இறுதி காலத்தில் தோன்றும் ஈஸா செல்வத்தை வாரி வழங்குவார் என்ற ஹதீஸிற்கான விளக்கம்

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இவ்வுலகில் தோன்றி விட்டார்கள் அவர்கள் அல்லாஹ்வின் கலீஃபா ஆவார்கள்  என்று அஹ்மதிகள் அஹ்மதி அல்லாதவர்களிடம் கூறும்போது அவர்கள் கூறும் கூற்று "பிறகு உங்கள் இமாம் கலீஃபா யாருக்கு எவ்வளவு பணம் வாரி வாரி வழங்கினார்கள்? தற்போது வாரி வழ்ங்கி வருவதுண்டா? ஹதீஸிலோ இறுதி காலத்தில் ஒரு கலீஃபா தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் (முஸ்லிம் 5191) என்று வருகிறதே! உங்கள் இமாம் இவ்வாறு செய்கிறாரா? என்று கேலி கிண்டலாக கேட்பதுண்டு.

நமது பதில்:
முஸ்லிம் என்ற ஹதீஸில் ஓர் கலீஃபா செல்வத்தை வாரி வாரி வழங்குவார் என்று வந்துள்ளது. அதே சமயம் புகாரியிலும், முஸ்லிம் ஹதீஸிலும் இந்த இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய ஈஸா (அலை) செல்வத்தை வாரி வழங்குவார் ஆனால் அதனை வாங்குவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள். என்று வருகிறது.


மற்ற ஹதீஸ்களை வைத்து பார்க்கும்போது இமாம் மஹ்தியை அல்லாஹ்வின் கலீஃபா என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சுனன் இப்னு மாஜாவில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதே சமயம் அந்த இமாம் மஹ்தி ஈஸா அன்றி வேறில்லை என்று கன்ஸுல் உம்மால் கிதாபுல் கியாமா பக்கம் 118 இல் கூறப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல், முஸ்னத் அஹ்மது பின் ஹன்பல் பாகம் 2 பக்கம் 114 போன்ற ஹதீஸ் நூட்களிலும் கூறப்பட்டுள்ளது.

இமாம் மஹ்தியை குறித்தும் வாக்களிக்கப்பட்ட மஸீஹை குறித்தும் அதே போன்று இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய கலீஃபாவை குறித்தும் இவர்கள் மக்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவார் ஆனால் யாரும் வாங்க வர மாட்டார்கள் என்று கூறும் செய்திகள் இடம் பெரும் இத்தனை ஹதீஸ்களை வைத்து பார்க்கும்போது இந்த உம்மத்தில் தோன்றும் அந்த அல்லாஹ்வின் கலீஃபா, இமாம் மஹ்தி, மற்றும் மஸீஹ் ஒரு நபரே என்பது தெளிவாகிறது.

இப்போது அந்த இமாம் மஹ்தியாக வாக்களிக்கப்பட்ட மசீஹாக திகழும் கலீஃபா மக்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவார் என்றால் அதன் பொருள் என்ன என்பதை நாம் கீழே காண்போம்.

இந்த ஹதீஸை வைத்து பார்க்கும்போது இதில் கூறப்பட்டுள்ள செல்வம் என்பது பௌதிகமான செல்வம் அல்ல மாறாக ஆன்மீக செல்வம் ஆகும். ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தமது ஓர் கவிதையில் இவ்வாறு  கூறுகின்றார்கள்: பல்லாயிர வருடங்களாக புதைந்து கிடந்த கஜானாவை நான் உங்களுக்கு எடுத்து தருகிறேன். வாங்குபவர் எவரேனும் உண்டோ!

அல்லாஹ்வின் புறமிருந்து வருபவர் செல்வங்களை தர்வதற்காக வருகை தருவதில்லை மாறாக அல்லாஹ்வின் வழியில் செல்வத்தை செலவழிக்க கூறி உபசரிக்கவே வருகை தருகின்றார்கள். திருக்குர்ஆனில் இதை குறித்து பல இடங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் நிதி, செல்வங்கள் அந்த ரஹ்மானை நிராகரிப்பவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது , இறையச்சம் உடையோருக்கோ மறுமையில் அழகான செல்வங்கள் உள்ளன என்பதை விபரித்து கூறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
மக்கள் எல்லோரும் ஒரே இனத்தவராகிவிடும் நிலைமை இல்லாமலிருந்திருப்பின் அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னை மறுப்பவர்களுடைய வீடுகளின் கூரைகளையும், அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் வெள்ளியினால் ஆனவையாக ஆக்கியிருப்போம்.
மேலும், அவர்களது வீடுகளின் கதவுகளையும், அவர்கள் சாய்ந்து கொள்ளும் மஞ்சங்களையும் (வெள்ளியினால் ஆனவையாக ஆக்கியிருப்போம்).
(ஏன்,  அவற்றையெல்லாம்) தங்கத்தாலேயே ஆக்கியிருப்போம். ஆனால் , இவையாவும் இவ்வுலக வாழ்விற்குரிய தற்காலிகமான பொருட்களேயாகும். உமது இறைவனின் விதிக்கேற்ப மறுமை(யின் சுகம்) இறையச்சமுடையவர்களுக்கே சொந்தமானதாகும். (43:34-36)

வாழ்விற்குரியவற்றை அல்லாஹ் அதிகமாக வழங்கினால் மனிதன் கிளர்ச்சியை நோக்கி காலடி எடுத்து வைப்பான் என்று இறைவன் கூறுகின்றான். பிறகு எவ்வாறு இமாம் மஹ்தி ரிஸ்கை அதாவது வாழ்விற்குரியவற்றை மிக அதிகமாக வழங்கும்போது மனிதன் இறைவனை கீழ்படிவதிலிருந்து தூரம் செல்ல மாட்டான் என்பது எவ்வாறு நிச்சயம் ஆகும்? ஒன்று கீழுள்ள வசனம் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் இல்லை என்றால் மனிதனின் இயல்பு மாற்றப்பட வேண்டும். ஆனால் இவை இரண்டும் நடக்காது என்பதே நிதர்சனமான உண்மை. 

அல்லாஹ், தன் அடியார்களுக்கு வாழ்விற்குரியவற்றை மிக அதிகமாக வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் கிளர்ச்சி செய்திருப்பார்கள். ஆனால் அவன் விரும்பும் அளவிற்கேற்பவே (அவற்றை) இறக்குகின்றான். நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் நிலை)களை நன்கு தெரிந்திருப்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். (42:28)

மனிதன் நிதி மற்றும் செல்வத்தை குறித்து கொள்ளும் பேராசை அவனை நாசமாக்கி விடுகிறது என்று குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்:
(உலகப் பொருள்களை) கூட்டுவதற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுதல், உங்கள் கவனத்தைத் திருப்புகிறது. (102:2)

இதனை உண்மை படுத்தும் வகையில் ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், "ஆதமின் சந்ததியிடம் இரு பள்ளத்தாக்கு அளவில் பொருட்செல்வம் இருந்தாலும் பிறகும் கூட அவன் இன்னும் அதிகம் (வேண்டுமென) விரும்புவான். மனிதனின் வயிற்றை (கபரின்) மண்ணை தவிர வேறு ஏதும் நிரப்ப முடியாது. (அதாவது மரணம் அடையும் வரை அவன் பொருட்செல்வம் விஷயத்தில் பேராசை கொள்வான் என்பதாகும்) (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட "அந்த செல்வதை யாரும் பெற மாட்டார்கள்" என்ற ஹதீஸின் பொருள் ஆன்மீக கருவூலமாகும். அதனை மக்கள் உலக ஆசையை முன்னிருந்தி வாங்க மறுப்பார்கள் என்பதாகும். 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.