"அஸ்ஸலாமு அலைக்கும்" கூறுவதின் நன்மைகள்

 


அஸ்ஸலாம் என்பது இறைவனுடைய பண்பு பெயர்களில் ஒரு பெயராகும் அதன் அர்த்தம்  சாந்தி சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகும். மேலும் வழக்க முறையில் அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரை சந்திக்கும்போது கூறப்படும் ஒரு வகையான தூஆ ஆகும்.

இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:-

 فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِکُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُبٰرَکَۃً طَیِّبَۃً 

நீங்கள் வீடுகளில் நுழையும் போது உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸலாம் கூறிக் கொள்ளுங்கள். இது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு பெரும் அருளிற்குரியதும், தூய்மையானதுமாகிய வாழ்த்தாகும். (திருக்குர்ஆன் 24:62)

ஒருவர் மற்றவர் மீது சாந்தியும் சமாதானமும் அனுப்புவதே இறைவனுடைய அருளைப் பெறக் கூடியது என்ற விஷயம் இந்த வசனத்தில் தெளிவாகின்றது.

மேலும் فَسَلِّمُوْا அதாவது நீங்கள் ஸலாம் அனுப்புங்கள் என்கின்ற ஆணையைப் பிறப்பித்து எல்லா ஆண்கள் மற்றும் பெண்கள்மீது ஸலாம் கூறுவது கடமையாகி விட்டது. நீங்கள் அறிந்தவர்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று கூறவில்லை மாறாக அறிந்தவர் அறியாதவர் அனைவருக்கும் ஸலாம் கூற வேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) கூறுகின்றார்கள்:-

وتَقْرَ ءِ السلامَ علی مَن عرفتَ ومَن لَّم تَعرِف

நீங்கள் சந்திக்கின்ற அனைவருக்கும்  அறிந்தவர் இருந்தாலும் சரி அறியாதவர் இருந்தாலும் சரி ஸலாம் கூறுங்கள். (புகாரி)

ஹஸ்ரத் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள் மற்றும் யூதர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை கடந்து சென்றார்கள் அப்போது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள். (புகாரி-அல்இஸ்திஃஸான்)

இஸ்லாத்தின் போதனை நிரந்தரமானது மற்றும் எல்லோருக்கும் நன்மை மற்றும் அருளுக்குரியதாகும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய செய்தி அன்பு மற்றும் (மற்றவருக்கு) நன்மையை நாடுவதாகும். ஆகையால் இஸ்லாத்தில் மற்றவருக்கு நன்மையை நாடுவது என்பது மனித தன்மைக்கு பொதுவானதாகவும் முஸ்லிம்களுக்கு அவசியமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் இந்த அன்பு மற்றும் பரஸ்பர நல்லிணக்கம்  நிலைநாட்டுவதற்காக ஒருவர் மற்றவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் கூற அறிவுறுத்துகிறது. மேலும் அதற்கு வா அலைக்குமுஸ் ஸலாம் என்று  பதில் அளிக்க வேண்டும்.

ஹஸ்ரத் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு நபர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அந்த நபர் அமர்ந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இவருக்கு 10 மடங்கு நன்மை கிடைத்துள்ளது. பிறகு மற்றொரு நபர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்ற சொற்களை கூறினார். அதற்கு அன்னார் பதிலளித்தார்கள். அந்த நபர் அமர்ந்ததும் அன்னார் கூறினார்கள், இந்த நபருக்கு 30 மடங்கு நன்மை கிடைத்துள்ளது. (திர்மிதி அல்இஸ்திஃஸான்)

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு ஸலாத்தின் பதில் கொடுப்பதற்கு சிறந்த முறையில் அதாவது வா அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்று கூற வேண்டும். இவ்வாறு பதில் அளிப்பதினால் அந்த நபருக்கு 10 நன்மையில் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

ஸலாம் கூறுவதில் எப்பொழுதுமே முந்தி கொள்ள வேண்டும். முந்துபவருக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

ஹஸ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, இரண்டு நபர்கள் சந்திக்கும் போது யார் முதலில் ஸலாம் சொல்ல வேண்டும்? இதற்கு பதில் அளித்தவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், எவர் இறைவனுக்கு மிக நெருக்கமானவராக இருக்கிறாரோ (அவரே). (திர்மிதி)

எவரின் வீட்டிற்கு சென்றாலும் ஸலாம் சொல்லுங்கள். வீட்டிற்குள் நுழைய  அனுமதி பெறுங்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்  கூறுகின்றான்:-

. یٰۤاَیُّھَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَھْلِھا ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ۔

நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத மற்ற வீடுகளில் அனுமதி பெற்று, அவற்றிலுள்ளவர்களுக்கு ஸலாம் கூறாதவரை நுழையாதீர்கள். நீங்கள் (நல்லவற்றைப் பேணுவதில்) கவனமுடையவராக இருப்பதற்கு இதுவே உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 24:28)

தங்களின் வீட்டிற்குள் நுழையும் பொழுது உரத்தகுரலில் ஸலாம் கூறுங்கள் ஒரு வேலை வீட்டில் யாரும் இல்லை என்றால்  தனக்கே சலாத்தை கூறிக் கொள்ளுங்கள் ஸலாம் சொல்பவருக்கும் ஸலாம் சொல்லப்படுபவருக்கும் இறைவன்  அருட்களை வழங்குகின்றான்.

ஒரு நபர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். தன்னுடைய தேவையை எடுத்து வைத்தார். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உன் வீட்டில் நுழையும் போது  வீட்டில் உள்ளவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவீராக. வீட்டில் யாரும் இல்லை என்றால் தனக்கே சலாத்தை சொல்லிக்கொள்ளுங்கள். அதன்பிறகு சூரா ھُوَاللّٰہ اَحَد ஒருமுறை ஓதுங்கள் என்றார்கள்.

அறிவிப்பில் வருகின்றது அந்த நபர் அன்னாருடைய வழிகாடடலை பேணி நடந்தார். அதன் பிறகு அதன் விளைவாக அவருடைய வறுமை நிலை மாறி அதற்கு மாறாக அவருடைய பணம் செழிப்பு எந்த அளவுக்கு வந்துவிட்டது என்றால் தன்னுடைய அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய தொடங்கிவிட்டார். (ரூஹுல் பயான் தஃப்ஸிர் சூரா இக்லாஸ் பாகம் 10 பக்கம் 540)

ஹுஸூர் அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் கூறுவதின் பழக்கம் மற்றும் அதனுடைய பலன்களை பற்றி விரிவாக கூறியவாறு குத்பா ஜும்ஆவில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

“நீங்கள் உங்களுடைய வீட்டிற்குள் நுழையும் போதோ அல்லது வேறொரு நபர் வீட்டிற்குள் நுழையும்போது ஸலாம் என்னும் அன்பளிப்பை வழங்குங்கள் என்பது பொதுவான கட்டளையாக இருக்கின்றது. ஏனென்றால் அதனால் வீட்டில் பரக்கத்துகள் பரவக்கூடும். ஏனென்றால் இந்த சாந்தியின் அன்பளிப்பானது  இறைவன் புறமிருந்துள்ளதாகும். இதன் மூலம் இறைவன் புறமிருந்து இந்த அன்பளிப்பு கிடைத்த பிறகு என்னுடைய நடைமுறை வீட்டிலுள்ளவர்களோடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்த காரணமாக அமையும்.

فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِکُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُبٰرَکَۃً طَیِّبَۃً ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ۔

நீங்கள் வீடுகளில் நுழையும் போது உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸலாம் கூறிக் கொள்ளுங்கள். இது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு பெரும் அருளிற்குரியதும், தூய்மையானதுமாகிய வாழ்த்தாகும். நீங்கள் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். (திருக்குர்ஆன் 24:62)

இப்படிப்பட்ட வீடுகளில் வசிக்கின்றவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஸலாத்தை தெரிவிக்கும் பொழுது அவர்கள் இது இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் என்று நினைத்து அனுப்பினால் பரஸ்பரம் உள்ள அன்பில் அபிவிருத்தி ஏற்படும். மேலும் ஒருவருக்கொருவருடைய உணர்வுகளை கவனிப்பதில் அதிக சிந்தனை இருக்கும். வீட்டிலுள்ள ஆண் கடுமையான நபர் என்றால் இந்த ஸலாத்தின் காரணமாக அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த சமூகத்தில் பொதுவாக மற்றும் குறிப்பாக தந்தையுடைய கொடுமை மற்றும் தேவையற்ற  கடுமையான குணம், சில சமயங்களில் குழந்தைகள் கிளர்ச்சியாளர்களாக ஆகிவிடுகின்றார்கள். மனைவிமார்கள் ஐயம் கொண்டு வாழ்கின்றனர். இரண்டு பேரும் பல வருடங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தும்கூட தனிமையை வேண்டும் நிலை வருகிறது. தனித்துப் போகும் அந்நேரத்தில் குழந்தைகள் பெரிதாகி விடுகின்றன. அவர்களுடைய குடும்பங்கள் கவலைக்கு உள்ளாகின்றது. ஆக இந்த ஸலாத்தை தெரிவிப்பதனால் இவ்வாறான விஷயங்கள் குறையக்கூடும். இவ்வாறு, பெண்கள் சமாதானத்தின் செய்தியை எடுத்துகொண்டு வீட்டிற்குள் நுழையும்போது தன்னுடைய குடும்பத்தை சரியான முறையில் கண்காணிக்கின்றவளாக மாறுகிறாள். இந்த அடிப்படையில் குழந்தைகளுடைய தர்பிய்யத் நடைபெறும் என்றால் அவர்கள் இளமை பருவத்தை அடைந்த பிறகும் தன்னுடைய வீடு தாய் தந்தை மற்றும் சமுதாயத்திற்கு தீயவற்றிற்கு காரணமாக அமையாமல் சமாதானத்திற்கு காரணமாக அமைவார்கள்.” (குத்பா ஜுமுஆ மே 25 அல்ஃபஸழ் ஜூன்15-2007)

ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நம்பிக்கை கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது ஒருவர் மற்றவரை நேசிக்காத வரை நம்பிக்கையாளர் ஆக முடியாது. பரஸ்பரம் அன்பை அதிகரிக்கச் செய்யும் ஒரு விடயத்தை குறித்து நான் உங்களுக்கு கூறட்டுமா? ஒருவர் மற்றவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் கூறுங்கள். (முஸ்லீம்-ஈமான், பாப் லா எதுகுலுல் ஜன்னத்த இல்லல் முஃமினூன்)

நாம் ஒருவர் மற்றவருக்கு சமாதானத்தை தெரிவிப்பவர்களாக ஆகுவதற்கும், ஒருவர் மற்றவரை நேசிக்க கூடிய அஹ்மதி முஸ்லிம்களாக மாறுவதற்கும் இறைவன் நம் அனைவருக்கும் ஸலாத்தை வழக்கமாக்கி கொள்ளும் நற்பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்

நன்றி அல்-ஃபஸ்ல் ஆன்லைன் பத்திரிக்கை

மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்-ஈரோடு 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.