அஹ்மதிய்யா கிலாஃபத்

(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹுத் தஆலா பி நஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் 21-5-2004 அன்று ஜெர்மனியில் ஆற்றிய ஜுமுஆ உரையின் சுருக்கம்)

அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று11 இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும்12, அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள். (24:56)

இந்த வசனத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கிலாஃபத் பற்றி வாக்குறுதி அளித்துள்ளான். ஆனால் கிலாஃபத் நிலைத்திருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில நிபந்தனைகளையும் விதித்துள்ளான். இருப்பினும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கிலாஃபத்தே ராஷிதா வெறும் 30 ஆண்டுகள் தான் நிலை பெற்றிருந்தது. அதன் கடைசி நாள்களில் முஸ்லிம்கள் மேற்கொண்ட தகாத செயல்கள், கிலாஃபத்திற்கெதிராக எழுந்த குழப்பங்கள், கலீஃபாக்களுடன் வீணான முறையில் பேசுதல், கலீஃபாவை ஷஹீதாக்குதல் போன்ற காரணங்களால் கிலாஃபத் முடிந்து விட்டு மன்னராட்சி ஏற்பட்டது. இவை அனைத்தையும் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியிருந்தான். நீங்கள் நன்றி கேடு காட்டினால் கட்டுப்படாதவர்களாகி விடுவீர்கள் என அல்லாஹ் கூறியிருந்தான். கட்டுப்படாத தீயவர்களுக்கு அல்லாஹ் உதவுவதில்லை. இஸ்லாத்தின் முதல் 13 நூற்றாண்டுகளில் முதலில் கிலாஃபத் பின்னர் மன்னர் ஆட்சி பின்னர் மார்க்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முஜத்திதுமார்கள் வந்தனர்.


இப்போது நான் சொல்லவிருக்கும் விஷயம், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்த நற்செய்திகளுக்கேற்ப, அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று உம்மாத்திற்கு சொன்ன முன்னறிவிப்புகளுக்கேற்ப, மஸீஹ் மவ்ஊது வருகின்றபோது மீண்டும் கிலாஃபத் தோன்றியாக வேண்டும். இந்த கிலாஃபத்தின் தொடர் அல்லாஹ்வின் வாக்குறுதிக்கேற்ப நிலையாக நிலைத்திருக்கும். அது குறித்து ஹதீஸில் வந்துள்ளது ஹஸ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் நாடும் வரை உங்களிடம் நுபுவ்வத் நிலைத்திருக்கும். பின்னர் அதனை எடுத்துவிட்டு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத்தை ஏற்படுத்துவான். பின்னர் அல்லாஹ் நாடும்போது அந்த அருளையும் எடுத்துக் கொள்வான். பின்னர் அவனின் நியதிக்கேற்ப துன்புறுத்தும் அரசாட்சி நிலை பெறும் அதனால் மக்கள் வெறுப்படைந்து இடுக்க நிலையை உணர்வார்கள். அந்தக் கால கட்டம் தாண்டிவிட்டால் அவனின் இன்னொரு நியதிக்கேற்ப கொடுங்கோல் மன்னராட்சி ஏற்படும். இறுதியில் அல்லாஹ்வின் கருணை பொங்கி எழும். கொடுமை அநீதியின் காலம் முடிந்துவிடும் அதன்பின் நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் நிலைபெறும் இதனைச் சொன்ன பின் அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (முஸ்னது அஹ்மது பின் ஹம்பல்)

நாம் நற்பேறு பெற்றவர்கள். நாம் இக்காலத்தில் இந்த முன்னறிவிப்பு நிறைவு பெறுவதைக் காண்கிறோம். இந்த நிலையான கிலாஃபத்திற்கு நேரடி சாட்சிகளாவோம். அது மட்டுமல்ல அதனை நம்புபவர்களுள் இணைந்து அதன் அருள்களைப் பெறுபவர்கள் ஆவோம்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத் அருளுக்குரிய உம்மத்தாகும். இதன் ஆரம்பகாலம் சிறந்ததாக இருக்குமா இறுதிக்காலம் சிறந்ததாக இருக்குமா எனச் சொல்ல முடியாது. அதாவது இரண்டு காலமும் மிகச் சிறந்த அந்தஸ்தை உடையதாகும்.

அந்த இறுதிக்காலம் என்பது என்னவென்ற விளக்கத்தையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

"ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபையில் அமர்ந்திருக்கும் போது சூரத்துல் ஜுமுஆ இறங்கியது. இந்த தோழர்களுடன் இப்போது சேராத சிலரும் பிற்காலத்தில் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்ற பொருளுடைய வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிய போது இறைத்தூதர்கள் அவர்களே! இப்போது தோழர்களுடன் இணையாத ஆனால் தோழர்களின் அந்தஸ்தையுடைய அம்மக்கள் எவர்கள் என தோழர் ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அக்கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அந்த நபர் மூன்று முறை அந்தக் கேள்வியை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார். அறிவிப்பாளர் கூறுகிறார், பாரசீகத்தை சேர்ந்த சல்மான் எங்களுடன் அமர்ந்திருந்தார். ஹஸ்ரத் நபி (ஸல தங்கள் கையை சல்மான் அவர்களின் தோளில் வைத்து கூறினார்கள், நம்பிக்கை கார்த்திகை நட்சத்திரம் வரை சென்று விட்ட போதிலும் இவர்களைச் சேர்ந்த சிலர் அதனைத் திரும்பக் கொண்டு வருவார்கள்.

அதாவது பின்னவர்கள் என்பது, மஸீஹ் மவ்ஊது அவர்கள் தோன்றும் போது அவரை நம்பி அவர்கள் நெருக்கத்தைப் பெற்று அவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் நபித் தோழர்களின் பதவியை அடைவார்கள் என்பதாகும். நம்மை அல்லாஹ் ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களின் காலத்தில் படைத்தான். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் காலத்திற்கொப்பான காலம் எனக் கூறியுள்ள காலத்தை அடைந்துள்ளோம். 

எனவே முன்னறிவிப்புக்கேற்ப இந்த நுபுவ்வத் வழியிலான கிலாஃபத்தும் நிலை பெற்றிருக்கும்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சொற்களில் இந்த வசனத்தைச் சற்று விளக்குகிறேன். அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் இருவகையான ஆற்றல்களை வெளிப்படுத்துகிறான். முதலாவதாக நபிமார்களின் கையால் தனது ஆற்றலின் கையைக் காட்டுகிறான். இரண்டாவதாக நபியின் மரணத்திற்குப் பிறகு பிரச்சனைகள் தோன்றுகின்றன. எதிரிகள் வலுவடைந்து விடுகிறார்கள்.

இப்போது வேலை எல்லாம் குலைந்து விட்டது. இப்போது இந்த ஜமாஅத் அழிந்து போய்விடும் என உறுதியாகக் கருதத் தொடங்குவர். ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் கூட தடுமாற்றத்திற்காளாகி அவர்களின் முதுகுகள் முறிந்து விடுகின்றன. பேரிழந்த பலர் மார்க்கத்தைத் துறந்தே செல்கின்றனர். அப்போது இறைவன் இரண்டாவது முறை தமது வலிமை மிக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறான். விழுந்து கொண்டிருக்கும் ஜமாஅத்தை தாங்கிக் கொள்கிறான். எனவே இறுதிவரை பொறுமை மேற்கொள்பவர் இறைவனின் இந்த அற்புதத்தைக் காண்கிறார். இதுவே ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் நிகழ்ந்தது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம் அகால மரணம் எனக் கருதப்பட்டது. அளவற்ற பலர் மார்க்கத்தைத் துறந்து சென்று விட்டனர். நபித்தோழர்கள் கூட துயரத்தின் தாக்கத்தால் மதியிழந்து விட்டனர். அப்போது இறைவன் ஹஸ்ரத் அபூபக்கரை எழுப்பி மீண்டும் தனது ஆற்றலின் முன்மாதிரியைக் காட்டினான். இஸ்லாத்தை அழிவதை விட்டு காப்பாற்றினான். அச்சத்திற்குப் பின் நாம் அவர்களுக்கு உறுதியை அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறை வேற்றினான்.

ஹஸ்ரத் மூஸா நபி (அலை) காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. இஸ்ரவேலர்களுக்கு ஏற்கனவே வாக்களிக்கப்பட்டிருந்த கின்ஆன் மற்றும் மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு அவர்களை கொண்டு செல்கின்ற வழியிலே அவர்களுக்கு மரணம் நிகழ்ந்தது. அவர்களின் மரணத்தால் இஸ்ரவேலர்களிடையே பெரும் பேரிழப்பு ஏற்படுத்தியது. இந்த அகால மரணம் மற்றும் ஹஸ்ரத் மூஸா நபியின் எதிர்பாராத பிரிவின் காரணமாக இஸ்ரவேலர்கள் 40 நாள்கள் அழுதுக் கொண்டிருந்தார்கள் என தவ்ராத் கூறுகிறது. அவ்வாறே ஈஸா நபியுடனும் ஏற்பட்டது. சிலுவை நிகழ்ச்சியின் போது அனைத்து தோழர்களும் சிதறிவிட்டனர். ஒருவர் மார்க்கத்தைத் துறந்தும் விட்டார். 

மேலும் ஹுஸூர் கூறுகின்றார்கள்:

எனவே அன்பர்களே! எதிரிகள் இரண்டு பொய் மகிழ்ச்சிகளை அழிப்பதற்கென இரு ஆற்றல்களைக் காட்டுவது அல்லாஹ்வின் தொன்மையான வழக்கமாகும். எனவே இப்போது இறைவன் தனது தொன்மையான வழக்கத்தை விட்டுவிட வாய்ப்பில்லை. எனவே நான் உங்களிடம் கூறிய விஷயங்களைக் கேட்டு நீங்கள் துயரம் அடைய வேண்டாம். உங்கள் இதயம் கவலை அடைய வேண்டாம். ஏனெனில் இரண்டாவது ஆற்றலையும் காண்பது உங்களுக்கு தேவையாகும். அது வருவது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில் அது நிரந்தரமானதாகும். அதன் தொடர் இறுதி நாள் வரை அறுந்து விடாது. நான் போகாத வரை அந்த இரண்டாவது ஆற்றல் வரமுடியாது. ஆனால் நான் சென்று விட்டபின் இறைவன் அந்த இரண்டாவது ஆற்றலை உங்களுக்காக அனுப்புவான். அது என்றும் உங்களுடன் இருக்கும். இது குறித்து பராஹீனே அஹ்மதிய்யாவிலும் வாக்குறுதி உள்ளது. அந்த வாக்குறுதி என்னைப் பற்றியதல்ல. மாறாக உங்களைப் பற்றிய வாக்குறுதியாகும். அதாவது அவன் கூறுகிறான். உன்னைப் பின்பற்றக் கூடிய ஜமாஅத்திற்கு பிறர் மேல் இறுதி நாள் வரை வெற்றியை வழங்குவேன். எனவே நிரந்தரமான வாக்குறுதியின் நாள் பின்னர் உங்களிடம் வருவதற்காக நான் பிரிந்து செல்லும் நாள் கட்டாயம் உங்களுக்கு வந்தாக வேண்டும். 

நம்முடைய அந்த இறைவன் வாக்குறுதியில் உண்மையானவன். நம்பத் தகுந்தவன் மற்றும் உண்மையான இறைவன் ஆவான். அவன் வாக்குறுதி அளித்துள்ள அனைத்தையும் அவன் உங்களுக்குக் காட்டுவான். இந்த நாள் உலகின் கடைசி நாளாகிலும் ஏராளமான சோதனைகள் இறங்க வேண்டியதிருப்பினும், இறைவன் அறிவித்துள்ள விஷயங்கள் நிறைவேறும் வரையில் இந்த உலகம் கட்டாயம் நிலைத்திருந்தாக வேண்டும். நான் இறைவன் புறமிருந்து ஓர் ஆற்றலின் வகையில் தோன்றியுள்ளேன். நான் இறைவனின் ஆற்றலின் தோற்றமாவேன் மேலும் எனக்கு பிறகு இன்னும் சிலர் தோன்றுவார்கள். அவர்கள் இறைவனின் இரண்டாவது வல்லமையின் தோற்றமாக இருப்பார்கள். எனவே நீங்கள் இறைவனுடைய இரண்டாவது வல்லமையை எதிர்பார்த்தவாறு ஒன்று சேர்ந்திருந்து துஆ செய்து கொண்டிருங்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நல்லவர்களின் ஜமாஅத்தும் ஒன்று கூடி துஆவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதன் மூலம் இரண்டாவது வல்லமை விண்ணிலிருந்து இறங்கி உங்கள் இறைவன் எப்படிப்பட்ட வல்லமைமிக்க இறைவன் என்பதை உங்களுக்கு காட்டட்டும். உங்கள் மரணத்தை அருகில் இருப்பதாகக் கருந்துங்கள். அந்த நேரம் எப்போது வரும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். 

மேலும் கூறினார்கள் "ஜமாஅத்தின் தூய உள்ளமுடைய சான்றோர்கள் எனக்குப்பின் என் பெயரில் பைஅத் வாங்க வேண்டும்" இதன் பொருள் பலர் எழுந்து பைஅத் வாங்க வேண்டும் என்பதல்ல. மாறாக பல்வேறு காலங்களில் அப்படிப்பட்டவர்கள் வந்து கொண்டிருப்பார்கள் என்பதாகும். ஐரோப்பா என்ன ஆசியா என்ன உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற ஆன்மாக்களுள் நல்லியல்புடையவர்களை தௌஹீதின் பால் ஈர்த்து தனது அடியார்களை ஒரே மார்க்கத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என அல்லாஹ் நாடுகிறான். இதுவே இறைவனின் நோக்கமாகும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டேன். எனவே நீங்கள் இந்த நோக்கத்தைப் பின்பற்றுங்கள். ஆனால் மென்மை நல்லொழுக்கம் மற்றும் துஆக்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே இறைவன் புறமிருந்து எவரேனும் தூய ஆவியைப் பெற்று எழுந்து நிற்பதும் வரையிலும் எல்லாரும் எனக்குப் பின் இணைந்து வேலை செய்ய வேண்டும்" (அல்-வஸிய்யத்)

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மறைவுக்கு பின் நிரந்தரமான கிலாஃபத் நிலை பெரும் என அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான் என்ற நற்செய்தியை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு வழங்கியிருந்தார்கள். மேலும் எதிரிகளுக்கு இரு மகிழ்ச்சிகளை தரமாட்டான். அதாவது ஒன்று மறைவுச் செய்தி கேட்டு மகிழ்தல், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மறைவு பற்றி கேள்விப்பட்டு பலரும் மகிழ்ச்சி கொண்டாடினார்கள். இரண்டாவது ஜமாஅத் உடைந்து விடுவதலான மகிழ்ச்சி. இது ஒருபோதும் நடக்காது. எதிரிகள் மிகவும் கூச்சல் போட்டார்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அச்சத்திற்குப் பின் அமைதியின் நிலையை ஏற்படுத்துவேன் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியது.

ஹஸ்ரத் முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் மிகவும் வயது முதிர்ந்தவர், உடல்நலம் பலவீனமடைந்தவர், கிலாஃபத்தை சரியான கட்டுபாட்டில் வைத்திருக்க முடியாது. ஒரு வேளை கிலாஃபத்தின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது எனச் சிலர் கருதினார்கள். அஞ்சுமனின் தலைவர்களுள் சிலரும் இவர் வயதானவர்; நாம் நம் விருப்பப்படி செய்யலாம் பல விஷயங்கள் இவரின் முன் வைக்காதிருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது அவருக்கு தெரியாது எனக் கருதத் தொடங்கினார்கள். ஆனால் அல்லாஹ் எதிரிகளின் இந்த அக, வெளி திட்டங்கள் எதையும் வெற்றி பெற விடவில்லை. அனைத்து திட்டங்களையும் குழப்பங்களையும் அழித்து விட்டான். முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் அனைத்து குழப்பங்களையும் உரிய நேரத்தில் எவ்வளவு வன்மையாக ஒழித்துவிட்டு எதிரிகளின் வாயை அடைத்துவிட்டார்கள் என்பதை உலகம் கண்டது. அவர்கள் கூறினார்கள்:

"கிலாஃபத் தேர்தல் மனித அறிவுக்குட்பட்ட வேலையல்ல, எவரின் தக்வா வலுவானது. மனித ஆற்றல் எவரிடம் முழுமை அடைந்துள்ளது என்பதை மனித மூளை முடிவு செய்ய முடியாது. எனவேதான் கலீஃபாவை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் வேலையாகும் என அல்லாஹ் கூறினான். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். (ஹக்காயிக்குல் ஃபுர்கான்)

மேலும் கூறினார்கள்:

"என்னை எந்த ஒரு மனிதனோ எந்த ஒரு அஞ்சுமனோ கலீஃபா ஆக்கவில்லை. எந்த ஒரு அஞ்சுமனும் கலீஃபாவை உருவாக்க தகுதியுடையதாக நான் கருதவில்லை. எனவே என்னை எந்த அஞ்சுமனும் உருவாக்கவில்லை. அவ்வாறு உருவாக்குவதை நான் மதிப்பதுமில்லை. மேலும் இந்த கிலாஃபத்தின் போர்வையை என் மேலிருந்து பறித்துக் கொள்ளும் ஆற்றலும் எவருக்குமில்லை. (அல்-ஃபுர்கான்) 

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் மௌலானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்:

"கலீஃபாவின் வேலை தொழ வைப்பதோ பைஅத் வாங்குவதோ ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்த வேளையை ஒரு முல்லா கூட செய்ய முடியும் இதற்கு கலீஃபா தேவை இல்லை. இப்படிப்பட்ட பைஅத்த்தை நான் சிறிதும் மதிப்பதில்லை. முழுமையாக கட்டுப்படுவது தான் பைஅத். கலீஃபாவின் ஒரு கட்டளையை கூட புறக்கணிக்கக் கூடாது."

பின்னர் அவர்களின் வலுவான சொற்பொழிவுகளையும், அவர்கள் அஞ்சுமனுக்கெதிராக நடவடிக்கை எடுத்ததையும் உலகம் கண்டது. ஆட்சேபனை செய்தவர்கள் எல்லாம் நுரை மறைவது போல் மறைந்து விட்டனர். தற்காலிகமான அவ்வப்போது பல்வேறு வகையில் ஆங்காங்கே குழப்பத்தை தூண்ட முயன்ற போதிலும் அதன் முடிவு அவர்களுக்கு தோல்வியும், இழிவுமாகவே இருந்தது. பின்னர் முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் மறைந்தபோது அம்மக்கள் மீண்டும் தலை தூக்கினர். ஜமாஅத்தில் பிளவு ஏற்படுத்த முயன்றனர். கல்வியறிவுடைய ஏராளமான மக்களை தங்களின் பால் கவர்ந்தனர். இதற்கான காரணம் கிலாஃபத் தேர்தல் நடைபெற்றால் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது அவர்களைத்தான் ஜமாஅத் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கும் என அவர்கள் அறிந்திருந்தனர். இந்தக் குழப்பத்தை அகற்றுவதற்காக எனக்கு கலீஃபா ஆகும் ஆசை ஏதும் இல்லை ஜமாஅத் எவரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்து அவர் கையில் பைஅத் செய்யச் சொல்கிறதோ அவர் கையில் பைஅத் செய்ய நான் தயார் என கூச்சல் போடுபவர்களிடமும், அஞ்சுமனின் தலைவர்களிடமும் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) கூறினார்கள். ஆனால் தேர்தல் நடந்தால் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது தான் கலீஃபா ஆவார்கள் என்பதை அறிந்திருந்த அவர்கள் இதற்கு இணங்கவில்லை. மாறாக கிலாஃபத் தேர்தல் இப்போது வேண்டாம். ஒன்று இரண்டு அல்லது நான்கு நாள்கள் அல்ல பல மாதங்கள் வரை ஒத்திப் போட வேண்டும் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். இதனை ஜமாஅத் எந்த வகையிலும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜமாஅத் ஒரு கையில் ஒன்றிணைந்தாக வேண்டியதிருந்தது. இறுதியில் ஜமாஅத் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது சாஹிபு அவர்களை கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் கையில் பைஅத் செய்தது. அப்போது ஜமாஅத்தின் படிப்பறிவுடையவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். கருவூலமும் எங்களிடம் இருக்கிறது எனவே சிறிது நாள்களிலே இந்த ஜமாஅத் முடிந்து போய் விடும் என எதிரிகள் கருதினர். ஆனால் அல்லாஹ் மீண்டும் தனது கருணையின் கையை வைத்தான். அச்ச நிலையை அமைதியாக மாற்றினான். எதிரிகளின் அனைத்து முயற்சிகளையும் வீணாக்கி விட்டான். பின்னர் இரண்டாவது கிலாஃபத் காலத்தில் 1934 இல் ஒரு குழப்பம் தோன்றியது. அதனையும் அல்லாஹ் ஒழித்து விட்டான். எதிரிகள் ஜமாஅத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்த முடியவில்லை.

பின்னர் 1953 ஆம் ஆண்டில் ஒரு குழப்பம் தலை தூக்கியது. அப்போது பாகிஸ்தான் உருவாகியிருந்தது. அப்போது ஆட்சி எங்கள் கையில் இருக்கிறது ஆங்கிலேய ஆட்சி முடிந்துவிட்டது. நீதி என்னவென்று அவர்களுக்கு தெரியாதிருந்தது. இப்போது நாங்கள் தான் நீதியை நிலைநாட்டுவோம். எனவே இந்த ஜமாஅத் முடிந்து போய் விட்டது என எதிரிகள் கருதினர். ஆனால் அல்லாஹ் மீண்டும் அந்த அச்சத்தின் நிலையை அமைதியின் நிலையாக மாற்றினான். எதிரிகள் அனைவரும் இழிவுகளாகி அழிந்து போய் விட்டதை உலகம் கண்டது. ஜமாஅத் மேலும் புது பொலிவுடன் முன்னேறிய சென்றது.

சுருக்கமாக கூறினால், ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் கிலாஃபத் 52 ஆண்டுகள் நீடித்தது. ஒவ்வொரு நாளும் ஜமாஅத் வெற்றியின் படித்தரங்களைத் தாண்டியே சென்றது அவர்களின் காலத்தில் பல மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் வெளியாயின. வெளிநாடுகளில் பிரச்சார நிலையங்கள் அமைந்தன. ஆஃப்ரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பிரச்சார நிலையங்கள் அமைந்து கலீஃபா அவர்கள் நேர்மையாக முபல்லிக்குகளுக்கு வழிகாட்டல்களை தந்து நிர்வாகத்தை இயக்கினார்கள். அப்போது அலுவலகங்கள் ஏதும் இருக்கவில்லை. பின்னர் அல்லாஹ் இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் பிற நாடுகளிலும் குறிப்பாக ஆஃப்ரிக்கா நாடுகளில் இலட்சக் கணக்கான நல்லியல்புடைய மக்களை ஜமாஅத்தில் இணையச் செய்தான். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடியின் கீழில் ஒன்றிணையச் செய்தான்.

பின்னர் அவர்கள் ஜமாஅத்தின் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஏற்கனவே இருந்த சதர் அஞ்சுமன் அஹ்மதிய்யாவில் மாற்றங்களை செய்தார்கள். அஞ்சுமன் எப்போதும் அஞ்சுமனாகவே தம்மைக் கருதிக் கொள்ளவும் கிலாஃபத்திற்கு ஆபத்தாகமல் இருப்பதற்குமான ஏற்பாடு செய்தார்கள். பின்னர் கிளை அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு வயதை உடையவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நாங்கள் இந்த ஜமாஅத்தை பாதுகாக்க வேண்டும், எல்லாக் குழப்பங்களை விட்டும் காப்பாற்ற வேண்டும். அதற்காக தங்கள் உள்ளங்களில் தூய புனிதமான மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக அன்ஸாருல்லாஹ், குத்தாமுல் அஹ்மதிய்யா, அத்ஃபாலுள் அஹ்மதிய்யா, லஜ்னா இமாயில்லாஹ் என்ற அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் இந்த உணர்வு ஒரு சமுதாயத்திற்கு ஏற்பட்டு விட்டால் அதற்கு எவரும் எந்த இழப்பும் ஏற்படுத்த முடியாது. எனவே இன்று எல்லா நாடுகளிலும் இந்த கிளை அமைப்புகள் சிறப்பாக சுறுசுருப்பாக செயல்பட்டு வருகிறது.

...அடுத்து தஹ்ரீக்கே ஜதீது திட்டத்தை தொடங்கினார்கள். காதியானை முற்றாக அழித்து விடுவோம் என எதிரிகள் முழங்கிய போது தஹ்ரீக்கே ஜதீது திட்டத்தின் கீழில் வெளிநாடுகளில் பிரச்சார நிலையங்களை அமைத்தார்கள். பின்னர் இந்தியா பாகிஸ்தானின் கிராமங்களில் தப்லீக்கிற்காக வக்ஃபே ஜதீது திட்டத்தை தொடங்கினார்கள். இப்போது அது அல்லாஹ்வின் அருளால் முழு உலகிலும் பரவியுள்ளது. ஒரு குழந்தை, இவர் கையில் கிலாஃபத்தின் கடிவாளம் உள்ளது இவர் என்ன செய்வார் என ஜமாஅத்தின் முதிர்ந்த அறிவாளிகளும் தலைவர்களுமாகக் கருதப்பட்டவர்கள் எண்ணியிருந்த அந்த நபர் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தினார். நான் உனது தூதுச் செய்தியை பூமியின் எல்லைகள் வரை சென்றடையச் செய்வேன் என அல்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்த இல்ஹாமை நிறைவு செய்பவராக திகழ்ந்தார்.
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
"கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் அனைத்து எண்ணங்களையும் ஒன்றாக ஒன்றிணைக்க வேண்டியுள்ளதாகக் காணப்படுகிறது. எல்லா வகையிலும் ஒருங்கிணைந்த நிலையைப் பார்க்க வேண்டும் ஏதாவதொரு விஷயத்தில் மற்றவர் அவரைவிட மேலானவராக இருக்கலாம். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகுவதற்கு அவர் நன்றாக பாடம் கற்பிக்கிறாரா அல்லது நல்ல மேலான பட்டம் பெற்றிருக்கிறாரா என்பது மட்டும் பார்த்தால் போதாது. அவரின் கீழுள்ளவர் அவரைவிட மேலான பட்டம் பெற்றவர் இருக்கலாம். அவர் நிர்வாகம் இயக்க வேண்டும். அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். கீழுள்ளவர்களோடும் நல்லுறவு இருக்க வேண்டும். இவ்வனைத்தையும் கவனிக்க வேண்டும். அது போலவே இறைவன் புறமிருந்துதான் கலீஃபாவின் ஒட்டுமொத்தமான அந்தஸ்து பார்க்கப்படுகிறது. காலித் பின் வலீதைப் போல் எவராவது வாளை வீசியுள்ளாரா? ஆனால் அபூபக்கர் தான் கலீஃபா ஆனார்கள். இன்று ஒருவர் ஐரோப்பாவில் என் பேனாவின் புகழ் ஓங்கியுள்ளது எனக் கூறினால் அதனால் அவர் கலீஃபா ஆக முடியாது. இறைவனால் உருவாக்கப்படுபவரே கலீஃபா. இறைவன் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அவர் தான் கலீஃபா. காலித் பின் வலீது 60 நபர்களுடன் சென்று 60 ஆயிரத்தைக் கொண்ட படையை வென்று வந்தார். ஹஸ்ரத் உமர் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள்தான் கலீஃபா ஆனார்கள். ஹஸ்ரத் உஸ்மான் காலத்தில் மிக சிறந்த போர் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் முழு உலகையுமே வென்றார்கள். ஆனால் உஸ்மான்தான் கலீஃபா ஆனார்கள். "
அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: 
"மூன்றாவது கலீஃபாவாக அல்லாஹ் எவரை எழுப்பினாலும் அவருக்கு நான் இப்போதே நற்செய்தி தெரிவிக்கிறேன். அவர் இறைவன் மேல் நம்பிக்கை வைத்தவாறு எழுந்து நின்றால் உலக அரசாங்கங்களே அவரோடு மோதினாலும் அவை தூள் தூளாகி விடும்."
இதனை நாம் கண்டோம். மோத வந்த அரசாங்கங்களே துண்டு துண்டாயின.

இன்னோரிடத்தில் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் ஆறாவது மற்றும் ஏழாவது கிலாஃபத் பற்றிக் கூட கூறியுள்ளார்கள். விளக்கத்தைப் பின்னர் கூறுகிறேன். ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: கிலாஃபத் தேர்தல் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவு முழு ஜமாஅத்திற்கும் ஏற்புடையதாகும். அதனை எதிர்ப்பவர் கிளர்ச்சியாளர் ஆவர். கிலாஃபத் தேர்தல் நேரம் எப்போது வந்தாலும் அதற்கென வகுக்கப்பட்ட விதி முறைகளுக்கேற்ப எவர் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் இந்த சட்ட திட்டங்களுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அல்லாஹ் அவரோடு இருப்பான். அவருக்கெதிரில் எழுபவர் பெரியவராகிலும் சிறியவராகிலும் இழிவடைந்து அழிந்து போய் விடுவார் என்று நற்செய்தி அறிவிக்கிறேன்.

மேலும் கூறினார்கள்: கிலாஃபத் என்பதன் பொருளே கலீஃபாவின் நாவிலிருந்து ஒரு சொல் வெளி வந்தால் அப்போது அனைத்து திட்டங்கள் எண்ணங்கள் யோசனைகளையும் தூக்கி எறிந்து விட்டு காலத்தின் கலீஃபாவிடமிருந்து வந்த திட்டம் எண்ணம் யோசனைதான் பயன் தரும் எனக் கருதுவதாகும். இந்த உணர்வு ஜமாஅத்தில் ஏற்படவில்லை எனில் அனைத்து சொற்பொழிவுகளும் வீண். அனைத்து திட்டங்களும் தவறு. அனைத்து யோசனைகளும் பயனற்றது.

மூன்றாவது கிலாஃபத் காலம் வந்தது. இரண்டாவது கலீஃபா அவர்களின் மரணத்தின் போது அக, வெளி எதிரிகள் தீவிரமடைந்தனர். ஆனால் என்ன நடந்தது? ஜமாஅத்திற்கு ஏதேனும் குறை ஏற்பட்டதா? இல்லை. மாறாக இறைவன் தனது வாக்குறுதிக்கேற்ப முன்னரை விட அதிகம் முன்னேற்றத்தின் கதவுகளைத் திறந்தான். பிரச்சார நிலையங்கள் ஆப்ரிக்கா, ஐரோப்பா எங்கும் பரவின. ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது கனவின் வாயிலாக இறைவனின் கட்டளைக்கிணங்க நுஸ்ரத் ஜஹான் திட்டத்தை தொடங்கினார்கள். அதன்படி பள்ளிக் கூடங்கள் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மருத்துவமனைகளில் இது வரையிலும் இலட்சக்கணக்கான மக்கள் குணம் அடைந்துள்ளனர். பெரிய பெரிய அரசு மருத்துவமனையை விடுத்து கிராமங்களிலுள்ள நம்முடைய சின்ன சின்ன மருத்துவமனையைத் தேடி மக்கள் வருகின்றனர். அரசாங்க அதிகாரிகள் கூட வருகிறார்கள். ஏன்? ஏனெனில் நம் மருத்துவமனையில் வேலை செய்கின்ற வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ள நம் மருத்துவர்கள் ஒரு மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் காலத்தின் கலீஃபாவின் துஆவின் பங்கும் உண்டு. அல்லாஹ்வும் தன் கலீஃபாவின் கண்ணியத்தைக் காப்பதற்காக அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்கிறான். நான் மார்க்கத் தொண்டாற்றுகிறேன். கலீஃபாவின் துஆ என்னுடனுண்டு என்ற எண்ணத்துடன் எங்கு எவர் வேலை செய்தாலும் அல்லாஹ் அதில் எல்லையற்ற அருள் பொழிவான். பள்ளிக்கூடங்களில் இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். அவர்கள் பெரும் பெரும் பதவியில் உள்ளனர். நம்முடைய கானா நாட்டு Deputy minister of Energy நம் அஹ்மதிய்யா பள்ளிக் கூடத்தில் படித்தவராவார். 

இன்று அவருக்கு அல்லாஹ் பெரிய பதவியைக் கொடுத்துள்ளான். இவ்வாறு இன்னும் பலர் உள்ளனர். ஆப்ரிக்கா நாடுகளில் சென்றால் இதனைக் கண்டுணர முடிகிறது. அங்கு கிடைக்கின்ற அனைத்து அருள்களுக்கும் காரணம் அங்குள்ள அனைத்து மருத்துவர் மற்றும் ஆசிரியர்கள் ஒரு உற்சாகத்துடன் பேரார்வத்துடன் பணியாற்றுகின்றனர். முதலில் துஆவின் மூலம் இறை அருளை தாமே வேண்டுகிறார்கள். பின் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் துஆவின் பங்கு கிடைப்பதற்காக துஆவுக்காக எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

அங்கே நம் பள்ளிக்கூடங்கள் தப்லீக்கிற்காகவும் மிகச்சிறந்த முறையில் பய்ன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் நம் பள்ளியில் பயின்றதன் காரணமாக இஸ்லாத்தையும் அஹ்மதிய்யத்தையும் அறிந்து ஜமாஅத்தில் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

மூன்றாவது கிலாஃபத்தின் போது 1974 இல் கலவரம் வெடித்தது. அஹ்மதிய்யா ஜமாஅத் முடிந்து விட்டது என மக்கள் கருதினர்.  முஸ்லிம் அல்லாதவர் என ஒரு சட்டத்தை இயற்றி பெரும் சாதனை புரிந்ததாக கருதினர். பலர் ஷஹீதாக்கப்பட்டார்கள். ஏராளமான பொருள் இழப்பையும் ஏற்படுத்தினார்கள். வணிக வளாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் தீயிட்டு கொளுத்தினார்கள். ஆனால் என்ன நடந்தது? அஹ்மதிய்யத் முடிந்து விட்டதா? முன்னரை விட அதன் சுவடுகள் விரைந்து முன்னேறத் தொடங்கியது. தந்தையின் முன் மகன் கொல்லப்பட்டதாலோ வீட்டிலுள்ள மற்றவர்கள் அஹ்மதியத்தை விட்டு விட்டார்களா? அவர்களின் கால்கள் இன்னும் அதிகமாகவே உறுதியாயின. அவர்களின் நம்பிக்கை வளர்ந்தது. ஜமாஅத்துடன் அவரின் தொடர்பு இன்னும் வலுவடைந்தது. எதிரிகளின் எந்தத் திட்டமும் வெற்றி காணவில்லை ஒரு போதும் அவரின் நம்பிக்கையையும் அசைக்க முடியவில்லை. அவர்கள் நன்மைகளில் நிலைத்து நின்றதற்காக அல்லாஹ் எவ்வளவு அருள் புரிந்தான் என்பதைப் பார்க்க வேண்டும். உயிர் இழப்பைத் தாங்கிக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அதற்கான கூலியை மறுமையில் வழங்குவான். ஆனால் இந்த உலகிலும் அல்லாஹ் சிறப்பாகவே அருள்புரிந்தான்.

பொருளாதாரத்திலும் ஈமானிலும் சிறப்பாகவே அருள் புரிந்தான். பாகிஸ்தானிலே இருப்பவர்கள் கூட முதலில் ஆயிரங்களால் தொழில் நடத்தி வந்தவர்கள். இப்போது இலட்சங்களில் தொழில் நடத்துகிறார்கள். இலட்சங்களில் தொழில் அழிக்கப்பட்ட போது அவர்கள் இப்போது கோடிக்கணக்கில் தொழில் செய்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்தவர்கள் அல்லாஹ்வின் அருளால் பொருளாதாரத்தில் மிகவும் உறுதி அடைந்துள்ளதை காண்கிறீர்கள். இதற்காக நீங்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் இன்னும் குனிய வேண்டும். வணங்குபவர்களாக ஆகிவிட வேண்டும். அன்று பாகிஸ்தான் அரசாங்கம் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கு இழைத்த கொடுமையின் விளைவாகவே இந்த அருள்களை இன்று நாம் நுகர்கிறோம் என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். அத்துடன் நற்செயல்கள் ஆற்றுதல் அதற்கு நிபந்தனையாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

பின்னர் நான்காவது கிலாஃபத் காலம் வந்தது. அப்போது எப்படியாவது குழப்பமும் கலவரமும் தூண்டிவிட எதிரிகள் முயன்றனர். ஆனால் ஜமாஅத் ஒரு கையில் ஒன்றிணைந்து பின்னர் அல்லாஹ் அந்த அச்ச நிலையை அமைதியாக மாற்றினான். கிலாஃபத் தேர்தலின் போதைய கடினமான நாளில் திட்டங்கள் தோல்வியடைந்ததைக் கண்ட எதிரிகள் 2 ஆண்டுகளுக்குப் பின் 1984 ஆம் ஆண்டில் இன்னும் பயமுறுத்தக் கூடிய ஓர் திட்டத்தைத் தீட்டினார்கள். அதாவது கலீஃபாவை செயலிழந்த ஓர் உறுப்பு போலாக்கிவிட வேண்டும். கலீஃபா எந்த வேலையும் செய்ய முடியாத நிலை வந்தால் ஜமாஅத்தில் அமைதி இன்மை ஏற்படும். அப்போது ஜமாஅத் துண்டு துண்டாகி அதன் கட்டமைப்பு குலைந்து விடும் எனக் கருதினர். அல்லாஹ்வின் திட்டம் அவர்களின் திட்டத்தை சூழ்ந்து கொண்டது. அந்தத் திட்டத்தின் படி ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வேளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்தான். அவர்கள் அங்கிருந்து ஒளிந்து ஓடிவிட்டார்கள் என எவரும் சொல்ல முடியாதபடி வெளிப்படையாக எல்லாரின் முன்னிலையிலும் பகலில் அல்லது விடியற் காலையில் கராச்சியிலிருந்து விமானம் மூலம் சென்றார்கள். அவர்களைத் தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர்கள் பிரிதறிய முடியாதவாறு அல்லாஹ் அவர்களின் கண்களில் திரையிட்டான். ஜமாஅத்தின் உண்மைக்கு இதனைவிட பெரிய சான்று என்ன இருக்க முடியும்!?

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து சென்றபோது அல்லாஹ் நடந்து கொண்டது போன்ற சில காட்சிகளை இந்த ஹிஜ்ரத்தின் போதும் நாம் காண முடிந்தது. அதனால் நம் நம்பிக்கை வலுவடைந்தது. இங்கே வந்தபின் வெளிநாடுகளில் ஜமாஅத்தின் நிர்வாகத்தை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவடைந்தன. இலட்சக் கணக்காக கோடிக்கணக்காக மக்கள் ஜமாஅத்தில் இணையத் தொடங்கினார்கள். பின்னர் M.T.A (முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா) ஆரம்பமாயிற்று. இங்கே கலீஃபாவின் குரலை தடுத்து விடலாம் என திட்டம் போட்டார்கள். ஆனால் M.T.A முழு உலகிலும் அந்தக் குரலை ஓங்கச் செய்தது. எதிரிகளின் அனைத்து திட்டங்களையும் வீணாக்கிவிட்டது. முதலில் ரப்வா மஸ்ஜித் அக்ஸாவில் கலீஃபாவின் குதுபா கேட்கப்பட்டது. இப்போது எல்லா நகரங்களிலும் எல்லா கிராமங்களிலும் எல்லா வீடுகளிலும் அந்த  குரல் ஒலிக்கிறது. அடுத்து ஆப்ரிக்காவில் மக்கள் தொண்டு வேலைகள் இந்த காலக்கட்டதில் இன்னும் விரிவடைந்தது. சுருங்கக் கூறின் இது மிகவும் முன்னேற்றத்தின் காலமாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் புது வெற்றிகளுடன் தோன்றியது. இதுதான் எல்லை இதக்ரு மேல் என்ன முன்னேற்றம் இருக்க முடியும் என மனிதன் நினைப்பான். ஆனால் மனித கற்பனை கூட எட்டாத அளவிலான காட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டிருந்தான். 

அடுத்து ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் மரணத்தின் போது இனி இந்த ஜமாஅத் ஓய்ந்தது தான். இனிமேல் இந்த ஜமாஅத்தை சமாளிக்கக் கூடிய எவரும் வெளிப்படையில் தென்படவில்லை என எதிரிகள் நினைத்தனர். ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலின் காட்சிகளை அனைவரும் கண்டனர். குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் பெண்கள் அனைவரும் தங்கள் ஈமனை உறுதிப்படுத்திக் கொண்டனர். அஹ்மதி அல்லாதவர்கள் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த காட்சிகளைக் கண்டு திகைப்படைந்தனர்.

கிலாஃபத் தேர்தல் நிகழ்ச்சியையும் எதிரிகள் கூட ஒளிந்து M.T.A வில் பார்த்தனர். பாகிஸ்தானில் நம்முடைய டாக்டர் நூரி சாஹிபிடம் அங்குள்ள பெரிய தலைவர் ஒருவர் வந்து இது குறித்து பேசிக் கொண்டிருப்பார். அப்போது டாக்டர் சாஹிபு அவரிடம்  இதெல்லாம் கண்டு திகைப்படைகிறீர்கள் என்றால் ஜமாஅத் உண்மை என ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என அவரிடம் கேட்டதற்கு அதற்கு அவர் கூறினார் அஹ்மதிய்யா ஜமாஅத் உண்மை இல்லை என நான் இப்போதும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அல்லாஹ்வின் செயல் சாட்சியமும் உங்களுடன் இருக்கிறது என்பதையும் உறுதியாக நம்புகிறேன் என்றார். அல்லாஹ்வின் செயல் ஒப்புதல் நம்மோடு இருக்கிறதென்றால் வேறென்ன வேண்டும். இது கண்களிலும் இதயத்திலும் திரை இருப்பதலாகும்.

இப்போது கிலாஃபத் பதவியில் அமர்த்தப்பட்டவர் உலகப்போர்வையில் எப்படிப் பட்டவர் என்றால் உலக மக்கள் அவரைக் கண்ணெடுத்து பார்க்கவே விரும்பமாட்டார். ஆனால் இறைவனுக்கு உலகின் தேவை இல்லை. 

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். கலீஃபாவை இறைவன் தான் ஏற்படுத்துகிறான். மக்களால் நியமிக்கப்பட்டவர் தான் கலீஃபா எனக் கூறுபவர் பொய்யர் ஆவார். ஹஸ்ரத் முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தமது கிலாஃபத் காலத்தில் ஆறு ஆண்டுகள் வரை கலீஃபாவை மனிதன் அல்ல இறைவன் தான் ஏற்படுத்துகிறான் என்பதை வலியுறுத்தி வந்தார்கள். திருக்குர்ஆனைக் கவனமாகப் படித்தால் இதனை உணரலாம் அதாவது கலீஃபாவை மனிதர்களோடு தொடர்புபடுத்தி திருக்குர்ஆனில் எங்கும் கூறவில்லை. மாறாக அனைத்து வகை கிலாஃபத் தொடர்பாகவும் நாமே ஏற்படுத்துகிறோம் என்றே அல்லாஹ் கூறியுள்ளான். 

மேலும் கூறினார்கள்:
அல்லாஹ் ஒருவரை கிலாஃபத்திற்காக நிறுத்தினால் அவர் அறிவற்ற மடையனும் முட்டாளுமானாலும் கூட காலத்தின் தேவைக்கேற்ப அறிவை அல்லாஹ் வழங்குவான். 

மேலும் கூறினார்கள்:
கலீஃபாவை இறைவனே ஏற்படுத்துகிறான் எனச் சொன்னால் அதன் பொருள் அல்லாஹ் ஒருவரை கலீஃபா ஆக்கினால் அவருக்கு தன் பண்புகளை வழங்குகின்றான் என்பதாகும். அவன் தனது பண்புகளை வழங்கவில்லை எனில் கலீஃபாவை அவனே ஏற்படுத்துகிறான் என்பதற்கென்ன பொருள்.

நான் என்னைப் பார்க்கின்றபோது என் இயலாமையையும் தகுதியின்மையையும் பார்க்கின்ற போது, என்னிடம் என்ன உள்ளது என்பதை என்னை விட என் இறைவன் அறிவான். ஒவ்வொரு நொடியிலும் இறைவனின் ஆற்றல் தான் நினைவிற்கு வருகிறது.

மதிப்பிற்குரிய மீர் மஹ்மூது சாஹிப் ஒரு கவிதை பாடினார்:

"எனக்கு என் இறைவனே போதுமானவன் 
என் இறைவனே எனக்கு போதுமுமானவன்
இறைவன் போதுமானவனல்லவா என்பதன் சாட்சியத்தை கண்டுவிட்டோம்."

இதன் பின்னணியாக நான் கருதுவதென்னவென்றால் அல்லாஹ் தான் அடியார்களுக்கு போதுமானவனல்லவா என்ற மோதிரம் கலீஃபத்துல் மஸீஹிற்கு கிடைக்கிறது.

இது தவிர ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களுக்கு 3 மோதிரங்கள் இருந்தன. அவை அவர்களின் மூன்று மகன்களுக்கு கிடைத்தன. அவற்றுள் ஒன்று "மவ்லா பஸ்" (இறைவா போதும்) என்று பொரிக்கப்பட்டதாகும். அது ஹஸ்ரத் மிர்ஸா ஷரீஃப் அஹ்மது சாஹிபிற்கு கிடைத்தது. அதன் பின் அது என் தகப்பனார் ஹஸ்ரத் சாஹிப் ஸாதா மிர்ஸா மன்ஸூர் அஹ்மது சாஹிபுக்கு கிடைத்தது. அவர்களின் மரணத்தின் போது என் தாயார் அதனை எனக்குத் தந்தார்கள். நான் அதனை அணியாமல் பாதுகாப்பாக வைத்திருந்தேன். கிலாஃபத் தேர்தலின் பின் அணிந்தேன். அதனை இப்போதும் அணிந்துள்ளேன். எனவே இறைவா போதும் என்பதன் காட்சியையும் இறைவன் போதுமானவனல்லவா என்பதன் காட்சியையும் ஒவ்வொரு நொடியும் காண்கிறேன். மற்றபடி எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.

மக்களின் இதயங்களில் அன்பை அல்லாஹ் தான் ஏற்படுத்தினான். மனிதனால் அன்பை உருவாக்க முடியாது. ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்கள் கூறியதைப் போல் எதிரிகளின் இரு பொய் மகிழ்ச்சிகளையும் அல்லாஹ் அழித்து விட்டான். இப்போதும் சில எதிரிகள் கூச்சல் போடுகின்றனர். சில நயவஞ்சகர்களும் பேசுகின்றனர். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும். எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். கிலாஃபத் இறைவன் வழங்கியதாகும். இறைவன் நாடும் நாள் வரை இது நீடிக்கும். அவன் நாடும் போதும் என்னை எடுத்துவிட்டு புது கலீஃபாவை ஏற்படுத்துவான். ஆனால் முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் சொற்களில் கூறுகிறேன். மாற்றிவிடவோ குழப்பத்தை ஏற்படுத்தவோ எந்த மனிதனாலும் முடியாது. அல்லாஹ்வின் அருளால் ஜமாஅத் மிகவும் உறுதியாக உள்ளது. ஈயத்தலான சுவர் போல் அது உள்ளது. 

நான் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றேன். இது நாள் வரை சந்திக்காதவர்கள் ஆண்டுகளாகப் பிரிந்திருந்து இப்போது சந்திப்பது போல் பேரன்புடன் சந்தித்தார்களே, இது என்ன? அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியின் வெளித் தோற்றங்கள் என்ன? பயன் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து அவர்கள் வந்தார்களே அது என்ன? இது எல்லாம் மக்களுக்கு காட்டுவதற்காகவா? இல்லை, நெடுந்தொலைவில் வாழ்பவர்களின் இதயத்தில் கூட கிலாஃபத் மேல் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அன்புதான் அது. எனவே இறைவன் உருவாக்குவதை மனித முயற்சிகளால் அகற்ற முடியுமா? பெண்கள், குழந்தைகள், முதியோர் எல்லாம் அழுவதைக் கண்டேன். அதெல்லாம் கிலாஃபத்திற்காக அவர்களின் உள்ளத்தில் உள்ள ஆண்பாகும். குழந்தைகள் வலது புறமும் இடது புறமும் ஒதுங்கி வந்து பாதுகாப்பை மீறி வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். இது அக்குழந்தைகளின் இதயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய அன்பாகும். எவரின் ஆற்றலாலும் வராது. பின்னர் அக்குழந்தைகளை அவர்கள் கலீஃபாவை சந்தித்து அன்பைப் பெற்று வந்தார்கள் என்பதற்காக மற்றவர்கள் நேசிக்கின்றனர். இவை அனைத்தும் அஹ்மதிய்யத்தின் உண்மையின் ஆதாரமாகும். பார்க்கும் கண் இருந்தால் தான் காண முடியும். சிலர் முர்தத் ஆனால் அல்லது நயவஞ்சகமாகப் பேசினால் அதனால் நமக்கு கவலை இல்லை. தீய இயல்புடைய ஒருவர் போனால் போகட்டும். தீமை ஒழிவது நன்று. அதனால் தூய்மையடையும் அவர் தமது தீய முடிவின்பால் செல்கிறார். ஆனால் ஒருவர் போகிற போது அதற்கு ஈடாக அல்லாஹ் நூற்றுக் கணக்காக நல்லுள்ளங்களை ஜமாஅத்திற்கு வழங்குகிறான்.

நினைவில் கொள்ளுங்கள், அவன் உண்மையான வாக்குறுதிகளை உடைய இறைவன் ஆவான். அவன் இன்றும் தனது அன்பான மஸீஹீன் அன்பான ஜமாஅத் மேல் கையை வைத்துள்ளான். அவன் நம்மை ஒருபோதும் விட்டுவிட மாட்டான். ஒருபோதும் விட்டு விடமாட்டான். அவன் தனது மஸீஹிடம் செய்த வாக்குறுதிகளை சென்ற கிலாஃபத் காலங்களில் நிறைவேறியது போல் இன்றும் நிறைவேற்றுகிறான். அவன் தனதருள் மற்றும் கருணையை முன்னர் பொழிந்து கொண்டிருந்தது போல் இப்போதும் பொழிந்து கொண்டிருக்கிறான். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் பொழிந்து கொண்டிருப்பான். தேவை எல்லாம் என்னவென்றால், எவரும் எங்கும் இறைவனின் கட்டளைகளின் படி செயல்படாமல் தாமே தடுமாற்றத்திற்கு ஆளாக விடக்கூடாது. தம் முடிவை கெடுத்துவிடக் கூடாது. எனவே துஆ செய்தவாறு அவனின் அருளை வேண்டியவாறு அவன் பக்கம் குனிந்தவராக அவனின் முன்னிலையில் விழுந்து கிடந்தவாறு இந்த உறுதியான வளையத்தை பற்றியவாறு இருந்தாலும் எவரும் உங்களுக்கு எத்தீங்கும் செய்ய முடியாது. எல்லாருக்கும் அல்லாஹ் இந்த வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்.

(ஜூலை 2004 அன்று வெளிவந்த சமாதான வழியிலிருந்து எடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.