கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும்

v இத்தருணத்தில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள அரசு அறிவிக்கும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது முஸ்லிம்களின் சமூக பொறுப்பு மட்டுமின்றி மார்க்கப் பொறுப்பும் ஆகும்.
v இஸ்லாம் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். அது துஆவுடன் முன்னெச்சரிக்கையையும் மேற்கொள்ளுமாறு நம்மை வலியுறுத்துகிறது.
v சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொற்றுநோய்களின் காலங்களில் சமூக விலகலை கடைபிடிக்கும்படி  நமக்கு கவனமூட்டியுள்ளார்கள்.


முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம்
இன்று முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சவாலை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் திட்டங்களை வகுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  கடை பிடிக்கும்படி அறிவுறுத்துகின்றன. இதேபோல் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் இந்த பேராபத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற அரசு துறைகள் இந்த பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற கடுமையான முயற்சி  மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த பேரழிவின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளைக் காரணம் காட்டி, இந்த நோய் பரவுவதற்கு இஸ்லாத்தின் மீது  குற்றம் சுமத்துவது துரதிர்ஷ்டமாகும்.

அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவது ஒரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்
தற்போது மக்களின் நலனுக்காக இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நோயை எதிர்கொள்வது குறித்து மக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. அரசாங்கம் வழங்கிய அனைத்து வழிகாட்டல்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியது ஒரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும். இஸ்லாமிய போதனைகளின் ஒளியில் அரசாங்கத்தின் இவ்வழிகாட்டல்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் விளைவாக
, ஒரு முஸ்லிம் தன்னை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறார்; இது ஒரு முஸ்லிமின் சமூகப் பொறுப்பும் ஆகும். மேலும் மனிதகுலத்தின் மீதான தனது அனுதாபத்தை வெளிப்படுத்துவதும் ஆகும். இவை அனைத்தும் இஸ்லாமிய போதனைகளின் சாராம்சமாகவே உள்ளது.

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை தோற்றுவிப்பதற்கான நோக்கம்
இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்கள் முற்றிலுமாக மறந்துவிட்ட காலகட்டத்தில், இஸ்லாமிய போதனைகளின் உண்மையான ஆன்மாவைப் பற்றி உலகிற்கு எடுத்தியம்ப ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் 1889 ஆம் ஆண்டு இந்திய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கான அடித்தளத்தை அமைத்தார்கள். அமைதி, நீதி மற்றும் உயர் இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிப்பதற்காக இந்த ஜமாஅத் நிறுவப்பட்டது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இந்த ஜமாஅத்தை தோற்றுவிப்பதற்கு இரண்டு அடிப்படை நோக்கங்களை மட்டுமே எடுத்துக் கூறியுள்ளார்கள். (1) மக்களுக்கு இறைவனை அடையாளங்காட்டியவாறு அந்த இறைவனுடன் உயிருள்ள  பிணைப்பை உருவாக்கும் வழியை உலகிற்கு காட்ட வேண்டும். (2) மனித குலத்துடன் முழுமையான அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் இதுவே இஸ்லாமிய போதனைகளின் சாராம்சமாக உள்ளது. இன்று அல்லாஹ்வின் அருளால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உண்மை இஸ்லாத்தின் உன்னத போதனைகளை உலகில் செயல்படுத்தும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளது.

தொற்றுநோயை எதிர்கொள்ள இஸ்லாத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நோய்களை எதிர்கொள்ள பிரார்த்தனைகளை செய்யுமாறு வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் இஸ்லாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்பொழுதும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றது. ஏனென்றால் பிரார்த்தனைகளுடன் முயற்சிகளும் இணையும்போது அது பயன் தரக்கூடியதாக ஆகிவிடுகின்றது. இஸ்லாத்தின் நிறுவனர் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொற்று நோய்களின் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளைக் குறித்தும் வழிகாட்டல் வழங்கியுள்ளார்கள். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு இடத்தைப் பற்றிய செய்தி உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அந்த பகுதிக்குள் நுழையக்கூடாது. நீங்கள் அப்போது அந்த பகுதியில் இருந்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஹஸ்ரத் தூய நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)
அரசு பயணக் கட்டுப்பாடுகளையும், quarantine (தனிமைப்படுத்தல்) தொடர்பாக வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. உண்மையில் இவை இஸ்லாமிய போதனைகளுக்கேற்பவே  உள்ளன.

தொற்றுநோய்களின் போது சமூக விலகலை கடைபிடிக்க இஸ்லாம் அறிவுறுத்துகிறது
நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட்டு விலகி இருக்குமாறு ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். ஒரு தொழுநோயாளி இஸ்லாத்தில் இணைவதற்காக கைகளைப் பிடித்து பைஅத் என்னும் உறுதிமொழி கொடுக்க விரும்பிய போது ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவரது பைஅத் - உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அவர் தமது வீட்டிற்கு திரும்பிச் சென்று விட வேண்டும் என்று கூறினார்கள். (சுனன் இப்னு மாஜா)
இன்னொரு சந்தர்ப்பத்தில்,  ஒரு நோயாளி ஆரோக்கியமான நபரை சந்திக்கக்கூடாது. இதன் விளைவாக ஆரோக்கியமானவரும் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த போதனைகள் மனிதர்களுக்கு மட்டும் உரியதல்ல. மாறாக விலங்குகளுக்காகவும் இதே போதனையைத்தான் ஹஸ்ரத் தூய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இன்று  quarantine (தனிமைப்படுத்தல்) மற்றும் social distancing (சமூக விலகல்) போன்ற சட்டங்களுக்குக் கீழ்படிவது கடினம் என சில முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை ஒரு மார்க்கப் பொறுப்பாக ஆக்கியுள்ளார்கள்.

இஸ்லாமும் சுகாதாரமும்
தம்மை தாமே சுத்தமாக வைத்திருக்குமாறு இஸ்லாம் அறிவுறுத்துகிறது.  மேலும் தூய்மையை  ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒரு பகுதியாக அறிவிக்கிறது. ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு ஐந்து முறை உளூ செய்வதன் மூலம் கை மற்றும் மூக்கை சுத்தம் செய்கிறார்.
மேலும் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்னவென்றால் அவர்கள் தும்மும் போது முகத்தை மூடிக்கொள்வார்கள். இந்த செயல்முறைகள் இந்நாட்களில் இந்த தொற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான மருத்துவ ஆலோசனைகளாக ஆகி விட்டன.

பிரார்த்தனைகளுடன் மருத்துவ சிகிச்சையையும் மேற்கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது
நோயிலிருந்து குணமடைய பிரார்த்தனைகளுடன் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என இஸ்லாம் எப்பொழுதும் வலியுறுத்துகிறது. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு என்று கூறியுள்ளார்கள். துஆவுடன் அந்த மருந்து பயன்படுத்தப் பட்டால் அல்லாஹ் தனது அருளால் நிவாரணம் வழங்குகிறான்.(முஸ்லிம்)

தொற்றுநோய்களின் போது மனிதகுலம் மீது கருணை காட்ட இஸ்லாம் அறிவுறுத்துகிறது
இவ்வாறான தொற்றுநோய்களின் காலகட்டத்தில் எவ்வித குல, கோத்திர, மார்க்க பேதமின்றி மனிதகுலத்திற்கு சேவை செய்யும் படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி செய்யும்படி உத்தரவிடுகிறது.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு முறை தொழுநோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் பகுதியை கடந்து செல்லும்போது உடனடியாக அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள். மேலும் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.

அஹ்மதிய்யா முஸ்லிம்  ஜமாஅத் இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் வகிக்கிறது
இஸ்லாத்தின் மிக உயர்ந்த போதனைகளான இவை மனித இயல்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவையாகும்.
தொற்று நோய்களின்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ வழிமுறைகளையும் குறித்து இஸ்லாம் கூறியுள்ளது; ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஆனால் இன்று சில முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இந்த அசல் போதனைகளை மறந்துவிட்டதன் விளைவாக இம்மாதிரியான தொற்று நோய்களின்போது அவர்களுடைய சமூக, மார்க்க பொறுப்புகளிலிருந்து கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.
  

தொற்று நோயைக் குறித்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் உலகளாவிய தலைவரின் வழிகாட்டல்
இந்திய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இஸ்லாத்தின் போதனைகளின்படி செயல்படும் ஒரு ஜமாஅத் ஆகும். அரசாங்க விதிமுறைகளுக்கு கீழ்ப்படிவது இந்த ஜமாஅத்தின் தனித்துவமிக்க பண்பாகும். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் உலகளாவிய தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது சாஹிப் அவர்கள் 27 மார்ச் 2020 அன்று உலகெங்கிலும் உள்ள 213 நாடுகளில் வசிக்கும் அனைத்து அஹ்மதி முஸ்லிம்களுக்கும் தனது சிறப்பு செய்தியின் மூலம் அறிவுறுத்தியது என்னவென்றால், ஒவ்வொரு நாட்டில் வாழும் அஹ்மதிகளும் அந்தந்த நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுவது அவர்கள் மீது கடமையாகும்.
அஹ்மதி முஸ்லிம்கள் தனது வீடுகளிலேயே தனது மனைவி மக்களுடன் ஐவேளை தொழுகைகளையும்
,  ஜுமுஆ தொழுகையையும் தொழுது வர வேண்டும். அரசாங்க உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உங்கள் அறிவை வளர்க்க முயற்சி செய்யுங்கள் என்றும் வலியுறுத்திக் கூறினார்கள். மேலும் இத்துடன் அதிகமதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் உலகளாவிய தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

LOCKDOWN - ஊரடங்கு உத்தரவுக்கு கீழ்ப்படிவதில் அஹ்மதிகள் முன்னணியில் உள்ளனர்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இந்திய தலைமையகமான காதியானிலும் அரசாங்க உத்தரவுகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. அஹ்மதி முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே தொழுது வருகின்றனர். மாவட்ட காவல்துறை மேலதிகாரி ஊடகத்திடம் தெரிவித்த அறிக்கை என்னவென்றால், இந்த முழு மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவுக்கு கீழ்ப்படிவதில் காதியான் முதலிடத்தில் உள்ளது. காதியான் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அஹ்மதி முஸ்லிம்கள் தங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தின் காவல்துறை மேலதிகாரி ஒருவர் ஒரு அஹ்மதி முஸ்லிமின் இறுதி சடங்கின் போது, இந்த ஜமாஅத்  ஊரடங்கு உத்தரவு சட்டத்தை முறையாக, முழுமையாக கடைப்பிடித்தது. இந்த ஜமாஅத்தின் மக்களுக்கு என் சார்பாக எந்த வழிகாட்டலும் வழங்கப்படவில்லை. ஆயினும் எல்லா ஏற்பாடுகளையும் உரிய முறையில் அவர்களே செய்தனர் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நிவாரண சேவைகள்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் குத்தாமுல் அஹ்மதிய்யா எனும் இளைஞரணி அமைப்பும்,  அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘HUMANITY FIRST - மனிதம் முதலில் எனும் தொண்டு நிறுவனமும் நாடு முழுவதும் தேவையுடையவர்களுக்கு முழுமையான முறையில் சேவை புரிவதில் ஈடுபட்டுள்ளது. இந்த தொற்றுநோய் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத ஆரம்ப காலத்திலேயே அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் உலகளாவிய தலைவரின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதிலும் ஹோமியோபதி தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. குறைந்தது 50,000 பேருக்கு இந்த தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் அஹ்மதிய்யா  முஸ்லிம்  ஜமாஅத் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த நோயைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 2000 பேருக்கு முகக்கவசங்கள் மற்றும் Hand Sanitizers -களை இலவசமாக வழங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு பிறகும், சம்பந்தப்பட்ட அரசாங்க துறையின் அனுமதியுடன் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் நாடு முழுவதும் 15000 க்கும் மேற்பட்ட தேவையுடைய ஏழைக் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான ரேஷன்களை வழங்கியுள்ளார்கள். மேலும் 40,000 க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவளித்துள்ளார்கள்.
இன்றைய தேவை என்னவென்றால், கொரோனா வைரஸ் பேரழிவை எதிர்கொள்ள நாம் அனைவரும் இறைவனிடத்தில் அதிகமதிகமாக பிரார்த்தனை செய்தவாறு, அரசாங்கம் நமக்கு வழங்கிய வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த பேராபத்திலிருந்து அல்லாஹ் உலகைக் காப்பானாக! ஆமீன்.

ஆக்கம்: அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இந்தியா
மொழியாக்கம்: முரப்பி A.P.தாரிக் அஹ்மது (இன்சார்ஜ் தமிழ் டெஸ்க்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.