ஒற்றுமைக்கு வழி

 

ஒன்றுமைக்கு வழி

وَ اعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰہِ جَمِیۡعًا وَّ لَا تَفَرَّقُوۡا

பொருள்‌ : அல்லாஹ்வின்‌ கயிற்றை ஒன்றாகப்‌ பற்றிப்‌ படியுங்கள்‌; பிரிந்து போய்‌ விடாதீர்கள்‌. (திருக்குர்‌ஆன்‌ 3:104),

நமக்கு ஒரே இறைவன்‌ அல்லாஹ்‌. ஒரே வேதம்‌, திருக்குர்‌ஆன்‌. அதைக்‌ கொண்டு வந்த ஒரே தூதர்‌, ஹஸ்ரத்‌ முஹம்மது நபி (ஸல்‌) அவர்கள்‌ தான்‌. அப்படியானால்‌ நாம்‌ ஒற்றுமையாகத்தானே இருக்க வேண்டும்‌! ஏன்‌ அப்படி ஒற்றுமையாக இல்லை? ஒற்றுமையை நோக்கி செயல்பட நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌? என்பதே இந்தத்‌ தலைப்பு.

கடந்த 1425 ஆண்டுகளாக இஸ்லாம்‌ அரபு நாட்டில்‌ தோன்றியதிலிருந்தே, ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ காலத்திலிருந்தே இன்றுவரை ஒற்றுமையே இல்லையா? அதை இனிமேல்‌ தான்‌ உருவாக்க வேண்டுமா? ஒற்றுமையை அல்லாஹ்வே உருவாக்கி வைத்துள்ளானா? அல்லது நாம்‌ தான்‌ உருவாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்று பொறுப்பை நம்மிடம்‌ தந்துள்ளானா? என்பதை புரிய வேண்டும்‌.

அது பற்றி திருக்குர்‌ஆனில்‌ தெளிவுபடுத்து கிறான்‌. பிஸ்மில்லாஹிர்‌ ரஹ்மானின்‌ ரஹீம்‌ என்பதும்‌ திருக்குர்‌ஆனின்‌ ஒரு வசனம்தான்‌. அதுதான்‌ முதல்‌ வசனம்‌ என கணக்கிட்டு எண்ணினால்‌ 24:56ல்‌ உள்ளது. பிஸ்மில்லாஹ்‌. என்பதை வசன எண்ணிக்கை கணக்கில்‌ நீங்கள்‌ சேர்க்கவில்லையென்றால்‌ 24:55 வது வசனத்தைப்‌ பாருங்கள்‌.

பிஸ்மில்லாஹ்‌ என்று அல்லாஹ்வின்‌ திருப்பெயரால்‌ என்று தொடங்கும்போதே ஒன்றுபடாத மக்கள்‌ நிலையைப்‌ பாருங்கள்‌! பிஸ்மில்லாஹ்‌ என்பதும்‌ வஹிதான்‌, வசனம்‌ தான்‌ என்றால்‌ அதை எண்ணிக்கைக்‌ கணக்கில்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டியது தானே அறிவுடைமை! அப்படிச்‌ சேர்த்தால்‌ திருக்குர்‌ஆன்‌ 24:56ல்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

 

அல்லாஹ்‌ உங்களுள்‌ நம்பிக்கை கொண்டு நற்செயல்‌  புரிபவர்களை அவர்களின்‌ முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று, இப்பூமியில்‌ கலீஃபாவாக (தலைவராக) ஆக்குதாகவும்‌, அவன்‌ அவர்களுக்காக விரும்பிய அவர்களின்‌ மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும்‌, அவன்‌ அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப்‌ பிறகு அதற்குப்‌ பதிலாக அமைதியினை வழங்குவதாகவும்‌ அவர்களிடம்‌ வாக்குறுதியளித்துள்ளான்‌. அவர்கள்‌ என்னையே வணங்குவார்கள்‌. எதனையும்‌ எனக்கு இணையாக்க மாட்டார்கள்‌. இதன்‌, பின்னரும்‌ நிராகரிப்பவர்கள் எல்லை மீறியவர்கள்‌ ஆவார்கள்‌.

இந்த வசனத்தின்படி கலீஃபாவைக்‌ கொடுத்து அல்லாஹ்வே ஒற்றுமையை உருவாக்கித்‌ தருகிறான்‌. ஒன்றுமையை விரும்பாதவர்கள்‌ மொழியாக்கத்தில்‌ கலீஃபா என்ற வார்த்தையை மறைக்கும்‌ விதமாக பொருள்‌ கொடுத்து மக்களை பிளவுப்‌ படுத்துகிறார்கள்‌. திருக்குர்‌ஆனில்‌ கலீஃபா என்ற அரபி வார்த்தையே உள்ளது. அப்படி அல்லாஹ்வே கலீஃபாவை நமக்குத்‌ தந்து ஒற்றுமையை உருவாக்கித்‌ தருகிறான்‌, தந்திருக்கிறான்‌. அதை அடையாளம்‌ கண்டு ஒற்றுமையை நோக்கி பயணிக்க வேண்டுமே ஒழிய நாமாகவே கலீஃபாவை உருவாக்கிக்‌ கொள்ளவும்‌ முடியாது. அப்படி வேறு தலைவர்களால்‌ ஒற்றுமையை உருவாக்கவும்‌ முடியாது. அல்லாஹ்‌ அப்படி விடமாட்டான்‌.

ஆக, கலீஃபாவை நமக்கு அல்லாஹ்‌ தர வேண்டுமென்றால்‌, நம்பிக்கையும்‌, நற்செயலும்‌ உள்ள கூட்டம்‌ இருக்க வேண்டும்‌. நாங்கள்‌, சரியான ஈமானும்‌, சரியான நற்செயலும்‌ உடையவர்கள்‌ தாம்‌ என இன்றைய முஸ்லிம்கள்‌ வாதித்தால்‌ இறைவனால்‌ நியமிக்கப்பட்ட கலீஃபாவைக்‌ காட்ட வேண்டும்‌. அத்தகைய கலீஃபா அவர்களிடம்‌ இல்லையென்றால்‌ அவர்களது ஈமானில்‌ குறை உள்ளது என்பதையும்‌, நற்செயலில்‌ கலப்படம்‌, களங்கம்‌ உள்ளது என்பதையும்‌ உணர வேண்டும்‌. கலீஃபாவைக்‌ கொண்டிருக்கும்‌ ஜமாஅத்தினர்‌ தாம்‌ ஒற்றுமை உடையவர்களாக இருப்பார்கள்‌. இது அல்லாஹ்‌. ஏற்படுத்தும்‌ நடைமுறை, சுன்னத்தாக இருக்கிறது.

மேலும்‌ 24:56 வசனத்தின்படி கலீஃபாவைக்‌ கொண்டுள்ள ஜமாஅத்தினர்‌ மட்டும்தான்‌ அல்லாஹ்வை மட்டும்‌ வணங்கக்‌ கூடியவர்கள்‌, அதாவது உண்மையான தவ்ஹீது கொள்கையை உடையவர்கள்‌ என்பதாகும்‌. அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு எதனையும்‌ இணை வைக்க மாட்டார்கள்‌ என்றும்‌ அந்த வசனம்‌ கூறுகிறது.

யாரிடம்‌ கலீஃபா இருக்குமோ அவர்கள்‌ மட்டும்தான்‌ எந்த இணைவைப்பும்‌ ஷிர்க்கும்‌. வைக்காதவர்கள்‌. எங்களிடம்‌ எந்த ஷிர்க்கும்‌ இல்லை என்று யாராவது சொன்னால்‌ அவர்களிடம்‌ கலீஃபா இருந்தே ஆகவேண்டும்‌. கலீஃபா யாரிடம்‌ இல்லையோ அவர்களிடம்‌ அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஷிர்க்கும்‌ கலந்து கொள்கிறது என்பதை அல்லாஹ்வின்‌ மேற்கண்ட வசனம்‌ அடையாளம்‌ காட்டுகிறது.

ஆக, ஒற்றுமையை நோக்கி பயணிக்க அல்லாஹ்‌ உருவாக்கிய ஜமாஅத்தை அடையாளம்‌ கண்டு அதில்‌ இணைய வேண்டும்‌. மற்ற குட்டி தலைவர்கள்‌ உருவாக்குவது ஜமாஅத்‌ அல்ல; அது பிளவுப்‌ படும்‌ பிரிவு ஆகும்‌; அது சிதறுண்டு போய்க்‌ கொண்டே இருக்கும்‌.

ஆக இந்த வசனத்தின்படி ஏற்கனவே கிலாஃபத்தின்‌ மூலமாக ஒற்றுமையை அல்லாஹ்‌ உருவாக்கி வைத்திருக்கிறான்‌. இப்போதும்‌ ஒற்றுமை இருந்து கொண்டே தான்‌ இருக்கிறது. இனிமேல்‌ ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. அப்படி இனிமேலும்‌ வேறு ஒரு ஒற்றுமை ஏற்படுத்த முனைந்தால்‌ அது ஒருபோதும்‌ நடக்காது.

கலீஃபா உள்ள அல்லாஹ்வின்‌ கயிற்றைப்‌ பற்றிப்‌ பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌ என்று அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறிய பிறகு, பிரிந்து போய்‌ விடாதீர்கள்‌ என்று அறிவுறுத்துகிறான்‌.

பொய்வாதிகள்‌ சிதறுண்டு போவார்கள்‌ என்பதை அல்லாஹ்‌ சூசகமாக குறிப்பிட்டு விட்டான்‌. யார்‌ ஒற்றுமையின்றி சிதறுண்டு, பிளவுபட்டு இருக்கின்றார்களோ அவர்கள்‌ பொய்வாதிகள்‌ என்று திருக்குர்‌ஆன்‌ அடையாளம்‌ காட்டுகிறது.

ஆக, இறைவனால்‌ உருவாக்கப்பட்ட அஹ்மதிய்யா கிலாஃபத்தின்‌ மூலம்‌ ஒற்றுமை இருந்து கொண்டுதானிருக்கிறது. அதை நாம்‌ அடையாளம்‌ காண வேண்டும்‌. அப்படி இருந்து கொண்டிருக்கும்‌ அந்த ஒற்றுமையை நோக்கி செல்ல வேண்டும்‌.

திருக்குர்‌ஆனின்‌ 24:56 வசனத்திற்கு ஆதரவாக ஒரு ஹதீஸ்‌ உள்ளது. ஹஸ்ரத்‌ ஹுதைஃபா (ரலி) அவர்கள்‌ அறிவிப்பதாவது:

அல்லாஹ்‌ நாடும்‌ வரை இந்த நுபுவ்வத்‌ இருக்கும்‌, பின்னர்‌ அதனை அல்லாஹ்‌ எடுத்‌துக் கொள்வான்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ நாடும்‌ வரை கிலாஃபத்‌ இருக்கும்‌, பின்னர்‌ அல்லாஹ்‌ அதனை எடுத்துக்‌ கொள்வான்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ நாடும்‌ வரை மன்னர்‌ ஆட்சி நடைபெறும்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ அதனையும்‌ எடுத்துக்‌ கொள்வான்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ நாடும்வரை கொடுங்கோலாட்சி நடைபெறும்‌, பின்னர்‌ அல்லாஹ்‌ அதனையும்‌ எடுத்துக்‌ கொள்வான்‌. பின்னர்‌ மீண்டும்‌ நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌” மலரும்‌ என்று கூறிய பின்னர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மவுனமாகி விட்டார்கள்‌''. (முஸ்னது அஹ்மது தொகுதி 5 பக்கம்‌ 404)

இந்த ஹதீஸின்‌ படி முன்னர்‌ எதுவரை ஒற்றுமை இருந்தது என்பதையும்‌ எந்த நிலையில்‌ இருந்ததோ அப்படியே பின்னால்‌, மீண்டும்‌ அதே வழியில்‌ தான்‌ அதாவது நுபுவ்வத்‌ வழியிலான கிலாஃபத்‌ மூலமாகத்தான்‌ ஒற்றுமை நிகழும்‌ என்பதையும்‌ முன்னறிவிப்பு செய்கிறார்கள்‌.

உலகிற்கு ஒரே தலைமையாய்‌ நபியும்‌ அவருக்குக்‌ கட்டுப்பட்ட ஒரே ஜமாஅத்தாக மக்களுமாக முதலில்‌ ஒற்றுமை இருந்தது. அடுத்து நுபுவ்வத்திற்கு பின்னர்‌ கிலாஃபத்‌ உலகம்‌ முழுவதற்கும்‌ ஒரே தலைமையாய்‌ இருந்தது. அதற்குக்‌ கட்டுப்பட்ட ஜமாஅத்தாக மக்கள்‌ ஒற்றுமையாய்‌ இருந்தனர்‌. அதன்‌ பின்னர்‌ ஏற்பட்ட வெவ்வேறு நிலைமைகளில்‌ தான்‌ முஸ்லிம்களிடம்‌ பல்வேறு பிரிவுகள்‌, பிளவுகள்‌ ஏற்பட்டன. ஒற்றுமை இல்லாது போனது. மீண்டும்‌ ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால்‌ முன்னர்‌ கூறிய நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌ மலர்வதன்‌ மூலமே ஒற்றுமையை அல்லாஹ்‌ ஏற்பட செய்வான்‌ என்று ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸ்‌ முன்னறிவிப்பு செய்கிறது. அதன்படி நுபுவ்வத்தும்‌ கிலாஃபத்தும்‌ உள்ள ஜமாஅத்தில்‌. ஒற்றுமை இருந்து கொண்டு இருக்கும்‌. அதல்லாத மற்ற பிரிவுகளில்‌ ஒற்றுமை இருக்காது; ஒற்றுமை. உருவாகாது. அதை மனிதனால்‌ சுயமாக உருவாக்கவும்‌ முடியாது என்பதை திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும்‌,  நபிமொழியிலிருந்தும்‌ விளங்கிக்‌ கொள்கிறோம்‌.

திருக்குர்‌ஆன்‌ வசனம்‌ 24:56க்கு இணக்கமான இன்னொரு ஹதீஸ்‌ ஹுதைபத்துல்‌ யமான்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. இது புகாரி, முஸ்லிம்‌, திர்மிதி, இப்னுமாஜா போன்ற நூல்களில்‌ இடம்‌ பெற்றள்ளது.

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ மக்கள்‌ (எப்போதும்‌) நல்லதைப்‌ பற்றியே கேட்பவர்களாக இருந்தனர்‌. நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல்‌ இருக்க, கெட்டது பற்றியே கேட்கக்‌ கூடியவனாக இருந்தேன்‌. ஒருமுறை; நான்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ அவர்களே! நாங்கள்‌ அறியாமையிலும்‌ தீமையிலும்‌ இருந்தபோது, அல்லாஹ்‌ எங்களுக்கு (ஒற்றுமை என்ற) இந்த நல்லதை அருளினான்‌. இந்த நல்லதற்குப்‌ பின்னர்‌ கெட்டது உண்டா?

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : ஆம்‌! உண்டு!!

நான்‌ : கெட்டதற்குப்‌ பின்னர்‌ மீண்டும்‌ நல்லது உண்டா?

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : ஆம்‌! உண்டு!! ஆனால்‌ அது “தகனுன்‌” (களங்கப்பட்டது)

நான்‌ : அந்த தகனுன்‌ (களங்கம்‌) என்ன?

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : ஒரு கூட்டம்‌ எனது நேர்வழி அல்லாததைக்‌ கொண்டு மக்களை வழி நடத்துவார்கள்‌. நீங்கள்‌ அவர்களை (செயல்களால்‌) கண்டறிந்து நிராகரித்து விடுவீர்கள்‌.

நான்‌ : அந்த நல்லதற்கு பின்னர்‌ கெட்டது உண்டா?

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : ஆம்‌! உண்டு!! (சிலரால்‌) நரகத்தின்‌ வாயிலுக்கு அழைப்பு விடுவிக்கப்படும்‌; எவர்கள்‌ அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள்‌ அதில்‌ (நரகில்‌) எறியப்படுவார்கள்‌.

நான்‌ : யா ரஸூலல்லாஹ்‌! அவர்களைப்‌ பற்றி விளக்குவீர்களாக.

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : அவர்கள் நம்மைச்‌ சார்ந்தவர்களாகவும்‌, நாம்‌ பேசுவதை பேசுபவர்களாகவும்‌ இருப்பார்கள்‌.

நான்‌ : (அவர்களது வலையில்‌ விழாமல்‌ இருக்க) அப்போது எனக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்‌?

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : (அப்போது) நீர்‌ முஸ்லிம்களின்‌ ஜமாஅத்தையும்‌ அதன்‌ இமாமையும்‌ பற்றிக்‌ கொள்வீராக.

நான்‌ : அந்த ஜமாஅத்தோ அதன்‌ இமாமோ இல்லை என்றால்‌ (இருப்பதை அறியாமல்‌ இருந்தால்‌)

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) : எல்லாப்‌ பிரிவுகளை விட்டும்‌ ஒதுங்கி வாழவும்‌. அப்படியே உமது மரணம்‌ வரை மரவேர்களைச்‌ சாப்பிட்டுக்‌ காலத்தைப்‌ போக்கும்‌ நிலை ஏற்பட்டாலும்‌ சரியே!

இந்த ஹதீஸின்‌ ஒற்றுமையை நோக்கி செல்ல வேண்டுமெனில்‌ முஸ்லிம்களின்‌ ஜமாஅத்‌ மற்றும்‌ அதன்‌ இமாம்‌ இருப்பதை அறிய வேண்டும்‌. ஜமாஅத்துல்‌ முஸ்லிமீன்‌ என்ற பெயரில்‌ இயங்குவதைப்‌ பற்றி இங்கு கூறவில்லை. ஜமாஅத்துடன்‌ அதன்‌ இமாமையும்‌ இணைத்து ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. முஸ்லிம்களின்‌ ஜமாஅத்‌ என்றாலே அதற்கொரு, இமாம்‌ இருந்தாக வேண்டும்‌ என்பதை இந்த நபிமொழி மிக நன்றாகவே அறிவுறுத்தி விட்டது. ஜமாஅத்‌, இமாம்‌ இல்லையெனில்‌ வேறெந்த ஒற்றுமையையும்‌ சுயமாக ஏற்படுத்தக்‌ கூடாது. மரத்தின்‌ வேரைத்‌ தின்று தனிமையில்‌ வாழ வேண்டும்‌.

ஆனால்‌ அப்படி ஏற்படவும்‌ செய்யாது. முழு உலகத்திற்கும்‌ இமாமாக ஒரே தலைவர்‌ இருப்பார்‌. அவருக்கும்‌ கட்டுப்பட்ட முழு உலகமும்‌ ஒன்றுப்பட்ட ஒரு ஜமாஅத்‌ இருக்கும்‌. இதுதான்‌ ஒற்றுமையை நோக்கிச்‌ செல்ல ஹஸ்ரத்‌ ரஸூல்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறிய வழிகாட்டல்‌. இந்த வழிகாட்டலை மறுப்பவர்‌ ரஸூலையே மறுத்தவராவார்‌. ரஸூலை மறுத்தவர்‌ அல்லாஹ்வையே மறுத்தவராவார்‌. பிரிவுகளாக பிரிந்து சிதறி அழிந்து போகும்‌ அசத்தியத்தை நாம்‌ ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது ஒற்றுமைப்படவும்‌ செய்யாது. ஒற்றுமை படுத்தவும்‌ முடியாது. அசத்தியம்‌ அழிந்தே தீரும்‌. சத்தியம்‌ ஒற்றுமையுடன்‌ நிலைத்து நிற்கும்‌. எப்போதும்‌ நிலைத்து நின்று கொண்டு தானிருக்கிறது.

இந்த ஹதீஸின்‌ அடிப்படையில்‌ முஹம்மது நபி (ஸல்‌) அவர்களின்‌ நுபுவ்வத்‌ காலகட்டத்தில்‌ ஒரே தலைமையில்‌ முழு உலக முஸ்லிம்களும்‌ கட்டுப்பட்ட ஒரே ஜமாஅத்தாக இருந்தனர்‌. அதன்‌ பின்னர்‌ கிலாஃபத்‌ ஏற்பட்டது. ஹஸ்ரத்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ கலீஃபாவாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்‌. முழு உலகத்‌ தலைவராக இமாமாக இருந்தார்கள்‌. முஸ்லிம்கள்‌ ஒன்றுபட்டு முழு உலக ஒரே ஜமாஅத்தாக இருந்தனர்‌. அதன்‌ பின்னர்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ காலத்திலும்‌, உஸ்மான்‌ (ரலி) அவர்கள்‌ காலத்திலும்,‌ அலி (ரலி) அவர்கள்‌ காலத்திலும்‌ ஒரே தலைமை, ஒரே ஜமாஅத்‌ இருந்தது. எப்போது ஒரு தலைமை என்ற நிலை இல்லாமல்‌ போனதோ, எப்போது ஒரே ஜமாஅத்‌ என்ற நிலை இல்லாது பிளவுகள்‌ உண்டானதோ அத்தோடு ஒற்றுமை இல்லாமல்‌ போனது. மீண்டும்‌ அதே நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌ மலரும்‌ என்ற ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ முன்னறிவிப்பு நிகழும்போது ஒற்றுமை தானாக உருவாகும்படி அல்லாஹ்வே ஏற்பாடு செய்து விடுகிறான்‌. மனித முயற்சியால்‌ ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. அதை அல்லாஹ்வே தான்‌ ஏற்படுத்துகிறான்‌. அதை நாம்‌ அடையாளம்‌ கண்டால்‌ போதும்‌; ஒற்றுமையை நோக்கி சென்றடைந்து விடலாம்‌.

ஆக நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌ மலர்ந்ததாய்‌ வாதிப்பது எங்கிருக்கிறது என்பதை தேடுங்கள்‌. அது உங்கள்‌ வேலை. ஒற்றுமையை நோக்கி ஒன்று, சேர்ப்பது அல்லாஹ்வின்‌ வேலை. அந்த அதிகாரமும்‌ வேறு யாருக்கும்‌ இல்லை என்பதை உணருங்கள்‌. இன்னும்‌ குர்‌ஆனின்‌ 24:56வது வசனத்திற்கு இணக்கமான மற்ற சில ஹதீஸ்கள்‌ உள்ளன. இப்னு அம்ரு (ரலி), முஆவியா (ரலி), அம்ர்‌ பின்‌ ஆஸ்‌ (ரலி) ஆகியோர்களால்‌ அறிவிக்கப்படும்‌ இது புகாரி, திர்மிதி அபூதாவூது, முஸ்னது அஹ்மது ஆகிய நூல்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.

நிச்சயமாக இஸ்ரவேலர்கள்‌ 72 பிரிவுகளாக பிரிந்தனர்‌. என்னுடைய இந்த உம்மத்‌ 73 ஆக. பிரியும்‌. அதில்‌ ஒன்றைத்‌ தவிர ஏனைய 72 பிரிவுகளும்‌ நரகினை அடைவார்கள்‌ என ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறிய போது அது (அந்த ஒன்று) எது? என சஹாபாக்கள்‌ வினவ, 'நானும்‌, எனது சஹாபாக்களும்‌ போல” வாழ்பவர்கள்‌ எனக்‌ கூறினார்கள்‌.

இந்த ஹதீஸை எல்லோரும்‌ ஒப்புக்‌ கொள்கின்றனர்‌. சுவனம்‌ செல்லக்‌ கூடிய அந்த ஒரு ஜமாஅத்‌ என்பது எங்களுடையது தான்‌ என்றும்‌ எல்லோரும்‌ சொல்கிறார்கள்‌. எல்லோரும்‌ மற்ற மற்ற பிரிவுகளை கலைத்து விடுங்கள்‌. எல்லோரும்‌ எங்களுடன்‌ வந்து சேர்ந்து விடுங்கள்‌. ஒற்றுமையாய்‌ வாழலாம்‌ என எல்லாப்‌ பிரிவுகளும்‌ ஒரே மாதிரியாய்‌ கூறுகிறார்கள்‌. அதற்கு அவர்களுடைய அடையாளப்‌ பெயர்களைப்‌ பொருத்தியும்‌ காட்டுவார்கள்‌.

உலகின்‌ அனைத்துப்‌ பிரிவுகளும்‌ “நானும்‌, என்‌ சஹாபாக்களும்‌ போல: என்பதற்கு பொருள்‌ கொடுக்கட்டும்‌; தரட்டும்‌. பொருந்தினால்‌ ஏற்றுக்‌ கொள்வோம்‌. ஆனால்‌ அந்த விளக்கத்திற்கு பொருத்தமானதாக ஒரே ஒரு ஜமாஅத்தை மட்டும்‌ தனியாக அடையாளம்‌ காட்ட வேண்டும்‌. அதே நேரத்தில்‌ அந்த விளக்கத்தை மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள்‌ “எங்களுக்கு இது பொருந்தாது” என 72 பிரிவுகளும்‌ விலக வேண்டும்‌. இதுதான்‌ நிபந்தனை. நபியும்‌, சஹாபாக்களும்‌ சுன்னத்தை கடைப்‌ பிடித்தார்கள்‌. அதனால்‌ அது சுன்னத்‌ ஜமாத்‌அ தான்‌ என்றால்‌ மற்ற பிரிவுகள்‌ 72ம்‌ நாங்கள்‌ சுன்னத்தை கடைப்பிக்கவில்லை. இது எங்களுக்கு பொருந்தாது என்று கூறி விலக வேண்டும்‌. இதுபோல்‌ நபியும்‌ சஹாபாக்களும்‌ தவ்ஹீதை போதித்தார்கள்‌. அதனால்‌ தவ்ஹீது ஜமாஅத்‌ என பொருள்‌ கொடுத்தால்‌, மற்ற பிரிவுகள்‌ 72ம்‌ நாங்கள்‌ தவ்ஹீதை போதிக்கவில்லை; இது எங்களுக்கு பொருந்தாது என்று கூறி விலக வேண்டும்‌. இப்படியாக தப்லீக்‌ செய்தார்கள்‌ அதனால்‌ தப்லீக்‌ ஜமாஅத்‌ என்றோ, ஜிஹாது செய்தார்கள்‌. மனித நீதிப்‌ பாசத்தை காட்டினார்கள்‌ என்றோ எப்படி வேண்டுமானாலும்‌ பொருள்‌ கொடுங்கள்‌. ஒரே ஒரு ஜமாஅத்துக்கு மட்டும்‌ பொருத்துங்கள்‌. அதை மற்ற 72 பிரிவுகளும்‌ ஒப்புக்‌ கொண்டு விலகுவதையும்‌ காட்டவேண்டும்‌. அவ்வாறு நீங்கள்‌ ஒருபோதும்‌ செய்து காட்ட முடியாது. முடியவே முடியாது. இது மிகமிக ஆணித்தரமான உண்மை.

ஹஸ்ரத்‌ ரஸூல்‌ (ஸல்‌) அவர்கள்‌ ஒற்றுமையை நோக்கி மக்கள்‌ ஒன்றுபட கூறிய முன்னறிவிப்பை,“மீண்டும்‌ நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌ மலரும்‌: என்ற ஹதீஸ்‌ விளக்கத்தை பொருத்திப்‌ பாருங்கள்‌. "நானும்‌ என்றால்‌ நபியின்‌ நுபுவ்வத்‌, ஸஹாபாக்கள்‌ என்றால்‌ ஸஹாபாக்களின்‌ கிலாஃபத்தும்‌ உங்களுக்கு இருக்கிறதா? என வினவுங்கள்‌. ஒரே ஒரு ஜமாஅத்தைத்‌ தவிர மற்ற அனைத்து 72 பிரிவுகளும்‌ இது எங்களுக்கு பொருந்தாது எனச்‌ சொல்லி விலகும்‌. சாட்சி கூறும்‌. அஹ்மதிய்யா முஸ்லிம்‌ ஜமாஅத்தில்‌ அந்த நுபுவ்வத்துடன்‌ கிலாஃபத்‌ மலர்ந்து உலகின்‌ 198 நாடுகளில்‌ ஒரே ஜமாஅத்தாக (சுமார்) 20 கோடி மக்கள்‌ ஒற்றுமையுடன்‌ வாழ்வதை அறிந்து கொள்ளுங்கள்‌. அந்த ஒற்றுமையை அல்லாஹ்வே ஏற்படுத்தித்‌ தந்திருக்கிறான்‌. அதல்லாமல்‌ நுபுவ்வத்‌ வழியில்‌ கிலாஃபத்‌ இன்றி ஒருபோதும்‌ ஒன்றுபடவே முடியாது. அல்லாஹ்‌ அப்படி விடவே மாட்டான்‌. ஒற்றுமைக்கு இறைவன்‌ வகுத்த வழியின்‌ பக்கம்‌ வாருங்கள்‌. அதில்தான்‌ ஈடேற்றம்‌ இருக்கிறது.

நன்றி: நபிவழி மாத இதழ்

ஆக்கம்: மர்ஹூம் ஜனாப் அமீனுல்லாஹ்‌ சாஹிப்-மதுரை

 

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.