ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வாழ்க்கை (-குடும்ப வாழ்வை மேம்படுத்துவது தொடர்பாக சம்பவங்களின் ஒளியில்)
மதிப்பிற்குரிய அவைத்தலைவர்அவர்களே!
மற்றும் கூடியிருக்கும் கண்ணியத்திற்குரியவர்களே! என்னுடைய உரையின் தலைப்பு “ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது(அலை) அவர்களின் வாழ்க்கை-குடும்ப
வாழ்வை மேம்படுத்துவது தொடர்பாக சம்பவங்களின் ஒளியில்” என்பதாகும்.
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி)
அவர்களிடம் ஒரு முறைஹஸ்ரத்நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் வாழ்க்கை தொடர்பாக ஏதாவது கூறுங்கள் என ஒருவர் கேட்டார். அன்னார்
كان خلقه في القرآن
எனக் கூறினார்கள்.
அதாவது அன்னாருடைய தூய வாழ்க்கையைப்பற்றி அறிய வேண்டுமென்றால் திருக்குர்ஆனைப் படியுங்கள். ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனுக்கேற்பவே இருந்தது.
(முஸ்தக்ரக் ஹாகிம்,
தொகுதி 2,பக்கம்392)
அதே போன்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களின் வாழ்க்கையை அறிய வேண்டுமென்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய
வாழ்க்கையை ஆய்வு செய்யவும். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வாழ்க்கை அன்னாரின்
எஜமானரான ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் நிழலாகவே காணப்படும். அன்னார் (அலை)
அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்கள்.
منفرق
بيني وبين المصطفى ماعرفني وماراى
மன் ஃபரக பய்னீ வபய்னல் முஸ்தஃபா மாஅரஃபனீ வமா ரஆ.அவர் எனக்கும் என்னுடைய எஜமானராகிய ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்குமிடையில் வேறுபாடு கொள்வாரோ அவர் என்னை அறிந்து கொள்ளவும்
இல்லை. மேலும் என்னுடைய உண்மை நிலையை அடையாளம் கண்டு கொள்ளவுமில்லை. உம்மத்தைச் சார்ந்த
சான்றோர்களும் நபிகள் நாயகம் இமாம் மஹ்தி அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நிழலாகவே
இருப்பார் என கூறியுள்ளார்கள்.
ஆகவே ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் சாஹிப் முஹத்திஸ் தஹ்லவி ‘கைருல்கஸீர்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்:
"முஹம்மதிய
உம்மத்தில் தோன்றவுள்ள மஸீஹ் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் தலைவராக திகழ்கின்ற ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் ஒளிகளின் பிரதிபிம்பமாக விளங்குவது அன்னாரின் உரிமையாகும். மக்கள்
மஸீஹ்மவ்வூதுதோன்றும் போது அவர்ஒருஉம்மத்தியாக தோன்றுவார்கள் என எண்ணுகிறார்கள். அவ்வாறு
ஒருபோதும் இல்லை. மாறாக அவர் அனைத்து பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முஹம்மதின்
கொள்கையை முழுமையான முறையில் பரப்புவார். மேலும் அன்னார் (ஸல்) அவர்களின் நகலாக இருப்பார். அவருக்கும் சாதாரண
ஒரு உம்மத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
இதன் அடிப்படையில்
குடும்ப வாழ்வு தொடர்பாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வாழ்வு ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வாழ்க்கையின் நிழலாகும். திருக்குர்ஆனில்
عاشروهن بالمعروف
அதாவது நீங்கள் உங்கள்
மனைவிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்என்ற போதனை இருக்குமேயானால் ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் யார் தன் மனைவியிடத்தில் சிறந்தவரோஅவரேசிறந்தவராவார்.
மேலும் நான் என் மனைவிகளிடத்தில் சிறந்தவனாவேன் என கூறியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் நாம்
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி மஸீஹ் மவ்வூது மஹ்தி மஃஹூத்(அலை) அவர்களின் குடும்ப
வாழ்க்கையைப் பார்க்கும்போது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியை ஒத்தவாறு உள்ளது என்பது தெரிகிறது.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்கள் கூறுகிறார்கள்:
“கண்ணியத்திற்குரிய,
பின்பற்றத் தகுந்த என்னுடைய
தலைவராகிய முஹம்மது (ஸல்) அவர்களின் நிலையான ஆன்மீகம், முழுமையான மேம்பாடு மற்றும் தேர்ச்சிக்கான ஆதாரமாக
இறைவன் எனக்கு இதை வழங்கியுள்ளான்.அதாவது நான்அன்னாரை பின்பற்றிய காரணத்தினாலும்,அன்னாரின்மீது கொண்ட நேசத்தினாலும் வானத்தின் அடையாளங்கள்
என்மீது இறங்கியவாறும், உள்ளம்திடநம்பிக்கையின்
ஒளியில்நிரம்பியவாறும்காண்கிறேன். மேலும் எந்த அளவுக்கு நான் மறைவான அடையாளங்களைக்காண்கிறேன்என்றால்
அந்த ஒளிகளின் மூலமாக நான் என்னுடைய இறைவனையே காண்கிறேன்.”
கமருல் அன்பியா ஹஸ்ரத்மிர்ஸா
பஷீர் அஹமது சாஹிப் M.A (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒவ்வொரு சிறிய
விஷயத்திலும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை
பின்பற்றுவார்கள்.
(சீரத்துல் மஹ்தி தொகுதி
2 பக்கம் 492)
ஒருவருடைய குடும்ப
வாழ்க்கை தொடர்பாக அன்னாரின் நெருங்கிய உறவினர்தான் சிறந்த முறையில் சாட்சி பகர முடியும். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களின் மைத்துனர் ஹஸ்ரத் டாக்டர் மீர் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப்(ரலி) அவர்கள்
கூறுகிறார்கள்:
“எனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஹஸ்ரத் உம்முல் முஃமினீன் அவர்களிடம் ஒருபோதும்
வெறுப்பை காட்டியதாக பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை மாறாக ஒரு முன்னுதாரண தம்பதிகளில் இருக்கவேண்டிய விஷயங்களையே பார்த்துள்ளேன்.”
(சீரத்ஹஸ்ரத்நுஸ்ரத்ஜஹான் பேகம், பக்கம் 231)
மாயி இமாம் பீபீ சாஹிபா
தன்னுடைய கணவரான ஹஸ்ரத் டேக்கேதார் முஹம்மது அக்பர் சாஹிப் அவர்களின் மரணத்திற்குப்
பிறகு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்:
“உம்முல் முஃமினீன் அவர்கள் ஒருபோதும் எந்த விஷயத்திலும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களிடம் கோவித்ததாக நாங்கள் கண்டதில்லை. அவர்கள் எப்போதும் ஹஸ்ரத் சாஹிப் [மஸீஹ்மவ்வூது
(அலை)] அவர்களுக்கு மரியாதை செலுத்தி வந்தார்கள். மேலும் அன்னாரை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார்கள்.”
ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
“உலகம் அழகு நிறைந்த
பொருளாகும். மேலும் நல்ல பெண்மணியை தவிர மேலான அழகு பொருள் வேறு எதுவும் இல்லை.”
(இப்னுமாஜா அப்வாபுன்நிக்காஹ்)
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்கள் தங்களுடைய மனைவியிடம் எவ்வாறு நல்ல முறையில் நடந்து கொண்டார்களோ அதே அளவுஹஸ்ரத்
உம்முல் முஃமினீன் அவர்களுக்கும் அன்னாரின்வாதத்தின் மீது நம்பிக்கை இருந்தது.பெண்கள்
சுயமே கடும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள்.ஹஸ்ரத் உம்முல் முஃமினீன்
(ரலி) அவர்கள் முஹம்மதி பேகம் தொடர்பான ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் முன்னறிவிப்பு
நிறைவேற வேண்டுமென்றும், முஹம்மதி பேகத்துடன்
அன்னாரின் திருமணம் நடக்க வேண்டும் என்றும் மனமார விரும்பினார்கள்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களுக்கும் ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க அன்பு
இருந்தது. அன்னார் ஹதீஸில் கூறியதுபோல் உங்களில் நான் மனைவியுடன் சிறந்த முறையில் நடந்து
கொள்பவனாவேன் என்பதற்கிணங்கவேஇருந்தது ஹஸ்ரத்அம்மாஜான் (ரலி) அவர்களின் இந்த அன்பின்
காரணமாகவும் மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் கூற்றாகிய‘எவர் தன் மனைவி மற்றும் அவளுடைய உறவினர்களுடன் நல்ல
முறையில் நடந்து கொள்ளவில்லையோ அவர் என் ஜமாஅத்தைச் சார்ந்தவரல்ல’ என்பதற்கேற்பவும் சஹாபா ரிஸ்வானுல்லாஹி அஜ்மயீன்களும்
தங்கள் வீடுகளில் தங்கள் மனைவிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதன் பக்கம்குறிப்பாக
கவனம் செலுத்தினார்கள். ஒருமுறை ஹஸ்ரத் முஃப்தி முஹம்மது சாதிக்சாஹிப்(ரலி) அவர்களுக்கு
தங்கள் மனைவியுடன் வீட்டு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தால் தன்
மனைவி மீது கோபமாக இருந்தார்கள். முஃப்தி சாஹிப் அவர்களின் மனைவி இந்த கோபம் குறித்து ஹஸ்ரத்
அப்துல் கரீம் சாஹிப் சியால்கோட்டி (ரலி) அவர்களின் மனைவியிடம் கூறினார்கள் அப்துல்
கரீம் சாஹிப் அவர்கள் விஷயத்தை புரிந்து கொள்ளக் கூடியவராகஇருந்தார்கள். மேலும் அன்னாரின்
இயல்பில் நகைச்சுவை உணர்வும் இருந்தது. அன்னார் தன் மனைவியிடமிருந்து இதைகேட்டவுடன்
ஹஸ்ரத்முஃப்திசாஹிபிடம்கூறினார்கள்.முஃப்திசாஹிப் அவர்களே ! எவ்வாறு இருந்த போதிலும்
உங்கள் மனைவியை சமாதானப் படுத்துங்கள். இன்றைய நாட்களில் ராணியின் ஆட்சிதான் நடைபெற்று
கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லையா.ஹஸ்ரத் அப்துல் கரீம்சாஹிப்சியால்கோட்டி
(ரலி) அவர்கள் இவ்வாறு கூறி இங்கு இந்தியாவில் விக்டோரியா ராணி என்ற ஒரு பெண்மணியின்
ஆட்சி நடக்கின்றது. அங்கு ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது (அலை) அவர்கள் வீட்டு விவகாரங்களில்ஹஸ்ரத்
அம்மா ஜான் அவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.ஹஸ்ரத்முஃப்திசாஹிபும்ஹஸ்ரத்மவ்லவி
அப்துல் கரீம்சாஹிப் அவர்களின் இந்த ஞானம் நிறைந்த மற்றும் நகைச்சுவையான அறிவுரையை
புரிந்துகொண்டு தன் மனைவியை சமாதானப்படுத்தினார்கள்.
இதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சிக்கான சூழல் உருவாகியது.
(ஸிக்ரே ஹபீப் -ஹஸ்ரத் முஃப்தி முஹம்மது
சாதிக்சாஹிப் (ரலி) அவர்கள் எழுதியது)
கண்ணியத்திற்குரியவர்களே!
இந்த சந்தர்ப்பத்தில் இவ்விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். எம்பெருமானார் நபிகள் நாயகம்
(ஸல்)அவர்களின் காலத்திலும் அன்னார் பெண்களுக்கு எந்த அளவுக்கு ஆகுமான சுதந்திரத்தை
வழங்கி இருந்தார்கள் என்றால் அந்த கால பின்னணியில் சில நபித்தோழர்கள்அதைஆகுமானதாககருதவில்லை.
மேலும் அவர்கள், தற்போது பெண்கள் நம்முடன்
தோளோடுதோள்சேர்த்துநிற்கக் கூடிய காலம் வந்துவிட்டது என வெளிப்படையாக கூறி வந்தார்கள்.
ஆனால் பெண்கள் ஆண்களின் சமூகத்தில் கலந்துகொள்வதற்கும் பேசுவதற்கும் தைரியமில்லாத ஒரு
காலமும் இருந்தது.
தன்னுடைய எஜமானர்
மற்றும் பின்பற்றத் தகுந்தவரின் முன் மாதிரியின் அடிப்படையில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களும்.., எப்படிப்பட்ட அருளுக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினார்கள் என்றால் அதை ஸஹாபாக்கள் ராணியின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கூறிவந்தார்கள்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் ஹஸ்ரத் அம்மா ஜான்(ரலி) அவர்களுடன் நடந்து கொண்ட முறை இக்காலத்தின் நடைமுறை
மற்றும் சூழ்நிலைக்கு நேர் மாற்றமாக இருந்தது. மவ்லவி அப்துல் கரீம் சாஹிப் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள்:
மக்கள் மத்தியில்
இயல்பிலேயே எளிமையாக இருக்கின்ற மனிதர்கள், செயற்கையான ஆச்சாரத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஆற்றல்
இல்லை என்பதை நன்கறிந்த வீட்டு வேலை செய்கின்ற பெண்கள் இந்த விஷயத்தை மிகவும் வியப்புடன்
பார்க்கின்றார்கள். உலகிலும்தன்னுடைய அக்கம்பக்கத்தில் நடக்கின்ற பொதுவான நடைமுறைக்கு
நேர்மாற்றமாக இருப்பதைக் கண்டு மிகவும் வியப்பாக அந்த பெண்கள் “மிர்ஸா சாஹிப் தன்னுடைய மனைவியின் பேச்சை ரொம்பவே
கேட்கின்றார்” என்று பலமுறை கூறியதை
நானே கேட்டுள்ளேன்.
மனைவியுடன் நல்ல முறையில்
நடந்து கொள்வது தொடர்பாக அறிவுரை செய்தவாறு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“ஆணாக இருந்து கொண்டு
பெண்ணுடன் சண்டை போடுவதை மிகவும் வெட்கங்கெட்ட செயலாக நாம் கருதுகிறோம். இறைவன் நம்மை ஆணாக படைத்துள்ளான்
என்றால் இது உண்மையில் நம் மீது அருள்களை முழுமை படுத்துவதாகும். பெண்களுடன் மென்மையுடனும்
பரிவுடனும் நடந்து கொள்வதே அதற்குரிய நன்றி செலுத்துதல் ஆகும்.”
(ஹஸ்ரத் ஷேக் யஃகூப் அலீ இர்ஃபானீ (ரலி) அவர்கள் எழுதிய
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வாழ்க்கை, பக்கம் 45)
ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள்ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்களின் உள்ளம் மகிழும் வண்ணம் எவ்வாறு நடந்து
கொண்டார்கள் என்பது தொடர்பாக ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்கள் கூறிய ஒரு சம்பவத்தை
கேளுங்கள்.
“நான் முதன்முதலில்
டெல்லியிலிருந்து வந்த போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மண்டவெல்லத்தினால் செய்த
இனிப்பு சாதத்தை மிகவும் விரும்புவார்கள் என்பதை அறிந்தேன். ஆகையால் மிகவும் ஆர்வத்துடன்
இனிப்பு சாதம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தவாறு கொஞ்சம் அரிசி வாங்கி அதில் நான்கு
மடங்கு வெல்லத்தை கலந்தேன். அது வெல்லப்பாகாக ஆகிவிட்டது. சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி
பாத்திரத்தில் சாதத்தை எடுத்து வைக்கும் போது அதை பார்த்து நான் மிகவும் வருத்தம் அடைந்தவாறு சாப்பாட்டிற்கான
நேரம் வந்து விட்டதே என்ற வியப்பில் இருக்கும்போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் வந்துவிட்டார்கள்.
துக்கம் மற்றும் கவலையினால் அழுகின்ற நிலையிலுள்ள என் முகத்தை பார்த்து சிரித்தவாறு
சாதம் நன்றாக சமைக்கவில்லை என்ற வருத்தமா என கேட்டவாறு, இது மிகவும் நன்றாக உள்ளதே! என்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு
சமைக்கப்பட்டுள்ளதே எனக் கூறினார்கள். இதுபோல் அதிகமாக வெல்லம் கலந்த உணவு தான் எனக்கு
பிடிக்கும். இது மிகவும் நன்றாக உள்ளது என்று கூறியவாரே மிகவும் மகிழ்ச்சியுடன் உண்டார்கள்.” ஹஸ்ரத் உம்முல் முஃமினீன் அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் என்னை மகிழ்விப்பதற்காக இவ்வாறு கூறியதும் என்னுடைய உள்ளமும் மகிழ்ச்சி
அடைந்தது என கூறினார்கள்.
[ஹஸ்ரத் நுஸ்ரத் ஜஹா(ன்) சாஹிபா வாழ்க்கை-பக்கம் 225,
226]
கண்ணியத்திற்குரியவர்களே!
நம்மில் எத்தனை பேருக்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினைக்குரியதாக இருக்கின்றது. எவ்வாறாக
நாம் சில சமயங்களில் உணவில் உப்பு சற்று அதிகமானாலும், குறைந்தாலும் மனைவிமார்களை கடிந்து கொள்கிறோம். எம்பெருமானார்
(ஸல்) தொடர்பாக ஹதீஸில் இவ்வாறு வருகிறது: அதாவது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருபோதும்
எந்த உணவையும் குறை கூறியதில்லை. மாறாக உணவையும் உணவை சமைத்தவர்களையும் எப்போதும் புகழ்ந்தவாறும் மனதிற்கு ஆறுதல் கூறிக்
கொண்டும் இருப்பார்கள்.
ஹஸ்ரத் அம்மா ஜான்
(ரலி) அவர்கள் ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களை மிக்க நல்லமுறையில் கவனித்து வந்தார்கள்.
ஆனால் அதிகமான விருந்தினர்களின் வருகையின் காரணமாக சில சமயங்களில் அன்னார் விரும்பாத
நிலையிலும் கவனிப்பதில் குறை ஏற்பட்டுவிடுகிறது. இதை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களை
நேசிக்கின்ற ஸஹாபாக்களும் கூட உணர்ந்திருந்தார்கள். அதாவது ஹுஸூர்(அலை) அவர்களுக்கு
நோயினாலும், கடின உழைப்பு மற்றும்
வியர்வை வெளியேறுவதாலும் குறிப்பாக உணவின்பக்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அதுபோன்ற ஒரு சம்பவத்தை
நினைவு கூர்ந்தவாறு ஹஸ்ரத் மவ்லவி அப்துல் கரீம் ஸாஹிப் (ரலி) அவர்கள் எழுதுகிறார்கள். லாஹூரைச் சார்ந்த முன்ஷி அப்துல் ஹக்
சாஹிப் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம் கேட்டார்கள்:
உங்களுடைய பணி மிகவும்
நுட்பமானது. உங்கள் தலை மீது கடினமான சுமையை சுமக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நீங்கள்
உடலிற்காண சலுகையை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு பிரத்தியேக சத்துள்ள உணவு
கண்டிப்பாக உங்களுக்காக தினமும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவர்களின் இந்த கூற்றுக்கு
பதிலளித்தவாறு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்கள்,“இது சரியான விஷயம் தான். நாமும் அவ்வப்போது இதை
கூறியும் உள்ளோம். ஆனால் பெண்கள் தங்கள் பணியிலேயே தீவிரமாக இருப்பதனால் இவ்விஷயங்களில்
மிகுதியாக அக்கறை செலுத்துவதில்லை” என கூறினார்கள்.
முன்ஷி அப்துல் ஹக்
ஸாஹிப் அதற்கு பதிலளித்தவாறு ஹஸ்ரத்நீங்கள் அதட்டியும் திட்டியும் கூறுவதில்லை. மேலும்
திகிலை ஏற்படுத்துவதில்லை. என்னுடைய நிலை என்னவென்றால் உணவிற்காக தனிப்பட்ட ஏற்பாட்டை
மேற்கொள்வேன். என்னுடைய கட்டளையை மீறுவது என்பது சாத்தியமற்றதாகும். அவ்வாறு நடந்தால்
நாம் வேற முறையை கையாள வேண்டியது வரும் எனக் கூறினார்கள். அன்பின் காரணமாக ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்களுக்கு இந்த விஷயம் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று எண்ணி
சிந்திக்காமலும் புரியாமலும் ஹஸ்ரத் மவ்லவி அப்துல் கரீம்ஸாஹிப்(ரலி) அவர்கள் அதை வழிமொழிந்தார்கள்.
மேலும் முன்ஷிஸாகிபின் இந்த கூற்று சரியானதாகும். ஹுஸூர்(அலை) அவர்களும் இவ்விஷயங்களை
பலவந்தமாக ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று வினவினார், அதற்கு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் சிரித்தவாறு,“நம்முடைய நண்பர்கள் இப்படிப்பட்ட குணங்களிலிருந்து
விலகியிருக்க வேண்டும்” எனக் கூறினார்கள்.
நான் அச்சமயம் எவ்வளவு
வெட்கத்திற்குள்ளானேன் என்பதை அல்லாஹ்வே அறிவான் என மவ்லவி அப்துல் கரீம்ஸாஹிப்(ரலி)
அவர்கள் கூறினார்கள்.
[மவ்லானா அப்துல் கரீம்ஸாஹிப்(ரலி)
எழுதியஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வாழ்க்கை,பக்கம்18,19]
ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் கிஷ்திநூஹ்என்ற தன் புத்தகத்தில் அறிவுரை கூறியவாறு கூறுகிறார்கள்:
"எவர் தன்னுடைய மனைவி மற்றும் அவளுடைய நெருங்கிய உறவினர்களுடன்
நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டாரோ அவர் என்னுடைய ஜமாஅத்தைச் சார்ந்தவரல்ல”
இந்த அன்பின் செயல் வடிவிலான
எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் சுயமே எவ்வாறு நடந்து கொண்டார்கள்
என்பதை கீழ்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அன்னாரின் புதல்வியான ஹஸ்ரத் நவாப் முபாரகா பேகம் ஸாஹிபா
(ரலி) அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) எவ்விதம் தன்னுடைய மாமியாரின் உள்ளம் மகிழ நடந்துகொண்டார்கள்.
மேலும் தாய் மற்றும் மகளிற்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சம்பவத்தை கூறுகிறார்கள்.
“ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களின் பார்வையில் ஹஸ்ரத் அம்மாஜான் (ரலி) அவர்களுக்கு மிக்க மதிப்பும் மரியாதையும்
இருந்தது. மேலும் மிக்க இரக்கத்துடனும் அக்கறையுடன் கவனித்து வந்த அந்த வரைபடம் என்
உள்ளத்தில் தற்போது வரை உள்ளது. ஆனால் ஒருமுறை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் அவசியம்
எனக் கருதியவாறு ஹஸ்ரத் அம்மாஜான் (ரலி) அவர்களுக்கு தர்பிய்யத் கொடுத்ததை நான் கண்டுள்ளேன்.
இந்த ஒரு சம்பவத்தை தவிர வேறு எந்த சம்பவத்தையும் ஒருபோதும் கண்டதில்லை. அதற்கான அவசியமும்
வந்ததில்லை. ஏனென்றால் ஹஸ்ரத் அம்மாஜான் (ரலி) அவர்கள் சுயமே ஒரு அழகிய முன்மாதிரியின்
எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள். அந்த சம்பவத்தின் தெளிவான காட்சி நினைவுள்ளது. (அந்த
சம்பவமானது) கீழே அறையின் எதிரே பாட்டிஅம்மா அமர்ந்திருந்தார்கள். அங்கு வேலை செய்யும்
பெண் பணியாளிகள் எவருமே இவர் கூறுவதை கேட்கவில்லை. யாரோ ஏதோ கூறியதன் காரணமாக கருத்து
வேறுபாடு ஏற்பட்டு பாட்டிஅம்மா (ரலி) ஹஸ்ரத்அம்மாஜான் (ரலி) அவர்களிடம்கோபித்து கொண்டார்கள். பாட்டிஅம்மா
(ரலி) அப்போது (இந்தப்) பெண் {பாட்டிஅம்மா(ரலி) தன்னுடைய மகளான அம்மாஜான் (ரலி)அவர்களை,
பெண்ணே பெண்ணே என்று தான்
அழைப்பார்கள்} என் மகள் தானே! என்னுடைய
மதிப்பிற்குரியவள் என்னுடைய தலையின் கிரீடம் தானே என்றெல்லாம் கோபத்தில் கூறிக் கொண்டே
இருந்தது எனக்கு நினைவில் உள்ளது.
அவ்வாறே கூறிக் கொண்டிருக்கையில்
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஹஸ்ரத் அம்மாஜான் (ரலி) அவர்களின் தோள்களின்மீது
அன்னாரின் அருளுக்குரிய கரத்தை வைத்தவாறு அம்மா ஜான் (ரலி) அவர்களை முன்நோக்கி அழைத்துச்
சென்று கொண்டிருந்தார்கள். அம்மா ஜான் (ரலி) அவர்களின் கண்களில் இருந்து முத்துப்போல்
கண்ணீர்துளிகள் வழிந்தோடிக் கொண்டிருந்த நிலையில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்கள்
மௌனமாக அம்மா ஜான் (ரலி) அவர்களின் தோளில் கை வைத்தவாறே தலை குனிந்த நிலையில் பாட்டி
அம்மாவின் (ரலி) பாதங்களில் கொண்டு சேர்த்தார்கள். பிறகு பாட்டி அம்மா(ரலி) அம்மாஜான்
(ரலி) அவர்களை தன்னுடைய கரங்களினால் பிடித்து அரவணைத்தார்கள். அத்துடன் ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
சற்று சிந்தித்துப்
பாருங்கள்! இன்றைய காலத்தில் உள்ள சந்ததிகளில் பெரும்பாலானவர்கள் தாய்மார்களின் அருமையை
அறியாதவர்களாக இருக்கிறார்கள். அஹ்மதி பெண்கள் மற்றும் சகோதரிகளே! நான் கண்ட மற்றும்
நினைவில் உள்ள இந்த வரைபடத்தை சற்று தன் கண்முன்னே கொண்டு வாருங்கள் மார்க்கத்தின்
அரசராக திகழ்ந்தவர் தன்னுடைய இறைவன் புறமிருந்து கதீஜா என்னும் புனைபெயரை பெற்றவருமான அன்னார்
விரும்பிய, அன்னாரின் உள்ளத்தில் எவர்
தொடர்பாக மிகுந்த கண்ணியம் இருந்ததோ அப்படிப்பட்ட துணைவியரான அம்மா ஜான் (ரலி) அவர்களின்
தாயாரின் சாதாரண அதிருப்தியை கேட்டு அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சுயமே அன்னாரின்
தாயின் காலடியில் அவரை விழ வைத்தார்கள். இதன் மூலம் [ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள்] உன்னுடைய அந்தஸ்து உயர்ந்ததுதான். ஆனால் இவர் உன்னுடைய தாயார்
ஆவார்கள். உம்முடைய தாயின் காலடியில் தான் சுவர்க்கம் உள்ளது.
اللهم صلي على محمد و على ال محمد و على عبدك المسيح
الموعود
(தஹ்ரீராத்தே முபாரக்கா,
பக்கம் 214,215)
கண்ணியத்திற்குரியவர்களே!
வீடுகளில் சில நேரத்தில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதுவும் நற்பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக
இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவசரத்தின் காரணமாக நாகரீகமில்லாத ஆண்களிடமிருந்து
தாமதமாக்கிவிட்டாய், விரைவாக கிளம்பவும்.
எப்போதும் இதுவே உன்னுடைய பழக்கமாக இருக்கிறது என்ற இதுபோன்ற பேச்செல்லாம் கேட்க வேண்டியதிருக்கிறது. ஆனால்
நம்முடைய அன்பிற்குரிய மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் தம்முடைய எஜமானரும் பின்பற்றக்கூடியவருமாகிய ஹஸ்ரத் முஹம்மது
முஸ்தஃபா (ஸல்) அவர்களை முழுமையாக பின் பற்றியவாறு பிரயாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும்
சுயமே செய்வார்கள். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். முதலில்
அவர்களை வண்டியில் ஏற்றி விடுவார்கள். பிறகு எல்லா விதத்திலும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
இதுவே ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் பழக்கமாக இருந்தது.
ஹஸ்ரத் முஃப்தி முஹம்மது
சாதிக் ஸாஹிப்(ரலி) அவர்கள் “ஸிக்ரே ஹபீப்”
என்ற தன்னுடைய நூலில் இது
தொடர்பாக இவ்வாறு கூறுகிறார்கள்:
“பிரயாணத்திற்கான சந்தர்ப்பம்
வரும் போதெல்லாம் ஹுஸூர்(அலை) அவர்கள் தாமேசுயமே சென்று ஹஸ்ரத் அம்மா ஜான்(ரலி) மற்றும்
உடனிருக்கும் பெண்களையும் ரயிலில் பெண்களுக்குரிய பெட்டியில் ஏற்றி விடுவார்கள். மேலும்
எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அந்த இடம் வந்ததும் பெண்கள் பெட்டியின் அருகில் சென்று
தன் முன்னால் ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்களை இறக்கி விடுவார்கள். மேலும் பிரயாணத்தின்
இடையிலும் தன்னுடன் இருக்கின்ற குத்தாம்கள் மூலம் ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்களின் நிலையை
அறிந்து கொண்டே இருப்பார்கள். இதுவே அன்னாரின் நடைமுறையாக இருந்தது.
ஒரு பிரயாணம் தொடர்பாக
மிகவும் வியக்கத்தக்க சம்பவத்தை ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவ்வல் (ரலி) அவர்கள் எழுதியுள்ளார்கள். அன்னார்
கூறுகிறார்கள்:
ஒருமுறை ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது(அலை) அவர்கள் பிரயாணத்தில் இருக்கும்போது ரயில் நிலையம் சென்றடைந்தார்கள். வண்டி வருவதற்கு
தாமதமானதால் அன்னார் (அலை) தன் துணைவியார் ஹஸ்ரத் உம்முல் முஃமினீன் (ரலி) அவர்களுடன் ரயில்
நிலையத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். இயல்பிலேயே உணர்ச்சிவசப்படக்கூடிய மவ்லவி அப்துல்
கரீம் ஸாஹிப் சியால்கோட்டி (ரலி) அவர்கள் என்னிடம் வந்து நிறைய மக்களும் பிறமாற்று மதத்தவர்களும்
இங்குமங்குமாக திரிகின்றார்கள். அதனால் ஹஸ்ரத் ஸாஹிபிடம் துணைவியாரை எங்கேயாவது தனிமையில்
அமர வைக்கும் படி கூறுங்கள் என கூறினார். நான் கூற முடியாது நீங்கள் கூறிப் பாருங்கள்
என மவ்லவி ஸாஹிப் கூறினார்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் மவ்லவி அப்துல் கரீம் ஸாஹிப் (ரலி)
சுயமே ஹஸ்ரத் ஸாஹிப் (அலை) அவர்களுக்கு அருகில் சென்று ஹுஸூர் மக்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.
துணைவியாரை தனியாக ஓரிடத்தில் அமர வைக்கவும் எனக் கூறினார்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் சென்றுவிடுங்கள். இதுபோன்ற பர்தாவை நான் ஆமோதிப்பதில்லை எனக் கூறினார்கள்.
மவ்லவி (நூருத்தீன்) ஸாஹிப் கூறுகின்றார்கள்:
அதன் பிறகு மவ்லவி
அப்துல் கரீம் ஸாஹிப் (ரலி) தலை குனிந்தவாறே என் பக்கம் வந்தார்கள். மவ்லவிஸாஹிப் பதில்
கிடைத்துவிட்டதா என நான் கேட்டேன்.
( சீரத்துல் மஹ்திபாகம்
2 பக்கம் 55)
கணவன் மனைவிக்கிடையில்
மனக்கசப்பு ஏற்படுவதற்கான காரணம் அவர்களுக்கிடையே உள்ள குணநலன்களை அறியாததுதான். கணவன்
தன் மனைவியின் மனோநிலை தன்னுடைய மனோநிலைக்கேற்ப இருக்க வேண்டும் என விரும்புவார். கணவனின்
மனோ நிலையை மாற்ற வேண்டும் என விரும்புவாள். இது தொடர்பாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்கள் எவ்வாறு தன்மனைவிக்காக தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள் என்றால்,
அன்னாருக்கு இருளில் உறங்கக் கூடிய
பழக்கமிருந்தது. அன்னாரின் மனைவிக்காக வெளிச்சத்தில் உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொண்ட ஈமானைவலுவூட்டக் கூடிய சம்பவத்தை கேளுங்கள்.
ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி)
கூறுகிறார்கள்:
அம்மா ஜான் (ரலி) அவர்களுக்கு
வெளிச்சத்தில் தூங்கக்கூடிய பழக்கம் இருந்தது. வெளிச்சமில்லாமல் அன்னார் ஒருபோதும்
தூங்கமாட்டார்கள். மறுபக்கம் ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது(அலை) அவர்களுக்கு இருளில் தூங்கக்கூடிய
பழக்கம் இருந்தது. அம்மாஜான்(ரலி) அவர்களின் காரணத்தால் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள்
விளக்கை ஏற்றியே வைத்திருப்பார்கள். அம்மா ஜான் (ரலி) உறங்கிவிட்டால் விளக்கின் வெளிச்சத்தை
குறைத்து விடுவார்கள். அம்மா ஜான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (உறக்கத்தில்) திரும்பும்போது
இருட்டாக இருந்தால் விளக்கை ஏற்றுமாறு கூறினால் ஹுஸூர் வெளிச்சத்தை அதிகப்படுத்துவார்கள்.
இறுதியில் ஹுஸூர் (அலை) அவர்களுக்கு வெளிச்சத்தில் உறங்குவதற்கான பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
மேலும் அன்னார் (அலை) அவர்கள் அம்மா ஜான் (ரலி) அவர்களுக்காக முழு வீட்டையும் வெளிச்சமாக
ஆக்கிவிட்டார்கள்.
இது தொடர்பாக ஒருமுறை ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) அவர்கள்
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம் இவ்வாறு கேட்டார்கள்:
“வெளிச்சத்தில் உறக்கமே வராத ஹஸ்ரத் ஸாஹிபின் (அலை)
அந்த காலம் நினைவிலிருக்கிறதா. ஆனால் தற்போது மூலை முடுக்குகளிலெல்லாம் வெளிச்சம் இருந்தால்தான்
உறக்கமே வருகிறது.
[சீரத்ஹஸ்ரத் நுஸ்ரத்ஜஹா(ன்)
பேகம் (ரலி) பக்கம் 415]
கண்ணியத்திற்குரியவர்களே!
இஸ்லாமிய சமூகத்தை
அழகாக்குவதும் இல்லங்களை சுவர்க்கத்தின் காட்சியாக உருவாக்குவதற்கான பொறுப்பும் ஆண்
பெண் இருவர் மீதும் உள்ளது. சிறு சிறு விஷயங்களுக்காக உள்ளத்தில் வன்மத்தை வளர்த்துக்கொள்வது,
சாதாரண விஷயங்களை எல்லாம்
பெரிது படுத்தி வீட்டின் சூழலை களங்கப்படுத்துவது அறிவீனமான செயல் ஆகும். திருமணம்
ஒரு தூய பந்தமாகும். அதை அன்பு, நேசம், பரஸ்பர அமைதி மற்றும் மன நிறைவை கொண்டு நிலைநாட்டப்படுகிறது.
இது தொடர்பாக ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் வழிகாட்டுதல் கவனிக்கத்தக்கதாகும். அன்னார்கூறுகிறார்கள்:
என்னுடைய பார்வையில்
இந்த அருள் எல்லா அனைத்து அருள் களிலும் அடிப்படையானதாகும். முஃமின் (இறை நம்பிக்கையாளன்) தக்வாவின்
(இறையச்சத்தின்) உயர்படித் தரத்தை பெற விரும்புவது மட்டுமல்லாமல் அதற்காக பேராசையும்
கொள்வான். ஆகவே என்னுடைய பார்வையில் எந்த வீட்டில் ஆண் பெண் இருவரிடமும் அன்பு,
நேசம் மற்றும் பற்றில் ஒற்றுமையும்
பொருத்தமும் இருக்குமோ அந்த வீடு சுவர்க்கத்தை போன்று தூய்மையாகவும் அருளால் நிறைந்தும்
காணப்படும்.
(மக்தூபாத்தேஅஹ்மத், பாகம் 2, பக்கம் 50)
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களுக்கு வந்த இறை அறிவிப்பான
خزواالرفق خزواالرفق فإن الرفقرأسالخيرات
மென்மையாக நடந்து
கொள்ளுங்கள். மென்மையாக நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அனைத்து நன்மைகளின் வேர் மென்மையே ஆகும்.
என்பதை கூறி இவ்வாறு கூறுகிறார்கள்:
இந்த இல்ஹாமில் ஜமாஅத்தைச்
சார்ந்த அனைவருக்கும் தன் மனைவியோடு மென்மையுடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்
என்ற போதனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அடிமைகள் அல்ல. உண்மையில் நிக்காஹ் என்பது ஆண்
மற்றும் பெண் இருவருக்கும் இடையே ஏற்படுகின்ற ஒரு பரஸ்பர உடன்படிக்கையாகும். ஆண் தன்னுடைய
உடன்படிக்கையில் மோசடி செய்யாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்திருக்குர்ஆனில்
وعاشروهن بالمعروف
என கூறியுள்ளான்.
அதாவது தன்னுடைய மனைவிகளுடன் நல்ல முறையில் நடந்து கொண்டவாரே வாழ்க்கையை கழியுங்கள்.
மேலும் ஹதீஸில்
خيركم خيركم لأهله
உங்களில் யார் தன்
மனைவியோடு நல்ல முறையில் நடந்து கொள்வாரோ அவரே சிறந்தவராவார் என வந்துள்ளது. ஆக ஆன்மீக
நிலையிலும் பௌதிக நிலையிலும் தன்னுடைய மனைவிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
அவர்களுக்காக துஆ செய்து கொண்டிருங்கள். மேலும் தலாக்கிலிருந்து (மணவிலக்கு) விலகி
இருங்கள். ஏனென்றால் இறைவனின் பார்வையில் எவர் தலாக் கொடுப்பதில் அவசரப்படுகின்றாரோ அவர் மிகவும்
தீயவராக கருதப்படுகிறார். இறைவன் சேர்த்த ஜோடியை அசுத்தமான பாத்திரத்தை போல் உடைத்து விடாதீர்கள்.
(ஸமீமாதுஹ்ஃபாகோல்டவிய்யா)
மேலும் கூறுகிறார்கள்:
அதேபோன்று பெண்கள்
மற்றும் குழந்தைகளுடனான தொடர்பு மற்றும் ஒற்றுமையாக வாழ்வதில் மக்கள் தவறிழைக்கின்றார்கள்.
மேலும் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்கள். திருக்குர்ஆனில் தன் மனைவிகளுடன் நல்ல
முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று வந்துள்ளது. ஆனால் தற்போது அதற்கு நேர்மாற்றமாக
நடந்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக
இரண்டு விதமான மக்களை நம்மால் காணமுடிகின்றது. ஒரு பிரிவு மக்கள் எப்படிப்பட்டவர்கள்
என்றால் அவர்கள் பெண்களை முற்றிலுமாக சுதந்திரமாக விட்டு விடுவார்கள். (அதாவது வெட்கக்கேடான
செயல் செய்வதற்கு எந்தவித தடையின்றி தன்னிச்சையாக செயல்படுதல்) மார்க்கம் அவர்கள் மீது
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.மேலும் அவர்கள் பகிரங்கமாகஇஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவார்கள்.
அந்த பெண்களிடம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். சிலர் எப்படிப்பட்டவர்கள் என்றால்
(இரண்டாம் வகை) அவர்கள் முற்றிலும் சுதந்திரமாக விடுவதில்லை. மாறாக அதற்கு நேர் மறையாக
அவர்களை எந்த அளவிற்கு கடுமையாகவும் கட்டுப்பாட்டுடனும் நடத்துகின்றார்கள் என்றால்
அவர்களுக்கும் மிருகங்களுக்குமிடையில் எந்தவேறுபாடும் காண முடியாது. அடிமைகள் மற்றும்
மிருகங்களை விடவும் மிக மோசமான முறையில் நடந்து கொள்கிறார்கள். அடித்தால் முன்னால்
இருப்பது உயிருள்ள பொருள் தானா இல்லையா என்பதைக் கூட அறியாத அளவிற்கு இரக்கமில்லாமல்
அடிக்கின்றனர். ஆக மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். இங்கு பஞ்சாபில் பிரசித்தி
பெற்ற ஒரு கூற்று உள்ளது. அதாவது பெண்கள் காலணிக்கு ஒப்பாக கருதப்பட்டு வந்தார்கள்.
ஒன்றை கழற்றிவிட்டு மற்றொன்றை அணிந்து கொள்ள வேண்டும் என்பதே அந்த கூற்றாகும். இது
மிகவும் அபாயகரமான மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான விஷயமாகும். ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களிலும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அன்னாரின்
வாழ்க்கையைப் பாருங்கள். பெண்களுடன் எவ்வாறு நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். என்னுடைய
பார்வையில் பெண்களுக்கு எதிராக எவன் நிற்கின்றானோ அவன் தைரியமற்றவனும் ஆண்மையில்லாதவனுமாவான்.
(மல்ஃபூஸாத்தொகுதி
2, பக்கம் 396)
மேலும் ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
கணவருக்கு மனைவியுடன்
எத்தகைய தொடர்பு இருக்க வேண்டும் என்றால் இரு உண்மையான நண்பர்களுக்கு இடையில் இருக்கின்ற
தொடர்பை போல் இருக்க வேண்டும். மனிதனுடைய உயர் நல்லொழுக்கம் மற்றும் இறை தொடர்பின்
முதல் சாட்சியாக இந்த பெண்களே இருக்கின்றனர். இவர்களுடன் நல்ல தொடர்பு இல்லை என்றால்
பிறகு இறைவனுடன் சமாதானத்தை ஏற்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? ரஸூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்:
خيركم خيركم لأهله
அதாவது உங்களில் நல்லவர்
தமது மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவர்தான்.
(மல்ஃபூஸாத்தொகுதி
3,பக்கம் 300,301)
குடும்ப வாழ்வை அமைதி
நிறைந்த சூழலாக உருவாக்குவதற்கு இரண்டாவது வழிமுறை சந்ததிகளின் தர்பிய்யத் ஆகும். கணவன்
மனைவி ஆகிய இருவரிடமும் அன்பு மற்றும் ஒற்றுமை இருக்குமேயானால் மேலும் ஒருவர் மற்றவருக்காக
உளமார்ந்த கண்ணியத்தை வெளிப்படுத்துகின்ற உணர்வு மற்றும் மார்க்கப் பற்று இருந்தால்
உறுதியாக சந்ததிகளிலும் அதற்கான தாக்கம் ஏற்படும்.எம் பெருமானார் (ஸல்) அவர்கள்
اكرمواأولادكم
واحسنواادبهم
என்று கூறியுள்ளார்கள். அதாவது உங்கள் சந்ததிகளுக்கு
கண்ணியமளியுங்கள். மேலும் அவர்களுக்கு அழகிய நற்பண்புகளை கற்றுக் கொடுங்கள்.
ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது
(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்களும் சுயமே நல்லவராக
இருங்கள் மேலும் சந்ததிகளுக்காக நன்மையிலும் இறையச்சத்திலும் சிறந்த முன்மாதிரியாக
இருங்கள். அவர்களை இறையச்சமும் மார்க்க உணர்வும் உள்ளவராக ஆக்குவதற்காக முயற்சியும்
துஆவும் செய்யுங்கள். அவர்களுக்காக செல்வத்தை சேகரிக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ
அந்த அளவுக்கு இதற்காகவும் முயற்சி செய்யுங்கள். சந்ததிகளுக்கான மிகச் சிறந்த முன்மாதிரியாகவும்
பாடமாகவும் அமையக்கூடிய வேலையை செய்யுங்கள். அதற்கு முதலில் நீங்கள் உங்களை சீர்திருத்துவது
அவசியமாகும். நீங்கள் மிக உயர் தரம்வாய்ந்த இறையச்சம் உடையவராகவும் நன்நெறியாளராகவும்
ஆகி விட்டீர்கள் என்றால் மேலும் இறைவனை திருப்திபடுத்துவீர்கள் என்றால் அல்லாஹ்வும்
உங்கள் சந்ததிகளுடனும் நல்ல முறையில் நடந்து கொள்வான் என உறுதி கொள்ளப்படுகிறது.
(மல்ஃபூஸாத்தொகுதி
8,பக்கம்109,110)
ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் குழந்தைகளிடத்தில் எப்போதும் உண்மை மற்றும் நாணயத்தை ஏற்படுத்துவதே அன்னாரின்
வாழ்வின் அழகிய தருணமாகும். மேலும் அவர்களின் தர்பிய்யத்தில் கடுமை காட்டாமல் துஆமற்றும்
செயல் முன்மாதிரியை அவசியம் என கருதினார்கள். அப்படிப்பட்ட வீட்டில் நடந்த ஒரு சிறிய
சம்பவம் மேலும் அந்த சம்பவத்தை பொலிவூட்டுகிறது.
கபூர்தலாவைச் சார்ந்த ஹஸ்ரத் முன்ஷி ஸஃபர்அ ஹ்மத் ஸாஹிப்
(ரலி) அறிவிக்கின்றார்கள்:
ஒருமுறை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் படுத்துக் கொண்டிருந்தார்கள். ஹஸ்ரத் செய்யது ஃபஸல் அஹ்மத் ஷாஹ் ஸாஹிப் ஹுஸூர் (அலை)
அவர்களின் காலை அமுக்கி கொண்டிருந்தார்கள். அப்போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) ஓரளவு
உறங்கிவிட்டார்கள். ஃபஸல் அஹ்மத் ஷாஹ் ஸாஹிப் என்னை நோக்கி சைகையில் (ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்களின்) சட்டைப்பையில் கடினமான பொருள் ஏதோ இருக்கிறது எனக் கூறினார்கள். நான்
கையை உள்ளே விட்டு அந்தப் பொருளை வெளியே எடுத்தவுடன் ஹுஸூர்(அலை) அவர்கள் கண்விழித்து விட்டார்கள்.
அந்த பொருளானது பாதி உடைந்த மண்பாண்டதுண்டாக இருந்தது. அதை நான் தூக்கி எறியும் போது மஸீஹ் மவ்வூது
(அலை) கூறினார்கள்:
இதை மியா(ன் )மஹ்மூத்
விளையாடிக் கொண்டிருக்கும்போது என் சட்டைப் பையில் போட்டு விட்டார். அதை நீங்கள் தூக்கி
எறியாதீர்கள். என்னுடைய சட்டைப்பையிலேயே வைத்து விடுங்கள். ஏனென்றால் அவர்எம்மை நம்பிக்கையாளர்
என கருதி விளையாட்டுப் பொருளை வைத்திருக்கிறார். அவர் கேட்டால் நாம் எங்கிருந்து கொண்டு
வருவோம் என்று கூறியதும் அவர் அதை சட்டைப்பையிலேயே வைத்து விட்டார். இந்த சிறிய சாதாரண
சம்பவம் ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் தன்னுடைய செயல் முன்மாதிரியின் மூலமாக தன்னுடைய
குழந்தைகளுக்கு குழந்தைப்பருவத்திலிருந்தே உண்மை, நேர்மை, நாணயத்தை கற்றுக் கொடுப்பதற்கு எந்த அளவு ஆவலாக
இருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.
அதேபோன்று அன்னாரின்
வாழ்வின் ஒரு அழகிய தருணமாக விளங்குகின்ற விஷயம் குழந்தைகள் மீண்டும் மீண்டும் இடையூறு
செய்தாலும் அன்னார் மிகுந்த பணியிலிருந்த போதிலும் பதற்றமடைய மாட்டார்கள் என்பதாகும்.
ஹஸ்ரத் டாக்டர் மீர் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
மியா(ன்) பஷீர் அஹ்மத் ஸாஹிப் அவர்கள் சிறுவனாக இருக்கும்போது
சர்க்கரை சாப்பிடும் பழக்கம் இருந்தது. எப்போதும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம்
வந்து கையை நீட்டியவாறு தந்தையே (வெள்ளை) சர்க்கரை என கேட்பார்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் நெருக்கடியான எழுத்துப் பணியில் இருக்கும்போது அதை விட்டுவிட்டு உடனடியாக
சிறிய அறைக்கு சென்று சர்க்கரை எடுத்து வந்து தருவார்கள். பின்னர் அன்னார் எழுதத் தொடங்கி
விடுவார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் மியா(ன்)ஸாஹிப் கையை நீட்டியவாறு வந்து
தந்தையே வெள்ளை (அதாவது வெள்ளை நிற சர்க்கரை) வேண்டும் எனக் கேட்பார்கள்.ஹுஸூர் (அலை)
மீண்டும் எழுந்து சென்று அவர் கேட்டதை கொண்டு வந்து தருவார்கள் இவ்வாறாக அந்நாட்களில்
தினமும் பலமுறை இந்த கொடுக்கல் வாங்கல் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) எழுத்துப் பணியின் காரணமாக நெருக்கடியில் இருந்த போதிலும் எதுவும் கூற மாட்டார்கள்.
மாறாக ஒவ்வொரு முறையும் அவருக்காக (சிறுவனுக்காக) எழுந்து செல்வார்கள்.
(சீரத்துல் மஹ்திபக்கம்
823,824)
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை கடினமாக எதிர்த்து வந்தார்கள்.
நல்ல முன்மாதிரி மற்றும் அன்புடன் குழந்தைகளுக்கு தர்பிய்யத் கொடுக்க வேண்டும் என்பதே
அன்னாரின் கூற்றாக இருந்தது.
இது தொடர்பாக கமருல் அன்பியா ஹஸ்ரத்
மிர்ஸா பஷீர் அஹ்மத் ஸாஹிப் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள்:
மவ்லவி ஷேர் அலி ஸாஹிப் (ரலி) என்னிடத்தில்
இவ்வாறு கூறினார்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் சிறுவர்களுக்கு உடல் ரீதியான
தண்டனை கொடுப்பதை கடினமாக எதிர்த்தார்கள். எந்த ஆசிரியர் தொடர்பாக அவர்சிறுவர்களை அடிக்கின்றார்
என்ற புகார் வந்தாலே கோபித்துக் கொள்வார்கள். மேலும் அறிவுள்ள ஆசிரியர் எந்தப் பணியை
ஞானத்துடன் செய்கின்றாரோ அதை தகுதியற்ற அறிவீனமான ஆசிரியர் அடி உதையை கொண்டு செய்துவிடலாம்
என்று விரும்புகிறார். ஒருமுறை மத்ரஸாவில் ஒரு ஆசிரியர் ஒரு சிறுவனுக்கு ஏதோ தண்டனை கொடுத்தார்.
அப்போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மீண்டும் அவ்வாறு நடந்தது என்றால் நாம் அந்த
ஆசிரியரை மத்ரஸாவிலிருந்து வெளியேற்றிவிடுவோம் எனக் கூறினார்கள்.
(சீரத்துல்மஹ்தி,
தொகுதி 2, பக்கம் 398)
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்கள்:
“ஹிதாயத் மற்றும் உண்மையான தர்பிய்யத் இறைவனது செயலாகும். (உண்மையான தர்பிய்யத் அல்லாஹ்வின் பணியாகும்) கடுமையாக அவர்களை பின்தொடர்வதும் ஒரு விஷயத்தில்
பிடிவாதத்துடன் அளவுக்கு மீறி தலையிடுவதும் அதாவது ஒவ்வொரு விஷயத்திலும் பிள்ளைகளை
தடுப்பது போன்றவைதாமே நேர்வழியின் உரிமையாளர் என்பதை வெளிப்படுத்துவதாகும். நாம் நமது
விருப்பத்திற்கேற்ப அவர்களை ஒரு வழியில் கொண்டு வந்து விடுவோம் என்று வெளிப்படுத்துவது
என்னுடைய பார்வையில் இதுவும் ஒருவகை மறைமுகமான ஷிர்க்ஆகும். கோபத்தில் உள்ள ஒருவர்
தண்டனை கொடுக்கும் போது கோபம் என்ற தீஅதிகரித்து அவர்எதிரியின் தன்மையைமேற்கொள்கிறார்.
அதன் காரணமாக குற்றம் செய்வதில் எல்லையை கடந்து விடுகின்றார். கோபத்தில் கட்டுப்பாடு
இழந்து தண்டிக்காமல் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தண்டனை கொடுப்பதற்கான (அடிப்பது)
உரிமை அவருக்கு உள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டவாறு தண்டனை கொடுக்க வேண்டும். மன்னிக்கவும்
வேண்டும்.
மேலும்அன்னார்(அலை)
கூறுகிறார்கள்:
எவ்வாறு எந்த அளவுக்கு தண்டனை கொடுப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறதோ அதே
அளவுக்கு துஆ செய்வதில் ஈடுபாடு காட்டுங்கள். மேலும் குழந்தைகளுக்காக வருத்தத்துடன்
உள்ளத்திலிருந்து துஆ செய்வதை ஒரு பகுதியாகவே கருதுங்கள். ஏனென்றால் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக
செய்கின்ற துஆ குறிப்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
(மல்ஃபூஸாத்தொகுதி
1,பக்கம்308,309)
ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் சாதாரண இழப்பின் காரணமாக குழந்தைகளுக்கு தண்டனை வழங்க மாட்டார்கள் மாறாக
மன்னித்து விடுவார்கள்.
ஹஸ்ரத் மவ்லவி அப்துல்
கரீம் ஸாஹிப் (ரலி) அவர்கள் அல்ஹகம் பத்திரிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்கள்:
மஹ்மூத் [கலீஃபத்துல் மஸீஹ் ஸானி (ரலி)]
4 வயது சிறுவனாக இருந்தார்கள். ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) வழக்கம்போல் எழுதிக்கொண்டிருந்தார்கள். மியா(ன்) மஹ்மூத் தீக்குச்சியை வைத்துக் கொண்டு
அங்கு வந்தார்கள். அவர்களுடன் குழந்தைகளின் கூட்டமும் இருந்தது. முதலில் சிறிது நேரம்
அவர்கள் தமக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களது உள்ளத்தில் தோன்றியவாறு
கையெழுத்துப் பிரதியை எரித்து விட்டார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் கைதட்டி கொண்டிருந்தார்கள்.
ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது (அலை) அவர்கள் எழுதுவதில் மூழ்கி இருந்த காரணத்தால் என்ன நடக்கிறது
என்பதை கூட தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்குள் முக்கியமான ஆவணமெல்லாம் தீயில்
எரிந்து சாம்பலாகி விட்டது. குழந்தைகளும் வேறு பக்கம் சென்று விட்டார்கள். ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது கட்டுரையின் சொற்றொடரை இணைக்கும் வகையில்
முந்தைய பக்கத்தை பார்க்க வேண்டியதால் அந்த காகிதத்தை தேடியவாறு அது எங்கே என்று கேட்ட
போது அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன் மியா(ன்) ஸாஹிப்தான் அந்த
காகிதத்தை எரித்தார்கள் எனக் கூறினான். பெண்கள்,
குழந்தைகள் மற்றும் வீட்டில்
உள்ள அனைவரும் மிகவும் வியப்பாக தற்போது என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.
அப்போதுஹஸ்ரத் மஸீஹ்மவ்வூது (அலை) அவர்கள் புன்னகைத்தவாறு நல்லதே நடந்துள்ளது. இதில்
(தீயில் எரிந்ததில்) அல்லாஹ்வின் விருப்பமும், நாட்டமும் ஏதோ இருக்கும். மேலும் தற்போது அதை விட
சிறந்ததை நமக்கு புரிய வைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறான்” என்று கூறினார்கள்.
[சீரத் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) ஷேக் யஃகூப் அலீ இர்ஃபானீ ஸாஹிப் எழுதியது]
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் எங்கு உலக விஷயங்களையும், உலக கல்வியும் கற்பதில் உடல் ரீதியிலான தண்டனை வழங்குவதை ஆகுமானதாக கருதுவதில்லையோ
அங்கு மார்க்கத்திற்காக மதிப்பையும் தன்மான உணர்வையும் வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில்
அன்னார் உடல்ரீதியிலான தண்டனையை வழங்கி உள்ளார்கள். அதனால் குழந்தை பருவத்திலிருந்தே
குழந்தைகளுக்கு மார்க்கத்தின் மீதும் மதிப்பும் தன்மான உணர்வும் நிலைபெற வேண்டும் என்பதே
ஆகும்.
ஹஸ்ரத் உம்முல் முஃமினீன்
(ரலி) அவர்கள் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை ஹஸ்ரத் மியா(ன்) பஷீர் அஹ்மத் ஸாஹிப் (ரலி) அவர்களுக்கு
கூறினார்கள்:
ஒருமுறை உம்முடைய
சகோதரர் முபாரக் அஹ்மத் மர்ஹூம் அவர்களின் குழந்தைப் பருவத்தில் கவனமின்மை காரணமாக திருக்குர்ஆனுக்கு
அவமதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள்.
எந்த அளவுக்கு என்றால் அன்னாரின் முகம் சிவந்து விட்டது. மேலும் கோபத்தில் முபாரக் அஹ்மதின் முதுகில் ஒரு
அடி அடித்தார்கள். அதனால் அவனுடைய மெலிந்த உடலில் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் விரல்களின்
அச்சு பதிந்துவிட்டது. மேலும் அன்னார் (அலை) கோபத்துடன் இவனை இப்போது என் முன்னால் இருந்து
அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்கள். பஷீர் அஹ்மத் ஸாஹிப் (ரலி) கூறுகிறார்கள். மர்ஹூம் முபாரக் அஹ்மத் எங்கள்
சகோதரர்கள் அனைவரிலும் வயதில் சிறியவன் ஆவார். மேலும் ஹஸ்ரத்மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின்
வாழ்நாளிலேயே இறந்துவிட்டார். ஹுஸூர் (அலை) அவர்கள் அவர் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள்.
அதன் காரணமாக அவர் மரணத்திற்கு பிறகு அவனுடைய பெயர் பலகையில் எழுதவேண்டிய கவிதைகளை
எழுதினார்கள். அதில் ஒரு கவிதை இதுவாகும்:
என் மைந்தன் முபாரக்
அஹ்மத், தூய வடிவாகவும் தூய
இயல்பு கொண்டவனாகவும் இருந்தான்.
இன்று அவன் நம்முடைய
உள்ளத்தில் துக்கத்தை ஏற்படுத்திவிட்டு நம்மைவிட்டு பிரிந்துவிட்டான்.
ஆனால்அந்த சந்தர்ப்பத்தில்ஹஸ்ரத்மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் திருக்குர்ஆனின் அவமதிப்பை சகித்துக்கொள்ளவில்லை. மேலும் அதற்கான
தண்டனை அவசியம் எனக் கருதினார்கள்.
(சீரத்துல்மஹ்திதொகுதி
2, பக்கம் 325)
ஹஸ்ரத் மஸீஹ்மவ்வூது
(அலை) அவர்களின் வாழ்வின் அழகிய தருணத்தில் இதுவும் ஒன்றாக இருந்தது. அதாவது, அன்னார் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையின்
ஒளியில் சில சந்தர்ப்பங்களில் படிப்பினை பெறக்கூடிய கதைகளை கூறியவாறு தன்னுடைய மனைவி
மற்றும் குழந்தைகளுக்கு தர்பிய்யத் கொடுத்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் விருந்தினர்களின்
வருகை அதிகரித்ததை பார்த்து வீட்டில் உள்ளவர்களின் இக்கட்டான நிலையை உணர்ந்த ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) தன்னுடைய குடும்பத்தினருக்கு இந்த படிப்பினை பெறத்தக்க கதையை கூறினார்கள்:
ஹஸ்ரத் முஃப்தி முஹம்மது ஸாதிக் ஸாஹிப்
(ரலி) கூறுகிறார்கள்:
நான் 1901ஆம் ஆண்டு ஹிஜ்ரத்
செய்து காதியான் வந்தேன். என்னுடன் மனைவி மக்களையும் அழைத்து வந்தேன். ஒரு இரவில் நடந்த
சம்பவமாகும். சில விருந்தினர்கள் வந்தார்கள். அவர்களுக்கான தங்குவதற்கான ஏற்பாட்டை எவ்வாறு
செய்வது என வியப்புடன் ஹஸ்ரத் அம்மா ஜான் (ரலி) இருந்தார்கள். ஏனென்றால் முழு வீடும் நிறைந்து
காணப்படுகிறது. இவர்களை நான் எங்கு தங்க வைப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் விருந்தினர்களுக்கு கண்ணியம் அளிப்பது தொடர்பாக மனைவி சாஹிபாவிற்கு பறவைகளின்
கதையை கூறினார்கள். நான் அடுத்த அறையில் தான் இருந்தேன். மேலும் பழைய கால தோரணையால்
செய்யப்பட்ட கதவு என்பதால் உள்ளிருந்து பேசக்கூடிய ஓசையை எளிதாக கேட்க முடியும். அதனால்
முழு கதையும் என்னால் கேட்க முடிந்தது. அன்னார் கூறினார்கள்: ஒருமுறை காட்டில் ஒரு பயணி
பயணம் செய்தவாறு மாலை நேரத்தை அடைந்தான். இருள் நிறைந்த இரவாக இருந்தது. அருகில் எந்த
ஒரு கிராமமும் அவருக்கு தென்படவில்லை. யாருமில்லாத நிலையில் ஒரு மரத்தின் கீழ் அவன்
இரவைக் கழிப்பதற்காக அமர்ந்து விட்டான். அந்த மரத்தில் ஒரு பறவை கூடு இருந்தது. ஆண்
பறவை தன்னுடைய இணையான பெண் பறவையுடன் இந்த வழிப்போக்கன் நம்முடைய கூட்டின் கீழ் பூமியில்
அமர்ந்துள்ளான். இன்று இரவுஇவன் நம்முடைய விருந்தினர் ஆவான். அவனுக்கு விருந்தோம்பல்
செய்வது நம்முடைய கடமையாகும் என கூறியது. அதைக் கேட்ட பெண் பறவை அதை ஏற்றுக்கொண்டது.
மேலும் இரு பறவைகளும் குளிர்ந்த இரவாக உள்ளது. நம்முடைய இந்த விருந்தினருக்கு குளிர்
காய்வதற்கு தீயின் தேவை உள்ளது. நம்மிடத்தில் நம்முடைய கூட்டை தவிர வேறெதுவும் இல்லை.
அந்த கூட்டையே கீழே எறிந்து விடுவோம். அதிலுள்ள குச்சிகளை எரித்து அதன் மூலம் அந்த
பயணி குளிர்காய்ந்து கொள்ளட்டும் என்று ஆலோசனை செய்தவாறு அவ்வாறே செய்தது. கூட்டில்
உள்ள அனைத்து குச்சிகளையும் கீழே எறிந்துவிட்டது. அதை அந்த பயணி அருளாக கருதி அனைத்து
குச்சிகளையும் ஒன்று சேர்த்து தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டான்.மீண்டும் மரத்தில்
உள்ள பறவைகள் நாம் தீயையும் குளிர் காய்வதற்கான பொருளையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
தற்போது சாப்பிடுவதற்கும் நாம் ஏதாவது கொடுக்க வேண்டுமென ஆலோசனை செய்தவாறு நம்மிடத்தில்
அவருக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லாததால் நாமே தீயில் விழுந்து விடுவோம்,பயணி நம்முடைய இறைச்சியை வறுத்து உண்ணட்டும் என்று
கருதி அந்தப் பறவைகள் அவ்வாறே செய்து விருந்தோம்பலின் உரிமையை செலுத்தியது.
(ஸிக்ரேஹபீப்,
பக்கம் 85-87)
இதுவே ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிவுரை செய்யும் நடைமுறையாகும்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை)
அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் தான் குழந்தைகளை நேசித்தார்கள்.
ஹஸ்ரத் மவ்லானா அப்துல் கரீம்
ஸாஹிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் குழந்தைகளை எந்த அளவுக்கு கவனித்தும் வளர்த்தும் வந்தார்கள் என்றால் மேலோட்டமாகப்
பார்ப்பவர்கள் அன்னாரை விட வேறு யாருக்கும் குழந்தைகளின் மீது பாசம் இருக்க முடியாது
என கருதுவார்கள். குழந்தைகள் நோயுற்றால் அவர்களின் சிகிச்சையிலும், நலம் விசாரிப்பதிலும் எந்த அளவிற்கு கவனம் செலுத்துவார்கள்
என்றால் அன்னாருக்கு வேறு எதைப்பற்றியும் சிந்தனையே இல்லாத அளவுக்கு அதிலேயே மூழ்கி
விடுவார்கள். ஆனால் இவை அனைத்தும் அல்லாஹ்விற்காகத்தான் செய்கிறார்கள் என்பதை நுட்பமாக
பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். இறைவனுக்காக அவனுடைய பலவீனமான படைப்பினங்களுக்கு
ஒத்தாசை செய்வதும் கவனிப்பதுமே நோக்கமாகும். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் மூத்தமகள் இஸ்மத் பேகம் ஸாஹிபா லூதியானாவில் காலராவால்
நோயுற்று இருந்தபோது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் அந்த மகளில்லாமல் வாழ்க்கையே இல்லை
என்று எண்ணியவாறு அவருக்கு சிகிச்சை செய்தார்கள். ஒரு உலகவாதியாக குழந்தை மீது நேசம்
கொண்ட ஒருவர் இதைவிட அதிகமாக செயல்படவே முடியாது. ஆனால் அந்த மகள் மரணித்த பிறகு எவ்வாறு
விலகி இருந்தார்கள் என்றால் அப்படி ஒரு மகள் இருந்தாள் என்று அவர்கள் நினைவு கூறியதே
இல்லை.
இதே போன்று மிர்ஸா முபாரக் அஹ்மத் ஸாஹிப் அவர்கள்
நோயுற்ற இருந்த நாட்களில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும்
அவர்களை வளர்ப்பதில் நம்முடைய கடமைகள் என்ன என்பதை இரவும் பகலுமாக (அந்த மகனை கவனித்தவாறு) செயல்வடிவிலாக நமக்கு
வெளிப்படுத்தி காட்டியுள்ளார்கள்.
[சீரத்ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது
(அலை) ஷேக்யஃகூப் அலீஇர்ஃபானீஸாஹிப்எழுதியது]
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் குழந்தைகளின் தர்பிய்யத்திற்காக அவர்களுக்கு குழந்தை பருவத்திலேயே திருக்குர்ஆன்
கற்பித்தல், சிறுவயதில் திருக்குர்ஆன்
முடித்த பிறகு அவர்களுக்கான ஆமீன் நிகழ்ச்சி நடத்துவதற்கான சுன்னத்தையும் (நடைமுறையையும்)
தொடங்கி வைத்தார்கள். இதற்கேற்ப ஜமாஅத்தில் 1897 ஆம் ஆண்டிலிருந்து இந்த நடைமுறை தொடர்ந்தது. அதாவது
அன்னாரின் மகன் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் ஸாஹிப் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) திருக்குர்ஆன்
முழுவதுமாக ஓதி முடித்த பிறகு ஆமீன் நிகழ்ச்சி நடத்தினார்கள். அதற்காக வெளியிலிருந்தும்
அன்பர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பிரத்தியேகமாக விருந்தினர்களுக்கான
ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் அன்னார் (அலை) அச்சந்தர்ப்பத்தில் “மஹ்மூத் கி ஆமீன்”என்ற பிரசித்திபெற்ற கவிதையை எழுதினார்கள். அதனுடைய
முதல் இரண்டு வரிகள் இதுவாகும்:
மஹ்மூத் படித்து முடித்த
இந்த நாளை நீயே காண்பித்தாய்!
உள்ளம் இந்த கருணையைக்
கண்டு உன்னை புகழ்ந்து பாடியது!
நூற்றுக்கணக்கான நன்றி
உனக்கேஇறைவா! நூற்றுக்கணக்கான நன்றி உனக்கேஇறைவா!
இந்த நாளை அருளுக்குரியதாக
ஆக்குவாயாக. என்னை காண்கின்ற இறைவன் தூய்மையானவன்.
இந்த அருளுக்குரிய
சுன்னத்தின் விளைவாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஜமாஅத்தில் திருக்குர்ஆனின்
போதனை மற்றும் தர்பிய்யத்திற்கான புதிய வாசலைத் திறந்து விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாறான ஒரு தர்பிய்யத்திற்கான முக்கியமான கடமை நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
தற்போது நான் என்னுடைய
உரையின் இறுதியில் நம்முடைய வாழ்வில் தர்பிய்யத் தொடர்பாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களின் மகத்துவமான கூற்றை ஹஸ்ரத் அமீருல் முஃமினீன் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹு…….
அவர்கள் தன்னுடைய ஜுமுஆ உரையான
ஜூலை 2, 2004 ஆம் ஆண்டு ஆற்றிய
உரையிலிருந்து வாசித்து என்னுடைய உரையை முடிக்கின்றேன். ஹுஸூர் கூறுகிறார்கள்:
ஆண்களுக்கு தலைவர்
என்ற முறையில் (முத்தகி) இறையச்சமுடையவராக இருப்பதும் அவருடைய பொறுப்பாகும். மேலும்
ஒரு இறையச்சமுடையவர் குடும்பத்தலைவராக ஆகுவதற்கு சுயமே தொழுகையாளியாக இருக்க வேண்டும்.
இரவில் எழுந்திருங்கள் அல்லது குறைந்தது ஃபஜ்ர் தொழுகைக்காக கண்டிப்பாக எழுந்திருங்கள்.
தன்னுடைய மனைவி மக்களையும் எழுப்புங்கள். எந்த வீடு இறை வணக்கங்கள் செய்பவர்களால் நிறைந்து
காணப்படுமோ அவர்கள் இறைவனுடைய அருளையும் அவனிடமிருந்துநன்மையையும் பெறக் கூடியவர்களாக
இருப்பார்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் துஆவுடன் முயற்சி செய்யும் போதுதான் அந்த
முயற்சிஉங்களுக்கு பலன் தரக் கூடியதாகவும், வெற்றியை பெற்றுத் தரக் கூடியதாகவும் இருக்கும்.
வெறுமனே நிற்பதாலும் குனிவதாலும் மட்டுமல்ல. மாறாக உங்களுக்காகவும் உங்களுடைய மனைவி
மக்களுக்காகவும் தொடர்ந்து துஆச் செய்து கொண்டே இருங்கள். ஆதலால் தொழுகையிலும் தன்னுடைய
மனைவி மக்களுக்காக அதிகமாக துஆச் செய்யுங்கள்.
ஹஸ்ரத்மஸீஹ்மவ்வூது
(அலை) அவர்கள்கூறுகிறார்கள்:
அல்லாஹ் குர்ஆனில்
اصلح لي في ذريتي
அதாவது என்னுடைய மனைவி
மக்களை திருத்துவாயாக என்ற துஆவை கற்றுத் தந்துள்ளான். தன்னுடைய நிலைமையில் தூய மாற்றத்திற்காக
துஆ செய்வதுடன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காக துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஏனென்றால் அதிகமான சோதனைகள் மனைவி மற்றும் குழந்தைகளினால் தான் ஏற்படுகிறது. அதாவது
அவர்களினால்தான் அதிகமானோர் மீது துன்பங்களும் இன்னல்களும் கஷ்டங்களும் வருகின்றது. ஆகஅவர்களின்
சீர்திருத்தத்திற்காகவும் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்காக துஆவும்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.
(மல்ஃபூஸாத்,
தொகுதி 5, பக்கம்456,457)
மேலும் அன்னார் கூறுகிறார்கள்:
“நான் எவ்வாறு துஆ செய்கிறேன் என்பதில்
என்னுடைய வழிமுறை என்னவென்றால் நான் தினமும் விடாமல் தொடர்ச்சியாக சில துஆக்களை செய்கிறேன்.
முதலில் என்னுடைய நஃப்ஸுக்காக (ஆன்மாவிற்காக) துஆ செய்கிறேன். அல்லாஹ்வுடைய கண்ணியமும்
கம்பீரமும் வெளிப்படும் பணியை என்னிடமிருந்து அல்லாஹ் வாங்குவானாக. மேலும் தனது திருப்தியை
பெறும் முழுமையான நல்வாய்ப்பை வழங்குவானாக. இரண்டாவதாக எனது வீட்டில் உள்ளவர்களுக்காக,
அவர்களிடமிருந்து கண்களுக்கு
குளிர்ச்சி கிடைக்கவும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின் வழியில் நடக்கவும் துஆ செய்வேன்.
மூன்றாவதாக எனது குழந்தைகளுக்காக அவர்கள் அனைவரும் மார்க்கத்தின் தொண்டர்களாக ஆக வேண்டுமென
துஆ செய்வேன். நான்காவதாக என்னுடைய நல்ல நண்பர்களுக்காக ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு
துஆ செய்வேன். ஐந்தாவதாக இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் நாம் அவர்களை அறிந்தாலும்
அறியாவிட்டாலும் அவர்களுக்காக துஆ செய்வேன்.
(மல்ஃபூஸாத்,
தொகுதி 1,பக்கம் 309)
எல்லாம் வல்ல அல்லாஹ்
நம்மை உண்மையான முறையில் நம்முடைய உரிமைகளையும் கடமைகளையும் செலுத்துவதற்கான பாக்கியத்தை
தருவானாக. நம்முடைய மனைவி குழந்தைகள் மூலமாக நமக்கு மனநிறைவையும் கண்களுக்கு குளிர்ச்சியையும் அளிப்பானாக.
அல்லாஹ்வை வணங்க கூடியவர்களாகவும் நன்மையில் நிலை நிற்பவர்களாகவும் அவர்களை ஆக்குவாயாக.
(காதியான் ஆண்டு மாநாடு 2018 அன்று மௌலானா முனீர் அஹ்மது சாஹிப் காதிம் அவர்கள் ஆற்றிய உருது மொழி உரை)
(தமிழ் மொழியக்கம்: மௌலவி அபுல் ஹஸன் ஸாஹிப் ஆபிது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None