முத்தலாக்கும் இஸ்லாமிய போதனைகளும்

அல்லாஹ் மனிதர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கான வழிகளை திருக்குர்ஆனில் கூறியது மட்டுமல்லாமல் மனிதனின் உலகியல் மேம்பாட்டிற்கான வழி வகைகளையும் அதனை எவ்வாறு பேண வேண்டும், அதனை எவ்வாறு கடைபிடிப்பதனால் மனித குலத்திற்கான நன்மை இருக்கிறது என்பதை பற்றி கூறி இருக்கின்றான். இதில் பொருளாதார நிலையை எடுத்துக் கொண்டாலும் சரி, நீதி நிலையை எடுத்து கொண்டாலும், சரி அறிவியலை எடுத்து கொண்டாலும் சரி, சமூகவியலை எடுத்துக் கொண்டாலும் சரி, சட்ட விஷயங்களை எடுத்து கொண்டாலும் சரி, ஆண், பெண் இருபாலர்களுக்கும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கான உரிமைகள் என்ன? போன்ற அனைத்து விஷயங்களையும் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் மனிதன் அதனை கடைபிடிப்பதனால் அவனுக்கு எவ்வாறான நன்மைகளை அதில் இருக்கின்றன என்பதையும் கூறி இருக்கின்றான்.

இந்த வரிசையில் நான் உங்கள் முன் இந்த சிறு கட்டுரையின் வாயிலாக முத்தலாக் என்ற இஸ்லாமிய சட்டத்தை பற்றி இஸ்லாம் கூறும் போதனை என்ன? அதனை எவ்வாறு ஒரு ஆண் மேற்கொள்வது என்பதை சுருக்கமாக அல்லாஹ் எனக்கு எந்த அளவுக்கு தவ்ஃபீக்கை தந்துள்ளானோ அந்த அளவுக்கு நான் உங்கள் முன் எடுத்து வைக்க முயற்சிப்பேன். இன்ஷா அல்லாஹ்.
இன்றைய சமூகத்தில் பரவரலாக முத்தலாக் என்ற இஸ்லாமிய சட்டத்தை பற்றி பல சமூக ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இதில் சிலர் இச்சட்டத்தை குறித்து கீழ்த்தரமாக பேசுவது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் போதனைகளை முற்றிலும் எதிர்த்து வருகின்றனர். இவர்களின் இந்த பார்வை இதை குறித்து மட்டுமல்ல இஸ்லாத்தின் இன்னும் ஒரு சில போதனைகளையும் இவர்கள் விமர்சிப்பதுண்டு. இதற்கான முழு காரணம் மூட முல்லாக்களே அல்லாமல் இஸ்லாத்தின் அழகிய போதனை அல்ல என்பதே உண்மையாகும்.


இந்த மூட முல்லாக்கள் யார்? என்பதையும் நாம் சுருக்கமாக இங்கு கூறிவிடுகிறோம். ஒவ்வொரு சமூகத்திலும் தத்தமது சுய இலாபத்தை, சுய நலனை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் கூறுபோடுவதுண்டு. இந்த வரிசையில் இஸ்லாத்திலும் பெயர்தாங்கிய இந்த முல்லாக்களின் ஆதிக்கம் ஆதி காலத்தில் இருந்தே நமது சமூகத்தில் இருந்து வருகிறது. இதற்கு சிலர் முல்லாயிஸம் என்று பெயர் வைத்துள்ளனர். இஸ்லாம் தோன்றி ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு பாமர மக்கள் இந்த மூட முல்லாக்களின் சுய அறிவுகளுக்கு அடிமைகளாகி தமது இம்மையை மட்டுமல்லாமல் மறுமை வாழ்வையும் தொலைத்து வந்தனர். இவர்களின் மார்க்க தீர்ப்பையே முழு இஸ்லாமிய போதனையாக கருதி அதனை தமது வாழ்வின் அங்கமாக ஆக்கி கொண்டனர். இவ்வாறான முல்லாக்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் இவர்கள் வானத்தின் கீழ் மிக கெட்ட படைப்பினங்களாக இருப்பர்” என்று முன்னறிவித்துள்ளார்கள். (மிஷ்காத், கிதாபுல் இல்ம்) அது மட்டுமல்லாமல், மக்கள் இவர்களிடம் மார்க்க தீர்ப்பு கேட்டு சென்றால் அங்கு அவர்களை (அந்த முல்லாக்களை) குரங்குகளாகவும், பன்றிகளாகவும் காண்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (கன்ஸுல் உம்மால் பாகம் 7 பக்கம் 190)

இதே முல்லாக்களே இந்த முத்தலாக் விஷயத்திலும் மூக்கை நுழைத்து இஸ்லாத்தின் அழகிய போதனைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள் முத்தலாக் விஷயத்தில் கூறும் ஃபத்வா என்ற மார்க்க தீர்ப்பு முழுக்க முழுக்க திருக்குர்ஆனுக்கு மாறுபட்டதாகும் என்பதை நடுநிலை வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நபர் தனது மனைவியின் செயல்கள் பிடிக்கவில்லை என்று சொன்னால் ஒரே அமர்வில் மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் கூறுவதை குறித்த எந்த போதனையையும் திருக்குர்ஆன் கூறாதிருக்கும்போது இந்த பெயர்தாங்கிய மூட முல்லாக்களின் ஃபத்வாவை ஏற்று இஸ்லாத்தை தாக்க நினைப்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

இங்கு நான் எனது கருத்தை நீட்டி கொண்டே செல்லாமல் சுருக்கமாக இஸ்லாத்தில் உள்ள மணவிலக்கு என்ற தலாக்கை குறித்த போதனையை உங்கள் முன் வைக்கிறேன்.

தலாக் மூன்று வகைப்படும். ஒன்று தலாக் ருஜ்யீ அதாவது ஒருவர் தனது மனைவிக்கு தலாக் தருகிறார் என்று சொன்னால் அவரும் அவரது மனைவியும் ஒரு மாதம் வரை அதாவது அப்பெண்ணிற்கு தலாக் கொடுத்து முதல் மாதவிடாய் வரும் வரை இந்த தலாக்கின் வரம்பு நீடிக்கும். இரண்டாவது தலாக் தலாக் பாயின் என்று கூறப்படும். இது முதல் தலாக் முடிந்து மனைவியின் இரண்டாவது மாதவிடாய் வரும் வரை நீடிக்கும். இந்த இரண்டு தலாக்கிலும் இருவரும் பரஸ்பரம் பேசி தீர்த்து சேருவதற்கான வாய்ப்பை இஸ்லாம் ஏற்படுத்தி தருகிறது. இதற்குள் இருவரும் சேரவில்லை என்று சொன்னால் பிறகு தலாக் பத்தா என்ற மூன்றாவது தலாக்கை கணவன் அந்த பெண்ணிற்கு கொடுப்பான். இவ்வாறான தலாக்கை குறித்து குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
(மீண்டும் இணையத்தக்க) மணவிலக்கு இருமுறைகளே112. பின்னர் தக்க முறையில் (மணவிலக்குப் பெற்ற பெண்களைத்) தடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (2:230)

இதற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
பிறகு (மேற்கூறப்பெற்ற இரு தலாக்குகள் நிகழ்ந்த பின்னரும் மூன்றாவதாக) அவன் அவளுக்கு மணவிலக்குக் கொடுத்துவிட்டால், அவள் அவனல்லாத மற்றொரு கணவனிடம் செல்லும் வரை, அவள் அவனுக்கு ஆகுமானவளாக மாட்டாள். ஆனால், அவனும் அவளுக்கு மணவிலக்குக் கொடுத்துவிட்டால், அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை தங்களால் நிலைநிறுத்த முடியும் என்ற உறுதி இருந்தால், ஒருவர் மற்றொருவரிடம் (திருமணம் மூலம்) சேர்ந்து கொள்வதில், அவர்கள் இருவர் மீது எந்தக் குற்றமுமில்லை. மேலும் இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை அவன் அறிவுடைய மக்களுக்கு விளக்கிக் கூறுகின்றான். (2:231)

இந்த இரு வசனத்தை வைத்து பார்க்கும்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்த பிறகும் பரஸ்பரம் தமக்குள் இருக்கும் மனக் கசப்புகளை தீர்த்து விட்டு தமது நல்லது கெட்டதை அறிந்து மீண்டும் இணைவதற்கான வாய்ப்பினை பெற்றுத் தர இஸ்லாம் இரண்டு தலாக் வரம்பை விதித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த இரண்டு தலாக் கொடுத்த பிறகும் கணவன், மனைவி சேர வாய்ப்பில்லை என்று சொன்னால் பிறகு மூன்றாவது தலாக் கொடுக்கப்படும்.

இவ்வாறு கணவன் மனைவி மனக் கசப்பு, கோபத்தின் உச்சக்கட்டத்தை அடைந்து உடனே தலாக் கொடுத்து விட்டு பிறகு மனவருத்தம் அடையும் மக்களுக்கு மீண்டும் அவர்கள் இணைய இஸ்லாம் அழகான சலுகையை வகுத்துள்ளது. இதனை கொச்சை செய்து, கேலி கூத்தாக்கி பெயர்தாங்கிய மூட முல்லாக்கள் இஸ்லாத்தின் அழகிய போதனையில் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தலாக்கை பொருத்த வரையில் இஸ்லாத்தில் அது மிகவும் வெறுக்கத்தக்கதாக
இருக்கிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் இதனை மிகவும் வெறுக்காதக்கதாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். கீழ்வரும் ஹதீஸ் அதற்கு மிகச் சிறந்த சான்றாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஹலாலான (ஆகுமான) விஷயத்தில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுக்கத்தக்கது தலாக் ஆகும்.
(அபூ தாவூத் | அத்தியாயம் தலாக் | பாடம் ஃபீ கராஹியத்தித் தலாக்)

அதே போன்று ஒரே நேரத்தில் முத்தலாக் கொடுப்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் அவ்வாறு கொடுத்தாலும் அது ஒரு தலாக்காகவே கருதப்படும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒரு முறை ஒரு நபித்தோழர் ஒரு நேரத்தில் தமது மனைவிக்கு மூன்று தலாக்கை கொடுத்து விட்டார். பிறகு வருத்தம் கொள்ளவே, இந்த செய்தி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்ததும் அன்னார் (ஸல்) அவர்கள் இவர் எவ்வாறு தலாக் கொடுத்தார் என்று கேட்கவே, ஒரே நேரத்தில் இவர் மூன்று தலாக்கையும் கொடுத்து விட்டார் என்று பதில் கூறப்பட்டது. இதை கேட்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், 'இவ்வாறு இது ஒரு தலாக்காகத்தான் கருதப்படும் ஆகவே நீர் மீண்டும் உமது மனைவியோடு இணைந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மது பின் ஹன்பல் பக்கம் 265, தார குத்னி பக்கம் 238)

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நிறுவனர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“அல்லாஹ் ஆண் மற்றும் பெண் இருவரும் பிரிந்து செல்வதற்காக கணிசமான வாய்ப்பினை வைத்துள்ளான். இந்த வாய்ப்பில் இரு தரப்பினரும் தத்தமது நல்லது கெட்டதை குறித்து சிந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இறைவன் கூறுகின்றான்: அத்தலாக்கு மர்ரத்தானி (2:23) அதாவது இருமுறை தலாக் நிகழ்ந்த பிறகு அவளை நன்முறையில் வைத்துக் கொள்ளலாம் அல்லது நன்முறையில் விடுவித்து விடலாம். இவ்வாறு நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்களில் பரஸ்பரம் சீர்திருத்தம் ஏற்படவில்லை என்று சொன்னால் பிறகு அவர்கள் சீர்திருத்தை விரும்புவது கடினமே.”
(அல்-ஹகம் ஏப்ரல் 1903 பக்கம் 14)

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் சூரா அல் பக்கரா  230-233 மற்றும் அத் தலாக் 2-6 ஆகிய வசனங்களுக்கு விளக்கம் அளித்தவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:
“பெண்களுக்கு மணவிலக்கு கொடுக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் (தமது கணவன் பக்கம்) செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று மாதவிடாய் வரை காத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களை கொண்டிருக்கும் இந்த மூன்று மாதவிடாயிலும் இரு முறை மணவிலக்கு கொடுக்கப்படும். அதாவது ஒவ்வொரு மாதவிடாயிற்கு பிறகும் கணவர் பெண்ணிற்கு மணவிலக்கு கொடுக்க வேண்டும். மூன்றாவது மாதம் வந்த பிறகு கணவன், மூன்றாவது தலாக் கொடுத்து நன்முறையில் இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட வேண்டுமா அல்லது மூன்றாவது தலாக்கை நிறுத்தி பெண்ணை நன்முறையில் தம் வீட்டில் அழைத்து கொள்ள வேண்டுமா! மேலும் மணவிலக்கிற்கு முன்பு எந்த நிதியை நான் பெண்ணிற்கு கொடுத்தேனோ அதனை திருப்பி வாங்க எந்த அனுமதியும் இல்லையே என்பதில் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மூன்றாவது மாதவிடாயிற்கு பிறகு கொடுக்கும் மணவிலக்கிற்கு பிறகு அந்த பெண் அவனுடையவளாக இருக்க மாட்டாள். எதுவரை அவள் பிறிதொரு கணவனை அமைத்துக் கொள்ளமாட்டாளோ அதுவரை புதியதாக அந்த பெண்ணோடு (மூன்று முறை தலாக் கொடுத்த அந்த கணவன்) நிக்காஹ் செய்ய முடியாது.”
(ஆர்யா தரம்-ரூஹானி கஸாயின் பாகம் 10 பக்கம் 52-53)

மேலும் கூறுகின்றார்கள்: தலாக் ஒரே நேரத்தில் முழுமை பெற்றுவிடாது. தலாக்கில் மூன்று மாதவிடாயை கடப்பது அவசியமாகும். மார்க்கத் தீர்ப்பாளர்கள் ஒரே முறையில் மூன்று தலாக்கை ஆகுமானதாக வைத்துள்ளனர். ஆனால் அந்த கணவர் மீண்டும் (தம் மனைவியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்று சொன்னால் அந்த பெண் (தமது) கணவனோடு திருமணம் முடித்து கொள்ளலாம் அல்லது மற்றொரு நபரை மணம் முடித்து கொள்ளலாம் என்ற சலுகையையும் இதில் வைத்துள்ளனர்.

திருக்குர்ஆன் அடிப்படையில் மூன்று தலாக் கொடுத்துவிட்டால் அந்த மனைவி மற்றொரு நபர் மணம் முடித்து பிறகு அந்த நபர் ஏதேனும் ஒரு காரணத்தினால் அப்பெண்ணை தலாக் கொடுத்து விட்டாலே அன்றி அப்பெண்ணோடு மீண்டும் மணம் முடித்து கொள்ள முடியாது. (இரண்டாவதாக அப்பெண்ணோடு மணம் முடித்த) அந்த நபர் முதல் கணவன் இப்பெண்ணோடு மணம் முடித்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அவளை தலாக் செய்தால் இது ஹராம் ஆகும். ஏனென்றால் இதற்கு பெயர் ஹலாலா ஆகும். ஹலாலா ஹராம் ஆகும். மார்க்கத் தீர்ப்பாளர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கிற்கான அனுமதி கொடுத்து பிறகு குறிப்பிட்ட காலம் கடந்து விட்டால் அதே கணவனோடு மீண்டும் மணம் முடித்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். ஏனென்றால் முதலில் அவர் ஷரீஅத் சட்டத்திற்கேற்ப தலாக் வழங்கிவில்லை.

இறைவனுக்கு தலாக் என்பது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும் என்பது திருக்குர்ஆன் வாயிலாக தெரியவருகிறது. ஏனென்றால், கணவன், மனைவி இருவரின் வீடும் சீர்குழைந்து போய்விடுகிறது. இதன் காரணமாகவே மூன்று தலாக்கிற்கும் மூன்று மாதவிடாய் காலத்தை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம், இந்த இடைவெளியில் இவர்கள் இருவரும் தத்தமது நல்லது கெட்டதை அறிந்து புரிந்து பரஸ்பரம் சீர்திருத்தி கொள்ள விரும்பினால் சீர்திருத்தி கொள்ளலாம் என்பதேயாகும்.”
(அல்-பத்ர் 24 ஏப்ரல் 1903 பக்கம் 105)

ஒரு கணவனுக்கு தமது மனைவி விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டால் அவன் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து குர்ஆன் எவ்வளவு அழகான போதனையை கூறுகிறது என்று பாருங்கள்:

“ஆண்கள், பெண்களின் காப்பாளர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியுள்ளான். மேலும் அவர்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்காகச்) செலவு செய்கின்றனர். எனவே நல்ல பெண்கள்  கட்டுப்பட்டு நடப்பவர்களும், அல்லாஹ் பாதுகாத்துள்ள (தங்கள் கணவர்களின்) இரகசியங்களைக் காப்பவர்களுமாவார். மேலும் கட்டுப்படமாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சுபவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். அவர்களைப் படுக்கைகளில் விலக்கி வையுங்கள். அவர்களைத் திருத்துவதற்காக (இலேசாக) அடியுங்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால் அவர்களுக்கு எதிரான எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மேலானவனும் மிகப்பெரியவனுமாவான். (4:35)
இந்த வசனத்தின் அடிப்படையில் இன்றைய சமூகத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் நடந்து கொண்டால் மணவிலக்கு என்ற தலாக் சட்டத்திற்கான வேலை மிகக்குறைவாகவே சமூகத்தில் நிகழும்.

மேற்கூறப்பட்ட விஷயங்களை சமூக ஆர்வலர்கள் சற்று நடுநிலையோடு படிக்கும்போது இஸ்லாம் கணவன் மனைவிக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய போதனையை வழங்கவில்லை; அதனை ஒருபோதும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை என்பதை அறிய முடியும். அது மட்டுமல்லாமல். ஒருவேளை இருவருக்கிடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டாலும் இஸ்லாம் தலாக்கின் படித்தரத்தை வழங்கி அவர்கள் இருவரும் பரஸ்பரம் இணைந்தே வாழ வேண்டும் என்பதை விரும்புகிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். நன்றி

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.