அல்லாஹ்வுக்காக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் குரலுக்கு செவிமடுத்தவாறு 123-ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டிருப்பவர்களே! இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டமைக்காக உங்கள் அனைவருக்கும் மிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ் தனது அருளால் இந்த ஆண்டுமாநாட்டின் எல்லா அருள்களிலிருந்தும் பயனடையும் நல்வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்.
சய்யிதுனா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஆண்டு மாநாட்டின் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்:
‘‘இந்த ஆண்டு மாநாட்டை பொதுவான மனித மாநாட்டுகளைப் போன்று கருதாதீர்கள். இதன் அடிப்படை உண்மையாளனாகிய இறைவனின் தூய ஆதரவு மற்றும் உண்மையான மார்க்கத்தின் கலிமாவை உயர்த்துவது ஆகும். இந்த ஜமாஅத்தின் அடிக்கல்லை இறைவன் தனது சொந்த கைகளால் நாட்டியுள்ளான். மேலும் இதற்காக அவன் சமுதாயங்களை ஆயத்தம் செய்துள்ளான். அவை அண்மையில் இதில் வந்து சேரும். இது ஆற்றல் மிக்க இறைவனின் செயலாகும். அவனுக்கு முன்னால் எந்த விஷயமும் சத்தியமற்றதில்லை.’’(மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 1 பக்கம் 342-343)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்கூறுகிறார்கள்:
‘‘இந்த மாநாட்டின் உண்மையான குறிக்கோள், நோக்கம் என்னவெனில், நமது ஜமாஅத்தைச் சேர்ந்த மக்கள் அடிக்கடி சந்திப்பதனால் தம்மிடம் ஒரு மாறுதலை உருவாக்க வேண்டும். அவர்களின் உள்ளம் மறுமையின் பக்கம் முற்றிலும் குனிந்து விட வேண்டும். அவர்களிடம் இறைவனைப் பற்றிய அச்சம் உருவாக வேண்டும். அவர்கள் இறையச்சம்,தூய்மை, மென்மையான உள்ளம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகி விட வேண்டும். மேலும் பணிவு, தன்னடக்கம், நேர்மை ஆகியவை அவர்களிடம் உருவாக வேண்டும். மேலும் மார்க்கப் பணிகளில் அவர்கள் சுறுசுறுப்பை உருவாக்க வேண்டும்.’’
மாநாட்டின் உண்மையான குறிக்கோள், நோக்கம் பற்றி எடுத்துரைத்தவாறு அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘இந்த மாநாட்டில் ஈமானையும், உறுதி நம்பிக்கையையும், இறைஞானத்தையும் முன்னேற்றமடையச் செய்வதற்கு அவசியமான உண்மைகளையும், இறைஞானங்களையும் கேட்பதற்கான ஈடுபாடு இருக்கும். மேலும் நண்பர்களுக்காக சிறப்பான துஆவும், சிறப்பான கவனமும் இருக்கும். இறைவன் தன் பக்கம் அவர்களை ஈர்ப்பானாக.
தனக்காக அவர்களை ஒப்புக் கொள்வானாக. மேலும் அவர்களிடம் தூய மாறுதலை வழங்குவானாக என முடிந்த அளவுக்கு அவர்களுக்காக கருணையாளர்களுக்கெல்லாம் மிக்க கருணையாளனின் சன்னிதியில் முயற்சி மேற்கொள்ளப்படும்.’’
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘இந்த மாநாட்டின் இன்னொரு தற்காலிக பயன் என்னவெனில், ஒவ்வொரு புதிய ஆண்டிலும் எந்த அளவுக்கு புதிய சகோதரர்கள் இந்த ஜமாஅத்தில் இணைவார்களோ அவர்கள் நியமிக்கப்பட்ட தேதியில் ஒன்று கூடி தமது முந்தைய சகோதர்களின் முகத்தைக் கண்டு கொள்வார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒருவர் மற்றவருடனான தொடர்பிலும், நேசத்திலும், புரிதலிலும் முன்னேற்றம் காண்பார்கள். மேலும் இக்கால கட்டத்தில் இந்த அழியக் கூடிய உலகை விட்டு சென்று விட்ட சகோதர்களுக்காக இந்த மாநாட்டில் மன்னிப்புக்காக துஆ வேண்டப்படும். எல்லா சகோதரர்களையும் ஆன்மீகமான முறையில் ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களுடைய தாகத்தையும், அந்நியத்தன்மையையும், வஞ்சகத்தன்மையையும் இடையிலிருந்து நீக்குவதற்காக கண்ணியத்திற்குரிய இறைவனின் வழியில் முயற்சி செய்யப்படும். மேலும் இந்த ஆன்மீக மாநாட்டில் இன்னும் பல ஆன்மீக பயன்கள் இருக்கின்றன. அவை அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இன்ஷா அல்லாஹுல் அஸீஸ். (இஷ்திகார் 30, டிசம்பர் 1891)
கண்ணியத்திற்குரிய செவியேற்பவர்களே! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் இந்த வழிகாட்டல்களின் ஒளியில்,அன்னாருடைய தோற்றத்தின் நோக்கமும் ஆண்டு மாநாட்டின் நோக்கமும் ஒன்றுதான் என்பது தெளிவாகிறது. ஒரு தூய இஸ்லாமிய ஜமாஅத் உருவாக வேண்டும். அதற்கு தனது உண்மையான படைப்பாளானாகிய உயிருள்ள இறைவனுடன் தொடர்பு இருக்க வேண்டும்; மேலும் அந்த ஜமாஅத் முழு உலகிற்கும் செயல் அளவிலான ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே அந்த நோக்கமாகும்.
அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு நமது எல்லா செயல்களும் கலப்பற்ற முறையில் அல்லாஹ்வுக்காகவே இருப்பது அவசியமாகும். வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது. மாறாக, நமது எல்லா செயல்களும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் போதனைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
1905-ஆம் ஆண்டு அல்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மூலமாக வஸிய்யத் அமைப்பை நிலைநாட்டியிருப்பதன் நோக்கமும் ஒரு தூய ஜமாஅத் உருவாக வேண்டும் என்பதுதான்.அதாவது அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இணைக்கின்றவர்களிலிருந்து, இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் தமது பொறுப்புகளை கவனத்துடனும், தியாகத்துடனும் நிறைவேற்றும் அளவிலானஅப்படிபட்ட ஒரு குழு ஆயத்தமாக வேண்டும். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு தனிச் சிறப்பு உருவாக வேண்டும்.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா) அவர்கள் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற யூ.கே ஆண்டு மாநாட்டின் நிறைவுரையில் ஹஸ்ரத்வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை அவர்களின் பல்வேறு வழிகாட்டல்களைக் குறிப்பிட்டவாறு இவ்வாறு கூறினார்கள்:
‘‘அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கும் நல்ல முடிவை அடைவதற்கும் இன்னொரு வழிமுறையும் இருக்கிறது. அது உங்களை நன்மையில் நிலைபெற்றிருப்பதற்கும், உங்களிடத்தில் தூய மாறுதல்களை உருவாக்குவதற்கும் உதவி செய்யும். இன்னும் கூறுவதாயின் அது மிகவும் முக்கியமான மருத்துவமாகும். அதன் மூலமாக அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்புவதற்கான வழிவகைகளும் உருவாகிக் கொண்டிருக்கும்; படைப்பினங்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளும் உருவாகிக் கொண்டிருக்கும். அது வஸிய்யத் அமைப்பாகும். அதன் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: உங்களுக்கு நற்செய்தி! அண்மையில் கிடைக்கவிருக்கும் களம் வெற்றிடமாக உள்ளது. எல்லா சமுதாயமும் உலகத்தை நேசிக்கிறது. எதன் மூலமாக இறைவன் திருப்தி அடைவானோ அதன் பக்கம் உலகிற்கு கவனமில்லை. மிக்க வலிமையுடன் இந்த வாசலில் நுழைய விரும்புகின்றவர்களுக்கு, அவர்கள் தமது கம்பீரத்தைக் காட்டுவதற்கும் இறைவனிடமிருந்து சிறப்பான அருளைப் பெறுவதற்கும் சந்தர்ப்பமாகும்.’’ (அல்வஸிய்யத்)
எனவே அவர்கள் வஸிய்யத் அமைப்பை நிலைநாட்டும்போது இந்த அமைப்பு இறைநெருக்கத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகும்;எனவே இறைவனின் சிறப்பான அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த அமைப்பில் சேருங்கள். இந்த வாசலில் நுழையுங்கள்என்ற நற்செய்தியையும் வழங்கியிருக்கிறார்கள்.(அல்ஃபஸ்ல் இன்டர் நேஷனல் ஆகஸ்டு 2005)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறையறிவிப்பின் அடிப்படையில் இந்த வஸிய்யத் திட்டத்தை 1905-ஆம் ஆண்டு நிறுவினார்கள். அவர்கள் வஸிய்யத் நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘‘நீங்கள் உண்மையான உள்ளத்துடன் இதன் பக்கம் வந்தால் அவன் எல்லா வழிகளிலும் உங்களுக்கு உதவி செய்வான். எந்த எதிரியும் உங்களுக்கு எந்த நஷ்டத்தையும் இழைத்து விட முடியாது. நீங்கள் உங்கள் திருப்தியை விட்டு விட்டு, இன்பங்களை விட்டு விட்டு, கண்ணியத்தை விட்டு விட்டு, உயிரை விட்டு விட்டு மரணத்தின் காட்சியை உங்களுக்கு முன்னால் எடுத்து வைக்கின்ற அந்த கடுமையை அவன் வழியில் நீங்கள் மேற்கொள்ளாதவரை இறைதிருப்தியை நீங்கள் எவ்விதத்திலும் பெறவே முடியாது.’’
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நீங்கள் உங்கள் உள்ளத்தால் மரணித்து விட்டால் நீங்கள் இறைவனிடம் வெளிப்படுவீர்கள். மேலும் இறைவன் உங்களுடன் இருப்பான். நீங்கள் இருக்கும் வீடு அருளுக்குரியதாக இருக்கும். மேலும் உங்கள் வீடுகளின் சுவர்களில் இறைவனின் அருள்கள் இறங்கும்.’’
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் உலகிற்கு புதிய அமைப்பின் தேவையை நபிமார்களுடன் தொடர்புபடுத்தியவாறு இவ்வாறு கூறுகிறார்கள்:
‘‘இறைவனிடமிருந்து உலகிற்காக நியமிக்கப்படுபவர்கள்தான் புதிய அமைப்பைக் கொண்டு வருகின்றனர். அவர்களின் உள்ளங்களில் செல்வந்தர்களின் மீது பகைமை இருப்பதுமில்லை; ஏழ்மையின் மீது தேவையில்லாமல் அன்பு இருப்பதுமில்லை; அவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதில்லை; மேற்கைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதில்லை. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருக்கின்றனர். அமைதியை நிலைநாட்டுவதற்கு உண்மையான காரணியாக இருக்கும் போதனையையே அவர்கள் எடுத்து வைக்கின்றனர். எனவே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மூலமாக வந்த போதனைதான் இன்று அமைதியை நிலைநாட்டும். அதற்கான அடிப்படை அல்வஸிய்யத் மூலமாக 1905-ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்டிருக்கிறது.’’(நிஸாமே நவ் பக்கம் 131)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் நிஸாமே நவ் திட்டத்தில் கலந்து கொள்வதன் மார்க்க பயங்களைக் குறிப்பிட்டவாறு கூறுகிறார்கள்:
‘‘இஸ்லாமிய அரசாங்கம் எல்லா உலகத்திற்கும் உணவளிக்க வேண்டுமென்றால், எல்லா உலகத்திற்கும் உடை அணிவிக்க வேண்டுமென்றால், எல்லா உலகத்திற்கும் தங்குவதற்கு இடமளிக்க வேண்டுமென்றால், எல்லா நோயாளிகளுக்கும் சிக்கிச்சைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால், எல்லா உலகத்திற்கும் அறிவீனத்திலிருந்து விடுதலை அளிப்பதற்காக கல்வி புகட்ட வேண்டுமென்றால் நிச்சயமாக இதற்கு முன்னர் இருந்ததை விட மிக அதிகமான பணம் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். எனவே இக்காலத்தில் இறைவன் உண்மையான சுவர்க்கத்தை பெற விரும்புபவர்கள் தமது விருப்பத்தால் தமது செல்வத்திலிருந்து குறைந்தது பத்தில் ஒரு பங்கை அல்லது அதிகமாக மூன்றில் ஒரு பங்கை வஸிய்யத் செய்வதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறான் எனஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கிணங்க அறிவிப்பு செய்தார்கள். மேலும் அந்த வஸிய்யத்திலிருந்து கிடைக்கும் வருவாய் இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்காகவும், திருக்குர்ஆனின் ஞானம், மார்க்க நூல்கள் மற்றும் இந்த ஜமாஅத்தை பரப்புபவர்களுக்காகவும் செலவிடப்படும்.’’(நிஸாமே நவ் பக்கம் 128)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் நிஸாமே நவ் திட்டத்தில் கலந்து கொள்வதன் சமூக பயங்களைக் குறிப்பிட்டவாறு கூறுகிறார்கள்:
‘‘வஸிய்யத், இஸ்லாம் நிலநாட்டியுள்ள எல்லா அமைப்புகளையும் சூழ்ந்துள்ளது. வஸிய்யத்தின் பணம் வெறும் சொல்லளவிலான இஸ்லாத்தை பரப்புவதற்காக மட்டுமே உரியதாகும் என சிலர் தவறாக கருதுகின்றனர். வஸிய்யத் சொல்லளவிலாக பரப்புவது செயலளவில் பரப்புவது ஆகிய இரண்டிற்கும் ஆகும். அதில் தப்லீக் இணைந்திருப்பதைப் போன்றே புதிய அமைப்பு முழுமை பெறுவதும் இணைந்திருக்கிறது. அதன் கீழ் ஒவ்வொரு நபருக்கும் கண்ணியமான முறையில் வாழ்வாதாரத்திற்கான வழிவகை செய்யப்படுகிறது. வஸிய்யத்தின் அமைப்பு முழுமையடையும்போது அதன் மூலமாக தப்லீக் மட்டும் நடைபெறாது. மாறாக, இஸ்லாத்தின் நோக்கத்திற்கேற்ப ஒவ்வொரு நபரின் தேவையும் அதன் மூலம் நிறைவேற்றப்படும். துக்கத்தையும், வறுமையையும் உலகிலிருந்து அழிக்கப்பப்படும். இன்ஷா அல்லாஹ். அநாதை பிச்சை கேட்க மாட்டார். விதவை, மக்களுக்கு முன்னால் கையேந்த மாட்டார். நிர்கதியானவர் மனக் கவலைக்குள்ளாக மாட்டார். ஏனெனில் வஸிய்யத் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும்; இளைஞர்களுக்கு தந்தையாக இருக்கும்; பெண்களுக்கு கணவனாக இருக்கும். மேலும் வற்புறுத்தலின்றி அதன் மூலமாக ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு அன்புடனும், மன ஆர்வத்துடனும் உதவி செய்வார். அவருக்கு உலகத்திடமிருந்து பிரதி பலன் கிடைக்காது; மாறாக, கொடுக்கின்ற ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து சிறந்த பலனைப் பெறுவார். செல்வந்தர் நஷ்டமடைய மாட்டார்; ஏழையும் நஷ்டமடைய மாட்டார். ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்துடன் போரும் செய்யாது. மாறாக அதன் பேரருள் அனைத்து உலகத்தின் மீதும் இருக்கும்.’’(நிஸாமே நவ் பக்கம் 130)
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்:
‘‘தப்லீக் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரை, அஹ்மதிகள் ஆகிக் கொண்டிருக்கும் வரை வஸிய்யத்தின் அமைப்பு மிகப் பரவலாகிக் கொண்டே செல்லும்.ஆரம்பத்தில் தொடர் வண்டி மெதுவாக செல்கின்றது; பிறகு மிக விரைவாக செல்கின்றது என்பது விதிமுறையாகும். அவ்வாறே நீங்கள் ஓடும்போது ஆரம்ப வேகத்திற்கும் இறுதியான வேகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே வஸிய்யத்தின் மூலமாக இப்போது சேரும் பணம் சந்தேகமின்றி வேகமில்லைதான். ஆனால் அஹ்மதிய்யத் அதிகமாக பரவி விடும்போது, மக்கள் கூட்டம் கூட்டமாக நமது ஜமாஅத்தில் இணைய ஆரம்பிக்கும்போது செல்வங்கள் சிறப்பான முறையில் ஒன்று சேர ஆரம்பித்து விடும். மேலும் இயல்பாகவே சொத்துக்களின் திரள் மற்ற சொத்துக்களை ஈர்க்க ஆரம்பித்து விடும். வஸிய்யத்தின் அமைப்பு பரவலாகிக் கொண்டிரும்போதெல்லாம் நிஸாமே நவ் திட்டத்திற்கான நாள் மிக அருகில் வந்து கொண்டிருக்கும். இன்ஷா அல்லாஹ். (நிஸாமே நவ் பக்கம் 129-132)
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் அல்ஃபஸ்ல் இன்டர் நேஷனல் வஸிய்யத் சிறப்பிதழுக்கு வஸிய்யத் அமைப்பின் முக்கியத்துவதையும் அருளையும் பற்றி விளக்கியவாறு உலகளாவிய அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கு ஒரு தூதை அனுப்பியிருந்தார்கள். அதன் சில கடைசி பகுதியை செவியேற்பவர்களுக்கு முன்னால் எடுத்து வைக்கிறேன்:
‘‘உலகத்திலுள்ள எல்லா அஹ்மதிகளுக்கும் எனது தூதுச் செய்தி என்னவெனில், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் இந்த வழிகாட்டல்களில் அவர்களின் விருப்பங்களுக்கேற்ப முன்னேறுங்கள். பொருள் தியாகத்தின் இந்த (வஸிய்யத்) அமைப்பில் இணையுங்கள். உங்களின் சீர்திருத்தத்திற்காக, உங்களின் முடிவு நல்லதாக ஆகுவதற்காக, அல்லாஹ்வின் திருப்திக்காக முன்னேறுங்கள். அவனுடைய சுவர்க்கங்களுக்கு வாரிசாகுங்கள். இந்த அமைப்பில் சேர்ந்து சுவர்க்கத்திற்குரியவர்களாக ஆகிவிட்டவர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மண்ணறைகளும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு காட்டப்பட்டுள்ளன. இது சுவர்க்கத்திற்குரியவர்களின் மண்ணறையாகும் என்று அல்லாஹ் அவர்களுக்குக் கூறினான். உன்ஸில ஃபீஹா குல்லு ரஹ்மத்தின் அதாவது எல்லா அருள்களும் இந்த மண்ணறையில் இறக்கப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறான்.
எனவே நான் கூறியதைப் போன்று மிகவும் சுறுசுறுப்புடன் இந்த அமைப்பில் சேருங்கள். தாமாக இணைந்திருப்பவர்கள் தமது மனைவி மக்களும் அன்பர்களும் இதில் சேருவதற்கு முயற்சி செய்யுங்கள். இறைவனின் மஸீஹின் குரலுக்கு செவிசாய்த்தவாறு தியாகங்களின் உயர்ந்த தகுதியை நிலைநாட்டுங்கள். அஹ்மதிய்யா கிலாஃபத் நிலைபெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும்போது உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஜமாஅத்திலும் சம்பாதிப்பவர்கள், சந்தா கொடுப்பவர்கள் ஆகியோரில் குறைந்தது 50% பேர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் இந்த மகத்தான அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன். இது அஹ்மதிய்யா ஜமாஅத்தின் சார்பாக அல்லாஹ்வின் முன்னிலையில் ஓர் அற்பமான அர்ப்பணிப்பாக இருக்கும். அது அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கிலாஃபத் தோன்றி 100ஆண்டு நிறைவடைந்ததையொட்டி அல்லாவுக்காக நன்றியுடன் வழங்குவதாக இருக்கும்.
வஸிய்யத் அமைப்புக்கு கிலாஃபத் அமைப்புடன் ஓர் ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு தமது மரணத்தைப் பற்றிய செய்தியினால் தமது ஜமாஅத்தின் தர்பிய்யத்தைப் பற்றிய கவலை உருவாகி பொருள் தியாகத்தின் அமைப்பை அவர்கள் துவக்கிய அதே நேரத்தில், எனது மரணத்தைப் பற்றிய செய்தியினால் துயரப்படாதீர்கள். ஏனெனில் இறைவன் இந்த ஜமாஅத்தை வீணாக்க மாட்டான். மாறாக, இரண்டாம் வல்லமையின் கை அனைவரையும் அணைத்துக் கொள்ளும் என்ற நற்செய்தியையும் வழங்கினார்கள்ள.’’
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘எனது இந்த விஷயத்தினால் நீங்கள் துயரம் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளம் கவலையடைய வேண்டாம். ஏனெனில் நீங்கள் இரண்டாம் வல்லமையை பார்ப்பதும் அவசியமாகும். மேலும் அது வருவது உங்களுக்கு மிக சிறந்ததாகும். ஏனெனில் அது நிரந்தரமாகும். அதன் தொடர் மறுமை வரை அறுபடாது.’’
எனவே அல்வஸிய்யத் நூலில் கிலாஃபத் அமைப்பைப் பற்றி முன்னறிவித்திருப்பதிலிருந்து இந்த இரு அமைப்புகளுக்கும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. மனிதன் வஸிய்யத் அமைப்பில் சேர்ந்து இறையச்சத்தின் உயர்ந்த தரத்தை பெற முடிவதைப் போன்றே அஹ்மதிய்யா கிலாஃபத்திற்கு கட்டுப்படும் சுமையை கழுத்தின் மீது வைப்பதனால் அவருடைய ஆன்மீக எஞ்சியிருத்தல் சாத்தியமாகும். எனவே கிலாஃபத் நிலைபெறும்வரை ஜமாஅத்தின் பொருள் தியாகங்களின் தரம் அதிகமாகிக் கொண்டே செல்லும். மார்க்கமும் முன்னேறிக் கொண்டிருக்கும்.
அல்லாஹ் உங்கள் அனைவரையும் இந்த இரு அமைப்புகளுடனும் தொடர்புள்ளவர்களாக வைப்பானாக என்பது எனது துஆ ஆகும். இதுவரை வஸிய்யத் அமைப்பில் சேராதவர்களும் இதில் கலந்து கொண்டு மார்க்க, உலக அருள்களால் நிரம்புவதற்கான நல்வாய்ப்பை இறைவன் வழங்குவானாக. ஒவ்வோர் அஹ்மதியும் கிலாஃபத் அமைப்புடன் கலப்பற்ற, நன்றியுணர்வுள்ள தொடர்பை அல்லாஹ் நிலைநாட்டச் செய்வானாக. கிலாஃபத் நிலைபெறுவதற்காக எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்கவும் நமது எல்லா முன்னேற்றங்களுக்காகவும் கிலாஃபத்தின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கவும் செய்வானாக. அல்லாஹ் ஒவ்வோர் அஹ்மதிக்கும் தமது பொறுப்புகளை புரிவதற்கான, அதை முழுமை செய்வதற்கான நால்வய்ப்பை வழங்குவானாக. அனைவரையும் தனது திருப்தியின் வழிகளில் நடத்திச் சென்றவாறு நாம் அனைவரின் முடிவை நல்லதாக ஆக்குவானாக. ஆமீன். (அல்ஃபஸ்ல் இன்டர் நேஷனல் 29, ஜூலை - 11 ஆகஸ்டு 2005)
கண்ணியத்திற்குரிய செவியேற்பவர்களே! ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் இந்தக் குரலுக்கு செவிசாய்த்தவாறு அஹ்மதிய்யா ஜமாஅத் கிலாஃபத்துடன்அளப்பரிய அன்பை வெளிப்படுத்தியது. ஹுஸூர் அவர்களின் அருளுக்குரிய விருப்பத்திற்கிணங்க இந்த இலக்கை முழுமை செய்ய முயற்சி செய்தது. நாடு தழுவிய அளவிலும் முயற்சி செய்யப்பட்டது. இந்த முயற்சியின் விளைவாக சில நாடுகளுக்கு சந்தா கொடுப்பவர்களில் 50% பேரை வஸிய்யத் சந்தாவில் இணைப்பதற்கான நல்வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சில நாடுகளுக்கு அதற்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு உலகின் எல்லா நாடுகளிலும் வானத்தின் இந்த தூய அமைப்பில் இணையும் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என நாம் கூற முடியும். இந்த அற்ப தியாகத்தை நாம் ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் திட்டத்திற்கு செவிமடுத்தவாறு 2008-ஆம் ஆண்டு வரையிலான கிலாஃபத் நூற்றாண்டு விழாவிற்காக நாம் எடுத்து வைத்துள்ளோம். இந்த திட்டம் துவங்கி இன்று 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கலீஃபாவின் சார்பாக வழங்கப்பட இலக்கை நிறைவு செய்வதற்கு செய்யப்பட முயற்சியில் 10ஆண்டுகள் சென்று விட்டன.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்தக் குரல் எழுந்த நாடு இந்தியாவாகும். இந்த வகையில் நமது பொறுப்பு என்னவெனில், எல்லா மாவட்ட அமீர்மார்களும், பொறுப்பு கொள்கை பரப்புனர்களும், ஜமாஅத் பொறுப்பாளர்களும் உண்மையிலேயே நாம் கலீஃபாவின் கூற்றுக்கு செவிசாய்த்தவாறு இந்த இலக்கை நிறைவேற்றியவாறு முன்னேறிச் செல்கின்றோமா? அல்லது நமது கால்கள் இன்னும் பின்னால்தான் இருக்கின்றனவா? என ஆய்வு செய்ய வேண்டும். பின்னால் இருக்கின்றனவென்றால் நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். நமது செயல்களை சீர்திருத்தியவாறு முன்னேறிச் சென்று உலகை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்கும் நமது உடன்படிக்கையின் பக்கம் கவனம் இருக்க வேண்டும்.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் 3, டிசம்பர் 2013 அன்று ஆற்றிய ஜுமுஆ பேருரையில் ஜமாஅத்தின் செயல் அளவிலான நிலைமைகளை சீர்திருத்துவதன் பக்கம் அழுத்தம் கொடுத்தவாறு இவ்வாறு கூறினார்கள்:
‘‘ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் எத்தகைய செயல் அளவிலான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்களோ அதன் நிலை என்ன என்பதன் பக்கம் கவனம் செலுத்தும்போது அதை பற்றி கவலை ஏற்படுகிறது. நம்மில் ஒவ்வொருவரும் சமூகத்தின் தீமையை எதிர்த்துப் போரிட்டு அதை தோற்கடிக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. நமது ஒவ்வொருவரின் ஒவ்வொருசெயலை பார்த்து அவருடன் தொடர்பு கொண்டிருப்பவர், அவருடைய வட்டத்தில் இருப்பவர், அவரது சூழலில் இருப்பவர் அவரால் (நல்ல) தாக்கத்திற்குள்ளாகிறாரா? அல்லது நாமே சமூகத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி நமது போதனைகளையும் மாரபுகளையும் மறந்து கொண்டிருக்கிறோமா? ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு போதனை வழங்கியது போன்று நம்மில் ஒவ்வொருவரும் முழுமையாக முயற்சி செய்து தன்னை சீர்திருக்கின்றாரா? பொய்யும் ஏமாற்றமும் நம்மை அணுகக் கூடாதா வகையில் நாம் உண்மையின் தரத்தை உருவாக்கி இருக்கிறோமா?நாம் நமது மார்க்க விவகாரங்களுடன் தொடர்பு வைத்தவாறு மறுமை மீதும் பார்வையை வைத்திருக்கிறோமா? உண்மையிலேயே நாம் உலகத்தை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்குகிறோமா? பிறருடைய உரிமையை பறிக்கக் கூடியவர்கள் இல்லையே? அநீதியான ஆதிக்கத்திலிருந்து தப்பித்திருக்கிறோமா? நாம் ஐவேளை தொழுகையை நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றோமா?நாம் எப்போதும் துஆவில் ஈடுபடுபவர்களாகவும், இறைவனை பணிவுடன் நினைவு கூறுபவர்களாகவும் இருக்கின்றோமா? நம் மீது தீய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தீய நண்பர்களை நாம் விட்டு விடுகின்றோமா?நாம் நமது பெற்றோருக்கு தொண்டு செய்பவர்களாகவும், அவர்களுக்கு கண்ணியமளிப்பவர்களாகவும் இருக்கின்றோமா? நன்மையான விஷயங்களில் அவர்களுடைய விஷயங்களை கேட்பவர்களாக இருக்கிறோமா?நாம் நமது மனைவியர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்பவர்களாக இருக்கின்றோமா? நாம் நமது அண்டை வீட்டினரைசிறிதினும் சிறிதான பொருள்களிலிருந்து விலக்கி வைக்கவில்லையே? நாம் நமக்கு குற்றமிழைத்தவரை மன்னிக்கின்றோமா? நமது உள்ளம் மற்றவர்களுக்காக எல்லா விதமான வெறுப்பு பொறாமையிலிருந்து தூயதாக இருக்கின்றதா? ஒவ்வொரு கணவனும் ஒவ்வொரு மனைவியும் ஒருவர் மற்றவரின் அமானிதத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றார்களா? நாம் பைஅத்தின் உடன்படிக்கையை முன்னிறுத்தி நமது நிலைமைகளை கண்காணிப்பவர்களாக இருக்கின்றோமா? நமது கூட்டங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதிலிருந்தும் புறம்பேசுவதிலிருந்தும் விலகி இருக்கின்றனவா? நமது பெரும்பாலான சபைகள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நினைவு கூறுபவையாக இருக்கின்றனவா?
இதற்கான பதில்,எதிர்மறையாக இருக்கும் என்றால், நாம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் போதனையை விட்டும் விலகி இருக்கிறோம். நாம் நமது செயலின் நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டும். இதற்கான பதில் நேர்மறையாக இருக்குமென்றால், நம்மில் எவர்களுக்கு ஆம் என பதில் கிடைக்கிறதோ அவர்கள் நற்பேறு பெற்றவர்கள். நாம் நமது செயல் நிலைமைகளின் பக்கம் கவனம் செலுத்தி பைஅத்தின் உரிமையை நிறைவேற்றுபவர்களாவோம்.’’
கண்ணியத்திற்குரிய செவியேற்பவர்களே! நாம் நமது செயல் நிலைமைகளின் சீர்திருத்தத்தை விரும்புகிறோம் என்றால், எந்த புதிய அமைப்பின் பக்கம் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் 1944-ஆம் ஆண்டு கருத்துச் செறிவுள்ள நிஸாமே நவ் என்ற தமது சொற்பொழிவில் கவனமூட்டினார்களோ அந்த புதிய அமைப்பின் பக்கம் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதன் பக்கம் 2005-ஆம் ஆண்டு ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கவனமூட்டினார்கள். ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள்நிஸாமே நவ் என்ற தமது சொற்பொழிவில் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘‘நமக்கு ஒரு புதிய அமைப்பு தேவை என உலகம் கூக்குரலிட்டு கூவி அழைக்கும் அந்த காலம் அண்மையில் வரவிருக்கிறது. அப்போது, வாருங்கள்! நான் உங்களுக்கு முன்னால்ஓர் அமைப்பை எடுத்து வைக்கிறேன் என நாலாப்புறமிருந்தும் ஒரு குரல் எழ ஆரம்பித்து விடும். நான் உங்களுக்கு ஒரு புதிய அமைப்பை வழங்குகிறேன் என ரஷ்யா கூறும்; வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு புதிய அமைப்பை வழங்குகிறேன் என இந்தியா கூறும்; வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு புதிய அமைப்பை வழங்குகிறேன் என ஜெர்மனியும், இத்தாலியும் கூறும். அப்போது எனது பிரதிநிதி காதியானிலிருந்து, புதிய அமைப்பு அல்வஸிய்யத்தில் இருக்கிறது எனக் கூறுவார். உலகம் வெற்றி, வளர்ச்சியின் பாதையில் செல்ல விரும்புகிறதென்றால்,அந்த ஒரே வழிதான் இருக்கிறது. அது, அல்வஸிய்யத்தில் எடுத்துக் கூறப்பட்ட அமைப்பை உலகில் தொடர்வதேயாகும்.’’(நிஸாமே நவ் பக்கம் 117)
வானத்தின் இந்த மகத்தான அமைப்பில் இணைவதன் பக்கம் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் ஆகஸ்டு 2004 யூ.கே ஆண்டு மாநாட்டின் சொற்பொழிவில் நமக்கு கவனமூட்டினார்கள். அவர்கள் கூறினார்கள்: உங்கள் வாழ்வை தூய்மையாக்குவதற்கு உங்கள் சந்ததிகளின் வாழ்வை தூய்மையாக்குவதற்கு வஸிய்யத் எனும் வானத்தின் அமைப்பில் இணையுங்கள். அவர்கள் தமது சொற்பொழிவில் இவ்வாறும் கூறியிருந்தார்கள்:
‘‘இந்த அமைப்பில் இணையும் அளவுக்கு இன்னும் எங்களின் தரம் அவ்வளவு உயர்ந்ததாக இல்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த அமைப்பில் இணைவதன் அருளால் பல ஆண்டுகளுக்குரிய தூரம் சில நாட்களிலும், சில மணிகளிலும் கடந்து செல்ல முடியும். எனவே தனது சீர்திருத்தத்திற்காக அஹ்மதிகள் இந்த அமைப்பில் இணைய வேண்டும். மேலும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இந்த அமைப்பில் இணைபவர்களுக்காக செய்துள்ள துஆவிலிருந்து பயன் பெற வேண்டும்.’’
எனவே அல்லாஹ் நமக்கு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் போதனைகளின் ஒளியில், கலீஃபாக்களின் கட்டளைகள், வழிகாட்டல்களின் ஒளியில் நமது செயல் நிலைமைகளில் ஓர் ஆன்மீக புரட்சியை உருவாக்கும் நல்வாய்ப்பை வழங்குவானாக. நாம் அனைவரும் வஸிய்யத் அமைப்பில் இணைந்து இறையச்சமுடைய ஜமாஅத்தில் இணையும்போதுதான் இந்த ஆன்மீக புரட்சியை நாம் உருவாக்க முடியும். அல்லாஹ் நமக்கு அதற்கான நல்வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்.
(உரையாற்றியவர் : மௌலானா ஜலாலுத்தீன் சாஹிப் நய்யர் | காதியான் ஆண்டு மாநாடு 2017 இன் துவக்க உரை)
தமிழ் மொழியாக்கம் : மௌலவி O.M,முஸ்ஸம்மில் அஹ்மது சாஹிப்)
வஸிய்யத் (உயில்) என்ற நூலை பதிவிறக்கம் செய்ய;
http://www.alislam.org/tamil/books/pdf/Al-Wassiyat-Tamil.pdf
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None