சிந்தனை திறனற்ற ஆலிம்களால் இஸ்லாத்திற்கு ஆபத்து


அஹ்மதிய்யா ஜமாஅத்தின் முதல் கலீஃபாவாகிய ஹஸ்ரத் மௌலானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) அவர்கள் தமது சுயசரிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்கள்:
"ஒரு முறை நான் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பெட்டியில் எனக்கு அறிமுகமில்லாத மற்றொருவரும் என் எதிரில் அமர்ந்திருந்தார். அவர் வயோதிகராகவும் அழகிய தாடியையுடையவராகவும் இருந்தார். பிரயாணத்தின் போது ரயில் வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்ற போது அந்த ஸ்டேஷனிலிருந்து எனக்குத் தெரிந்த ஒருவர் அந்த ரயில் பெட்டியில் ஏறினார். அவர் என்னை பார்த்து, "அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி சாகிப் நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று வினவினார். மௌலவி சாகிப் என்ற சப்தத்தை கேட்டதும் அந்த வண்டியில் என் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அவ்வயோதிகர் அந்த சொல்லைக் கேட்க விருப்பமில்லாதவராக ஜன்னலுக்கு வெளியே தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

வண்டியில் ஏறிக் கொண்ட என் நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த வயோதிகர் மௌலவி சாகிப் என்ற சொல்லைக் கேட்டதும் முகத்தை வெளியே திருப்பக் காரணம் மௌலவிமார்களை பார்க்கவும் அவர்களின் பேச்சைக் கேட்கவும் விருப்பமில்லாததால் தான் என்று நான் எண்ணிக் கொண்டு எனது நண்பரின் கேள்விக்கு அழகிய முறையில் ஆதாரங்களை எடுத்து காட்டி விரிவான விடையைக் கூறினேன்.
நான் கூறிய விடையைக் கேட்டதும், அவ்வயோதிகர் தம் முகத்தை என் பக்கம் திருப்பி தங்கள் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார். அவற்றுக்கெல்லாம் நான் பதில் கூறியபின் அவரைப் பார்த்து, "என்னை மௌலவி சாகிப் என்று ஒருவர் அழைத்ததைக் கேட்டதும், தாங்கள் விருப்பமில்லாத முறையில் முகத்தை வெளியே திருப்பிக் கொள்ள காரணம் என்ன?" என்று கேட்க அவ்வயோதிகர் இவ்விதமாய் பதில் அளித்தார்:-
மௌலவிமார்களின் மீது எனக்கு மிகுந்த கோபமும் அதிக வெறுப்பும் உண்டு, ஆகவே தான் அந்தச் சொல்லைக் கேட்டதும் நான் முகத்தை வெளியே திருப்பினேன். முஸ்லிமாக பிறந்த என்னை ஒரு மௌலவி சாகிப் காஃபிர் ஆக்கிவிட்டார். அவரால், நான் இஸ்லாம் மார்க்கத்தை துறந்து கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்ற நேர்ந்தது. பல வருடங்கள் கழிந்த பின்னர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரே, நான் மீண்டும் இஸ்லாத்தைத் தழுவக் காரணமாக இருந்தார்.
என் தகப்பனார் மார்க்க பற்றுள்ள ஒரு முஸ்லிம். அவர் சிறு வயதிலிருந்தே என்னை மார்க்க சட்டப்படி நடக்குமாறு போதித்து வந்தார்கள். தொழுவதற்காக என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள். ஆலிம்கள் ஹதீது உபதேசங்கள் சொல்லுவதை கேட்கவும் என்னை அழைத்துச் செல்வார்கள்.
இவ்விதம் நான் வாலிபனாக இருந்தபோது, ஒருமுறை எங்கள் கிராமத்தின் பிரசித்துப்பெற்ற ஓர் ஆலிம் சாகிபின் மார்க்க அறிவுரைகளை (ஹதீது) கேட்க என்னை என் தந்தை அழித்துச் சென்றார்கள் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கையில், அந்த ஆலிம் சாகிப் எகிப்திலுள்ள நைல் நதியின் உற்பத்திஸ்தானம் ஜபளுல் கமல் (சந்திர மலை) என்று கிதாபுகளில் இருப்பதாகக் கூறி அந்த நைல் நதி சந்திரனிலுள்ள ஒரு மாலையில் உற்பத்தியாகி எகிப்தில் ஓடுகிறது என்று விளக்கினார்.
அறிவுரை முடிந்த பிறகு சில வாலிபர்கள் ஆலிம் சாகிபை அணுகி, 'மௌலவி சாகிப் தங்கள் சொற்பொழிவில் நைல் நதி சந்திரனிலுள்ள மாலையில் உற்பத்தியாகி எகிப்தில் ஓடுவதாய் கூறினீர்கள். அதை எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பூமியிலிருந்து ஏறத்தாழ இரண்டரை இலட்சம் மைல் தூரத்தில் விலகியிருக்கும் சந்திர மண்டலத்திலிருந்து ஒரு நதி உற்பத்தியாகி இப்பூமியில் வந்து விழுவதனால் அது உலகிலுள்ள எல்லா அற்புதங்களையும் விட மாபெரும் அற்புதமாக இருக்கும். அப்படி விழும் நதியை எல்லாரும் பார்க்கவும் முடியும்.
மேலும் இப்பூமி சுழன்று கொண்டிருப்பதால், சந்திரனிலிருந்து கீழே விழும் ஒரு நதி இப்பூமியில் ஓரிடத்தில் மாத்திரமின்றிப் பல இடங்களிலும் விழுந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்நதி சந்திரனிலிருந்து கீழே விழுவதாகவோ எகிப்தைத் தவிர மற்றக் கண்டங்களில் ஓடுவதாகவோ தெரியவில்லை. அதுமட்டுமன்று; இவ்வளவு பிரம்மாண்டமான நதி ஓரிடத்தில் விழுவதென்றால் அவ்விடத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என யோசிக்கும்போது நடுக்கம் உண்டாகிறது. இவ்வாறிருக்க இந்த நதி சந்திரனிலுள்ள மலையோன்றில் உற்பத்தியாகி பூமியில் வந்து விழுகிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும்?எனக் கேட்டனர்.
வாலிபர்களின் கேள்வியை கேட்டதும், அந்த மௌலவி சாகிப் கடுங் கோபத்துடன் கிதாபில் வந்த விஷயத்தைதான் நான் கூறினேன். இதனை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு ஈமான் இல்லை என்றுதான் பொருள் என்று கூறினார். அதற்குப் பதிலாக அவ்வாலிபர்கள், 'ஆம் மௌலவி சாகிப்! கிதாபிலுள்ளதாக நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் புத்தியும் யூக சக்த்தியுமுள்ளவர்களால் அதை நம்ப இயலாதே. உலகப் பிரசித்துப்பெற்ற ஒரு நதி சந்திரனிலிருந்து கீழே விழுவெதென்றால் அதனை யாரால்தான் பார்க்க முடியாது? ஆதலால்தான் கிதாபில் எழுதி இருக்கிறதென்றாலும் எவ்வாறு நம்ப முடியும் என நாங்கள் கேட்கிறோம். எனவே தாங்கள் தயைகூர்ந்து அதனை விளக்கிக் காட்டுங்கள் என்றனர்.
இவ்வாறு அவ்வாலிபர்கள் மீண்டும் விளக்கம் கேட்டதால் அந்த மௌலவி சாகிபுக்கு தாங்க முடியாத கோபமும் ஆத்திரமும் உண்டாகி, கிதாபில் வந்த விஷயத்தை நான் பேசும்போது அதனை மறுத்துப் பேசும் இவர்களுக்குப் பாடம் கற்பிக்க இங்கு உண்மை ஈமான் கொண்டவர்கள் யாருமே இல்லையா? என்று சப்தமிட்டார். இதனைச் செவியுற்றதால் கோபமும் ஆத்திரமும் கொண்ட சில முஸ்லிம்கள் அவ்வாலிபர்களைக் கடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்தினார்கள். நான் இந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
என் மாநாடு துக்கத்தாலும் ஆத்திரத்க்ட்டாலும் நிறைந்து வழிந்தது. 'என்ன! இதுதானா இஸ்லாம்! ஒரு பக்கம் நைல் நதியின் உற்பத்திஸ்தானம் சந்திரனிலுள்ள மலையென்று கூறப்படுகிறது. மறுபக்கம், அதன் உண்மையை அறிய நாடியவர்களுக்கு இந்தத் தண்டனை கிடைக்கிறது. இதுதான் இஸ்லாத்தின் போதனை என்றால் நீதியும் பகுத்தறிவுமுள்ள ஒரு மனிதனால் அம்மார்க்கத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
இந்த துயர நிகழ்ச்சியைப் பார்த்தபின் தகப்பனாருடன் நானும் வீட்டுக்குத் திரும்பினேன். அங்கு போன பின்னரும் இதைபற்றிய சிந்தனையும் அதன் காரணமாக அமைதியின்மையும் ஏற்பட்டதால் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். இப்படிப்பட்ட ஒரு மதத்தை நான் இன்னும் பின்பற்றி இருப்பது எப்படி நியாயமாகும்? நீதியும் பகுத்தறிவுமுள்ள எவராலும் இதைப் பின்பற்ற முடியாதே. ஆதலால் இனி இஸ்லாம் மார்க்கத்தை கைவிட்டு விட வேண்டியதுதான் என்ற எண்ணம் ஒரு பக்கமும், என்னை மிகவும் நேசித்து என்மீது அளவற்ற அன்பு செலுத்தும் என் பெற்றோரைக் கைவிட வேண்டியது வருமே என்ற தூக்கம் மறு பக்கமும் வாட்டி வதைத்தது. இந்த இரு வேறு விதமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் காரணமாக எனக்குத் தூக்கம் அற்றுப்போயிற்று. இறுதியில் வெகுநேரம் ஆலோசனை செய்த பின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாவிடின் மனசாட்சியைக் கைவிடாமல் உண்மையைப் பின்பற்ற வேண்டியதுதான் மனித தர்மம் என்ற முடிவுக்கு வந்தேன். 
எனவே நள்ளிரவில் எழுந்து பிறந்து வளர்ந்த வீட்டையும் பெற்றோரையும் வேதனையும் துயரமும் நிறைந்த இதயத்துடன் விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி எங்கு செல்ல வேண்டும் என்ற திட்டமும் இல்லாமல் நடந்தேன், இறுதியில் வெகு தொலைவிலுள்ள ஒரு ஊரிலிருக்கும் கிறிஸ்துவ மிஷனை அடைந்தேன். அங்கிருந்து ஒரு பாதிரியிடம், நான் ஒரு முஸ்லிம் வாலிபன். இருப்பினும் இஸ்லாம் மார்க்கத்தின் மீதுள்ள நம்பிக்கை நான் இழக்க நேர்ந்தது. ஆகவே, நீங்கள் என்னைக் கிருஸ்தவ மதத்தில் சேர்த்து, என்னையும் ஒரு கிருத்தவனாகவே மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேண்டினேன்.
என் வரலாற்றை எல்லாம் கேட்டதற்கு பிறகு அங்கிருந்தோர் என்னை கிருத்தவ மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள். நான் இல்லாததால் என் பெற்றோருக்கு எவ்வளவு வேதனையும் துயரமும் ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் யூகித்துப் பார்க்க முடியவில்லை. அந்த எண்ணம் என்னை பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆயினும் என் மனசாட்சியைக் கொண்டு விட்டு முஸ்லிமாக இருப்பதற்கு என் மனம் இடம் தரவில்லை.
அந்த மிஷன் ஹவுசிலே கிருஸ்தவ மார்க்கப் போதனைகளை ஆழமாகக் கற்றுத் தேறி பல ஆண்டுகளுக்குப் பின்னர்  ஒரு கிருத்துவ பாதிரியாகவும் மாறினேன். கலாச்சாரம் வேகமாக உருண்டு என்னை வயோதிகனாக ஆக்கி விட்டது. ஒரு நாள் ஆங்கிலேயனான என் தலைமைப் பாதிரி என்னை அழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இதுவரையிலும் ஒருவருக்கும் தெரியாது இருந்த நைல்நதியின் உற்பத்தி  ஸ்தானம் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆப்ரிக்காவில் மிகப் பயங்கரமான வனாந்தரத்தின் மத்தியிலுள்ள ஒரு மலையில்தான் அது உற்பத்தியாகின்றது. அந்த மலையின் பெயர்தான் சந்திரமலை (ஜபலுள் கமர்) என்று கூறினார்.
இதைச் செவியுற்றதும், என் வாலிபத்தில் நான் இஸ்லாத்தை கைவிட்டு விட காரணமாயிருந்த அந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் எனக்கு எத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டதோ அதே போன்ற அதிர்ச்சி இப்போதும் ஏற்பட்டு நிலை குலைந்து போனேன்.
நான் மிகவும் துக்கத்துடனும் ஆழ்ந்த கவலையுடனும் சிந்தனையில் ஆங்கிலேயர்களால் பற்பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இக்காலத்தில் நைல் நதியின் உற்பத்தி ஸ்தானத்தைக் கண்டுபிடித்ததற்காக பாதிரியார் மகிழ்ச்சி கொண்டாடுகிறார். ஆனால் இத்தகைய கருவிகள் ஏதுமில்லாத காலத்தில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்கள் அந்த நதியின் உற்பத்தி ஸ்தானத்தைக் கண்டு பிடித்து அந்த மலைக்கு ஜபலுள் கமர் (சந்திர மலை) என்று பெயரிட்டிருக்கிறார்களே! என்று வியந்தேன்.
இதிலிருந்து ஆதிகால முஸ்லிம்கள் பூகோளத்தை விளங்கிக் கொள்ள எவ்வளவு முயற்சித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். ஆனால் சிந்தனைத் திறன் இல்லாத ஆலிம்களோ, ஜ்பலுள் கமர் என்பது அந்த மலையின் பெயர் என்று அறியாமல், சந்திரா மண்டலத்திலுள்ள மலை என்று அர்த்தம் பிரித்திருக்கிறார்கள். நான் இஸ்லாம் மதத்தை துறந்து விடவும் என் பெற்றோருக்கு நீங்காத மனநோயை உண்டாக்கவும் அடிப்படைக் காரணமாக இருந்தது சிந்தனையற்ற ஒரு மௌலவி சாகிபின் வார்த்தைகள்தானே என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். அதன் காரணமாக மனம் மாறி, நான் கிறிஸ்தவ சமயத்தைக் கைவிட்டு விட்டு இஸ்லாம் மார்க்கத்தைப் பின் பற்றுவதற்கு இறைவன் பாக்கியமளித்தான். இவ்விதமாக, முஸ்லிமாகப் பிறந்த நான் கிறிஸ்தவனாக மாற ஒரு மௌலவி சாகிப் காரணமானார். மீண்டும் நான் முஸ்லிமாக மாற ஒரு கிறிஸ்துவ பாதிரி காரணமாயிருந்தார்.
இந்நிலையில் நான் இப்போது எந்த ஒரு மௌலவி சாகிபுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன். ஆகவேதான் இப்போது மௌலவி சாகிப் என்று உங்களை யாரோ அழைப்பதைக் கேட்டதும், நான் மீண்டும் கிருஸ்தவனாக மாற இந்த மௌலவி சாகிப் காரணமாகி விடுவாரோ என்று பயந்து அந்த சொல்லையே வெறுத்தவனாய் நான் தங்கள் பக்கம் திரும்பாதிருந்தேன். நீங்களும் ஒரு மௌலவியானதால் என் ஈமான் உங்களால் கொள்ளை அடிக்கப்பட்டு விடுமோ என்று பயந்திருந்தேன். ஆனால் தங்களிடம் வினவப்பட்ட கேள்விக்குத் தாங்கள் அளித்த பதில்களிலிருந்து நீங்கள் என் ஈமானுக்கு மோசம் விளைவிக்க கூடிய மௌலவி சாகிப் அல்ல என்று விளங்கிக் கொண்டேன். எனவேதான், தங்கள் பெயர் தாங்கள் போகுமிடம் ஆகியவற்றை அறிய ஆவல் கொண்டேன்.
மேலே சொன்ன சம்பவத்திலிருந்து தற்கால உலமாக்களின் நிலை என்னவென்றும் இவர்களை நம்பி இவர்களிடமிருந்து இஸ்லாத்தை விளங்கிக் கொள்வோரின் நிலை என்னவாக இருக்குமென்றும் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். சகோதரர்களே! பகுத்தறிவும் சிந்தனை திறனும் மிக உன்னதமான படைப்பான மனிதனுக்கு மட்டுமே இறையோனால் பெரும்பாக்கியமாக அருளப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக மார்க்கத்தைப் பின்பற்றுவதால் மார்க்கத்திற்கோ அதை பின்பற்றுவோருக்கோ எந்தவித லாபமும் இல்லை. ஒரு விஷயம் திருக்குர்ஆனின் போதனைக்கும், அதன் பின்னர் ஹதீதுகளுக்கும் முரணாக இருப்பின், அவ்விஷயம் எந்தக் கிதாபில் யாரால் எழுதப்பட்டிருப்பினும் உதறித் தள்ள வேண்டும். அதில்தான் இஸ்லாத்தின் மேன்மையும் வளர்ச்சியும் அடங்கியுள்ளன.
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்குப் பூத உடலோடு சென்றிருக்கிறார் என்றும் அவரே இறுதி காலத்தில் அங்கிருந்து திரும்பி வருவார் என்றும் வழங்கப்படுகின்ற ஒரு கதை ஜபலுள் கமர் போன்றதே. திருக்குர்ஆனும், ஹதீதுகளும் கண்டிக்கின்ற இக்கதை கிருஸ்தவ நம்பிக்கையையே அடைப்படையாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்தில் இதற்கு இடமேது? இருப்பினும், ஜபலுள் கமர் போன்ற ஆதாரமற்ற கதைகளுக்கு முக்கியமளிப்பது போன்று இன்றைய ஆலிம்கள் ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு வானத்திற்கு ஏறிய கதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். தற்கால ஆலிம்களை குறை கூறவேண்டும் என்பது எங்கள் நோக்கமன்று. அவர்களின் சிந்தனைத்திறன் எத்தகையது என்பதையே இக்கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. 

ஆக்கம்
எஸ். எஸ். எச். ஏ

(இக்கட்டுரை சமாதான வழி இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.