ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்கள் மீது சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா? என்ற கருத்துவேறுபாட்டில் பல்வேறு முஸ்லிம்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருக்கின்றனர். இதனை தனி விவாதமாகாவும் எடுத்தும் பேசி வருகின்றனர். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இதனை குறித்து எந்த கொள்கையை கொண்டுள்ளது என்பதை நாம் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அவர்கள் 8 மார்ச் 2019 அன்று ஆற்றிய ஜுமுஆ உரையில் மிகவும் தெளிவாக விளக்கமாக அனைவரும் புரியும் விதமாக இக்கருத்தை குறித்து ஆற்றிய உரையின் சுருக்கத்தை நாம் கீழே தருகிறோம்.
ஹுஸூர் கூறுகின்றார்கள்;
நபிமொழிகளில் வருகிறது. அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் மீது ஒரு யூதன் சூனியம் செய்து விட்டான். மேலும் அதன் தாக்கம் அன்னார் மீது ஏற்பட்டது. நவூதுபில்லாஹ்.
மேலும் அறிவிப்புகளில் வருகிறது. அதாவது அந்த யூதன் சீப்பு மற்றும் தலை முடியின் மீது அவன் சூனியம் செய்து அர்வான் என்ற கிணற்றில் போட்டு விட்டான். மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறகு அங்கு சென்று அதனை வெளியே எடுத்தார்கள்.
சஹீஹ் புகாரியின் விளக்க உரை ஃபதஹுல் பாரியில் இவ்வாறு வந்துள்ளது. அதாவது அந்த சீப்பையும், முடியையும் ஹஸ்ரத் ஜுபைர் பின் இயாஸ் அவர்கள் அந்த கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள் என்றும் வேறொரு அறிவிப்பின் அடிப்படையில், ஹஸ்ரத் கைஸ் பின் முஹ்ஸின் வெளியே எடுத்தார்கள் எந்து வந்துள்ளது.
(ஃபதஹுல் பாரி ஹதீஸ் எண் 5763 தொகுதி 10 பக்கம் 282)
....அசல் விஷயம் என்னவென்றால், பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியத்திற்கான தாக்கம் ஏற்பட்டதா? இதன் உண்மைத்துவம் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக நமது பார்வை என்ன? என்பதேயாகும்.
இதனைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். பெருமானார் (ஸல்) அவர்கள் மீது எந்த விஷயம் தொடர்பாக குற்றம் சுமத்த முடியுமோ அல்லது மக்கள் குற்றம் சாட்டுகின்றனறோ அதற்கு நாம் பதில் கொடுக்க வேண்டும். எனவே ஜமாஅத்தின் நூல்களிலுள்ள இதன் சில விளக்கத்தை நான் எடுத்துக் கூறுவேன்....
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் சூரா ஃபலகிற்கு விளக்கமளித்தவாறு இந்த சம்பத்தைப் பற்றி குறிப்பிட்டவாறு கூறுகின்றார்கள்:
சூரா ஃபலக் மற்றும் சூரா நாஸ் ஆகிய இரு அதிகாரங்கள் மக்காவில் அருளப்பட்டது என்று சிலர் கருதுகின்றனர். மேலும் சிலர் இதனை மத்னீ சூரத் என்றும் கூறுகின்றனர். அதாவது மதீனாவில் அருளப்பட்டது என்று கூறுகின்றனர்.
அன்னார் எழுதுகின்றார்கள்: எந்த மக்கள் இந்த அதிகாரம் மதீனாவில் அருளப்பட்டது என்று கூறுகின்றார்களோ அவர்கள் தருகின்ற ஆதாரம் என்னவென்றால், இந்த சூரா மற்றும் அதற்குப் பிறகுள்ள சூராக்களின் தொடர்பு பெருமானார் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த அந்த சம்பத்துடன் தொடர்புடையதாகும். அப்போது யூதர்கள் அன்னார் மீது சூனியம் வைத்தார்கள் என்று கருதப்பட்டது. அப்போதுதான் அந்த இரண்டு அதிராகங்களும் அருளப்பட்டன. பெருமானார் (ஸல்) அவர்கள் இதனை ஓதி தம்மீது ஊதினார்கள். இவ்வாறு கூறப்படுகிறது என்று ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்: இந்த சம்பவம் மதீனாவில் நிகழ்ந்ததால் சூரா ஃபலக் மற்றும் சூரா நாஸ் மத்னீ ஆகும். அதாவது மதீனாவில் அருளப்பட்டதாகும்.
எவ்வாறிருப்பினும் இந்த இரண்டு அதிகாரங்களும் மதீனாவில் அருளப்பட்டது என்று முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது அவர்கள் எழுதுகின்றார்கள்: இது விரிவுரையாளர்கள் எடுத்து வைக்கின்ற ஆதாரமாகும். வரலாற்று ஆதாரம் கிடையாது. நம்மிடத்திலும் கூட இது மக்காவில் அருளப்பட்ட அதிகாரமாகும் என்று நம்பத்தக்க வகையில் வலுவான ஆதாரமும் கிடையாது. ஆனால் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களும் அடிப்படையற்ற ஆதாரங்களாகும். ஏனென்றால் இந்த அதிகாரம் மக்காவில் அருளப்பட்டிருந்தாலும் பெருமானார் (ஸல்) அவர்கள் அதனை ஓதி ஊதி இருப்பார்கள். ஆக வெறும் ஓதி ஊதியதால் மட்டும் இது மதீனாவில் அருளப்பட்டது என்று கருதுவது சரியானது அல்ல.
பெருமானார் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படுவதும், அவர்கள் மீது யூதர்கள் சூனியம் வைத்து விட்டனர் என்று மக்கள் கருதுவதும் ஆகிய இந்த சம்பவங்கள் எந்த சொற்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளதோ இதுவாகும். ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் இதனை விளக்கியவாறு எழுதியுள்ளார்கள்.
அன்னார் எழுதுகின்றார்கள்: விரிவுரையாளர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிற்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்கள். எனவே நாம் இந்த அறிவிப்பையே மொழிபெயர்ப்பு செய்வோம்.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் மீது யூதர்கள் சூனியம் வைத்தனர். அதன் தாக்கம் எந்த அளவுக்கு ஏற்பட்டது என்றால், சில நேரங்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் தாம் செய்யாத பணிகளையும் செய்ததாக கருதினார்கள். ஒரு நாள் அல்லது ஓர் இரவு பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். மீண்டும் துஆ செய்தார்கள். மீண்டும் துஆ செய்தார்கள்.
பிறகு கூறினார்கள்: ஆயிஷாவே! அல்லாஹ்விடம் நான் எதை வேண்டினேனோ அதை அவன் எனக்கு வழங்கி விட்டான். ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அதற்கு நான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தாங்கள் எதைக் கேட்டீர்கள்? அவன் எதைக் கொடுத்தான்? எனக் கேட்டேன். அதற்கு அன்னார், என்னிடத்தில் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைக்கு அருகில் அமர்ந்தார். இன்னொருவர் காலுக்கு அருகில் அமர்ந்தார். எனது தலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர் எனது காலுக்கு அருகில் அமர்ந்திருப்பரிடம் அல்லது காலுக்கு அருகில் அமர்ந்திருப்பர் தலைக்கு அருகில் அமர்ந்திருப்பவரிடம், இந்த நபருக்கு அதாவது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டார். அதற்கு மற்றொருவர், இவர் மீது சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.
அதற்கு அவர் யார் இவர் மீது சூனியம் வைத்தார் என்று கேட்டார். அதற்கு மற்றொருவர், லபீத் பின் ஆஸிம் என்ற யூதன் என்று கூறினார். அதற்கு முதலாவது நபர், எதன் மீது சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்டார். அதற்கு இரண்டாவது நபர் சீப்பு மற்றும் தலை முடியின் மீது வைக்கப்பட்டது என்று பதில் கூறினார். பிறகு முதலாவது நபர், இந்தப் பொருட்கள் எங்கே? என்று கேட்டார். அதற்கு இரண்டாவது நபர், அர்வான் கிணற்றில் உள்ளது என்று கூறினார்.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் தமது சஹாபாக்களுடன் அந்த கிணற்றிற்கு சென்றார்கள். பிறகு திரும்பி வந்து கூறினார்கள்: ஆயிஷாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! கிணற்றின் தண்ணீர் மருதாணியைக் கலந்திருப்பதைப் போன்று சிவப்பாக தெரிந்தது.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் தொடர்ந்து இதற்கு விளக்கம் எழுதியுள்ளார்கள். யூதர்களிடம் இந்த நடைமுறை இருந்தது. அதாவது அவர்கள் எவர் மீதாவது சூனியம் வைத்தால் பிறகு மருதாணி போன்ற பொருட்களை தண்ணீரில் கலந்து விடுவார்கள். இதனைக் கலப்பதன் மூலம் சூனியத்தின் மூலமாக தண்ணீர் சிவப்பாக ஆகிவிட்டது என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக இவ்வாறு செய்தார்கள். சாதாரண மக்களை தூண்டி விடுவதற்காக இவ்வாறு வெளிப்படையான திட்டங்களை தீட்டி வந்தனர்.
பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அங்குள்ள பேரீச்சம் பழம் பாம்பின் தலையைப் போன்று இருக்கும். அதிலுள்ள பேரித்தம் பழத்தின் கிளைகள் பாம்பின் தலையுடன் ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அன்னாரிடம் யா ரஸூலல்லாஹ்! எந்தப் பொருளின் மீது சூனியம் செய்யப்பட்டதோ அதனை ஏன் எரிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அல்லாஹ் என்னை சுகத்தை வழங்கினான். எனவே நான் ஏதாவதொன்றைக் கூறி அதனால் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் எதையும் கூற விரும்பவில்லை. எனவே நான் அந்தப் பொருட்களை புதைப்பதற்கு கட்டளையிட்டேன். எனவே அது புதைக்கப்பட்டு விட்டது.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் எழுதுகின்றார்கள்: இந்த அறிவிப்பில் பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் வந்த இரண்டு ஆண்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு காட்டப்பட்ட அவர்கள் வானவர்கள் ஆவர். அவர்கள் மனிதர்களாக இருந்திருப்பின் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் காட்சியளித்திருப்பார்கள்.
அன்னார் கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமாக கூறப்பட்டுள்ளவைகளின் பொருள் இவ்வளவு மட்டுமே ஆகும். அதாவது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வானவர்களின் மூலமாக, யூதர்கள் அவர்கள் மீது சூனியம் வைத்தனர் என்ற செய்தியை தெரிவித்தான். சூனியத்தினால் எந்த தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறதோ அவ்வாறு பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டது என்பது இதன் பொருளல்ல.
பிறகு அன்னார் கூறுகின்றார்கள்: எவ்வாறிருப்பினும் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சூனியம் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை வெளியே எடுத்து பூமியில் புதைத்து விட்டார்கள். இவ்வாறு யூதர்களும் அவர்கள் செய்த சூனியம் பொய்யானது என்றும், முடிவுற்று விட்டது என்றும் கருதினர். பிறகு அல்லாஹ் அன்னாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினான். ஆக சுருக்கம் என்னவென்றால், பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியம் வைத்து விட்டதாக யூதர்கள் நம்பினர். இதன் காரணமாக இயல்பாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட வேண்டும் என்பதன் பக்கம் அவர்களது கவனம் சென்றது.
அன்னார் எழுதுகின்றார்கள்: இந்த அறிவிப்புகளிலிருந்து எங்கு யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டிருந்த பகைமை தெரிய வருகின்றதோ அங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மை நபியாவார்கள் என்பதும் தெரிய வருகின்றது. ஏனென்றால், பெருமானார் (ஸல்) அவர்களுககு எதிராக யூதர்கள் செய்து இந்த அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் அல்லாஹ் அன்னாருக்கு அறிவித்துக் கொடுத்தான். எனவே அன்னாருக்கு மறைவான விஷயங்கள் தெரிந்திருப்பது, யூதர்கள் தமது நோக்கத்தில் தோல்வியடைந்தது அன்னார் உண்மை நபி என்பதற்கு வெளிப்படையான மற்றும் வலுவான ஆதாரங்களாகும்.
(தஃப்ஸீரே கபீர் தொகுதி 10 பக்கம் 539-542)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் எந்தத் தீர்வை கூறியுள்ளார்களோ அதுவே உண்மையாகும். அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியம் வைத்ததாக யூதர்கள் எண்ணினர். ஆனால் அதன் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. பிறகு நோய் மற்றும் மறதி அல்லது எந்த நோயாக இருந்தாலும் அதற்கு வேறு காரணம் இருக்கலாம். ஆனால் அல்லாஹ் யூதர்களின் இந்த நடவடிக்கையைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்ததன் மூலம் அவர்கள் வெளிப்படையாக நாம் சூனியம் வைத்து விட்டோம் என்று கருதியதையும் தோல்வியுறச் செய்தான். மேலும் அன்னாருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, யூதர்கள் தமது எண்ணத்தில் நமது சூனியமே தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அன்னார் நோயுற்றார்கள் என்ற எண்ணியதன் உண்மைத்துவமும் வெளிப்பட்டு விட்டது.
பிறகு நமது நூல்களில் ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் அவர்களின் ஒரு கட்டுரை உள்ளது. அது இந்த சம்பவம் தொடர்பாக வரலாறு மற்றும் அறிவு ரீதியாக விரிவாக வாதித்துள்ளது.
அன்னார் எழுதுகின்றார்கள்: வரலாறு மற்றும் நபிமொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்னவென்றால், ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு நயவஞ்சகனான யூத சந்ததியைச் சார்ந்த லபீது பின் அஸிம் என்பவன் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியம் வைத்து விட்டான். நவூதுபில்லாஹ். மேலும் இந்த சூனியம் எவ்வாறு செய்யப்பட்டது என்றால், ஒரு சீப்புடன் முடியை கட்டி அவற்றில் சிலவற்றை ஓதி அதனை கிணற்றில் போடப்பட்டது.
அன்னார் கூறுகின்றார்கள்: அன்னார் இந்த சூனியத்தில் நீண்ட காலமாக சிக்கிக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. நவூதுபில்லாஹ். இவ்வாறு அவர்கள் பரப்பி இருந்தார்கள். அதாவது இந்த காலகட்டத்தில் அன்னார் பெரும்பான்மையான நேரங்கள் கவலையில் இருந்தார்கள். மேலும் பதற்றமடைந்தவாறு மீண்டும் மீண்டும் துஆ செய்து வந்தார்கள். மேலும் இந்த நிலைமைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், அன்னாருக்கு இந்த நாட்களில் அதிகம் அதிகமாக மறதி ஏற்பட்டது. சில விஷயங்களை மறந்து விடுவார்கள். எதுவரை என்றால் சில நேரங்களில், நான் இந்தப் பணிகளை செய்து விட்டேன் என்று அன்னார் கருதினார்கள். ஆனால் உண்மையில் அந்தப் பணிகளை அன்னார் செய்திருக்க மாட்டார்கள். அல்லது சில நேரங்களில், நான் எனது இந்த இந்த மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளேன் என்று அன்னார் கருதினார்கள். ஆனால் உண்மையில் அன்னார் இந்த வீடுகளுக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
இதற்கு விளக்கமளித்தவாறு அன்னார் கூறுகின்றார்கள்: இது தொடர்பாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இஸ்லாத்தின் கடமைகளுக்கேற்ப அன்னார் ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுதில் தமது மனைவிகளிடம் சென்று அவர்களிடம் நலம் விhசரித்து வந்தார்கள். இறுதியாக இன்று எந்த மனைவியிடம் செல்லவேண்டுமோ அந்த மனைவியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இவ்வாறு அன்னார் நிர்ணயித்திருந்தார்கள். மேலும் இதுவே பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையாக இருந்தது.
மேலே உள்ள அறிவிப்பும் இதனையே சுட்டிக் காட்டுகின்றது. இறுதியில் அல்லாஹ் ஒரு கனவின் மூலமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இந்த குழப்பத்தின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்தினான்.
இந்த சுருக்கம் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் இதற்கு முன்னரும் எடுத்துக் கூறப்பட்டு விட்டது. இது புகாரியின் அறிவிப்பாகும். இதன் விளக்கத்தையே அன்னார் எடுத்துக் கூறினார்கள்.
பிறகு அன்னார் எழுதுகின்றார்கள்: இது வரலாறு, நபிமொழி மற்றும் சில நூல்களில் கூறப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் சுருக்கம் ஆகும். இந்த அறிவிப்போடு எப்படிப்பட்ட கதைகளின் வலையை புனைந்துள்ளார்கள் என்றால் உண்மையை தெரிந்து கொள்வது என்பது மிகக்கடினமாகி விட்டது.
அன்னார் எழுதுகின்றார்கள்: இந்த அனைத்து அறிவிப்புகளையும் ஏற்றுக் கொண்டால் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களின் அருளுக்குரிய மற்றும் பரிசுத்த இருப்பானது, குறைமதி கொண்ட, மிகவும் பலவீனமான மனிதர் என்று நிரூபணமாகும். நவூதுபில்லாஹ். இந்த விஷயத்தை குறைந்தது உலக விவகாரங்களில் அன்னார் மீது தவறான எண்ணம் கொண்டுள்ள எதிரி தமது சூனியத்தினால் நடந்தது என்று கூறலாம். பிறகு தமது அசுத்தமான எண்ணத்திற்கு அன்னாரை இலக்காக்க முயற்சித்தவாறு அன்னாரது உள்ளம் மற்றும் சிந்தனைகளில் அன்னார் இந்த சூனியத்திற்கு எதிரில் தம்மை ஒன்றும் செய்ய இயலாதவர்களாக கருதினார்கள் என்ற இந்த எண்ணத்தை பதிய முற்பட்டனர். நவூதுபில்லாஹ். ஆனால் இவ்வாறு நடைபெறுவது சாத்தியமற்றதாகும்.
ஆனால் இந்த அறிவிப்புகளை எடுத்துக் கூறப்பட்ட மற்றும் சரியான முறையிலும் ஆராய்ந்தால், இது ஒரு மறதியின் நோய் என்றே நிரூபணமாகும். அது சில நேரங்களில் தற்காலிகமாக கவலை கொள்வது மற்றும் உடல்ரீதியாக ஏற்படக்கூடிய பலவீனத்தின் காரணமாக அன்னாருக்கு சிறிது நேரத்திற்காக ஏற்பட்டது. இதிலிருந்து தீய எதிரி பயனடைந்தவாறு, நாங்கள் முஸ்லிம்களின் நபி மீது சூனியம் வைத்து விட்டோம் என்று பரப்பினர். நவூதுபில்லாஹ். ஆனால் அல்லாஹ் அன்னாருக்கு மிக விரைவில் ஆரோக்கியத்தை வழங்கி எதிரிகளின் முகத்தை கருப்பாக்கினான். மேலும் இவ்வாறு நயவஞ்சகர்களின் பொய்யான பிரச்சாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.
முழு உலகத்திலும் இருக்கின்ற ஷய்த்தானிய ஆற்றலை வெற்றி கொண்ட மகத்துவமிக்க வெற்றியாளரும், நபிமார்களில் சிறந்தவரும் ஆகிய அன்னாரைத் தவிர ஷய்த்தானிய சக்தியின் தலையை நசுக்கியவர் இன்று வரை எவரும் பிறந்ததும் கிடையாது. இனி பிறக்கக் போவதும் கிடையாது. இது தொடர்பாக ஒரு கீழ்த்தரமான யூதனின் ஷய்த்தானிய சூனியத்திற்கு அன்னார் ஆளாகி விட்டார்கள் என்று கருதுவது மனித சிந்தனையின் மிகவும் மோசமான ஒரு விஷயமாகும். இதை சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. மேலும் இது வெறும் நமது வாதம் மட்டுமல்ல. மாறாக, அகிலங்களுக்கும் தலைவராகியவர் இதனை வழிமொழிந்துள்ளார். இதன் விளக்கம் ஒரு நபிமொழியிலிருந்து கிடைக்கின்றது.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், யா ரஸூலல்லாஹ்! ஷய்த்தான் இருக்கின்றானா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னார், ஆம் என்று கூறினார்கள். பிறகு ஆயிஷா அவர்கள், என்னுடன் ஷய்த்தான் இருக்கின்றானா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னார், ஆம் என்று கூறினார்கள். பிறகு நான் அனைத்து மனிதர்களுடனும் ஷய்த்தான் இருக்கின்றானா? என்று கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஆம் என் பதிலளித்தார்கள். பிறகு நான் வியப்படைந்தவாறு, யா ரஸூலல்லாஹ்! உங்களுடனும் ஷய்த்தான் இருக்கின்றானா? என்று கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஆம். ஆனால் இறைவன் ஷய்த்தான் மீது எனக்கு வெற்றியை வழங்கியுள்ளான். எதுவரை என்றால் என்னுடைய ஷய்த்தான் முஸ்லிமாகி விட்டான் என்று கூறினார்கள்.
(சஹீஹ் முஸ்லிம் கிதாப் சிஃபதுல் கியாமத்த வல் ஜன்னத்த வந்நார் தஹ்ரீஷ் ஷய்த்தான்)
இந்த வெளிப்படையான கூற்றிற்குப் பிறகும், திருக்குர்ஆனின் அடிப்படையில் வழிகெட்ட சமுதாயத்தைச் சார்ந்த யூத நயவஞ்சகன் தமது ஷத்தானின் உதவியுடன் பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற உயர் அந்தஸ்தை கொண்டவர் மீது சூனியம் வைத்து விட்டான் என்றும் அன்னார் இந்த ஷய்த்தானின் சூனியத்தினால் தாக்கத்திற்கு ஆளாகி நீண்ட காலமாக கவலையிலும் நோயுற்றும் இருந்தார்கள் என்றும் கருத முடியுமா? பொய்யர்கள் உண்மைக்கு எதிரில் ஒவ்வொரு காலத்திலும் இத்தகைய பொய்யான ஆயுதத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் வல்லமைமிக்க மற்றும் கண்ணிமிக்க இறைவன் இத்தகைய அனைத்து பொய்யையும் வெளிப்படுத்தக் காட்டி விடுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: கதபல்லாஹு ல அக்லிபன்ன அனா வ ருஸுலி (முஜாதிலா:23) அதாவது ஒவ்வொரு ரஸூலின் காலகட்டத்திலும் நானும் எனது ரஸூலும் வெற்றி பெற்றே தீருவோம். மேலும் எந்வொரு ஷய்த்தானிய தாக்குதலும் எம்முடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று இறைவன் நிர்ணித்து விட்டான்.
அன்னார் எழுதுகின்றார்கள்: பிறகு சஹீஹ் புகாரியில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் நாவினால் கூறப்பட்டுள்ள இந்த சம்பத்தின் உண்மை நிலை தான் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. எனவே சம்பவத்தின் தொடர்ச்சி மற்றும் யூதர்கள், நயவஞ்சகர்களின் வழிமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டவாறு சிந்தித்துப் பார்த்தால் இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்காது.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது சூனியத்தின் இந்த சம்பவமானது ஹுதைபிய்யா உடன்படிக்கைகுப் பிறகு நடைபெற்றதாகும்.
தப்காத் இப்னு சஅதில் எழுதப்பட்டுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு கனவின் அடிப்படையில் உம்ரா செய்வதற்கு மக்கா செல்ல முடிவெடுத்தார்கள். மேலும் அங்கு சென்றார்கள். ஆனால் வழியில் குரைஷிகள் தடுத்து நிறுத்தியதன் காரணத்தால் வெளிப்படையில் தோல்வியுடன் திரும்ப வேண்டியதாயிற்று. இந்த வெளிப்படையான தோல்வியானது எப்படிப்பட்ட வலுவான துக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததென்றால், காஃபிர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எள்ளிநகையாடினர். ஏளனர் செய்தனர்.
ஓர் அறிவிப்பில் வருகிறது. சில கலப்பற்ற முஸ்லிம்கள் அதிலும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போன்ற உயர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் இந்த வெளிப்படையான தோல்வியின் காரணத்தினால் தற்காலிகமாக பதற்றமடைந்தார்கள்.
புகாரியில் இதுவும் எழுதப்பட்டுள்ளது. ஹஸ்ரத் உமர் அவர்களின் இந்த நிலைமையினால் பலவீனமான மக்களின் சோதனைக்கு காரணமாகி விடும் என்ற அச்சத்தினால் பெருமானார் (ஸல்) அவர்களின் உடல் நலத்திலும் இயல்பாகவே மிகுதியாக இதன் தாக்கம் ஏற்பட்டது. அன்னார் சிறிது காலம் வரை மிகவும் கவலையில் இருந்தார்கள். இந்த கவலையின் தாக்கம் அன்னாரது உடல் நலத்திலும் ஏற்பட்டது. அன்னார் இந்த பதற்றத்தில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகமாக துஆவும் செய்து வந்தார்கள். ஹதிஸிலும் தஆ வ தஆ என்ற சொற்களில் சைகையாக இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் ஹுதைபிய்யா உடன்படிக்கை சம்பவத்தின் காரணமாக இஸ்லாத்தின் முன்னேற்றத்தில் எவ்வித தற்காலிக தடையும் ஏற்பட்டு விடக்கூடாது. மேலும் இவ்வாறான துஆவையே அன்னார் பத்ர் களத்திலும் இறைவன் தரப்பிலிருந்து வெற்றிக்கான வாக்குறுதி வழங்கப்பட்ட பிறகும் எதிரிகளின் வெளிப்படையான ஆற்றலைக் கண்டு அல்லாஹும்ம இன் தஹ்லிக ஹாதிஹில் இஸாபத ல தஃபுது ஃபில் அர்ழ் என்று துஆ செய்தார்கள்.
இதன் காரணமாக அன்னாரது உடலிலும், அன்னாரது நினைவுத் திறனிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அன்னாருக்கு சிறிது காலம் மறதிக்கான நோய் ஏற்பட்டது. சில அறிவிப்புகளில் இந்த நோய் இரண்டு நான்கு நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் என்றும் அல்லது ஒரு நாள் மற்றும் ஒரு இரவு என்றும் வந்துள்ளது. ஆனால் எவ்வாறிருப்பினும் எத்தனை நாட்களாக இருந்தாலும் சிறிது தாக்கம் ஏற்பட்டது.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். அதாவது சிறிது நாட்களுக்கு இருந்தது. அதற்கான காரணம் என்னவென்றால், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்களின் ஈமானில் பலவீனம் ஏற்பட்டதனால் வந்த கவலையாகும். இது கவலை இயற்கைதான். இதிலிருந்து இறைவனது நபிமார்களும் கூட விதிவிலக்கு கிடையாது.
பெருமானார் (ஸல்) அவர்கள் இன்றைய நாட்களில் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களது உடல் பலவீனம் மற்றும் நினைவுத்திறனில் ஏற்பட்ட பலவீனத்தினால் அன்னாருக்கு மறதிக்கான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்த்த யூதர்களும் நயவஞ்சகர்களும் தமது இயல்பிற்கேற்ப குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நாங்கள் முஸ்லிம்களின் நபி மீது சூனியம் வைத்து விட்டோம். மேலும் அன்னாருக்கு ஏற்பட்ட மறதி சூனியத்தின் விளைவேயாகும் என்று பரப்ப ஆரம்பித்தனர். மேலும் அவர்கள் தமது பழைய நடைமுறைக்கேற்ப வெளிப்படையான அடையாளமாக ஏதாவதொரு சீப்பில் தலை முடிகளை கட்டி அதை ஒரு கிணற்றிற்றுள் போட்டு விட்டனர்.
சூனியம் வைத்து விட்டோம் என்ற இவர்களது இந்த கூற்று பெருமானார் (ஸல்) அவர்களை சென்றடைந்தபோது அன்னார் இந்து குழப்பத்தை முறியடிப்பதற்காக இறைவனிடம் துஆ செய்தார்கள். இதனையே ஹஸ்ரத் ஆயிஷா அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். அதாவது இந்த செய்தி கிடைத்ததுமே அன்னார் ஒரு நாள் அல்லது ஓர் இரவு மிகவும் உருக்கத்துடன் தமது விண்ணின் தலைவனிடம், இந்த பொய்யான விஷயத்தை முறியடிப்பதற்காக இந்த குழப்பத்தை ஏற்படுத்தியவனின் பெயர் மற்றும் இந்த சூனியத்தின் வழிமுறையை தமக்கு தெரிவிக்குமாறு துஆ செய்தார்கள். எனவே அன்னாரது உருக்கமான துஆவை அல்லாஹ் செவியேற்றான். மேலும் கனவு மூலமாக அன்னாருக்கு உண்மை விஷயத்தை வெளிப்டுத்திக் காட்டினான்.
திருக்குர்ஆனின் அடிப்படையான கூற்று வலா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைஸு அதா (தாஹா:70) என்பதாகும். அதாவது நபிமார்களுக்கு எதிரில் எந்தவொரு சூனியக்காரரும் எந்த நிலையிலும் வெற்றி பெற முடியாது.
பிறகு திருக்குர்ஆனின் இந்த இறுதியான தீர்ப்பின் ஒளியில் அதாவது யகூலுஸ் ஸாலிமூன இன் தத்தபிவூன இல்லா ரஜுலன் மஸ்வூரா (17:48) அநீதி இழைக்கின்ற மக்கள், நீங்கள் சூனியத்திற்கு ஆளான ஒருவரைப் பின்பற்றுகின்றீர்கள் என்று கூறுகின்றனர்.
நிராகரிப்பாளர்களே இதைக் கூறினார்கள் என்று திருக்குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது. பிறகு நபிமொழியின் இந்த சொற்கள் மேலும் எடுத்துக் கூறிய விதம் மற்றும் அரபுகளில் எடுத்துக் கூறப்படுகின்ற நடை ஆகியவற்றை சிந்தித்துப் பார்த்தால் பிறகு புகாரியின் அறிவிப்பானது நிச்சயமாக உண்மைக்கு மாற்றமாகவே கூறப்பட்டுள்ளதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது வெளிப்படையான இதற்குரிய பொருள் என்னவென்றால், பேசக்கூடியவர் தன் தரப்பிலிருந்து பேசுகின்றார். ஆனால் உண்மையில் அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றதென்றால், மற்றவர் இதைக் கூறுகின்றனர். மற்றவரது கூற்று எடுத்துக் கூறப்படுகிறது என்பதேயாகும்.
இவ்வாறு இந்த அறிவிப்பின் மொழியாக்கம் இவ்வாறு அமைகின்றது. ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியம் வைக்கப்பட்டது. அதாவது எதிரிகள் அன்னார் மீது சூனியம் வைக்கப்பட்டதாக பரப்பினர். ஹஸ்ரத் ஆயிஷா அவர்கள் சுயமே இதைக் கூறவில்லை. இதன் மொழியாக்கம் இவ்வாறு அமையும். அதாவது அன்னார் மீது சூனியம் வைக்கப்பட்டது என்று எதிரிகள்தான் பரப்பினர். எதுவரை என்றால் இந்த நாட்களில் அன்னார் சில நேரங்களில் தாம் இந்த பணியைச் செய்து விட்டதாக கருதினார்கள். ஆனால் உண்மையில் செய்திருக்கமாட்டார்கள்.
மேலும் ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. அதாவது அன்னார் சில நேரங்களில் இந்த மனைவியின் வீட்டிற்குச் சென்று வந்துள்றேன் என்று கருதுவார்கள். ஆனால் அன்னார் அவர்களது வீட்டிற்குச் சென்றிருக்க மாட்டார்கள்.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கத்திற்கேற்ப, இந்த நாட்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என் வீட்டில் இருந்தார்கள். அன்னார் பதற்றத்தில் அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் துஆ செய்தார்கள். இந்த துஆவிற்குப் பிறகு அன்னார் என்னிடம், ஆயிஷாவே! நான் அல்லாஹ்விடம் எதைப் பற்றிக் கேட்டேனோ அந்த விஷயத்தைப் பற்றி அல்லாஹ் எனக்கு தெரிவித்து விட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், யா ரஸூலல்லாஹ்! அந்து என்ன விஷயம்? என்று கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் அல்லது கஷ்ஃபில் என்னிடத்தில் இரண்டு மனிதர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் எனது தலைக்கு அருகில் அமர்ந்து விட்டார். மற்றொருவர் காலுக்கு அருகில் அமர்ந்து விட்டார். பிறகு இவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், இந்த நபருக்கு என்ன கஷ்டம்? என்று கேட்டார். பிறகு அந்த நீண்ட விஷயம் தொடர்பாக ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. அதாவது அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் வைத்து விட்டான். அதன் தாக்கம் அவர்கள் மீது ஏற்பட்டு விட்டது.
ஹஸ்ரத் ஆயிஷா அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த கனவு அல்லது கஷ்ஃபிற்குப் பிறகு அன்னார் தமது சஹாபாக்களுடன் அந்த கிணற்றிற்கு சென்றார்கள். அதனை ஆய்வு செய்தார்கள். அந்த கிணறு மிகவும் இருண்டதாக இருந்தது. பிறகு அன்னார் ஹஸ்ரத் ஆயிஷா அவர்களிடம் வந்தார்கள். மேலும் அவர்களிடம், ஆயிஷாவே! நான் அதைப் பார்த்து விட்டேன். அந்த கிணற்றின் தண்ணீர் மருதாணியின் தண்ணீரைப் போன்று சிகப்பாக மாறுகின்றது.
இதற்கு முன்னரும் எடுத்துக் கூறப்பட்டது. அதாவது யூதர்கள் மக்களின் பார்வையை ஏமாற்றுவதற்காக இத்தகைய கிணற்றின் தண்ணீரில் ஏதாவது நிறத்தை கலந்து விடுவார்கள். இது யூதர்களின் நடைமுறையாக இருந்தது.
ஹஸ்ரத் ஆயிஷா அவர்கள் கூறுகின்றார்கள்: நான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், அந்தச் சீப்பு போன்றவற்றை வெளியே எடுத்து ஏன் எறியவில்லை என்று கேட்டேன் சில அறிவிப்புகளில் ஏன் எரிக்கவில்லை என்று கேட்டதாக வருகின்றது. அதற்கு அன்னார், இறைவன் என்னை பாதுகாத்து வைத்துள்ளான். மேலும் எனக்கு குணமளித்தள்ளான். பிறகு நான் இதனை வெளியே எறிந்து மக்களிடத்தில் ஏன் ஒரு தீய விஷயம் குறித்த சர்ச்சையை செய்ய வேண்டும். அதன் மூலம் பலவீனமான இயல்பைக் கொண்டவர்களுக்கு சூனியத்தின் பக்கம் தேவiயில்லாமல் கவனம் ஏற்படுவதற்கான அச்சம் இருந்தது. அகவே அந்த கிணற்றை புதைத்து மூடச் செய்து விட்டேன்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் அவர்கள் எழுதுகின்றார்கள்: நினைவில் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் கூறியதை அடுத்து எடுத்துக் கூறும் வழிமுறை அரபிகளிடம் இருந்தது. மாறாக, திருக்குர்ஆனும் சில இடங்களில் இந்த நடைமுறையை கையாண்டுள்ளது. இரண்டு நரகவாசிகளைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்.
ذُقۡ ۚۙ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡکَرِیۡمُ
(அத்துஹான்:50) அதாவது நரகத்தில் போடப்படக் கூடியவர்களே! இறைவனது இந்த வேதனையை சுவைப்பீராக. எவ்வித சந்தேகமுமின்றி நீ மிகவும் கண்ணியமானவனும், மிக நல்ல மனிதராகவும் இருந்தாய். இவ்விடத்தில் இறைவன் இரண்டு நரகவாசிகளையும் கண்ணியத்திற்குரியவர்கள் என்றும் நல்லவர்கள் என்றும் கருதுகின்றான் என்பது ஒருபோதும் இதன் பொருள் கிடையாது. மாறாக, அந்த மனிதர் தன்னையும் தம்முடன் இருப்பவர்களையும் கண்ணியமானவர்கள், நல்லவர்கள் என்று கருதி வந்தனர். உலகத்தில் தவறான பணிகளைச் செய்த பிறகும் நாம் கண்ணியமிக்கவர்கள் என்று கருதி வந்தனர். நீ இப்போது இறைவனது நெருப்பின் தண்டனையை சுவைப்பீராக என்பதே இதன் பொருளாகும்.
இவ்வாறே இந்த கனவில் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கனவில் காட்சியளித்த இந்த இரண்டு மனிதர்கள் அல்லது வானவர்கள் பேசினர். அவர்கள், இந்த நபருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது, நமது எண்ணத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது ஒருபோதும் இதன் பொருள் கிடையாது. மாறாக இதன் பொருள் என்னவென்றால், இவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக மக்கள் கூறினர். மேலும் கனவின் உண்மையான நோக்கம் இதுவன்றி வேறெதும் கிடையாது. அதாவது எந்தப் பொருட்களை இந்த அசுத்தமானவர்கள் மறைத்து கிணற்றில் வைத்தார்களோ மேலும் அதன் மூலமாக நம்மைச் சார்ந்திருப்பவர்களை ஏமாற்ற விரும்பினார்களோ, மேலும் தம்மைப் போன்ற மக்களை ஏமாற்றியும், பரப்பியும் வந்தார்களோ அவர்களுக்கு இறைவனது ரஸூல் அவர்களது சூனியத்தை அழித்துக் காட்ட வேண்டும் என்பதே இந்தக் கனவின் நோக்கமாகும்.
ஆக அவ்வாறே நடைபெற்றது. சூனியம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது. கிணறு மூடப்பட்டது. இவ்வாறான செயல்களினால் சாதாரண முஸ்லிம்களை அவர்கள் ஏமாற்ற விரும்பினர் என்ற பெருமானார் (ஸல்) அவர்கள் கவலை நீங்கி விட்டது. மேலும் சூனியக்கார்கள் எந்த வழிமுறையைக் கையாண்டாலும் இறைவனது நபிக்கு எதிரில் ஒருபோதும் அவர்களால் வெற்றிபெற முடியாது என்ற இந்த இறைவாக்குறுதியும் மிகவும் வலுவுடன் நிறைவேறியது.....
எவ்வாறிருப்பினும் மேலே கூறப்பட்ட நபிமொழியில் கீழ்க்கண்ட விஷயங்கள் நிரூபணமாகின்றது.
முதலாவதாக, ஹுதைபிய்யா உடன்படிக்கை சம்பவத்திற்குப் பிறகு மறதி என்ற கவலை இயல்பாகவே பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக இருந்தது. மேலும் அன்னார் வீட்டு விவகாரங்களுடன் தொடர்புடைய பல உலக விஷயங்களையும் மறந்து விடுவார்கள்.
இரண்டாவதாக, இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியவாறு இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தின் தூய ஸ்தாபகர் (ஸல்) அவர்களின் பெயரை களங்கப்டுத்த விரும்பிய அந்த யூதர்களும், நயவஞ்சகர்களும் அன்னாரது இந்த நிலைமைகளைக் கண்டு, முஸ்லிம்களின் நபி மீது சூனியம் வைத்து விட்டோம் என்று மறைமுகமாக கூச்சல் இட்டனர். பனி முஸ்தலிக் போரில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்தங்கி விட்டபோது அவர்களின் பெயரைக் களங்கப்படுத்த எத்தகைய கூச்சல் இடப்பட்டதோ அவ்வாறே பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதற்கு அசுத்தமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவதாக, சூனியத்தின் வெளிப்படையான அடையாளமாக சாதாரண மக்களை எளிதாக ஏமாற்றுவதற்காக இந்த அசுத்தமான மக்கள் யூத சந்ததியைச் சேர்ந்த லபித் பின் ஆஸிம் மூலமாக தமது வழிமுறைக்கேற்ப ஒரு சீப்பில் சில முடிகளை கட்டி அதனை கிணற்றில் போட்டனர். மேலும் மறைமுகமாக பேச ஆரம்பித்தனர். அது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு துன்பத்தை தருவதற்கு காரணயாக அமைந்தது.
நான்காவதாக, இதனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் உருக்காமாக துஆ செய்தார்கள். அதாவது அல்லாஹ்வே! நீ உனது அருளால் இந்த குழப்பத்தை முறிப்பாயாக. மேலும் என் மீது இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவாயாக. இதன் மூலம் நான் இந்த குழப்பத்தை நீக்கி சாதாரண மக்களுக்கு தடுமாற்றம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கட்டுமாக.
ஐந்தாவதாக, அல்லாஹ் அன்னாரது துஆவை செவியுற்றான். லபீத் பின் ஆஸிமின் செயலை வெளிப்படுத்திக் காட்டினான். எனவே அன்னார் சில சாட்சிகளை உடன் அழைத்து அந்த கிணற்றுக்கு செற்hர்கள். மேலும் அந்த சீப்பை மண்ணோடு மண்ணாக்கினார்கள். மாறாக, கிணற்iயே மூடினார்கள்.
இறுதியாக இந்த கேள்வி எழுகின்றது. அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் உயர் அந்தஸ்தைப் பெற்ற நபியாவார்கள். மாறாக, நபிமார்களுக்கெல்லாம் மேன்மையானவர்களாகவும், காத்தமுன் நபிய்யினாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்கும்போது அன்னாருக்கு ஏன் மறதிக்கான நோய் ஏற்பட்டது? வெளிப்படையில் அது நபித்துவத்தின் கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கலாம்.
இதற்கான பதில் என்னவென்றால், நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு நபியிடமும் இரண்டு அம்சங்கள் இருக்கின்றது. ஓர் அம்சத்தின் அடிப்படையில், அவர் இறைவனது நபியாகவும், ரஸூலாகவும் இருக்கின்றார். அதன் காரணமாக இறை வார்த்தைகள் அவருக்கு கிடைக்கின்றது. மேலும் மார்க்க பணிகளில் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஆசிரியராக இருக்கின்றார். மேலும் அவர்களுக்கு அவர் முன்மாதிரியாக இருக்கின்றார்.
இன்னொரு அம்சத்தின் அடிப்படையில், அவர் மனிதர்களில் ஒரு மனிதராக இருக்கின்றார். மேலும் மற்ற மனிதர்களிடம் இருக்கின்ற அந்த அனைத்து மனித பலவீனம் மற்றும அசாதாரண நிலைமைகளுக்கும் கீழ் அவர் வருகின்றார். எனவே அல்லாஹ் திருக்குர்ஆனில் குல் இன்னமா அனா பஷரும் மிஸ்லுகும் யூஹா இலைய்ய (கஹஃப்:111) அதாவது நபியே! நீர் மக்களிடம் கூறுவீராக! நான் உங்களைப் போன்றே ஒரு மனிதன் ஆவேன். மற்ற மனிதர்களுடன் இருக்கின்ற அந்த அனைத்து விதிமுறைகளுக்கு கீழ் நானும் இருக்கின்றேன். ஆம்! நிச்சயமாக நான் இறைவனது தூதராக இருக்கின்றேன். மேலும் இறைவன் புறமிருந்து இறை படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக இல்ஹாம் மற்றும் வஹீ எனக்கு கிடைக்கின்றது.
இந்த நுட்பமான வசனத்தில் நபிமார்களின் இரண்டு அம்சங்களும் மிகவும் அழகிய முறையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு அம்சத்தின்படி அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார். இன்னொரு அம்சத்தின்படி மற்ற மனிதர்களிடம் இருக்கின்ற பலவீனத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டவில்லை. எனவே எவர் நபிமார்கள் மனித பலவீனம் மற்றும் மனிதர்களின் இயல்பான நிலைமைகளிலிருந்து உயர்ந்தவர் என்று கருதுவாரோ அவர் பொய்யர் ஆவார். எவ்வாறு மற்ற மக்கள் நோய்வாய்ப்படுகின்றார்களோ அவ்வாறே நபிமார்களும் நோய்வாய்ப்படுகின்றனர்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் அவர்கள் எழுதுகின்றார்கள்: பொதுவாக இந்த விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ஹதீஸ் மற்றும் வரலாற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், பெருமானார் (ஸல்) அவர்கள் டைஃபாய்டு நோயினால் மரணமடைந்தார்கள். சில குறிப்பான நபிமார்களுக்கு விதிவிலக்காக அவர்கள் குறிப்பான நோயிலிருந்து அதாவது சளி, வலிப்பு, இருமல், பதற்றம், நிம்மதியின்மை, மறதி, சண்டையினால் ஏற்படும் காயங்கள் ஆகிய நோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டவர்களைத் தவிர அனைத்து நோய்களும் நபிக்கும் வரலாம். மேலும் வந்திருக்கின்றது.
இவ்விடத்தில் எவருக்காவது சனுக்ரியுக்க ஃபலா தன்ஸா (அஃலா:7) அதாவது நாம் உமக்கு எத்தகைய போதனைகளை வழங்குவோம் என்றால் அதனை நீர் மறக்க மாட்டீர் என்று வந்துள்ளதே என்ற எண்ணம் ஏற்பட்டால் அதற்கான பதிலை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வாக்குறுதி திருக்குர்ஆனின் வஹீ தொடர்பாக மட்டுமே ஆகும். பொதுவானது கிடையாது.
மேலும் நபியே! நாம் எந்த வஹீயை சமுதாயத்தை வழிகாட்டுவதற்காக அருளுவோமோ அதனை நீர் மறக்க மாட்டீர். மேலும் கியாமத் வரை நாம் அதனை பாதுகாப்போம் என்பதே அதன் பொருளாகும். அன்றாடப் பணிகள் தொடர்பான விஷயங்கள் அல்லது உலக விவகாரம் தொடர்பாக இந்த வாக்குறுதி ஒருபோதும் கிடையாது.
எனவே நபிமொழியிலிருந்து நிரூபணமாவது என்னவென்றால், அன்னார் பல சந்தர்ப்பங்களில் மனிதன் என்ற அடிப்படையில் மறந்திருக்கின்றார்கள். மாறாக, நபிமொழிகளில் எந்த அளவுக் கூறப்பட்டுள்ளதென்றால், அன்னார் சில நேரங்களில் தொழுகையை நடத்தும் போது ரக்அத்துகளின் எண்ணிக்கையை மறந்து விட்டார்கள். மக்கள் நினைவூட்டினார்கள் அல்லது நினைவுக்கு வந்தது என்று வந்துள்ளது.
புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இந்த நபிமொழி காணப்படுகிறது. அவ்வாவே வேறு சில சந்தர்ப்பங்களிலும் அன்னார் மறந்திருக்கின்றார்கள். மாறாக நபிமொழியில் பெருமானார் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறும்போது, இன்னமா அனா பஷருன் அன்ஸா மகா நன்ஸவ்ன ஃபஇதான நஸீத்து ஃபஸ்குரூனீ அதாவது நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் ஆவேன். எவ்வாறு நீங்கள் சில நேரங்களில் மறந்து விடுகின்றீர்களோ அவ்வாறே நானும் மறந்து விடலாம். நான் ஏதாவதொரு விஷயத்தில் மறந்து விட்டால் பிறகு எனக்கு நினைவூட்டுங்கள். (அபூதாவூது)
ஆக எவ்வாறு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சில நேரங்களில் தற்காலிக மறதி ஏற்பட்டு விடுமோ அவ்வாறே ஹுதையிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு நோயின் வடிவில் மறதி ஏற்பட்டது. ஆக இதுவே சூனியம் தொடர்பான அறிவிப்புகளில் சில கடந்த கால ஆலிம்கள் கொடுத்த விளக்கமாகும்.
உதாரணமாக, அல்லாமா மஆஸரி கூறுகின்றார்கள்: பெருமானார் (ஸல்) அவர்களின் உண்மைக்கு எண்ணற்ற வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. மேலும் அன்னாரது அற்புதங்களும் அன்னாரின் உண்மைத்துவத்திற்கு சாட்சியாகும். மற்ற பொதுவான உலக பணிகளுக்காக அன்னார் அனுப்பப்படவில்லை. எனவே எவ்வாறு மனிதனுக்கு மற்ற நோய்கள் வருகின்றதோ அவ்வாறே இது தொடர்பாகவும் அது ஒரு நோய் என்றே புரிந்து கொள்ளப்படும்.
அல்லாமா இப்னு அல்கஸார் கூறுகின்றார்கள்: பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மறதி நோயானது மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயாகும். அவ்வாறே நபிமொழியின் இறுதியில் வருகின்ற, அல்லாஹ் என்னை குணமாக்கினான் என்ற சொல்லிலிருந்து இது வெளிப்படுகின்றது. அதில் வெளிப்படையாக அது எழுதப்பட்டுள்ளது.
சுருக்கமாக கூறுவதென்றால், ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இருந்த நிலைமைகளைக் கண்டு எதிரிகள் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் அது ஒருபோதும் சூனியத்தினால் கிடையாது. மாறாக, ஏற்பட்ட நிலைமைகளினால் வெறும் மறதிக்கான நோயே இருந்தது. அது மறதி நோய் ஆகும். இதனை சில குழப்பம் விளைக்கக் கூடியவர்கள் தூய நபி (ஸல்) அவர்களின் இருப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு வழியாக ஆக்கிக் கொண்டார்கள். திருக்குர்ஆன் நபிமார்கள் மீது சூனியம் வைக்கப்பட்டது என்ற கட்டுக்கதையை தூரத்திலிருந்தே எட்டி உதைக்கின்றது. அதனை மறுக்கின்றது. மனித சிந்தனை இதனை ஏற்றுக் கொள்வதை நிராகரிக்கின்றது. சூனியம் தொடர்பாக உயர் அந்தஸ்தைப் பெற்ற நபியின் மீது இட்டுக்கட்டப்படுகின்ற கதையை நபிமொழியின் சொற்கள் இந்த விளக்கத்தை பொய்ப்படுத்துகின்றது.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் அவர்கள் இந்த விஷயத்தையும் கூறியுள்ளார்கள். இதனை எடுத்தக் கூறுவதும் பயனற்றதாக இருக்காது. அதாவது ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்களின் அறிவிப்பிற்கேற்ப சீரத்துல் மஹ்தியின் முதல் தொகுதியின் அறிவிப்பு எண் 75 ல் இவ்வாறு உள்ளது.
ஒரு முறை வெறுப்புணர்வு கொண்ட குஜராத்தில் வசிக்கக்கூடிய ஒரு ஹிந்து காதியான் வந்தார். அவர் ஹெப்னாடிஸத்தில் கைதேர்ந்தவர். அவர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சபைக்கு வந்து அமைதியாக அமர்ந்திருந்தவாறு அன்னார் மீது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தார். அவ்வாறு செய்து அன்னாரை ஏளனத்திற்குள்ளாக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் அன்னார் மீது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்த உடன் கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடினார். அவரிடம், உங்களுக்கு என்னவாயிற்று என்று கேட்கப்பட்டபோது, அவர் நான் மிர்ஸா சாஹிபின் மீது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தபோது எனக்கு முன்பாக என்மீது தாக்குதல் தொடுப்பதற்கு அச்சமூட்டக்கூடிய ஒரு சிங்கம் நிற்பதைப் நான் பார்த்தேன். அதற்குள் நான் அஞ்சியவாறு ஓடி வெளியேறினேன் என்று அவர் பதில் கூறினார்.
அன்னார் எழுதுகின்றார்கள்: பெருமானார் (ஸல்) அவர்களின் தொண்டராக இருக்கின்ற ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அந்தஸ்து இதுவாக இருக்கின்றபோது, அன்னார் மீது ஹெப்னாடிஸத்திற்கான எந்த தாக்கத்தையும் அல்லாஹ் ஏற்படுத்த விடாமல் இருக்கின்றபோது ஒரு யூதன் பெருமானார் (ஸல்) அவர்களை ஹெப்னாடிஸத்திற்கு ஆளாக்கினான் என்று கருதுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
(மஸாமீன் பஷீர் தொகுதி 3 பக்கம் 642-653)
இறுதியில் காலத்தின் நெறிநீதி தீர்ப்பவரின் இது தொடர்பான கூற்றுக்களை படிக்கின்றேன். அவை அனைத்து விளக்கங்கள் மற்றும் விரிவுரையின் மீது மேலோங்கி இருக்கின்றது.
பெருமானார் (ஸல) அவர்கள் மீது நிராகரிப்பவர்கள் செய்த சூனியம் தொடர்பாக தாங்கள் என்ன கருகின்றீர்கள்? என்று ஒரு நபர் அன்னாரது சபையில் கேள்வி கேட்டார்.
ஹஸ்ரத் அக்தஸ் கூறினார்கள்: சூனியமும் ஷய்த்தான் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்படுகின்றது. சூனியத்தின் தாக்கம் ரஸூல்மார்கள் மற்றும் நபிமார்கள் மீது ஏற்படவதில்லை. மாறாக, அவர்களைக் கண்டு சூனியம் ஓடி விடுகின்றது. அல்லாஹ் லா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைஸ அதா என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான். அதாவது மூஸாவிற்கு எதிரில் சூனியம் இருந்தது. மூஸா வெற்றி பெற்றாரா? இல்லையா?. பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எதிரில் சூனியம் வெற்றி பெற்று விட்டது என்பது முற்றிலும் தவறான கூற்றாகும். நம்மால் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கண்களை மூடிக் கொண்டு புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டே செல்வது நமது கோட்பாடுகளுக்கு மாற்றமானதாகும். உயர் அந்தஸ்தைப் பெற்ற நபியின் மீது சூனியம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அறிவும் கூட ஏற்றுக் கொள்ளாது. எந்த சூனியக்காரரின் தாக்கத்தால் பெருமானார் (ஸல்) அவர்களின் நினைவுத் திறன் இழந்து கொண்ட இருந்தது. இவ்வாறு நடந்தது; அவ்வாறு நடந்தது என்பது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது.
அன்னார் கூறுகின்றார்கள்: ஒரு அசுத்தமான மனிதன்தான் தன் தரப்பிலிருந்து இதனைக் கலந்து விட்டான் என்பது தெரிய வருகிறது. நாம் நாகரீகமான பார்வையுடன் நபிமொழிகளைப் பார்க்கின்றோம். ஆனால் எந்த நபிமொழி திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருக்குமோ, பெருமானார் (ஸல்) அவர்களின் மகத்துவத்திற்கு மாற்றமாக இருக்குமோ அதனை நம்மால் எப்போது ஏற்றுக் கொள்ள முடியும்? அந்த நேரம் நபிமொழிகளை ஒன்று சேர்க்க வேண்டிய நேரமாக இருந்தது. எனவே நபிமொழிகளை ஒன்று திரட்டியவர்கள் சிந்தித்து நபிமொழிகளை பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் முழுமையாக பேண முயற்சி செய்தும் முழுமையான பேணுதலுடன் இதனை அவர்களால் செய்ய முடியவில்லை. அது ஒன்று திரட்டப்படக்கூடிய நேரமாக இருந்தது. ஆனால் இப்போது பார்ப்பதற்கும், சிந்திப்பதற்குமுரிய நேரமாகும். பாருங்கள் மற்றும் சிந்தியுங்கள். எந்த நபிமொழி திருக்குர்ஆன் மற்றும் பெருமானார் (ஸல்) அவர்களின் கண்ணியத்துடன் மோதுகின்றதோ அது நிராகரிக்கப்படுவதற்கு தகுதியானதாகும். அல்லது ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் மற்றும் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் அளித்த விளக்கம் போன்று அதற்கு வேறு ஏதாவது விளக்கம் இருக்கும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியின் வாழ்க்கையின் நிலைமைகளை ஒன்று சேர்ப்பது மிகவும் நற்கூலிக்குரிய பணியாகும். ஆனால் ஒன்று சேர்ப்பவர்கள் முழு கவனத்துடன் ஒன்று சேர்க்க முடியாது என்பது விதிமுறையிலுள்ள விஷயமாகும். நன்றாக சிந்தித்து செயல்படுவது இப்போது ஒவ்வொருவரின் பணியாகும். ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். விடப்பட வேண்டியவற்றை விட்டு விடுங்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியம் வைக்கப்பட்டது என்ற இத்தகைய விஷயத்தினால் ஈமான் பறிபோய் விடுகின்றது.
அன்னார் கூறுகின்றார்கள்: அல்லாஹ் கூறுகின்றான். இய் யகூலுஸ் ஸாலிமூன இன் தத்தபிவூன இல்லா ரஜுலன் மஸ்வூரா (17:48) அதாவது நீங்கள் எப்படிப்பட்ட நபரைப் பின்பற்றுகின்றீர்கள் என்றால் அவர் மீது சூனியத்திற்கான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அநீதி இழைக்கின்ற மக்கள் கூறினர்.
இப்படிப்பட்ட கூற்றைக் கூறுபவர் அநீதி இழைப்பவர் ஆவார். முஸ்லிம் அல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சூனியத்திற்கான தாக்கம் ஏற்பட்டது என்று கூறுவது ஈமானற்றவர்கள் மற்றும் அதீதியாளர்களின் பணியாகும். பெருமானார் (ஸல்) அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் பிறகு சமுதாயம் எங்கு எஞ்சியிருக்கும்? பிறகு அது மூழ்கவே செய்யும் என்பதைக் கூட சிந்திப்பதில்லை. எந்த தூதர் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களும் ஷய்த்தானிடமிருந்து தூய்மையானவர்கள் என்று கருதி வந்தார்களோ அந்த நபியின் கண்ணியத்தின் மீது இத்தகைய சொற்களை கூறுகின்ற இம்மக்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
(மல்ஃபூஸாத் தொகுதி 9 பக்கம் 471-472)
நாம் காலத்தன் இமாமை ஏற்றுக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் உயர் அந்தஸ்தை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும், அடையாளங்கண்டு கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் இன்னக்க ஹமீதும் மஜீது.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அவர்கள் 8 மார்ச் 2019 அன்று ஆற்றிய ஜுமுஆ பேருரை | அல் ஃபஸல் இன்டர்நேஷனல் 22-29 மார்ச் 2019 பக்கம் 13-17)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None