அல்லாஹ் திருக்குர் ஆனில் தினந்தோறும்
அதிகாலையில் திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்:
اَقِمِ الصَّلٰوۃَ لِدُلُوۡکِ الشَّمۡسِ اِلٰی غَسَقِ الَّیۡلِ
وَ قُرۡاٰنَ الۡفَجۡرِ ؕ اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ کَانَ مَشۡہُوۡدًا
சூரியன் சாய்ந்த (நேரத்) திலிருந்து இரவில் நன்றாக இருட்டி
விடும்(நேரம்) வரை(ப் பல்வேறு நேரங்களின்) தொழுகையினை மிகச்சிறந்த முறையில்
நிறைவேற்றுவீராக. அதிகாலையில் (குர்ஆன்) ஓதுவதையும் (கட்டாயமாக்கிக் கொள்வீராக).
அதிகாலையில் குர்ஆன் ஓதுவது(அல்லாஹ்விடத்தில்) நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும்
(ஒரு) செயலாகும். (திருக்குர்ஆன் 17:79)
அதிகாலையில் திருக்குர்ஆன் ஓதுவதை
அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வதாக இவ்வசனத்தில் வாக்குறுதி அளித்துளான்.
இதே போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுவதைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
“எவர் திருக்குர்ஆனை
தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றரோ அவர் உங்களுள் மிகச் சிறந்தவர்
ஆவார்.” (புகாரி)
திருக்குர்ஆன் ஓதுவதில் இந்த அளவு
சிறப்பு இருக்கும் போது,
முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு காலம் வரும். அப்போது முஸ்லிம்கள் திருக்குர்ஆன்
ஓதுவதையும், அதன் வழிகாட்டலின்படி
'செயல்படுவதையும்
விட்டு விடுவார்கள் என்று திருக்குர் ஆனில் முன்னறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.
“என் இறைவா!
என் சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனை முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து ட்டனர்
என்று தூதர் கூறுவார். (25:31)
திருக்குர்ஆனின் இந்த முன்னறிவிப்பு
இக்காலத்தில் நிறைவேறி விட்டதற்கு நாம் சாட்சியாக இருக்கின்றோம். திருக்குர்ஆன்
ஓதத்தெரியாதவர்களிடம் ஓதக் கற்றுக் கொள்ளுமாறு கூறினால் சிலர் பல சாக்குப்போக்குகளைக்
கூறுவதை நாம் பார்க்கின்றோம். இது தொடர்பாக ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“நான் ஏற்கெனவே
கூறியது போன்று திருக்குர்ஆன்தான் மார்க்கத்தின் உயிராகும். இதை ஓதாமல், (பிறருக்குக்) கற்றுக்
கொடுக்காமல் ஏதேனும் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது ஒரு தவறான சிந்தனையாகும். ஹஸ்ரத்
முதல் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் பொதுவாக பெண்களுக்கான தர்ஸில் ஓர் உதாரணத்தைக்
கூறி வந்தார்கள். அது மிகவும் நுன்ணிய ஒரு விஷயமாகும். நாம் விரும்பினால் அதிலிருந்து
பெரும் பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும். அன்னார் கூறியது என்னவென்றால், பாருங்கள்! திருக்குர்ஆனை
ஓதுங்கள் அல்லது செவி கொடுத்துக் கேளுங்கள் என நான் கூறும் போது, நாங்கள் ஓதத்
தெரியாதவர்கள் என நீங்கள் பதில் கூறுகிறீர்கள். ஒரு பெண்ணுடைய மகன் வெளியூருக்குச்
சென்றிருக்கின்றார் என்றால் அப்பெண்ணின் பெயர் எழுதப்பட்ட (போஸ்ட்) கார்டு வெளியூரிலிருந்து
வரும்போது படிக்கத் தெரிந்த பெண் அதை ஒருமுறை படித்து விட்டு தலையணைக்குக் கீழ்
வைத்து விடுவாள். அல்லது துணிமணிகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்து விடுவாள். அல்லது
ஏதேனும் மாடக் குழிக்குள் வைத்து விடுவாள். ஆனால் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பவர்களுக்கு
ஒருமுறை கடிதத்தைப் படிக்க வைத்துக் கேட்பதால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை.
மாறாக, அப்படிப்பட்ட
பெண்கள் வேறொருவரிடம் சென்று அவரிடமும் (கடிதத்தைப் படிக்க வைத்து) கேட்கிறார்கள்.
உதாரணமாக, படிப்பறிவில்லாத
ஒரு பெண்ணுக்கு கடிதம் வரும் போது அவள் கிராமத்தின் அறிஞரிடம் சென்று அறிஞரே!
என் மகனிடமிருந்து வந்த (போஸ்டு) கார்டை கொஞ்சம் படித்துக் கூறுங்களேன் என்று கூறி, அவரிடம் காது கொடுத்துக்
கேட்கிறாள். பிறகு ஏதாவது சொல்,
அறிஞரின் பார்வையை விட்டுத் தவறியிருக்கலாம். அல்லது அவசரத்தில் முழுக் கருத்தையும்
சொல்லாமல் விட்டிருக்கலாம் எனக் கருதி ஓடியவாறு அப்பெண் ஊர் தலைவரின் அமர்விடத்திற்குச்
செல்கிறாள். தலைவரே! என் மகனிடமிருந்து வந்த இந்த (போஸ்டு) கார்டைப் படித்துக்
கூறுங்களேன் எனக் கேட்கிறாள். அவரிடமிருந்து அக்கடிதத்தைக் கேட்டுத் தெரிந்து
கொள்கிறாள். ஆயினும் அவளுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. கிராமப் பதிவாளரிடம் செல்கிறாள்.
கிராமப் பதிவாளரே! என் மகனிடமிருந்து வந்த (போஸ்டு) கார்டைப் படித்துக் கூறுங்களேன்
என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். அவள் ஆசிரியரிடம் செல்கிறாள். ஆசிரியரே
இக்கடிதத்தைப் படித்துக் கூறுங்கள் எனக் கேட்கிறாள். பிறகும் அவளுக்கு நிம்மதி
கிடைக்காததால் தபால் நிலையத்தின் மேலதிகாரியிடம் சென்று மேலதிகாரியே! இக்கடிதத்தைப்
படித்துக் கூறுங்களேன் என்று கேட்கிறாள். இவ்வாறு ஏழு, எட்டு முறை கடிதத்தைப்
படித்துக் கேட்காத வரை அவளுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மேலும் (போஸ்டு)கார்டை தனக்கு
அருகிலேயே வைத்துக் கொள்கிறாள். ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்த
ஒருவர் அக்கிராமத்திற்கு வந்தால்,
அவர் படித்தவர் என்று அப்பெண்ணுக்குத் தெரிந்து விட்டால், அவள் அவரிடம்
சென்று இக்கடிதத்தை கொஞ்சம் படித்துக் கூறுங்களேன் எனக் கேட்கிறாள். சுருக்கமாக, படித்த பெண்கள்
ஒருமுறை படித்து விட்டு அமைதியாகி விடுவார்கள். ஆனால், படிப்பறிவில்லாத
பெண்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏழு,
எட்டு முறை கடிதத்தைப் படிக்காத வரை அவர்கள் ஓய்வதில்லை.
நாங்கள் படிக்காதவர்கள் என்ற உங்களின்
சாக்குப் போக்கை இறைவன் ஒருபோதும் கேட்க மாட்டான். நீங்கள் உங்களின் மகனுடைய
(போஸ்டு) கார்டை இத்தனை முறை படிக்க வைத்து கேட்டுள்ளீர்கள். என்னுடைய கார்டை ஏன்
படிக்க வைத்துக் கேட்கவில்லை. உங்கள் மகன் மீதுள்ள நேசம் அளவுக்காவது என் மீது
நீங்கள் நேசம் வைத்திருந்தால்,
என் கடிதத்தையும் படிக்க வைத்துக் கேட்டிருப்பீர்கள்; ஆனால் நீங்கள்
என் கடிதத்தை மூடி வைத்து விட்டீர்கள்.;
பிறரிடமிருந்து கேட்டுத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மகனுடைய கார்டை படிக்க வைத்துக்
கேட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று இறைவன் கேட்பான். உண்மை என்னவென்றால், மனித வாழ்க்கையின்
மையம் எந்தப் பொருளின் மீதுள்ளதோ,
எது இல்லாமல் மனிதன்,
மனிதன் என அழைக்கப்பட மாட்டானோ அது குறித்து நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள்; அறிவிலிகள் என்று
சாக்குப் போக்குகளைக் கூறுவது முற்றிலும் தவறான விஷயமாகும்.'”(அன்வாருல் உலூம்
தொகுதி 18 பக்கம்
135,136)
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்
அவர்களின் தோழர்களும் அன்று குர்ஆனைக் கொண்டு மாபெரும் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் இன்று திருக்குர்ஆனை விட்டு விட்டதன் காரணமாக முஸ்லிம்கள் பெளதீகத்தில்
வீழ்ந்து ஆன்மீகத்தில் வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல்
மஸீஹ் (ரலி) அவர்கள் இது குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்:
“நம்முடைய
நாட்டில் 6 சதவீத
மக்கள் படித்துள்ளனர். 94 சதவீத
மக்கள் படிக்காதவர்கள். படிப்பறிவில்லாத 94 சதவீத
மக்களுக்காக எந்த அளவுக்கு கவலை கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு படித்த 6 சதவீத மக்களுக்காகக்
கவலை கொள்ளத் தேவையில்லை. ஒரு சமுதாயத்தின் 94 சதவீத மக்கள் கெட்டவர்களாக இருந்தால் (மீதமுள்ள) 6 சதவீத மக்கள்
அதிலிருந்து தப்ப முடியாது என்பது நேரடியான ,தெளிவான
விஷயமாகும். மரக் கட்டை (தண்ணீரில்) மிதக்கும்; ஆனால் கல் மூழ்கி விடும். ஒரு பெரிய மரக் கட்டையின் மீது
ஒரு சிறிய கல்லை வைத்தால் அதுவும் மிதக்கும். ஆனால் 20 சிறிய மரக் கட்டையின்
மீது ஒரு பெரிய கல்லை வைத்தால் மரக் கட்டையும் சேர்ந்தே மூழ்கி விடும். பெரும்பான்மை
சிறுபான்மையை தன்னுடன் இழுத்துச் சென்று விடுகிறது. 6 சதவீத மக்கள் திருக்குர்ஆன்
ஓதுகின்றார்கள். அதை நன்கு புரி ந்துள்ளார்கள். ஆனால் 94 சதவீத
மக்களுக்கு குர்ஆன் தெரியவில்லை என்றால் ஆன்மீக சீர்திருத்தம் ஏற்பட முடியாது.
100 சதவீத
மக்கள் திருக்குர்ஆனை ஓதாத வரை,
அதைப் புரிந்து கொள்ளாத வரை,
அதை நன்கு அறிந்து கொள்ளாத வரை நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகவே மீதமுள்ள
94 சதவீதத்தினரையும்
நாம் ஓத வைப்பதும் அவர்களுடைய சோம்பேறித்தனத்தை அகற்றுவதும் அவசியமாகும். மேலும்
அவர்கள் திருக்குர்ஆனை செவியேற்கக் கூடியவர்களாகவும் மாறுவதற்கு மீண்டும் மீண்டும்
கூறி அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். திருக்குர்ஆனை செவியேற்பதும், மனனம் செய்வதும்
அவர்களுக்கு அவசியம் என்பதன் பக்கம் அவர்களுடைய கவனத்தைத் திருப்பி விட வேண்டும்.”
(அன்வாருல் உலூம் தொகுதி 18 பக்கம்
142)
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தாம் செய்யாத ஒரு செயலை பிறரைச்
செய்யுமாறு ஒருபோதும் கட்டளையிடவில்லை!
அப்படியிருக்கும் போது “கல்வியைக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு நம்பிக்கை கொண்ட ஆண், பெண் மீதும் கடமையாகும்”
என்று ஏன் கூறினார்கள்?
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கற்கச் சொன்ன கல்வி உலகக் கல்வியல்ல. மாறாக, ஆன்மீகக் கல்வியாகும்.
இது குறித்து ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
“திருக்குர்ஆனைத்
தெளிவாக நாம் மக்களுக்கு முன்னால் கொண்டு வராத வரை,
அதைப் பற்றி மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தாத
வரை நாம் ஏதாவது மாற்றத்தை உருவாக்கி விடுவோம் என்று நினைத்தால் அது தவறாகும்.
ஒரு பிராமணனைப் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது: ஒரு நாள் கடுமையான குளிரில்
அவன் ஆற்றிற்கு குளிப்பதற்காகச் சென்றான்.
நம்முடைய நிலை அவனைப் போன்றதாகும். கடும் குளிரின் காரணமாக (செல்லும்)
பாதையில் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான்.
ஆற்றில் குளித்தால் நோய்வாய்ப்பட்டு விடுவேன் என அஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால்
இந்துக்களுடைய (மார்க்கக்) கொள்கை என்னவென்றால், (அருகில் ஆறு இருக்கிறது என்றால்) பிராமணர்கள் தினமும் கண்டிப்பாகக்
குளிக்க வேண்டும். ஆகவே கடும் குளிர் இருந்தபோதிலும் அவன் ஆற்றின் பக்கம் சென்று
விட்டான். ஆற்றை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இன்னொரு
பிராமணன் வருவது தென்பட்டது. அவனைப்
பார்த்து, என்ன செய்வது
இன்று குளிக்க விருப்பமில்லை. கடும் குளிராக இருக்கிறது. நீ என்ன செய்தாய் எனக்
கேட்டான். இரண்டாவது பிராமணன்,
நான் செய்தது என்னவென்றால்,
ஒரு கூழாங்கல்லை எடுத்து ஆற்றில் எறிந்தேன். நீ குளித்தது நான் குளித்தது மாதிரிதான்
எனக் கூறி திரும்பி வந்து விட்டேன் என்று பதில் கூறினான். இதைக்
கேட்ட முதலாவது பிராமணன், அப்படியென்றால்
நீ குளித்தது நான் குளித்தது
மாதிரிதான் எனக் கூறினான். அதாவது
கூழாங்கல் குளித்தது இரண்டாவது
பிராமணன் குளித்தது போல் ஆகி விட்டது; இரண்டாவது பிராமணன்
குளித்தது முதல் பிராமணன் குளித்தது போல் ஆகி விட்டது. இதுதான் இன்றைய காலத்து
மக்களின் நிலையாகும். எவரிடமாவது யாராவது அவருடைய மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்டால்
எங்களுடைய மவ்லவி சாஹிபுக்கு நன்கு தெரியும் என பதில் கூறி விடுகிறார்கள்.”(அன்வாருல்
உலூம் தொகுதி 18 பக்கம்
145)
தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'தாயும் பிள்ளையுமானாலும்
வாயும் வயிறும் வேறு”. அதே போன்றுதான் மவ்லவி சாஹிபுக்கு திருக்குர்ஆன் ஓதத்
தெரியும் என்றால் அது உங்களுக்கு ஓதத் தெரிந்தது போலாகி விடுமா? யாராலும் உதவி
செய்ய முடியாத மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு நாம் என்ன பதில் கூறப் போகிறோம்?என்பதை சிந்தித்துப்பார்க்க
வேண்டும்.
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ்
(ரலி) அவர்கள் முஸ்லிம்கள் மார்க்க
அறிவில் எந்த அளவுக்கு குறைபாடுள்ளவர்களாக
இருக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்கள்:
“ஒரு பட்டான்
முஸ்லிமைப் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது: யாரையாவது கலிமா
கூற வைத்து முஸ்லிமாக்க வேண்டும் என்ற
விருப்பம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் வசிக்கின்ற அதே கிராமத்தில் ஒரு மளிகை வியாபாரியும்
வசித்து வந்தார். ஒரு நாள் மளிகைக் கடைக்காரர் தனியாக செல்வதைப் பார்த்த முஸ்லிம்; ஆர்வமிகுதியால்
அவரைப் பிடித்து, நீர் கலிமா
கூறுவீராக; இல்லையென்றால்
அடிப்பேன் என்று கூறினான். நான்தான் முஸ்லிம் கிடையாதே; நான் எப்படி கலிமா
சொல்வேன் என்றார் அவர். அதற்கு அந்த முஸ்லிம், நீ முஸ்லிமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது; இன்று நான் நிச்சயமாக
கலிமா
சொல்ல வைக்க வேண்டும் என்றான். மளிகைக்
கடைக்காரரோ மிகவும் மன்றாடிப் பார்த்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் வேறு யாரேனும்
வந்து தான் தப்பி விடலாமே என்று மளிகைக் கடைக்காரர் தாமதப்படுத்திக் கொண்டே சென்றார்.
ஆனால் தற்செயலாக அந்நேரத்தில் அங்கு யாரும் வரவில்லை. கோழைக்கு உயிர் மிகவும்
நேசத்திற்குரியதாக இருக்கிறது. இவ்வளவு நேரமாக யாரும் வராததைக் கண்ட மளிகை கடைக்காரர், சரி! நீ கலிமாவைக்
கூறிக் கொண்டே செல்; நான் சொல்லிக்
கொண்டே வருகிறேன் என்றார். நீயே சுயமாகக் கூறு என பட்டான் கூறினான். அதற்கு அந்த
இந்து, நான் இந்து
ஆவேன்; எனக்கு
எப்படி கலிமா தெரியும் என்று கேட்டார். இதை கேட்ட முஸ்லிம், உம்முடைய விதி மிக
மோசமாக இருக்கிறது. எனக்கும் கலிமா சொல்லத் தெரியாதே! இல்லையென்றால் இன்று நீர்
முஸ்லிமாகியிருப்பீர்;
நான் சுவர்க்கம் சென்றிருப்பேன் என பட்டான் கூறினான். இதுவே திருக்குர்ஆன்
ஓதத்
தெரியாதவர்களின் நிலையாகும்.” (அன்வாருல்
உலூம் தொகுதி 18 பக்கம்
147)
முஸ்லிகளாகிய நமக்கே திருக்குர்ஆன்
ஓதத் தெரியவில்லையென்றால் பிறகு முஸ்லிம் அல்லாதவருக்கு நாம் என்ன கற்றுக் கொடுப்போம்? திருக்குர்ஆனைத்
தெரியாமல் இஸ்லாத்தின் பக்கம் பிற மக்களை என்ன சொல்லி அழைப்போம்?
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ்
(ரலி) அவர்கள் இன்னோரிடத்தில்
கூறுகிறார்கள்:
“நம்முடைய
தியாகங்கள் உயர் தகுதியைப் பெற்றதாக இருந்தாலும் சரியே! நமது
சந்தாக்களும் மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும்
சரியே! நம்முடைய தப்லீகும் உயர்ந்ததாக இருந்தாலும் சரியே! ஆனால் நாம் எதை நிலை
நாட்ட விரும்புகிறோம்?
இறைவன் மற்றும் அவனுடைய தூதரின் ஆட்சியையா? அவ்வாறென்றால்,
திருக்குர்ஆனைப் புரியாமல் இறைவன் மற்றும் அவனுடைய
தூதரின் ஆட்சி நிலை பெற முடியாது.
(அன்வாருல் உலூம் தொகுதி 18 பக்கம்
147)
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ்
(ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவது
தொடர்பாக நம்முடைய ஜமாஅத்திற்காக செய்த
அழகிய துஆவை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அன்னார் கூறுகிறார்கள்:
“திருக்குர
ஆனின் வேரினை யாரும் பிடுங்கி விடாத அளவுக்கு நாம் நமது ஜமாஅத்தில் அந்தக் குர்ஆனை
நிலை நாட்டிட வேண்டும். நமக்குப் பிறகு நமது சந்ததிகளுக்கும் திருக்குர்ஆனின்
ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும்,
அதை உலகில் பரப்புவதற்கும் அல்லாஹ் நமக்கு வாய்ப்பளிப்பானாக. எவ்வாறு முற்காலத்தில்
மார்க்க சட்ட வல்லுநர்கள் அமர்ந்து வந்தார்களோ அதே போன்று இந்த செயல் மரபை நாம்
விரிவுபடுத்த வண்டும். உதாரணமாக ஹஸ்ரத் இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுடைய
தர்ஸில் 5000 பேர்
கலந்து
கொண்டார்கள். இவ்வாறே நம்முடைய ஜமாஅத்தில்
திருக்குர்ஆன் ஓதக் கூடிய மற்றும் கற்றுக் கொடுக்கக் கூடியவர்களின் உள்ளங்களில், கற்றுக் கொடுப்பவர்கள்
திருக்குர்ஆனை கற்றுக் கொடுப்பதையும்,
கற்றுக் கொள்பவர்கள் தர்ஸுகளில் செல்வதையும் ஒரு துயரமாகவும், அரசாங்க வரியாகவும்
நினைக்காமல் விட்டில் பூச்சிகளாய் அங்கு ஒன்று சேரக் கூடிய ஓர்
ஈர்ப்பை இறைவன் உருவாக்குவானாக. மேலும்
இவ்வாறே நடைபெற்றுக் கொண்டே செல்லட்டுமாக. எதுவரை என்றால், நாமும், நமது சந்ததிகளும், அவர்களின் சந்ததிகளின்
சந்ததிகளும் ஒரு நீண்ட காலம் வரை இறைவனுடைய ஆட்சியின் கீழ் அவனது வேதத்தை கற்றுக்
கொண்டவாறு நம்முடைய வாழ்க்கையின் இன்பம் இதிலேயே மையம் கொண்டிருப்பது போன்று சிரித்துக்
கொண்டே மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தவாறு கடந்து செல்லக் கூடியவர்களாவோமாக!
(அன்வாருல் உலூம் தொகுதி 18 பக்கம்
162)
இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது ரலி) அவர்கள் திருக்குர் ஆனின் மகத்துவத்தையும் அதைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் நமக்கு எடுத்துக் கூறியதை நாம் நன்கு விளங்கி அதன்படி செயல்படும் நல்வாய்ப்பை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.
ஆக்கம்: முரப்பி A.P.A தாரிக் அஹ்மது-இன்சார்ஜ் தமிழ் டெஸ்க் காதியான்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None