ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒருமுறை எனது உள்ளத்தில் ஃபித்யா ஏன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் வந்தது. அப்போது நல்வாய்ப்புக் கிடைப்பதற்காக அதாவது நோன்பிற்கான நல்வாய்ப்பு அதன் மூலமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அது வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. இறைவனே நல்வாய்ப்பை வழங்கக்கூடியவனாக இருக்கின்றான். எல்லாவற்றையும் இறைவனிடமே கேட்க வேண்டும். இறைவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். அவன் விரும்பினால் எலும்புருக்கி நோயுள்ள ஒருவருக்குக் கூட நோன்பிற்கான ஆற்றலை வழங்க முடியும்.
எனவே, ஃபித்யாவின் மூலமாக அந்த ஆற்றல் கிடைத்து விட வேண்டும் என்பதே நோக்கமாகும். மேலும் அது இறைவனது அருளாலேயே ஏற்படுகின்றது. எனவே எனது பார்வையில் (மனிதன்) இவ்வாறு துஆ செய்வது சிறந்ததாகும். அதாவது இறைவா! இது உன்னுடைய ஓர் அருளுக்குரிய மாதமாகும். நான் இதிலிருந்து விலகியிருப்பவனாக உள்ளேன். நான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பேனா? அல்லது இருக்க மாட்டேனா? அல்லது இந்த விடுபட்ட நோன்புகளை நோற்க முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி எனக்கென்ன தெரியும் என்று அவனிடம் இதற்கான நல்வாய்ப்பை வேண்டினால் அப்படிப்பட்ட உள்ளத்திற்கு இறைவன் ஆற்றலை வழங்கி விடுவான் என்ற உறுதி எனக்கு இருக்கின்றது.
இறைவன் விரும்பியிருந்தால் மற்ற சமுதாயங்கள் போன்று இந்த சமுதாயத்திற்கும் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்க மாட்டான். ஆனால் அவன் இந்தக் கட்டுப்பாடுகளை நன்மைக்காகவே வைத்துள்ளான். எனது பார்வையில் இதன் உண்மை இதுவேயாகும். அதாவது மனிதன் உண்மையுடனும் முழுமையான கலப்பற்ற தூய உள்ளத்துடனும் இந்த மாதத்தில் என்னை விலக்கி வைத்து விடாதே என்று இறைவனிடம் கேட்கும் போது இறைவன் அவரை அதிலிருந்து விலக்கி வைக்க மாட்டான். அத்தகு நிலைமையில் மனிதன் ரமலான் மாதத்தில் நோயாளியாக ஆகிவிட்டாலும் அந்த நோய் அவனுக்கு அருளாக ஆகிவிடுகின்றது.
ஏனென்றால், ஒவ்வொரு செயலும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது. நம்பிக்கையாளர் தன் மூலமாக, தான் இறைவழியில் தைரியமிக்கவர் என்பதை நிரூபித்து விட வேண்டும். எந்த நபர் நோன்பிலிருந்தும் விலகியிருக்கின்றாரோ அவர் வேதனைமிக்க உள்ளத்துடன் அந்தோ! நான் உடல்நலத்துடன் இருந்திருந்தால் நோன்பு வைத்திருப்பேனே என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் இருந்தால், அவரது உள்ளம் இதற்காகக் கண்ணீர் வடிப்பதாக இருந்தால் மலக்குகள் அவருக்காக நோன்பு வைப்பர். அவர் சாக்குப்போக்குகளைத் தேடக்கூடாது என்பது நிபந்தனையாகும். அவ்வாறான நிலைமையில் இறைவன் அவரை ஒருபோதும் நற்கூலியிலிருந்து விலக்கி வைக்க மாட்டான்.
இது மிகவும் நுட்பமான விஷயமாகும். ஏதாவது ஒரு நபருக்கு (தனது நஃப்ஸின் சோம்பேறித்தனம் காரணமாக) நோன்பு சுமையாக இருக்கின்ற தென்றால், அவன் தனது எண்ணத்தில் நான் நோயாளியாக இருக்கின்றேன். எனது உடல்நலம் எப்படி இருக்கின்றதென்றால் நான் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் எனக்கு இந்த இந்த நோய்கள் ஏற்படும். இது ஏற்படும்; அது ஏற்பட்டு விடும் என்று கருதுவதாக இருந்தால் தன் மீது இருக்கின்ற இறைவனது அருளை தானே சுமையாகக் கருதுகின்ற அத்தகைய நபர் எப்போது இந்த நற்கூலிக்குத் தகுதி உடையவராக ஆக முடியும்? ஆனால், எந்த நபரது உள்ளத்தில் ரமலான் வந்து விட்டது; அது வர வேண்டும் என்பதற்காகக் காத்திருந்ததோ, நோன்பு நோற்க வேண்டும் என்ற விஷயத்தில் மகிழ்ச்சி அடைந்ததோ, அவர் நோயின் காரணமாக நோன்பு வைக்க முடியவில்லை என்றால், அப்படிப்பட்டவர் வானத்தில் நோன்பிலிருந்தும் விலகியவராக இருக்க மாட்டார். இந்த உலகில் பல மக்களும் சாக்குப்போக்குகளைத் தேடுகின்றனர்.
நாம் எவ்வாறு உலகில் உள்ளவர்களை ஏமாற்றுகின்றோமோ அவ்வாறே இறைவனையும் ஏமாற்றுகின்றோம் என்று அவர்கள் நினைக்கின்றனர். சாக்குப்போக்குகளைத் தேடுகின்றவர்கள் தன் தரப்பிலிருந்தும் தானே காரணங்களை உருவாக்குகின்றனர். அதில் செயற்கையானவற்றைச் சேர்த்து அந்த காரணங்களைச் சரியானதாக ஆக்குகின்றனர்.
ஆனால், இறைவனது பார்வையில் அவை சரியானவை அல்ல. செயற்கையானவற்றின் கதவு மிகவும் விரிவானதாகும். மனிதன் விரும்பினால் இந்த (செயற்கைத் தன்மையின்) அடிப்படையில் முழு வாழ்நாளும் உட்கார்ந்தவாறு தொழுது கொண்டிருக்க முடியும். முற்றிலும் ரமலானின் நோன்புகளை நோற்காமல் இருக்க முடியும்.
ஆனால் இறைவன் அவனது எண்ணத்தையும் நாட்டத்தையும் அறிந்துள்ளான். எவர் உண்மையும் கலப்பற்ற மனத்தூய்மையும் கொண்டவராக இருக்கின்றாரோ அவரது உள்ளத்தில் வேதனை இருக்கின்றது என்பது இறைவனுக்கு தெரியும். இறைவன் அவருக்கு நற்கூலியை விட அதிகமாகவும் வழங்குகின்றான். ஏனென்றால், உள்ளத்திலுள்ள வேதனை மதிப்பளிப்பதற்குத் தகுந்த ஒன்றாகும்.
(மல்ஃபூஸாத் தொகுதி 2, பக்கம் 563-564)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None