அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்;
یٰۤاَیُّہَا
الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ
مَعَ الصّٰبِرِیۡنَ
நம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை, பிரார்த்தனை இவற்றின்
மூலம் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(2:154)
அல்லாஹ்வின் அருளால் இந்த ரமலானில்
நம்பிக்கை கொண்டவர்கள் அந்த வல்ல இறைவன் மீது, அவன் கருணையை கொண்டும்
நேசத்தை கொண்டும் நம்மீது அருள் புரிவான் என்ற முழு நம்பிக்கை வைத்தவாறு அவனது கட்டளைக்கிணங்க
நோன்பு நோற்று வருகின்றனர்.
நம்பிக்கையாளர்களாகிய நாம் கடந்த காலங்களில்
பல நோன்புகள் வைத்து வருகிறோம். ஆனால் இதில் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது
வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு ரமலானும் நமக்கு பல பாடங்களைக் கற்பித்து தருகிறதே, அதனை நாம் நமது வாழ்வின் அங்கமாக ஆக்கி வருகிறோமா!? என்பதே நம்மில்
ஒவ்வொருவருடைய உள்ளத்தில் எழ வேண்டிய கேள்வியாகும்.
நமக்கு ஒவ்வொரு ரமலானும் ஆன்மீக படித்தரங்களில்
முன்னேறிட பல்வேறு விதமான பாடங்களை கற்றுத் தந்து கொண்டு செல்கின்றன. அதில் ஒரு பாடத்தை
மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.
ஒவ்வொரு ரமலானும் நமக்கு முக்கியமாக
கற்றுத் தரும் பாடத்தில் ஒன்று பொறுமை என்ற ஒரு பாடம் ஆகும். இந்த பாடத்தை ஒரு நம்பிக்கையாளர்
தமது வாழ்வின் ஓர் அங்கமாக ஆக்கிக் கொண்டால் அவர் ஆன்மீகத் தரத்தில் பாதி வெற்றியை
அடைந்து விட்டார் என்றே நான் சொல்வேன்.
இதை சொல்ல வேண்டிய காரணம் என்னவென்றால், அல்லாஹ் திருக்குர்ஆனில்
பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் அவனிடம் நீங்கள் உதவி தேடுங்கள் என்று கூறுகிறான்.
இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த வல்ல இறைவனிடம்
நீங்கள் உதவியை நாடுகிறீர்களா அப்போ நீங்கள் செய்ய வேண்டிய செயலில் ஒன்று பொறுமை, மற்றொன்று தொழுகை.
இங்கு தொழுகையை பொறுமைக்கு பிறகு இறைவன் வைத்துள்ளான். இதனை நம்மில் எத்தனை பேர் சிந்தித்து
பார்த்திருப்போம்!
தொழுகை என்பது ஒரு நம்பிக்கையாளருக்கு
அந்த உண்மையான இறைவனின் நெருக்கத்தை பெரும் சிறந்த வழியாக இருக்கிறது. இதன் காரணமாகவே
தொழுகை நம்பிக்கையாளர்களுக்கு மிஃராஜாக இருக்கிறது என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழியை நாம் உறுதி படுத்த வேண்டும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை
பொறுமையை நாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். பொறுமை இல்லாது நாம் தொழுகையை கடைபிடித்து
வருவோமேயானால் நமது தொழுகை முழமை பெறாது. எந்த நோக்கத்திற்காக அந்த தொழுகையை நாம் கடைபிடிக்கிறோமோ
அதில் வெற்றி காண இயலாது என்பதை 2:154 வது வசனம்
நமக்கு கற்றுத் தருகிறது.
ஆகவே இபாதத்தை, தொழுகையை அதிகமாக
நிறைவேற்றக்கூடிய இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் பொறுமையை கடைபிடிக்க நமக்கு எம்பெருமானர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள். அன்னார் கூறுகின்றார்கள், “நீங்கள் நோன்பு
நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்து விட்டால் ‘ நான் நோன்பாளி’ என
கூறுங்கள்” (புகாரி-1894)
மேலும் பொறுமையை குறித்து அன்னார்
(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
"மக்களுடன்
சந்தித்து வருகின்ற மற்றும் அவர்களின் கஷ்டத்தை தரும் பேச்சுக்களை கேட்டு பொறுமை கொள்கின்ற
ஒரு முஸ்லிம், மக்களை
சந்தித்து வராத மற்றும் அவர்களின் கஷ்டத்தை தரும் பேச்சுக்களை கேட்டு பொறுமைக் கொள்ளாத
முஸ்லிமை விட சிறந்தவர் ஆவார்." (சுனன் திர்மிதி-கிதாபுல் கியாம வர் ரகாயிக்)
மேலும் கூறுகின்றார்கள்: "மற்றவரை
வீழ்த்துபவர் வீரர் அல்ல மாறாக எவரொருவர் கோபத்தின் சமயம் தன்னை அடக்கிக் கொள்வாரோ
அவரே உண்மையில் வீரர் ஆவார்." (புகாரி-கிதாபுல் அதப்)
திருக்குர்ஆன் கூறுகிறது:
وَ
لَمَنۡ صَبَرَ وَ غَفَرَ اِنَّ ذٰلِکَ لَمِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ
ஒருவர் பொறுமையைக் கடைப்பிடித்து, மன்னித்து விடுவாரானால், நிச்சயமாக அது துணிவுமிக்க செயலைச் சேர்ந்ததாகும். (42:44)
ஆக நபி (ஸல்) அவர்கள் பொறுமையை பற்றி
இவ்வாறு கற்றுக்கொடுத்தார்கள் என்றால் இந்த பொறுமை எவ்வளவு சிறப்பு மிக்கது என்று நாம்
அறிய முடிகிறதல்லவா. எனவே நாம் இந்த பொறுமையின் மாதத்தில் வீண் சண்டை, சச்சரவுகளை விட்டு
முற்றும் விலகியிருக்க வேண்டும். நம்மை மீறி நம்மிடம் யாராவது சண்டைக்கு வந்தாலும்
பொறுமையுடன் அதை கையாள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.
மேலும் இம்மாதத்தில் சண்டை சச்சரவை விட்டு விட்டு amaithiyaka இருந்தால்
மட்டும் போதாது மாறாக நாம் செய்து வரும் இபாதத்தான காரியங்களில் பொறுமையை அவசியம் மேற்கொள்ள
வேண்டும். அப்போதுதான் இந்த ரமலானில் நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். இந்த
அடிப்படையில்தான் இம்மாதத்திற்கு "பொறுமையின் மாதம்" என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே அன்பர்களே! இபாதத்திற்கும், பொறுமைக்கும் ஒரு
வலுவான தொடர்பு உண்டு என்பதை நாம் மறந்து செயல்படக்கூடாது. பொறுத்தார் பூமியை ஆள்வார்
என்பது பழமொழி. இந்த வகையில் நாம் இந்த ரமலானில் நமது உள்ளத்தை ஷைத்தானிடமிருந்து காக்க
வேண்டும் என்று சொன்னால் அதற்கு பொறுமை மற்றும் தொழுகை மிக மிக அவசியம் என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று உலகிற்கு அமைதி மற்றும் நிம்மதி
தேவை படுகிறது. இதனை அடையாத இந்த உலகம் எந்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறது
என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அறிவோம். இந்த உலகில் நாம் அமைதி எனும் பூங்காவை உருவாக்க
வேண்டும் என்று சொன்னால் அதற்கு நம்மில் ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு புரட்சி வெளிப்பட
வேண்டும். அது பொறுமை என்ற புரட்சியாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
وَ
لَمَّا بَرَزُوۡا لِجَالُوۡتَ وَ جُنُوۡدِہٖ قَالُوۡا رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا
صَبۡرًا وَّ ثَبِّتۡ اَقۡدَامَنَا وَ انۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ
அவர்கள் ஜாலூத்திடமும் அவனுடைய படைகளிடமும்
(போரிடச்) சென்ற போது அவர்கள்: எங்கள் இறைவா! எங்களுக்குச் சகிப்புத்தன்மையைத் தந்தருள்வாயாக.
மேலும் (போர்க்களத்தில்) எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக; மேலும் நிராகரிப்பாளர்களுக்கு
எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக என்று கூறினர். (2:251)
ஆக நாம் ஓர் இலக்கை அடைய வேண்டும் என்றால்
அதற்கு சகிப்புத்தன்மை வேண்டும் மேலும் அதில் உறுதியும் வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம்
நமக்கு கற்றுத்தருகிறது. எங்கு நாம் பொறுமையை இழந்து விடுவோமோ அங்கு நாம் நமது இலக்கையையும்
இழந்துவிடுவோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது ஆன்மீக விஷயமாக இருந்தாலும்
சரி, அல்லது
பௌதீக விஷயமாக இருந்தாலும் சரி.
இந்த பொறுமை என்ற புரட்சியை நாம் நமது
உள்ளத்திலும், உலகிலும் நிலை நாட்டக்கூடிய வழியில் சோதனையும் வருவதுண்டு என்பதையும்
நாம் மறந்து விடக்கூடாது. அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
وَ
لَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ
الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ
மேலும், ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், காணி வகைகள் ஆகியவற்றின்
இழப்பாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (தூதரே!) நீர் பொறுமையாளர்களுக்கு
நற்செய்தியைக் கூறுவீராக. (2:156)
அன்பர்களே இந்த வசனத்தை நாம் காணும்போது
பொறுமைக்கான சோதனை என்று சொல்வார்கள் அல்லவா அந்த சோதனை எந்த வடிவத்தில் வரும் என்பதை
இறைவன் நமக்கு இந்த வசனத்தின் மூலம் எடுத்துக் கூறுகிறான். அல்லாஹ் கூறுகிறான், பொறுமையைக் கொண்டும்
தொழுகையை கொண்டும் என்னை நெருங்க ஆசைப்படும் எனது அடியார்களே! நாம் உங்களை இவ்வாறான
விஷயங்களை கொண்டு உங்களை நீங்க அடைய நினைக்கும் அந்த இலக்கிற்கு முன்பாக சோதிப்போம்.
இந்த சோதனையை கொண்டு உங்களை அழிக்க வேண்டும் என்பது அல்ல மாறாக எவர்கள் இதில் பொறுமையோடு
உறுதியாக இருந்துவிடுகிறார்களோ; அவர்களுக்கு நற்செய்தி உண்டு என்ற விஷயத்தையும்
மேற்காணும் வசனத்திலும் வல்ல இறைவன் பதிவு செய்துள்ளதை நாம் காண்கிறோம்.
سَلٰمٌ
عَلَیۡکُمۡ بِمَا صَبَرۡتُمۡ فَنِعۡمَ عُقۡبَی الدَّارِ
நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதனால்
உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக. எனவே,
இவ்வீட்டின் (இந்த சுவர்க்கத்தின்) வெகுமதி எவ்வளவு சிறந்தது (என அவ்வானவர்கள்
கூறுவர்.(13:25)
மேலும் கூறுகின்றான்:
اِلَّا
الَّذِیۡنَ صَبَرُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ
وَّ اَجۡرٌ کَبِیۡرٌ
ஆயினும் பொறுமையினை மேற்கொண்டு நற்செயல்கள்
செய்வோருக்கு , மன்னிப்பும்
பெரும் கூலியும் ( விதிக்கப்பட்டு) உள்ளன. (11:12)
اُولٰٓئِکَ
یُؤۡتَوۡنَ اَجۡرَہُمۡ مَّرَّتَیۡنِ بِمَا صَبَرُوۡا وَ یَدۡرَءُوۡنَ بِالۡحَسَنَۃِ
السَّیِّئَۃَ وَ مِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ
அவர்கள் மேற்கொண்ட பொறுமையின் காரணமாக
அவர்களுக்குரிய பிரதிபலன் அவர்களுக்கு இரு முறை வழங்கப்படும். மேலும் அவர்கள்
நன்மையைக் கொண்டு தீமையை எதிர்க்கின்றனர். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து
அவர்கள் செலவு செய்கின்றனர். (28:55)
அன்பர்களே! அல்லாஹ்விடத்தில் பொறுமையோடு
உதவியை நாடுபவர்களுக்கு சோதனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அல்லாஹ்வின் அடியார்கள்
அந்த சோதனைகளுக்கு பிறகு பிரதான நற்கூலிகள் உண்டு என்பதை அறிந்து அதில் முழுமையான முரயில்
நம்பிக்கை வைத்து அந்த சோதனையை அல்லாஹ்வுக்காக சகித்துக் கொள்வார்கள்.
இது தொடர்பாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்கள் தமக்கு வந்த ஓர் இல்ஹாமை குறித்து இவ்வாறு கூறுகின்றார்கள், "இங்கே சோதனை உள்ளது.
எனவே எவ்வாறு உறுதிமிக்கவர்கள் பொறுமை செய்தார்களோ அதுபோன்று நீ பொறுமையை மேற்கொள்வீராக.
இறைவன் புறமிருந்து இந்த சோதனை வந்துள்ளது. அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டும் என்பதற்காக
இந்த சோதனை ஆகும். மிகவும் கண்ணியமிக்க இறைவனின் நேசம் மற்றும் மன்னிப்பு ஒருபோதும்
நின்று விடாது. (பராஹீனே அஹ்மதிய்யா,
ரூஹானி கஸாயின் பாகம் 1 பக்கம்
609-610 அடிகுறிப்பு)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்கள் கூறுகின்றார்கள்,
" எதுவரை உறுதியான நிலைநிற்றல் இல்லையோ அதுவரை பைஅத்தும் முழுமை
பெறாது. மனிதன் இறைவனை நோக்கி தனது பாதங்களை எடுத்து வைக்கும்போது வழியில் பல்வேறு
துன்பங்களையும், துயரங்களையும்
மற்றும் புயல்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். எதுவரை மனிதன் அவற்றை கவனத்துடன்
கடக்க மாட்டானோ அதுவரை அவன் தனது எல்லையை அடையமாட்டான். (மல்ஃபூஸாத் பாகம் 4 பக்கம் 515)
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்
(அய்யதஹுல்லாஹ்...) அவர்கள் கூறுகின்றார்கள்: "எவர்களுக்கு இறைவன் மீது முழுமையான
நம்பிக்கை இருக்குமோ அவர்கள்தான் பொறுமையின் உயர்ந்த முன்மாதிரியை வெளிப்படுத்தியவாறு
அல்லாஹ்வின் உதவியைத் தேட முடியும். நமது பொறுமை மற்றும் தூய உள்ளத்துடன் அவன் முன்னிலையில்
குனிவதன் மூலம் அல்லாஹ் நிச்சயமாக நமக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கை எவர்களுக்கு
இருக்குமோ அவர்களால்தான் இவ்வாறு செயல்பட முடியும்" (குதுபா ஜுமுஆ 26-11-2010)
ஆகவே, அன்பர்களே! நாம்
நமது வாழ்வில் ஆன்மீக மற்றும் பௌதீக முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யும் அதே வேளையில்
அந்த முயற்சியுடன் பொறுமையை நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். இந்த பொறுமையின் மூலமாகவே
அந்த இறைவனையும் அடைய முடியும். இந்த பொறுமையின் மூலமாகவே இன்று உலகத்திற்கும் சரி
உள்ளத்திற்கும் சரி அமைதி மற்றும் நிம்மதியை ஈட்டுத் தர முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் பொறுமை என்ற இந்த நற்குணத்தை இந்த ரமலான் மூலம் கற்று
அதனை அடுத்து வரும் காலங்களில் நமது வாழ்வின் ஓர் அங்கமாக ஆக்கி செயல்படுவதற்கு தவ்ஃபீக்கை
தந்தருள்வானாக. ஆமீன்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None