பொருள்‌ தியாகத்தின்‌ முக்கியத்துவமும்‌, அருட்களும்‌


சகோதர, சகோதரிகளே! உலகம்‌ உருவானதிலிருந்து ஏதேனும்‌ ஒரு அமைப்போ அல்லது அஞ்சுமனோ, சமூகமோ அது மார்க்கத்துடன்‌ தொடர்புடையதாக இருந்தாலும்‌ சரி, உலக அமைப்பாக இருந்தாலும்‌ சரி பொருளாதாரம்‌ இல்லாமல்‌ செயல்பட மூடியாது என்பது நிரூபணமான ஒன்றாகும்‌. ஏனென்றால்‌ உலகில்‌ அனைத்து பணிகளையும்‌ நடத்துவதற்கு காரணிகளை அல்லாஹ்‌ உருவாக்கி இருக்கின்றான்‌. அந்த காரணிகளின்‌ கீழ்‌ ஒவ்வாரு பணியையும்‌ செய்வதற்கு முயற்சி மற்றும்‌ தியாகதத்தின்‌ தேவை இருக்கின்றது. அது பொருள்‌ தியாகமாக இருந்தாலும்‌ சரி, உயிர்‌ தியாயகமாக இருந்தாலும்‌ சரி, காலம்‌ மற்றும்‌ கண்ணியத்தின்‌ தேவையாக இருந்தாலும்‌ சரி. தனி நபரானதாக இருந்தாலும்‌ சரி, ஜமாஅத்தான தியாகமாக இருந்தாலும்‌ சரி, முயற்சி மற்றும்‌ தியாகம்‌ இல்லாமல்‌ எந்தப்‌ பணியும்‌ முழுமையடைய முடியாது. இந்த உண்மையை வெளிப்படுத்தியவாறு ஹஸ்ரத்‌ வாக்களிக்கப்பட்ட மஸீஹ்‌ (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:

“பாருங்கள்‌! உலகத்தில்‌ எந்த அமைப்பும்‌ சந்தா இல்லாமல்‌ செயல்படுவதில்லை. நபிகள்‌ நாயகம்‌ (ஸல்)‌ அவர்கள்‌, ஹஸ்ரத்‌ ஈஸா (அலை), ஹஸ்ரத்‌ மூஸா (அலை) ஆகிய அனைத்து நபிமார்களின்‌ காலத்திலும்‌ சந்தா வசூல்‌ செய்யப்பட்டது. எனவே நமது ஜமாஅத்‌ மக்களும்‌ இதனை கருத்தில்‌ கொள்வது அவசியமாகும்‌. இந்த மக்கள்‌ தொடர்ந்து ஒவ்வாரு பைசாவாக வருடம்‌ முழுவதும்‌ கொடுத்து வந்தாலும்‌ அதிகமான பணிகள்‌ சாத்தியமாகும்‌. ஒருவர்‌ ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்றால்‌ அவர்‌ ஜமாஅத்தில்‌ இருக்க வேண்டிய அவசியம்‌ என்ன இருக்கின்றது? (மல்‌ஃபூஸாத்‌ பாகம்‌ 3, பக்கம்‌ 358)

ஆக, இஸ்லாத்தின்‌ வரலாற்றை படித்தவர்கள்‌ ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்)‌ அவர்கள்‌ ஸகாத்‌ மற்றும்‌ சதகாக்களை ஒரு நிலையான ஏற்பாட்டிற்கு ஏற்பவும்‌ அது போன்று அவ்வப்போது நிலைமைகளுக்கும்‌, தேவைகளுக்கும்‌ ஏற்ப சஹாபாக்களிடம்‌ பொருளின்‌ தேவையை கூறினார்கள்‌. மேலும்‌ இதே வழிமுறையை அன்னாரின்‌ கலீஃபாக்களும்‌ பின்பற்றினார்கள்‌. இந்த கட்டளைகளும்‌ திட்டங்களும்‌ இஸ்லாத்தினுடைய பொருளாதார அமைப்பு மற்றும்‌ வாழ்வாதார அமைப்பினுடைய அங்கமாக ஆகிவிட்டன. இவ்வாறு பைத்துல்‌ மால்‌ அமைப்பு உருவானது.

கண்ணியத்திற்குரியவர்களே! எதுவரை பொருள்‌ தியாகத்தினுடைய முக்கியத்துவம்‌ மற்றும்‌ அதன்‌ அருள்களின்‌ தொடர்பு இருக்கின்றது என்றால்‌ திருக்குர்‌ஆனில்‌ பல்வேறு இடங்களில்‌ தொழுகையை நிலைநாட்டுவதோடு இறைவழியில்‌ செலவு செய்தல்‌ பற்றியும்‌ அல்லாஹ்‌ கூறியுள்ளான்‌. மேலும்‌ நம்பிக்கையாளர்களுக்கு இறைவழியில்‌ செலவிடுவதன்‌ பக்கம்‌ ஆர்வமூட்டியுள்ளான்‌. மேலும்‌ அவர்களை மார்க்கப்‌ பணிகளில்‌ ஒருவரையொருவர்‌ முந்திச்செல்ல கட்டளையிட்டுள்ளான்‌. மேலும்‌ நம்பிக்கையாளர்களைப்‌ பார்த்து உங்களில்‌ ஒருபோதும்‌ பலவீனம்‌ வந்து விடக்கூடாது. நீங்கள்‌ ஒருபோதும்‌ சோம்பேறித்‌ தனத்திற்கு இறையாகிவிடக்‌ கூடாது. கஞ்சத்தனத்தில்‌ சிக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது. ஏனென்றால்‌ இறைவழியில்‌ செலவிடுவதில்‌ உங்களது வாழ்வின்‌ ரகசியம்‌ உள்ளது. மேலும்‌ உங்களுடைய மற்றும்‌ உங்களது சந்ததிகளுக்குரிய எஞ்சியிருத்தல்‌ இருக்கின்றது. நீங்கள்‌ இந்த கடமையில்‌ கவனக்குறைவாக இருந்து விட்டால்‌ உலகத்தின்‌ சமுதாயங்கள்‌ உங்கள்‌ மீது தாக்குதல்‌ தொடுக்கும்‌. உங்களுடைய ஆற்றல்‌ சென்று விடும்‌. மேலும்‌ நீங்கள்‌ இழிவு மற்றும்‌ வெருங்‌கையின்‌ நாட்களை காண நேரிடும்‌.

திருக்குர்‌ஆன்‌ தன்னை ஏற்றுக்‌ கொண்டவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை சில நாட்களே என எச்சரிக்கின்றது. இறுதியில்‌ நாம்‌ இறைவன்‌ பக்கமே திரும்பிச்‌ செல்ல வேண்டும்‌ திருக்குர்‌ஆன்‌ இந்த உண்மையின்‌ திரையையும்‌ விலக்கி இருக்கிறது. அதாவது உங்களுடைய செல்வமும்‌, உங்களுடைய சந்ததிகளும்‌ ஒரு சோதனையாகும்‌. அல்லாஹ்விடமே மாபெரும்‌ நற்கூலி உள்ளது. எனவே உலகம்‌ மற்றும்‌ அதனுடைய ஒன்றுமற்ற செல்வங்கள்‌ உண்மையில்‌ இறைவன்‌ வழங்கிய அருட்களாகும்‌. அவற்றை இறைவனுடைய கட்டளை மற்றும்‌ இறைவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப இறைவனுக்காக செலவிட்டு அவனுடைய மன்னிப்பு மற்றும்‌ அவனுடைய விருப்பத்திற்குரிய சொர்க்கத்தை பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனென்றால்‌ அந்த கருணையுடைய, வழங்கக்கூடிய இறைவனுடைய எண்ணம்‌ என்னவென்றால்‌, அவன்‌ நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும்‌, செல்வத்தையும்‌ தன்னுடைய சொர்க்கத்திற்கு பதிலாக கொடுத்து வாங்க வேண்டும்‌ என்பதாகும்‌.

இறைவன்‌ கூறுகின்றான்‌:

“நிச்சயமாக அல்லாஹ்‌ நம்பிக்கையாளர்ளுக்கு சொர்க்கத்தை வழங்குவதற்கு அவர்களிடமிருந்து உயிரையும்‌, பொருளையும்‌ வாங்கிக்‌ கொண்டான்‌. (சூரா தவ்பா வசனம் 111)

ஆக, இறைவன்‌ தன்னுடைய நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு இந்த செல்வம்‌ என்னுடைய செல்வமாகும்‌. சொர்க்கமும்‌ என்னுடையதாகும்‌. என்னுடைய செல்வத்தைக்‌ கொண்டே என்னுடைய சொர்க்கத்தை வாங்கிக்‌ கொள்ளுங்கள்‌.

கண்ணியத்திற்குரியவர்களே! திருக்குர்‌ஆன்‌ பொருள்‌ தியாகத்தின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. திருக்குர்‌ஆனின்‌ ஆரம்பத்திலேயே அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

அதாவது இறையச்சம்‌ உடையவர்களின்‌ அடையாளம்‌ என்னவென்றால்‌ அவர்கள்‌ மறைவானவற்றின்‌ மீது நம்பிக்கை கொள்கின்றனர்‌. மேலும்‌ தொழுகையை நிலைநாட்டுகின்றனர்‌. மேலும்‌ நாம்‌ வழங்கியவற்றிலிருந்து செலவும்‌ செய்கின்றனர்‌.

இந்த வசனத்திலிருந்து தெரிய வருவது என்னவென்றால்‌, அல்லாஹ்‌ அவனுடைய வழியில்‌ செலவு செய்வதை ஒரு நம்பிக்கையாளரின்‌ சிந்தனையின்‌ கட்டாயமான மற்றும்‌ நிலையான அங்கமாக ஆக்கிவிட்டான்‌. தொழுகை ஜமாஅத்தாக தொழுவதை எதிர்பார்க்கின்றது. ஆனால்‌ அல்லாஹ்வின்‌ வழியில்‌ செலவிடுவது ஜமாஅத்தின் அமைப்பை நிலைநாட்டுவதற்காக பொருள்‌ உதவி செய்வதன்‌ பக்கம்‌ கவனமூட்டுகிறது. ஜமாஅத்‌ அமைப்பின்‌ நிர்வகிப்பதற்கு பொருள்‌ தியாகம்‌ முதுகெலும்பைப்‌ போன்றதாகும்‌. எனவே தான்‌ திருக்குர்‌ஆன்‌ இறைவழியில்‌ செலவிடுவதன்‌ பக்கம்‌ அதிகமாக வலியுறுத்துகிறது. அதை ஈமான்‌ மற்றும்‌ விசுவாசத்தின்‌ அளவுகோலாக நியமித்துள்ளது. ஸஹீஹ்‌ புகாரியில்‌ வந்துள்ளது, அஸ்ஸதகது புர்கானுன்‌ அதாவது அல்லாஹ்வின்‌ வழியில்‌ செலவிடுவது அடையாளமாகும்‌.

ஒரு உண்மையான நம்பிக்கையாளரின்‌ அடையாளத்தை கூறியவாறு அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறுகிறான்‌.

அதாவது அல்லாஹ்‌ மற்றும்‌ அவனுடைய தூதரின்‌ மீது நம்பிக்கை கொள்பவர்களே மூஃமின்கள்‌ ஆவர்‌. பிறகு சந்தேகத்தில்‌ இருப்பதில்லை. மேலும்‌ தன்னுடைய செல்வத்தைக்‌ கொண்டும்‌ உயிரைக்‌ கொண்டும்‌ அல்லாஹ்வின்‌ வழியில்‌ போரிடுகின்றனர்‌. இவர்களே உண்மையாளர்களாவர்‌.

ஆக, உண்மையாளர்களின்‌ அடையாளம்‌ என்னவென்றால்‌ அவர்கள்‌ தங்களுடைய உயிர்‌, செல்வம்‌, பிற அனைத்தையும்‌ இறைவழியில்‌ தியாகம்‌ செய்து விடுகின்றனர்‌. இன்று உலகம்‌ முழுவதிலும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களால்‌ நிறுவப்பட்ட அஹ்மதிய்யா ஜமாஅத்‌ மட்டுமே இந்த வசனத்தில்‌ கூறப்பட்டுள்ள உண்மையின்‌ தரத்திற்கு ஏற்ப இருக்கின்றது. மேலும்‌ அஹ்மதிகளே கிலாஃபத்‌ அமைப்பின்‌ கீழ்‌ ஒரே குரலில்‌ தன்னுடைய உயிரையும்‌ பொருளையும்‌ இறைவனின்‌ மார்க்கத்தின்‌ வழியில்‌ தியாகம்‌ செய்வதில்‌ ஒருவரையொருவர்‌ முந்திக்‌ கொள்கின்றனர்‌.

இறைவனின்‌ நேசத்திற்குரியவர்களாக ஆகுவதற்கும்‌, அவனின்‌ நன்மையின்‌ வழிகளைப்‌ பெறுவதற்கும்‌ பொருள்‌ தியாகம்‌ அவசியமாகும்‌. அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறுகிறான்‌. லன்‌ தனாலுல்‌ பிர்ர ஹத்தா துன்‌ஃபிகூ மிம்மா துஹிப்பூன்‌. (ஆலி இம்ரான்‌ : 30)

அதாவது நீங்கள்‌ விரும்பிய பொருள்களை செலவிடாத வரை உண்மையான நன்மையை ஒருபோதும்‌ பெற முடியாது.

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌:

“எதுவரை நெருக்கத்திலும்‌ நெருக்கமான நேசத்திலும்‌ நேசமான பொருள்களை செலவு செய்ய மாட்டீர்களோ அதுவரை நேசத்திற்குரிய நெருக்கத்திற்குரிய இடத்தைப்‌ பெற முடியாது. (தஃப்ஸீர்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) பாகம்‌ 2, பக்கம்‌ 131)

மேலும்‌ கூறினார்கள்‌ : உண்மையில்‌ நாம்‌ அவனுடைய வழியில்‌ மரணத்தை ஏற்றுக்‌ கொண்டு நம்முடைய அனைத்தையும்‌ அவன்‌ முன்‌ வைத்து விடுவதே இறைவனை பொருந்தியவனாக ஆக்கக்கூடிய மாபெரும்‌ தியாகமாகும்‌. இந்த தியாகத்தைப்‌ பற்றியே இறைவன்‌ நமக்கு போதனை வழங்கியுள்ளான்‌. கூறுகின்றான்‌ லன்‌ தனாலுல்‌ பிர்ர ஹத்தா துன்‌ஃபிகூ மிம்மா துஹிப்பூன்‌. (ரூஹானி கஸாயின்‌ பாகம்‌ 12, பக்கம்‌ 347)

எங்கு திருக்குர்‌ஆனில்‌ பொருள்‌ தியாகம்‌ செய்யக்கூடியவர்கள்‌ பற்றி புகழப்பட்டுள்ளதோ, ஆன்மீக மற்றும்‌ பௌதீக அருள்களுக்கான நற்செய்தி வழங்கப்பட்டுள்ளதோ அங்கு பொருள்‌ தியாகம்‌ செய்யாதவர்களை கண்டிக்கிறது. அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறுகின்றான்‌.

அதாவது அல்லாஹ்‌ தன்னுடைய அருளால்‌ அவர்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து கொடுப்பதிலிருந்து கஞ்சத்தனம்‌ காட்டுபவர்கள்‌ அதை தமக்கு ஒருபோதும்‌ சிறந்ததாக கருதாதீர்கள்‌. சிறந்ததன்று, மாறாக, அது அவர்களுக்கு தீயதாகும்‌. எந்த விஷயங்களில்‌ அவர்கள்‌ கஞ்சத்தனம்‌ காட்டுகிறார்களோ கியாமத்‌ நாளன்று நிச்சயமாக அவர்களுடைய கழுத்துக்களில்‌ சங்கலி தொங்க விடப்படும்‌. வானம்‌ மற்றும்‌ பூமியிலுள்ள அனைத்தும்‌ அவனுக்கே உரியது. நீங்கள்‌ செய்பவற்றை அல்லாஹ்‌ நன்கு அறிகின்றான்‌. மேலும்‌ சூரா முஹம்மதின்‌ 39 வது வசனத்தில்‌ கூறுகின்றான்‌.

கேளுங்கள்‌. நீங்கள்‌ அல்லாஹ்வின்‌ வழியில்‌ செலவிடுங்கள்‌ என்று நீங்கள்‌ அழைக்கப்பட்டால்‌ உங்களில்‌ சிலர்‌ கஞ்சத்தனம்‌ காட்டுகின்றனர்‌. எவர்கள்‌ கஞ்சத்தனம்‌ காட்டுகின்றனரோ அவர்கள்‌ தங்கள்‌ உயிர்‌ தொடர்பாகவே கஞ்சத்தனம்‌ காட்டுகின்றனர்‌. அல்லாஹ்வோ தேவையற்றவன்‌ ஆவான்‌. நீ தான்‌ தேவையுடையவனாயாய்‌. நீங்கள்‌ முகம்‌ திருப்பிக்‌ கொண்டால்‌ உங்களுக்குப்‌ பதிலாக வேறொரு சமுதாயத்தைக்‌ கொண்டு வருவான்‌. அவர்கள்‌ உங்களைப்‌ போன்று சோம்பேறித்தனம்‌ காட்ட மாட்டார்கள்‌.

செய்யதுனா ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ பொருள்‌ தியாகத்தில்‌ கருமித்தனம்‌ காட்டுபவர்களை எச்சரிக்கை செய்தவாறு கூறுகின்றார்கள்‌:

“மேலும்‌ எவர்‌ உங்களில்‌ இறைவனோடு நேசம்‌ கொண்டு அவனது வழியில்‌ பொருள்‌ தியாகம்‌ செய்வாராயின்‌ அவரது செல்வத்தில்‌ மற்றவர்களை விட அதிக அபிவிருத்தியினை இறைவன்‌ வழங்குவான்‌ என்று நான்‌ நம்பிக்கைக்‌ கொள்கின்றேன்‌. ஏனென்றால்‌ செல்வம்‌ தானாக வருவதில்லை மாறாக இறைவனது நாட்டத்தினால்‌ வருகின்றது. ஆகவே எவர்‌ இறைவனுக்கு தனது செல்வத்தின்‌ சில பகுதிகளை செலவிடுகின்றாரோ அவர்‌ நிச்சயமாக அதனை இறைவனிடம்‌ இருந்து பெற்று விடுகின்றார்‌. ஆனால்‌ எவர்‌ செல்வத்தை நேசித்து இறைவழியில்‌ எந்த அளவு தொண்டு செய்ய வேண்டுமோ அந்த அளவு செய்ய வில்லையாயின்‌, அந்த செல்வத்தை அவர்‌ நிச்சயமாக இழந்து விடுவார்‌. நீங்கள்‌ செல்வத்தின்‌ ஒரு பகுதியை வழங்கிவிட்டோ அல்லது வேறு ஏதேனும்‌ வகையில்‌ தொண்டு செய்து விட்டு இறைவன்‌ மட்டும்‌ அவனது தூதரின்‌ மீது பேருபகாரம்‌ செய்து விட்டதாக கருதாதீர்கள்‌. மாறாக இறைவன்‌ உங்களை அந்த தொண்டிற்காக அழைத்து உங்கள்‌ மீது பேருபகாரம்‌ செய்துள்ளான்‌. மேலும்‌ உண்மையாகவே கூறுகின்றேன்‌, நீங்கள்‌ அனைவரும்‌ என்னை விட்டுவிட்டாலும்‌ சேவை மட்டும்‌ உதவி செய்வதிலிருந்து உங்களை விலக்கிக்‌ கொண்டாலும்‌ இன்னொரு சமுதாயத்தை உருவாக்குவான்‌............ நான்‌ மீண்டும்‌ மீண்டும்‌ உங்களுக்கு கூறுவது என்னவேன்றால்‌, இறைவன்‌ உங்களுடைய சேவைகளுக்கு தேவையற்றவன்‌. ஆம்‌ அவன்‌ உங்களுக்கு தொண்டு செய்வதற்கான வாய்ப்பை வழங்கி உங்கள்‌ மீது அருள்‌ செய்துள்ளான்‌. (மஜ்மூஆ இஷ்திஹாராத்‌ பாகம்‌ 3, பக்கம்‌ 497,498)

கண்ணியத்திற்குறியவர்களே! ஹதீஸிலும்‌ இறைவழியில்‌ செலவிடுதல்‌ அதாவது பொருள்‌ தியாகத்தின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ அருள்கள்‌ பற்றி அதிகமாக கூறப்பட்டுள்ளது.

ஹஸ்ரத்‌ இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌, பெருமானார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌, இருவர்களைத்‌ தவிர வேறு எவர்கள்‌ மீதும்‌ பொறாமைப்‌ படக்கூடாது. ஒருவருக்கு இறைவன்‌ செல்வத்தை வழங்கி அவர்‌ அதை உண்மையின்‌ வழியில்‌ செலவிடக்‌ கூடியவர். இரண்டாவது ஒருவருக்கு இறைவன்‌ ஞானத்தை வழங்கி அதனைக்‌ கொண்டு மக்களுக்கு தீர்ப்பு வழங்கக்‌ கூடியவரும்‌, கற்றுக்‌ கொடுகக்‌ கூடியவரும்‌ ஆவார்‌. (புகாரி கிதாபுஸ்‌ ஸகாத்‌ அத்தியாயம்‌ இன்‌ஃபாக்குல்‌ மால்‌ ஃபி ஹக்கிஹி)

ஹஸ்ரத்‌ அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌. ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌. ஒவ்வொரு காலையிலும்‌ இரு மலக்குமார்கள்‌ இறங்குகிறார்கள்‌. அவர்களில்‌ ஒருவர்‌ அல்லாஹ்வே செலவு செய்யக்கூடிய கொடையாளருக்கு இன்னும்‌ கொடுப்பாயாக. மேலும்‌ அவரை பின்பற்றி நடக்கக்கூடியவர்களையும்‌ உருவாக்குவாயாக என்று கூறுவார்‌. இன்னொருவர்‌ அல்லாஹ்வே! தடுத்து வைத்திருக்கக்கூடிய கஞ்சனை அழிப்பாயாக. மேலும்‌ அவனுடைய செல்வங்களையும்‌ வீணாக்குவாயாக என்று கூறுவார்‌. (புஹாரி, கிதாபுஸ்‌ ஸகாத்)

இன்னொரு சந்தர்ப்பத்தில்‌ ஒரு நுட்பமான விஷயத்தை கூறியவாறு பொருள்‌ தியாகத்ததின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ அதன்‌ அருள்களை பற்றி இவ்வாறு கூறினார்கள்‌: ஹஸ்ரத்‌ அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. ஒரு முறை பெருமானார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ ஒரு கதையை கூறினார்கள்‌. அதாவது ஒரு மனிதர்‌ ஒரு காட்டில்‌ சென்று கொண்டிருந்தார்‌. மேகங்கள்‌ சூழ்ந்து கொண்டிருந்தன. மேகத்திலிருந்து மேகமே! நீ இந்த நல்ல மனிதருடைய தோட்டத்தை செலிப்பாக்குவாயாக என்ற ஓசை கேட்டது. அந்த மேகம்‌ அதன்‌ பக்கம்‌ நகர்ந்து விட்டது. அதாவது பாறைகளாக இருக்கக்கூடிய நிலத்தில்‌ மழை பொழிந்தது. அந்த தண்ணீர்‌ ஒரு சிறிய ஓடையாக ஓட ஆரம்பித்தது. அந்த மனிதரும்‌ அந்த நீரோடையோடே சென்று என்ன பார்த்தார்‌ என்றால்‌ அந்த நீரோடை ஒரு தோட்டத்திற்குள்‌ நுளைகிறது. அந்த தோட்டத்தின்‌ எஜமானர்‌ மண்‌ வெட்டியைக்‌ கொண்டு அந்த தண்ணீரை பல பாத்திகளில்‌ பிரித்து விடுகின்றார்‌. இந்த நபர்‌ தோட்டக்காரரிடம்‌ அல்லாஹ்வின்‌ அடியானே! உன்னுடைய பெயர்‌ என்ன? என்று கேட்டார்‌. அதற்கு அவர்‌, மேகத்திலிருந்து வந்த அதே பெயரையே கூறினார்‌. பிறகு தோட்டக்காரர்‌ அந்த பயணியிடம்‌, நீ என்னுடைய பெயரை ஏன்‌ கேட்கின்றாய்‌? என வினவினார்‌. அதற்கு அவர்‌, நீ எந்த மழை நீரினால்‌ உனக்கு மழை கிடைத்ததோ அந்த மேகத்திலிருந்து இந்த மனிதருடைய தோட்டத்தை செழிப்பாக்குவாயாக என்று கேட்டேன்‌ என்று கூறினார்‌. நீ என்ன நல்ல காரியத்தைச்‌ செய்தாய்‌? எந்த நல்ல காரியத்தின்‌ பிரதிபலன்‌ என்று அந்த பயணி வினவினார்‌. அதற்கு அந்த தோட்டத்தின்‌ உரிமையாளர்‌, நீங்கள்‌ கேட்கிறீர்கள்‌ என்பதனால்‌ நான்‌ கூறுகிறேன்‌. என்னுடைய வழிமுறை என்னவென்றால்‌ இந்த தோட்டத்திலிருந்து விளையக்‌ கூடியவற்றில்‌ மூன்றில்‌ ஒரு பங்கை நான்‌ இறைவழியில்‌ செலவிடுகிறேன்‌. இரண்டாவது பங்கை என்னுடைய மற்றும்‌ என்னுடைய மனைவி மக்களின்‌ செலவுக்காக வைத்துக்‌ கொள்கிறேன்‌. மீதமுள்ள ஒன்றை நிலத்தில்‌ விளைப்பதற்காக உபயோகிக்கின்றேன்‌. (முஸ்லிம்‌)

சகோதரர்களே! அல்லாஹ்‌ மற்றும்‌ அவனுடைய ரஸூல்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ இந்த கூற்றுக்கள்‌ முதலில்‌ தன்னுடைய அனைத்தையும்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ சைகையில்‌ தியாகம்‌ செய்வதற்கு தயாராக இருந்த மாறாக, அந்த மைதானத்தில்‌ ஒருவரையொருவர்‌ முந்திக்‌ கொள்ள தயாராக இருந்த இஸ்லாத்தின்‌ ஆரம்ப கால தியாகிகளுக்காகும்‌. அவர்களின்‌ பார்வையில்‌ இது மிகவும்‌ விலைமதிப்பற்ற ஒரு வியாபாரமாக இருந்தது. எந்த வியாபாரத்தில்‌ எவ்வித இழப்பிற்கும்‌ இடமில்லையோ அது மிகவும்‌ அருளுக்குரியதாகும்‌. அவர்களின்‌ பார்வையில்‌ உயிரையும்‌, பொருளையும்‌ ஒரு பொருட்டாக கருதவில்லை. அவர்கள்‌ தன்‌ இறைவனின்‌ சந்தோஷத்தை வேண்டியவர்களாகவும்‌, சொர்க்கத்தைப்‌ பெற விரும்பியவர்களாகவும்‌ இருந்தார்கள்‌. எனவே அல்லாஹ்‌ மற்றும்‌ அவனது தூதரின்‌ குரலுக்கு முழு மனதோடு லெப்பைக்‌ என்று கூறியவாறு சொர்க்கத்தை வாங்கக்கூடிய இவர்கள்‌ அதில்‌ ஒருவரையொருவர்‌ முந்திக்‌ கொண்டு சென்றனர்‌.

ஹஸ்ரத்‌ கதீஜா பின்த்‌ குவைலத்‌ முன்‌ சென்றார்கள்‌. தன்னுடைய அனைத்து செல்வங்களையும்‌, வேலையாட்களையும்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களிடம்‌ ஒப்படைத்தார்கள்‌. ஹஸ்ரத்‌ அபூ பக்கர்‌ (ரலி) தன்னுடைய வீட்டிலுள்ள அனைத்தையும்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ காலடியில்‌ கொண்டு வந்து சேர்த்தார்கள்‌. மேலும்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ கேட்டதற்கு, அல்லாஹ்‌ மற்றும்‌ அவனது தூதரின்‌ பெயரை வீட்டில்‌ உள்ளவர்களுக்காக விட்டுள்ளேன்‌ என்று கூறினார்கள்‌.

சுருக்கமாக, ஹஸ்ரத்‌ பிலால்‌, ஹஸ்ரத்‌ சுஹைப்‌ ரூமி, ஹஸ்ரத்‌ அபு தல்ஹா, ஹஸ்ரத்‌ கபாப்‌, ஹஸ்ரத்‌ உமர்‌, ஹஸ்ரத்‌ உஸ்மான்‌ (ரலி) போன்றோர்கள்‌ இஸ்லாத்தைப்‌ பரப்புவதற்காக தன்னிடமிருந்த அனைத்தையும்‌ தியாகம்‌ செய்து சொர்க்கத்தை வாங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்‌.

ஹஸ்ரத்‌ அனஸ்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌; ஹஸ்ரத்‌ அபூ தல்ஹா அன்ஸாரி மதீனாவின்‌ அன்ஸார்களில்‌ அதிக செல்வந்தராக இருந்தார்கள்‌. அவர்களிடம்‌ பேரீச்சம்‌ பழத்தின்‌ தோட்டங்கள்‌ இருந்தன. அதில்‌ பேர்ஹா என்ற தோட்டம்‌ மிகவும்‌ சிறப்பானதாக இருந்தது. அது அபு தல்ஹா அவர்களுக்கு மிகவும்‌ பிடித்தமானதாக இருந்தது. மஸ்ஜிது நபவிக்கு மிக அருகில்‌ இருந்தது. பெருமானார்‌ (ஸல்) அவர்கள்‌ பெரும்பாலும்‌ இந்த தோட்டத்திற்கு சென்று அங்குள்ள இனிப்பான தண்ணீரை அருந்துவது உண்டு. நீங்கள்‌ உங்களது விருப்பத்திற்குரிய பொருளை இறைவழியில்‌ எப்போது வரை செலவிட மாட்டீர்களோ என்ற இறைவசனம்‌ அருளப்பட்ட போது ஹஸ்ரத்‌ அபு தல்ஹா (ரலி) அவர்கள்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களிடம்‌ வந்து நபிகள்‌ நாயகமே! இந்த கருத்தை உடைய வசனம்‌ உங்களுக்கு இறங்கியிருக்கிறது. என்னுடைய விருப்பத்திற்குரிய சொத்து பேர்ஹா தோட்டமாகும்‌. எனவே நான்‌ அதை அல்லாஹ்வின்‌ வழியில்‌ சதகாவாக கொடுக்கின்றேன்‌. அல்லாஹ்‌ என்னுடைய இந்த நன்மையை ஏற்றுக்‌ கொண்டு அதற்கு பதிலாக மறுமையில்‌ செல்வத்தை வழங்குவான்‌ என்று நான்‌ நம்புகிறேன்‌. மேலும்‌ நீங்கள்‌ இதை உங்களது விருப்பத்திற்கேற்ப செலவு செய்யுங்கள்‌ என்று கூறினார்கள்‌. அதற்கு பெருமானார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ எவ்வளவு உயர்வான மற்றும்‌ சிறந்த செல்வமாகும்‌. மிகவும்‌ பலனளிக்கக்‌ கூடியதாகும்‌. நீங்கள்‌ கூறியதையும்‌ நான்‌ கேட்டுவிட்டேன்‌. நீங்கள்‌ இந்த தோட்டத்தை உங்களுடைய உறவினர்களுக்கு கொடுக்க வேண்டும்‌ என்பது என்னுடைய கருத்தாகும்‌ என பெருமானார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌. அதற்கு ஹஸ்ரத்‌ அபு தல்ஹா அவர்கள்‌ அந்த தோட்டத்தை தன்னுடைய நெருக்கமான தோட்டத்திற்கும்‌, மேலும்‌ தந்தையின்‌ சகோதரரின்‌ மகன்களுக்கும்‌ பிரித்து கொடுத்து விட்டார்கள்‌. (புஹாரி)

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ இந்த தியாகத்தைப்‌ பற்றி குறிப்பிட்டவாறு கூறினார்கள்‌. ஒரு காலம்‌ எப்படிப்பட்டதாக இருந்ததென்றால்‌ இறை மார்க்கத்திற்க்காக மக்கள்‌ தன்னுடைய உயிர்களை ஆடு, மாடுகளைப்‌ போன்று தியாகம்‌ செய்தார்கள்‌. பொருள்‌ தியாகம்‌ பற்றி என்ன கூறுவது. ஹஸ்ரத்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட முறை தன்னுடைய விட்டிலுள்ள அனைத்தையும்‌ தியாகம்‌ செய்தார்கள்‌. வீட்டில்‌ ஊசியைக்‌ கூட வைக்கவில்லை. அதே போன்று ஹஸ்ரத்‌ உமர்‌, உஸ்மான்‌ போன்றவர்களும்‌ தன்னுடைய சக்திக்கு ஏற்ப தியாகம்‌ செய்தார்கள்‌........... இவ்வாறே அனைத்து சஹாபாக்களும்‌ தன்னுடைய உயிரையும்‌, பொருளையும்‌ இறைவழியில்‌ தியாகம்‌ செய்ய தயாராக இருந்தார்கள்‌. (மல்‌ஃபூஸாத்‌, பாகம்‌ 3, பக்கம்‌ 360)

இந்த காலத்திலும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களால்‌ நிறுவப்பட்ட உண்மையாலும்‌ விசுவாசத்தாலும்‌ உள்ளத்து அன்பாலும்‌ நிரம்பிய ஜமாஅத்‌ சஹாபாக்களின்‌ அடிச்சுவட்டில்‌ சென்றவாறு இன்றிலிருந்து 1500 ஆணடுகளுக்கு முன்பு நபி (ஸல்)‌ அவர்களின்‌ சஹாபாக்கள்‌ செய்த தியாகங்களின்‌ நினைவை புதுப்பிக்கக்கூடிய தியாகங்களை வெளிப்டுத்தினார்கள்‌. ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ தன்னை ஏற்றுக்‌ கொண்டவர்களிடம்‌ இஸ்லாத்தை பரப்புவதற்காகவும்‌ அதை நிலைநாட்டுவதற்காகவும்‌ பொருள்‌ தியாகத்தில்‌ முழுமையாக பங்கெடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதில்‌ நிலைநிறுத்தினார்கள்‌. ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ தமது ஜமாஅத்‌ மக்களைப்‌ பார்த்து கூறினார்கள்‌, அதாவது பைஅத்தில்‌ தன்னை இணைத்தவராக கருதக்கூடிய ஒவ்வொருவரும்‌ தன்னுடைய செல்வத்திலிருந்து இந்த இயக்கத்திற்காக கொடுப்பதற்கான நேரமாகும்‌. எவரால்‌ ஒரு பைசா கொடுக்க முடியுமோ இந்த இயக்கத்தின்‌ செலவிற்காக ஒவ்வொரு மாதமும்‌ ஒரு பைசா கொடுக்கட்டும்‌. எவரால்‌ மாதம்‌ ஒரு ரூபாய்‌ கொடுக்க முடியுமோ அவர்‌ மாதம்‌ ஒரு ரூபாய்‌ கொடுக்கட்டும்‌. ஒவ்வொரு பைஅத்‌ செய்தவரும்‌ தன்னுடைய வசதிக்கேற்ப உதவி செய்ய வேண்டும்‌. அதன்‌ மூலமாக அல்லாஹ்‌ அவருக்கு உதவ வேண்டும்‌. (ரூஹானி கஸாயின்‌ பாகம்‌ 19, பக்கம்‌ 38)

சற்று நேரம்‌ கடந்த பிறகு அந்த குரலில்‌ அல்லாஹ்வின்‌ இறையறிவிப்பிற்கு ஏற்ப இன்னும்‌ வேகம்‌ அதிகமானது. மேலும்‌ அன்னார்‌ கூறினார்கள்‌.

எல்லா நாளும்‌ இறைவனின்‌ புதிய இறையறிவிப்புகள்‌ நற்செய்திகளுடன்‌ நிரம்பியவையாக இறங்குகின்றன. மேலும்‌ எவர்‌ தன்னுடைய நேசத்திற்குரிய செல்வத்தை செலவிடுவாரோ அவர்‌ தான்‌ இந்த ஜமாஅத்தில்‌ உள்ளவராக கருதப்படுவார்‌ என்பதை பல முறை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறான்‌. (மஜ்மூஆ இஷ்திஆராத்‌ பாகம்‌ 3, பக்‌ 496)

மேலும்‌ கூறினார்கள்‌:

தூயவர்களே! இறைவன்‌ உங்களுடைய உள்ளத்திற்கு ஆற்றலை வழங்குவானாக. இறைவன்‌ உங்களுக்கு நன்மையை பெறுவத்கான மற்றும்‌ தேர்வில்‌ உண்மையாளர்களாக நிரூபணமாவதற்காக சந்தர்ப்பம்‌ வழங்கி இருக்கின்றான்‌. செல்வத்தை நேசிக்காதீர்கள்‌. ஏனென்றால்‌ நீங்கள்‌ அதை விட்டு விடவில்லை என்றால்‌ அது உங்களை விட்டுவிடக்‌ கூடிய நேரம்‌ வருகின்றது. (மஜ்மூஆ இஷ்திஆராத்‌ பாகம்‌ 3, பக்‌ 318)

ஆக, ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ பொருள்‌ தியாகத்தின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ அதன்‌ மகத்துவத்தை கூறியதோடு 1905 ஆம்‌ ஆண்டு ஜமாஅத்தின்‌ பொருள்‌ தியாகத்தின்‌ தரத்தை உயர்வாக ஆக்குவதற்கு அல்லாஹ்வின்‌ கட்டளைக்கேற்ப வஸிய்யத்‌ அமைப்பை ஏற்படுத்தினார்கள்‌. அதில்‌ அன்னார்‌ எவர்‌ விருப்பப்பட்டு இணைய விரும்புகின்றாரோ அவர்‌ தன்னுடைய வருமானத்திலிருந்து பத்தில்‌ ஒரு பங்கு இஸ்லாத்தின்‌ சேவைக்காக அர்ப்பணம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறினார்கள்‌. ஆக, 1905 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2005 வரை நல்லியல்பு கொண்ட ஆன்மாக்கள்‌ வஸிய்யத்‌ அமைப்பில்‌ இணைந்தன. மேலும்‌ 2005 ஆம்‌ ஆண்டு இந்த அமைப்பிற்கு 100 வருடம்‌ நிறைவடைந்த போது ஹஸ்ரத்‌ ஐந்தாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ அவர்கள்‌ ஜமாஅத்‌ சகோதரர்களுக்கு 2008 ஆம்‌ ஆண்டு கிலாஃபத்‌ ஜூப்லி வருடத்திற்குள்‌ முழு உலகத்தினுடைய சந்தா வழங்குபவர்களில்‌ குறைந்த பட்சம்‌ 50 சதவிகிதம்‌ பேர்‌ வஸிய்யத்‌ அமைப்பில்‌ இணைய வேண்டும்‌ என்று கூறினார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌ உலகளாவிய அஹ்மதிய்யா ஜமாஅத்தினர்‌ தனது அன்பிற்குரிய இமாமின்‌ அந்த ஆன்மீக குரலிற்கு ஏகோபித்த முறையில்‌ லெப்பைக்‌ கூறினார்கள்‌. மேலும்‌ கிலாஃபத்‌ அஹ்மதிய்யாவின்‌ 100 ஆண்டு நிறைவடைந்ததில்‌ ஜமாஅத்தில்‌ சந்தா வழங்குபவர்களில்‌ 50 சதவிகிதம்‌ பேர்‌ வஸிய்யத்‌ அமைப்பில்‌ இணைந்தார்கள்‌. மேலும்‌ இப்போது ஒவ்வாரு வருடமும்‌ இந்த எண்ணிக்கை அதிகரித்துக்‌ கொண்டே செல்கிறது. இந்த இடத்தில்‌ இந்த விஷயத்தைக்‌ கூறுவதும்‌ அவசியமாகும்‌. அதாவது இந்த விஷயம்‌ கிலாஃபத்‌ அமைப்பின்‌ அருள்களை ஒளியூட்டுகின்றது. அதாவது ஹஸ்ரத்‌ நான்காவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தன்னுடைய கிலாஃபத்‌ காலகட்டத்தில்‌ குறிப்பாக ஜமாஅத்தில்‌ புதிதாக இணையக்கூடியவர்களுக்கு ஹஸ்ரத்‌ இரண்டாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ (ரலி) அவர்கள்‌ பொருள்‌ தியாகத்திற்கென விதித்திருந்த விகிதாச்சார அடிப்படையில்‌ பொருள்‌ தியாகத்தில்‌ இணைய வைக்குமாறு கூறினார்கள்‌. அதன்‌ விளைவாக ஆயிரக்கணக்கான புதிய அஹ்மதிகள்‌ விகிதாச்சார அடிப்படையில்‌ அதாவது 1/16 தரத்தை உடைய தியாகத்தில்‌ இணைந்தார்கள்‌. மேலும்‌ இதே புதிய அஹ்மதிகள்‌ ஹஸ்ரத்‌ ஐந்தாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ அவர்களின்‌ கிலாஃபத்‌ காலகட்டத்தில்‌ வஸிய்யத்‌ அமைப்பின்‌ ஆன்மீக படையில்‌ இணைந்து கொண்டே செல்கின்றார்கள்‌.

அஹ்மதிய்யா ஜமாஅத்தின்‌ இந்த மாபரும்‌ பொருள்‌ தியாகம்‌ வஸிய்யத்‌ அமைப்பு மற்றும்‌ கட்டாயச்‌ சந்தாவோடு மட்டும்‌ நின்றுவிடுவதில்லை. மாறாக, இறைவனின்‌ வழியில்‌ தியாகங்களைச்‌ செய்யக்கூடிய இந்த குழு அதுமட்டுமின்றி தஹ்ரீகே ஜதீத்‌, வக்‌ஃபே ஜதீத்‌ கிளை அமைப்புகளின்‌ அடிப்படையிலும்‌ இவ்வாறு பல்வேறு பட்ட தியாகங்களின்‌ முன்மாதிரிகளை நிலைநாட்டுகிறார்கள்‌. நமது அன்பிற்குரிய இமாம்‌ ஹஸ்ரத்‌ ஐந்தாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ அவர்கள்‌ தஹ்ரீகே ஐதீதின்‌ 81 வது ஆண்டை அறிவித்தவாறு முழு உலக அஹ்மதிகளுக்கும்‌ இந்த நற்சய்தியை வழங்கினார்கள்‌. அதாவது தஹ்ரீகே ஐதீதின்‌ பொருள்‌ தியாகத்தில்‌ 12,11,700 முஜாஹிதீன்கள்‌ இந்த வருடம்‌ 84,70,800 பவுண்ட்‌ தியாகம்‌ செய்துள்ளார்கள்‌. இது கடந்த ஆண்டை விட 601000 பவுண்ட்‌ அதிகமாகும்‌.

தஹ்ரீகே ஜதீத்‌, வக்‌ஃபே ஜதீத்‌ மற்றும்‌ கிளை அமைப்புகளின்‌ தொடர்‌ விருப்ப தியாகத்தோடு எப்போதெல்லாம்‌ காலத்தின்‌ கலீஃபா தரப்பிலிருந்து ஏதேனும்‌ பொருள்‌ தியாகத்திற்கான அறிவிப்பு வந்தால்‌ ஜமாஅத்தின்‌ ஆண்களும்‌, பெண்களும்‌ எதுவரை என்றால்‌ ஜமாஅத்தின்‌ குழந்தைகளும்‌ கூட போட்டியிட்டு அதில்‌ பங்கு பெறுகின்றனர்‌.

கண்ணியத்திற்குரியவர்களே! எங்கு இந்த தொடர்‌ தியாகங்கள்‌ ஜமாஅத்தின்‌ பொருள்‌ தியாகத்தின்‌ மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றனவோ அதே வேளையில்‌ இந்த மாபெரும்‌ பொருள்‌ தியாகத்தின்‌ சம்பவங்கள்‌ ஒவ்வாரு அஹ்மதியின்‌ ஈமான்களுக்கும்‌ புத்துணர்வு ஊட்டக்கூடியதாக இருக்கின்றது. மேலும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) மற்றும்‌ அன்னாருக்குப்‌ பிறகு கிலாஃபத்‌ அமைப்பின்‌ உண்மைத்துவத்திற்கு ஓர்‌ ஒளிமயமான சான்றாகும்‌.

சகோதர, சகோதரிகளே! ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) மற்றும்‌ சஹாபாக்கள்‌ மற்றும்‌ அன்னாருடைய தூய ஜமாஅத்‌ எழுதிய பொருள்‌ தியாகங்களின்‌ ஈமானை வலுவூட்டக்கூடிய சம்பவங்களிலிருந்து ஒரு சிலவற்றை ஈமானில்‌ முன்னேற்றம்‌ ஏற்படுவதற்காக உங்கள்‌ முன்‌ வைக்கப்படுகின்றது. ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ மீது எல்லோரையும்‌ விட முதன்மையாக அன்னார்‌ மீது ஈமான்‌ கொண்ட தூய மற்றும்‌ அர்ப்பணமான நண்பர்‌ ஹஸ்ரத்‌ மவ்லானா ஹகீம்‌ நூருத்தீன்‌ சாஹிப்‌ (ரலி) அவர்கள்‌ ஒரு முறை ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களிடம்‌, நீங்கள்‌ அனுமதி வழங்கினால்‌ நான்‌ வேலையை ராஜினாமா செய்து விட்டு இரவு பகலாக உங்களுக்கு சேவை செய்கின்றேன்‌. மேலும்‌ நீங்கள்‌ கட்டளையிட்டால்‌ இந்த தொடர்பை விட்டுவிட்டு உலகில்‌ சுற்றித்‌ திரிந்து மக்களை உண்மையான மார்க்கத்தின்‌ பக்கம்‌ அழைப்பேன்‌. அதில்‌ என்னுடைய உயிர்‌ பிரிந்தாலும்‌ சரியே. நான்‌ உங்களின்‌ வழியில்‌ அர்ப்பணமாவேன்‌. என்னுடைய அனைத்தும்‌ என்னுடையதல்ல. மாறாக, அது உங்களுடையதாகும்‌. நான்‌ முழுமையான தூய்மையுடன்‌ கூறிக்‌ கொள்வது என்னவென்றால, என்னுடைய அனைத்து செல்வமும்‌ சொத்தும்‌ மார்க்கத்தைப்‌ பரப்புவதில்‌ செலவிடப்படுமேயானால்‌ நான்‌ என்னுடைய நோக்கத்தை அடைந்து விடுவேன்‌. அனைத்தையும்‌ இந்த வழியில்‌ தியாகம்‌ செய்ய தயாராக இருக்கின்றேன்‌. என்னுடைய மரணம்‌ உண்மையாளர்களோடு இருக்க வேண்டும்‌ என்று நீங்கள்‌ துஆ செய்யுங்கள்‌ என்று கூறினார்கள்‌. (நூல்-இஸ்லாத்தின்‌ வெற்றி)

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ அன்னாரின்‌ சேவைகளை புகழ்ந்தவாறு கூறினார்கள்‌:

அவர்கள்‌ தங்களுடைய தூய செல்வத்தை இஸ்லாத்தை பரப்புவதற்காக செலவிடக்கூடிய ஒரு சில மார்க்கத்‌ தொாண்டை கண்டு நான்‌ எப்போதும்‌ பொறாமையுடன்‌ காண்கின்றேன்‌. அந்த தொண்டுகளை நான்‌ செய்திருந்தால்‌ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்‌. அவர்கள்‌ எனது வழியில்‌ செல்வம்‌ மட்டுமின்றி உயிரையும்‌, கண்ணியத்தையும்‌ பொருட்படுத்தவில்லை. (நூல்-ஃபத்ஹே இஸ்லாம்‌, பக்‌-35)

மியான்‌ ஷாதிகான்‌ சியால்‌ கோட்டி அவர்கள்‌ தன்னுடைய வீட்டின்‌ அனைத்து பொருள்களையும்‌ விற்று அனைத்து தொகையையும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்‌. அதற்கு நீங்கள்‌ ஹஸ்ரத்‌ அபூ பக்கர்‌ (ரலி) அவர்களின்‌ முன்மாதிரியை காட்டியுள்ளீர்கள்‌ என அன்னார்‌ கூறினார்கள்‌. (மக்தூபாத்தே அஹ்மது பாகம்‌ 5, நம்பர்‌ 5, பக்‌-142)

ஹஸ்ரத்‌ டாக்டர்‌ கலீஃபா ரஷீதுத்தீன்‌ சாஹிப்‌ பொருள்‌ தியாகத்தில்‌ எந்த அளவிற்கு முன்னேறி இருந்தார்கள்‌ என்றால்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ நீங்கள்‌ இவ்வியக்கத்திற்கு எவ்வளவு பொருள்‌ தியாகம்‌ செய்திருக்கின்றீர்கள்‌ என்றால்‌ இனிமேல்‌ நீங்கள்‌ தியாகம்‌ செய்ய வேண்டிய தேவையில்லை என்று எழுத்துப்‌ பூர்வமாக சான்றிதழ்‌ வழங்கினார்கள்‌. (அல்‌-ஃப(ஸல்)‌ காதியான்‌ 11 ஜனவரி, 1927)

பாபு பகீர்‌ அலி சாஹிபிடம்‌ சந்தா பெறக்கூடியவர்‌ வந்த போது அன்னாரிடம்‌ பணம்‌ இருக்கவில்லை. சிறிதளவு மாவு மட்டுமே இருந்தது. அதையே சந்தாவாக கொடுத்துவிட்டு இரவு பசியுடன்‌ தூங்கினார்கள்‌.

காதியானைச்‌ சேர்ந்த மதிப்பிற்குரிய ஷம்சுத்தீன்‌ சாஹிப்‌ தர்வேஷ்‌ அவர்கள்‌ ஊனமுற்றவராக இருந்தார்கள்‌. நடக்க இயலாது. திரும்பக்கூட இயலாதவர்களாக இருந்தார்கள்‌. 1919 ல்‌ வஸிய்யத்‌ செய்தார்கள்‌. 1901 லிருந்து சந்தா கொடுக்க ஆரம்பித்தார்கள்‌. 1990 வரை சந்தா கொடுத்திருந்தார்கள்‌. ஆனால்‌ அவர்களோ 1950 ஆம்‌ ஆண்டடு வஃபாத்‌ ஆனார்கள்‌.

கண்ணியத்திற்குரியவர்களே! உலகமயமான இந்த காலகட்டத்தில்‌ முழு உலகமும்‌ செல்வத்தை நேசிக்கின்ற மேலும்‌ அதை பெறுவதற்காக எல்லா விதமான ஆகுமான மற்றும்‌ ஆகாத வழிமுறைகளை கையாளுகின்ற இந்த நேரத்தில்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களால்‌ நிரூவப்பட்ட தூய மற்றும்‌ அன்பான இந்த ஜமாஅத்தே சஹாபாக்களின்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றியவாறு மிகவும்‌ தூய்மையுடன்‌ நிகரற்ற தியாகங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள்‌. மேலும்‌ தன்னுடைய விருப்பமான செல்வத்தை இஸ்லாத்தை பரப்புவதற்காகவும்‌, அஹ்மதிய்யத்தின்‌ முன்னேற்றத்திற்காகவும்‌ செலவிட்டுக்‌ கொண்டிருக்கிறது. மேலும்‌ அந்த பொருள்‌ தியாகத்தின்‌ சுவையான கனிகளிலிருந்து பலன்‌ பெற்றுக்‌ கொண்டிருக்கிறது. இது அல்லாஹ்‌ நம்மீது செய்துள்ள மாபெரும்‌ பேருபகாரமாகும்‌.

மற்றவர்களின்‌ இந்த ஜமாஅத்தில்‌ இணைவது நம்மிடம்‌ ஒரு மாபெரும்‌ தியாகத்தை எதிர்பார்க்கின்றது. நாம்‌ முழு உலகத்தின்‌ உள்ளங்களையும்‌ இஸ்லாத்தின்‌ பக்கம்‌ ஈர்க்க குனிய வைக்க வேண்டியிருக்கிறது. மேலும்‌ அனைத்து உலகத்தையும்‌ ஹஸ்ரத்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்)‌ அவர்களின்‌ கொடியின்‌ கீழ்‌ ஒன்றிணைத்து முழு உலகத்தையும்‌ அமைதிப்‌ பூங்காவாக ஆக்க வேண்டியதிருக்கிறது.

ஆக, இன்று ஜமாஅத்தின்‌ எவ்வித எதிர்பார்த்தலும்‌ இல்லாத இந்த பொருள்‌ தியாகத்தின்‌ விளைவாக ஒரு பக்கம்‌ இஸ்லாத்திற்கு எதிராக நடைபெறும்‌ பேனா மூலம்‌ செய்யப்படும்‌ போர்களுக்கு வாயடைக்கக்கூடிய அளவில்‌ பதில்‌ அளிக்கப்படுகின்ற அதே வேளையில்‌, அடியார்களை அந்த ஏக இறைவனை வணங்குபவர்களாக ஆக்குவற்கு உலகம்‌ முழுவதும்‌ பள்ளிவாசல்கள்‌ கட்டப்படுகின்றன. ஆதரவற்ற ஏழைகள்‌ மற்றும்‌ உதவிக்கு தகுதியானவர்கள்‌, இயற்கை சீற்றங்களால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, நோய்களாலும்‌, தொற்று நோய்களாலும்‌ பாதிக்கப்பட்டு இருக்கின்ற இறை அடியார்களுக்கு எவ்வித சாதி, மத பேதமின்றி உதவி செய்யப்படுகின்றது. ஆப்ரிக்கா போன்ற தொலை தூரப்‌ பகுதியில்‌ குடிப்பதற்கு தூய தண்ணீருக்கான ஏற்பாடு செய்யப்படுகின்றது. பள்ளிக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ மூலமாக கல்வி அறிவில்லாத மக்களுக்கு எவ்வித மத, இன பாகுபாடின்றி கல்வி உதவி வழங்கப்படுகிறது. இன்று இந்த பொருள்‌ தியாகத்தின்‌ மூலமாக அல்லாஹ்‌ இஸ்லாம்‌ மற்றும்‌ இஸ்லாத்தின்‌ ஸ்தாபகரின்‌ தூதுச்‌ செய்தியை MTA மூலமாக முழு உலகிற்கும்‌ சென்றடையச்‌ செய்து விட்டான்‌.

சுருக்கமாக, முழு உலகிலும்‌ அஹ்மதிய்யா ஜமாஅத்‌ மட்டுமே அஹ்மதிய்யா கிலாஃபத்தின்‌ நிழலில்‌ அசாத்தியமான தியாகத்தை செய்யக்கூடிய வாய்ப்பினை பெற்றுக்‌ கொண்டிருக்கிறது. இது போன்ற முன்மாதிரி பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ சஹாபாக்களைத்‌ தவிர வேறெங்கும்‌ காணக்‌ கிடைக்காது. பிற முஸ்லிம்கள்‌ இந்த அருளிலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்‌.

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌. நமது ஜமாஅத்‌ உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்‌ பல்வேறு காரணங்களினால்‌ இதற்கும்‌ பெருமானார்‌ (ஸல்)‌ அவர்களின்‌ சஹாபாக்களுக்கும்‌ ஒற்றுமை உள்ளது. எவ்வாறு சஹாபாக்கள்‌ செலவு செய்தார்களோ அதே போன்று, தான்‌ விரும்பி சம்பாதித்த செல்வத்திலிருந்து முழுக்க முழுக்க இறை விருப்பத்தை பெறுவதற்காக செலவு செய்கின்றார்கள்‌.

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்கள்‌ தன்னுடைய ஜமாஅத்தின்‌ தூயவர்களின்‌ தன்னலமற்ற தியாகத்தைப்‌ பற்றி கூறியவாறு கூறுகின்றார்கள்‌.

எந்த அளவிற்கு நன்மையில்‌ ஜமாஅத்‌ முன்னேறியுள்ளதோ இதுவும்‌ ஒரு அதிசயமாக நான்‌ காண்கின்றேன்‌. ஆயிரக்கணக்கான மக்கள்‌ உள்ளத்தால்‌ அர்ப்பணமாகின்றனர்‌. இன்று அவர்களிடம்‌ தன்னுடைய அனைத்து செல்வத்தையும்‌ விட்டு விடுங்கள்‌ என்று அவர்களிடம்‌ கூறப்பட்டாலும்‌ விட்டு விடுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்‌. (நூல்-சீரத்துல்‌ மஹ்தி)

அஹ்மதிய்யா ஜமாஅத்‌ எவ்வாறு பொருள்‌ தியாகத்தின்‌ மைதானத்தில்‌ தன்னலமற்ற தொண்டாற்றிக்‌ கொண்டு இருக்கின்றதென்றால்‌ அதை அஹ்மதி அல்லாதவர்கள்‌ கூட புகழாமல்‌ இருக்க இயலவில்லை. அல்‌ மெம்பர்‌ பத்திரிகையின்‌ மார்ச்‌ 2, 1956 பிரதியில்‌ எழுதப்பட்டுள்ளது என்னவென்றால்‌, காதியானிகள்‌ கடந்த 50 வருடங்களில்‌ உள்நாட்டிலும்‌, வெளிநாட்டிலும்‌ தன்னுடைய சமுதாய வாழ்வை நிலைநாட்டுவதற்காகவும்‌, காதியானி அமைப்பை பரப்புவது தொடர்பாகவும்‌ அவர்கள்‌ செய்த இந்த முயற்சி அதாவது அதற்காக அவர்கள்‌ செய்த தியாகங்கள்‌ குறிப்பிடத்தக்கதாகும்‌. நாட்டில்‌ ஆயிரக்கணக்கான மக்கள்‌ தனது உயிரையும்‌, பொருளையும்‌ தியாகம்‌ செய்யக்‌ கூடியவர்களாக இருக்கின்றார்கள்‌. காதியானி மக்களின்‌ ஒரு கனிசமான எண்ணிக்கை தூய உள்ளத்தோடு உயிரையும்‌, பொருளையும்‌, உலக வசதி வாய்ப்புகளையும்‌ தியாகம்‌ செய்கின்றனர்‌ என்பதை நாம்‌ திறந்த மனதோடு ஏற்றுக்‌ கொள்கிறோம்‌. மேலும்‌ அவர்களின்‌ பிற நாடுகளின்‌ ஜமாஅத்துகள்‌ மற்றும்‌ ஜமாஅத்தினர்‌ கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை சதர்‌ அன்ஜுமன்‌ அஹ்மதிய்யா ரப்வா மற்றும்‌ காதியானின்‌ பெயரில்‌ அர்ப்பணித்துள்ளார்கள்‌. (அஹ்மதிய்யத்தின்‌ வரலாறு, பாகம்‌ 16 பக்‌ 535)

கண்ணியத்திற்குரியவர்களே! இன்று அஹ்மதிய்யா ஜமாஅத்தில்‌ மட்டுமே ஒரு ஒழுங்கான நிலையான பொருள்‌ தியாகத்திற்கான அமைப்பு செயல்பட்டு வருகின்றது. ஜமாஅத்‌ உறுப்பினர்கள்‌ எந்த அளவிற்கு ஆர்வத்தோடும்‌ விருப்பத்தோடும்‌ இதில்‌ லெப்பைக்‌ கூறுகிறார்கள்‌ என்றால்‌ அவர்களின்‌ அனைத்து செல்வங்களையும்‌ ஓரிடத்தில்‌ ஒன்று சேர்த்தால்‌ அல்லாஹ்வின்‌ அருளால்‌ இது எவ்வளவு பெரிய ஒரு தொகையாக இருக்கும்‌ என்றால்‌ அதைக்‌ கண்டு அஹ்மதிய்யத்தின்‌ எதிரிகளும்‌ இவ்வளவு சிறிய ஜமாஅத்தின்‌ பட்ஜட்‌ கோடிக்கணக்கான ரூபாயாகும்‌ என்று வியப்பில்‌ ஆழ்ந்து விடுகின்றது. மேலும்‌ அதில்‌ ஒருபோதும்‌ இழப்பும்‌ ஏற்படுவதில்லை. மேலும்‌ இந்த பணம்‌ எங்கிருந்து வருகின்றது என்று எண்ணும்‌ போது அவர்கள்‌ தங்களது உள்ளங்களுக்கு ஆறுதல்‌ வழங்குவதற்காக இது அரபு நாட்டின்‌ எண்ணை வளமாகும்‌ என்று கூறுகின்றனர்‌. மேலும்‌ சில சமயம்‌ இது அமெரிக்க டாலர்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌. ஆக, ஹஸ்ரத்‌ மூன்றாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ அவர்கள்‌ அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்‌ அதாவது ஏழை அஹ்மதிகள்‌ மற்றும்‌ அநீதிக்குள்ளான அஹ்மதிகளின்‌ பொருள்‌ தியாகங்களுக்கு கண்ணியம்‌ அளிக்காமல்‌ தனது பல்வேறு யூகங்களைக்‌ கொண்டிருக்கும்‌ அஹ்மதிய்யத்தின்‌ எதிரிகளுக்கு கூறினார்கள்‌. நான்‌ அவர்களுக்கு கூறுகின்றேன்‌. எங்களுடைய செல்வம்‌ அமெரிக்கன்‌ டாலரோ அல்லது அரபு நாட்டின்‌ செல்வமோ அல்ல. எங்களுடைய செல்வம்‌ அருளுக்குரிய நெஞ்சங்களில்‌ துடித்துக்‌ கொண்டிருக்கும்‌ ஒளிமயமான உள்ளங்களாகும்‌. எதுவரை இந்த உள்ளங்கள்‌ அருளுக்குரிய நெஞ்சங்களில்‌ துடித்துக்‌ கொண்டிருக்குமோ செல்வத்தைப்‌ பற்றிய கவலை எதற்கு? அல்லாஹ்‌ நாடினால்‌ வானத்திலிருந்து எங்களுக்காக செல்வத்தை இறக்குவான்‌. ஏனென்றால்‌, அல்லாஹ்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களிடம்‌ நான்‌ எந்த அளவிற்கு வழங்குவேன்‌ என்றால்‌ நீ செழிப்படைந்து விடுவாய்‌ என்று வாக்குறுதி வழங்கியிருந்தான்‌.

ஹஸ்ரத்‌ ஐந்தாவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ அவர்கள்‌ ஜமாஅத்‌ அன்பர்களின்‌ தன்னலமற்ற தியாகங்களைப்‌ பற்றி கூறியவாறு இவ்வாறு கூறினார்கள்‌.

உருவத்தின்‌ இன்னொரு சரியான பக்கமும்‌ இருக்கின்றது. அது அஹ்மதிகளின்‌ பொருள்‌ தியாகங்கள்‌ உடையதாகும்‌. அல்லாஹ்வினுடைய கட்டளைகளின்‌ படி நடந்தவாறு எப்போது தியாகம்‌ செய்கின்றார்களோ அது அல்லாஹ்வின்‌ அருள்‌ என்று கருதி தியாகம்‌ செய்யக்கூடிய ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களை ஏற்றுக்‌ கொண்டவர்களின்‌ பொருள்‌ தியாகம்‌ தொடர்பானதாகும்‌. அவர்கள்‌ எந்தவொரு தனி மனிதரின்‌ மீதோ அல்லது ஜமாஅத்தின்‌ மீதோ பேருபகாரம்‌ செய்யும்‌ விதத்தில்‌ தியாகம்‌ செய்வதில்லை. மேலும்‌ எவருக்கும்‌ கஷ்டம்‌ கொடுக்கும்‌ எண்ணத்திலும்‌ தியாகம்‌ செய்வதில்லை. எண்ணம்‌ இருக்கிறதென்றால்‌ அது அல்லாஹ்வின்‌ தூதுச்‌ செய்தி உலகில்‌ பரப்புவதற்காக நம்முடைய பங்களிப்பும்‌ இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌. கவலைக்குள்ளாகி இருக்கும்‌ மனித குல தொண்டிற்கு நாமும்‌ எதையாவது கொடுக்க வேண்டும்‌. இறைவனுடைய விருப்பத்தைப்‌ பற வேண்டும்‌ என்பதாகும்‌. இவர்களில்‌ தங்களின்‌ வயிற்றைக்‌ கட்டிக்‌ கொண்டு பொருள்‌ தியாகம்‌ செய்பவர்களும்‌ அடங்குவர்‌. இவர்களில்‌ மாபெரும்‌ பொருள்‌ தியாகம்‌ செய்யக்‌ கூடியவர்களும்‌ அடங்குவர்‌. தங்களுடைய சந்தாக்களைத்‌ தவிர்த்தும்‌ கோடிக்கணக்கான ரூபாயையும்‌ அவர்கள்‌ தியாகம்‌ செய்து விடுகின்றனர்‌. மேலும்‌ அந்த தியாகம்‌ யாருக்கும்‌ தெரியக்‌ கூடாது என்றும்‌ முயற்சி செய்கின்றனர்‌. ஆக, இவர்களே அல்லாஹ்வின்‌ வாக்குறுதிகளுக்கு ஏற்ப தன்னுடைய இறைவனிடம்‌ அந்த தியாகங்களுக்கான நற்கூலியை பெறக்கூடிய மக்களாவர்‌. அவர்களுக்கு அந்த தியாகத்தின்‌ காரணத்தினால்‌ அல்லாஹ்‌ இவ்வுலகத்திலும்‌ தன்னுடைய அருளின்‌ போர்வையில்‌ எடுத்துக்‌ கொள்வான்‌. அவர்களுடைய குழந்தைகளை அவர்களின்‌ கண்களுக்கு குளிர்ச்சியளிக்கக்‌ கூடியவர்களாக ஆக்குகின்றான்‌. மேலும்‌ மறு உலக வாழ்க்கையில்‌ இறைவன்‌ அவர்களுக்கு வழங்க இருக்கின்ற அருள்களுக்கு எந்த கணக்கும்‌ கிடையாது. இவர்கள்‌ ஏன்‌ இந்த தியாகங்களை செய்கின்றார்கள்‌ என்றால்‌ இவர்களுக்கு இறைவனின்‌ வாக்குறுதியின்‌ மீது நம்பிக்கை இருக்கின்றது.

ஹஸ்ரத்‌ நான்காவது கலீஃபத்துல்‌ மஸீஹ்‌ (ரஹ்)‌ அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌.

அஹ்மதிய்யா ஜமாஅத்தின்‌ பொருள்‌ தியாகம்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களின்‌ உண்மைத்துவத்திற்கு ஒரு மாபெரும்‌ அடையாளமாகும்‌. அதாவது முழு உலகமும்‌ அழுத்தம்‌ கொடுத்தும்‌, ஏசிப்‌ பேசியும்‌, முயற்சி செய்தும்‌, திட்டங்கள்‌ தீட்டியும்‌ கூட ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களின்‌ ஜமாஅத்தின்‌ இந்த மாபெரும்‌ மற்றும்‌ தனிச்சிறப்பை அவர்களிடமிருந்து பிடுங்க இயலாது. முழு உலக சக்திகளுக்கும்‌ நான்‌ கூறுகின்றேன்‌; நீங்கள்‌ என்ன வேண்டுமானாலும்‌ செய்து பாருங்கள்‌. ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களின்‌ ஜமாஅத்தைப்‌ போன்று பொருள்‌ தியாகம்‌ செய்யக்கூடிய ஜமாஅத்தைக்‌ கொண்டு வந்து காட்டுங்கள்‌. எவர்கள்‌ இது போன்று தூய்மையுடனும்‌, விசுவாசத்துடனும்‌ தியாக உணர்வோடும்‌ இறைவனுக்கு தன்னுடைய செல்வங்களை கொடுக்கின்ற முகத்தை உலகிற்கு முன்பு காட்டுங்கள்‌. (குத்பா ஜுமுஆ 25 டிசம்பர்‌ 1992)

அல்லாஹ்‌ நம்மை பொருள்‌ தியாகத்தின்‌ உண்மையான ஆன்மாவை புரிந்தவாறு ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) மற்றும்‌ அன்னாருடைய கலீஃபாக்களின்‌ பொருளாதார திட்டத்தில்‌ முழு மனதோடு லெப்பைக்‌ கூறக்கூடிய நல்வாய்ப்பினை நம்‌ அனைவருக்கும்‌ வழங்குவானாக. ஆமீன்‌

சொற்பொழிவு ஜல்ஸா ஸாலானா “காதியான்- டிசம்பர் 2014: மவ்லவி அப்துல்‌ வகில்‌ சாஹிப்‌ நியாஸ்‌

தமிழ் மொழியாக்கம்: முரப்பி M.B. தாஹிர் அஹ்மது சாஹிப்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.