பைபிள்‌ புகட்டும்‌ ஏகத்துவம்‌

 

பைபிள்‌ புகட்டும்‌ ஏகத்துவம்‌

 கர்த்தர் ஒருவரே!

கிறித்தவர்கள்‌ தேவன்‌ (இறைவன்‌) மூன்று பேர்‌ சேர்ந்தவர்‌ என்று கூறி ஏகதெய்வக்‌ கொள்கைக்கு முரணாக தேவனுக்கு இணை வைக்கின்றனர்‌. ஆனால்‌ பைபிளைப்‌ பார்க்கும்போது தேவன்‌ ஒருவனே என்றும்‌ தேவனுடன்‌ இணையாக வேறெவரையும்‌ சேர்க்கக்‌ கூடாது என்றும்‌ போதிப்பதைப்‌ பார்க்கிறோம்‌. தேவன்‌ கூறியதாக பைபிள் இவ்வாறு கூறுகிறது:

உன்‌ தேவனாகிய கர்த்தர்‌ நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள்‌ உண்டாயிருக்க வேண்டாம்‌. மேலே வானத்திலும்‌, பூமியின்‌ கீழ்‌ தண்ணீரிலும்‌ உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும்‌, யாதொரு விக்கிரகத்‌தையாகிலும்‌ நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்‌. நீ அவைகளை நமஸ்கரிக்கவும்‌ சேவிக்கவும்‌ வேண்டாம்‌.” (யாத்திராகமம்‌ 20:2-5)

பைபிளின்‌ இந்த வசனங்கள்‌ இயேசு கிறிஸ்துவையும்‌, கிறிஸ்துவின்‌ சொரூபத்தையும்‌, தேவனுக்கு ஒப்பாகவும்‌ நமஸ்கரிக்கவும்‌ சேவிக்கவும்‌ கூடாதென்று தெளிவாக விளக்குகின்றன. தேவன்‌ ஒருவன்தான்‌ என்பதை கீழ்வரும்‌ பைபிள்‌ வசனமும்‌ கூறுகின்றது:

இஸ்ரவேலே! கேள்‌: நம்முடைய தேவனாகிய கர்த்தர்‌ ஒருவரே கர்த்தர்‌. நீ உன்‌ தேவனாகிய கர்த்தரிடத்திலே உன்‌ முழு இருதயத்தோடும்‌, உன்‌ முழு ஆத்துமாவோடும்‌, உன்‌ முழுப்‌ பலத்‌தோடும்‌ அன்பு கூறுவாயாக.” (உபாகமம்‌ 6: 4,5)

எனக்கு முன்‌ ஏற்பட்ட தேவன்‌ இல்லை; எனக்குப்‌ பின்‌ இருப்பதும்‌ இல்லை. நான்‌, நானே கர்த்தர்‌. என்னையல்லாமல்‌ ரட்சகர்‌ இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்‌ பண்ணினேன்‌; உங்களில்‌ இப்படிச்‌ செய்யத்தக்க அந்நிய தேவன்‌ இல்லை; நானே தேவன்‌ என்பதற்கு நீங்கள்‌ எனக்குச்‌ சாட்சிகள்‌ என்று கர்த்தர்‌ சொல்லுகிறார்‌. நான்‌ உண்டாகாததற்கு முன்னும்‌ நானே இருக்கிறேன்‌. என்‌ கைக்குத்‌ தப்புவிக்கத்‌ தக்கவன்‌ இல்லை; நான்‌ செய்கிறதைத்‌ தடுப்பவன்‌ யார்‌?.......நானே உங்கள்‌ பரிசுத்தராகிய கர்த்தரும்‌, இஸ்ரவேலின்‌ சிருஷ்டிகரும்‌, உங்கள்‌ ராஜாவுமானவர்‌.” (ஏசாயா 43: 10-15)

“நான் முந்தினவரும்‌, நான்‌ பிந்தினவருந்தானே; என்னைத்‌ தவிர தேவன்‌ இல்லை......” (ஏசாயா 44:6)

நானே கர்த்தர்‌; வேறொருவர்‌ இல்லை. என்னைத்‌ தவிர தேவன்‌ இல்லை. என்னைத்‌ தவிர ஒருவரும்‌ இல்லையென்று சூரியன்‌ உதிக்கிற திசையிலும்‌, அது அஸ்தமிக்கிற திசையிலும்‌ அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும்‌, நான்‌ உனக்கு இடைக்கட்டு கட்டினேன்‌; நானே கர்த்தர்‌, வேறொருவர்‌ இல்லை.” (ஏசாயா 45:5,6),

முந்திப்‌ பூர்வ காலத்தில்‌ நடந்தவைகளை நினையுங்கள்‌; நானே தேவன்‌; வேறொருவரும்‌ இல்லை; நானே தேவன்‌; எனக்குச்‌ சமானமில்லை.”” (ஏசாயா46:9)

அந்நிய தேவர்களின்‌ பெயரைச்‌ சொல்ல வேண்டாம்‌; அது உன்‌ வாயிலிருந்து பிறக்கக்‌ கேட்கப்படவும்‌ வேண்டாம்‌.” (யாத்திராகமம்‌ 23:13)

விக்கிரகங்களை நாடாமலும்‌ வார்ப்பிக்‌கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும்‌ இருப்பீர்களாக; நான்‌ உங்கள்‌ தேவனாகிய கர்த்தர்‌.” (லேவியராகமம்‌ 19:4)

நீங்கள்‌ உங்களுக்கு விக்கிரகங்களையும்‌, சுரூபங்களையும்‌ உண்டாக்காமலும்‌, உங்களுக்குச்‌ சிலையை நிறுத்தாமலும்‌, சித்திரந்தீர்த்த கல்லை நமஸ்கரிக்கும்‌ பொருட்டு உங்கள்‌ தேசத்தில்‌ வைக்காமலும்‌ இருப்பீர்களாக. நான்‌ உங்கள்‌ தேவனாகிய கர்த்தர்‌.” (லேவியராகமம்‌ 26:1)

நீ அவர்களுடைய தேவர்களைப்‌ பணிந்து கொள்ளாமலும்‌ சேவியாமலும்‌ அவர்களின்‌ செய்கையின்படி "செய்யாமலும்‌ அவர்களை நிர்மூலம்‌ பண்ணி‌ அவர்களுடைய சிலைகளை உடைத்துப்‌ போடுவாயாக. உங்கள்‌ தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்‌.''( யாத்திராகமம்‌ 23:24,25)

இயேசு ஏகத்துவத்தையே போதித்து வந்தார்

பைபிளின்‌ மேற்கண்ட வசனங்களிலிருந்து கர்த்தர்‌ ஒருவர்தான்‌; அவருக்கு இணை எவருமில்லை என்பதே வேதாகமத்தின்‌ கொள்கையாக இருந்தது என்பதைப்‌ புரிந்து கொள்ளலாம்‌. அது மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவும்‌ ஏகத்துவக்‌ கொள்கையைத்தான்‌ போதித்து வந்தார்‌ என்பதையும்‌ பைபிள்‌ புதிய ஏற்பாட்டிலிருந்து விளங்கிக்‌ கொள்ளலாம்‌. உதாரணத்திற்கு சில வசனங்களைக்‌ கீழே தருகின்றோம்‌:

இயேசு அவருக்குப்‌ பிரதியுத்திரமாக: கற்பனைகளிலெல்லாம்‌ பிரதான கற்பனை எதுவென்றால்‌, இஸ்ரவேலே கேள்‌, நம்முடைய தேவனாகிய கர்த்தர்‌ ஒருவரே கர்த்தர்‌.” (மாற்கு12:29)

பிசாசு (இயேசுவாகிய) அவரை என்னைப்‌ பணிந்து கொண்டால்‌, இவைகளையெல்லாம்‌ உமக்குத்‌ தருவேன்‌ என்று சொன்னான்‌. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன்‌ தேவனாகிய கர்த்தரைப்‌ பணிந்து: கொண்டு, அவர்‌ ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்‌.” (மத்தேயு 4:9, 16)

இயேசு பிதா என்று சொன்னதும் ஏக இறைவனைத்தான்

இந்த வசனத்தில்‌ இயேசு தாம்‌ தேவன்‌ அல்ல என்றும்‌, தமக்கு ஆராதனை செய்யக்‌ கூடாது என்றும்‌, தேவனாகிய கர்த்தர்‌ ஒருவனுக்கே ஆராதனை செய்ய வேண்டும்‌ என்றும்‌ மிகத்‌ தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்‌. அது மட்டுமின்றி இயேசுவின்‌ சொல்‌ வழக்கின்படி, பிதா என்று குறிப்பிட்டதும்‌ ஏக இறைவனைத்தானே தவிர தன்னைப்‌ பற்றியல்ல என்றும்  நாம்‌ விளங்கிக்‌ கொள்கிறோம்‌. எனவேதான்‌ அவர்‌ இவ்வாறு போதித்தார்‌:

பூமியிலே ஒருவரையும்‌ உங்கள்‌ பிதா என்று சொல்லாதிருங்கள்‌. பரலோகத்‌தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப்‌ பிதாவாக இருக்கிறார்‌. (மத்தேயு 23:9)

அப்பொழுது ஒருவர்‌ வந்து அவரை நோக்கி: நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான்‌ எந்த நன்மையைச்‌ செய்ய வேண்டும்‌? எனக்‌ கேட்டான்‌. அதற்கு அவர்‌, நீ என்னை நல்லவன்‌ என்று சொல்வானேன்‌? தேவன்‌ ஒருவனைத்‌ தவிர நல்லவன்‌ ஒருவனும்‌ இல்லையே என்றார்‌.” (மத்தேயு 19:16,17)

இதில்‌ இயேசு மற்றவர்களைப்‌ போன்று தாமும்‌ ஒரு மனிதன்தான்‌ என்பதைக்‌ கூறுகிறார்‌. அது மட்டுமின்றி தேவன்‌ ஒருவனைத்தான்‌ கர்த்தர்‌ எனச்‌ சொல்ல வேண்டுமே தவிர தம்மை நோக்கி கர்த்தர்‌ எனச்‌ சொல்லக்‌ கூடாது எனவும்‌, அப்படிச்‌ சொல்லுகிறவருக்கு என்ன நேரிடும்‌ என்பதயும்‌ கீழ்‌ வரும்‌ வசனத்தில்‌ போதிக்கிறார்‌:

பரலோகத்திலிருக்கிற என்‌ பிதாவின்‌ சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில்‌ பிரவேசிப்பவனல்லாமல்‌ என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்‌ அதில்‌ பிரவேசிப்பதில்லை. (மத்தேயு 7:21)

இதில்‌ இயேசு தான்‌ கடவுள்‌ இல்லை என்றும்‌ அவ்வாறு என்னை நோக்கி அழைப்பவர்‌ பரலோக ராஜ்ஜியத்தில்‌ நுழைய முடியாது எனவும்‌ எச்சரிக்கை விடுக்கின்றார்‌! இதனை கிறித்தவ அன்பர்கள்‌ கவனத்தில்‌ கொண்டு இயேசுவின்‌ குரலுக்கு செவிசாய்ப்பது அவர்களின்‌ கடமையாகிறது.

இயேசு சிலுவையில்‌ அறையப்பட்டபோதும்‌ ஏக இறைவனையே அழைத்து பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறார்‌:

ஏலீ! ஏலீ ! லாமா சபக்தானீ என்று மிகுந்த சப்தமிட்டு கூப்பிட்டார்‌. அதற்கு என்‌ தேவனே என்‌ தேவனே ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌ என்று அர்த்தமாம்‌. (மத்தேயு 27:46)

ஆதாம்‌ செய்த பாவத்தினால்‌ மனித குலம்‌ தொடர்ந்து பாவத்தைச்‌ சுமந்து வருகிறது. அதற்கு மீட்பு தேடித்‌ தரத்தான்‌, பைபிளினாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட சபிக்கப்பட்ட மரணமாகிய” சிலுவை மரணத்தை இயேசு ஏற்றுக்‌ கொண்டார்‌ என்று கிறித்தவர்கள்‌ வாதிக்கின்றனர்‌. அவரது பிறப்பின்‌ நோக்கமே அதுதான்‌ என்ற கிறித்தவர்களின்‌ வாதம்‌ உண்மையென்றால்‌, பின்னர்‌ சிலுவை மரணத்தை அவர்‌ மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌; இறைவா! நான்‌ பிறந்த நோக்கம்‌ நிறைவேறி விட்டது. நான்‌ என்‌ வாழ்வின்‌ நோக்கத்தை அடைந்து விட்டேன்‌. இறைவா! மிக்க நன்றி எனக்‌ கூறியிருக்க வேண்டும்‌. ஆனால்‌ அவரோ கடைசி கட்டத்தில்‌ என்‌ தேவனே! ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌ என இறைவனிடம்‌ மன்றாடியதாக பைபிளின்‌ மேற்கண்ட வசனம்‌ கூறுகிறது. அது மட்டுமின்றி அந்த சபிக்கப்பட்ட சிலுவை மரணத்திலிருந்து தன்னைக்‌ காப்பற்றும்‌படி அவர்‌ இறைவனை வேண்டியதாகவும்‌ பைபிளில்‌ காண்கிறோம்‌. இதுவும்‌ அவரது தோற்றத்தின்‌ நோக்கம்‌ சிலுவையில்‌ மரணிப்பதல்ல என்பதைத்‌ தெளிவுபடுத்துகிறது. பைபிளில்‌ நாம்‌ இவ்வாறு காண்கிறோம்‌:

அப்பொழுது அவர்‌: என்‌ ஆத்துமா மரணத்துக்‌ கேதுவான துக்கங்‌ கொண்டிருக்கிறது; நீங்கள்‌ இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள்‌ என்று சொல்லி, சற்று அப்புறம்போய்‌, முகங்குப்புற விழுந்து: என்‌ பிதாவே! இந்தப்‌ பாத்திரம்‌ என்னை விட்டு நீங்கக்‌ கூடுமானால்‌ நீங்கும்படி செய்யும்‌; ஆகிலும்‌ என்‌ சித்தத்தின்‌ படியல்ல; உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்‌ பண்ணினார்‌.” (மத்தேயு 26:38,39 & மாற்கு14:36 & லூக்கா 22:42)

ஆக, சிலுவை மரணத்தினால்‌ இயேசுவின்‌ ஆத்துமா மரணத்துக்‌ கொப்பான துக்கம்‌ கொண்டிருந்ததையும்‌, அத்தகைய மரணத்திலிருந்து தன்னைக்‌ காப்பாற்றுமாறும்‌ அவர்‌ இறைவனை வேண்டியதிலிருந்து அவர்‌ மனம்‌ விரும்பி அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ளத்‌ தயாராக இருக்கவில்லை என்பதும்‌ இதிலிருந்து புலனாகிறது.

இங்கு நேர்மையாக‌ சிந்திக்கும்‌ வாசகர்களுக்கு இன்னொன்றையும்‌ நினைவுபடுத்திக்‌ கொள்ள விரும்புகிறோம்‌. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ தோழர்கள்‌ இறை வழியில்‌ மரணமடைவதற்கு எந்நேரமும்‌ தயாராக இருந்தனர்‌. அவ்வாறு புனிதப்‌ போரில்‌ கொல்லப்பட்டாலும்‌ வாழ்வின்‌ நோக்கத்தை தாம்‌ அடைந்து விட்டதாகக்‌ கருதினர்‌. அவ்வாறே ஒரு போரில்‌ ஏக இறை மறுப்பாளர்‌ ஒருவர்‌ ஒரு முஸ்லிமைக்‌ கொன்றபோது அந்த முஸ்லிம்‌ இறைவழியில்‌ தன்‌ இன்னுயிரைத்‌ தந்தபோது, ஃபுஸ்து பிரப்பில்‌ கஅபா (கஅபா இறைவன்‌ மீது ஆணையாக! நான்‌ வெற்றியடைந்து விட்டேன்‌) எனக்‌ கூறினார்‌. ஆக, இவ்வாறு இறை வழியில்‌ இன்னுயிரைத்‌ தர எப்பொழுதும்‌ ஆயத்தமாக இருப்பவர்களின்‌ வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள்‌ வெளிவருகின்றன. இந்த வகையில்‌ இயேசுவைப்‌ பற்றி‌ பைபிள்‌ கூறும்‌ வார்த்தைகளே அவரது கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுவதாக இருக்கிறது!

இயேசு தேவனுடைய தீர்க்கதரிசியே!

அடுத்து, இயேசு தம்மை தேவன்‌ அல்ல; மாறாக, தேவனுடைய தீர்க்கதரிசி என்றே போதித்திருக்கிறார்‌ என்பதையும்‌ பைபிளின்‌ கீழ்வரும்‌ வசனம்‌ தெளிவாக்குகின்றது:

என்னிடத்தில்‌ விசுவாசமாயிருக்கிறவன்‌ என்னிடத்தில்‌ அல்ல; என்னை அனுப்பினவரிடத்தில்‌ விசுவாசமாயிருக்கிறான்‌. என்னைக்‌ காண்கின்றவன்‌ என்னை அனுப்பினவரைக்‌ காண்கிறான்‌. நான்‌சுயமாய்ப்‌ பேசவில்லை; நான்‌ பேசவேண்டியது இன்னதென்றும்‌, உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும்‌ என்னை அனுப்பின பிதாவே எனக்குக்‌ கட்டளையிட்டார்‌.'' (யோவான்‌ 12:44,45&49)

இதில்‌ இயேசு கிறிஸ்து தம்மை இறைவனால்‌ அனுப்பப்பட்டவர்‌ என்று குறிப்பிடுகிறார்‌. ஆக, இஸ்லாமிய சொல்‌ வழக்கில்‌ இறைதூதர்‌ என்று கூறப்படுகின்றதையே இயேசுவும்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌ என்பதை இயேசுவின்‌ கூற்றுகளும் நிரூபிக்கின்றன.

தேவகுமாரன் என்பதற்கு நேரடிப் பொருள் இறை மகன் அல்ல

தேவகுமாரன்‌ என்றால்‌ அதற்கு இறைவன்‌ மகன்‌ என்ற நேரடிப்‌ பொருள்‌ அல்ல என்பதற்கு இயேசுவே கொடுத்த ஒப்புதல்‌ வாக்குமூலம்‌!

கிறித்தவர்கள்‌ இயேசுவைப்‌ பற்றி பைபிளில்‌ தேவகுமாரன்‌ எனக்‌ கூறியிருப்பதால்‌ அவர்‌ இறைவனின்‌ மகன்‌ என்ற நேரடியான பொருளைக்‌ கொடுக்கின்றனர்‌. இது பைபிளின்‌ சொல்‌ வழக்கை கிறித்தவர்களே புரியாததன்‌ விளைவினால்‌ உருவான தவறான கொள்கையாகும்‌. தேவகுமாரன்‌ என்ற இந்தச்‌ சொல்‌ பைபிளில்‌ பிற தீர்க்கதரிசிகளுக்காகவும்‌ பயன்படுத்தப்‌ பட்டுள்ளது. பிறகு கிறித்தவர்களின்‌ வாதப்படி அவர்களையும்‌ தேவகுமாரன்‌ என்று விசுவாசம்‌ கொள்ள வேண்டி வரும்‌; ஆனால்‌ இக்‌கருத்தை கிறித்தவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்‌ என்பது வெளிப்படை! உதாரணமாக சில மேற்கோள்களைக்‌ கீழே தருகிறோம்‌:

இஸ்ரவேல்‌ என்னுடைய குமாரன்‌. என்‌ சேஷ்ட புத்திரன்‌'” (யாத்திராகமம்‌ 4:22)

இந்த வசனத்தில்‌ இஸ்ரவேலை தேவனின்‌ சேஷ்ட புத்திரன்‌ என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரவேலுக்கு நான்‌ பிதாவாயிருக்கிறேன்‌; ஏப்ராயீம்‌ என்‌ சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்‌.” (எரேமியா 31:9)

கர்த்தர்‌ என்னை நோக்கி: நீர்‌ என்னுடைய குமாரன்‌; இன்று நான்‌ உம்மை ஜநிப்பித்தேன்‌.” (சங்கீதம்‌ 2:7)

இந்த வசனத்தில்‌ தாவீது தீர்க்கதரிசியை தேவகுமாரன்‌ என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே இயேசுவுக்கும்‌ இந்தச்‌ சொல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில்‌ இயேசுவுக்கு மட்டும்‌ தனிச்‌ சிறப்பு ஏதுமில்லை என்பது பைபிள்‌ பழைய ஏற்பாடு நடுநிலையாளர்‌களுக்குப்‌ பாடம்‌ புகட்டி இருக்கிறது. அவ்வாறே சாலோமன்‌ தீர்க்கதரிசிக்கும்‌ இதே சொல்‌ இவ்வாறு கையாளப்பட்டுள்ளது:

அவன்‌ என்‌ நாமத்திற்கு ஆலயத்தைக்‌ கட்டுவான்‌; அவன்‌ எனக்குக்‌ குமாரனாயிருப்பான்‌. நான்‌ அவனுக்குப்‌ பிதாவாயிருப்பேன்‌.” (1 நாளாகமம்‌ 22:10)

இயேசு மீட்பவரா?

இக்காலத்திலுள்ள கிறித்தவர்கள்‌ இயேசுவை மீட்பர்‌ என்ற சொல்லால்‌ குறிப்பிடுகின்றனர்‌. ஆனால்‌ பைபிள்‌ பழைய ஏற்பாட்டில்‌ இறைவன்தான்‌ ஏசாயா தீர்க்கதரிசியின்‌ பிதா என்பதுமட்டுமல்லாமல்‌ இறைவனையே மீட்பர்‌ என்றும்‌ குறிப்பிட்டிருக்கிறது. இதோ அந்த வசனம்‌:

தேவரீர்‌ எங்கள்‌ பிதாவாயிருக்கிறீர்‌; ஆபிரகாம்‌ எங்களை அறியான்‌; இஸ்ரவேலுக்கு நாங்கள்‌ அறியப்‌பட்டவர்களுமல்ல. கர்த்தாவே! நீர்‌ எங்கள்‌ பிதாவும்‌, எங்கள்‌ மீட்பருமாயிருக்கிறீர்‌; இது பூர்வகால உம்முடைய நாமம்‌.” (ஏசாயா 63:16)

சுருக்கமாக, பைபிள்‌ பழைய ஏற்பாட்டின்‌ பல வசனங்களில்‌ பல தீர்க்கதரிசிகள்‌ இறைவனை பிதா என்ற சொல்லினாலும்‌, தம்மை தேவகுமாரன்‌ என்ற சொல்லினாலும்‌ குறிப்பிட்டிருக்கிறார்கள்‌. இதை வைத்து அந்த தீர்க்கதரிசிகள்‌ உண்மையான பொருளில் இறைவனுக்கு மகன்‌ ஆகிவிடமாட்டார்கள்‌. இதை எந்த கிறித்தவர்களும்‌ மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது. அப்படியிருக்க இயேசுவுக்கு மட்டும்‌ இதில்‌ தனித்தன்மை இருப்பதாக கிறித்தவர்கள்‌ காட்ட முனைவது உண்மைக்குப்‌ புறம்பானதாகும்‌.

தேவக்குமாரன் என்றால் யார்?

அன்பிற்குரிய கிறித்தவ நண்பர்களே! அது மட்டுமா? இயேசு கிறிஸ்துவே தேவகுமாரன்‌ என்பதை எந்த பொருளில்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌ என்பதை பைபிள்‌ புதிய ஏற்பாட்டிலிருந்தும்‌ நம்மால்‌ விளங்கிக்‌ கொள்ள முடிகிறது. சில உதாரணங்கள்‌ இதோ:

சமாதானம்‌ பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்‌. அவர்கள்‌ தேவனுடைய புத்திரர்‌ என்னப்படுவார்கள்‌.”(மத்தேயு 5:9)

இதில்‌ சமாதானம்‌ செய்கிற அனைவரையும்‌ இயேசு தேவனுடைய புத்திரர்‌ எனக்‌ குறிப்பிட்டிருக்கிறார்‌. எனவே இயேசுவே குறிப்பிட்ட இலக்கணத்தின்படியும்‌, தேவ குமாரன்‌ என்பதில்‌ இயேசுவுக்கு மட்டும்‌ எந்தச்‌ சிறப்புமில்லை; மாறாக, உங்களில்‌ ஒருவர்‌ சமாதானம்‌ செய்கிறார்‌ என்றால்‌ அவரும்‌ தேவனின்‌ பார்வையில்‌ தேவகுமாரன்தான்‌ என்பதை மிகத்‌ தெளிவாக இயேசுவே எடுத்துக்‌ கூறியிருக்கிறார்‌. அவர்‌ இன்னோரிடத்தில்‌ இவ்வாறு கூறுகிறார்‌:

நான்‌ உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌. உங்கள்‌ சத்துருக்களை சிநேகியுங்கள்‌; உங்களைச்‌ 'சபிக்கின்றவர்களை ஆசீர்வதியுங்கள்‌; உங்களைப்‌ பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்‌; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்‌, உங்களைத்‌ துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்‌ ஜெபம்‌ பண்ணுங்கள்‌. இப்படிச்‌ செய்வதினால்‌ நீங்கள்‌ பரலோகத்திலிருக்கிற உங்கள்‌ பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்‌.” (மத்தேயு 5:44,45)

மேற்கண்ட வசனத்திலும்‌ நான்கு வகையான மக்களைக்‌ குறிப்பிட்டு, அவர்களை பிதாவின்‌ புத்திரர்கள்‌ என இயேசு சான்றிதழ்‌ வழங்கியிருக்கிறார்‌. அப்படியிருக்க, இன்றைய கிறித்தவர்கள்‌ இயேசு மட்டுமே தேவகுமாரன்‌ என்று கூறுவது இயேசு கொடுத்த பரந்த இலக்கணத்தை சுருக்குவதற்கு ஒப்பானதாகும்‌.

இயேசு யார்?

பின்னர்‌ இயேசு யார்‌ என்ற கேள்வி எழுமென்றால்‌, பைபிளின்‌ படி அவர்‌ இறைவனால்‌ இஸ்ரவேல்‌ வீட்டாருக்கு மட்டும்‌ அனுப்பப்பட்ட ஓர்‌ இறை தூதராவார்‌. இதைத்தான்‌ இயேசுவும்‌ “என்னை ஏற்றுக்‌ கொள்கின்றவர்‌ என்னை அனுப்பினவரை ஏற்றுக்‌ கொள்கிறான்‌” எனக்‌ குறிப்பிட்டி ருக்கிறார்‌.(மத்தேயு 10:40 & மாற்கு 9:37)

ஆக,  அனுப்பினவன்‌ இறைவன்‌; அனுப்பப்பட்டவர்‌ இயேசு எனத்‌ தெரிந்து கொள்கிறோம்‌. இதைத்தான்‌ திருக்குர்‌ஆனும்‌ மிகத்தெளிவாக அவர்‌ இஸ்ராயீலின்‌ மக்களுக்குத்‌ தூதராவார்‌(3:50) எனக்‌ குறிப்பிட்டுள்ளது. திருக்குர்‌ஆனின்‌ இந்த வசனத்தை “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல்‌ வீட்டாருக்கு அனுப்பப்‌பட்டேனேயன்றி மற்றப்படியல்ல வென்றார்‌. (மத்தேயு15:24) என்ற பைபிளின்‌ வசனத்தின்‌ ஒளியில்‌ கிறிஸ்தவ சகோதரர்கள்‌ புரிந்து கொள்ளக்‌ கடமைப்பட்டிருக்கிறார்கள்‌. அவ்வாறு தம்‌ சொந்தக்‌ கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேத வாக்கியங்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுத்த பல உண்மையான கிறித்தவர்கள்‌ நண்பர்கள்‌ இயேசுவின்‌ உண்மை நிலையைப்‌ புரிந்து வேதத்தின்படி அவரை இறைதூதர்‌ என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்‌. அவ்வாறே இன்னும்‌ பல கிறித்தவ நண்பர்களுக்கு உண்மையை உணர்ந்து அதை ஒப்புக்கொள்ளும்‌ நல்வாய்ப்பை இறைவன்‌ வழங்குவானாக. ஆமீன்

நன்றி: நபிவழி மாத இதழ்

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.