அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சுங்கள்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாசத்தை விளைவிக்கும் வழிகளைக் கண்டு அஞ்சுங்கள். இறைவனுக்கு எப்போதும் அஞ்சிக் கொண்டிருங்கள். இறையச்சத்தை மேற்கொள்ளுங்கள். படைப்பினங்களை வணங்காதீர்கள். உங்கள் எஜமானனாகிய இறைவன் பக்கம் உங்களை தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். உலக இச்சைகளை விட்டு ஒதுங்கி விடுங்கள். அவனுக்காகவே ஆகி விடுங்கள். அவனுக்காகவே வாழ்வை கழியுங்கள். அவ்விறைவனுக்காக எல்லா விதமான அசுத்தங்களையும் பாவங்களையும் வெறுத்து விடுங்கள். ஏனெனில் அவன் தூய்மையாளன். நீங்கள் இறையச்சத்துடன் இரவைக் கழித்ததாக ஒவ்வொரு காலைப்பொழுதும் உங்களுக்காக சாட்சி கூற வேண்டும். நீங்கள் பகற்பொழுதை இறையச்சத்துடன் கழித்ததாக ஒவ்வொரு மாலைப்பொழுதும் உங்களுக்காக சாட்சி கூற வேண்டும். உலகத்தின் சாபங்களை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவை புகை மண்டலம் மறைவதைப் போல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து விடும். மேலும் அதனால் பகலை இரவாக்க முடியாது. மாறாக நீங்கள் விண்ணிலிருந்து இறங்கக்கூடிய அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில் அந்த சாபம் எவர் மீது விழுமோ அவரை அது இம்மை மறுமை ஆகிய ஈருலகையும் நாசமாக்கி விடும்.

நீங்கள் வெளிவேசம் செய்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. பகட்டாக ஒரு அமலைச் செய்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உங்களை அந்த இறைவனின் பார்வை மனித உள்ளத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும். எனவே உங்களால் அந்த இறைவனை ஏமாற்றி விட முடியுமா? ஒருபோதும் முடியாது. எனவே நீங்கள் நேர்மையாளராகி விடுங்கள். தூயவராகி விடுங்கள். புனிதமானவர்களாகி விடுங்கள். உறுதியானவர்களாகி விடுங்கள். உங்களிடம் சிறிதளவு இருள் இருந்தாலும் அது உங்களின் முழு ஒளியையும் அகற்றி விடும். உங்களிடம் இருக்கும் ஒளியைக் கூட இருள் விலக்கி வைத்துவிடும்.

ஏதாவது ஒரு வகையில் உங்களிடம் ஆணவமோ வெளிவேசமோ சுயநலமோ அல்லது சோம்பலோ காணப்பட்டால் நீங்கள் சிறுதும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியற்றவர்களாகி விடுவீர்கள். நீங்கள் சில விஷயங்களை மட்டும் கடைபிடித்துக் கொண்டு நாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்து விட்டோம் என எண்ணி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களிடம் முழுமையான ஒரு புரட்சி உருவாக வேண்டும் என இறைவன் விரும்புகிறான். உண்மையான நம்பிக்கையாளராக ஆக வேண்டும் என்றால் ஓர் உண்மையான புரட்சியை உங்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 23-06-2017 அன்று ஆற்றிய ஜுமுஆ பேருரையிலிருந்து எடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.