இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்(ரலி) அவர்கள் காதியானிலிருந்து செப்டம்பர் 26, 1912 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காக புறப்பட்டார்கள். ஹுஸூர் (ரலி) அவர்கள் கூறிய ஹஜ் பயணத்தின் சம்பவங்களில் சில உங்கள் முன்பு இதோ! ஹுஸூர் கூறுகின்றார்கள்:
"மனிதன் கஅபாவை பார்க்கும்போது அவனுடைய பார்வை அதன் மீது படும்போது அவனுடைய மனதில் ஒரு வகையான தாக்கம் ஏற்படுகின்றது மேலும் அந்த நேரம் துஆ நிறைவேற்ற படுவதற்கான விசேஷ நேரம் ஆகும். முதலாவது கலீஃபதுல் மஸீஹ்(ரலி) அவர்கள் கூறிவந்தார்கள், நான் ஹஜ் செய்யச் சென்றபோது முதன்முதலில் கஅபாவை பார்த்தபோது நான் படித்த ஹதீஸ் நினைவுக்கு வந்தது அதாவது முதன்முதலில் கஅபா தென்படும்போது கேட்கப்படும் துஆ நிறைவேற்றப்படுகின்றது. ஆக என்னுடைய உள்ளத்தில் பல துஆக்கள் செய்ய விருப்பம் ஏற்பட்டது ஆனால் எனது உள்ளத்தில் திடீரென இனிமேல் ஹஜ் செய்யப் போவதுமில்லை கஅபாவை பார்க்கப் போவதும் இல்லை ஒருவேளை ஒரு துஆவை கேட்டு அது நிறைவேறி விட்டது என்றால் அடுத்து தேவைப்படும்போது என்ன செய்வேன்! என்ற எண்ணம் வந்தது. அப்போது நான் இனிவரும் நாட்களில் இந்த (துஆவின்) தொடர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக, 'இறைவா நான் எப்போது எந்த துஆக்களை கேட்கின்றேனோ அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று துஆ செய்யலாம் என்று எண்ணினேன்.
நான் (அதாவது இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்) இந்த விஷயத்தை முதலாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டுள்ளேன். நான் ஹஜ் செய்ய சென்றபோது இந்த விஷயம் எனது ஞாபகத்திற்கு வந்தது. கஅபாவை பார்த்தபோது என்னுடைய தாத்தா கையை (து ஆவிற்காக) தூக்கினார்கள் (என்னை) துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் வேறு ஏதோ துஆக்கள் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் நான் இறைவா! இந்த கஅபாவை பார்க்க எனக்கு தினமும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. எனது வாழ்நாளிலேயே இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மேலும் ஹஜ் பயணத்தில் முதன்முறையாக கஅபாவை பார்த்து எந்த மனிதன் துஆ செய்கின்றானோ அவை நிறைவேற்றப்படும் என்பது உன்னுடைய நபி (ஸல்) அவர்களிடம் உனது வாக்குறுதியாகும். எனவே என்னுடைய வாழ்நாளில் கேட்கப்படும் துஆ அனைத்தும் நிறைவேற்றபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது துஆவாகும். (தப்ஸீர் கபீர் சூரா பகரா வசனம் 204 கீழ்)
ஹஜ்ரத் முஸ்லிஹ் மவ்ஊத் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து முதலாவது கலீஃபதுல் மஸீஹ்(ரலி) அவர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதுகின்றார்கள்:
ஹஜ்ஜின் மதிப்பு மற்றும் அதன் பெருமை என்ன என்பது ஹஜ் பயணம் மேற்கொள்ளாமல் அறிய முடியாது. உண்மையாகவே இந்த பயணத்தில் காணப்பட்ட துஆ மற்றும் இறை கவனம் எப்போதும் கண்டதில்லை. நூற்றுக்கணக்கான மொழிகள் பேசுகின்ற மக்களை விமானத்தில் ஒன்றாக பார்த்து அவர்களின் லெப்பைக் லெப்பைக் என்ற சப்தத்தை கேட்டு எவ்வாறான உணர்வு மற்றும் நேசம் ஏற்பட்டது என்றால், எண்ணங்களை தாண்டி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகத்துவத்தில் வியப்பு ஏற்பட்டது. அதாவது மக்காவிலிருந்து எழுந்து அந்த ஒளி உலகின் எந்தெந்த மூளையெல்லம் ஒளிமயமாக்கியுள்ளது. இறுதியில் கோடான கோடி மக்களை வழிகேட்டில் இருந்து வெளியேற்றி நேர்வழி படுத்திய அண்ணாரின்அந்த பரிசுத்த ஆற்றல்தான் என்ன!
ராபிஃ என்ற இடத்தில் அமர்ந்து இருந்தபோது லெப்பைக் லெப்பைக் என்ற சப்தம் ஓங்கியது. எனக்கு துருக்கியர்கள் லெப்பைக் லெப்பைக் என்று கூறுவதை கண்டு எனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. துருக்கியர்கள் வார்த்தையை சரியாக உச்சரிக்க மாட்டார்கள் ஆனால் ரஸுலே கரீம் (ஸல்) அவர்களின் துஆ மற்றும் (இறைவனிடத்து) மன்றாடுதல்கள் இவர்களை இழுத்து இஸ்லாத்தின் வழியை காண்பித்து விட்டது.
ராபிஃ என்ற இடத்தின் அருகில் இறைவன் துஆ செய்வதற்காக எனது உள்ளத்தை திறந்தான். மேலும் அதிக துஆ செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இறைவனின் வல்லமை மற்றும் அவன் என் மீது செய்த கருணையின் மீது என்னுயிர் அர்ப்பணமாகட்டுமாக, அதாவது இரண்டு துருக்கியர்கள் உருது என்ன அரபி கூட தெரியாதவர்கள் ஒருவர் எனது வலப்புறமும் மற்றொருவர் எனது இடப்புறமும் நின்றுகொண்டு மனவேதனையுடன் ஆமீன் ஆமீன் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். திடீரென எனது உள்ளத்தில் இது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற தருணமாகும் என்றும் அந்த துருக்கியர்கள் நான் என்ன கூறுகின்றேன் என்று தெரியாதிருந்தார்கள் இருந்தபோதிலும் எனக்காக ஆமீன் ஆமீன் என்று சொல்வதற்காக இறைவன் அவர்களை அனுப்பப்பியுள்ளான் என்ற எண்ணம் வந்தது.
அப்போது நான் எனக்காக ஹுஸூர் (அதாவது முதல் கலீஃபத்துல் மஸீஹ்) மற்றும் ஹுஸூரின் குடும்பத்திற்காக என்னுடைய தாய் மற்றும் என்னுடைய குடும்பத்திற்காக காதியான் மக்களுக்காக மற்றும் அஹ்மதிகளுக்காக இஸ்லாத்தின் நிலைமைக்காக மிக நீண்ட நேரம் துஆ செய்தேன். அந்த இரு துருக்கியர்களும் தொடர்ந்து ஆமீன் ஆமீன் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் அலா ஸாலிக். நான் தகுதி அற்றவனாக இருந்தும்கூட இறைவனின் சந்நிதியில் ஒப்புக்கொள்ளப் பட்டேன் என்று எண்ணும் போது நான் மிகவும் வியப்புக்குள்ளாகின்றேன். (சவானிஹ் ஃபஸ்லே உமர் பாகம் 1 பக்கம் 288)
முதலாவது கலிபதுல் மஸீஹ் (ரலி) அவர்களுக்கு மற்றொரு கடிதத்தில் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
எங்கள் தலைவரே! எங்கள் இமாமே! எங்கள் ஆசிரியரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
இறைவனுடைய கருணை, அருள் மற்றும் உதவியால் நேற்று 7 அக்டோபர் நலமுடன் புனித மக்காவை வந்தடைந்தோம். இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அவன் தனது அருள் மற்றும் உதவியால் தனது புனித பூமியை காண்பதற்கான வாய்ப்பை வழங்கினான். நேற்று மக்காவை நோக்கி ஒட்டகம் செல்லும்போது, கூற முடியாத ஓர் வித்தியாசமான உணர்வு மனதில் ஏற்பட்டது. மனதில் அன்பின் ஒரு உணர்ச்சி உருவாகிக் கொண்டே இருந்தது. (மக்காவை) நாங்கள் நெருங்க நெருங்க மனதின் ஆர்வம் அதிகரித்து கொண்டே சென்றது. அல்லாஹ் தஆலா எவ்வாறு தனது நுட்பம் மற்றும் நாட்டத்தின் கீழ் எங்கிருந்தெல்லாம் இழுத்து வந்துள்ளான் என நான் வியப்படைகிறேன். முதலில் எகிப்து செல்ல நினைத்தேன் பிறகு வழியில்தான் மக்கா உள்ளது அதனை காணலாம். பிறகு ஹஜ் நாட்கள் நடக்கின்றன அதிலிருந்து பயன்பெறலாம் என்ற எண்ணம் தோன்றியது. சுருக்கமாகக் கூறினால், மக்கா மற்றும் ஹஜ்ஜிற்கான எண்ணம் எகிப்திலிருந்து தோன்றியது. இறுதியில் இறைவன் அங்கு கொண்டு சேர்த்தான். எனக்கு பல காலமாக ஹஜ் செய்ய விருப்பம் இருந்தது. மேலும் அதற்காக துஆக்களும் செய்துவந்தேன். (ஹயாத்தே நூர் பக்கம் 593)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்கள் காதியானுடைய பதர் பத்திரிக்கை எடிட்டர் பெயரில் தமது கடிதத்தில் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
"அல்லாவின் அருளால் நவம்பர் 7 ஹஸ்ரத் மீர் நாஸிர் நவாப் சாஹிப் அவர்களுடன் புனித மக்காவில் நுழைந்து உம்ரா செய்தேன். புனித கஅபாவை காணும்போதும், மக்காவில் நுழையும்போது, சஃபா மர்வாவில் ஓடும்போதும் காதியான் வாசிகளுக்காகவும், ஜமாஅத் சகோதரர்களுக்காகவும், இஸ்லாத்தின் நிலை சீராகுவதற்காகவும் அதிக துஆக்கள் செய்தேன். அதற்கான நல்வாய்ப்பை இறைவன் அதிகம் வழங்கினான்..... ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் (முதல் கலீஃபா) கடிதத்திலிருந்து எகிப்து செல்வது கடினம் மதீனாவிலிருந்து திரும்ப வரக் கூடும் என்பதை அறிந்து இருப்பீர்கள் நான் இந்த விஷயத்தையும் இறைவனின் நுட்பம் என கருதுகின்றேன." (ஹயாத்தே நூர் பாப் 8 பக்கம் 593)
மக்காவிலிருந்தே பதர் பத்திரிக்கை எடிட்டரின் பெயரில் மற்றொரு கடிதத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"நான் கனவில் ஓரிடத்தில் இருப்பதாக கண்டேன். மேலும் மீர் சாஹிப் மற்றும் (எனது) தாய் என்னுடன் இருக்கின்றார்கள். விண்ணிலிருந்து ஒரு பயங்கரமான இடி சப்தம் வந்தது. அந்த சப்தம் பீரங்கி தொடர்ந்து வெடித்தால் வருகின்ற சப்தத்தை போன்று இருந்தது. மேலும் பயங்கரமான இருள் சூழ்ந்துள்ளது. ஆம், சில சில நேரத்திற்கு பிறகு வானில் ஒளி தென்பட்டு விடுகிறது. இதே சமயத்தில் இந்த பயங்கரமான சூழ்நிலைக்கு பிறகு விண்ணில் ஓர் ஒளி தோன்றியது. மேலும் (விண்ணில்) லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று தடிமனாக மற்றும் பிரகாசமிக்க சொற்களால் எழுதப்பட்டிருந்தது. நான் மீர் சாஹிபிடம் (விண்ணில் எழுதப்பட்ட) இந்த வரிகளை காணவில்லையா! என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். இப்போதுதான் இந்த வரிகள் வானத்தில் எழுதப்பட்டுள்ளது என்று கூறினேன். அதன் பிறகு ஒருவர் உரத்த குரலில் ஏதோ கூறினார். அதனுடைய பொருள் நினைவில் உள்ளது. அதாவது, விண்ணில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் முடிவு நன்றாகவே இருக்கும். அதன்பிறகு அந்த காட்சி, இருள் மற்றும் மிகுந்த ஓசையின் பதற்றத்தினால் விழித்து விட்டேன். வல்லாஹு அஃலமு பிஸ் சவாப். (ஹயாத்தே நூர் பாகம் 8 பக்கம் 595_596)
(இந்த ஆக்கம் அக்பாரே அஹ்மதிய்யா ஜெர்மனி என்ற இதழில் ஜூலை 2020 இல் வெளிவந்தது. இதனை முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.)
(குறிப்பு: மேலே உள்ள ஆக்கத்தில் ஹஸ்ரத் இரண்டாம் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தமது இரு கடிதத்தில் தாம் மக்காவில் நுழைந்த தேதியை குறிப்பிடும்போது இரு வேறு தேதிகளை குறிப்பிட்டுள்ளார்கள். இது மறதியாக நடந்திருக்கலாம். அஹ்மதிய்யா வரலாறு நூலிலிருந்து தெரியவருவது என்னவென்றால் அன்னார் 7 நவம்பர் அன்றே மக்காவில் நுழைந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தாரீகே அஹ்மதிய்யத் பாகம் 3 பக்கம் 417) இதுதான் சரியானதாகவும் இருக்கும் என நான் கருதுகிறேன்.)


Jazakallah
பதிலளிநீக்கு