‌-அதன்‌ தொகுப்புதான்‌ மார்க்கம்‌ என அழைக்கப்படுகிறது-அவற்றை என்மீது கட்டாயப்படுத்தி திணிப்பதில்லை. மாறாக எல்லா விஷயங்களுக்கும்‌ சான்றுகளைத்‌ தருகிறது. இறைவனின்‌ இருப்பு, அவனது பண்புகள்‌, வானவர்கள்‌, துஆ, அதன்‌ விளைவுகள்‌, இறை தீர்ப்பு மற்றும்‌ விதி, இவற்றின்‌ எல்லை, வழிபாடு மற்றும்‌ அதன்‌ அவசியம்‌ மார்க்கச்‌ சட்டம்‌ அதன்‌ பயன்‌, இல்ஹாம்‌ மற்றும்‌ அதன்‌ முக்கியத்துவம்‌ இறப்பிற்கு பிறகு எழுப்பப்படுதல்‌, சொர்க்கம்‌, நரகம்‌, இவற்றில்‌ இஸ்லாம்‌ விளக்காத எந்த விஷயமும்‌ இல்லை. மேலும்‌ மனித மூளையின்‌ திருப்திக்காக, அபாரமான ஆதாரங்களுடன்‌ நிரூபிக்காமல்‌ இல்லை. எனவே இஸ்லாம்‌ எனக்கு ஒரு மார்க்கத்தை மட்டும்‌ வழங்கவில்லை. மாறாக ஒரு நம்பும்‌ அறிவை வழங்கியுள்ளது. இதனால்‌ எனது மூளைக்கு அமைதி கிடைக்கிறது. மேலும்‌ மூளை மார்க்கத்தின்‌ அவசியத்தை ஏற்றுக்‌ கொள்கிறது.

இரண்டாவதாக: நான்‌ இஸ்லாம்‌ மீது நம்பிக்கை வைத்திருப்பதன்‌ காரணம்‌, இஸ்லாம்‌ தனது வாதங்களுக்கு வெறும்‌ கதைகளை மட்டும்‌ அடிப்படையாக வைக்கவில்லை. மாறாக அது எல்லா நபர்களையும்‌ அனுபவத்தின்‌ பக்கம்‌ அழைக்கிறது. மேலும்‌ எல்லா உண்மையையும்‌ ஏதாவதொரு வகையில்‌ இந்த உலகத்திலேயே அடையாளம்‌ காண முடியும்‌ என்று கூறுகிறது. இவ்வகையில்‌ இஸ்லாம்‌ என்‌ மனதிற்கு அமைதியைக்‌ கொடுக்கிறது.

மூன்றாவதாக: நான்‌ இஸ்லாத்தின்‌ மீது நம்பிக்கை வைத்திருப்பதன்‌ காரணம்‌, இறைவனின்‌ வார்த்தையிலும்‌ அவனது செயலிலும்‌ முரண்பாடு இருப்பதில்லை என்னும்‌ பாடத்தை இஸ்லாம்‌ எனக்கு வழங்குகிறது. மேலும்‌ இஸ்லாம்‌ என்னை அறிவியல்‌ மற்றும்‌ மார்க்க சச்சரவுகளிலிருந்து விடுவிக்கிறது. அது என்னை இயற்கைச்‌ சட்டங்களை பொருட்படுத்தாமலிருக்குமாறும்‌ அவற்றிற்கு எதிரான விஷயங்களில்‌ நம்பிக்கை வைக்குமாறும்‌ கற்றுக்‌ கொடுக்கவில்லை. மாறாக அது எனக்கு இயற்கைச்‌ சட்டங்களை சிந்திக்குமாறும்‌ அவற்றிலிருந்து பயன்பெறுமாறும்‌ போதிக்கின்றது. மேலும்‌ வேதத்தை இறக்குபவனும்‌ இறைவனே‌; உலகத்தை படைத்தவனும்‌ இறைவனே ஆவான்‌. எனவே அவனது சொல்‌ மற்றும்‌ செயல்களில்‌ எந்த முரண்பாடும்‌ இருக்க முடியாது. எனவே நீங்கள்‌ அவனது வார்த்தைகளை புரிவதற்காக அவனது செயல்களைப்‌ பார்க்க வேண்டும்‌. மேலும்‌ அவனது செயல்களை புரிவதற்காக அவனது வார்த்தைகளை பார்க்க வேண்டும்‌. இவ்வாறாக இஸ்லாம்‌ எனது உள்ளத்திற்கு ஆறுதலை வழங்குகிறது.

நான்காவதாக: நான்‌ இஸ்லாத்தை ஏற்பதன்‌ காரணம்‌, அது எனது உணர்வுகளை நசுக்குவதில்லை. மாறாக அவற்றை சரியான முறையில்‌ வழி நடத்துகிறது. அது எனது உணர்ச்சிகளைக்‌ கொன்று எனது மனிதாபிமானத்தை உயிரற்றவையாக மாற்றுவதும்‌ இல்லை. மேலும்‌ எனது உணர்ச்சிகள்‌ மற்றும்‌ விருப்பங்களை பிடியில்லாமல்‌ விட்டு விட்டு, என்னை விலங்கு அளவிற்கு விழ வைப்பதுமில்லை. மாறாக எவ்வாறு ஒரு திறமை மிக்க என்ஜினியர்‌ சுதந்திரமான நீரை கட்டுக்குட்‌படுத்தி கால்வாயாக மாற்றுகிறாரோ மற்றும்‌ அது செல்லும்‌ இடங்களிலேல்லாம்‌ பசுமையை உண்டு பண்ணுகிறாரோ அதைப்‌ போன்றே இஸ்லாம்‌ எனது உணர்ச்சிகள்‌ மற்றும்‌ விருப்பங்களை தேவைக்கேற்ப கட்டுக்குட்படுத்தி அவற்றை உயர்ந்த நற்பண்புகளாக மாற்றுகிறது.

இறைவன்;‌ உனக்கு அன்பு செலுத்தும்‌ உள்ளத்தைக்‌ கொடுத்திருந்தாலும்‌ வாழ்க்கைத்‌ துணைவரை மேற்கொள்ள தடை செய்கிறான்‌ என்று அது என்னிடம்‌ கூறுவதில்லை அல்லது உண்ணுவதற்காக நாவில்‌ சுவையையும்‌ மனதில்‌ விருப்பத்தையும்‌ உருவாக்கியிருந்தாலும்‌ சுவை மிக்க சிறந்த உணவுகளை உனக்குத்‌ தடுத்துள்ளேன்‌ என்று கூறுவதில்லை. மாறாக, இஸ்லாம்‌ கூறுகிறது: நீ நேசம்‌ காட்டு. ஆனால்‌ தூய அன்பைக்‌ காட்டு. ஆகுமான அன்பைக்‌ காட்டு. உன்‌ தலைமுறை மூலமாக தூய எண்ணங்களை உலகில்‌ எப்பொழுதும்‌ பாதுகாக்கும்‌ அளவிற்கு தூய்மையான, உன்னதமான அன்பை செலுத்து. மற்றும்‌ நீ தூய உணவையே உண்‌; ஆனால்‌ உன்‌ அண்டை வீட்டில்‌ இருப்பவன்‌ பசியில்‌ இருக்கிறான்‌; நீ உண்கிறாய்‌ என்றில்லாமல்‌ ஒரு எல்லைக்குட்பட்டு இரு. சுருக்கமாக, இஸ்லாம்‌ எல்லா மனித இயல்பின்‌ விருப்பங்களையும்‌ தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி மனித இயல்பின்‌ விருப்பங்களின்‌ எல்லையிருந்து வெளியேற்றி உயர்ந்த நற்பண்புகளில்‌ நுழைத்து விடுகிறது. மேலும்‌ அது என்‌ மனிதாபிமானத்தின்‌ அமைதிக்கு வழி வகை செய்கிறது.

ஐந்தாவதாக: பிறகு நான்‌ இஸ்லாத்தின்‌ மீது நம்பிக்கை வைப்பதன்‌ காரணம்‌, இஸ்லாம்‌ என்னுடன்‌ மட்டுமில்லாமல்‌ முழு உலகத்துடன்‌ நீதி மற்றும்‌ அன்புடன்‌ நடந்து கொள்கிறது. அது எனக்கு என்னுடைய உரிமைகளை பாதுகாக்கும்‌ பாடத்தை கொடுப்பது மட்டுமில்லாமல்‌ என்னை உலகின்‌ எல்லாவற்றுடனும்‌ நீதியுடன்‌ நடந்து கொள்ள அறிவுரை கூறுகிறது.

மேலும்‌ அதற்காக தேவைக்கேற்ப என்னை வழி நடத்துகிறது. அது ஒரு பக்கம்‌ தாய்‌, தந்தையின்‌ உரிமைகளை எடுத்துரைக்கிறது. பிள்ளைகள்‌ பெற்றோருடன்‌ நல்லமுறையில்‌ நடந்து கொள்ளவும்‌ அவர்களை தனது சொத்தில்‌ பங்குதாரர்களாக ஆக்கவும்‌ போதிக்கிறது என்றால் மறுபுறம்‌ பெற்றோர்களையும்‌ பிள்ளைகளுடன்‌ நன்முறையில்‌ நடந்து கொள்ளவும்‌ அவர்களுக்கு கல்வி கற்றுக்‌ கொடுக்கவும்‌ உயர்ந்த தர்பிய்யத்‌ கொடுக்கவும்‌ நற்பண்புகளை கற்றுக்‌ கொடுக்கவும்‌ அவர்களது உடல்நிலையை பாதுகாக்கவும்‌ கட்டளையிடுகின்றது. மேலும்‌ அவர்களை பெற்றோர்களின்‌ ஒரு குறிப்பிட்ட அளவு வரை வாரிசுகளாக ஆக்கியுள்ளது.

அதே போன்று இஸ்லாம்‌, கணவன்‌ மனைவிக்கிடையில்‌ சிறந்த உறவுகளை நிலைநிறுத்த கட்டளைகளை வழங்கியுள்ளது. மேலும்‌ அவர்களை ஒருவருக்கொருவர்‌ நல்ல முறையில்‌ நடந்து கொள்ளுமாறும்‌ ஒருவர்‌ மற்றவரது உணர்ச்சிகளை கவனத்தில்‌ கொள்ளுமாறும்‌ கட்டளையிடுகின்றது. இஸ்லாத்தின்‌ தோற்றுநர்‌ எப்படிப்பட்ட பொன்வரிகளை கூறுகிறார்கள்‌ என்றால்‌, பகலில்‌ மனைவியை அடித்தும்‌, இரவில்‌ அன்புடன்‌ நடந்து கொள்ளும்‌ மனிதர்‌ எவ்வாறு மனித இயல்பின்‌ அழகினை மறந்து விடுகிறார்‌ எனக்‌ கூறினார்கள்‌. மேலும்‌ உங்களில்‌ யார்‌ தனது மனைவியுடன்‌ நல்லமுறையில்‌ நடந்து கொள்கின்றாரோ அவரே உயர்ந்த ஒழுக்கங்களைக்‌ கொண்டவர்‌ ஆவார்‌. மேலும்‌ கூறினார்கள்‌: பெண்‌ கண்ணாடியைப்‌ போன்று மென்மையானவராவார்‌. நீங்கள்‌ எவ்வாறு கண்ணாடியை பாதுக்காப்பாக உபயோகப்படுத்துவீர்களோ அதே போன்று பெண்களிடமும்‌ பாதுகாப்புடன்‌ நடந்து கொள்ளுங்கள்‌. (தொடரும்...)

(ரிவியூ ஆஃப் ரிலீஜியன்ஸ்-மார்ச் 1940 பக்கம் 26-31)

நன்றி: நபிவழி மாத இதழ்

தமிழாக்கம்: முரப்பி சுல்தான் முஹ்யுத்தீன் சாஹிப்-மேலப்பாளையம்

1 கருத்து:

  1. இஸ்லாத்தின் உண்மை நிலையை தாமே அறிந்து வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் இக் கட்டுரை அனைத்து மதங்களையும் சார்ந்த வர்கள் இஸ்லாத்தின் உண்மை நிலையை அறிய ஓர் அரிய வாய்ப்பு!

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.