ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ துஆக்கள்‌

ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ துஆக்கள்‌


ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ துஆக்களின்‌ சூட்சமங்களை தமது அனுபவத்தால்‌ ஆராய்ந்து அதன்‌ காலம்‌, நேரம்‌, இடம்‌, பொருள்‌ அனைத்தையும்‌ நமக்கு மிக விரிவாக எடுத்துக்‌ கூறி துஆவின்‌ மகத்துவத்தையும்‌ முக்கியத்‌துவத்தையும்‌ விளக்கியிருக்கின்றார்கள்‌. அந்த துஆக்கள்‌ ஒருபோதும்‌ நிராகரிக்கப்‌படுவதில்லை. அவற்றுள்‌ சில:

தஹஜ்ஜாத்‌ (நடுஇரவு) தொழுகையில்‌ செய்யப்படும்‌ துஆ, குறிப்பாக துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ வேளையாகும்‌. நபிமொழியில்‌ இறைவன்‌ ஒவ்வொரு இரவின்‌ இறுதி வேளையில்‌ வானின்‌ இறுதிவரை இறங்கி என்னிடம்‌ யார்‌ துஆ செய்கின்றார்களோ அவர்களின்‌ துஆக்களை ஏற்றுக்‌ கொள்வேன்‌ எனக்‌ கூறியதாக வருகிறது. ஹஸ்ரத்‌ அபூ உமாமா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களிடம்‌ எந்த துஆக்கள்‌ மிகுதியாக ஏற்றுக்‌ கொள்ளப்படுகின்றன கேட்கப்பட்டது. அன்னார்‌ கூறினார்கள்‌: நடு இரவு வேளை துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ சிறந்த வேளையாகும்‌. இதன்‌ பிறகு குறிப்பாக ஃபர்ழ்‌ தொழுகைகளுக்குப்‌ பின்புள்ள வேளைகளும்‌ துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. வேளையாகும்‌. (திர்மிதி),

பாங்கு கூறப்படும்‌ நேரத்தில்‌ செய்யப்படும்‌ துஆ. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: இரு வேளைகளின்‌ துஆ ரத்து செய்யப்படுவதில்லை. 1. பாங்கின்‌ வேளை 2. போரில்‌ எதிரியோடு கடும்‌ போர்‌ நிகழும்‌ வேளை (அபூதாவூது)

திருக்குர்‌ஆன்‌ ஒதி முடிக்கப்படும்‌ வேளையும்‌ துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்‌ கான சிறந்த வேளையாகும்‌. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ தெரிவிக்கின்றார்கள்‌. அடியான்‌ திருக்குர்‌ஆனை ஒதி முடிக்கும்‌ நேரம்‌ 60 ஆயிரம்‌ வானவர்கள்‌ அவருக்காக துஆ செய்கின்றனர்‌. (ஸுர்கானி‌)

ஜுமுஆவில்‌ ஒரு சந்தர்ப்பத்தில்‌ குறிப்பாக துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படுகிறது. அதன்‌ நேரம்‌ ஜுமு உரையிலிருந்து ஜுமுஆ முடியும்‌ நேரத்திற்குள்‌, குறிப்பாக ஜுமுஆ உரைக்கும்‌ தொழுகைக்கும்‌ நடுவே என கருதப்படுகிறது. (அபூதாவூது)

புனித ரமலான்‌ மாதம்‌ துஆக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ மாதமாகும்‌. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: நோன்பாளிக்கு நோன்பு திறக்கும்‌ வேளை குறிப்பாக துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ வேளையாகும்‌. அந்த வேளை அவரது துஆ ரத்து செய்யப்படுவதில்லை. (திர்மிதி)

புனித ரமலான்‌ மாதத்தின்‌ இறுதி பத்து நாட்களில்‌ ஒற்றைப்‌ படையில்‌ வரும்‌லைலத்துல்‌ கத்ர்‌' இரவு துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கான சிறந்த வேளையாகும்‌. (திர்மிதி)

இறைவனை நினைவு கூறும்‌ சபைகளில்‌ செய்யப்படும்‌ துஆக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. அவர்களைச்‌ சுற்றி வானவர்கள்‌ அமர்ந்து அவர்களுக்காக துஆ செய்வார்கள்‌. (புகாரி)

மழை பொழியும்‌ வேளையில்‌ செய்யப்படும்‌ துஆவும்‌ குறிப்பாக ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (இப்னு மாஜா),

தொழுகையை கவனமாக நிறைவேற்றி செய்யப்படும்‌ துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. நபிமொழியில்‌ உள்ளது: சூரா ஃபாத்திஹாவை ஓதிய பிறகு வானவர்களின்‌ ஆமீனோடு எந்த ஆமீன்‌ ஒத்துப்‌ போகுமோ அவரது பாவங்கள்‌ மன்னிக்கப்படும்‌. (புகாரி).

ஸஜ்தாவில்‌ செய்யப்படும்‌ துஆ குறிப்பாக ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. நபிமொழியில்‌ வருகிறது: மனிதன்‌ ஸஜ்தாவின்‌ நிலையில்‌ இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கின்றான்‌. எனவே அந்நேரம்‌ மிகுதியாக துஆ செய்யுங்கள்‌. (முஸ்லிம்‌)

அநீதியிழைக்கப்பட்டவரின்‌ துஆ தடையின்றி ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (புகாரி)

அருகே இல்லாத ஒருவருக்காக உருக்கத்துடன்‌ செய்யப்படும்‌ துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (முஸ்லிம்‌)

துஆ  செய்பவரது நிலையின்‌ காரணமாக துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. நபிமொழியில்‌ வருகிறது: உங்கள்‌ இறைவன்‌ மிகுந்த வெட்ககுணம்‌ கொண்டவனாவான்‌. எனவே அடியான்‌ அவன்‌ முன்‌ கை ஏந்தி துஆ செய்யும்போது அவனை வெறுங்கையுடன்‌ அனுப்ப இறைவன்‌ வெட்கப்படுவான்‌. (திர்மிதி)

உறவு முறைகள்‌ காரணமாகவும்‌ துஆக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுகின்றன. தந்‌தை, பிள்ளைக்கு எதிராக செய்யும்‌ துஆ சந்தேகமின்றி ஏற்றுக்‌ கொள்ளப்படுகிறது. இதேபோல்‌ பெற்றோர்‌ தமது பிள்ளைகளுக்காகவும்‌, பிள்ளைகள்‌ தமது பெற்றோர்களுக்‌காகவும்‌ செய்யும்‌ நல்ல துஆக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுகின்றன. (திர்மிதி)

நேர்மையான இமாம்களின்‌ துஆக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுகின்றன. இதேபோல்‌ நேர்மையான நல்ல மக்களின்‌ துஆக்களும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுகின்றன. (திர்மிதி)

சில இடங்களில்‌ செய்யப்படும்‌ துஆவை இறைவன்‌ குறிப்பாக ஏற்றுக்‌ கொள்கிறான்‌. பைத்துல்லாஹ்‌, மற்றும்‌ இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ நினைவிடத்‌தில்‌ செய்யப்படும்‌ துஆ நிச்சயம்‌ ஏற்றுக்‌கொள்ளப்படும்‌.

பைத்துல்லாஹ்வில்‌ ஹஜ்ருல்‌ அஸ்வது அருகே செய்யப்படும்‌ துஆ (ஸுர்கானி)

சஃபா, மர்வா மற்றும்‌ மஷ்‌அருல்‌ ஹராம்‌ அருகே செய்யப்படும்‌ துஆ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (சுனன்‌ நஸாமீ)

அரஃபா மைதானத்தில்‌ செய்யப்படும்‌ துஆ மிகச்‌ சிறப்பாக ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (திர்மிதி)

ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ பைத்துல்லாஹ்‌ (மக்கா) மட்டுமின்றி மற்றும்‌ பிற புனித இடங்களிலே சென்று துஆ செய்ய அனுமதி வழங்கியுள்ளார்கள்‌. குறிப்பாக, மஸ்ஜிது நபவி, பைதுல்‌ முகத்தஸ்‌ போன்றவை அவற்றில்‌ அடங்கும்‌.

இறைவனைப்‌ புகழ்ந்து சூரா ஃபாத்திஹா மற்றும்‌ சலவாத்‌ ஓதி பின்பு துஆ செய்வது மிகச்‌ சிறந்ததாகும்‌.

தொகுப்பு: முஅல்லிம்‌ M.முஸ்ஸம்மில்

நன்றி: நபிவழி மாத இதழ்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.