(முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யாவில் ஒளிபரப்பாகின்ற, அரபு
மொழி பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சி “லிகா மஅல் அரபு”
இந்நிகழ்ச்சியில் அரபுமொழி பேஉம் மக்களின் கேள்விகளுக்கு ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ்
அவர்கள் பதிலளிக்கின்றார்கள். 30-10-1994 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “கப்ர் தண்டனை
என்பது என்ன?” என ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர்கள் தந்த பதில்)
முதலாவதாக “கப்ர்” என்ற சொல்லை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான்
கப்ர் தண்டனையின் உண்மையான கருத்தை நம்மால் சரியாக உணர முடியும். இங்கே கப்ர் என்ற
சொல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காகவும் கலாத்திற்காகவும் கூறப்படுகிறது. இந்த மண்ணில்
அமைக்கப்படுகின்ற வெளிப்படையான மண்ணறையைக் குறித்து இது கூறப்படவில்லை. ஒருவர் இறந்த
பின் கியமத் அன்று மீண்டும் எழுப்பப்படுவது வரையிலான இடைப்பட்ட காலத்திற்கே கப்ர் என
வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலம் மிக நீண்ட காலமாகும்.
இந்த இடைப்பட்ட காலத்தில், மனித உடலிலிருந்து பிரிந்துவிட்ட
ஆன்மா, இந்த உலகில் செய்து வந்த தீய செயல்களின் விளைவாக துன்பம், துயரம் மற்றும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லது அது இந்த உலகில்
செய்து வந்த நற்செயல்களின் நற்கூலியான அமைதி, நிம்மதி மற்றும்
மகிழ்ச்சிகளின் முன்னேற்ற நிலைகளை அடைந்து கொண்டிருக்கும்.
தீய செயல்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் ஆன்மா உதாரணம் ஊனமூடன்
பிறக்கின்ற சில குழந்தைகளைப் போன்றதாக்கும். அக்குழந்தைகள் உண்மையில் தமது தாயின் கருப்பையிலே
நோய்வாய்ப்பட்டு விடுகின்றன. அது பிறக்கின்ற போது அந்தத் துன்பத்தையும், ஊனத்தையும்
உணர்வதில்லை. ஆனால் அதுவரை வளர அந்தக் குறையையும் ஊனத்தையும் குறித்த உணர்வு அதிகமாகிக்
கொண்டே செல்கிறது. தனது பலவீனம் மற்றும் இயல்பாக செயல்பட முடியாமை பற்றிய உணர்வு வயதிற்கேற்ப
வளர்ந்தே செல்கிறது. அவர்கள் தங்களின் உடலின் ஊனத்தைப் பற்றி எந்த அளவு சிந்தனை செய்வார்களோ
அந்த அளவு அதிகமான துயரத்திற்கு அவர்கள் ஆளாவார்கள்.
நல்ல மக்களின் ஆன்மாவின் உதாரணம் சரியான உடல் அமைப்புடன் உடல்
நலத்தோடு ஆரோக்கியத்தோடும் பிறக்கும் குழந்தைகளைப் போன்றதாகும். ஆன்மாவின் இந்தப் பயணத்தில்
அது வளர்ச்சி அடைகிறது. மரணத்தின் நேரத்திலிருந்து எக்காளம் ஊதப்படும் நாளாகிய கியாமத்
வரையிலான அந்தக் காலத்திற்கே கப்ர் எனப்படுகிறது.
உண்மையான தண்டனை, தண்டனையும் நற்கூலியும் வழங்கப்படுகின்ற நாளாகிய
கியாமத் அன்றுதான் கிடைக்கும். ஆனால் பாவங்களின் காரணமாக ஆன்மாவின் வளர்ச்சி பாதித்துள்ளதால்
ஆன்மீகமான முறையில் நோயாளிகளாக இருப்பதால் அது தொடர்ந்து துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்.
இதுதான் கப்ர் தண்டனை, இதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக நமக்கு துஆ
கற்றுத் தரப்பட்டுள்ளது. அதாவது இந்தத் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவதற்காக
நாம் அல்லாஹ்விடம் கப்ரின் தண்டனையிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறோம். இதன் பொருள்
இந்த உலகில் நம்முடைய ஆன்மா ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடைய வேண்டும். அது நம் உடலை விட்டுப்
பிரிந்து விடக்கூடிய நேரத்தில் ஆரோக்கியத்துடன் பிரிந்துவிட வேண்டும். கப்ரில் தண்டனையைச்
சுவைப்பதற்குப் பகரமாக சொர்க்கத்தின் நறுமணத்தை அது நுகர வேண்டும்.
கப்ருக்குரிய இரு பொருள்களும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
ஹதீஸ்களிலிருந்து நிரூபணமாகின்றன. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரின் தண்டனை
பற்றி மட்டும் கூறவில்லை. மாறாக சொர்க்கத்தின் காட்சிகளையும் நறுமணத்தையும் அடைவது
பற்றியும் கூறியுள்ளார்கள். அதாவது கப்ரில் இரு ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு
ஜன்னல் தீய மக்களுக்காக நரகத்தின்பால் திறக்கப்படுகிறது. நல்ல மக்களின் கப்ரில் திறக்கப்படும்
ஜன்னல் சொர்க்கத்தை நோக்கியிருக்கும். அங்கிருந்து அவர்கள் சொர்க்கத்தின் நறுமனத்தை
நுகரவும் காட்சிகளைக் காணவும் செய்வார்கள். எனவே கப்ரில் தண்டனை மட்டுமன்று ஆரோக்கியமான
ஆன்மா மகிழ்ச்சியுடனும் இன்பங்களுடனும் வளர்ச்சி அடையும் செய்யும். இந்தக் காலத்திற்கு
“ஆலமே பர்ஸக்” என்று கூறப்படும்.
இது தொடர்பாக, மனிதன் இறந்த பின் கப்ரில் போடப்படும் போது
பாம்பு, தேள் போன்றவை அவனைக் கொட்டுவதாகவு ஒரு ஜன்னல் வழியாக
நரக நெருப்பு அவனை எரித்துக் கொண்டிருக்கும் எனவும் எழுதப்பட்டுள்ள பல நூல்கள் தற்காலத்தில்
கடைவீதிகளில் கிடைக்கின்றன என சபையினருள் ஒருவர் கூறினார்.
அதற்கு கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கூறினார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில்
மக்களாலோ விலங்குகளாலோ பூமி அதிர்ச்சியின் காரணமாகவோ கப்ர்கள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வேளைகளில்
நூல்களில் காணப்படுகின்ற அந்தக் கற்பனைப் பொருள்களை எவரும் எப்போதும் கண்டதில்லை. ‘ஜின்’களையும் ‘பேய்’களையும் வணங்குகின்ற
முல்லாக்களே இப்படிப்பட்ட அடிப்படையற்ற விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். எவருமே
இன்று வரை அந்தக் கப்ருகளில் வெளிப்படையான எந்த ஜன்னலையும் கண்டதில்லை. அவை நரகத்தை
நோக்கியும் இல்லை, சொர்க்கத்தை நோக்கியும் இல்லை. ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகக் கூறமாட்டார்கள். இந்த அறிவீனர்களாகிய முல்லாக்கள்தாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்குத் தவறான பொருள் தந்து மக்களை வழி கெடுக்கின்றனர்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளவை எல்லாம் நூறு சதவீதம் உண்மையானவையாகும். அவர்களின்
இப்படிப்பட்ட விஷயங்களைச் சொற்பொருளில் எடுக்கக்கூடாது. மாறாக உவமையாகக் கருத வேண்டும்.
நான் தந்த விளக்கத்திற்குப் பின்னால் வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த விளக்கம் அறிவுடைய
எவருக்கும் சரியானதாகவும் அறிவு பூர்வமாகவுமே இருக்கும். இதுவே உண்மையுமாகும். முல்லாக்கள்
கூறுவதெல்லாம் கற்பனை கதைகளே.
(அல்-ஃபஸ்ல் இன்டர் நேஷனல் 26-2-1999)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None