இறைவன் தன் அருள்மறையாம் திருக்குர்ஆனில்
நன்நம்பிக்கை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறான்.
சூரா நூரின் 56-ம் திருவசனமாக இவ்வாறு காண்கிறோம்;
وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ
لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ کَمَا اسۡتَخۡلَفَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ
“உங்களில்
நன்நம்பிக்கை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுவோர்களில், அவர்களுக்கு முன்னுள்ளோரில்
ஏற்படுத்தியது போல் பூமியில் கிலாஃபத்தை நிலைநாட்டுவதாக இறையோன் வாக்குறுதி அளிக்கிறான்.”
(24:56)
எவ்வாறு முன்னிருந்தோர்களில் குறிப்பாக
மூஸா நபி அவர்களைப் பின்பற்றிய மக்கள் மத்தியில் இறைவன் கிலாஃபத்தை ஏற்படுத்தி
இருந்தானோ அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய சமுதாயத்திலும் கிலாஃபத்தை
ஏற்படுத்துவதாக இறையோன் இவ்வாக்கியங்கள் மூலம் அறிவிக்கின்றான்.
இதற்கேற்ப அண்ணல் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் சஹாபா பெருமக்கள் ஒன்றுகூடி ஒருமனதாக ஹஸ்ரத்
அபூபக்கர் (ரலி) அவர்களை கலீஃபாவாக தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள்
ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக ஒரே தலைவரின் கீழ் செயல்படும் அணியாக திகழ வேண்டுமென்ற
கோட்பாட்டை அந்த சஹாபா பெருமக்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்!
தொடர்ந்து ஹஸ்ரத் உமர் (ரலி), ஹஸ்ரத் உஸ்மான்
(ரலி), ஹஸ்ரத்
அலி (ரலி) ஆகியோர் இஸ்லாத்தின் கலீஃபாக்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆனால், முஸ்லிம் சமுதாயம்
காலப்போக்கில் சிதறுண்டது. கிலாஃபத்தின் அருளைப் பெறத் தகுதியற்றதாக அது மாறியது.
அதனால் கிலாஃபத் என்ற இறையோனின் அருள் முஸ்லிம் சமதாயாத்திலிருந்து பறிக்கப்பட்டு
விட்டது.
இதைப்பற்றி ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக முன்னறிவித்திருப்பதோடு இஸ்லாத்தில் மீண்டும் கிலாஃபத்
எப்போது மலரும் என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள். மிஷ்காத் ஷரீபில்
நாம் இவ்வாறு காண்கிறோம்:
“
இறைவன் நாடும் வரை உங்களில் இந்த நுபுவ்வத் இருக்கும். பின்பு இறைவன் அதை
எடுத்துக் கொள்வான். பிறகு இறைவன் நாடும் வரை நுபுவ்வத் வழியிலுள்ள கிலாஃபத்
இருக்கும். அதற்குப் பிறகு இறைவன் நாடும் வரை கொடிய அரசாங்கம் இருக்கும். பின்பு
இறைவன் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு இறைவன் நாடும் வரை பலாத்காரமான ஆட்சி
இருக்கும். பிறகு அதையும் இறைவன் எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியிலுள்ள
கிலாஃபத் உண்டாகும்.”
இதற்கேற்ப “கிலாஃபத் அலா மின்ஹாஜின்
நுபுவ்வத்' நபிகள்
கோமானைப் பின் தொடர்ந்த கிலாஃபத் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் கிலாஃபத்துடன் முற்றுப்
பெற்றது. அதன் பின் பெயரளவிலான கிலாஃபத் ஒரு நீண்ட காலம் நிலை நின்றது. ஹிஜ்ரி
656-ம் ஆண்டு ஹலாகூகான் என்பவன் பாக்தாத் நகரைக் கைப்பற்றியபோது இந்த “கிலாஃபத்”தும்
சரிந்தது.
துருக்கியில் சில காலம் கிலாஃபத்
என்ற பெயரில் அரசாட்சி நடைபெற்றது. முதலாம் உலகப் போரின் போது இந்த “கிலாஃபத்'தும் வீழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து பல முஸ்லிம் தலைவர்கள்
கிலாஃபத்தை ஏற்படுத்த பல முறை முயற்சித்தும் வெற்றி பெறவில்லை.
இந்தியாவிலும் மெளலானா முஹம்மது அலி, மெளலானா செளகத்
அலி போன்றோர் ‘கிலாஃபத் இயக்கம்' என்ற பெயரில் ஒரு
கிளர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அவர்களும் வெற்றி பெறவில்லை.
உலக முஸ்லிம்களுக்கு ஒரு தலைமைபீடத்தை
உருவாக்கி விட வேண்டுமென்று செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றன.
அதுமட்டுமல்ல உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்ட
கழகங்களும் இயக்கங்களும் கூட வெற்றி பெற இயலவில்லை. முஸ்லிம் லீக், ஜமியத்துல் உலமா, மஜ்லிஸே முஷாவரத்
ஆகிய இயக்கங்களின் இன்றைய நிலை இதற்கு உதாரணமாகும்.
1964-ல் அப்போதைய சவூதி அரேபிய நாட்டு
மன்னர். இப்னு ஸவூதின் தலைமையில் “ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி' என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில், திருக்குர்ஆன்
மொழிபெயர்ப்பு வெளியிடல் போன்ற நல்ல பல பணிகளை செய்தாலும் குழப்பத்திற்கு பேர்போன
ஒரு போக்கற்ற கும்பலின் ஊடுருவலால் இவ்வியக்கத்தின் போக்கு திசை மாறியது. அப்போது
அரபு நாடுகளில் அஹ்மதிய்யா இயக்கத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதைத் தவிர
வேறு எதையும் இதனால் செய்யமுடியாதிருந்தது.
சில வருடங்களுக்கு முன்னால் எல்லா
முஸ்லிம் அரசுகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மலேஷியாவில் இஸ்லாமிய செகரட்டேரியட்
என்றதொரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக மலேஷியப் பிரதமர்
துங்கு அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர்
பத்திரிக்கை நிருபர்களிடம் பேசுகையில் இந்த இயக்கம் தனது நோக்கத்தை நிறைவேற்ற இயலாது
தோல்வியடைந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இறையோன் முஸ்லிகள் நன்னம்பிகை கொண்டு
நற்செயல்களில் ஈடுபட்டால் தன்புறமிருந்து அவர்களுக்குத் தலைவர்களை, கலீஃபாக்களை நியமிப்பதாக கூறுகின்றான். இன்று தமக்கென ஒரு தலைவரில்லாது உலக
முஸ்லிம்கள் வாழுகின்றார்களென்றால் அதற்குக் காரணம் அவர்களிடத்தில் நன்னம்பிகையுமில்லை, நற்செய்கையுமில்லை.
அதுமட்டுமல்ல, ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட முன்னறிவிப்பின்படி நபியை பின் தொடர்ந்த கிலாஃபத்
தோன்ற வேண்டியதிருந்தது. அந்த 'நுபுவ்வத்' வழியிலான கிலாஃபத்
மூலமே முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட வேண்டியதிருக்கிறது.
நுபுவ்வத் வழியிலான “கிலாஃபத்” மூலமே
முஸ்லிம்கள் ஒன்றுபட இயலும் என்ற கருத்தை தற்கால பல முஸ்லிம் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
லாஹூர் “அஹ்லு சுன்னதி வல்ஜமாஅத்''தின் மார்க்க
ஏடான “ஜித்தோ ஜஹத்தில்”
அதன் ஆசிரியர் இவ்வாறு வரைந்துள்ளார்:
“முஸ்லிம் தலைவர்கள் தமது சுயநலத்திற்காக
நுபுவ்வத் வழியிலான கிலாஃபத்தை இல்லாமலாக்கிவிட்டார்கள். அது அவர்கள் முஸ்லிம்
சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். இடையனற்ற ஆட்டு மந்தையைபோல் இன்று முஸ்லிம்
சமுதாயம் சிதறிவிட்டது. இந்த இழி நிலையிலிருந்து முஸ்லிகளை காப்பாற்ற “கிலாஃபத் அலா
மின்ஹாஜின் நுபுவ்வத்” அதாவது நபியை பின்தொடரும் கிலாஃபத்தால் மட்டுமே முடியும்.”
அதேபோல் “அஹ்லு ஹதீத்” ஏட்டின் ஆசிரியர்
இவ்வாறு வரைகிறார்:
இந்த உம்மத்தில் இப்போதாவது “கிலாஃபத்
அலா மின்ஹாஜின் நுபுவ்வத்” உண்டுபண்ணப்பட்டால் அழியப்போகும் முஸ்லிம் சமுதாயத்தைக்
காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் இறுதி நாளில் நம் ஒவ்வொரு வனிடத்திலும், நீங்கள் உங்களின்
அரசுகளை உருவாக்க முயற்சி செய்தீர்கள். ஆனால் இஸ்லாத்திற்கு வெற்றித் தேடித் தர
திருக்குர்ஆனின் ஆட்சியை உலகில் நிலை நிறுத்த நீங்கள் என்ன செய்தீர்கள் என்று
இறைவன் கேட்பான்.”
ஆனால் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில்
அஹ்மதிய்யா இயக்கத்தில் மட்டுமே நபியை பின் தொடரும் கிலாஃபத் இருந்து வருகிறது.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மேற்கண்ட முன்னறிவிப்பின்படி இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இறைவன் “நுபுவ்வத்”தை
மீண்டும் மலரச் செய்தான். நபியும் ரஸூலுமான இமாம் மஹ்தி மஸீஹை பின்பற்றிய மக்கள்
ஏக இறைவன் மீது நன்னம்பிக்கை கொண்டு அண்ணல் மாநபியை பின்பற்றி நற்செய்கையிலும் ஈடுபட்டதன்
காரணமாக இறைவன் தன் மாறாத வாக்குறுதியின்படி அம்மக்கள் மத்தியில்“கிலாஃபத்”தை ஏற்படுத்தினான்.
இந்த “கிலாஃபத்” என்னும் அருட்கொடையைப்
பெற்றதன் காரணமாக, ஒரே தலைவரின்
கீழ் ஒற்றுமையாக, கட்டுபாட்டுடன்
இயங்குகின்ற காரணத்தால் இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம்
இஸ்லாத்திற்கு வெற்றி தேடித்தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
“நான் உமது
பிரச்சாரத்தை பூமியின் எல்லைகள் வரை எட்ட வைப்பேன்?” என்று இறையோன்
ஹஸ்ரத் மஹ்தி மஸீஹ் (அலை) அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி இன்று அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாஅத் உலகெங்கும் பரவி இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
52 கோடி முஸ்லிம்களால், ஆள் பலம், பண பலம், ஆட்சி பலம் இருந்தும்
செய்ய முடியாத இஸ்லாமியப் பிரச்சாரத்தை இன்று ஒரு கோடி அஹ்மதிகள் (இது 1974 ஆம் ஆண்டு கணக்குப்படி, தற்போது உலகில்
18 கோடி அஹ்மதி
முஸ்லிம்கள் உள்ளனர்) கிறிஸ்தவ கோட்டைகளான ஐரோப்பிய நாடுகளிலும், கம்யூனிஸ்ட் நாடுகளிலும், ஏன் யூத நாடான
இஸ்ராயில் நாட்டிலும் செய்து வருகிறார்களென்றால் அதற்குக் காரணம் “கிலாஃபத்”
என்னும் இறையோனின் கயிற்றைப் பலமாக பற்றியிருப்பதேயாகும்.
இன்று ஐரோப்பிய நாடுகளில் பள்ளிவாசல்கள்
கட்டப்பட்டு ஐந்து வேளை பாங்கொலி எழுப்பப்படுகிறதென்றால் அது அஹ்மதிய்யா ஜமாஅத்
“கிலாஃபத்” மூலம் நிகழ்த்திய மாபெரும் சாதனையே ஆகும்.
இலண்டன் மாநகரில் அஹ்மதிய்யா மாதர்
சங்க நிதியிலிருந்து ஒரு பள்ளி வாசல் நிர்மாணிக்கப்பட்டபோது அங்குள்ள கிறிஸ்தவ ஏடான
பப்டிஸ்ட் டைம்ஸ் கீழ்வரும் அறிக்கையை வெளியிட்டது:
“இந்த பள்ளிவாசலை
நாம் ஓர் சவாலாக கருத வேண்டும். மேற்கத்திய நாடுகள் இதுவரை கிழக்கு நாடுகளை மார்க்க
ரீதியில் (கிறிஸ்தவ மார்க்கத்தை பரவல் செய்வதன் மூலம்) தம்மோடு இணைக்க முயற்சித்தது.
ஆனால் அது தனது பலத்தை சொந்த வீட்டிலேயே இழந்து நிற்கிறது. அதனால் கிழக்கு நாடுகள்
மேற்கு நோக்கி வர ஆரம்பித்து விட்டது. இப்போது முஸ்லிம்கள் வணக்கத்திற்கு அழைக்கும்
ஒலி நம் நாட்டிலும் கேட்க ஆரம்பித்து விட்டது.!”
இதுபோல் ஹாலந்து தலைநகரான ஹேக் நகரில்
அஹ்மதிய்யா ஜமாஅத் முதல் முதலில் ஒரு பள்ளிவாயிலை நிர்மாணித்தபோது அதன் புகைப்படத்தையும்
பிரசுரித்து ஒரு பத்திரிகை இவ்வாறு வரைந்தது:
இஸ்லாம் ஐரோப்பாவை இரண்டு முறை ஆக்கிரமித்திருந்தது.
ஒன்பதாம் நூற்றாண்டில் அது ஸ்பெயினில் ஆட்சி நடத்தியது. இரண்டாவதுமுறை பதினோறாம்
நூற்றாண்டில் துருக்கியர் ஐரோப்பியாவில் வெற்றி பெற்றனர். ஆயினும் இவ்விரண்டு
தடவையும் நாம் நமது பலத்தால் அவர்களை வென்று அவர்களை துரத்தியடித்து விட்டோம்.
ஆனால் இப்போது ஆன்மீக ரீதியில் இதயங்களை
கவருகின்ற முறையில் முஸ்லிம்கள் ஐரோப்பாவை வெல்லுவதற்கு முயன்று வருகிறார்கள். இந்த
ஆன்மீக ஆக்கிரமிப்பை முறியடிக்க கிறிஸ்தவ மார்க்கத்திற்கு இன்று சக்தி இருக்கிறதா?”
ஒரு பக்கம் கோடிக்கணக்கான முஸ்லிம்களைக்
கொண்ட ஒரு சமுதாயம் மாலுமியற்ற கப்பலைப் போல் உலகம் என்ற கடலில் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. மறுபக்கம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பணபலம், படைபலம், ஆட்சிபலம் எதுவுமற்ற
நிலையில் ஏகத்துவத்தை நிலை நாட்டிட ஏந்தல் நபிபெருமானின் வழியில் உலக மக்களை ஒன்று
சேர்த்திட இடையறாது முயன்று வருகிறது. அம்முயற்சியில் இறையருளால் வெற்றி மேல் வெற்றியும்
பெறுகிறது. இதற்குக் காரணம் 'கிலாஃபத்' என்னும் இறையருள்
அஹ்மதிகளோடு இருப்பதேயாகும்.
எனவே இன்றைய முஸ்லிம்கள்“ஒற்றுமையென்னும்
கயிற்றை பிடிப்போம்” என்று ஆங்காங்கே பெயரளவில் ஒலியெழுப்பி தோல்வியை தழுவுவதை விட்டுவிட்டு, “நீங்கள் இறையோனின்
கயிற்றை கூட்டாகப் பற்றிப் பிடியுங்கள்”
என்று திருமறை கூறுவதற்கேற்ப இறையோனின் கயிறாகிய “கிலாஃபத்தை” பற்றி பிடிக்க முன்வர
வேண்டும்!
ஆக்கம்: முரப்பி மர்ஹூம் முஹம்மது உமர் சாஹிப் H.A
(1974 ஆம் ஆண்டு சமாதான வழி கிலாஃபத் மலரில் வெளிவந்த கட்டுரை)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None