கேள்வி: மனிதனின் நழ்வாழ்வுக்குத் தேவையான எல்லாவித வழிகாட்டுதல்களையும் இறைவன் தனது தூய மறைநூல்களில் தந்திருக்கின்ற நிலையில் 'வஹீ' என்னும் இறை வெளிப்பாடு தொடர வேண்டிய அவசியம் என்ன?
பதில்: 'வஹி'யின் தேவையையும் சமுதாயத்தைச் சீர்திருத்துவதில் அதற்குள்ள பங்கையும் புரிந்து கொள்வது அவசியமாகும். சமுதாயத்தை சீர்திருத்த மறைநூல்கள் மட்டும் போதுமானவையா? அல்லது அவற்றுக்குத் துணையாக ஏதேனும் தேவையா? இது கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். மறைநூல்கள் மட்டும் போதுமென்றிருந்தால் அவை மட்டும் வானத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கலாமே. அதைத்தானே மக்களும் வேண்டியிருந்தார்கள். ஆனால், மறைநூல்கள் மட்டும் போதாது. உண்மையில் நபித்துவத்துடன் 'வஹி' என்னும் இறைவெளிப்பாடும் பின்னிப் பிணைந்துள்ளது. அதன் ஒரு பகுதியே மறைநூலாகும்.
மேற்கோளாக, சூரா ஜுமுஆவில், திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது,
ھُوَالَّذِيْ بَعَثَ فِي
الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْھُمْ يَتْلُوْا عَلَيْھِمْ اٰيٰتِہٖ
அதாவது, கல்வியறிவு இல்லாத மக்களிடையே, அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்பினான். அவர் அவனுடைய கட்டளைகளைப் படித்துக் காட்டுகிறார். 'வ யுஸக்கீஹிம்' அவர்களைத் தூய்மைப்படுத்துகிறார். 'வ யுஅல்லிமுஹுமுல் கிதாப வல் ஹிக்மஹ்' வேதத்தையும் நுட்பாமான அறிவையும் கற்றுக் கொடுக்கிறார்.
இவையே ஓர் இரைதூதரின் பணிகளாகும். ஒரு மறைநூல் மக்களால் தொடப்படாதிருக்கின்ற நிலையில், அறிவற்ற சில போதகர்கள் அந்த நூலின் வசனங்களுக்குத் தவறான பொருள் தந்து அதன் தத்துவமே காணாமற் போய்விட்ட நிலையில், அந்த மறைநூலுக்கு சவால் விடக்கூடிய அளவுக்குப் புதிய தத்துவங்கள் தோன்றிவிட்ட நிலையில் ஓர் ஆசிரியரின் தேவை ஏற்படுகிறது. ஏனெனில் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒரு நபியின் இந்த மூன்று பொறுப்புகள் ஒரு மறைநூல் அருளப்பட்டதை விட முக்கிய மானவையாகும். அந்த நபிமார்கள் அந்த மறைநூல்களை பெரிதும் போற்றுகிறார்கள். அவற்றைச் சுற்றியே சுழல்கிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும் அந்த மறைநூல்கள் மட்டும் போதுமானவையல்ல.
மறைநூல் மட்டும் போதுமென்று நினைப்பவர்கள், திருக்குர்ஆன் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவாறே இன்றும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வார்கள். அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை! ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் இன்றைய முஸ்லிம்களுக்கும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? நபித்தோழர்கள் முஸ்லிம்கள் என்றால் இன்றைய முஸ்லிம்கள் அதே இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாகத் தெரியவில்லை என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் மாறிப் போயிருக்கிறது.
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார்; முஸ்லிம்களிடையே ஏன் இத்தனை வேறுபாடுகள்? ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் ஓர் அழகான பதிலைச் சொன்னார்கள்:
'ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்கு என்னைப் போன்ற சீடர்கள் இருந்தார்கள். ஆனால் எனக்கோ உன்னைப் போன்ற சீடர்கள் இருக்கிறார்கள். இதுதான் வேறு பாட்டிற்குக் காரணம்.


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None