29-09-1903 அன்று (சிலரிடம்) பைஅத் வாங்கிய பிறகு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் பின்வருமாறு உரையாற்றினார்கள்:
என்னிடம் பைஅத் செய்பவர் ஒவ்வொருவரும், தாம் செய்யும்
பைஅத்தின் நோக்கம்
என்னவென்று தெரிந்து கொள்ள
வேண்டும். அவர் உலகப் பயன்களுக்காகப் பைஅத் செய்துள்ளாரா
அல்லது இறைவனது
திருப்தியைப் பெற வேண்டும்
என்பதற்காகப் பைஅத் செய்துள்ளாரா என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனையோ துர்பாக்கியசாலிகள் உலகப் பயன்களைப் பெற
வேண்டும் என்ற
நோக்கத்திற்காக மட்டும் பைஅத்
செய்துள்ளனர். இதனால் அவர்கள் பைஅத் செய்தும் அவர்களிடம்
எந்த நல்ல மாற்றமும்
ஏற்படுவதில்லை. உண்மையான
பைஅத்தின் விளைவுகளும் பயன்களுமாகிய உண்மையான நம்பிக்கை,
உண்மையான உறுதிப்பாடு, இறைஞானம் ஆகியவற்றிற்கான
ஒளி அவர்களிடம்
ஏற்படுவதில்லை. அவர்களது செயல்களில் எந்தச் சிறப்பும் தூய்மையும் ஏற்படுவதில்லை; அவர்கள் நன்மைகளில் முன்னேற்றம் பெறுவதில்லை; பாவங்களிலிருந்து
அவர்கள் விலகிக்
கொள்வதில்லை.
உலகப் பயன்களையே குறிக்கோளாகக் கொண்டவர்கள், ஒன்றை நன்றாக நினைவில் கொண்டிருக்க
வேண்டும். அதாவது
சில நாள்களைக் கொண்ட இந்த
உலக வாழ்க்கை, வறுமையுடனோ, பொருள் வசதியுடனோ கழிந்து
விடவே செய்யும்.
ஆனால் மறுமை பிரச்சினையோ மிகவும் கடினமான பிரச்சினையாகும். அது நிரந்தரமாக வாழும்
இடமாகும். அதற்கு
முடிவே இல்லை. அந்த இடத்திற்கு மனிதன் செல்லும்போது,
இறைவனுடனான
விவகாரத்தில் தூய்மையாகவும் இறைவனது அச்சம் தனது உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும்
பாவங்களிலிருந்து
கழிவிரக்கங்கொண்டு பாவ மன்னிப்புக் கோரி,
இறைவன் எவற்றைப்
பாவங்களென்று கூறியுள்ளானோ
அவற்றிலிருந்து விலகிக் கொண்டிருந்த நிலையிலும் சென்றால், இறைவனது அருள் அவனுக்கு உதவி செய்யும். அவன் ஒரு மேலான இடத்தை அடைவான்.
அங்கு இறைவன்
அவனிடம் திருப்தி
கொண்டவனாக இருப்பான்;
அவன் தனது
இறைவனிடம் திருப்தி கொண்டவனாக
இருப்பான்.
அந்த மனிதன் மேற்கூறப்பட்டவாறு செய்யாமல், அலட்சியமாகத் தனது வாழ்வைக் கழித்தால், அவனது முடிவு பயங்கரமானதாகவே
இருக்கும்.
எனவே பைஅத் செய்யும்போது, பைஅத்தின் நோக்கம்
என்ன? இதனால் என்ன பயன் கிடைக்கும்? என்பதைத் தீர்க்கமாகத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
பைஅத் உலகிற்காக மட்டுமிருந்தால், அது பயனற்றதேயாகும்.
ஆனால் அது மார்க்கத்திற்காகவும்
இறைவனது திருப்திக்காகவுமாக
இருந்தால், அது வாழ்த்துக்குரியதும், தனது அசல் நோக்கத்தைக் கொண்டதுமாகும்.
உண்மையான பைஅத்தினால் கிடைக்கும் பயன்கள் கிடைக்கும் என்று
முழுமையாக நம்பலாம்.
இவ்வாறான பைஅத்தால் மனிதனுக்கு இரண்டு மாபெரும்
பயன்கள் கிடைக்கின்றன.
முதலாவது அவர் தமது பாவங்களுக்காகக் கழிவிரக்கங்கொண்டு
பாவமன்னிப்புக்
கோருகின்றார். உண்மையாகவே பாவமன்னிப்புக் கோரும் மனிதனை, அது இறைவனுக்குப் பிரியமானவனாக்கி விடுகின்றது. இதனால்
தூய்மை பெறுவதற்கான
வாய்ப்பு அந்த மனிதனுக்குக்
கிடைக்கிறது. இது குறித்து இறைவன்,
பாவமன்னிப்புக் கோருபவர்களை இறைவன் நேசிக்கின்றான்;
பாவங்களின் ஈர்ப்புச்
சக்தியிலிருந்து தூய்மை பெறுபவர்களையும் அவன் நேசிக்கின்றான்
என்று கூறியுள்ளான்.
உண்மையிலேயே பாவங்களிலிருந்து கழிவிரக்கங் கொண்டு
பாவமன்னிப்புக்
கோருவது மிகவும் மகத்துவம்
பொருந்தியதாகும். பாவமன்னிப்புக்குரிய எல்லா நிபந்தனைகளுடனும் பாவமன்னிப்புக் கோரப்பட்டால், அப்போதே அந்த மனிதனிடம்
தூய்மைக்கான ஒரு
விதை விதைக்கப்பட்டு விடுகின்றது. இது அவனை நல்லவர்களின் வாரிசுதாரனாக்கி விடுகின்றது.
இதனைக் குறித்தே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், பாவங்களுக்காகக் கழிவிரக்கங் கொண்டு
பாவ மன்னிப்புக்
கோருபவர், பாவமே செய்யாதவரைப் போன்றவராகி விடுகின்றார்
என்று கூறியுள்ளார்கள்.
எனவே பாவமன்னிப்புக் கோருவதற்கு முன்னுள்ள
பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்பட்டு விடுகின்றன. அந்த நேரத்திற்கு முன்னர் அவருக்கு
ஏற்பட்டிருந்த நிலைகளையும் அர்த்தமற்ற செயல்களையும் நியாயமற்ற செயல்களையும் அவரிடமிருந்த
குறைபாடுகளையும் இறைவன் தனது அருளால் மன்னித்து விடுகின்றான். இறைவனுடன் ஒரு நல்ல
உடன்படிக்கை செய்யப்படுகின்றது. அன்றிலிருந்து ஒரு புதிய கணக்கு தொடங்குகின்றது.
எனவே அவர் இறைவனிடம் உண்மைமையான மனதுடன்
பாவமன்னிப்புக் கோரினார் என்றால், அப்போதிருந்து
அவர் தனது பாவங்களுக்குப் புதுக் கணக்கைத் திறந்து, தம்மைப் பாவங்களின்
அசுத்தங்களுக்கு ஆளாக்கி விடக் கூடாது. எனினும் அவர் எப்போதும் பாவமன்னிப்புக்
கோரிக் கொண்டும் துஆக்கள் செய்துக் கொண்டும் தமது (உள்ளத்தின்) தூய்மையின்
பால் கவனம் செலுத்திக் கொண்டும் இறைவனைத் திருப்திப்படுத்தி அவனை மகிழ்விப்பதில்
ஈடுபட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்; பாவ மன்னிப்புக்
கோருவதற்கு முன்னர் கழிந்து விட்ட தமது வாழ்வின் நிலைகளின் மீது கழிவிரக்கங் கொண்டும்
வெட்கமடைந்து கொண்டுமிருக்க வேண்டும்.
உலகில் கூடப் பாருங்கள். ஒருவரின்
மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால்,
அவர் தண்டனைக்குரியவராக ஆக்கப்படுகின்றார்.
குற்றம் செய்பவர் பற்றித் திருக்குர்ஆனில்
இறைவன், ‘நிச்சமாகத் தம்முடைய இறைவனிடம் குற்றவாளியாக வருபவருக்குக் கிடைப்பது நரகம்தான்.
அவர் அதில் மரணமடைவதுமில்லை;
வாழ்வதுமில்லை’ என்று கூறியுள்ளான். (20:75)
இது ஒரு குற்றத்திற்குரிய தண்டனையாகும்.
எவர் ஆயிரக்கணக்கான-இலட்சக் கணக்கான குற்றங்கள் செய்கின்றாரோ அவரது நிலை என்னவாக
இருக்கும் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
எனவே இறைவன் தனது பேரருளால், பாவமன்னிப்புக்
கோருதல் என்னும் வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான்; பாவமன்னிப்புக்
கோருபவர்களது பாவங்களை அவன் மன்னித்து விடுகின்றான்.
உண்மையான பைஅத்தால் கிடைக்கும் இரண்டாவது
பயன் என்னவென்றால், (மேற்கூறப்பட்டவாறு) பாவமன்னிப்புக் கோருவதால், அவருக்கு ஒரு சக்தி
கிடைக்கிறது. இதனால் அவர் ஷய்யத்தானது தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.
பைஅத் செய்தவர்களாகிய நீங்கள், உலகைக் குறிக்கோளாகக்
கொண்டிருக்கக் கூடாது;
எனினும் இறைவனது திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.
நீங்கள் மறுமையைப் பற்றிச் சிந்திக்க
வேண்டும்; மறுமையைப்
பற்றிச் சிந்திப்பவருக்கு இறைவன் இவ்வுலகிலும் அருள் செய்கின்றான்.
ஒருவர் முழுமையான நம்பிக்கை கொண்டவராக
ஆகும்போது, அவருக்கும்
அவரல்லாதவருக்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தி விடுவதாக இறைவன் வாக்குறுதியளித்துள்ளான்.
எனவே நீங்கள் முழுமையான நம்பிக்கையாளர்களாகுங்கள். எந்தத் தொழுகையையும் விட்டு
விடாமல் அதனைச் சரியாக நிறைவேற்றி வாருங்கள்.
கழிவிரக்கங்கொண்டு, பாவமன்னிப்புக்
கோருவதில் ஈடுபட்டிருங்கள்;
மக்களது உரிமைகளைப் பாதுகாப்பவர்களாக இருங்கள்; எவருக்கும் தொல்லை
கொடுக்காதீர்கள்; உண்மையிலும்
தூய்மையிலும் முன்னேறிக் கொண்டிருங்கள்;
இறைவன் உங்களுக்கு எல்லா வகையான அருள்களையும் செய்வான்.
(அல்ஹகம், பாகம் 7, 17-10-1903)
தமிழாக்கம்: முரப்பி மர்ஹூம் P.M. முஹம்மது அலி சாஹிப்-திருச்சி
நன்றி: நபிவழி மாத இதழ்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None