
இதன் பொருள் :- உமது இறைவன் ஆதமின் மக்களுடைய
முதுகிலிருந்து அவர்களின் சந்ததிகளை தோற்றுவித்து, அவர்களை தங்களுக்கே சாட்சியாக்கி நான் உங்கள் இறைவன்
அல்லவா? என்ற கேள்வியினைக்
கேட்ட போது அவர்கள் ஆம்! (இதற்கு) நாங்கள் சாட்சி கூறுகின்றோம் என்றனர். நாங்கள் இதை
(போதனை) ப்பற்றி அறவே அறியாதவர்களாயிருந்தோம் என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காகவே
(நாம் அவ்வாறு செய்தோம்)
(அதிகாரம் அல் அஃராஃப் வசனம் 173)
கூட்டத்தின் தலைவர் மற்றும் வருகையாளர்களே!
இறையிருப்பு அதாவது இறைவன் இருக்கின்றான்
என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும் மேலும் உயிருள்ள சாட்சியாகும் அது ஏதோவொரு
அச்சத்தினாலோ அல்லது ஆச்சரியத்தினாலோ உருவானதல்ல. ஒரு கவிஞர் மனிதயியல்பில் தெளிவில்லாத
ஓர் அச்சம் உள்ளது அந்த அச்சத்திற்கு யாரோயொருவர் இறைவன் என பெயர் வைத்து விட்டார்
எனக் கூறுகிறார்۔
இப்படிபட்ட சிந்தனைகள் உண்மையில்
அவநம்பிக்கை மற்றும் தனது பொறுப்புகளிலிருந்து விலகுவதை காட்டக் கூடியதாகும் இல்லையென்றால்
மனிதயியல்பு இப்படிபட்ட சிந்தனையை மறுக்கிறது. நான் ஆரம்பத்தில் ஓதிய திருக்குர்ஆன்
வசனத்தில் அல்லாஹ் தனது இருப்பின் அடையாளத்தை மனிதயியல்பில் வைத்திருப்பதாக என்று கூறுகின்றான்.
மனிதன் ஒரு மேலானவன் இருப்பதற்கு சுயமே சாட்சியாவான். அவனை படைத்தவனும், எஜமானனும் இறைவன் ஆவான் என்பது அவனுக்கு தெரியும்.
இந்த வகையில் இக்காலத்தில் இறைவனைப் பார்த்த,
இறைத்தூதராக தோன்றிய ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட் மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-
அல்லாஹ் தனது இருப்பிற்கான மற்றொரு ஆதாரத்தை திருக்குர்ஆனில்
கூறுகிறான்
أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى
அதாவது நான் ஆன்மாக்களிடம் நான்
உங்கள் இறைவன் அல்லவா? எனக் கேட்டேன். அதற்கு
ஏன் இல்லை என பதிலளித்தன.
(அஃராஃப் : 173)
இந்த வசனத்தில் இறைவன் மனித இயல்பில் அவன் வைத்துள்ள சிறப்பம்சத்தை
ஒரு கதை வடிவில் எடுத்துரைக்கின்றான். அது என்னவென்றால் எந்த ஆன்மாவும் இயல்பின் அடிபடையில்
இறைவனை மறுக்க முடியாது. நிராகரிப்பாளர்கள் தனது எண்ணத்தின் படி ஆதாரம் கிடைக்காததினால்
இறையிருப்பை மறுக்கிறார்கள் ஆனாலும் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு படைப்பாளன் இருக்கின்றான்
என்பதை ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக ஒருவனுக்கு உடலில் நோய் ஏற்பட்டால் இதற்கு காரணம்
எதுவும் இருக்காது என கருதக் கூடிய அறிவீனர் எவரும் இருக்கமாட்டார். உலகின் இந்த தொடர்
காரணகாரிய விதிக்கு உட்பட்டு செயல்படவில்லையென்றால் பிறகு குறிப்பிட்ட தேதியில் வெள்ளம்
ஏற்படும் அல்லது புயல் ஏற்படும். சூரிய சந்திர கிரகணம் ஏற்படும் அல்லது அந்த நோயாளி
குறிப்பிட்ட நேரத்தில் மரணித்து விடுவார் அல்லது குறிப்பிட்ட காலத்தில் அந்த நோயுடன்
மற்றொரு நோயும் உண்டாகும் என்று கணித்து கூறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். ஆக ஓர்
ஆராய்சியாளன் இறையிருப்பை மறுத்தாலும் நம்மைப் போன்று காரண காரிய செயல்முறையை கண்டறிய
முயற்சிக்கிறான் இந்த வகையில் அவனும் இறையிருப்பை ஒரு வகையில் ஏற்றுக்கொள்கிறான் ஆனால்
முழுமையாக ஏற்பதில்லை. இதனைத் தவிர ஏதாவது ஒருவகையில் இப்படிபட்ட நிராகரிப்பாளரை இந்த
உலக வாழ்க்கையின் சிந்தனையிலிருந்தும், எல்லா நாட்டங்களிலிருந்து அகற்றி மயங்கச்செய்து இறைவனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தால் மட்டும்
தான் இறையிருப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். இது உண்மையென பெரும் பெரும் ஞானிகள்
சாட்சி பகர்ந்துள்ளனர். ஆக இந்த நிலையைப்பற்றி தான் இந்த வசனம் கூறுகிறது இந்த வசனத்தின்
பொருள் இவ்வுலக வாழ்வின் கீழ் தரமான ஆசைகளில் மூழ்கியிருக்கும் வரை தான் இறையிருப்பை
மறுப்பார்கள் இல்லையென்றால் இயல்பில் இறையிருப்பை ஏற்றுக்கொள்ளும் தண்மைதான் இருக்கிறது.
(இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம், ரூஹானீ கஸாயின் தொகுதி 10, பக்கம் 371)
உண்மை என்னவென்றால் இறையிருப்பின்
மீது நம்பிக்கை ஏதோவொரு அச்சத்தினால் ஏற்பட்டதல்ல மேலும் சிலர் கருதுவதைப் போன்று இந்த
சிந்தனையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் என்பதும் கிடையாது மாறாக உலகில் பழங்காலத்தில் வாழ்ந்த சமுதாயாங்களில் கூட ஓர் இறைக்கொள்கையும் சிந்தனையும்
இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வகையில் உலகில் பழமையிலும் பழமை வாய்ந்த
சமுதாயங்களில் தற்போது வரை தொடர்ந்து வரக்கூடிய பழைய சமுதாயமாகிய மெக்சிக்கோ சமுதாயத்திலும்
இறையிருப்பிற்கான சிந்தனை இருக்கிறது அதன் பெயர் அவோனா வில்லோனா அதாவது அனைவரின் படைப்பாளன்
அனைவரின் ஆட்சியாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதாகும். ஆஃப்ரிக்காவின் பழங்கால மக்களின்
கொள்கையென்னவென்றால் நுட்பத்திலும் நுட்பமான, அனைவரின் படைப்பாளன் இருக்கின்றான் என நம்பிக்கை கொள்கின்றனர் அதனை நயோங்குமோ என்று
அழைக்கின்றார்கள். பாஹிகளும் இதே போன்ற கொள்கையை கொண்டுள்ளார்கள். கனடாவின் பழங்கால
மக்கள் ஓர் இறைவனை நம்புகிறார்கள். உலகை விட்டு தனித்திருந்த ஆஸ்திரேலியா பகுதியிலும்
அங்குள்ள மக்களில் அருண்டா என்ற கோத்திரம் வானத்தில் இருக்க கூடிய இறைவனை நம்புகிறார்கள்
அதனை அல்டிஜிரிய என்று அழைக்கிறார்கள். ஆஃப்ரிக்காவில் காட்டு வாசிகளின் ஒரு கோத்திரம்
அதனை ஸுளு என்று கூறுவார்கள் அவர்களும் அனைத்து உலகுக்கும் தந்தையாகிய மரணமில்லாத இறைவனை
நம்புகிறார்கள் அதற்கு அங்குலுன்லுங்குவிலு என்று பெயரிட்டுள்ளனர். இதேபோன்று இந்தியாவிலும்
பண்டையகால மக்கள் மத்தியிலும் ஓர் இறை கொள்கையிருந்து வந்தது ஆக உலகில் பழமையிலும்
பழமை வாய்ந்த சமுதாயங்களில் முற்றிலும் மனித இயல்பிற்கேற்பவே இறையிருப்பிற்கான எண்ணமும்
கொள்கையும் இருந்து வந்துள்ளது.. மேலும் மிகவும் கஷ்டமான நேரம் வரும்போது அல்லது மனிதனுக்கு
தனது மரணம் கண் முன் தெரியும்போது அவன் நாத்தீகனாக இருந்தாலும் மனித இயல்பின் அடிப்படையில்
தன்னையும் அறியாமல் ராம் ராம் அல்லது அல்லாஹ் அல்லாஹ் எனறு கூப்பிட தொடங்கிவிடுகின்றான்.
சகோதரர்களே! இறைவன் திருக்குர்ஆனில் தனது இருப்பிற்கான
ஆதாரத்தை இவ்வாறு விளக்குகிறான்
أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
அதாவது வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய
அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொள்கின்றீர்களா? (அதிகாரம் இப்ராஹீம்:11) வானம் பூமி ஆகியவற்றின் படைப்பு தானாக உருவாகிவிடவில்லை
மாறாக ஒரு குறிப்பிட்ட திட்டம், ஒழுங்கு மற்றும் அமைப்பின்
கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் இறைவன் அதனை படைத்திருக்கின்றான் அவனைப் பற்றி சந்தேகம்
கொள்வதற்கு எந்த வாய்ப்புமில்லை. இந்த விஷயத்தை கல்வியறிவு இல்லாத பாமரணும் கூட அறிகின்றான்.
கூறுகிறார்கள் ஒரு கல்வியறிவில்லாத அரபியிடம் ஒரு தத்துவவாதி இறைவன் இருக்கின்றான்
என்பதற்கு உன்னிடத்தில் என்ன சான்று உள்ளது எனக் கேட்டார் அதற்கு அவன் உடனடியாக அதாவது
காட்டில் சாணம் கிடப்பதை பார்த்து ஒட்டகத்தை அறியமுடியுமென்றால், காலடி தடத்தை வைத்து சென்றதற்கான அடையாளத்தை அறிய
முடியுமென்றால், நட்சத்திரங்களை கொண்ட
வானமும், பாதைகளைக் கொண்ட பூமியையும்
பார்த்து இதனைப் படைத்த ஓர் இறைவன் இருக்கின்றான் என்று எப்படி நம்பிக்கை கொள்ளாமல்
இருக்க முடியும்? என்று கூறினான்.
ஆக உலக படைப்பு மட்டுமல்ல
மாறாக அதனது மாற்றமில்லாத அமைப்பும் இறையிருப்பிற்கு மிக வலுவான சான்றாகும். ஏனென்றால்
நமது பூமி மாறாக நமது சூரிய அமைப்பு எவ்வாறு முழுமையானதும், ஒருங்கமைக்கப் பட்டதும் மாறாததும் என்றால் அதன்
ஒரு நொடியின் ஆயிரமாவது பங்கில் கூட மாற்றம் ஏற்படாது. இவ்வாறு ஒரு சூரிய குடும்பம்
மட்டுமல்ல மாறாக இன்றைய அறிவியல் அறிஞர்கள் நூற்றுக்கணக்கான விண்மீன் கூட்டங்கள் இருப்பதாக
கண்டறிந்துள்ளனர் மேலும் அவை அனைத்தும் ஓர் ஒருங்கமைக்கப்பட்ட பாதையில் இயங்கி கொண்டிருக்கிறது
மாறாக நிலையான சட்டம் மற்றும் பிரித்து வழங்கப்பட்ட செயல்களின் அடிப்படையின் கீழ் இயங்குகின்றன.
இவை அனைத்தும் ஏதோ திடீரென்று உருவானதல்ல மாறாக ஓர் உயர் சிந்தனைகொண்ட ஓர் ஆற்றலின்
படைப்புகளேயாகும் எனபதை நிரூபிக்கக் கூடியதாகும்.
சய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் தனது
நூல் இஸ்லாமிய போதனைகளின் தத்துவஞானம் ரூஹானீ கஸாயின் தொகுதி 10, பக்கம் 370 ல் கூறுகின்றார்கள்:-
|لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ
وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُون
அதாவது சூரியன் நிலவை நெருங்க
முடியாது, இரவால் பகலை முந்தவும்
முடியாது அதாவது அவையெல்லாம் ஒரு சுற்று வட்டப்பாதையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. (அதிகாரம் யாஸீன் :41) அவற்றிற்கு திரைக்குப் பின்னால் ஓர் வழிநடத்தக் கூடியவன் இல்லையென்றால் அதன் இயக்கங்கள்
சீர்குழைந்து விடும். இது விண்ணியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் பலனளிக்கூடியாதாகும் ஏனென்றால்
விண்ணில் பெரிய பெரிய எண்ணிலடங்கா கோள்கள் உள்ளன அவை சற்று சீர்குழைந்தாலும் அனைத்துலகமும்
அழிந்து போய்விடும். இது பரஸ்பரம் மோதுவதுமில்லை, நூலளவு கூட தனது வேகத்தை மாற்றுவதுமில்லை இவ்வளவு
காலம் செயல்பட்டதனால் தேய்ந்து போவதுவுமில்லை, அவற்றின் பாதையில் எந்த மாற்றமும் ஏற்படுவதுமில்லை
அது எப்படிபட்ட அற்புதமான வல்லமை என்று பாருங்கள். அதன் இயக்கத்தில் எந்தவித கண்காணிப்பாளரும்
இல்லையென்றால் நீண்டகாலமாக இவ்வளவு பெரிய உலகம் எவ்வாறு செயல்படமுடியும். இதன் ஞானத்தை
விளக்கியவாறு இறைவன் மற்றொரு இடத்தில் கூறுகின்றான்.
أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
அதாவது
வானம் பூமியைப் படைத்த இறைவனது இருப்பிலா சந்தேகம் கொள்கிறீர்கள். (அதிகாரம் இப்ராஹீம் :11)
சகோதரர்களே!
மனிதன் தனது படைப்பினைப் பற்றி சிந்தித்துப்
பார்த்தால் இறையிருப்பு கொள்கையின் அடிப்பட அவனது இயல்பிலேயே வைக்கப்பட்டுள்ளதை உணரமுடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்
وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ و فِي أَنْفُسِكُمْ أَفَلَا تُبْصِرُون
அதாவது நம்பிக்கை கொண்டவருக்கு பூமியில் பல அடையாளங்கள்
உள்ளன மேலும் உங்களிடமும் பல அடையாளங்கள் உள்ளன
நீங்கள் அதை பார்ப்பதில்லையா? (அதிகாரம் ஸாரியாத் : 51.22)
மனிதன் தனிமையில் அமர்ந்து தான் எவ்வாறு படைக்கப்பட்டோம் என அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் அவன் சுயம் தானே உருவாகவில்லை
அவனைப் படைத்த மற்றொரு ஆற்றல் அவனையன்றி இருக்கிறது என்பதை அவனால் உணரமுடியும். இது
அவர்களது பெற்றோர்களினாலும் இயலாத காரியம் ஏனென்றால் எந்த விஷயம் அவனது விஷயத்தில்
உண்மையோ அதுவே அவனது பெற்றோர் விசயத்திலும் உண்மையாகும். ஆக மனிதனே இறையிருப்பிற்கு
மிகப் பெரிய சாட்சியாவான்.
அக்பர் ஆலாஆபாதி கூறுகிறார்:- எனது இருப்பே இறையிருப்பிற்கு
சாட்சியாகும் இது வாழ்நாள் முழுவதும் மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும்.
மனிதப்படைப்பும் அவனது உடலைமைப்பும்
ஓர் அற்புதமாகும். ஏனென்றால் ஒரு துளி விந்து அல்லது ஸபர்ம் மற்றொரு விந்து துளியுடன்
அதாவது பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து தனது வளர்ச்சியின் காலத்தை இருள் நிறைந்த கற்பபையில்
துவங்கி பின்னர் கற்பபையின் குறுகலான உலகிலிருந்து வெளிவுலகிற்கு வந்து எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதை பார்க்கும்போது
அது மிகவும் ஆச்சரியத்திற்குரிய உண்மையாக இருக்கிறது. அது எந்தளவு நுண்ணியது என்றால்
நுண்நோக்கி மூலமாக மட்டுமே அதை பார்க்கமுடியுமே தவிர சாதாரணமாக காணயிலாது, அது தனக்குள் மனிதனின் அனைத்து உறுப்புகளையும் கொண்டுள்ளது.
மேலும் மனிதனின் உறுப்புகள் மிகவும் சிக்கலானவை அவை உலகின் மிகவும் சிக்கலான இயந்திரத்தையும்
தோற்கடித்து விடும். மேலும் மனித மூளைக்கு நிகரான எந்த இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்
படவுமில்லை கண்டுபிடிக்கப்பட போவதுமில்லை ஏனென்றால் இது சிந்திப்பதற்காக அசாதாரண ஆற்றலினால்
படைக்கப்பட்டதாகும். இதன் காரணமாக மனிதன் முன்னேற்றத்தின் உச்சத்தை கடந்தவாறு இன்று
நிலவு மற்றும் ஏனைய கிரகங்களில் தனது பயணத்தை அமைத்து கொண்டிருக்கின்றான். மேலும் அணுவை
உடைத்து அதன் எல்லையற்ற ஆற்றலுக்கு உரிமையாளனாகி கொண்டிருக்கின்றான். ஆக மனிதனின் படைப்பு
அவனது உடல், அதன் செயல்பாடுகள்
மிகவும் வித்தியாசமான ஆற்றல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன, இது மனிதப்படைப்பில் மட்டுமல்ல மாறாக ஏனைய உயிரினங்களின்
படைப்பை பற்றி சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரினமிடமும் அதன் தகுதிக்கேற்ப ஆற்றல்
வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் உணரமுடியும். இது ஏதோ எதார்த்தினால் உருவானது அல்ல
மாறாக இது வல்லமை படைத்த இறைவனின் செயல்பாட்டின் ஞானம் மற்றும் சிந்தனையின் விளைவால்
நிகழ்ந்ததாகும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆனின் அதிகாரம் தாஹாவின்
வசனம் 51 எழுதியவாறு கூறுகிறார்கள்:-
رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ
هَدَى
அதாவது ஒவ்வொன்றிற்கும் உரிய வடிவம் கொடுத்து அவற்றை சரிவர செயல்பட வழிகாட்டியவனே
இறைவனாவான். இந்த வசனத்தின் கருத்தை வைத்து மனித படைப்பிலிருந்து நீர் வாழ் நிலம் வாழ்
உயிரினங்களின் படைப்பை பார்த்தோமென்றால் இறைவனுடைய வல்லமை என்ன என்பதை நம்மால் உணர
முடியும். ஒவ்வொன்றின் தோற்றமும் அதற்காகவே படைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். கல்வியறிவு படைத்தவர்கள்
சுயமே சிந்தித்து பாருங்கள் இது மிகவும் நீண்ட கட்டுரையாகும்.
(இஸ்லாமிய போதனைகளின்
தத்துவஞானம்)
ஆக உண்மையென்னவென்றால் மண்ணின் துகள்களையோ
அல்லது வளிமண்டலத்திலுள்ள பெரிய பெரிய கிரகங்களையோ பாருங்கள் அந்த இரண்டின் உண்மையும்
மனிதனுக்கு தெளிவாகிவிட்டால் பிறகு ஆச்சரியத்தின் உலகில் மூழ்கிவிடுகின்றான் மேலும்
இவையனைத்தும் தாமாக உருவாகவில்லை மாறாக இவற்றை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என
தன்னையும் அறியாமல் கூற ஆரம்பித்துவிடுவர்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் எவ்வளவு
அழகாக கூறுகிறார்கள்:-
ஒவ்வொரு துகளிலும் ஒரு சிறப்பை வைத்துள்ளாயே ஆச்சரியமாய்!
இந்த இரகசியத்தின் உலகை பார்ப்பவர் யாரேனும் உள்ளனரா ? நாலாபுரமும் உனது வல்லமையின் தோற்றமே தென்படுகிறது,
எனது அன்பனே! எந்தப்பக்கம்
பார்த்தாலும் அதுவே உன்னைப் காணும் வழியாகவே உள்ளது.
(துர்ரே ஸமீன்)
சகோதரர்களே!
இறைவன் இருக்கின்றான் என்றால் காட்டுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறேம் என சிலர்
ஆட்சேபனை செய்கின்றனர். இவ்வாறு கேட்பது சிறுபிள்ளைதனமானதும் அறிவற்ற கேள்வியும் ஆகும்
ஏனென்றால் இறைவன் பௌதீகமான பொருள் ஒன்றுமல்ல மாறாக அவன் நுட்பத்திலும் நுட்பமானவனாவான்.
அவனை புறக்கண் காணாது. உலகில் பல வெளிப்படையான பொருட்கள் உள்ளன ஆனால் அவற்றில் சிலவற்றை
நுகர்வதன் மூலமாகவும், சிலவற்றை சுவைப்பதன்
மூலமாகவும், சிலவற்றை தொடுவதன்
மூலமாகவும் உணரமுடிகிறது, உதாரணமாக ஒருவர் ரோஜாவின்
நறுமணத்தை காட்டுங்கள் என்று கூறினாலோ அல்லது அழகிய குரலை காட்டுங்கள் என்று கூறினாலோ
அவரை நாம் அறிவற்றவர் எனக்கூறுவோம் ஏனென்றால் ஒவ்வொரு பொருளையும் புறக்கண்ணால் காணமுடியாது
இன்னும் கூறுவதென்றால் சில விஷயங்களை ஐம்புலன்களாலும் உணரமுடியாது உதாரணமாக ஒருவருக்கு
கோபம் வந்தாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ அது நமக்கு புறக்கண்ணால் தெரியாது மேலும் ஐம்புலன்களைக்
கொண்டு நமக்கு காட்டவும் முடியாது ஆனால் அதனுடைய விளைவுகள் மூலமாக அவருக்கு வலியுள்ளது
என நம்மால் உணரமுடியும். ஆக அல்லாஹ்வின் இருப்பும் பௌதீகப் பொருள் ஒன்றும் அல்ல மாறாக
நுட்பத்திலும் நுட்பமானதாகும் அதை புறக்கண்ணால் காணமுடியாது.
இது தொடர்பாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:-
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ
الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
(அதிகாரம் அன்ஆம்:104) அரபியில் அப்ஸார் என்பதன் பொருள் அறிவு என்பதாகும். இந்த வகையில் இந்த வசனத்தின்
பொருள் உங்களால் இறைவனை புறக்கண்களால் காணமுடியாது ஆனால் தனது அறிவு மற்றும் சிந்தனையின்
மூலம் அவனை பார்க்கவும் உணரவும் செய்யலாம். இரும்பின் மீது காந்தத்தின் தாக்கம் ஏற்படுவதினால்
எவ்வாறு காந்ததினை நம்மால் பார்க்க முடிகின்றதோ அதைப்போன்று அல்லாஹ் உங்கள் மீது தனது தாக்கத்தை வெளிப்படுத்தும்
போது இறைவனது தாக்கத்தினால் அவனை உங்களால் அறியமுடியும்.
சகோதரர்களே!
இங்கு இறைவனின் தாக்கத்தை எவ்வாறு உணரமுடியும் என்ற கேள்வி உருவாகிறது. இதற்கு
நாம் பதிலாக உலகில் ஒன்றல்ல இரண்டல்ல மாறாக ஒரு ஹதீஸின் படி ஓர் இலட்சத்து இருபத்தினான்காயிரம்
நபிமார்கள் எங்களது தொடர்பு இறைவனுடன் உள்ளது என சாட்சி கூறியுள்ளனர் அவர்களை நாம்
ஆதாரமாக கூறலாம். இவர்கள் ஒரு நண்பர் தம்முடன் பேசுவதைப் போன்று இறைவன் எங்களுடன் உரையாடுகின்றான்,
எங்களுக்கு மறைவான செய்தியை
பற்றிய தெரிவிக்கின்றான், தான் உயிருடன் இருப்பதற்கான
சான்றுகளை தருகின்றான் எனக் கூறுகின்றனர். இந்த சாட்சி கூறக்கூடியவர்கள் எந்தளவு தூய்மை
மற்றும் குறைகளிலிருந்து பரிசுத்தமானவர்கள் என்றால் இவர்களை விட சிறந்த நடத்தை கொண்ட
மனிதர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்.
திருக்குர்ஆன் ஹஸ்ரத் ஸாலிஹ் (அலை) அவர்கள் தொடர்பாக
கூறுகிறது:-
يَا صَالِحُ قَدْ كُنْتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَذَ
ஸாலிஹே! உம்மிடத்தில் நாங்கள் மிகவும் நம்பிக்கை
வைத்திருந்தோம் ஆனால் தற்போது உமக்கு என்னவாயிற்று? (அதிகாரம் ஹூது :64)
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின்
மிகப்பெரிய எதிரியாகிய ஃபிர்அவ்னுக்கும் கூட அன்னார் மீது பொய் குற்றச்சாட்டை கூறுவதற்கு
தைரியம் வரவில்லை. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் என்மீது ஏதேனும் குறையிருந்தால் கூறுங்கள்
என்றார்கள். அதேபோன்று நமது அன்பிற்குரிய தலைவர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் தொடர்பாக
திருக்குர்ஆன் எதிரிகளை நோக்கி இந்த ஆதாரத்தை எடுத்துவைக்கின்றது அதாவது
فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا
تَعْقِلُونَ
நபியே (ஸல்) அவர்களே ! நீங்கள் உங்கள் பகைவர்களிடம் நான் உங்கள் மத்தியில்
ஒரு நீண்ட காலம் வாழ்ந்துள்ளேனே இருந்தும்
நீங்கள் என்னைப் பற்றி யோசிக்காமல் எனது வாதத்தை பொய்ப்படுத்துகின்றீர்களா?
எனக் கூறுவீராக. (அதிகாரம் யூனுஸ் : 17) நான் நபிக்கான
வாதம் செய்வதற்கு முன்பு நீங்கள் என்னை ஸுதூக், அமீன் என அழைத்து வந்தீர்களே! எனது குற்றமில்லா
வாழ்க்கைக்கு சாட்சியாக இருந்தீர்களே! நான் சமூகத்தில் எவரிடமும் பொய் கூறாதிருக்க,
எவரையும் ஏமாற்றாதிருக்க தற்போது
திடீரென்று மனிதர்களை விட்டுவிட்டு இறையிருப்பு தொடர்பாக நான் எவ்வாறு பொய் கூறியிருக்க
முடியுமா? எனக் கூறுவீராக! இதற்கு
பகைவர்கள் ஒன்றுகூடி முஹம்மது (ஸல்) அவர்களே! இன்னா லா நுகஸ்திபுக வலாகின் நுகஸ்திபு
மா ஜிஃத பிஹி. அதாவது நாங்கள் உம்மை பொய்யர்
என்று கூறவில்லை மாறாக நீர் கொண்டுவந்த போதனையை தான் பொய் எனக்கூறுகிறோம் என்றனர்.
இதனைப்போன்று இக்காலத்தின் சீர்திருத்தவாதி சய்யிதுனா
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது எதிரிகளிடம் தனது பரிசுத்த வாழ்கை
தொடர்பாக சவால் விடுத்தவாறு கூறுகிறார்கள்:-
எவர் பொய் மற்றும் ஏமாற்றுதல்களை வழக்கமாக
வைத்துள்ளாரோ அவர் இந்த பொய்யையும் சொல்லியிருப்பார் என நீங்கள் கருதலாம் ஆனால் உங்களால்
எனது முன்னாள் வாழ்கையில் நான் எவ்வித இட்டுக்கட்டுதலையோ,
பொய்யையோ, ஏமாற்றுதலையோ செய்ததாக என்மீது உங்களால் குற்றம்
சாட்ட முடியாது. உங்களில் யாராவது எனது வாழ்கையில் ஏதாவது குறையை எடுத்துக் கூற முடியுமா?
ஆக இது இறைவனது அருளாகும்
அவன் ஆரம்பத்திலிருந்தே என்னை இறையச்சத்தில் நிலைபெற செய்துள்ளான். இது சிந்தனை செய்பவருக்கு
ஓர் ஆதாரமாகும்.
(தஸ்க்கிரத்துஷ் ஷஹாததைன் பக்கம் 62)
சகோதரர்களே! உலகில் பெரும்பான்மையான முடிவுகள் சாட்சியின் அடிபடையில் தான் வழங்கப்படுகின்றன.
இது வெறும் வழக்குகளில் மட்டுமல்ல மாறாக உறுதியாக நமபக்கூடிய அனைத்து அறிவுகளிலும்
அது மருத்துவமாக இருந்தாலும், விண்ணியலாக இருந்தாலும்,
வேதியியலாக இருந்தாலும், பொறியியல் துறையாக இருந்தாலும் சரி அந்த அனைத்திலும்
தனது சொந்த அனுபவம் அல்லது பார்ப்பதன் மூலமாக அது ஏற்கப்படுவதில்லை மாறாக பெரும்பான்மையான பகுதி சாட்சியங்களை கொண்டே நம்பப்ப்படுகின்றன.
ஏனென்றால் சிலர் அது தொடர்பாக ஆய்வு செய்திருப்பார்கள் மற்றவர்கள் அந்த ஆய்வினை தனது
அடிபடையாக அமைத்துக் கொள்வார்கள். இதே நிலைதான் இறையிருப்பு தொடர்பான ஆதாரத்திலும்
உள்ளது. உலகில் எந்தளவு நபிமார்கள், ரிஷிகள், முனிவர்கள் அவதாரங்கள்
வந்துள்ளார்களோ அவர்களின் வாழ்கை எல்லாவித சந்தேகத்திலிருந்தும் உயர்ந்ததாக இருந்தது,
அவர்கள் நல்லவர்களாக இருந்தார்கள்
என அவர்களின் எதிரிகள் கூட கூறுகின்றனர். அவர்கள் இவ்வுலகின் படைப்பாளனாகிய,
எஜமானனாகிய ஓர் இறைவன் இருக்கின்றான்
அவனுடன் எங்களுக்கு தொடர்பு இருக்கிறது, நாங்கள் அவனை பார்க்கின்றோம் என சாட்சி பகர்ந்துள்ளனர். இந்த வகையில் இக்காலத்தின்
இறைவன் புறமிருந்து வந்த ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
அனைத்திலும் வல்லமை கொண்ட அவனுடைய ஓர் இறைவன் இருக்கின்றான்
என்பதை அறியாத மனிதன் தீயவன் ஆவான். நமது சொர்க்கம் நமது இறைவன் ஆவான், நமது பேரின்பம் நமது இறைவனிடத்தில் உள்ளது,
நாம் அவனை கண்டுள்ளோம் அனைத்து
அழகும் அவனிடம் உள்ளது. இந்த செல்வம் உயிரை கொடுத்தாயினும் பெறதக்கதாகும். இந்த மாணிக்கம் தன்னை முற்றிலும்
இழந்தாயினும் பெறத்தக்கதாகும்.
(கிஷ்தீ நூஹ் ரூஹானீ கஸாயின் தொகுதி 19, பக்கம் 21,22)
சகோதரர்களே!
திருக்குர்ஆன் இது தொடர்பாகவே இறையிருப்பு பற்றி மற்றொரு ஆதாரத்தையும் வழங்கியுள்ளது அது
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ
اللَّهَ قَوِيٌّ عَزِيز
அல்லாஹ்
நானும் எனது நபிமார்களும் வெற்றி பெறுவோம் என நிர்ணயித்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ்
ஆற்றல் பெற்றவனும் வெற்றியாளனும் ஆவான். (அதிகாரம் அல்முஜாதிலா வசனம் 22)
இங்கு பாருங்கள் ஒருபுறம் அல்லாஹ்
தனது நபிமார்கள் வெற்றி பெறுவார்கள் என அறிவிக்கிறான் ஆனால் மறுபுறம் அவனது நடைமுறை
அரசர்களையோ அல்லது வலிமை பெற்றவர்களையோ அவன் நபியாக்குவதில்லை ஒரு சிலரைத் தவிர......இல்லா
மாஷா அல்லாஹ் ..அவன் பொதுவாக ஏழைகளாகவும், பலவீனமாக இருக்கக் கூடியவர்களையே நபியாக்குகிறான். அவர்களிடம் எந்த படையும் இருப்பதில்லை,
ஆயுதமும் இருப்பதில்லை,
செல்வமும் இருப்பதில்லை,
பெருங்கூட்டமும் இருப்பதில்லை
இப்படிபட்ட பலவீனர்களை கொண்டு வலிமை பெற்ற தனது எதிரிகள் மீது வெற்றியினை வழங்கி நானும்
எனது நபிமார்களும் வெற்றி பெறுவோம் என்பதை நிரூபிக்கின்றான். இது முற்றிலும் சரியானதும்
உண்மையானதுமாகும்.
நபிமார்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால் அல்லாஹ்
வெளிப்படையில் ஏழ்மை, இயலாத நிலை மற்றும்
பவீனமான நிலையிருந்தும் கூட இராவணனுக்கு எதிரில் ஸ்ரீராமர் மஹாராஜ் அவர்களுக்கும்,
ராஜா கன்ஸ் மற்றும் கவ்ரவர்களுக்கு
எதிரில் ஸ்ரீகிருஷ்ணர் மஹாராஜ் அவர்களுக்கும் எவ்வாறு வெற்றியினை வழங்கியுள்ளான் என்று
பாருங்கள். மேலும் நமது அன்பிற்குரிய தலைவர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் எந்த
நிலையில் அரபு நாட்டை வெற்றி கொண்டு ஏகத்துவத்தை வெற்றிபெறச் செய்து காட்டினார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறையுதவி இல்லாமல் சுயமே இந்த வெற்றியை பெற்றிருக்க
முடியும் என்று யாரால் கூறமுடியும்?. தொலைவில் சென்று ஏன் பார்க்கின்றீர்கள்? இந்த புனித பூமி காதியானில்
அல்லாஹ் தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்களை தோற்றுவித்தான்.
அன்னார் தனது ஆதாரவற்ற நிலையை இந்த கவிதை வரியில்
கூறுகின்றார்கள்:-
நான் ஏழையாகவும், ஆதரவற்றவனாகவும், அறியப்படாதவனாகவும், ஆற்றல் அற்றவனாகவும் இருந்தேன். காதியான் எங்கு
உள்ளது என யாருக்கும் தெரியாமல் இருந்தது. மக்களுக்கு இதன் பக்கம் சிறிதும் கவனமில்லாமல்
இருந்தது. என்னைப்பற்றியும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது இது உலகமே திரும்பும்
இடமாக மாறியுள்ளதைப் பாருங்கள். மக்கள் மீண்டும் மீண்டும் வரக்கூடிய இடமாக இந்த காதியான்
உருவாகியுள்ளதை பாருங்கள்.
ஒருபுறம் அன்னாரின் மிகப்பெரிய எதிரியான
முஹம்மது ஹுஸைன் பட்டாலுவி அன்னாரது மஸீஹ்கான வாததிற்கு எதிராக அனைத்து ஆலிம்களையும்
தூண்டிவிட்டார் மிகவும் மோசமாக பகைமையின் புயலை உருவாக்கினார். மறுபுறம் ஆங்கிலேய அரசும்
மஹ்தி தொடர்பான தவறான கண்ணோட்டத்தால் தீய எண்ணம் கொண்டிருந்தது. இவ்வகையில் நாலாபுரமும்
எதிர்ப்பு உருவானது. மவ்லவிகள் தன்புறமிருந்து எந்தளவு முயற்சி செய்யமுடியுமோ செய்தார்கள்
தற்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களும் பகைமையில் எந்த குறையும் வைக்கவில்லை
ஆனால் இறைவன் லஅக்லிபன்ன அனா வருஸுலீ நானும் எனது நபிமார்களும் வெற்றி பெறுவோம் எனக்
கூறியுள்ளான் ஆக அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிக்கேற்ப உலகம் மற்றும் அரசின் எதிர்ப்புகள்
என்னவாயிற்று? அவை அனைத்தும் தோல்வியும்
இழிவடைந்தும் போயின. அஹ்மதியத்தின் படை முன்னேற்றத்தின் பாதையில் வீறு கொண்டு செல்கிறது.
அஹ்மதியத்தின் எதிரிகள் உண்மை மற்றும் சத்தியத்தின் குரலை காதியான் என்ற சிறு கிராமத்தை
விட்டு வெளியே செல்லவிடாமல் தடுக்க உறுதிபூண்டிருந்தனர். ஆனால் இந்த குரல் பஞ்சாப்,
இந்தியாவில் மட்டும் பரவவில்லை
மாறாக இன்று உலகில் 212 நாடுகளில் அஹ்மதியத்தின்
உறுதியான மிஷன்கள் நிறுவப்பட்டு விட்டன. முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களின் நான் உனது தூது செய்தியை உலகின் எல்லை வரை எட்ட வைப்பேன் என்ற
இல்ஹாமின் வெற்றியை முழங்கி கொண்டிருக்கிறது.
அஹ்மதிய்யா ஜமாஅத்தின் அனுதின வெற்றியையும், எதிரிகளின் தோல்விகளையும் பார்த்தவாறு சய்யது அபுல்ஆலா
மவ்தூதி ஸாஹிபின் தர்ஜுமானுல் குர்ஆனுவுடைய பத்திரிக்கை ஆசிரியர் எழுதுகிறார்:-
.....நான் மிர்ஸா சாஹிபின் தொடர் வெற்றியை பார்க்கின்றேன் அதே சமயம் நான் மிர்ஸா சாஹிபின்
எதிரிகளின் தோல்வியை பார்க்கின்றேன் அது எண்ணிலடங்கா வண்ணம் இருப்பதை என்னால் பார்க்க
முடிகிறது. இது ஏன்? ஒருவர் இறைவன் மற்றும்
அவனது நபிக்கு எதிராக நிற்கிறார் மேலும் அவர் அந்த நபியை பின்பற்றக் கூடியவரிடம் நீங்கள்
அனைவரும் ஒன்றிணைந்து எனது வருகையின் நோக்கத்தை தடுக்கமுடியாது ஏனென்றால் இறைவனது ஆதரவு
என்னுடன் இருக்கிறது என்னை எதிர்பதற்காக நீங்கள் எப்போது முயன்றாலும் ஒவ்வொரு முறையும்
இழிவும் தோல்வியுமே உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறுகிறார். மேலும் இதனை தான் நபியானதற்கு
மிகப்பெரிய ஆதாரம் என்றும் கூறுகிறார். நாம் இவ்வாறு நடப்பதையே பார்க்கின்றோம். மிர்ஸாயிகளுக்கு
மறைவிலிருந்து பாதுக்காப்பிற்கான ஏற்பாடு கிடைக்கின்றது. .....மறுபுறம் மிர்ஸாயிகளின்
பகைவர்களின் அழிவிற்கான ஏற்பாடும் மறைவிலிருந்தே உருவாகிறது. ....கொஞ்சம் உண்மை நபியின்
கத்தமே நுபுவ்வத்தை பாதுக்காக்க கூடியவர்களின் தோல்வி மற்றும் அழிவினை பாருங்கள். மிகவும்
ஆரவாரத்துடன் தனது இயக்கத்தை தொடங்கினார்கள்
ஆனால் எவ்வாறு முற்றிலுமாக அழிந்துபோனார்கள் என்பதை பாருங்கள்.
(ரிஸாலா
தர்ஜுமானுல் குர்ஆன் ஆகஸ்டு 1934, பக்கம் 57,58)
ஆக அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வெற்றியும்
அஹமதிய்யத்தின் பகைவர்கள் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளுதலும்
நிச்சயமாக இந்த அகிலத்தின் படைப்பாளனான, மகத்தான வல்லமை கொண்டவனான ஓர் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபிக்கிறது. அவன்
எப்போதும் தனது நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களுக்கு பகைவர்களுக்கு எதிரில் வெற்றியினை
வழங்கி தனது வாக்குறுதி
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ
اللَّهَ قَوِيٌّ عَزِيز
அதாவது நானும் எனது நபிமார்களும் வெற்றி பெறுவோம்
என்பதனை நிரூபித்து இக்காலத்திலும் தனது இருப்பிற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளான்.
இறைவனது ஆதரவு மற்றும் உதவியின் மீது நம்பிக்கை வைத்தவாறு அஹ்மதிய்யா ஜமாஅத்தின்
தோற்றுனர் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் உண்மையில் இருக்கின்றேன் என்று உறுதியாகவும், வாதமாகவும் கூறுகின்றேன். இறையருளால் இந்த களத்தில்
எனக்கு தான் வெற்றி கிடைக்கும். நான் முழு உலகும் எனது உண்மையின் கீழ் வருவதை தொலைநோக்கு
பார்வையில் பார்க்கின்றேன். மேலும் மிக விரைவில் நான் மிகப் பெரிய வெற்றியை அடைவேன்
ஏனென்றால் எனது நாவின் ஆதரவில் மற்றொரு நாவு பேசுகிறது. எனது கையை வலுபடுத்த மற்றொரு
கை செயல்படுகிறது அதனை உலகம் பார்ப்பதில்லை ஆனால் நான் பார்க்கின்றேன்.
(இஸாலாஹ் அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3,
பக்கம் 403).
வ ஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
(காதியான் ஆண்டு மாநாடு 2018 அன்று மதிப்பிற்குரிய ஜனாப் மௌலானா கரீமுத்தீன் சாஹிப் அவர்கள் ஆற்றிய உர்து மொழி சொற்பொழிவு;
தமிழாக்கம் ஜனாப் மௌலவி N. ஜியாவுல் ஹக்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None