எவர் இந்த புதிரை புரிந்து கொள்வதில்லையோ அவர் இறைவனின் ஆற்றல்களை அறியாதவராகவும், இறைவனைக்குறித்து அக்கரையற்றவராகவும் இருக்கின்றார்
இறைவன் எல்லாம் வல்லவன் என்ற நம்பிக்கை இல்லையெனில், நமது அனைத்து எதிர்பார்ப்புகளும் வீணாகிவிடும். மேனியின் துகள்களிலும் அல்லது ஆன்மாவிலும் அவை பெற்றிராத ஆற்றல்களை அவன் விரும்பும்போது அவற்றில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை சார்ந்ததுதான் நமது பிரார்த்தனைகளின் அங்கீகாரம் இருக்கின்றது.
உதாரணமாக, சுகவீனமுற்று மரணிக்கும் தருவாயில் உள்ள ஒருவர் சுகம் பெற நாம் பிரார்த்திக்கின்றோம். அதன் பொருள், அவரது உடலின் துகள்களில் அவரை மரணத்தை விட்டும் காப்பாற்றத்தக்க ஒரு ஆற்றலை உருவாக்குமாறு இறைவனிடம் மன்றாடுகிறோம் என்பதாகும். பல முறை இத்தகைய மன்றாடல்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிகின்றோம். பல சமயங்களில், ஒரு குறிப்பிட்ட நபர் மரணிக்கவிருப்பதாகவும், அவரது வாழ்வின் ஆற்றல்கள் முடிவுக்கு வந்து விட்டனவென்றும் முதலில் நமக்கு அறிவிக்கப்படுகின்றது. ஆனால், நமது மன்றாடல் அதன் உச்சத்தை அடைந்து, அதில் வருத்தம் மற்றும் வேதனையின் செறிவு மிகுந்து, மரணத்தின் விளிம்பிற்கு வந்துவிட்டாற்போன்ற நிலையை நாம் அடையும் போது, சம்பந்தப்பட்ட நபரிடத்தில் வாழ்விற்கான ஆற்றல்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன என்று இறைவனால் நமக்கு அறிவிக்கப்படுகின்றது. பிறகு தீடீரென, அவர் மரணித்துவிட்டு உயிர்பெற்றதைப்போன்று வாழ்விற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றார்.
எனக்கு நினைவிருக்கின்றது, பிளேக் நோய் பரவிய காலத்தில், நான் எல்லாம் வல்ல ஆற்றல் மிகுந்த இறைவனிடம் பிளேக்கின் விஷத்திற்கு எதிரான ஒரு விஷமுறிவு ஒன்றை எங்களின் உடல்களில் உருவாக்குவாயாக என மன்றாடினேன். பிறகு இறைவன் நம்மில் அந்த விஷமுறிவினை உருவாக்கிவிட்டு கூறினான். நான் உம்மை பிளேக்கின் மரணத்தை விட்டும் பாதுகாப்பேன். மேலும் உமது வீட்டில் வசிக்கின்றவர்களில் அகம்பாவம் அற்றவர்கள் அனைவரையும் நான் பாதுகாப்பேன். அதாவது, எவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டு இறையச்சத்தை கைக்கொள்வார்களோ, அவர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள். மேலும், காதியான் பாதுகாக்கப்படும் என்றும் இறைவன் கூறினான். அதாவது, எண்ணற்ற பிற கிராமங்களைப் போன்று காதியான் பிளேக்கின் மூலம் அழிக்கப்படாது.
இதனையே நாம் அனைவரும் கண்டோம். இவை அனைத்தும் நிறைவேறியதையும் நாம் கண்டோம். இவ்வாறு நமது இறைவன் மேனியின் துகள்களில் புதிய ஆற்றல்களையும் பண்புகளையும் உருவாக்குகின்றான். முழுமையான இறைவனிடமிருந்து உறுதிப்பாட்டை பெற்றுக்கொண்ட பின்னர், பிளேக்கிற்கு எதிரான மனித முயற்சியாகிய தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொண்டோம். தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் மரணித்தனர். ஆனால் நாம் இறைவனின் அருளால் இன்னும் உயிருடனிருக்கின்றோம். இவ்வாறே இறைவன் நமது உடல்களில் நோய் எதிர்ப்பிற்கான துகள்களைப் படைத்ததைப் போன்றே, (இப்போதும்) துகள்களை உருவாக்குகின்றான். எனக்குள் ஒரு தூய ஆன்மாவை ஊதியதனால் நான் உயிர் பெற்றதைப்போன்றே அவன் ஆன்மாக்களையும் உருவாக்குகின்றான். அவன் ஆன்மாவைப் படைத்து நமது உடலை உயிர்பெற செய்வது மட்டும் போதாது. மாறாக, நமது ஆன்மாவுக்கு புத்துயிர் அளிக்க மற்றொரு ஆன்மா தேவைப்படுகிறது. இவ்விரண்டு ஆன்மாக்களும் இறைவனால் படைக்கப்படுகின்றன. எவர் இந்த புதிரை புரிந்து கொள்வதில்லையோ அவர் இறைவனின் ஆற்றல்களை அறியாதவராகவும், இறைவனைக்குறித்து அக்கரையற்றவராகவும் இருக்கின்றார்.
(நஸீமே தாஃவத், ரூஹானி ஹஸாயீன், தொகுதி 19, பக் 390-391)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None