குர்பானி கொடுப்பது ஃபர்லா அல்லது சுன்னத்தா?
எந்த ஒரு மனிதனால் குர்பானி கால்நடையை வளர்த்தோ அல்லது விலைக்கு வாங்கியோ குர்பானி கொடுக்க முடியுமோ அவர் கட்டாயமாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று பல ஹதீஸ்கள் மூலம் தெரிய வருகிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆரம்ப காலத்தில் மிகவும் வறுமையில் இருந்தபோதிலும் எல்லா வருடமும் குர்பானி கொடுத்து வந்தார்கள்.
ஈதுல் அழ்ஹாவுடைய நோன்பு
ஈதுல் அழ்ஹா நாளன்று குர்பானி இறைச்சியை உண்ணும் வரை நோன்பு நோற்பது நஃபீல்களில் பிடித்த ஒன்றாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதனை செய்து வந்தார்கள். மேலும் இதன்படி செயல்பட்டால் நற்கூலி கிடைக்கும். செயல்படாமல் இருந்தால் எந்த பாவமும் இல்லை. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இதன்படி அமல் செய்து வந்தார்கள்.
(தினப்பத்திரிக்கை அல்-ஃபஸல் ஜனவரி 17,1947 பக்கம் 4 இலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கம்)
இதர விவகாரங்கள்
1- துல்-ஹஜ்ஜாவுடைய ஒன்பதாம் தேதி ஃபஜ்ர் தொழுகையிலிருந்து 13 ஆம் தேதி அஸ்ர் தொழுகை வரை அனைத்து ஃபர்லான தொழுகையிலும் சாலம் கொடுத்த பிறகுاللّٰہ اکبر- اللّٰہ اکبر-لا الٰہ الّا اللّٰہ و اللّٰہ
اکبر- اللّٰہ اکبر وللّٰہ الحمد என்ற தக்பீரை மூன்று முறை கூற வேண்டும். இந்த தக்பீரை உரத்த குரலில் கூறினால் மிகவும் நல்லது.
2- (துல்-ஹஜ்ஜாவுடைய) பத்தாம் தேதி சூரியன் மேலோங்கிய பிறகு இரண்டு ரக்அத் ஜமாஅத்துடன் ஈது தொழுகையை நிறைவேற்றுங்கள்.
3- ஈது தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி கொடுக்கும் நேரம் ஈது தொழுகைக்கு பிறகு ஆரம்பமாகி 12 ஆம் தேதி வரை முடிவடைகிறது. ஆனால் 13 ஆம் தேதி அஸ்ர் வரை என்பது சிலரின் கூற்றாக இருக்கிறது.
4- ஒட்டகம், பசு, ஆடு, பெண் செம்மறிஆடு இவற்றை கொண்டு குர்பானி கொடுக்கலாம். ஹனஃபி ஆலிம்கள் செம்மறி ஆடையும், எருமை மாட்டையும் குர்பானி கொடுப்பதை ஆகுமானதாக ஆக்கியுள்ளார்கள். ஒட்டகம் ஐந்து வயதுடையாகவும், பசு மூன்று வயதுடையதாகவும், ஆடு மற்றும் செம்மறி ஆடு இரண்டு வயதுடையதாகவும் இருக்க வேண்டும். இதில் நிபந்தனை என்னவென்றால், கால்நடைகள் நொண்டியாகவும், குருடாகவும், எலும்பும் தோலுமாகவும் (அதாவது மெலிந்ததாகவும்) காதுகள் வெட்டப்பட்டதாகவும், நோயுற்றதாகவும் இருக்கக் கூடாது. உடைந்த கொம்புடையதும் ஆகுமானதல்ல. விதையடிக்கப்பட்ட கால்நடையும் விதையடிக்கப்படாத கால்நடையும் குர்பானியில் சரி சமமானது.
5- ஏழு நபர்கள் சேர்ந்து பசு, ஒட்டகம் கொடுக்கலாம்.
6- குர்பானி வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். எந்த நபரால் குர்பானி கொடுக்க முடியுமோ அவர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
7- குர்பானி இறைச்சியை தமக்காக உபயோகித்தாலும் சரி, சதக்காவாக கொடுத்தாலும் சரியே. அதனுடைய தோலை வீட்டில் வைக்கும் பட்சத்தில் பொதுவாக உபயோகிக்கும் பொருளாக தயார் செய்து கொள்ளுங்கள். அஹ்மதிகள் அதனுடைய தோலை அல்லது அதன் விலை மதிப்பை சத்ர் அஞ்சுமன் அஹ்மதிய்யா காதியான் (அதாவது மேலிடத்திற்கு) சதக்காவாக அனுப்பி வைக்க வேண்டும்.
8- இரண்டு வயதுடைய ஆடு, செம்மறியாடு கிடைக்கவில்லை என்றால் ஒரு வயதுடையதை கொடுக்கலாம். செம்மறியாடு ஒரு வயதை விட சிறியதாக இருந்தாலும் கொடுக்கலாம்.
9- துல்-ஹஜ்ஜாவுடைய முதல் நாளிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை குர்பானி கொடுக்கக்கூடியவர்கள் தன் தலைமுடியை வெட்டாதீர்கள். இந்த விஷயத்தின்பக்கம் குறிப்பாக நமது ஜமாஅத்திற்கு கவனம் இருக்க வேண்டும். ஏனென்றால் பொது மக்களிடையே இந்த சுன்னத் காணாமல் போய்விட்டது.
(அல்-ஃபஸ்ல் காதியான் டிசம்பர் 22,1917)
10- குர்பானியில் விதையடிக்கப்பட்ட கால்நடையும், விதையடிக்கப்படாத கால்நடையும் கொடுக்கலாம். (அபூ தாவூத் கிதாபு ழஹாயா)
இறைவனுக்காக கொடுக்கப்படுகின்ற கால்நடையில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது.
(அபூ தாவூத் கிதாபு ழஹாயா)
11- குர்பானிக்குரிய கால்நடையில் குறை இருக்கக் கூடாது, நொண்டி, நோயுற்றதாக, கொம்பு உடைந்ததாக இருக்கக் கூடாது அதாவது முழுமையாக கொம்பு உடைந்து இருக்கக் கூடாது, கொம்பு முழுமையாக உடைபட்டு அதனின் மூளை பாதுகாப்பாக இருந்தால் அதனை குர்பானி கொடுக்கலாம். காது வெட்டப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அதிகமாக வெட்டப்படாமல் இருந்தால் அது ஆகுமானதாகும்.
(குத்பாதே மஹ்மூது பாகம் 2 பக்கம் 73)
குர்பானி இறைச்சி பங்கிடுதல்
நான்காவது கலீஃபத்துல் மசீஹ் (ரஹ்) அவர்களுடைய கருத்து என்னவென்றால் குர்பானி இறைச்சியின் 3 பங்கில் ஒன்று நமக்காகவும் மற்றொன்று ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், அடுத்த ஒன்று உறவினர்களுக்காகவும் பங்கிட்டு கொடுப்பது சுன்னத்தின் அடிப்படையில் உள்ளதாகும்.
(குத்பாத்தே தாஹிர் ஈதைன் பக்கம் 649-651)
கால்நடையை அறுக்கும்போது ஓதும் துஆ
குர்பானிக்குரிய கால்நடையை அறுக்கும்போது துஆ ஓதுவது சுன்னத் ஆகும். இது தொடர்பாக பல ஹதீஸ்கள் உள்ளன. ஹதீஸில் வருகின்றது, "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தனது குர்பானியை கொடுக்கும்போது இறைவனின் பெயரை கூறுவார்கள் மேலும் தக்பீர் கூறுவார்கள்."
(நூல் புகாரி- கிதாபுல் அழாஹி பாப் தக்பீர் இந்தஸ் ஸபஹ்)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும்போது "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள் .
(நூல் முஸ்லிம்- கிதாபுஸ் சைது வஸ் ஸபாயிஹ்)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானியை கொடுக்கும்போது "பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின்" என்ற துஆ வை படிப்பார்கள். அதாவது அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு...எனது இறைவனே! முஹம்மது தரப்பிலிருந்து இந்த குர்பானியை ஏற்றுக் கொள்வாயாக.
(நூல் முஸ்லிம் கிதாபுஸ் சைது வஸ் ஸபாயிஹ்)
குர்பானி மற்றவர்கள் சார்பாக கொடுக்கலாமா?
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், " ஏனைய மக்கள் ஏழையாக இருப்பார்கள். எவரும் குர்பானி நன்மையிலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டவாறு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஏழைகள் சார்பாக குர்பானி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இந்த வழக்கத்தின் அடிப்படையில் எனது வழிமுறை என்னவென்றால் நான் நமது ஜமாஅத்தின் ஏழைகள் சார்பாக ஒரு குர்பானியை கொடுத்து விடுவேன்.
(அல் ஃபஸல் ஆகஸ்டு 17,1922)
(அக்பார் அஹ்மதிய்யா ஜெர்மனி இதழ் ஜூலை 2020 | மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்)


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None