காஷ்மீரில் ஸ்ரீநகர் எனும் ஊரில் கானியார் எனும் வீதியில் பிரசித்துபெற்ற ஒரு கல்லறை உள்ளது. அதில் இரு நபர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் செய்யது நசீருத்தீன் என்பவரின் கல்லறையும் உள்ளது. அதனோடு யூஸ் ஆஸஃப் என்பவரின் கல்லறையும் உள்ளது.
இந்த யூஸ் ஆஸஃப் என்பவர் ஹஸ்ரத் ஈஸா அலை அவர்களே ஆவார்கள் என்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது அலை அவர்கள் வாதம் செய்தார்கள். இன்னும் சிலர் அது ஈஸா வின் கல்லறை கிடையாது மாறாக அது ஒரு மன்னரின் மகன் கல்லறை அவரின் பெயர் யூஸ் ஆஸஃப் ஆகும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் அது புத்தரின் கல்லறை என்று கூறுகின்றனர்.
நாம் இந்த சிறு கட்டுரையில் யூஸ் ஆஸஃப் என்று அழைக்கப்படக்கூடிய அவர் யார்? அவர் இயேசு என்ற ஈஸா இப்னு மர்யமா? அல்லது புத்தரா? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
யூஸ் ஆஸஃப் என்பது ஒரு எபிரெய மொழிப் பெயர் ஆகும். யூஸு என்பதன் மறுவடிவமே யூஸ் என்பதாகும். யூஸு என்றால் பழைய பாரசீக மொழியில் இயேசு என்று பொருள். கிரேக்க மொழியிலிருந்து பெயர்த்தெழுதப்பட்ட பெர்சிய, அராபிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் யாஸு என்ற பதம், இயேசுவைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆகவே, யூஸ் என்ற பதம் இயேசு என்ற பதத்தைக் குறிப்பதற்கு உபயோகமாகியுள்ளது எனலாம். ஆசாப் என்பது ஒன்று சேர்ப்பவர் அல்லது திரட்டுபவர் என்ற பொருளுடைய பைபில் பெயராக இருக்கிறது. 1 நாளாகமம் 16:4-7ல் ஆசாப் ஒரு பக்திமிக்க லேவியனாக இருந்தான் என்றும் தாவீதின் சங்கீதங்களைப் பாதுகாத்து வைப்போருக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான் என்றும் நாம் படிக்கிறோம். காஷ்மீர் மொழியில் யூஸ் ஆஸஃப் என்பதற்கு "மேய்ப்பர்" அல்லது "குணமளிப்பவர்" என்று பொருள் கூறப்படுகிறது.
சிதறிப்போகியிருந்த இஸ்ரவேல் கோத்திரத்தார் எல்லாரையும் ஒன்றுசேர்த்து திரட்டுவதே இயேசு வருகையின் நோக்கமாக இருந்தது. அவரே இவ்வாறு கூறுகிறார்: "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவற்றையும் நான் கொண்டு வரவேண்டும். அவைகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." (யோவான் 10:16)
"கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி. (எசேக்கியேல் அதிகாரம் 34 வசனம் 11,12)
இதன் காரணமாகவே இயேசு, ஆசாப் என்றழைக்கப்பட்டார். அவர் பாரசீகம், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் ஆகிய நாடுகளிலுள்ள காணாமற்போன பத்துக் கோத்திரத்தாருக்குப் போதிப்பதற்காக வந்தபோது அவர் 'யூஸ் ஆஸஃப்' என்று அதாவது 'இயேசு ஆஸஃப்' என அழைக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க சாத்தியமே.
யூஸ் ஆஸஃப் என்பவர் ஓர் மன்னரின் மகன் என்று சிலரால் கூறப்படுகிறது. ஷியா பிரிவை சார்ந்தவர்கள் இவரை ஓர் மன்னரின் மகனாகவே கருதுகின்றனர். இன்னும் அங்குள்ள காஷ்மீர் வாசிகள் இவர் "ஷஹ்ஸாதா நபி" அதாவது இளவரச நபி ஆவார் என்றழைக்கின்றனர்.
பைபிளில் காணும்போது இயேசு ஓர் இளவரசராகவும், அவர் இளவரசரின் மகனாகவும் திகழ்ந்தார் மற்றும் அழைக்கப்பட்டார் என்பது காணக்கிடைக்கின்றன. அதில் ஒரு சில ஆதாரங்களை நாம் கீழே காணலாம்:
இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். (ஏசாயா 32:1)
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, (மத்தேயு 21:4)
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். (எரேமியா 23:5)
என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, (எசேக்கியேல் 37:24)
இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 9:27)
அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 20:30)
ஆக யூஸ் ஆஸஃப் இளவரசர் அல்லது இளவரசரின் மகன் என்றழைக்கப்பட்டாலும்; மேற்கண்ட ஆதாரங்களின் வாயிலாக இயேசுவும் ஓர் இளவரசராகவும், இளவரசரின் மகனாகவும் அழைக்கப்பட்டார் என்பது புலப்படுகிறது. தாவீதின் குமாரனாகிய இளவரசர் இயேசுவைத்தவிர, யூஸ் ஆஸஃபிற்கு கூறப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த இன்னும் பல அடையாளங்கள் பொருந்தி வரக்கூடிய வேறு எந்த ஓர் இளவரசரும் கடந்த காலத்தில் இருந்ததில்லை.
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் எந்த ஆடவருக்கும் பிறக்கவில்லை என்பது தெளிவான ஒன்றாகும். ஆனாலும் அவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார் என்று பைபிளின் வாயிலாக நம்மால காண முடிகிறது. இந்த அடிப்படையில்தான் யூஸ் ஆஸஃபும் "இளவரச நபி" அல்லது "மன்னரின் மகன்" என்று மக்களால் அழைக்கப்பட்டிருக்க முடியும்.
வெளிப்படையாக இவர் ஒரு மன்னரின் மகன் அல்ல மாறாக இவர் வெளிப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசி ஆவார், அவர் உண்மையில் ஈஸா இப்னு மர்யம் என்பதும் இவர் ஓர் கண்ணிப்பெண்ணுக்கு பிறந்தவர் ஆவார் என்பதும் வரலாற்று நூலில் காணக்கிடைக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கான ஆதாரத்தை நாம் கீழே காணலாம்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
நாம், மர்யமுடைய மகனையும், அவருடைய தாயையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும், நீரூற்றுக்களைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம். (23:51)
ஹதீஸில் இவ்வாறு காண்கிறோம்; ஹஸ்ரத் ஜப்பார் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள், "இயேசு எப்போதும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்; அவர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்றார், இரவு நேரங்களில் அவர் எங்கிருந்தாலும் காட்டில் தாவரங்களை சாப்பிடுவதற்கும் தூய நீரைக் குடிப்பதற்கும் பயன்படுத்தினார்" (கன்ஸுல் உம்மால்)
பவிஷ்ய மஹா புரானில் ஹஸ்ரத் ஈஸா அலை அவர்கள் இமய மலைக்கு வந்ததாகவும் அவருக்கும் ஷாலிவாஹான் எனும் அரசருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் காணலாம். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"... ஒரு நாள், சக்யாக்களின் தலைவரான ஷாலிவஹான் இமயமலைக்குச் சென்றார். அங்கே, ஹுன் தேசத்தில் (லடாக், குஷான் பேரரசின் ஒரு பகுதி), சக்திவாய்ந்த மன்னர் ஒரு மனிதன் மலையில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அவர் நல்லதை உறுதியளிப்பதாகத் தோன்றியது. அவரது தோல் அழகாக இருந்தது, அவர் வெள்ளை ஆடைகளை அணிந்திருந்தார்.
"ராஜா பரிசுத்த மனிதரிடம் அவர் யார் என்று கேட்டார். அதற்கு அவர் பதிலளித்தார்: 'நான் கடவுளின் மகன் என்று அழைக்கப்படுகிறேன், ஒரு கன்னிப் பெண்ணால் பிறந்தவன், நம்பிக்கையற்றவர்களின் மந்திரி, சத்தியத்திற்காக இடைவிடாமல் அலைபவன்.' அப்போது ராஜா அவரிடம் கேட்டார்: 'உங்கள் மதம் என்ன?' அதற்கு அவர் பதிலளித்தார், 'ராஜாவே!, நான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன், அங்கு இனி உண்மை இல்லை, தீமைக்கு எல்லை இல்லை. விசுவாசிகள் அல்லாதவர்களின் தேசத்தில் நான் மேசியாவாக தோன்றினேன். ஆனால் காட்டுமிராண்டிகளின் (தஸ்யு) இஹாமாசி என்ற அரக்கி தன்னை ஒரு பயங்கரமான வடிவத்தில் வெளிப்படுத்தினாள்; விசுவாசிகள் அல்லாதவர்களின் விதத்தில் நான் அவளிடம் ஒப்படைக்கப்பட்டு, இஹாமசியின் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
ராஜாவே, நான் நம்பிக்கை கொல்லாதவர்களிடம் கொண்டு வந்த மதத்திற்கு செவியுறுங்கள்: சாராம்சத்தையும் தூய்மையற்ற உடலையும் தூய்மை படுத்திய பின், நைகமாவின் வேண்டுதல்களில் தஞ்சம் அடைந்தபின்பும், மனிதன் என்றென்றும் நிழைத்திருக்கும் இறைவனிடம் வேண்டுவான். நீதி, உண்மை, தியானம் மற்றும் ஆன்மாவின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் மனிதன் ஒளியின் மையத்தில் ஈசாவை அடைவதற்கான வழியில் செல்வான்.
இவ்வாறு, ராஜாவே!, இஹாமசி அழிக்கப்படுவார்; மகிழ்ச்சியைத் தருபவர் ஈசா, இதயத்தில் என்றென்றும் நிலைத்திருந்தால் அது ஒரு ஆனந்த உருவம்; நான் ஈசா-மாஸீஹ் என்று அழைக்கப்பட்டேன். '
ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபின், நமபிக்கை கொள்ளாதவர்களின் ஆசிரியரை அவர்களுடைய பரிதாபகரமான நிலத்திற்கு அனுப்பி விட்டார். (Bhavishya Purana: Pratisarga Parva, Chaturyuga Khanda Dvitiyadhyayah, 19th Chapter, Texts 17 to 32)
காஷ்மீரில் உள்ள உள்ளூர் வாசிகளின் மரபுகள் பிரகாரம் யூஸ் ஆஸஃப் என்பவர் அஹ்லே கிதாபின் அதாவது வேதக்காரர்களின் தீர்க்கதரிசி ஆவார். அவரின் உண்மையான பெயர் ஈஸா என்பதாகும். இவர் ராஜா கோப் தத்தா அவர்களின் ஆட்சியின் காலத்தில் (சி. 1 ஆம் நூற்றாண்டு A.D)யூஸ் ஆஸஃப் என்ற தீர்க்கதரிசி மேற்கிலிருந்து காஷ்மீருக்கு வந்தார்.
1579-1620 ஆம் ஆண்டிற்கு இடையில் எழுதப்பட்ட காஷ்மீரின் வரலாறு அதாவது தாரிக்-ஏ-காஷ்மீர் என்ற நூலின் கூற்றுப்படி யூஸ் ஆஸஃப் என்பவர் ஒரு வெளிநாட்டு தேசத்திலிருந்து காஷ்மீருக்கு பயணம் செய்து வந்த இறைவனின் நபி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Yuz_Asaf | Vaziri, M. (26 July 2012). Buddhism in Iran: An Anthropological Approach to Traces and Influences)
1747 ஆம் ஆண்டில், உள்ளூர் ஸ்ரீநகரைச் சார்ந்த சூஃபி எழுத்தாளர் காஜா முஹம்மது அஃஸம் திதாமரி என்பவர், ரோஸா பால் (காஷ்மீர் மொழியில் "ரோஸா" என்றால் கல்லறை "பால்" என்றால் இடம் என்று பொருள்) அதாவது இந்த இடத்தில் உள்ள கல்லறை ஒரு வெளிநாட்டு தீர்க்கதரிசி மற்றும் இளவரசர் யூஸ் ஆஸஃபின் கல்லறை ஆகும் என்று கூறினார். (https://en.wikipedia.org/wiki/Yuz_Asaf | Khwaja Muhammad Azam Didamari (1998). Waqi'at-i-Kashmir (Story of Kashmir), being an translation by Khwaja Hamid Yazdani from the Persian MSS Tarikh-i-Kashmir 'Azmi (in Urdu). Srinagar: Jammu and Kashmir Islamic Research Centre. p. 117)
ஈரானில் யூஸ் ஆஸஃப் வந்ததாகவும், அவர் அங்கு பிரசங்கம் செய்து பலரும் அவர் மீது நம்பிக்கை கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானிய மரபுகளில் பதியவு செய்யபட்டுள்ள யூஸ் ஆஸஃப் என்பவரின் அனைத்து கூற்றுக்களும் இயேசுவின் வார்த்தைகள் போன்றவையாக இருந்தன. (Agha Mustafai, Ahwali Ahalian-i-Paras, 219)
முல்லா நசீர் அவர்கள் கூறுகின்றார்கள், "இந்த தீர்க்கதரிசி உண்மையில் ஹஸ்ரத் ஈசா (இயேசு), ருஹ்-அல்லாஹ் (கடவுளின் ஆவி) மற்றும் யூஸ் ஆஸஃப் என்ற பெயரைப் பெற்றவர் என்பதை இந்துக்களின் புத்தகத்தில் நான் கண்டிருக்கிறேன். (உண்மையான) அறிவு கடவுளிடம் உள்ளது. (Mulla Nadiri. Tarikh-i-Kashmir, p. 69)
(படம்: நூல் தாரீக்கே காஷ்மீர் - முல்லா நதீரி)
மற்றொரு வரலாற்று குறிப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“ஆரம்பகால எழுத்துக்களில், மகா அலெக்சாண்டரின் மறைவுக்கு எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் முப்பது வயதை எட்டியபோது, கடவுள் அவரை ஒரு அப்போஸ்தலரின் நிலைக்கு உயர்த்தினார். தனது முப்பத்து மூன்று வயதில், பாலஸ்தீனத்திலிருந்து புனித பள்ளத்தாக்கு நோக்கிச் சென்றார். இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுடன் இணைந்து சிரியாவை அடைந்தார் என்று வரலாற்று படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலுவையில் அறையப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, இயேசு பல இடங்களுக்குச் சென்று, சக்கரிஸ், மரியா மற்றும் சீடர்களைச் சந்தித்து, பின்னர் அறியப்படாத இடத்திற்குச் சென்றார் என்று உண்மையான படைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.” (இந்த ஆதாரம் இடம் பெற்றுள்ள பக்கத்தின் படம் கீழே) (http://www.arifkhan.co.uk/TOJ/core/historical_sources/docs/tahrik_kashmir.html)
(பட உபயம் டாக்டர் ஃபிடா ஹஸ்னெய்ன் (படம்)
மேலும் "வாக்கியாத்தே காஷ்மீர்" என்ற நூலில் நூலின் ஆசிரியர் காஜா ஆஸம் தீதாமரி அவர்கள் செய்யது நசீருத்தீன் (ரோஸா பால் இல் உள்ள ஒரு கபரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்) அவர்களின் குறிப்பை கூறிய பிறகு இவ்வாறு எழுதுகிறார்:
"அருகிலேயே மற்றொரு கல்லறையும் அமைந்துள்ளது, இது மக்களைப் பொறுத்தவரை, பண்டைய காலங்களில் தொலைதூர இடத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி ஆவார். காஷ்மீருக்கு விஜயம் செய்தார். இந்த இடம் ஒரு தூதரின் ஓய்வெடுக்கும் இடமாக பிரபலமானது. ஒரு அந்நிய தேசத்திலிருந்து ஒரு இளவரசன் இங்கு வந்து பக்தியிலும் பிரார்த்தனையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக ஒரு பண்டைய புத்தகத்தில் படித்தேன். [மேலும்] காஷ்மீர் மக்களுக்கு கடவுளின் தூதராக ஆனார். அந்த பண்டைய புத்தகத்தில் அவரது பெயர் யூஸ் ஆஸஃப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” (ஸ்ரீநகரில் உள்ள கல்லறைக்கு முன் பதிக்கப்பட்ட எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்லில் உள்ள வாசகங்களின் தமிழாக்கம் | அதனின் படம் கீழே)
மேலும்:
"கிஸ்ஸா ஷஹ்ஸாதா யூஸ் ஆஸஃப் வோ ஹாக்கிம் பலவ்ஹார் எனும் நூலில் இவ்வாறு குறிப்பு காணக்கிடைக்கின்றன:
"அந்த ஊரிலிருந்து (யூஸ் ஆஸஃப்) புறப்பட்டு, மக்களுக்குப் பிரசங்கிக்கும் பல நகரங்களுக்குச் சென்றார். கடைசியில் அவர் தலைநகரான காஷ்மீரை அடைந்தார். அங்கு குடியேறிய பின்னர், அவர் அனைவரையும் கடவுளுடைய ராஜ்யத்தை நோக்கி அழைத்தார். அவர் காஷ்மீரில் கடைசி நாள் வரை தங்கியிருந்தார் அவரது வாழ்க்கை. (அவர் இறந்த தருணத்தில்) அவர் தனது சீடர்களில் ஒருவரை அழைத்தார், அவர் மக்கள் மத்தியில் யாபித் என்ற பெயரில் அறியப்பட்டார். இந்த சீடர் தனது எஜமானருக்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்ததோடு ஆன்மீக ரீதியில் அடுத்தடுத்து ஒரு உயர் அந்தஸ்தைப் பெற்றார்." (Qisa Shazada Yuzasaph wo hakim Balauhar, p. 131 | இந்த நூலின் பக்கம் கீழே)
இதே குறிப்பை ஷியாக்களின் நூலாகிய கமாலுத்தீன் வ தமாமுன் நிஃமஹ் என்ற நூலிலும் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகிறார்.
"பிறகு அவர்கள் ஸோலாபத் எனும் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள். பல நாடுகளையும் நகரங்களையும் கடந்தார்கள். எதுவரை எனில், கஷ்மீர் எனப்படும் ஓர் இடத்தை வந்தடைந்தார்கள். ஆக, அவர்கள் அதில் சுற்றித் திரிந்து அதன் மரணித்தவர்களை உயிர்ப்பித்தார்கள். அவர்கள் அங்கேயே இருந்தார்கள். எதுவரை எனில், அவர்களை மரணம் பற்றிக் கொண்டது. அதன் மூலம் அவர்கள் உடல் தனியானது. ஒளியின் பால் உயர்ந்தது. மரணத்திற்கு முன்பு அவர்கள் 'அயாபத்' என்ற பெயரையுடைய தமது ஒரு மாணவரை அழைத்தார்கள். அவர் அவர்களுக்குத் தொண்டாற்றியும் அவர்களை கவனித்துக் கொண்டும் வந்தார். அவர் எல்லாப் பணிகளிலும் கைகொடுத்து வந்தார். அவர்கள் அவருக்கு வலியுறுத்தியவாறு இவ்வாறு கூறுகிறார்கள் : நான் உலகை விட்டு உயர்த்தப்படும் நாள் நெருங்கி விட்டது......." (ஆதாரம் நூல்: கமாலுத்தீன் வ தமாமுன் நிஃமஹ் | பக்கம் 579)
கமாலுத்தீன் இந்த நூலின் மேற்கண்ட இந்த வரிகளில் "யூஸ் ஆஸஃப்" என்பவர் இயேசுவே என்பதை வெளிப்படையாக கூறாவிட்டாலும், இந்த நூலின் மற்றொரு பக்கத்தில் யூஸ் ஆஸஃபின் போதனைகளை குறித்து நூலாசிரியர் கூறுகிறார். அவைகள் முழுக்க முழுக்க இயேசுவின் போதனைக்கு ஒத்துப்போகின்றன. அதனை நாம் கீழே தருகிறோம்:
பைபிளில் மத்தேயு அதிகாரம் 13 வசனம் 1-9 இல் இவ்வாறு காணக் கிடைக்கின்றன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
"இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்." (மத்தேயு 13:1-9)
கமாலுத்தீன் வ அத்மாமுன் நிஃமஹ் எனும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
"ஒரு விதைப்பவர் விதைக்கச் சென்று விதைக்கும் போது, சில விதைகள் வழியிலேயே விழும், பறவைகள் விதைகளை எடுக்கும். சில தவறான நிலத்தில் விழும், அவை கல் நிலத்தில் அடையும் போது அவை வாடிவிடும். சில முட்கள் மத்தியில் விழுந்து வளராது. ஆனால் நல்ல நிலத்தில் விழும் விதை வளர்ந்து பழம் தருகிறது. விதைப்பவர் அறிவார்ந்தவர் என்பதை குறிக்கும். விதை மூலம் அவரது ஞானமுடைய வார்த்தைகள் குறிக்கப்படுகின்றன. பறவைகளால் எடுக்கப்பட்ட விதைகள் எவர்கள் புரிந்து கொள்வதில்லையோ அவர்களை குறிக்கின்றன. கல் தரையில் உள்ள விதைகள் ஒரு காதிலும் உள்நுழைந்து மற்றொன்றுல் வெளியேயும் ஞானத்தின் வார்த்தைகள் போன்றவை. முட்கள் மத்தியில் விழுந்த விதை கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தும் அதற்கேற்ப செயல்படாதவர்களைப் போன்றது. நல்ல நிலத்தில் விழும் மற்ற விதைகள் ஞானத்தின் வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிவதைப் போன்றவை." (Kamal-ud Din wa Tmam-un Nimat fi Asbat-ul-Ghaibat wa Kashf-ul-Hairet | Iran: Syed-us-Sanad Press, 1782, p. 357)
மேலும் இந்தப் புத்தகத்திலிருந்து யூஸ் ஆஸஃப் தம்முடைய போதனைகளுக்குப் புஷ்ரா (சுவிசேஷம் என்பதைக் குறிக்கும் அரபி, எபிரெய மொழிப் பதம்) எனப்பெயரிட்டார் என்று தெரிந்து கொள்ளுகிறோம். அதிள் கூறப்பட்டுள்ளதாவது, "தாம் மக்களுக்குப் போதித்து வந்த புஷ்ராவை (சுவிசேஷத்தை) அவர் ஒரு மரத்துக்கு ஒப்பிட்டார். தாம் பெற்றிருந்த அறிவையும் ஞானத்தையும் ஒரு நீரூற்றுக்கு ஒப்பிட்டார். அவரைச்சுற்றி மொய்த்துக்கொண்டு அவரது, மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களை அவர் பறவைகளுக்கு ஒப்பிட்டுப் பேசினார்."
காஷ்மீரில் பிரிட்டானிய அரசாங்கத்தின் ரெசிடெண்ட்டாக இருந்த சர் பிரான்சிஸ் யங்ஹஸ் பண்ட் (1909-11) இவ்விதம் எழுதுகிறார்: "1900 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் யூஸ் ஆஸஃப் என்ற பெயரில் ஒரு ஞானவான் வாழ்ந்து வந்தார். அவர் உவமை வடிவக் கதைகளின் மூலம் போதித்தார். கிறிஸ்து உபயோகித்த அதே கதைகளில் பலவற்றை அவரும் உபயோகித்தார். உதாரணத்திற்கு "விதைக்கிறவனுடைய' கதையைக் கூறலாம். அவருடைய கல்லறை ஸ்ரீநகரில் இருக்கிறது. யூஸ் ஆஸஃபும், இயேசுவும் ஒருவர்தான் என்பது காதியானி பிரிவை நிறுவியவருடைய தத்துவமாகும்." (ஸர் பிரான்சிஸ் யங்ஹஸ்பண்ட் : காஷ்மீர் - பக்கம் 129-130 இலண்டன், 1911)
"மேற்கு நாடுகளைச் சேர்ந்த சில கிறிஸ்தவர்கள் இது இயேசுவின் கல்லறை என்று கூறுகின்றனர், மேலும் கார்பன் டேட்டிங் மற்றும் டி.என்.ஏ சோதனைக்கான எச்சங்களை வெளியேற்றுவதற்கான கோரிக்கையுடன் அவர்கள் எங்களை அணுகியிருந்தனர். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்,” என்று சன்னதியின் பராமரிப்பாளரான முகமது அமின் ரிங்ஷால், ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். "ரோசாபல் இயேசுவின் கல்லறை என்று கூறுவதன் மூலம் வெளிநாட்டினர் முஸ்லீம் உணர்வுகளை புண்படுத்துகிறார்கள், எனவே பல பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே நாங்கள் கருவறையை பூட்டியுள்ளோம்."
இயேசு சிலுவையில் அறையப்பட்டு காஷ்மீருக்கு விஜயம் செய்தார் என்ற கருத்து 1973 ஆம் ஆண்டில் உள்ளூர் பத்திரிகையாளர் அஜீஸ் காஷ்மீரி எழுதிய “கிறிஸ்து காஷ்மீரில்” என்ற புத்தகத்தில் எழுப்பப்பட்டது. இன்னும் பல புத்தகங்கள் அதைத் தொடர்ந்து வந்தன.
"இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட பின்னர், தனது சொந்த நிலத்திலிருந்து குடிபெயர்ந்து, காஷ்மீரை அடைந்து குடியேறினார், தனது பணியை முடித்தார், காலமானார், நித்திய ஓய்வில் வைக்கப்பட்டார்" என்று காஷ்மீரி தனது புத்தகத்தில் எழுதுகிறார். (http://www.reuters.com/article/us-india-jesus-shrine-idUSTRE63R0G120100428)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை தம்முடைய வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த எகிப்து - கெய்ரோவைச் சேர்ந்த செய்க் ரஷீது ரிஜா என்பவரும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அரபிக் நூலாகிய "அல்ஹுதா"விலிருந்து இக்கல்லறை சம்பந்தமான வாதத்தை அப்படியே எடுத்துத் தமது "தப்ஸீருல் மனார்" என்னும் நூலின் ஆறாம் புத்தகத்தில் "இயேசு இந்தியாவுக்கு ஓடிச் சென்றதும் காஷ்மீரில் அவரது மரணமும்" என்ற தலைப்பின்கீழ் இப்படி எழுதுகிறார்:
"ஆகவே, இயேசு இந்தியாவுக்கு ஓடிச் சென்றதும், ஸ்ரீநகரில் அவர் மரணமடைந்ததும், அறிவுக்குப் பொருந்தாததோ அல்லது வரலாற்று உண்மைக்குப் புறம்பானதோ அல்ல." என்று கூறுகிறார்.
இந்த கபரில் உள்ள ஒரு சில தடயங்கள் இந்த கபரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் முஸ்லிம் அல்ல என்பதையும், இன்னும் சிலுவை வேதனையை அடைந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக் கூறுகிறது. அங்கிருக்கும் ஒரு கால் தடம் உள்ள பாறை மற்றும் யூஸ் ஆஸஃபின் கல்லறை ஒரு முஸ்லிம் மரபு பிராகாரம் அடக்கம் செய்யப்படவில்லை என்பதும் நிரூபணமாகிறது.
(படம்: கல்லறையில் உள்ள கால் தடம் பதியப்பட்ட கல்)
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு ஆதரவாக காஷ்மீர் எழுத்தாளர் Fida Hassnain என்பவர் கூறுகிறார், "கல்லறையில் ஒரு பாறை உள்ளது அதில் கால் தடம் உள்ளது. அந்த தடத்தில் சிலுவையில் அறையப்பட்ட காயத்தின் அடையாளம் தென்படுகிறது. மேலும் இவரின் (யூஸ் ஆஸஃபின்) உடல் கல்லறையில் இஸ்லாமிய மரபின் படி அல்லாமல் யூதர்களின் மரபின் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. (Wynne-Jones, Jonathan (16 March 2008). "Did Jesus die?". The Daily Telegraph. Archived from the original on 5 May 2013. Retrieved 25 May 2009)
(படம் : யூஸ் ஆஸஃபின் கல்லறை)
ஆக மேற்க கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் காஷ்மீரில் வேதக்காரர்களில் சிலர் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி, வெளிநாட்டிலிருந்து ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை கடந்து இறுதியில் காஷ்மீரில் வந்து சேர்ந்ததாகவும், அவர் ஓர் கன்னி பெண்ணுக்கு பிறந்தவர் என்பதும், அவர் சிலுவை வேதனையை அடைந்த ஒரு தீர்க்கதரிசி ஆவார் என்பதும், அவர் உவமையாக பேசுபவராக இருந்தார் என்பதும் அவரின் கல்லறை முஸ்லிம் மரபுபடி அடக்கம் செய்யப்படவில்லை மாறாக வேதக்காரர்கள் மரபு பிரகாரம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெள்ளதெளிவாகிறது. யூஸ் ஆஸஃப் என்ற பெயரில் காஷ்மீரில் கானியார் வீதியில் அடக்கம் செய்யபட்டுள்ளவரின் இவ்வணைத்து தடயங்களும், அடையாளங்களும் இயேசு என்ற ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பது நிரூபணமாகிறது.
ஐரோப்பிய எழுத்தாளர்கள் அதிலும் குறிப்பாக கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் இயேசுவை காப்பாற்றுவதற்காக ஸ்ரீநகரில் உள்ள யூஸ் ஆஸஃப் என்றழைக்கப்படுகிறவரின் கல்லறை இயேசுவின் கல்லறை அல்ல மாறாக அது புத்தரின் கல்லறை என்று தமது நூட்களில் எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லாமல் எழுதியுள்ளனர்.
ஆனால் இவர்கள் அந்த புத்தரின் உடல் புதைக்கப்படவில்லை மாறாக எறிக்கப்பட்டு விட்டன என்பதை அறியாதிருந்துள்ளனர். முதல் விஷயம் புத்தர் ஸ்ரீநகரில் மரிக்கவில்லை. மாறாக ஊத்திலுள்ள குஷி நகரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தமது 80 வயதில் கி.மு 543 இல் மரித்து எரியூட்டப்பட்டார். அவரது உடலில் எஞ்சியுள்ள பொருட்கள் சண்டையிட்டுக் கொண்ட அவருடைய சீடர்களுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டு அவற்றைக் காப்பதற்காக ஞாபகார்த்த ஸ்தபஸ்களும் எழுதப்பட்டன. (சேம்பர் கலைக்களஞ்சியம்-புதிய பதிப்பு-புத்த மாதம்-இலண்டன், 1880)
டாக்டர் ஹெர்மன் ஒல்டென்பெர்க்கு இவ்வாறு எழுதுகிறார்: "புத்தர் குசினாராவில் மரணடைந்தார். சூரிய உதய நேரத்தில், நகரத்தின் வாசலுக்கு முன்னர், உலக மன்னர்களின் சிதைக்குக் காட்டப்படும் எல்லாவிதமான மரியாதைகளோடும், குசினாராவின் கண்ணியவான்கள் அவருடைய சடலத்திற்கு எரியூட்டினார்கள்." (ஓல்டன்பர்க் எழுதிய 'புத்தா'-பக்கம் 203)
ஆக இந்த கபரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் புத்தர் அறவே கிடையாது என்பது நிரூபணமாகிறது.
இவ்வணைத்து விஷயங்களையும் ஆதரங்களோடு ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் தமது நூலாகிய "மஸீஹ் ஹிந்துஸ்தான் மேன்" அதாவது இந்தியாவில் இயேசு என்ற நூலின் வாயிலாக உலக மக்கள் அரங்கில் பகிரங்கமாக எடுத்து கூறினார்கள். அதன் பிறகு பல வரலாற்று ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் இதன் பக்கம் கவனம் செலுத்தி இயேசு என்ற ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு அதிலிருந்து உயிரோடு தப்பித்து பல்வேறு நாடுகளை கடந்து சென்று காணாமல் போன பனூ இஸ்ரவேலர்களின் கோத்திரத்தை சார்ந்த சமுதாயங்களை சந்தித்து அவர்களை நேர்வழி படுத்தினார்கள் என்பதையும் இறுதியாக அவர் காஷ்மீர் வந்தார். அங்கே அவர் மரணம் அடைந்தார். தற்போது அவரின் கல்லறை காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் என்ற ஊரில் கானியார் எனும் வீதியில் உள்ளது என்பதை ஆதாரபூர்வமாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
மேலதிகமாக இயேசு என்ற ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையிலிருந்து தப்பித்து பல்வேறு நாடுகள் வழியாக கடந்து வந்து இறுதியில் காஷ்மீர் வந்தடைந்தார் அங்கேயே அவரின் மரணம் நிகழ்ந்தது என்பதை எடுத்து கூறும் வரலாற்று சம்பவங்கள், நிகழ்வுகள், தடயங்கள், ஆதாரங்களை கீழ்காணும் லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.
https://www.alislam.org/jesus/
http://www.jesusinindiathemovie.com/
http://www.arifkhan.co.uk/TOJ/home/welcome.html
https://www.oocities.org/trueworldhistory/christ2.html
Jesus in Kashmir,India(BBC Documentry)-1












கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None